February 11, 2009

இடிக்கப்படப் போகும் சென்டிரல் ஜெயிலும் இடிபடாத நினைவுகளும்!

172 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை வெகு விரைவில் இடிக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த இரண்டு நாட்களாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையை பார்வையிடுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக திருவிழா கூட்டம் போல் மக்கள் அலை அலையாக குவிகின்றனர். சிறையை சினிமாவில் மட்டுமே பார்த்து வரும் மக்களுக்கு நேரடியாக பார்க்க ஒரு வாய்ப்பு என்றால் அதனை விடுவார்களா என்ன? இதில் பெண்கள் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள், வாலிபர்கள், அடித்தட்டு மக்கள், மேல் தட்டு மக்கள், நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரும் சென்னை மத்திய சிறைச்சாலையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நானும் இன்று காலை 8.30 மணிக்கெல்லாம் சிறைவாசலுக்கு சென்று விட்டேன். அப்போதே கூட்டம் களைகட்டியிருந்தது. பலரும் வேலைக்கு போவதற்கு முன்னர் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலோடு வந்துள்ளனர். இருந்தாலும் என்ன? செத்துப்போனவனுக்கு பாலை ஊற்றுவதுபோல், செத்துப்போகாமல் இருக்கும் விதிமுறையை கடைப்பிடித்தது மாநகர காவல்துறை 10.00 மணிக்குத்தான் திறப்போம் என்றனர். இருந்தாலும் கூட்டம் அதிகரிக்க... அதிகரிக்க அங்கிருந்த காவல்துறையினரும் நழுவி விட, பூட்டியிருந்த கேட்டை ஏறி குதித்து தாவினர் மக்கள். சிறைக்கு சென்று அனுபவம் பெற்றவர்களும், நேற்றைக்கு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவர்களும் உடன் இருந்ததால் புதியவர்களுக்கு வழிகாட்டினர். "அங்கேதான் தூக்குமேடை இருக்கிறது" என்று சுட்டிக்காட்ட கூட்டம் அந்த இடத்தை நோக்கி ஈக்களாய் மொக்கத் தொடங்கியது.
10அடி நீளம், 8 அடி அகலத்துடன் 7 அடி ஆழத்துடன் கூடிய தூக்குமேடை தனது வாழ்வு முடிந்துப்போனதை பறைசாற்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும் பிரிட்டிஷ் காரன் கட்டியது என்பதால் அதன் சுடுகள் அப்படியே இருந்தது. தூக்கு மேடையின் மேல்புறத்தில் இரண்டு பக்கமும் இரயி தண்டவாளத்தில் மரப்பலகையால் இரட்டைக் கதவுகள் போல் இணைக்கப்பட்டிருந்தது. இந்த மரப்பலகையின் மீதுதான் தூக்கு மேடை கைதிகள் நிறுத்தப்பட்டு பின்னர் அதன் கம்பிகளை இழுத்த சில மணித்துளிகளில் மரணத்தின் வாசல் திறக்கப்படும் அந்த கைதிக்கு. இந்த இடத்தை பார்த்ததும் மனித நேயம் மிக்க பொதுஜனம் பாவம் எத்தனை பேரின் உயிர் போயிருக்குமோ? என்று உச்சுக்கொட்ட... பக்கத்தில் இருந்தவர் நீங்க வேற அவன் எத்தனை போரைக் கொன்னானோ என்று கூற? அவரவர் பார்வையில் கருத்துக்கள் வந்தவண்ணமிருந்தன.
எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம் எந்த உயிரையும் கொலை செய்யாமல் தூக்குமேடை ஏறிய அந்த வீரம்மிக்க வாலிபனைப் பற்றித்தான். அவன் செய்த குற்றம்தான் என்ன? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் கொடும் அடக்குமுறையை எதிர்த்தும், ஆடு, மாடுகளைப் போல் மக்களை கொல்வதைக் கண்டு கொதித்துப்போன அந்த வாலிபன் - பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தின் மைய மண்டபலத்தில் வெடிகுண்டை வீசினான் - இது யாரையும் கொல்லக்கூடிய குண்டு அல்ல. கேளா காதினராய் மாறிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கலைப்பதற்காகத்தான். வெடிகுண்டு வீசி விட்டு தலைமறைவாக ஓடவில்லை. அவன் மறைமுகப் புரட்சியாளன் இல்லை