June 30, 2006

உலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா என இந்தியாவில் முக்கியமான விவசாய மாநிலங்களில் இது பெருவாரியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 5000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இது குறித்த விரிவான அலசலை நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சியும், என்.டி.வி.யும் வழங்கின.


இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை என்பது தலைப்புச் செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மீடியாக்கள் இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தினந்தோறும் பக்கம், பக்கமாக படத்தை போட்டு ஏதோ இந்தியாவில் எதிர் புரட்சி நடப்பதுபோல் சித்தரித்த பத்திரிகை - மீடியா உலகம், இந்திய விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்வதேயில்லை. இதுதான் இவர்களின் மீடியா தர்மம்.


சரி! இதற்கு என்ன காரணம், உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை ஏற்று இந்தியா முழுவதும் பணப் பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்ததே இந்த சோக நிலைக்கு இந்திய விவசாயிகளை தள்ளியுள்ளது. போல்கார்ட்டு என்றுச் சொல்லக்கூடிய பருத்திகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள், தற்போது தங்களது நிலத்தில் வேறு எந்த பயிரையும் விளைவிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். அது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்கவில்லை. ஏன் அவர்கள் செலவிட்டதில் பாதி தொகை கூட கிடைக்காத சூழ்நிலையில் அவர்களது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு தற்கொலையை தவிர இந்திய அரசும் - மாநில அரசும் வேறு மாற்று வழியை இதுவரை காட்டவில்லை.
மறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும், அது அணு ஆயுதத்தில் வல்லமைப் படைக்கப்போவதாகவும் கூக்குரல் எழுப்பும் ஓநாய்களின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஓநாய்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், தற்கொலை செய்துக் கொள்ளும் இந்திய விவசாயிகளின் இறுதி முனுமுனுப்புகள் யார் காதிலும் விழுவதில்லை.
நாள்தோறும் தற்கொலை கணக்கை - புள்ளி விவரமாக வெளியிட்டு வரும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் இன்றைக்கு மேல்தட்டு மக்களின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆம்! அங்குதான் சங்பரிவாரின் தலைமையமும் இருக்கிறது. என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று!


இவர்கள்தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்!


உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே! எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.

June 23, 2006

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன?

தமிழக அரசியலில் முக்கிய அஜண்டாக்களில் ஒன்றாக மாறியுள்ளது இலங்கை பிரச்சினை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பற்றியெறியும் இலங்கைப் பிரச்சினை ஒருவழியாக நார்வே நாட்டின் முன்முயற்சியோடு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு நல்ல நிலையை எட்டியது. இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலி - போர்ச் சூழல் ஓய்ந்து இலங்கையில் அமைதி நிலவியது. சந்திரிகா தலைமையிலான அரசும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல ஒத்துழைப்பை நல்கியது. புலிகள் தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய அரசு ஏற்பட்டது முதலே ஈழப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக மாறியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு தரப்பிலும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கண்ணி வெடித்தாக்குதல், குண்டு வீசுதல் போன்ற செயல்களை இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிர்பலியாகினர்.

இலங்கையில் அமைதி திரும்பியது என்று கருதியிருந்த தமிழ் மக்களிடையே இது பதட்டத்தை அதிகரித்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்கள் தரப்பிலும் போர் மூண்டால் தற்போது நிலவி வரும் அமைதி சீர்குலையுமே என்ற அச்சம் நிலவுகிறது.

உலகமயமாக்கல் சூழல் உலகில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனித்தனியாக இருந்து ஐரோப்பிய யூனியன்கூட ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற நிலையை நோக்கி திரும்பியுள்ளது. அதேபோல் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு இரண்டு ஜெர்மன்களும் ஒன்றானதும், சோவியத்தில் இருந்து பிரிந்த வந்த முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல், திணறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்திட விழைவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழப் பிரச்சினைக்கு அமைதியாக தீர்வு கண்டிட ஒத்துழைப்பு நல்குவதோடு, ஈழத் தமிழர்களின் நலனையும், அவர்களது பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் விடுதலைப் புலிகளும் 20 ஆண்டு போரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப்பலியாகி இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழர் அமைப்புகளிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மேலாதிக்க தன்மையோட நடந்து கொள்வதும், இதர தமிழர் அமைப்புத் தலைவர்களை வேட்டையாடுவதும் கடந்த கால வரலாறுகள். தமிழர்களின் பல உன்னதமான தலைவர்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடியதை யாரும் மறக்க முடியாது.

