January 28, 2008

ஒரு கொடுங்கொலனின் மரணம்!


32 ஆண்டுகள் இந்தோனேசியாவின் சர்வாதிகாரியாக கொடுங்கோல் ஆட்சிப் புரிந்தவன் சுகார்த்தோ!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு சுமார் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளையும் - கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களையும் அழித்தொழித்தவன்.
கடைசிக்காலத்தில் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து சிகிச்சை பலனளிக்காமல் தனது 86வது வயதில் ஞாயிறன்று ஜகார்த்தாவில் மரணமடைந்தான்.
1920-களில் இந்தோனேசியாவில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக வளர்ந்தது. உலகப்போர்கள் காலத்திலும், அதைத்தொடர்ந்து இந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீரத்துடன் போராடிய இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, 1960 காலத்தில் உலகிலேயே அதிகாரத்தில் இல்லாத மிகப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.
இது, இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியும், இடதுசாரிகள் - வலதுசாரிகள் - ஏகாதிபத்திய சக்திகள் - ராணுவ அதிகாரிகள் என அனைவருக்கும் ‘நல்லவராக’ செயல்பட முனைந்த சுகர்னோவுக்கும், இந்தோனேசிய வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கும், இந்தோனேசியாவை ஆசியாவில் தங்களது முக்கிய தளமாக கைப்பற்ற துடித்து வந்த அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக இருந்தது.
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியை வளரவிட்டால், இந்தோனேசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசியாவும் கம்யூனிஸ்ட் பூமியாக மாறிவிடும் என்று அஞ்சிய அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது நாசகர உளவு அமைப்பான சிஐஏ-வை ஏவிவிட்டது.
அதிபர் சுகர்னோவுக்கு எதிராக சிஐஏ துணையுடன், ராணுவ கலகம் நடத்தப்பட்டது.
அப்போது இந்தோனேசிய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்த சுகார்த்தோ, ராணுவ மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி ராணுவத் தளபதி பதவியை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து பெரும் ராணுவக் கலகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1965 அக்டோபர் 18ந்தேதி ராணுவ வானொலிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக தடைசெய்யப்படுகிறது என்று முதல் அறிவிப்பாக சுகார்த்தோ வெளியிட்ட பிரகடனம், இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் என்றும் அழியாத கருப்புப் புள்ளியாக பதிவானது.
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட உடன் கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை ஆதரிப்பவர்கள் என கருதப்பட்ட சீன வம்சா வளியைச் சேர்ந்த இந்தோனேசியர்கள் என ஒருவர் விடாமல் அனைவரையும் கொன்று குவிக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இந்ததேனேசிய கடல் எல்லையில் பிடிக்கப்பட்ட பல சுறா மீன்களின் வயிற்றில் எண்ணற்ற மனித மண்டை ஓடுகளும். தலைகளும் கிடைத்தன. அவைகள் அத்தனையும் கம்யூனிஸ்ட்டுகளின் தலைகள்! உலகிலேயே மிகக் குறுகிய காலத்தில் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை நரவேட்டையாடி இட்லருக்கும் மேல் நான் கொடூரமானவன் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பணிந்து சேவகம் புரிந்த சொறிநாய்தான் இந்த சுகார்த்தோ!
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக இந்தோனேசிய கம்யூனிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்.
1965 லிருந்து 1968 வரை கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி இந்தோனேசியாவின் தீவுப்பகுதிகளான பாபுவா, ஏக் மற்றும் கிழக்கு தைமூர் (இது தற்போது தனி நாடாகிவிட்டது) ஆகிய பகுதிகளில் சுகார்த்தோவின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், ராணுவத்தை ஏவி படுகொலை செய்யப்பட்டனர்.
சுகார்த்தோவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
1965லிருந்து 1997 வரை 32 ஆண்டுகள் ராணுவ பலத்துடன் சர்வாதிகாரம் நடத்தி வந்த சுகார்த்தோவின் ஆட்சிதான் 20ம் நூற்றாண்டில் உலகிலேயே மிகக்கொடூரமான, மிக மிக ஊழல் மலிந்த ஆட்சியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
சுகார்த்தோவால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பல தலைவர்கள் இன்றைக்கும் தலைமறைவாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1997ல், சுகார்த்தோவின் பலம் குன்றத்துவங்கிய காலகட்டத்தில், அவரை எதிர்த்து அரசியலுக்கு வந்த முதல் ஜனாதிபதி சுகர்னோவின் மகள் மேகவதி சுகர்னோபுத்ரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இத்தகைய கொடூரமான - மனிதவிரோதி - ஊழல் பேர்வழி மிக அமைதியான முறையில் மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. இவனை நடுரோட்டில் நிற்க வைத்து சித்திரவதை செய்து கொன்றிருக்க வேண்டும். வரலாறு இதுபோன்ற சுகார்த்தோக்களுக்கு எதிர்காலத்தில் பாடம் கற்பிக்கும் என்று நம்புவோம்!

