April 21, 2008

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!

ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்ற பெயரில் உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே எஸ்.ஓ.சி.யின் திட்டம் உள்ளது.

(சி.பி.ஐ.-எம்-எல்) எஸ்.ஓ.சி.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "

"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "

அதாவது இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...

இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொடர்ந்த முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.

இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சியையும், ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடதுசாரி - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்டதைதான் இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.

ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.

இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!

இந்த வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?

".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "

தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.

மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!

நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.
ம.க.இ.க. தொடர்பான முந்தைய விவாதங்களின் பட்டியல்

6 comments:

Anonymous said...

ம.க.இ.க.வின் மறைமுக பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் தமிழ் தேச பொதுவுடைமை கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டில் அவர்களது தப்புத் தாளங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

ஏகலைவன் said...

///ம.க.இ.க.வின் மறைமுக பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் தமிழ் தேச பொதுவுடைமை கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டில் அவர்களது தப்புத் தாளங்களை அம்பலப்படுத்தியுள்ளது.///

அனானி நண்பருக்கு,
மேற்கண்ட த.தே.பொ.க.வின் புத்தகம் வெளியிடப்பட்டது உண்மைதான். அதற்கு பதிலலிக்கும் விதமாக எமது புதிய ஜனநாயகம் இதழில் "இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய கண்ணோட்டம்" என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. முடிந்தால் நீங்கள் அதை வாங்கிப் படிக்கவும்.

உங்கள் சி.பி.எம்.ஐ சித்தாந்த ரீதியிலாக விமர்சித்து எங்கள் அமைப்பு, "முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்." என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஜனவரி'2003 இலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு இன்றுவரை உமது தலைமையிலிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ ஒரு மறுப்புக் கடிதம் கூட வரவில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

தியாகு said...

//தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "
//

இதில் திமுகவும் அதிமுகவும் முதலாளித்துவ கட்சிகள் என்று தெளிவாத்தான் இருக்கே

இந்நிலையில் தமிழ் படிக்க தெரியுமா தெரியலையா அண்ணே உங்களுக்கு

இவை முதலாளித்துவ கட்சிகள் இல்லை என மலெ கட்சி சொன்னதாக் அள்ளி விடுகிறீர்கள்

ஏகலைவன் said...

21-Apr-08

திருமாவளவனையும், மாயாவதியையும் தலித்துகளை காப்பதற்காக அவதரித்தவர்களாக சித்தரிக்க முயலும் உமது அரசியல் கேனைத்தனத்தைப் பற்றி விமர்சிப்பதை வாசகர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

திருமா போன்றவர்களிடம் சாதிப் பார்வை வீசும் நீங்கள், சுஜாதாவிடமும், பாரதியிடமும் இன்னபிற பார்ப்பனவெறியர்களிடமும் சென்று வர்க்கப்பார்வை பார்ப்பது எத்தகைய அரசியல் என்பதை இங்கே தெளிவுபடுத்த வேண்டும்.

இவர்கள் தலைமைதாங்கும் கட்சிகள் குட்டிபூர்ஷ்வா கட்சிகள் இல்லையென்று மறுப்பீர்களானால், அவர்களைப் பற்றிய உமது வரையறைதான் என்ன? இவர்கள் அனைவரும் பாட்டாளி வர்க்கத்தவரா?

////"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "

"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "////
மேற்கண்ட எமது கட்சித் திட்டத்திலிருந்து நீர் குறிப்பிட்டுள்ள இவ்வரிகள் எந்த வகையில் உம்மோடு முரன்படுகின்றன என்று தெரிவிக்க வேண்டும். ஒருவேளை மேற்கண்ட கட்சிகளின் வரிசையில் உங்கள் சி.பி.எம். கட்சியின் பெயரை நாங்கள் திட்டமிட்டே தவிர்த்ததாகக் கருதுகிறீர்களா? அல்லது அவை முதலாளித்துவக் கட்சிகள் என்பதில் உமக்கு ஏற்பு இல்லையா?

////இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை./////
பார்ப்பன மதவெறிக் கும்பலை எதிர்கொள்வதில் சி.பி.எம்.மின் பங்கு எத்தகையது என்பதை நீங்கள் இங்கே விளக்க முடியுமா? பா.ஜ.க.வின் மதவெறி அரசியலை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கிளம்பிவந்து மிதவாத இந்த்துத்துவ நடைமுறைகளைக் கொண்டிருக்கிற காங்கிரசுடன் உடன்பட்டு நீங்கள் கிழித்ததுதான் என்ன?

