February 17, 2009

மறைமுக பார்ப்பனீயத்தை விதைக்கும் ம.க.இ.க.!

வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்!
விடுதலை இராசேந்திரன்

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!
ம.க.இ.க.வின் தலித் விரோத நிலைபாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்!

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!

6 comments:

Anonymous said...

சந்திப்பு செல்வபெருமாள், ம.க.இ.க, பெரியார் தி.க இரண்டுமே உங்கள் கட்சியை எதிரியாக கருதும் போது நீங்கள் எதற்கு விடுதலை ராசேந்திரன் எழுதியதை எடுத்துப் போடுகிறீர்கள் இரு தரப்பாரும் உங்களை எப்படியும்
திட்டப்போகிறார்கள். வி.பி.சிங்கின் அரசை சிபிஎம் ஆதரித்தது.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முற்றாக
நில பங்கீடு உட்பட அமுல்
செய்யக் கோரியது.பெரியார்
தி.கவிற்கு இட ஒதுக்கீடு
போதும், நிலச் சீர்திருத்தம்
தேவையில்லை.சிபிஎம் அப்போது
கிரிமி லேயரை விலக்க வேண்டும்
என்பது சரிதான் என்றது.பெரியார்
திகவிமனர் கிரிமி லேயர் என்ற
பாகுபாடே கூடாது என்பவர்கள்.
இப்படி பல வேறுபாடுகள் உண்டு.
அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
ம.க.இ.க வெளியிட்ட இட ஒதுக்கீடு குறித்த வெளியீடு இன்னும் வேடிக்கை. அதை படியுங்கள், சிரியுங்கள். குழப்பத்தின் உச்சம்
ம.க.இ.க என்பதைப் புரிந்து
கொள்வீர்கள். அதைப் படித்த
பின் எனக்கு அவர்கள் மீதான
நம்பிக்கைக் கூடியது. இவர்களால்
ஒன்றும் செய்ய முடியாது என்பதை
நன்றாக புரிந்து கொண்டேன். அதிக
பட்சம் சில்லறை தொந்தரவுகள்தான்
இருக்கும். சிபிஎம் போன்ற கட்சிகள்
தராத சில்லறை தொந்தரவா?. அதற்காக நான் பயந்து ஒடி விட்டேனா?

உங்கள் மூவரின் பொது எதிரியான ஏகாதிபத்தியம்-பார்பனியம் ஆகிய நான் கூறுவது என்னவென்றால் நீங்கள் இப்படி பிரிந்து மோதிக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கிறது. இத்தகைய 'நண்பர்கள்' இருக்கும் போது இந்தியாவில் எனக்கென்ன குறையிருக்க முடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
பாடிக் கொண்டே தொழில் செய்ய வேண்டியதுதான் :).

சந்திப்பு said...


ம.க.இ.க, பெரியார் தி.க இரண்டுமே உங்கள் கட்சியை எதிரியாக கருதும் போது நீங்கள் எதற்கு விடுதலை ராசேந்திரன் எழுதியதை எடுத்துப் போடுகிறீர்கள்


அனானி நன்பரே உங்களது விமர்சனம் நியாயமானதாகவே கருதுகிறேன். இருப்பினும் இது குறித்து சில விளக்கங்கள் தருவது பொருத்தமாக இருக்கும். ம.க.இ.க. சி.பி.எம். எதிர்ப்பையே பெரும் தொழிலாக கொண்டுள்ளது. அதாவது கம்மயூனிச சீரழைப்பை அடிப்படையாக கொண்டு பிழைப்புவாதம் செய்து வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தை அப்படி கருதவில்லை. அவர்களது நோக்கம் சி.பி.எம். எதிர்ப்பில்லை. அவர்கள் பார்ப்பனீயத்தை எதிர்க்கிறார்கள் அதில் நியாயம் உண்டு. அதற்காக அதனை சி.பி.எம். எதிரியாக கற்பிப்பது பொருத்தமானதல்ல. அது மட்டுமல்ல திராவிடர் கழகமும் கூட எதிரியல்ல. சமீபத்தில் தமுஎச தோழர்கள் சென்னையில் தாக்கப்பட்டதை கண்டித்த கூட்டத்திற்கு கூட விடுதலை ராசேந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் தனது கண்டனத்தை எடுத்து வைத்தார். அதாவது மதவாதத்திற்கு எதிராகவும் - சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒரே அணியில் திரள வேண்டிய அமைப்பாகவே இவற்றை கருதுகிறேன். ஆனால் மேலே சொன்ன ம.க.இ.க. எதனோடும் சேராமல் நானே உசந்தவன் என்ற பார்ப்பனீய மனோபாவத்தை அரசியலிலும் கலக்கும் ஆர்வலக்கோளாறு கத்துக்குட்டிகள் அல்ல திட்டமிட்டு சீர்குலைக்கும் சீர்குலைவுவாதிகள். எனவே ஒரே தட்டில் வைப்பதை நான் எதிர்க்கிறேன்.