எனவே ஈழப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிட ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்திட இலங்கை அரசும் - புலிகள் தரப்பும் ஒரு அமைதித் திட்டத்தை உருவாக்கி விரைந்து தீர்வு கண்டிட வேண்டும். இந்திய அரசும் இலங்கைப் பிரச்சினையில் வெளியில் இருந்துக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வு காண உறுதுணையாக இருப்பதோடு, ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு உதவிட வேண்டும். இதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. அமைதியை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் உணவு பஞ்சம் வருமா?

இந்த கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சிலருக்கு நகைப்பாகவும் கூட இருக்கலாம். ஆனால், இப்போதே இது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தால், நம்முடைய அடுத்த தலைமுறைக்கோ? ஏன் நம்முடைய தலைமுறையிலேயே கூட நாம் பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்க வேண்டி வரும்.
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முதல் முறையாக ஐந்து லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. (இறக்குமதி செய்யப்பட்ட இந்த கோதுமையும் கூட, உணவுக்கு லாயக்கு இல்லாதது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதாவது, இதில் சாதாரண அளவில் இருப்பதைவிட அதிகமான பூச்சுக் கொல்லி மருந்து கலந்துள்ளதாக கூறப்படுகிறது.) இந்தியா ஒரு பெரும் விவசாய நாடு. நம்முடைய நாட்டில் கோதுமையோ, அரிசியோ போதுமான அளவிற்கு உற்பத்தியாகவில்லை என்றால், இறக்குமதி குறித்து யோசிக்கலாம். ஆனால், மத்திய அரசு நம்முடைய கோதுமையும், அரிசி போன்ற உணவு தானியங்கள் நல்ல விளைச்சலில் இருந்தாலும், அதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, உலகவங்கி, உட்டோ கட்டளைப்படி வெளி நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால், நம்முடைய தானிய கையிருப்பை சமப்படுத்துவதற்காகதான் இந்த இறக்குமதி என்று சாக்குபோக்கு சொல்கின்றது மத்திய அரசு.

இந்த விவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்பே, தனியார் நிறுவனங்கள், தங்களது தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துக் கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு முற்றிலும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இத்தகைய கொள்கை எதிர்கால இந்தியாவிற்கு பெரும் பாதிப்பினை உண்டாக்கும். முதலில், இந்தியாவில் செயல்படும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் குறைந்த விலையில் கோதுமை கிடைக்கிறது என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்வார்கள். இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் தடைப்படும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உணவு தானியங்களை கொள்முதல் செய்வாரில்லாமல் கூப்பாடு போட வேண்டிய நிலைமை வரும். பின்னர் அவர்களாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு பணப்பயிர்களை உற்பத்தி செய்திடுமாறு அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, இந்திய விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் இருந்து ஒதுங்கச் செய்வார்கள். இதன் மூலம் நம்முடைய இந்திய நாட்டு மக்களின் அடிப்படை உணவு தானியங்களுக்காக நாம் வெளிநாட்டினரிடையே கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைக்கு நம்மை தள்ளி விடும்.

ஒரு கட்டத்தில் போர் அல்லது உலகளவில் உணவுதானி பற்றாக்குறை அல்லது வேறு ஏதாவது நெருக்கடி ஏற்படும் சூழலில் நமக்கு வெளிநாட்டு உணவுதானியம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் நம்முடைய மக்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் அவல நிலைதான் ஏற்படும். என்னதான் பணத்தை மூட்டை, மூட்டையாக வீட்டில் திணித்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு உணவு கிடைக்காத பொருளாக மாறக்கூடிய சூழல் ஏற்படும்.

ஏற்கனவே பிரிட்டிஷ் இந்தியாவில் 1940 வாக்கில் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து போனதை வரலாறு இன்னும் மறக்கவில்லை. இந்த பஞ்சத்தின் கொடூர முகத்தை அறிந்திட வேண்டும் என்றால் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘அனந்த மடம்’ என்ற நாவலை படித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் பஞ்சத்தின் உண்மை முகம்.