January 25, 2008

பாரத ரத்னா நஹி


இந்திய தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேச மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா விருது குறித்து எப்போதும் இல்லாத வகையில் சர்ச்சையை துவக்கி வைத்தது சங்பரிவாரக் கூட்டம்.
அத்வானிஜி - அடல்ஜிக்குத்தான் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இந்த வரிசையில் கன்சிராம் - ஜகஜிவன்ராம் - சச்சின் டெண்டுல்கர். ஓவியர் உசைன் ஆகியோருக்கு வழங்கலாம் என பலதரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
தேசத்தின் உயரிய சேவையை செய்ததற்காக வழங்கும் இந்த மகத்தான விருதை சங்பரிவார இந்துத்துவ கூட்டம் தன்னுடைய சுயநலத்திற்காக அரசியலாக மாற்றி அதன் நோக்கத்தையே கொச்சைப்படுத்தி விட்டது.
மொத்தத்தில் மத்திய அரசு இந்த ஆண்டு விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்து விட்டது சற்று ஆறுதலை அளிக்கிறது. இல்லையென்றால் யாருக்கு விருது வழங்கியிருந்தாலும் அது களங்கப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வாஜ்பாய் அவர் வாழ்ந்த ஒரு கிராமத்தையே காட்டிக் கொடுத்தவர். அவரது குரு சவார்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள். இந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் தேசத்தின் மீதான சேவையே கேள்விக்குறியாக மாறியிருக்கும்.
மத்திய அரசின் சமயோஜித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியாது!
Read this also....

January 22, 2008

கயர்லாஞ்சியும் கவுகாத்தியும்!



கடந்த ஐந்து தினங்களுக்கு முன் எட்லைன்ஸ் டுடே மற்றும் சி.என்.என். - ஐ.பி.என். போன்ற முக்கிய ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில் திரும்பத் திரும்ப அசாமில் நடைபெற்ற ஆதிவாசிகளுக்கு எதிரான படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரின் மனம் துடிதுடித்துப் போயிருக்கும். இப்படியும் நிகழுமோ? மனித குலத்திற்கு எதிராக இன்னொரு மனித குலம் இயங்குமோ! என்ற பல கேள்விகள் மனதை நடுங்க வைக்கும் வன்முறை உச்சக்கட்டம். அப்படி என்னதான் இந்த ஆதிவாசிகள் செய்து விட்டார்கள்? இந்தியா இன்னொரு வல்லரசாக போகிறது என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளித்துவ ஏஜன்டுகளின் பிரச்சார ஒளிவெள்ளத்தில் இதுபோன்ற காட்சிகள் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதே பெரிய விசயம்தான். இந்தியா 21 ஆம் நூற்றாண்டை நோக்கி வேகமாக செல்கிறதா? அல்லது கற்காலத்தில்தரான் இருக்கிறதா? என்ற கேள்வியைத்தான் ஆதிவாசிகளுக்கு எதிரான அசாம் படுகொலை நிகழ்வுகள் எழுப்புகின்றன.
அப்படி என்னதான் கேட்டு விட்டார்கள் இந்த ஆதிவாசிகள்? காலையில் எழுந்தவுடன் சுடச் சுட டீ போட்டு குடித்து நம்முடைய மனதையும் - உடலையும் வளமாக்கிக் கொள்கிறோமே அதற்கு பின்னால் இருப்பவர்கள் அசாம் டீ எஸ்டேட் தொழிலாளிகள். அசாமில் மட்டும் 800க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பணிபுரியும் ஆதிவாசி மக்கள் பல்லாண்டுகளாக அடக்கப்பட்டும் - ஒடுக்கப்பட்டும் - வாழ்வின் அடித்தட்டில் நசுங்கிய இருந்து வருகின்றனர். அவர்களின் உரிமை என்று சொன்னால் அது டீ எஸ்டேட்டில் வேலை செய்வது மட்டும்தான். இத்தகைய ஆதிவாசி மக்கள் தங்களது சந்ததியினராவது அடுத்த கட்டத்திற்கு ஓரடி முன்வைக்க தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இந்த கோரிக்கையில் மிகவும் நியாயம் உண்டு. இருப்பினும் என்ன? ஆட்சியாளர்களின் கையாலாகத்தனம்... வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அவலமும். அவர்களது வாழ்வுரிமையை பாதுகாக்க முடியாத வெற்று வீராவேசமும் இந்த மக்களை மேலும் மேலும் அடமட்டத்தில் அழுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அழுத்தப்பட்ட அம்மக்களின் நியாயமான கோரிக்கை கூட மற்றொரு தரப்பினரின் ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு காட்டப்பபடுகிறது. இதனை நாம் ராஜஸ்தானிலும் கண்டோம். நாடு முழுவதும் இதுதான் நிலைமை! ஏன் தமிழகத்தில் கூட அடித்தட்டில் இருக்கும் அருந்ததி மக்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டால் இன்னொரு பிரிவினருக்கு பாதகமாக தெரிகிறது. ஆட்சியாளர்களும் பிரச்சனைக்கு உடனடியாக உரிய தீர்வை மேற்கொள்வதற்கு மாறாக இரண்டு உழைப்பாளி மக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி வருகின்றனனர்.