நீங்கள் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்து 50ஆண்டுகள் முடிந்துவிட்ட பின்னரும், கேரளாவில் இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் உங்களைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து கெக்கலிக்கிறது.

தீட்சிதனின் பாக்கெட்டில் அமர்ந்து கொண்டு நீங்கள் தில்லையில் நடத்திய போராட்டம்தான், பார்ப்பன மதவெறி பயங்கரவாதத்தை நீங்கள் எதிர்கொள்ளும் முறையா?

////ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ?
அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்./////
சந்திப்பைத் தவிர இதனைப் படிக்கின்ற அனைவரிடமும் நான் கேட்பது என்னவென்றால், உழைப்பாளி மக்கள் சி.பி.எம். தலைமையில் அனைத்து நாசகார முதலாளித்துவக் கட்சிகளையும் அழித்தொழித்துவிட்டார்கள்; இனி அவர்களை நசுக்குகிற அமைப்புகளே இங்கே இல்லை; என்ற இந்த கோயபல்சின் கருத்தில் நீங்களும் உடன்படுகிறீர்களா?

ஜனதாவும், ஜனதாதளமும் இல்லாது போனதால் இந்தியாவே சுபீட்சமாக மாறிவிட்டதா? அவர்களின் வேலையைத்தான் இன்று போலிகளான சி.பி.ஐ/எம் கட்சிகள் நிறைவேற்றிவருகின்றனவே இது போதாதா?

கம்யூனிச வேடமனிந்து கொண்டு செயல்படும் இந்த போலிக் கும்பல், எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதைக் காட்ட இங்கே இருக்கும் உமது எழுத்துக்கள் போதும் வேறெதுவும் வேண்டாம்; திருவாளர் சந்திப்பு அவர்களே!

சந்திப்பு said...

அனானிக்கு வணக்கம். நானும் அந்தப் புத்தகத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு படித்தேன். இடஒதுக்கீட்டில் பார்ப்பனீய ஆதரவு நிலை எடுத்த ம.க.இ.க.வை இந்த புத்தகத்தின் மூலம் விமர்சித்ததைத் தொடர்ந்து தங்களது நிலைபாட்டில் அந்தர்பல்டி அடித்து புரட்சி பேசி வருகின்றனர்.

"முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்."

வடுவூர் குமார் என்ற ஏகலைவா முட்டுச் சந்தில் திணறுவது நாங்கள் அல்ல; நீங்கள்தான். இன்னும் எந்த சந்து முனையிலும் உங்களைக் காணவில்லையே என்பதுதான் மக்கள் எழுப்பும் வினா? 1976லிருந்து சி.பி.எம். ஊழியர்களை பிடிப்பதற்காக சந்து சந்தாக அலையும் நீங்கள் மக்களை சந்திக்காமல் புதருக்குள் மறைந்து கிடந்து புரட்சிக்காக தவம் இருப்பதை தமிழகம் அறிந்த ஒன்றுதான். மேலும் மேற்குறிப்பிட்டுள்ள பிரசுரம் புத்தகமல்ல. பல மாதங்களாக உங்களது பு.ஜ.வில் பல பெயர்களில் சி.பி.எம். அவதூறை கிளப்பு உங்கள் அணிகளுக்கு தீணி போட்டதைத்தான் புத்தகமாக தொகுத்துள்ளீர்கள். மேலும் தற்போது உங்களது கட்சித் திட்டத்தின் பழமைவாத அம்சங்களும் - அதன் குருட்டுப் போக்கும் இணையத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். இது குறித்து பு.ஜ.வும் அதன் தலைமையும் ஏன் மவுனம் சாதிக்கிறது?

தியாகு தம்பி உங்க கட்சித் தலைமையை முதலில் கட்சித் திட்டத்தின் பழமைவாத - வழக்கொழிந்து போன - வெறும் வார்த்தை ஜால புரட்சியம்சங்களை களைந்து குறைந்தபட்சம் ஒரு நாலு பேரையாவது வைத்து மாநாடு நடத்தி திட்டத்தை புதுப்பிக்கச் சொல்லுங்கள்! அப்போதாவது உங்களது புரட்சிகர கனவு ஈடேறுமா என்று பார்க்கலாம்!

