February 18, 2009

பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர்!

பேராசிரியர் முனைவர் முத்து குணசேகரன்

இந்திய சுதந்திரப் புரட்சியாளர்களிலே மூத்தவர் மட்டுமல்ல, முதிர்ந்தவர் ம.சிங்காரவேலர். சிலரே இவரினும் மூத்தவர்கள். அண்ணல் மகாத்மாகாந்தி, ரஷ்யப் புரட்சி வீரர் லெனின், இவர்களினும் மூத்தவர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர். 18-2-1860ல் பிறந்த இந்த மேதை 1946 பிப்ரவரி 11ல் மறைந்தார். இவர் மறைவை இராஜாஜி அவர்கள் “சுதந்திரப் பித்தரும், யோக்கியர்களில் ஒருவரும் மறைந்தார்” என்று குறிப்பிட்டார். இதனால் ம.சிங்கார வேலரின் ஒழுக்கமான அரசியல் செயல் பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.


வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில் சிங்காரவேலரை-புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சிங்காரவேலர் இந்தியா சுதந்திரம் பெறுவ தற்கு ஓராண்டிற்கு முன்னமேயே மறைந்தார். செய்திகளை வகைதொகைப்படுத் திச் சொல்வதில் ம.பொ.சி விற்பன்னர். “இந்தியாவில் உருவாகிய இயக்கங்கள் நான்கு. இந்திய தேசிய காங்கிரஸ், சம தர்ம இயக்கம், சுயமரியாதை இயக்கம், தொழிற்சங்க இயக்கமென நான்கு. இந்த நான்கு இயக்கங்களிலும் நீக்கமற, நெருக் கமாக இடம்பெற்றவர் சிங்காரவேலர் மட் டுமே” என்பார் ம.பொ.சி. இவருடைய தீவிரவாதத்தினாலேயே அந்நாளைய இரகசியக் காவலர்கள் இவரை “சூடிவநன யபவையவடிச, சூடிவடிசiடிரள யபவையவடிச” என்று பதிவு செய்து வைத்தனர். அண்ணல் காந்தியின் காங்கிரசை விடவும் உண்மையில் அஞ் சத் தகுந்தது சிங்காரவேலரின் “இந்துஸ் தான் லேபர்கிஸ்ஸான் கட்சியே” என்று காவலர்கள் பதிவு செய்தனர்.


வரலாற்றில் 1925 டிசம்பரில் கான்பூ ரில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மாநாடு தொடங்கப் பெற்றதெனப் படிக்கிறோம். இந்த மாநாட்டை இங்கிலாந்து எதிர்க்கட் சித்தலைவர் கம்யூனிஸ்ட் சக்லத்வாலா வராத நிலையில் அதனைத் தொடங்கி வைத்தவர் ம.சிங்காரவேலர்தான். அத னால் பேரறிஞர் அண்ணா, சிங்காரவேல ருக்கு இணையாக லெனினைச் சொல்லலாம், டிராட்ஸ்கியைக் சொல்லலாம், சக் லத் வாலாவைச் சொல்லலாம் எனக் குறிப்பிட்டார். இந்தக் கம்யூனிஸ்ட் கட் சிக்கு இந்தியாவில் தோன்றிய முதல் முளை ஒன்று உண்டு. அதற்குப் பெயர் “இந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான்” கட்சி என்பது. அதனை முதன்முதலில் இந்தியாவில் தொடங்கி இரு இடங்களிலே மே நாளில் 1923ல் காங்கிரஸ் கொடியுடன் கம்யூனிஸ்ட் கொடியான கதிர் அரிவாள் சின்னம் பொறித்த செங்கொடியை ஏற்றிய வர் ஆசியாவிலேயே முதல் மனிதர் சிங் காரவேலர்தான்.


ஏங்கெல்ஸ், காரல் மார்க்ஸ் “கம்யூ னிஸ்ட் அறிக்கையை” வெளியிட்டதைப் போலச் சிங்காரவேலரும் “இந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான் கெஜட்” என்ற பத்திரி கையையும், தமிழில் “தொழிலாளி” என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். அதற்கு முன்னர் “நான் கோவாப்பரேட்டர்” என்ற பத்திரிகை பிரிட்டிஷ் அரசால் முளை யிலேயே கிள்ளி எறியப்பட்டதென அறிகி றோம். இதனாலேயே ஆத்திரமுற்ற பிரிட் டிஷ் அரசு சிங்காரவேலர் மீது “கான்பூர் சதி வழக்கு” என்ற வழக்கையும் தொடர்ந்தது.