அசாமின் முக்கிய தலைநகரான கவுகாத்தியில் நடத்ப்பட்ட ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஐந்து ஆதிவாசி இளைஞர்கள் நட்ட நடுரோட்டில் நாய்களைக் கொல்வதைப் போல் கற்கலாலும் - கட்டையாலும் - கத்தியாலும் - இரும்பாலும் - பூட்ஸ் காலாலும் அடித்தே கொன்று போட்டனர். இதில் 12 சிறுமியும் அடக்கம். இது தவிர ஆதிவாசி பெண்களின் உடைகளை உறுவி அம்மனமாக்கி மானபங்கப்படுத்தியதோடு - வன்கொடுமைகளையும் நிகழ்த்தியது ஆதிக்க வெறிபிடித்த மனிதவிரோத கும்பல்.
மத்திய - மாநில ஆட்சியாளர்கள் சுதந்திரம் பெற்று இன்னும் 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட அடிப்படையான கல்வியையோ அல்லது வேலைவாய்ப்பையோ குறைந்தபட்ச உத்திரவாதம் கூட செய்யாமல் - ஓட்டை வண்டியில் ஓடிக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்கனவே உள்ள நிலப்பிரபுத்துவ சமூகத்தோடு சமரசம் செய்துக் கொண்டு - இந்திய ஜாதிய முரண்பாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இதன் விளைவு ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு எதிரானவனாக சித்தரிக்கும் அவல நிலையில் இந்தியா தத்தளிக்கிறது. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் இன்னும் காட்டுமிராண்டி (ஆதிவாசிகள் அல்ல) நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? இந்தியாவின் அதிவேக வளர்ச்சியை நாளொரு பொழுது வான வேடிக்கையாக வேடிக்கை காட்டும் ஆளும் வர்க்க கும்பல் - நாள்தோறும் சென்செக்ஸ் புள்ளி விவரத்தை காட்டி... உலகின் சுங்பபர் பவராக தன்னை பொருளாதாரத்தில் சுரப்புலியாக காட்டிக் கொள்ளும் சிதம்பரங்களுக்கு இதுவெல்லாம் ஏதோ இரண்டு கும்பல்களுக்குள் ஏற்பட்ட கலவரமாக மட்டுமே தெரியும்.
இந்திய முன்னேற்றத்திற்கு சரியான பாதையை படித்த மேல்தட்டு வர்க்கம் அடையாளப்படுத்தாமல் - தன் மோதாவித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதும் இந்திய மக்களுக்கு செய்யும் துரோகமாகவே தெரிகிறது. இந்தியாவின் எதிர்காலம் இடதுபாதையை நோக்கியே அமையட்டும்...
தலித் மக்களுக்கு எதிரான கயர்லாஞ்சி கொடூரம் அடங்குவதற்குள் இன்னனொரு கயர்லாஞ்சியாக கவுகாத்தி வந்திருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள எட்டு கோடி பழங்குடி மக்களும் - 25 கோடி தலித் மக்களும் - இதர உழைக்கும் மக்களோடு கைகோர்த்து சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுவதே சரியான திசை வழியாகும்! படித்த மேல் தட்டு வர்க்கம் இந்தியாவின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டிருக்கும் என்று சொன்னால் அது இந்த மக்களை அணிதிரட்டுவதற்கு தன்னுடைய மேனேஜிரியல் ஸ்கில்லை உபயோகப்படுத்த வேண்டும். இதுவே அவர்கள் தேசத்திற்கு செய்யும் தொண்டாகும்!

