Showing posts with label விடுதலைப் புலி. Show all posts
Showing posts with label விடுதலைப் புலி. Show all posts

February 17, 2009

முல்லைத் தீவில் நடப்பதென்ன? ஐ.நா. அறிக்கை!


இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்


கடந்த சில நாட்களாக இலங்கையின் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலன் குறித்த கவலை அதிகரித்து இருப்பதாக ஐ.நா மன்றம் கூறியிருக்கிறது.


இலங்கையில் உள்ள ஐ.நா. மன்ற வதிவிட மனித நேய ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதி அரசால் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டிருந்தாலும், நேற்றிலிருந்து அந்தப்பகுதியிலும் சண்டை நடப்பதாக செய்திகள் கூறுவதாக கூறப்பட்டுள்ளது.


பொதுமக்கள் செறிந்து தங்கியுள்ள பகுதிகளில் சண்டையை தவிர்க்குமாறு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இருதரப்பாரையுமே, ஐ.நாமன்றத்தின் இவ்வறிக்கை கோரியிருக்கிறது.


பொதுமக்கள் போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதை விடுதலைப்புலிகள் தொடர்ந்து தீவிரமாக தடுத்து வருவதாகக் கூறும் ஐ.நா.மன்றம், வெளியேறும் மக்கள் சுடப்படும் மற்றும் சில சமயங்களில் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகக் கூறுகிறது.


ஐ.நா. மன்றத்தின் 15பணியாளர்கள், அவர்களின் 35பெண்கள் மற்றும் 40குழந்தைகள் உள்ளிட்ட 75குடும்ப உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளால் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்த குழந்தைகளில் 15குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான வியாதிகள் வந்திருப்பதாகவும், இது அந்தப்பகுதியில் மனித நேய உதவி அனுப்பபடவேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகவும் கூறுகிறது.


இந்த ஐ.நா.மன்ற பணியாளர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளால் ஞாயிறன்று பலவந்தமாக அவர்களது படையணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறும் இந்த அறிக்கை, 14 வயதே ஆன சிறார்கள் விடுதலைப்புலிகளால் அவர்களது அணியில் சேர்க்கப்பட்டுவருவதாகத் தெரிவதாகவும் கூறியிருக்கிறது. இவ்வாறு சேர்க்கப்பட்ட ஐ.நா. மன்றப் பணியாளரை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும், வெளியேற விரும்பும் மக்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் ஐ.நா.மன்றம் கோருகிறது.


உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக வன்னிப் பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய தேவை இருப்பதை சுட்டிக்காட்டும் ஐ.நா.மன்றம், இருதரப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு ஒழுங்கான மற்றும் மனிதநேய அடிப்படையிலான தீர்வைக் காணவேண்டும் என்றும் கோரியிருக்கிறது.