வடுவூர் குமார் - ஏகலைவா?

உங்களது புரட்சிகர விவாதத்தின் அழகை தோழர் ஜெயக்குமார் நன்றாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கோமாளி - கேனயன் என்பது போன்ற வார்த்தை தாக்குதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதே போல் சுயவிமர்சனம் பற்றியெல்லாம் பேசும் அன்பரே! அது சி.பி.எம்.க்கு மட்டும்தான் பொருந்துமா? உங்களது கட்சித் திட்டத்தின் பல பழமைவாத அம்சங்களை பட்டியலிட்டுள்ளேனே அதில் எது எது பொருந்தாது என்பதை முதலில் சுயவிமர்சனமாக எடுத்துக் கொண்டு உங்கள் தலைமைக்கு அறிவுறுத்தலாமே! என்ன உங்களுக்கே உங்களது கட்சித் திட்டம் கிடைக்கவில்லையா?

பகத்சிங்கை நாங்கள் பயங்கரவாதியாக சித்தரிக்கவில்லை என்று வக்காலத்து வாங்கிய ஏகலைவா? எங்களது திட்டத்தில் பகத்சிங்கின் பெயர் குறிப்பிடப்பட வில்லையே என்று பின்வாங்கிய ஏகலைவா? தற்போது தலித் விசயத்தில் உங்களது திட்டத்தில் மாயாவதி - திருமா தவிர என்று எங்குமே குறிப்பிடப்படவில்லையே? பொதுவாக தலித் அமைப்புகளையும் - தலித் கட்சிகளையும் குட்டி பூர்ஷ்வா கட்சி என்று தானே மதிப்பிட்டுள்ளீர்கள். எங்களைப் பொறுத்தவரை அவைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி என்ற பார்வையோடுதான் அணுகுகிறோம். மேலும் இத்தகைய ஒடுக்கப்பட்ட கட்சிகள் தங்களது ஜாதிய விடுதலை என்ற பெயரால் ஜனநாயக இயக்கத்திலிருந்து தலித்துகளை மேலும் தனிமைப்படுத்தும் போக்குகள் நிலவி வருகிறது. இதற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எனவே உங்களது விவாதம் கட்சித் திட்டத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நப்பாசையைத்தான் வெளிப்படுத்துகிறதே தவிர அதன் உள்ளடக்கத்தை பற்றிய - மதிப்பீடுகளில் செலிழந்த முடக்குவாத தன்மை பற்றிய அணுகுமுறையாக அமையவில்லை.

கேரளாவில் இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் உங்களைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து கெக்கலிக்கிறது.


அப்படியா? அப்படியென்றால் அவர்கள் அல்லவா ஆட்சியில் இருக்க வேண்டும். இதுவரையில் சட்டமன்றத்திற்குள் நுழையாத ஒரு கட்சி கேளராவில் இருக்கிறது என்றால் அது பா.ஜ.க. ஒன்றுதான். இதுகூடத் தெரியாத கூமுட்டையாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

எங்கெல்லாம் சி.பி.எம். வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் மதவாத கட்சிகளும் - தீவிர புரட்சி பேசும் நக்சலிசவாதிகளும் கூட்டு சேர்வதுதான் நவீன பாணியாக அமைகிறது. அதனால்தான் அத்வானியை மேற்குவங்க நந்திகிராமத்திற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியில் நக்சலைட்டுகளும் - மமதாவும் - பா.ஜ.க.வும் கைகோர்த்து நின்றதை உலகமே பார்த்தது. ஏன் தற்போதுகூட எஸ்.யு.சி.ஐ. என்ற இன்னொரு தேய்ந்துபோன நக்சலிச அமைப்பு மமதாவுடன் இணைந்து புனித கூட்டுச் சேர்ந்து சி.பி.எம்.யை விரட்ட முயற்சிக்கிறது. அந்த வகையான வாரிசுகள்தானே நீங்களும்.

Anonymous said...

ப‌ழமைவாத அம்சங்கள் என்ன உள்ளது என பட்டியலிட்டால் பதிலளிக்க தயார்.

முதலாளித்துவ கட்சின்னா தலித் எல்லாம் முதலாளி ஆயிட்டார்களா எனக் கேட்டவரே, காங்கிரசை எப்படி சொல்றீங்க•. அங்க எல்லா தொண்டனும் என்ன வர்க்கம்.