Links:

January 21, 2008

திராவிட இயக்க முகமூடி!


பசுவின் புனிதம் அரசியலின் அங்கமாகியுள்ளது. அது பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளோடு ஒன்றுவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வழியில் அம்மாவின் கருணை இன்றைக்கு பசுவின் மேல் வெளிப்பட்டுள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும்இ மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வருத்தப்பட்டு - ஆழ்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
வாயில்லா பிராணியான பசுவின் மீதான கருணை புள்ளிலரிக்கச் செய்கிறது. கோவில்களுக்கு நேர்ந்து விடும் இதுபோன்ற பசுக்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு :ரு. 900 (900 ரூபாயா? 90 ரூபாயா? என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்)வழங்கப்படுவதாகவும். இது முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று குறைப்பட்டுள்ளதோடு. அறநிலையத்துறை அமைச்சர் பசுவின் மீது எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை என்றும் கண்டித்துள்ளார்.
அம்மாத்துவா தலைவர் சொல்லித்தான் ஒரு பசுவின் பராமரிப்புக்கு நாளொன்றுக்கு ரூ. 900 வழங்கப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மாடு வைத்துக் கொண்டுள்ள யாரையாவது கேட்டுப் பாருங்கள். ஒரு பசுவிற்கு ஒரு நாளைக்கு பராமரிப்புச் செலவிற்காக எவ்வளவு ஆகிறது என்று? மிக அதிகப்பட்சமாக போனால் ரூ. 100 கூட ஆகாது என்பதுதான் உண்மை.
அது சரி சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வான விளைவுகளால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் கைதிகளாக ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பராமரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூட ஒதுக்கப்படுவதில்லை. இதனால் பல்வேறு கைதிகளுக்கு தேவையான அடிப்படை ஊட்டச் சத்துக்கள் கூட கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம்.
மேலும் தமிழகத்தில் வறுமையால் உழலக்கூடிய மக்கள் தொகை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. நாளென்றுக்கு ரூ. 20க்கும் குறைவான வருமானமுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாலும் - நோய் - நொடிகளாலும் - சத்துணவுப்பற்றாக்குறையாலும் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இத்தகைய வறுமைப்பட்ட மக்கள் மீதெல்லாம் அம்மாவிற்கு கருணை ஏற்படாதது ஏனோ?
பசுவைப் பேசினால் அரசியலாக்கலாம்... வறுமைப் பேசினால் அரசியலாக்க முடியுமா? இதுதானே அம்மாவின் லாஜிக்.
அம்மாவின் அதிமுக - கருப்பு - சிவப்பு வண்ணத்தை காவியிடம் படிப்படியாக அடகு வைத்து வருகிறது. திராவிட இயக்கப் போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் தமிழக இந்துத்துவ இயக்கமாக அதிமுக மாறி வருவதைத்தான் இவையெல்லாம் காட்டுகிறது.
அம்மாவின் இந்துத்துவ அரசியல் பெரியார் மண்ணில் எடுபடாது என்று சொல்லிக் கொண்டு ஏமாறாமல் இருப்பார்களா? நமது திராவிட இயக்க கண்மணிகள் என்பதே நமது கவலையாக உள்ளது.

January 19, 2008

பாரத ரத்னா விருதும் பாசிஸ்ட்டுகளின் தாக்குதலும்!

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. தேசத்தின் நலனிற்காக தன்னலம் கருதாமல் சேவை புரிபவர்களை கவுரவிக்கும் முகமாகவே இந்த விருது வழங்கப்படுகிறது. நெல்சன் மண்டேலா, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரேசா, ஜவஹர்லால் நேரு, பொருளாதார நிபுனர் அமர்த்தியா சென், தத்துவாசிரியர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், லதா மங்கேஷ்கர், டாக்டர் அப்துல் கலாம் என நாடு முழுவதும் சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001இல் லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டதற்கு பின் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்குவதற்காக மத்திய அரசு பலரது பெயர்களை பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி - வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதி ஆட்டத்தை துவக்கி வைத்தார்.


அடுத்து, இந்த வரிசையில் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தன்னுடைய குருவான கன்சிராமுக்கு வழங்க வேண்டும் என்று அவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.


காங்கிரஸ் கட்சியோ ஜோதிபாசுவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கூறி அவரையும் இந்தப் போட்டியில் தானே சேர்த்துக் கொண்டது.


சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உடனடியாக இதற்கு பதிலடியும் கொடுத்து விட்டார். தேசியத்தின் மிக உயரிய - நாணயமான விருது விஷயத்தை அரசியலாக்கக்கூடாது என்றதோடு, மார்க்சிஸ்ட்டுகள் இதுபோன்ற விருதுகளை விரும்புவதில்லை என்பதைம் தெளிவுபடுத்தி விட்டார்.


பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காலத்தில் 2001க்கு பிறகு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து எந்தவிதமான பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை. அவர்களது பார்வையில் சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அதற்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை இப்போது பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் மோடிக்கே கூட அந்த விருதை வழங்கியிருக்கலாம்.


இவர்களால் யாரையும் தேசத்திற்கு சேவை செய்தவர்களாக அடையாளம் காண முடியாத நிலையில், இப்போது வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அரசியலாக்கி வருகிறார்கள்.


விருது படும் பாட்டைக் கண்ட என்.டி. டி.வி. இது குறித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் ஓவியர் உசைனின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாம். பொறுத்துக்கொள்வார்களா வானரப் படைகள் (சங்பரிவார பாசிச படைகள் - காவிச்சட்டைக்காரர்கள்) அவ்வளவுதான்; அகமதாபாத்தில் உள்ள என்.டி. டி.வி. அலுவலகத்தை 20 பேர் கொண்ட இந்து சாம்ராஜ்ய சேனா படையினர் சூறையாடி விட்டனர்.
பாசிஸ்ட்டுகளுக்கு எப்போதும் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், விஞ்ஞானம், சகிப்புத்தன்மை... என்பதெல்லாம் படுவிரோதமானது. அவர்களது அகராதியிலேயே அதுவெல்லாம் கிடையாது. அதுவும் ஓவியர் உசைன் பெயரை பரிசீலிக்கலாமா? இவர் இந்து மதத்தையே அழிக்கப் புறப்பட்ட சாத்தானல்லவா?...


அதுவும் அடுத்த பிரதமர் அத்வானியால் வாஜ்பாய் பெயரை பரிந்துரைக்கப்பட்ட பின்னணியில் உசைனின் பெயரை சேர்த்தால் அவர்களது ரத்தம் உறைந்துப் போகாதா?


பா.ஜ.க.வின் இந்து பாசிச சிந்தனை இந்தியாவின் உயரிய விருதைக் கூட களங்கப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தங்களது அரசியலுக்கு ஆதரவாக எதையெல்லாம் பிரச்சனையாக்க முடியுமோ அதையெல்லாம் பிரச்சனையாக்குவதுதான் பாசிச சிந்தனை.


பாரத ரத்னா விருதை எம்.ஜி.ஆருக்கு கூட ஒரு முறை வழங்கப்பட்டுள்ளது. அவரின் வாரிசு... அண்ணா - பெரியாரின் வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்த நரமாமிசக்காரர்களுக்கு விருந்துப் படைத்து கௌரவிப்பதும் - பாராட்டுவதும் - அவர்களோடு அரசியல் உறவுக் கொள்ள துடிப்பதும் பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆருக்கு செய்யும் தொண்டாகுமா?


ஒருவேளை இந்த விருது வாஜ்பாய்க்கு வழங்கப்படுமானால், ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்கள் அரசுக்கு திருப்பியளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். வாஜ்பாய் ஆட்சியிலிருக்கும் போது, நரேந்திர மோடியின் பாசிச வெறியாட்டத்தால் 3000 சிறுபான்மையினர் நரவேட்டையாடப்பட்டதும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டதையும் கைகட்டி வேடிக்கை பார்த்த சங்பரிவார மனசாட்சி! இத்தகைய செயல்படாத பிரதமராக இருந்த வாஜ்பாய் இந்த விருதுக்கு எந்த வகையில் பொருத்தமானவர்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்!


நம்மைப் பொருத்தவரை இந்த விருதை களங்கப்படுத்தும் சங்பரிவாரத்தின் சிந்தனையோட்டத்திற்கு எதிராகவும், பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் சங்பரிவார பாசிசத்திற்கும் எதிராகவும் குரல் எழுப்புவதே பாரத ரத்னாவுக்கு செய்யும் தொண்டாகும்.