எந்த ஒரு நாடும் உணவு போன்ற தன்னுடைய மக்களை காப்பாற்றுவதற்கான இறையாண்மை விஷயத்தில் மிகவும் கறாராக நடந்துக் கொள்ள வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசின் தற்போதைய உணவு தானிய கொள்கை நம்முடைய நாட்டை திவால்பாதைக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தால் மக்கள் மடிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். முதலாளித்துவமே மனித குலத்திற்கு விடுதலை என்று கூக்குரல் எழுப்பும் ஓநாய்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை போக்குவதற்கு பிச்சைக்கூட போடுவதில்லை என்பதுதான் நிகழ்கால வரலாறு. மாறாக வேற்று நாடுகள் மீது போர் தொடுத்திட டிரில்லியன் கணக்கில் கோடிகளை செலவிட்டுக் கொண்டுள்ளனர். இதுதான் ஏகாதிபத்தியத்தின் கருணை கொடையின் வெளிப்பாடு.
இந்தியாவில் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் பணப்பயிரான பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை பாதைக்கு சென்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆண்டுக்கு 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தகைய தற்கொலைகளை மேற்கொள்கின்றனர். பணக்கார விவசாயிளாலேயே விவசாயத்தில் ஏற்படும் விளைவுகளை - அதன் மூலம் ஏற்படும் கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் இந்த தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். மத்திய அரசு இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது யாருடைய நலனை காத்திட?

மன்மோகன் சிங் அரசு என்னதான் பல காரணங்களை இந்த விஷயத்தில் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்திய நாட்டின் இறையாண்மையை விலை பேசும் இத்தகைய கேடுகெட்ட செயலினை மத்திய மன்மோகன் சிங் அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திடும் அரசின் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகளை இந்திய நாட்டில் எழுவதன் மூலம் மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்து ஆட்ட முடியும்!

June 14, 2006

200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்

தலைப்பை பார்த்ததுமே புரிந்து கொண்டிருப்பீர்! இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம்! நம்ம நாட்டைப் பற்றிதான். உலகம் முழுவதும் கால் பந்து ஜூரம் நாளுக்கு, நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஒரு கோடி மக்கள் தொகைக் கொண்ட சின்னஞ் சிறு நாடுகள் கூட இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்று, தங்கள் நாட்டின் விளையாட்டுத் திறனை உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.

அதிலும் ஜெர்மனியை எதிர்த்து ஆடிய கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்தது கால் பந்து ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அடுத்து வரும் போட்டிகளில் என்னவெல்லாம் நடைபெறுமோ என்ற எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. கால்பந்தில் ஜெர்மன் மலைபோல் உயர்ந்து இருந்தாலும், சின்னஞ்சிறு நாடு கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்ததே உலக கோப்பையை வென்ற திருப்தி அந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.

இதுபோல் பல நாடுகளும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கறுப்பின மக்களின் விளையாட்டுத் திறன் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம் நாகரீகத்தை நாங்கள்தான் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றோம் என்றவர்கள் எல்லாம் அந்த கறுப்பின மக்களின் விளையாட்டு திறன் முன் மண்டியிடும் நிலைமைதான் தற்போது எழுந்திருக்கிறது.

100 கோடி மக்களைக் கொண்ட, 200 கோடி கால்களைக் கொண்ட நம்ம இந்திய நாட்டில் உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்பந்து போட்டியில் நம்முடைய அணி அதன் முகட்டைக்கூட தொடாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷமே! ஏனெனில் இங்கு முக்கியத்துவம் தரப்படுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு வழிகோலும் கிரிக்கெட்டுக்கே இங்கே முக்கியத்துவம் மிக அதிகமாக தரப்படுகிறது.

இந்தியாவில் விளையாட்டு என்றால் அது பெரு முதலாளிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விசுவநாத ஆனந்த் போன்றவர்களும், சானிய மிர்சா போன்றவர்கள் தங்களது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கலாம். ஆனால் நம்முடைய இந்திய அரசியல்வாதிகளும், ஆளும் வர்க்கமும் விளையாட்டுக் கலையை திட்டமிட்டு ஊக்குவித்து, அதனை மேம்படுத்தும் எண்ணம் துளியும் இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயமே! மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா? என்று தெரியவில்லை.

இந்தியாவின் பாரம்பரியமாக ஹாக்கியில் நிலைநாட்டி வந்த ஆதிக்கத்தைக்கூட தற்போது இழந்து வருவதும், உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விளையாட்டுக்களில் நமது இளைஞர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக விளையாட்டில் கிரிக்கெட் போதையை ஊற்றி, ஊற்றி வளர்க்கிறார்கள். இந்த கிரிக்கெட் போதையில் இருந்து விடுபடும் நாளே, இந்திய நாடு விளையாட்டுத்துறையில் விடுதலை பெற்ற நாடாக மாறும்!