இடஒதுக்கீடு குறித்து சி.பி.எம்.க்கு உள்ள அதே கருத்தைத்தான் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சி.பி.எம். எதிர்பார்த்தது கிடையாது. நானும்தான். ஆனால் ம.க.இ.க. இடஒதுக்கீட்டையே எதிர்க்கும் அமைப்பு.

எங்களுக்குள் அடித்துக் கொண்டு நீங்கள் வேடிக்கை பார்ப்பது என்றால் நிச்சயம் நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரராகத்தான் இருக்க முடியும். அப்படியானால் உங்களது உற்ற நன்பன் ம.க.இ.க.தான். அவர்கள்தான் நந்திகிராமத்தில் உங்களோடு கைகோர்த்தார்கள். தற்போது இல. கணேசனோடு இலங்கை பிரச்சனைக்காக கரம் கோர்க்கிறார்கள். அதுதான் ம.க.இ.க.

Anonymous said...

ம.க.இ.க இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அமைப்பு என எப்படி சொல்கின்றீர்கள் சந்திப்பு

எதிர்க்கின்றார்களா அல்லது சாதி ஒழிப்புக்கு இது மட்டுமே தீர்வு கிடைக்க வழியல்ல என்று சொல்கின்றார்ளா

சந்திப்பு said...

அனானி நன்பரே இந்தியாவில் உள்ள எந்த குழந்தையும் சாதி ஒழிப்புக்கு இடஒதுக்கீடுதான் வழி என்று சொல்லவில்லை. சாதி ஒழிப்புக்கான நடவடிக்கை என்பது வேறு. இடஒதுக்கீடு என்பது இருக்கின்ற சமூகத்தில் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் தங்களுக்கு உரிய ஒதுக்கீட்டை பெறுவது. இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமேயில்லை. இந்த இடஒதுக்கீடு என்பது அரசுத்துறையில் மட்டுமல்ல; தனியார்துறையிலும் தொடரவேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்துகிறது. ம.க.இ.க. சாதி ஒழிப்புக்காக நிற்பதுபோல் காட்டிக் கொண்டு பார்ப்பனீயம் பேசும் - தலித்தியத்தை மறுக்கும் - குட்டி பூர்சுவா என்று சொல்லும் - இடஒதுக்கீட்டை எதிர்க்கும்... எல்லாம் ஒரே குழப்பம்தாம்பா... அய்யோ அதைவிட இப்போதைய காமெடி என்னத் தெரியுமா? இலங்கைப் பிரச்சனையிலே அவங்களுக்கு ஒரே கருத்து இல்லங்கறது மட்டும்தான். அப்படியே தமிழ் இனவாத குட்டையில் முங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்த அவர்களது பதிவுகளையும் - முரண்பாட்டையும் மட்டும் பதிவிட்டால்... அப்பப்பா அது ஒரு அமைப்பே இல்லைங்கறது வெளிச்சமாயிடும்.

vimalavidya said...

''Anonymous''>>the cat has come out from the bag sir !RSS>>. I already mentioned that...How long they can act ?---selvapriyan

Anonymous said...

if the stand-point of ma.ka.ee.ka has became confuse you, how you understand the writtings of mark or lenin. that is impossible