January 18, 2008

அம்மாத்துவா


ஹலோ தலைவரே! என்னங்க திடீருன்னு அம்மாத்துவான்னு சொல்றீங்களேன்னு குழப்பமா இருக்கா... இந்த புத்தாண்டின் சிறப்பே அதுதாங்க...
இந்துத்துவாவின் தமிழக பரிணாமமே அம்மாத்துவா... அதாங்க... அம்மா மோடியின் வெற்றியால் அகம் மகிழ்ந்ததோடு நிற்காமல், வீட்டுக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார்.
மரண வியாபாரியின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அது பாசிச அணுகுமுறைக்கு - அச்சத்தின் பிடியிலுள்ள மக்கள் குஜராத்தில் தற்போதும் நிர்வாணமாக இருப்பதை நிரூபிக்கும் வெற்றிதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
குஜராத்தில் அகிம்சை - இம்சிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழகத்திற்கு தாம்பளமிட்டு கொண்டுவர முற்படுகிறார் ஜெயம்மா...
கோத்ரா ரயில் எரிப்பில் உண்மை மட்டுமா எரிக்கப்பட்டது? சிறுபான்மையினரின் உடல்களும்தானே... என்னதான் திரும்பத் திரும்ப உண்மையை வெளிச்சம் போட்டு காட்டினாலும் அது இந்துத்துவ - மோடித்துவ ஜோதியிலல்லவா கரைந்து விட்டது.
காந்தியை கோட்சே கொன்றதைவிட நம்முடைய காங்கிரஸ்காரர்கள் அவரது சிந்தனையை அணுதினமும் கொன்றுக் கொண்டேயிருப்பதுதான் மோடித்துவ வெற்றியின் அகோரம்.
எந்த கடைச் சரக்கை விற்றால் அதிகாரத்தின் உச்சியில் செல்லலாம் என்பது புதிய தாராக மந்திரமாக மாற்றப்பட்டுள்ள சுழலில், அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன? தமிழினத்தை மீட்கப்போவதாக - அண்ணா - பெரியாரின் கொள்கைகளை மீட்டு தமிழகத்தில் புரட்சிப் புயலாய் சுழலப்போவதாக கூறியவர்கள் எல்லாம் அம்மாவின் அரசியல் சுழலில் அடங்கிப்போய்விட்டதும், அவர்களது புது சரக்கை ஏற்க மக்கள் தயாராக இல்லாதபோது... அண்ணாவாவது, பெரியாராவது... அம்மாவே சரணம்... மோடித்துவாவே வாழ்க... என்ற குரல்களே விம்மிக்கொண்டு வருகின்றன.
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியும் - காந்தியத்தின் சிதைவுகளும் இந்துத்துவ - மோடிகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. நாகரீக உலகில் மனிதனை மனிதன் கொல்லும் அரக்கர்களுக்கு அரசியல் வாழ்வளிப்பது... கொலைகாரன் கையில் பெரும் அணுகுண்டை கொடுத்தது போலாகியுள்ளது.
கடந்த காலத்தில் அம்மாவின் அரசியலில் இந்துத்துவா வாடை நாற்றமெடுத்தது. அது ஆடு - கோழி பலியிடலை தடை செய்து சரணம் போட்டபோது மென்மையான இந்துத்துவாவாக பரிமாணம் எடுத்து, தற்போது ஆட்சியையும் - அதிகாரத்தையும் இழந்த ஜனநாயக விரோதி மோடித்துவ வெற்றியில் மஞ்சும் குளிக்க கனா கண்டுக் கொண்டிருக்கிறார்.
அதிகாரத்தையும்- ஆட்சியையும் இலக்காக வைத்தவர்கள் வேண்டுமானால் அவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை புதைத்திருக்கலாம்... ஆனால் மக்கள்?
அம்மாத்துவா என்பது அரசியலில் அழிவு என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க காத்திருக்கிறார்கள்!

January 07, 2008

மதுரையில் தொழில் வள(ரு)மா?


தமிழகத்தின் பழம் பெருமை நகரங்களில் ஒன்றான மதுரை கோவில்களுக்கு புகழ்பெற்றது. முத்தமிழ் நர்த்தனம் ஆடும் மதுரையில் எங்கெங்கு கானினும் அஞ்சாநெஞ்சர்களின் ஆளுமையே காட்சியளிக்கிறது. ஏன் தென் மாவட்டங்கள் அஞ்சாநெஞ்சரால்தான் ஆளுப்படுவதாகக் கூட கூறப்படுகிறது. இருப்பினும் என்ன?

மதுரைவாசிகள் மதுரையைப் பற்றி கூறுவதென்ன? மதுரையை அவர்கள் நக(ர)மாக கருதுவதில்லை. அது ஒரு பெரிய கிராமம் அவ்வளவுத்தான் என்று பம்முகின்றனர்.

20 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மதுரையில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. மதுரா கோட்ஸ் இங்கே வெறும் 200க்கும் குறைவான தொழிலாளர்களே வேலைபார்ப்பதாக கூறப்படுகிறது. அப்புறம் என்ன? டி.வி.எஸ். - மின்சாரவாரியம் - போக்குவரத்து போன்று சொல்லிக்கொள்ளும் சில முக்கியமான தொழில்சார்ந்த தொழில்களே உள்ளன.