வெளிப்படையானவன். நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக்கினான் இருந்தாலும் என்ன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அவனையும், அவனது தோழர்களையும் தூக்கிலேற்றியது அவன்தான் சுதந்திரப்போராட்ட வீரன் தியாகி பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத். இவன் தூக்கிலேறியது நாட்டிற்காக! அத்துடன் நவகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் போலி விசாரணை செய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசேன் என என் நினைவுகளில் வந்து விழ.. அந்த நினைவுகளோடு அங்கிருந்து நகர்ந்தேன்... சிறைவாயிலை நோக்கி...
சென்னை மத்திய சிறை 1837 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று அறிவித்துக் கொண்டது. அதன் வாயிற் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை கூட்டம் ஏதோ புதுப்படத்திற்கு வந்தது போன்று இருந்தது. கையில் தயாராய் கெண்ட வந்திருந்த கேமராக்களாலும், மொபைலில் உள்ள டிஜீட்டல் கேமராக்களாலும் பல கோணங்களில் படம் எடுத்த வண்ணம் இருந்தனர். அங்கிருந்த ஒருத்தர் இங்க தான் கருணாநிதி உட்கார்ந்திருந்தார் என்று நினைவுபடுத்த, உடனே ஒரு பெரியவர் அதான் கொல்றாங்க... கொல்றாங்கன்னு... மீண்டும் குரல் கொடுக்க அதைப் பற்றி பேச்சு நகர்ந்தது.
சிறையின் நுழைவாயில் முன்னாள் கூட்டம் அலைமோதியது எப்போது திறப்பாங்களோ என்ற எதிர்பார்ப்புடன். அதற்குள் அங்கே வந்திருந்த ஒரு பழைய கைதியைப் பார்த்து ஏ உனக்குத்தான் புது வீடு புழல்ல கட்டிக் கொடுத்துட்டாங்களே இங்க எதுக்கு வந்த என்று அவரது நன்பர் நக்கலாக கூற, இன்னொருத்தர் மாமே அவன் மிச்சம் மீதியை வாங்க வந்துருக்கான்டான்னு சொல்ல... அதற்குள் யாரோ ஒரு போலீசார் கதவை திறக்க வந்திருந்த கூட்டம் ஆரவாரத்துடன் உற்சாக மிகுதியால் மடை திறந்த வெள்ளம் போல் நுழைந்தது. கடந்த 172 வருடத்தில் உள்ளே நுழைவதற்காக உற்சாகமடைந்தவர்களை இந்த சிறை பார்த்திருக்காது! அந்த பழங்கட்டிடத்திற்கு ஒரு புது உற்சாகம் பிறந்திருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உள்ளே நுழைந்தவுடன் காவல் துறையினர் "சிறைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது" என்று ஒட்டப்பட்டிருந்த பழைய அறிவிப்பு சீட்டு, வாசம் இழந்த மலரைப் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அதிகாரத்தின் மறுவடிவமாய் இருந்த அந்த அறிவிப்பு இன்று செல்வாங்கிழந்து இருந்தது காலத்தின் கோலம்தான். முதல் முறையாக செல்போனின் விதவிதமான ரிங்டோன்களையும், அதன் நவீன கேமராக் கண்களையும் அந்த சிறை பார்த்தது - ரசித்தது. இவ்வளவு அழகான ரிங்டோன்களை எல்லாம் இந்த பாழாய் போன காவல்துறை இவ்வளவு நாள் தடுத்து வைத்திருந்ததே என்ற கோபம் கூட அந்த சிறைக்கு வந்திருக்கலாம்!
உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத்தில் கைதிகளை பார்ப்பதற்காக மிகுந்த பாதுகாப்பான சிறிய நீளமான அறை இரும்பு கம்பிகளின் வலைப்பின்னலோடு காட்சியளித்தது. இரண்டு வருடத்திற்கு முன் குற்றவாளிக்கும் - குடும்பத்தினருக்கும் - உறவினருக்குமான பாசப்பினைப்பின் பல சோகங்களையெல்லாம் ஒரே சேர வைத்திருந்த இடமல்லவா அது? மனைவி, மகள், குழந்தை, காதலி, உறவினர், நண்பர்கள் என்று பலரும் 20 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் அதிகமான கைதிகளின் இரைச்சலோடு தங்களுடைய உணர்வுகளையும் பறிமாறிக் கொள்ளும் உணர்வுகளின் மையமான இடம் உணர்விழந்து காணப்பட்டது.
