February 26, 2009

ஒளிரும் இந்தியாவும் - ஸ்லம்டாக் மில்லினியரும்


உலகத் திரைப்பட ரசிகர்களின் உதடுகளில் செல்லமாய் தவழ்கிறது "ஸ்லம்டாக் மில்லினியர்". லாஸ் ஏஞ்சல்சில் ஆஸ்கர் அருவியில் குளித்து, உலக மக்களின் இதயங்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது "ஸ்லம்டாக்".
"ஒன் பில்லியன் பீப்பிள்" என்று வருணிக்கப்படும் இந்தியர்களால் ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு பதக்கத்தைத்தான் பெறமுடிந்தது. இது திறமைக்குறைவால் ஏற்பட்டதல்ல; ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டது.
திரைப்படத்துறையில் இந்தியர்கள் சாதனைகள் பல படைத்தாலும் "ஆஸ்கரின்" அங்கீகாரமே எவரஸ்ட் சிகரம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை தனது இசைப்புலத்தால் தன்வயப்படுத்தியதன் மூலம் உலக இசைப் பிரியர்களை இந்திய இசையின் பக்கம் திருப்ப வைத்துள்ளார். எட்டாத உயரத்திற்கெல்லாம் இந்திய இசை தற்போது பயணித்துக் கொண்டுள்ளது.
நகரமயமாதலின் சுவடுகள் கூட சென்றடையாத கேரள கிராமத்திலிருந்து முளைத்தெழுந்த பூக்குட்டி இசைக்கலவையின் மகோன்னதத்தை எட்டிவிட்டார். ஆஸ்கர் என்ன அகிலமும் எட்டும் தூரத்தில்தான் என்பதை நிரூபித்துள்ளனர் ஸ்லம்டாக் குழுவினர்.
ஆஸ்கரின் மூலம் இந்தியப் பெருமை தற்போது உலகின் திக்கெட்டும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆம்! "இந்தியா ஷைனிங்", "ஒளிருது, ஒளிருது இந்தியா..." என்று சப்புக்கொட்டியவர்களும், "2020 உலக வல்லரசு" கனவில் மூழ்கி முத்துக்களை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப்படம் அதிர்ச்சி வைத்தியம்தான்.
தொலைந்துபோன தனது முகத்தை இருட்டில் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் படம் எதிரொலியை கொடுத்துள்ளது.
ஆம்! ஸ்லம்டாக் மில்லினியர் அப்படி என்னத்தான் கூறிவிட்டது? எதைத்தான் காட்டிவிட்டது? என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் படத்தை பாருங்கள்! கனவு இந்தியாவின் முகம் இதுதான். நீங்களும் விரும்பும் இந்தியாவை வடிவமைக்க செல்ல வேண்டிய தூரம் ஏராளம்... ஏராளம்...
உலகமயம் புதிய, புதிய கோட்டீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்படி என்ற ரகசியம் உங்களுக்கு தெரியாதா என்ன? எல்லாம் "சத்யம்" மயம். பங்குசந்தையின் ஏற்ற, இறக்கத்தில் சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் சென்றுக் கொண்டிருக்கின்றனர் உலகமய விரும்பிகள் என்றால், மீடியாக்கள் மட்டும் வேடிக்கை பார்க்குமா என்ன? அவர்களும் "குரோர்பதி", "கோட்டீஸ்வரன்" மூலம் புதிய பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் ரகசியத்தைத்தான் தேடுகிறது படம்.
அமிதாப்பச்சன், அமீர்கான், கமலஹாசன், மம்முட்டி... போன்ற எந்தவொரு முன்னணி நடிகரும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள படம், உலகின் உச்சத்தைத் தொட்டிருப்பது இன்னொரு அதிசயம்.
இன்டிலிஜென்ட்ஸ், அறிவு ஜீவிகள், உயர்படிப்பு படித்தவர்கள், விக்கி பீடியாவையே தன்னுள் வைத்துக் கொண்டிருப்பவர்களால்தான் குரோர்பதி போன்ற போட்டிகளில் மிகச் சாமர்த்தியமாக தனது அறிவுத் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறமுடியும் என்ற நிலையில், ஒரு சாதாரண "சாய் வாலா" டீ-க்கார பையன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதே ரகசியம்.
மும்பை, உலக பணக்கார நகரங்களில் மிக முக்கியமானது. விண்ணளவு உயர்ந்திருக்கும், பளபளக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில் எலிப் பொந்துகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் சேரி மக்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்தான் படம் முழுக்க விரவியிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் உலகின் உச்சத்திற்கு டென்டுல்கரை உருவாக்கியிருந்தாலும், மும்பை-தாராவி குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு இடமேது. ஒரு தனியார் திடலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காக்கி நாய்கள் குற்றவாளிகளைத் துரத்துவது போல் துரத்துகிறது. வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்ட குழந்தைகள் காக்கிகளின் கைகளில் சிக்காமல் ஓடும் காட்சி சிறப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் ஓடும் பகுதிகளில் இமலயமலை அளவிற்கு உயர்ந்து நிற்கும் குப்பை மேடுகளும், காற்றுக்கூட புகமுடியாத அளவிற்கு மிக நெரிசலான தகரம் வேய்ந்த குடிசைகளும் இந்தியாவின் உண்மை முகத்தை சிறப்புடன் காட்டுவதாக உள்ளது. 60 ஆண்டு குடியரசு இந்தியா எப்படி ஒளிர்கிறது என்பதைத்தான் காணச் சகிக்கவில்லை என குமுறுகின்றனர் கனவுலகவாதிகள்.