தமிழகம் சிங்கப்பூராக மாறப்போவதாக கதைக்கும் நம்மூர் ஆசாமிகள் மதுரை பக்கம்போனால்தான் தெரியும் அங்கே மூன்றடுக்கு மாடிகளைக் காண்பதுகூட அரிதாகத்தான் இருக்கிறது. அவ்வளவுத்தான்?

ஒரு பக்கம் விவசாயம் - அதுவும் இப்போ சரியில்லாத நிலைமை? மறுபக்கம் இட்லி கடைகள்தான் மிகப்பெரிய தொழிலாக காட்சியளிக்கிறது. மதுரையை தலைநகராக மாற்றப்போவதாக ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்டது. அந்த மதுரையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் கிளை வந்ததே இந்த ஆட்சியாளர்களின் பெரிய சாதனைதான் (மக்களின்) என புளங்காகிதம் அடைந்தாலும் - தங்கள் மாவட்டத்து படித்த பிள்ளைகளுக்கு உள்ளுரிலேயே வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மதுரை வாசிகளிடம் மிஞ்சுகிறது.

அஞ்சாநெஞ்சர்கள் கூட மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றுவதில் அஞ்சுவதாக கூறப்படுகிறது. என்னமோ - மதுரை மக்களுக்கு விடிவு வந்தால் சரி!

எப்படியோ அரசியல் களம் பல கண்ட நமது பேரறிஞரின் வாரிசான கலைஞரின் கடைக்கண் பார்வை மதுரைக்கு விழுமா?

January 04, 2008

புத்தாண்டு சம்பவங்கள் யார் பொறுப்பு?


2008 புத்தாண்டு தமிழகத்தையும். இந்தியாவையும் உலுக்கும் வகையில் பிறந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் உச்சகட்டம் சென்னை சவேரா ஓட்டலில் இளைஞனின் உயிரை பறித்துக் கொண்டது. மும்பையில் இரண்டு இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களாலும் இந்தியா உறைந்துப்போயுள்ளது.


இந்த இரண்டு சம்பவங்களையும் தனித்தனியான சம்பவமாக பார்க்க முடியாது. இது ஏதோ தன்னிச்சையாக ஏற்பட்டது என்று ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது. இந்திய கலாச்சாரக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக ஆங்கிலப் புத்தாண்டு மாறியுள்ளது. தமிழ் புத்தாண்டு போன்ற மொழிவாரி மாநிலப் புத்தாண்டுகள் சம்பிரதாயப் பூர்வமாக மாறிவிட்டது. அது வீட்டுக்குள்ளிருக்கும் பெண்களுக்காக மாற்றி விட்டனர். அது பழமையின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.



ஆங்கிலப் புத்தாண்டை ஆரவாரமாக கொண்டாடுவதை நாம் தவறாக விமர்சிக்க முடியாது. இவ்வளவு விபரீதமாக - அலங்கோலமாக - அநாகரீகமாக கொண்டாடுவதற்கு யார் காரணம் என்பதை நாம் அலசியேயாக வேண்டும்.



உலகமயம் நம்மைப் போன்ற நாடுகளுக்கு வெறும் அந்நிய மூலதனத்தை மட்டும் கொண்டுவரவில்லை. கூடவே அதன் நச்சுக் கலாச்சாரத்தையும் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இத்தகைய கலாச்சாரங்கள் கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகளால் திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குள்ளும் அவர்களது மறைமுக சுரண்டல் யுத்தியே அடங்கியுள்ளது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.



மில்லினியம் - 2000 ஆம் ஆண்டை ஓராண்டுக்கு முன்னாலேயே கொண்டாடியதை உலகம் அறியும். இதற்காக ஒரு பெரும் பிரச்சார டைனோசர்களையே இறக்கி விட்டனர் உலகமய காப்பாளர்கள். இதன் மூலம் தங்களை உலக பணக்காரர்கள் வரிசையில் முந்திக் கொண்டனர்.



