இலங்கையில் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்கள் வாழ்விலும், அமைதியை இழந்து தவிக்கும் இலங்கை இனவாத நோய்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்று இலங்கை மக்களும் - தமிழக மக்களும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடி அலசிக் கொண்டிருப்பது இப்பதிவின் நோக்கமல்ல; இருப்பினும், சில விசயங்களை தொட்டுக் காட்டி தீர்வை தேடுவது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.
தனது காலனியாதிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய ஏகாதிபத்தியம் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மதத்தின் பெயராலும், சாதியத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் விஷ விதைகளை புதைத்து விட்டுத்தான் சென்றன. சீனாவில் மாவோ தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி வெற்றியடைந்ததால் அங்குள்ள தேசிய இன முரண்பாடுகள் உட்பட பலவற்றிற்கு மார்க்சிய அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
ஒன்றுபட்ட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வற்றாத செல்வங்களை ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த நாடுகளில் இருந்த உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய சாதியத்தை பாதுகாத்ததோடு, அதனால் எழுந்த எந்தவிமான முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முற்படாமல் - தனது சுரண்டல் கொள்கைகளுக்கு பாதிப்பு வராமல் மட்டும் பார்த்துக் கொண்டது. இறுதியில் இந்த நாடுகளின் தீராத நோயாக மாறுவதற்கு பதியம் போட்டவர்கள் இவர்களே!
அடுத்து இலங்கையில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கம். தன்னாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் அற்ற நிலப்பிரபுத்துவ மரபுவதிகளாக இருந்ததோடு, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் சுரண்டப்படும் மலையகத் தமிழர்களின் எழுச்சி பெற்று வந்த போராட்ட பேரலைகளை சந்திப்பதற்கு திராணியற்றதாக இருந்ததோடு. இதனை திசை திருப்பும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள அடையாளத்தை முன்னிறுத்தி இனவாதத்திற்கு வித்திட்டன.
முதன் முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான அம்மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்க முடியாது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதற்கடுத்து உயர் கல்வியில் தமிழர்கள் போட்டியிட முடியாதபடி திட்டமிட்டு முடக்கியது என்று அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுத்தது. இலங்கைத் தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அன்றைக்கு குரல் கொடுத்தது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களை பெருவாரியாக அணிதிரட்டுவதில் ஏற்பட்ட தொய்வும், தமிழர் பகுதியில் இதற்கு எதிரான உணர்வு ரீதியான எதிர்வினைகள் - சிங்கள இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் என்று புறப்பட்டு அங்குள்ள உழைக்கும் மக்கள் இனவாதத்தின் பிடிக்கு இறையானார்கள
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களுக்கான பிரதேச உரிமைகள் குறித்த முழக்கங்கள் எழுந்த போது அவற்றுக்கு தீர்வு காணாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது இந்தப் பிரச்சனைகளையும் விட்டுச் சென்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற அளவிற்கு ஒரு வெகுஜன இயக்கமாக மலரவில்லை என்ற விமர்சனமும் உண்டு. இப்படியொரு வெகுஜன இயக்கம் அங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் என்றால் அந்த மக்களுக்கு இடையிலான இனவேறுபாடுகள் பெரிய அளவிற்கு மோதலுக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும்.
மேற்கண்ட சூழலில் தமிழர்களுக்காக டி.யூ.எல்.எப்., டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., எல்.டி.டி.இ., ஈராஸ் என்று விதவிதமான இயக்கங்கள் முளைத்தெழுந்தன. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடுகளாய் வெளிக்காட்டியது. இருப்பினும் சுதந்திர ஆட்சியாளர்கள் இவற்றுக்கு தீர்வு காணாமல் - இனவெறிக்கு தலைமை தாங்கியது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் இதற்கான ஒரே தீர்வாக தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கே முளைத்தெழுந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டு முழக்கம் பிரிவினை கோஷமாகவும் ஓங்காரம் பெற்றது. அதே சமயம் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களான ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் மீதான அரசின் தாக்குதல் தொடங்கியபோது அவர்களுக்காக முதலில் குரல் கொடுக்கத் தயங்கினர். இதில் தந்தை செல்வா விழிப்புடன் இருந்து அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தார். மொத்தத்தில் ஈழம் என்ற முழக்கம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கான முழக்கமாக அமையவில்லை என்ற விமர்சனம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது.
இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 74 சதவிகிதம் பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். 18 சதவிகிதம் பேர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். சோனகர் மற்றும் பரங்கியர்கள் 8 சதவிகிதம். மேலும் தமிழர்களிலேயே பாரம்பரியத் தமிழர்கள் 11 சதவிகிதமாகவும், மலையகத் தமிழர்கள் 7 சதவிகிதமாகவும், சோனகர் என்ற பிரிவினரும் தமிழ் பேசக்கூடியவர்கள்தான். பிரிந்துக் கிடந்தனர். இதற்குள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கணிசமான தொகையினர். அதாவது, தமிழர்களிலேயே பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சனை தீவிரமானது. மேலும் ஈழம் உட்பட மற்ற பகுதியில் உள்ள தமிழர்களின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தலித் (தாழ்த்தப்பட்ட) தமிழர்கள் பிரச்சனை தனியானது. மேற்கண்ட முரண்பாடுகளின் ஊடாகத்தான் இனவாதம் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கலக்கி தனி ஈழம் என்ற முழக்கமாக முன்னுக்கு வந்தது.
இதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது என்பது உண்மையே! இருப்பினும் அது துரோகிகளை அழித்தொழிப்பது என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு சக போராளி அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களை வேட்டையாட ஆரம்பித்ததோடு, புலிகள் செயல்பட்ட இடங்களில் மற்ற அமைப்புகள் செயல்படுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்கம் அமிர்தலிங்கம், சபாரத்தினம், உமா மகேஸ்ரன், மாத்தையா, உட்பட பலரையும் வேட்டையாடியது. அத்துடன் பத்மநாபா உட்பட 14 பேர் சென்னையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் புலிகளால். இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புகளுக்கும் - தலைவர்களுக்கும் சிங்களா இனவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமான பாதிப்பு புலிகளால்தான் ஏற்பட்டது. புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கும், தற்போது இலங்கையில் நிலவும் நிலை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஷேபாசக்தியின் வாக்குமூலங்கள் நமக்கு சாட்சியங்களாய் முன்னிற்கிறது.
தீராநதியில் அவரது பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதானாலும், எழுதுவதானாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்."
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். 80களிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்ள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மெளனமாக்கப்பட்டன.", "இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது". என்று உரைத்திருக்கிறார்.
இலங்கையில் உள்ள நிலையை நாம் இங்கிருந்து விளக்குவதை விட, அங்கிருந்தவர் விளக்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே சோஷபா சக்தியின் அனுபவம் மேலே பதியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது திசை திரும்பி, சிங்கள இனவாதத்திற்கு எதிராக எழுந்த இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தையே அழிக்கும் பயங்கரவாதமாக புலிகளால் மாற்றப்பட்டது. அத்துடன் தமிழ் பேசும் இசுலாமியர்களை 48 மணி நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டியடித்த அமைப்புதான் புலிகள். அத்துடன் புலிகள் அமைப்பின் பேச்சாளர் மறைந்த தமிழ்ச்செல்வன் கூறும்போது ஈழம் விடுதலையடைந்த பிறகுதான் இசுலாமியர்கள் தங்களது உரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இலங்கை பேரினவாதம் குறித்து வாய் திறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இனவாதிகள் புலிகளின் இத்தகைய இசுலாமிய மற்றும் மலையகத் தமிழகர்களுக்கு எதிரான போக்கை கண்டும் காணமல் போவதேனோ? மேலும் அந்த அமைப்பிலேயே ஜனநாயகம் நிலவுவதற்கான சூழல் இல்லாததைத்தான் பல்வேறு தலைவர்கள் வெளியேறியதுக் கூட காட்டுகிறது.
மேற்கண்ட பின்னணியில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு. மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது.
இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்யைப்படையை வெளியேற்றினர். அதாவது புலிகளின் இனவாதம் என்பது அதிகார வெறியுடன் கட்டமைக்கப்பட்டதாக உருவெடுத்தது.
இப்படியான குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோண மலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. தற்போதுகூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது.
புலிகளும் சந்திரிகா மற்றும் நார்வே நாட்டு குழுக்கள் எடுத்து முயற்சிகளை எல்லாம் பலமுறை தூக்கி எறிந்து விட்டு அங்கு தமிழர் பகுதியில் அபலைகளாகவும், அகதிகளாகவும், புலம் பெயர்ந்தவர்களாகவும் மாறிப்போன இலங்கைத் தமிழர்களின் உயிர் மற்றும் வாழ்வைவிட தனது அதிகார வெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது இலங்கை இராணுவத்தின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிகள் தங்களது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜீயத்தை இழந்து தற்போது முல்லைத் தீவோடு சுருங்கிப் போயுள்ளதும். அங்கு ஒரு லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக - பணயமாக முன்வைத்து தாக்குதல் நடத்தி வருவதையும் சர்வதேச அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல் - ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு - வடக்கு பகுதிகளுக்கான மாநில சுயாட்சியை வழங்கிடவும் இதில் அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுஒன்றுதான் அந்த நாட்டின் அமைதியான வாழ்விற்கு வித்திடும் மாமருந்தாக அமையும். இந்திய அரசு இவ்விசயத்தில் இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில் சமூகமான தீர்வினை காண்பதற்கு அணுக வேண்டும்.