சற்றுத் தள்ளிப் போனவுடன் "மச்சம் பார்க்கும்" இடமாம். ஒரு பழைய கைதி சொன்னது. மச்சம் மட்டுமா? சாதி, மதம்கூட பார்ப்பாங்களாம் எல்லாம் ரெக்கார்டுக்குத்தான். குற்றவாளியே ஆனாலும் என்ன சாதியும், மதமும் மறைந்து விடுமா? அல்லது நாங்கள்தான் மறக்க விடுவோமா? என்ற தோரணையில்தான் சிறைவாசமும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் சாதியை சொல்லாதவர்கள் கூட இங்கே சாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டுமாம்!
இந்த மச்சம் பாக்குற இடத்துக்கு வலது புறமாக அமைந்திருந்தது உயர் ரக கைதிகளுக்கான இடம் - இங்கேதான் அரசியல்வாதிகள் கூட அடைக்காலம் ஆவார்களாம்! கருணாநிதி, அன்பழகன், ஜெயலலிதா, வைகோ என்று எல்லா தியாகிகளும்! சிறை புகுந்த இடம் அதுதானாம்! நல்ல காற்றோட்டத்தோடு கட்டப்பட்டுள்ள இடம் அது. அநேகமாக பெரிய அங்கே இருந்த கைதிகளுக்கு பெரிய அளவுக்கு பிரச்சனை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருந்தாலும் என்ன இந்த மகா தியாகிகளை தெரிந்த மக்களுக்கு அந்த சிறையில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடி சிறை சென்ற ம. சிங்காரவேலர், வ.உ.சி., ஏ.கே.கோபாலன், சீனிவாசராவ், சர்க்கரை செட்டியார்... போன்ற மகத்தான தியாகிகள் பெயரை யாரும் மருந்துக்கு கூட முனகவில்லை. குறைந்தபட்சம் சென்னை மாநகர காவல்துறையாவது இந்த சிறையில் இருந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியல் குறித்து ஏதாவது குறிப்புகளை வைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமா? எந்தவிதமான வரலாற்று குறிப்பும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறும் சுற்றையும் - ஜன்னல் கம்பிகளையும் மட்டுமே பார்த்து வந்தனர். இருந்தாலும் என்ன? வரலாற்றை மறைக்க வேண்டும் என்பதுதானே ஆட்சியாளர்களின் கொள்கை! அது இங்கேயும் நிகழ்வதை பார்க்க முடிந்தது. எமர்ஜென்சி கொடுமைகள் என்றெல்லாம் உளறும் திராவிட இனக் கொழுந்துகள் கூட இதைப்பற்றி சிந்திக்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை.
இன்று தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் - மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் சிங்காரவேலரின் நினைவு தினமாக வேறு இருந்ததால் அவர் பற்றிய வரலாறும் - அவர் சென்னை சிறையில் இருந்தபோது நடந்த நிகழ்வும்தான் மணக்கண் முன்னால் வந்து நிழலாடியது. அவரும் ராஜாஜீ உட்பட பல காங்கிரஸ் காரர்களும் சிறையில் இருந்தபோது, மாணவராய் இருந்த ஜமதக்கனியும் (இவர் காரல் மார்க்சின் மூலதனத்தை தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போதைய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மு. நாகநாதனின் மானனார்) உடன் இருந்தார். அப்போது அவர் தினந்தோறும் ராஜாஜீயை சிறையில் சந்தித்து பேசுவது வழக்கமாம். இந்நிலையில் ராஜாஜீ நீ எங்கே வேண்டுமானாலும் போ, யார் கூட வேண்டுமானாலும் பேசு... ஆனால் அந்த -- நெம்பர் சிறையில் இருக்கும் கிழவன் இருக்கும் செல்லுக்கு மட்டும் போகாதே! அவர் உனக்கு விஷத்தை ஊட்டி விடுவார் என்று சொல்ல. ஜமதக்கனியும் நீண்ட நாட்கள் அந்தப் பக்கமே போவதில்லையாம்? ஒரு நாள் சரி போய்தான் பார்ப்போமே என்று போக! அப்புறம் என்ன அந்த சிங்காரவேலர் என்ற கிழவன் கம்யூனிசம் என்ற விஷத்தை ஊட்டி விட்டு விட்டார். அதனால்தான் தமிழுக்கு மூலதனம் கிடைத்தது. இவ்வளவு பெரிய வரலாற்று பாரம்பரியம் உள்ள நம்முடைய திட்டகமிஷன் துணைத் தலைவராவது இந்த விசயங்களை சொல்லி ஒரு வரலாற்று சிறை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இன்னும் பொது மக்கள் பார்வையிட காலத்தை நீட்டிக்கச் செய்யலாம்! செய்வார்களா ஆட்சியாளர்கள்?
இதன் இரண்டாவது பாகம் நாளை வெளி வரும்