மில்லினியத்தில் தொடங்கிய இந்த சீரழிவு கலாச்சாரம் இன்றைக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. குறிப்பாக நமது நவீன தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் அல்லும் - பகலும் 12 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களது மூளை மானிட்டர்களின் திரைக்கு நாள்தோறும் இரையாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கால் சென்டர்கள் - பி.பி.ஓ. என ஐ.டி. துறைகளில் அவடு் சோர்சிங் கலாச்சாரத்தின் மூலம் விரைவாக சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐ.டி. படித்த நவீன இளைஞர்கள் குடும்பத்தை மறந்து - உறவினர்களை மறந்து ஐ.டி. வளாகங்களும் - இணையதளங்களுமே உலகமாகிப் போயுள்ளது. உணவுக் கலாச்சாரம். மொழிக் கலாச்சாரம். உடைக்கலாச்சாரம் என அனைத்தும் அந்நியமாகிப்போன இளைஞர்கள் - யுவதிகளின் மனதை மேலும் சுரண்டுவதற்கு - அவர்களை எப்போதும் ஜாலியான உலகத்தில் மிதக்கச் செய்வதற்கு இந்த பன்னாட்டு கலாச்சார காவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததுதான் டிஸ்கொத்தே முதல் ரிசோர்ட் கலாச்சார திருவிழாக்கள் வரை.



இதன் தொடர்ச்சியே இந்த புத்தாண்டை இனிதே வரவேற்க - நமது நவீன இளைஞர்களின் பாக்கெட் மணியை களவாட பெரும் மூன்று நட்சத்திர - ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் - பன்னாட்டு நிறுவனங்களும் பெப்சி - கோக் மற்றும் இதர மதுபான நிறுவனங்கள் - ஐ.டி. நிறுவனங்கள; உட்பட பலரும் ஸ்பான்சர் செய்து இந்தப் புத்தாண்டை நவீன முறையில் வரவேற்க இளைஞர்களுக்கு வலை வீசுகின்றனர். இதற்கு ஒரு இரவிற்கு ரூபாய் 5000 வரை உறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கே குட்டி - புட்டி - ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் - முழு சுதந்திர உலகமே இங்கேதான் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றனர்.

ஏன் நமது தமிழ் சின்னத்திரை என்ன செய்து கொண்டிருக்கிறது. கனவன் - மனைவி நடனம் ஆடுவதை பெரும் பொழுது போக்காக மாற்றியுள்ளது. தற்போது திருமண விழாக்களில் கூட சர்வ சாதாரணமாக பெண்கள் நடனம் ஆடுவதை பார்க்க முடிகிறது. சினிமாவை மிஞ்சும் நடனக் குழுக்கள் எல்லாம் இன்றைக்கு புற்றிசல்போல் உருவெடுத்துள்ளது. இத்தகையவர்களின் ஆசிகள் எல்லாம்தான் இன்றைக்கு புத்தாண்டு சீரழிவின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
மற்றொரு புறம் சவேரா ஓட்டர் நிர்வாகம் சட்டவிரோதமாக அதன்கான விசேஷ வசதிகள் இல்லாத சுழலில் நீச்சல் களத்திலேயே மேடையெழுப்பியுள்ளது. இந்த சுரண்டல்வாதிகளுக்கு புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தைவிட எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு - காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களது கவனக்குறைவும் - அலட்சியப்போக்குமே இந்த இளைஞரின் உயிரிப் பறிப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மேலாளர் ஒரு நாள் இரவிற்குள் ஜாமின் பெற்று விடுகிறார். நீதிமன்றம் இதுபோன்ற விசயங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்றுத் தெரியவில்லை. சாதாரண மனிதனுக்கு சிறைக் கம்பிகளை மட்டுமே கொடையாக வழங்குகின்றனர் சிறு குற்றத்திற்கு கூட. பணம் படைத்தவர்களுக்கே சட்டம் சாதகமாக இருக்கறிது. இதுவும் உலகமயக் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான்.



மேலும் சமீப ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இது வெறும் மத அடிப்படையில் நின்று மட்டுமே பார்க்கப்படுகிறது. இவ்வாறு கொண்டாடுபவர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதும் நடைபெற்று வருகிறது.



மும்பை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 பேர் கொண்ட கும்பல் என்று கூறப்படுகிறது. அவர்கள் அத்துனைப் பேரையும் கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த கார்ப்பரேட் பன்னாட்டு கலாச்சார உற்பத்தியாளர்களின் பிடியிலிருந்து நமது இளைஞர்களை விடுவிக்க வேண்டும். அதன்றகு துணை போகும் நமது சின்னத்தரை - பெரியதிரை - பத்திரிகை - மீடியா உலகம் என அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். மாற்றுக் கலாச்சார விழாக்களை தெருக்கள்தோறும் கொண்டாட வேண்டும் கட்டுப்பாட்டிற்குள் நின்று. இதுவே இதுபோன்ற கலாச்சார பாசிஸ்ட்டுகளின் பிடியிலிருந்து நமது நாட்டை விடுவிப்பதற்கான வழியாகும்.