இப்படிக்கூறும்போதுதான் தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கு லெனின் உட்பட மார்க்சிய ஆசான்களையெல்லாம் அழைக்கின்றனர். எனவே, அவர்களுக்காக நாமும் அந்த ஆசான்களிடம் இருந்தே தீர்வை நோக்கி அலசுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மக்கட் தொகை அதில் உள்ள பிரிவினை மற்றும் புவியில் ரீதியாக தமிழர்களின் வாழ்விட அமைப்பு போன்றவற்றையும் - இலங்கையே ஒரு குட்டி நாடு என்பதை மனதில் வைத்து எதிர்காலத்தில் ஒரு குட்டி சாம்ராஜ்யம் அமைந்தால் அதனுடைய பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பன போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர். இத்தகைய கோரிக்கை குறித்து மார்க்சிய ஆசான் லெனின் கூறுவதை இனி பார்ப்போம்!
பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
மேற்கண்ட லெனின் நிர்ணயிப்பு இலங்கைப் பிரச்சனைக்கு மிகப் பொருத்தமானது. நமது மார்க்சிய மனப்பாடவாதிகள் பாராளுமன்றம் எப்போதும் பன்றித் தொழுவம் என்று அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவது போலவே இவ்விசயத்திலும் சுயநிர்ணய உரிமை என்று பிதற்றுவது வேதனையானது. இதனால் இலங்கை மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக தள்ளிப் போடுவதற்குதான் அது உதவிடும். போகாத ஊருக்கு வழிகாட்டுவது என்று சொல்வார்களே அதுபோல...
மேலும் லெனின் கூறுவதைக் பார்ப்போம்:
தேசிய வாதத்தைப் புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது; இதற்கு மாறாக, தேசிய வேறுபாடுகளைத் துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசியத் தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது....
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
தமிழ் இன தேசியவாதத்தை கழுவி புனிதப்படுத்தி, முத்துக்குமரனின் மரணத்தின் விளைவால் ஏற்பட்ட அனுதாபங்களை அறுவடை செய்யும் பிணவாத அரசியலுக்கும் சொந்தக்காரர்களாக மாறிட துடிக்கிறார்கள் திரிபுவாத - சந்தர்ப்பவாத தமிழ் இனவாத அரசியல் நடத்துகின்றனர். இதற்கு அடிக்கடி அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது விந்தையிலும் விந்தைதான்.
மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் மிக அற்புதமாக கூறுகிறார். இத்தகைய சுயநிர்ணய உரிமை - அதாவது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் பிரிகிறார்கள் என்றால் அது ஒன்றுபடுவதற்காக - இணைதற்காக என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இது குறித்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம் அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல் ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
இவைகள் எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள் இனவாதிகள்... இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம்தான் தெற்காசிய மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல்... ஏகாதிபத்திய அரசியலுக்கு இரையாகும் இனவாதப்போக்கு இயலாமைத்தான் காட்டுகிறது.
இறுதியாக லெனின் கூறுகிறார் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட தீர்வினை முன்னெடுப்பது என்று:
பரந்த பிரதேசத் தன்னாட்சியும் முழுமையான ஜனநாயக சுய நிர்வாகமும் ஆகும். தன்னைத்தானே ஆள்கிற தன்னாட்சிப் பிரதேசங்களின் எல்லைகள் பொருளாதார சமூக நிலைமைகள், மக்கள் தொகையின் தேசிய இயல்பு முதலியவற்றைக் கொண்டு அவ்வட்டார மக்களால் தீர்மானிக்கப்படும்.
பக்கம் 82-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் சுட்டிக்காட்டுவது போல இப்பிரச்சனைக்கு இரு எதிர் எதிரான தீர்வுகள் உள்ளன: பண்பாட்டு - தேசியத் தன்னாட்சி என முதலாளி வர்க்கம் சொல்லும் தீர்வு ஒன்று; பிரதேச மற்றும் வட்டாரத் தன்னாட்சி என்ற பாட்டாளி வர்க்கத் தீர்வு மற்றொன்று.
பண்பாட்டு-தேசியத் தன்னாட்சி என்ற கோட்பாட்டின்படி ஒவ்வொரு தேசிய இனத்தின் உறுப்பினர்களும் ஒரு `தேசியக் கழகத்தை` உருவாக்கிக் கொள்வர். இது கல்வி உள்ளிட்ட அவர்களது சமுக, பண்பாட்டு வாழ்வைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் பள்ளிகள் தேசிய இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை
அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது. இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை திரட்டிட வேண்டும். இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான் அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும். இத்தகைய நிலை இலங்கையில் எழ வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கக் கோரிக்கைகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் பயங்கரவாதப் புலிகள் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமும் இலங்கைத் தமிழர்களுக்கான மாநில சுயாட்சி உரிமையை வழங்குவதற்கு - அரசியல் தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும். இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும். அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்.
புத்தகத்தின் வாயிலாக மார்க்சியம் கற்க முயலும் நமது நண்பர்கள் இனியாவது பூமியில் கால் வைத்து நடப்பார்கள் என்று நம்புவோம்!
கே. செல்வப்பெருமாள்