8 comments:

ராஜ நடராஜன் said...

Thanks for valuable info.

AIESES said...

Article is fine with huge spelling mistakes. Gnanaguru

Anonymous said...

dear comrade,

I am right now at a browsing centre reading your fantastic write up. I could not read the tamil fonts, so I copied and got it converted in suratha.com and enabled myself to read it. Your reflections on your pre-demolition visit to the historic Central Jail was simply superb. you have penned excellently and brought home several connecting thoughts simultaneously expressing concern about the loss of such feelings to common visitors. Hats off to you, keep writing ....
expecting your second part, in the meantime.

svv

சந்திப்பு said...

Thank you Mr. Raja Natarajan.

Thanks Mr. Gnanaguru. Yes I agreed your comment. I will correct such mistakes in future.

Thank you Comrade SVV.

Anonymous said...

will send my feeds back

goma said...

ஜெயிலில் அடைக்கப் பட்ட உண்மையான தியாகிகளை மனதுக்குள் எல்லோரும் இடித்து விட்ட பின் அந்த சிறை இருந்தாலும் ஒன்றுதான் இடிபட்டாலும் ஒன்றுதான்.

சந்திப்பு said...

இன்று மாலை எனது மனைவி மற்றும் மகள்கள் சென்னை மத்திய சிறைச்சாலையை பார்க்கச் சென்றனர். இது குறித்து எனது மகள் பிரவீனாவிடம் எப்படியிருந்தது என்று கேட்டபோது, ஒரே குப்பையாக இருந்தது என்று சொன்னார். நானும், ஆமாம் அதை சுத்தப்படுத்தியிருக்க வேண்டும் போலீஸ் அதைச் செய்யத் தவறியுள்ளது என்று கூறினேன். அதற்கு அவர், "அதாம்பா கைதிகள்லாம் இல்லையல்லவா அதான் அவர்கள் செய்யவில்லை. கைதிகள் இருந்திருந்தால் அவர்களை வைத்து சுத்தம் செய்திருப்பார்கள் என்று கூறினார்" மிகப் பொருத்தமான கருத்தாகப்பட்டது. சிறைச்சாலைக்குள் இருக்கும் டாய்லட் உட்பட அனைத்தையும் கைதிகள்தான் சுத்தம் செய்வது வழக்கம். குழந்தைகளுக்கு இருக்கும் சிந்தனைக்கூட நமது காவல்துறைக்கு இல்லையே!

சந்திப்பு said...


ஜெயிலில் அடைக்கப் பட்ட உண்மையான தியாகிகளை மனதுக்குள் எல்லோரும் இடித்து விட்ட பின் அந்த சிறை இருந்தாலும் ஒன்றுதான் இடிபட்டாலும் ஒன்றுதான்.

தங்களது கோபம் நியாயமானது. நமது வீரமிக்க தியாகிகளை - சுதந்திரப் போராட்ட வீரர்களை, சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளை நமது மக்களிடம் இருந்து மறைத்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நோக்கம் மறைப்பது என்பதால் நாம் அவர்களை அம்பலப்படுத்துவதோடு, மறைக்கப்பட்ட தியாகிகளை செயல்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நன்றி