ஒளிரும் இந்தியாவின் "நவீன கழிப்பிடம்" எப்படியிருக்கிறது என்று அற்புதமாக திரையிட்டுள்ளனர். திரைப்பட நடிகர்களின் நடிப்புகளையே தனது வாழ்வின் உச்சபட்ச கனவாக மாற்றி வைக்கப்பட்டுள்ள இந்திய மனங்கள் எப்படிப்பட்டது என்று விபரிக்கும் காட்சி நாற்றம் அடிக்க வைக்கிறது.
குடிசைகள் நிறைந்த தாராவிக்கு அமிதாப்பச்சன் ஹெலிக்காப்டரில் வருவதாகவும், இதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் சுனாமி பேரலையைப் போல் செல்வதையும், அந்த நவீன கழிப்பறையில் மாட்டிக் கொண்ட சிறுவன் "ஜமால் மாலிக்" (கதாநாயகன்) அப்படியே மூக்கை பிடித்துக் கொண்டு மலக்குழியில் இறங்கி... அதே வேகத்தில் அமிதாப்பிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காட்சி மெய்சிலிக்க வைக்கிறது.
அதேபோல் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கும் சேரிவாழ் மக்களை "மதவாதிகள்" மதக்கலவரத்தை தூண்டி எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை உலகின் கண்களுக்கு இந்தியாவில் படரும் பாசிசத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். இந்த கலவரத்தில் தனது குடும்பத்தினரை பலிக்கொடுக்கின்றனர் ஜமால் மாலிக்கும், சலிம் மாலிக்கும், அவர்களுடன் இன்னொரு தாய், தந்தையரை மதவெறிக்கு பலிகொடுத்த லத்தீக்காவும் அனாதையாக்கப்படுவதும்... அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் வாழ்வதற்காக போராடுவதும் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மதவெறியர்களால் அனாதையாக்கப்பட்ட சிறுவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை மேடுகளில் குப்பைகளாக காலம் தள்ளுவதும், இதையும் கூட அனுமதிக்காத கிரிமினல் பேர்வழிகள் அந்தக் குழந்தைகளை கடத்தி பின்னர், அவர்களது கண்களைப் பிடுங்கி பிச்சை எடுக்க வைப்பதையும் நெஞ்சம் பதற காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போவது ஏன்? என்ற கேள்விக்கான விடையை ஸ்லம்டாக் மில்லினியர் கொடுக்கிறது.
இத்தகையை மனித விரோதிகளிடம் இருந்த தப்பிக்கும் நமது கதாநாயகர்கள்... பசியாலும், பட்டினியாலும் துடிப்பதும் அதைத் தொடர்ந்து வயிற்றுப் பசிக்காக ரயில்களில் உணவை திருட முற்படும்போது ரயிலில் இருந்து தூக்கியெறியப்படுவதும் என இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் ஏராளம். அனாதைகளாக்கப்பட்ட நாளைய மன்னர்கள் மதவாதத்திற்கும், மதவெறியர்களுக்கும் நடமாடும் சாட்சியமாக உள்ளனர்.
பின்னர் தாஜ்மஹாலை எதேச்சையாக பார்க்கும் இந்தக் குழந்தைகள் சிலவற்றை கற்றுக் கொண்டு... முன்னேறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு படியிலும் வில்லன்கள்....
இடையில் கைவிடப்பட்ட லத்தீக்கா பாலியல் தொழிற்கூடத்திற்கு இரையாவதும், பின் அவளைத் தேடித் திரியும் மாலிக் சகோதரர்கள் அவளை கண்டுப்பிடித்து தப்பிக்க வைப்பதும்... இவர்களுக்குள் உறைந்து கிடந்த அன்பு மேலேழுந்து வருவதும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் இறுதிக் கட்டத்தை எட்டுவதும் ஒரு மில்லியன் பணத்திற்கு அதிபதியாவதும், இறுதிக் கேள்வி ஒன்று மீதமிருக்கையில் நிகழ்ச்சியை நடத்துபவர்களே அவனை போலீசில் சிக்கவைத்து - தீவிரவாதி என பட்டம் சூட்டுவதும்... அதனால் போலீசின் அனைத்து சித்திரவதைகளையும் ஒருங்கே அனுபவிக்கும் ஜமால் மாலிக்கின் நடிப்பு அற்புதமானது. எலக்ட்ரிக் ஷாக் வைத்து உண்மையை வரவழைக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை கதையாக கூறுவதே ஸ்லம்டாக் மில்லினியர். இறுதியில் வெற்றியின் கதைவை தட்டுகிறான் ஜமால்.
குறிப்பாக, இந்தியாவில் ஹீரோ என்றாலே அது இந்துவாகவும், வில்லன் என்றாலே அது முஸ்லீமாகவும் காட்டப்படும். ஆனால், ஸ்லம்டாக் மில்லினியர் அனைத்துவிதத்திலும் ஒரு வித்தியாசமான கதையே!
குறிப்பாக இதற்கான திரைக்கதையை எழுதிய சைமன் பீபே பாராட்டிற்குரியவர். சிறப்பான முறையில் படத்தை இயக்கிய டேனி போயலும், லவ்லீன் டான்டனும் பாராட்டிற்குரியவர்கள்.
படத்திற்கான இசையும், ஓஹே ஜோ... பாடலுக்கான இசையையும் சிறப்புடன் வடிவமைத்த ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிற்குரியவர்.
ஒளிரும் இந்தியாவின் நிஜ முகத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன பரிசளிக்கப்போகிறோம்!