June 03, 2006

சென்னையில் ப்ரீ சாப்ட்வேர் இயக்கம்

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் தங்களது மூலதனத்தை உலகின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று குவித்து சுரண்டிருக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை எதிர்த்தப் போராட்டமும் உலகளவில் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. இந்த அடிப்படை அனைத்துக்கும் பொருந்தும்.

உலகம் முழுவதும் தற்போது பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் ஏகபோகமாக ஐ.டி. துறையில் நுழைந்து சூறாவளியாக சுரண்டிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, தங்களது பிராண்டாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து உருவானதே ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - லினக்சு சாப்ட்வேர் இதன் ஒரு பகுதிதான்.

உலகின் பல்வேறு கண்டங்கள் மைக்ரோ சாப்டை கைகழுவத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் ஓப்பன் சாப்ட்வேராக செயல்படும் லினக்சு பிடித்துக் கொண்டு வருகிறது. ஏகபோகத்தையும், உலகமயமாக்கலையும் எதிர்ப்பதற்கு இதுவொரு சிறந்த கருவியென்றே கூறலாம். ஏகபோக சாப்ட்வேருக்கு எதிராக இலவச சாப்ட்வரையும் - தரமான சாப்ட்வேர்களையும் உருவாக்கி சாதனைப் படைத்து வருகிறது ஜி.என்.யூ. இயக்கம்.

இந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் வளரும் மென்பொருள் வல்லுநர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவர்களுக்க இது அல்வா. அதாவது இந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - அது வெளியிடும் அனைத்து மென்பொருளையும் ஓப்பன் சாப்ட்வேராக வெளியிடுகிறது. இதனால் மாணவர்கள் ஒரு சாப்ட்வேர் உருவாக்கத்திற்கு துணைபுரியும் கோடுகள் குறித்த விழிப்புணர்வு அடைவதோடு, அதனை டைமமிக்காக தங்களது வசதிக்கு ஏற்ப அதை வடிவமைத்து மெரூகூட்டவும் முடிகிறது. இந்த அடிப்படையில் இன்றைக்கு லினக்சும், அதைச் சார்ந்த பல்வேறு சாப்ட்வேர்களும், சர்வர்களும் உலகம் முழுவதும் மிகுந்த வேகவேகமாக பரவி வருகிறது. இந்த இயக்கத்தில் இணைவதன் மூலம் அறிவுத்துறையை தங்களது ஏகபோக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாத்திட முடியும்.
அதேபோல் பேடன்ட் என்ற பெயரால், தங்களது அனைத்து செயல்களையும் மௌடீகமாக்கிடும் செயலுக்கும் இந்த துறையில் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.
எனவே கணிப்பொறி வல்லுநர்களாக திகழும் உலக ஐ.டி. உழைப்பாளிகள் இந்த இயக்கத்தில் இணைந்து நீங்களும் பல்வேறு சாதனைகளை புரிவதோடு, சமூகத்திற்கும் பெரும் தொண்டை ஆற்றுவதோடு, மைக்ரோ சாப்ட்டை மைக்ரோ லெவலில் எதிர்க்கும் இயக்கமாக உருவெடுத்து - மேக்ரோ லெவலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே!

இது வெறும் மைக்ரோ சாப்ட்டுக்கு மட்டும் எதிரான இயக்கம் அல்ல சாப்ட்வேர் துறையில் யாரெல்லாம் ஏகபோகத்தை நிலை நிறுத்த விழைகிறார்களே அவர்களது சாம்ராஜ்ஜியத்தில் ஒரு ஓட்டையை போடும் இயக்கம். இதற்கான சக்தி உங்கள் கைவிரல்களில் இருக்கிறது.
நாம் தற்போது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பிளாகரும் ஜி.என்.யூ. இயக்கத்தைச் சார்ந்தே! இதுவே மைக்ரோ சாப்ட்டாக இருந்தால், நம்மிடம் சாப்ட்டாக பேசி நைசாக கறந்து விடுவார்கள் கத்தை, கத்தையாக...

இந்த இயக்கம் குறித்து தொடர்புக்கு: kiran@gnu.org.in

June 02, 2006

இடஒதுக்கீடும் - காந்தியடிகளும்

பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை நம்பர் 21, 1947இல் காங்கிரசு ஆட்சி அமல்படுத்தியது.


பார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர். காந்தியாரை நேரில் அணுகி,

"எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி. இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார். கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்."




காந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித்துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம் இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.


காலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்குத் தனிச் சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.


இது ‘பிராமண துவேஷ’ காரியமன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்சகாலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியர் தந்த முதல் சூடு இதுதான்.
ஜூன் 1, 2006