அண்ணல் காந்தியின் மக்கள் செல்வாக்கை உணர்ந்திருந்த சிங்காரவேலர் காந்தி தன்னினும் இளையவர் என்றாலும் காந்தியின் ஆணையை ஏற்று அவரின் தொண்டன் எனத் தன்னை கூறிக் கொண்டார். அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், நீதிமன்றங்களைப் புறக் கணித்தல் என்ற காந்தியின் ஆணைக் கிணங்கத் தன்னுடைய வழக்கறிஞர் அங் கியைத் திருவல்லிக்கேணி கடற்கரை யில் மக்கள் முன்னால் தீ மூட்டி மக்களுக்கு போர் உணர்ச்சியை ஊட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிமன்றங்களைப் புறக்கணித்த சிங்காரவேலரும், வீரமுரசு சுப்பிரமணிய சிவாவும் “இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பில் மக்க ளின் சிவில் கிரிமினல் வழக்குகளை இருவரும் தீர்த்து வைத்தனர்.


1922ல் கயா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த சிங்காரவேலர் அதுவரை யாரும் பயன்படுத்தாத இளைஞர்களே உச்சரிக்க அஞ்சுகின்ற “காம்ரேட்” என்ற சொல்லால் 400க்கும் மேற்பட்ட இளை ஞர்களை அழைத்தார். உலகக் கம்யூ னிஸ்ட்டுகள் சார்பாக இந்த மாநாட்டில் அவர்களின் வாழ்த்தைச் சொல்வதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். 1922 லேயே அந்த கயா மாநாட்டில் சிங்கார வேலர் இந்தியர்களுக்கு வேண்டியது “பரி பூரண சுயராஜ்யமே” என்று குறிப்பிட்டது அதிசயமென்று எம்.என்.இராயின் “வேன் கார்டு” பதிவு செய்துள்ளது. 1917ல் பாசிச நாசிச அரசுகளுக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் குரல் கொடுக்க வேண் டுமென்று மாஸ்கோ லெனின் அறிவித்த கோரிக்கையை ஏற்று 1917லேயே சென் னைத் துறைமுகத் தொழிலாளிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர் சிங்கார வேலர் என்று காலஞ்சென்ற செஞ்சட் டைப் பஞ்சாட்சரம் குறிப்பிடுவார்.


1920க்கும் முன்னரேயே ரஷ்ய லெனினுடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந் தார் ம.சிங்காரவேலர், அந்தப் பாசத்தின் காரணமாகவே இந்தியாவிலிருந்து செல்லுகின்ற அனைவரிடமும் மாமேதை லெனின் “இந்தியாவின் கிழச்சிங்கம் சிங்காரவேலர் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பதுண்டாம். பாடை ஏறினும் நூலது கைவிடேல் என்பது தமிழ் முது மொழி. அந்த மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சிங்காரவேலர். தென்னாட் டில் தனிப்பட்டவர்கள் நூலகங்களில் மிகப்பெரிய நூலகம் சிங்காரவேலர் நூல கம். 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் அவ ருடைய நூலகத்தில் இடம் பெற்றிருந்தன.


சரியான முயற்சி இன்மையால் அவ்வ ளவு புத்தகங்களும் பகத்ஹவுசில் சேர்க்கப்பட்டு அழிந்து போயின. ஆனாலும் ரஷ்ய ஆய்வாளர் மித்ரோகின் முயற்சியி னால், நாகை கே.முருகேசன் பேருழைப் பால் மாஸ்கோவிலுள்ள மிகப்பெரிய லெனின் நூலகத்தின் உட்பிரிவில் “சிங் காரவேலர் நூலகம்” என்று அவரின் மிஞ் சிய சில புத்தகங்களாவது சேர்த்து வைக் கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் நிறை வளிக்கும் செய்தியாகும்.