5 comments:

Anonymous said...

Good posting & writing

Anonymous said...

Slumdog Millionair திரைப்படம் நன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் சமூக, பொருளாதார வாழ்வின் முரண்பாடுகளைத் திறமையாகத் திரைக்கதை ஆக்கியுள்ளனர் போலும் அந்தக் குழுவினர்.படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீர்கள். நன்றி.

சந்திப்பு said...

அனானி நன்பர்களே நன்றிகள். உண்மையில் இந்தியாவிற்குள் குப்பைகள் போல் குவிந்திருக்கும் பிரச்சனைகளை படம் நன்றாகவே பேசுகிறது. அதற்கான விடியலை நாம்தான் தேட வேண்டியிருக்கிறது. நன்றி

baappu said...

தோழர் சந்திப்பு அவர்களுக்கு வணக்கம்,

திரைப்பட விமர்சனம் மிகவும் நன்றாக உள்ளது. செய்திகளை பார்த்தபோது ஏதோ பத்தோடு ஒன்று என்றும் இந்தியாவை தரக்குறைவாக முதலாளித்துவ பாணி மசாலா படமாக படமாக்கி காசுபார்க்கிறார்கள் என்றும் நினைத்தேன். இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வை யதார்தமாக காட்டியுள்ளதாக உங்கள் விமர்சனத்திலிருந்து உணரமுடிகிறது.

படம்பார்கும் ஆர்வத்தை ஏர்படுத்தியிருக்கிறீர்கள்.

ஆஸ்க்கர் விருதுபெற்றுவந்த இசைய‌மைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் ஒலிஅமைப்பாளர் தோழர்.ரசூல் பூக்குட்டி அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூற இதனை வாய்ப்பாக பயன்படுத்துகிறேன்.

நன்றி.

Anonymous said...

it is not a critique which has based on the marxist-lenist path.