1927ல் 42வது காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. நேரு தலைமையில் நடைபெற்ற அந்தக் காங்கிரஸ் மாநாட்டிற்கு நகரசபை உறுப்பினர் என்ற முறையில் அனைத்து உதவிகளையும் செய்தவர் சிங்காரவேலர்தான். சென்னைக்கு வந்த லண்டன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவை நகரசபை வரவேற்கத் தீர்மானம் தந்தவர் சிங்காரவேலர். சுயமரி யாதை இயக்கத்தோடு சுழன்று கொண்டி ருந்த தந்தை பெரியாருக்கு பொதுவுடைமை என்னும் புத்தொளியைப் பாய்ச்சி ரஷ்யாவிற்கும் பரிந்துரைக் கடிதத்துடன் அனுப்பி வைத்தவர் சிங்காரவேலர். அதனால்தான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கன் கெட்டுவிட்டான், சிங்காரவேலுச் செட்டி அவனைக் கெடுத்து கம்யூனிஸ்ட்டாக்கி விட்டான்” என இரகசியக் காவலர்கள் குறிப்பெழுதினர். பெரியாரின் சுயமரி யாதை இயக்கமும், சிங்காரவேலரின் சமதர்ம இயக்கமும் 1932 முதல் 1934 வரை பேரியக்கமாகச் செயல்பட்டது. 400க்கு மேற்பட்ட சமதர்ம இயக்கங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. பெரி யார், சிங்காரவேலர் செயல்பாடு கண்டு பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்ட் இயக்கத் தை 1934ல் தடை செய்தது.


மிகச்சிறந்த பேச்சாளராகவும், எழுத் தாளராகவும் இருந்த சிங்காரவேலர் வட இந்திய இரயில்வே போராட்டத்திற்கு முகுந்தலால் சர்க்காருடன் இணைந்து அரும்பாடுபட்டார். பெரும்சாதனை படைத்தார். தென்னிந்திய சதிவழக்கில் தலைமை தாங்கி பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் சிங்காரவேலர் பெற்றார். உலகிலுள்ள தமிழர்கள் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் தமிழில் பதில் சொல்லி தெளிய வைத்தவர் சிங்காரவேலர். இவ ரது கட்டுரைகள் குடியரசு, புரட்சி, பகுத் தறிவு, புதுவை முரசு, புதுவுலகம், சுதர்மா, தொழிலாளர், இந்து, சுதேசமித்திரன், நவசக்தி இவைகளிலெல்லாம் இடம்பெற் றன. இவர் பயன்படுத்திய புனைபெயர் கள் தோழர், சமதர்மி, அப்சர்வர். எமி னென்ட்லாயர், இமாலய தவசி, பூகை வாதி, சிந்தனைவாதி, சோசலிஸ்ட், சைன்டிஸ்ட், யுக்திவாதி, முகமூடி, சிங்கி ரண்டு என்பனவாகும்.


உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கப் பாடுபட்ட சிங்காரவேலர் அநியாயமாகக் கொல்லப்பட்ட சாக்கோ, வான்சிட்டி என்ற அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகவும் சென்னையில் கண் டனக் கூட்டங்கள் நடத்தினார். மிகக் கொடுமையாகக் கொல்லப்பட்ட ஏழு பி அண்டு சி மில் தொழிலாளர்கள் சவ அடக்கத்திற்குத் தலைமை தாங்கினார். வீட்டில் அடைக்கப்பட்ட நிலையிலும் வீட்டிலிருந்தே சைமனுக்குக் கருப்புக் கொடி காட்டிய சிங்காரவேலரின் வீரம் ஈடு இணை இல்லாதது. அயோத்திய தாச பண்டிதர், லட்சுமணதாசு நாயுடு இவர்களுடன் இணைந்து அளப்பரிய புத்த பணிகளை 1900லேயே ஆற்றினார். இவரிடமிருந்து மார்க்சியத்தையும், டார் வினிசத்தையும் கற்றதால் சிங் காரவேல ருக்கு மாணவரானதாகத் திரு.வி.க. குறிப்பிடுகின்றார். 


இவருடைய தீவிரவாதத்தைப் பொறுக்க முடியாத வெலிங்டன் பிரபு சிங்காரவேலரை அவர் வாழ்விடமான நடுக்குப்பத்திலிருந்து அப்புறப்படுத் தினான். இன்றைக்கும் வெலிங்டன் வளா கத்தில் சிங்காரவேலரின் முன்னோர்கள் கந்தப்பச்செட்டி, அருணாச்சலசெட்டி சமாதிகளைக் காணமுடியும். 1946 பிப்ர வரி 11ல் “உலகில் போர் ஒழியட்டும்; அமைதி தலைக்கட்டும்” என்றே சிங் காரவேலரின் இறுதிமூச்சு அடங்கியது.

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

vimalavidya said...

The great Singara velar celebrations restricted to one or two public/Hall meetings by the al left parties of India.The true sprites of the great warrior's ""days''has been observed mechanically by some in India..terrific tribute.---Selvapriyan