May 05, 2006

வழிகாட்டும் மேற்குவங்கம்

மேற்குவங்கத்தின் 7வது செஞ்சுரி!

மேற்குவங்கமும் - சிவப்பும் இணை பிரியாதது. ஐந்து மாநில தேர்தல்களில் மேற்குவங்கத்தில் சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி மீண்டும் 7வது முறையாக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கியுள்ளனர். நிச்சயம் இடது முன்னணி வெற்றி பெறும்.
பலருக்கு ஆச்சர்யம், பலருக்கு பொறாமை இவர்கள் மட்டும் எப்படி தொடர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் திராவிடங்கள் ஐந்து வருடம் ஆட்சி செய்தாலே மக்களுக்கு அலர்ஜியாகி விடுகிறது. அடுத்த தேர்தலில் எச்சில் இலையாக பறக்க விடுகின்றனர் மக்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுதான் ஏதோ சாதனைகளையும், தியாகங்களையும் செய்து சுதந்திரத்தைப் பெற்றது என்று வரலாறுகளை வடிவமைத்துக் கொண்டாலும், கதை, கதையாய் கதைத்துக் கொண்டிருந்தாலும் காங்கிரசால்கூட தொடர்ந்து வங்கத்தைப்போல் எங்கும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

மார்க்சி°ட்டுகள் அப்படி என்ன செய்து விட்டார்கள் அங்கே? இந்த வியப்பான கேள்விகள் எல்லோர் மனதிலும் இழையோடுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் எல்லாம் இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவதில்லை! அப்படியிருந்தும் எப்படி இந்த வெற்றி?

இந்தியா மட்டுமல்ல உலகமே வியக்கிறது. வரலாற்றை ஆராய்கிறது. ஆம்! கம்யூனிசம் என்கிற பெரும் வரலாற்று நீரோட்டத்தில் மேற்குவங்கத்தின் அனுபவங்களும் பதிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச ஆட்சி என்றாலே அது, புரட்சியின் மூலம்தான் வர முடியும். இதுதான் உலக அனுபவம்! ஆனால் மேற்குவங்கத்தில் ஜனநாயக முறைப்படியே மக்கள் இடதுசாரிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதன் பின்னணியைப் பார்ப்போம்!

முதலில் ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்தி விடுவோம்: மேற்குவங்கம்தான் இந்தியாவின் கூட்டணி ஆட்சிக்கு முதல் முன்னுதாரணம். ஆம்! சி.பி.எம். தனித்த மெஜாரிட்டியோடு ஆட்சியமைக்க வாய்ப்பு இருந்தாலும், அப்படி ஒருமுறை கூட அமைத்ததில்லை. கொள்ளையடிப்படையில் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சிதான் மேற்குவங்கத்தில் நடைபெறுகிறது. (இது கொள்கை அடிப்படையிலானது. சீட்டு எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியதும் அல்ல)

1977இல் ஆட்சிக்கு வந்த இடதுமுன்னணி இன்றுவரை தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம், 2011 வரை ஆட்சியில் இருக்கும். அதற்கு பிறகு நடைபெறும் தேர்தலிலும் வங்கத்தில் சிவப்பின் ராஜ்யம்தான்.

1977இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், அங்கு நடைபெற்ற விவசாயிகள் போராட்டம். குறிப்பாக விவசாயத் தொழிலாளிகள் போராட்டம் பல மாவட்டங்களில் வீறு கொண்டு எழுந்தது. அதன் விளைவாக தரிசு நிலங்களையும், உபரி நிலங்களையும் - நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மீட்டுக் கொள்ளும் மிகப்பெரிய இயக்கம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகவும், பின் ஆட்சிக்கு வந்த இடதுமுன்னணி ஆட்சியில் வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பின் விளைவாகவும், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் கிடைத்தது. இதன் மூலம், இன்றைக்கு இந்தியாவிலேயே கிராமப்புற பொருளாதாம் மிகப்பெரிய அளவில் இருப்பது வங்கத்தில்தான்.

இந்தியாவில் இதுவரை நாடு முழுவதும் செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் 22 சதவீதம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, விவசாய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலிச்சட்டம் கறாராக அமலாக்கப் படுகிறது.

அதேபோல் மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சிக்காக இடதுசாரிகள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் தான் இந்திராவும், ராஜீவும்... ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிட மத்திய அரசின் அனுமதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டி நிற்க வேண்டிய நிலைமை.

இந்தச் சூழலில் கூட, மேற்குவங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அதேபோல் மேற்குவங்கத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், மூடப்பட்ட தொழிலாளிகளை பாதுகாத்திட மாதம் ரூ. 500 வழங்குகிறது. இது இந்தியாவில் வேறெங்கும் நடைபெறுவதில்லை.

அதேபோல், படித்த மாணவர்கள் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணத்தை மேற்குவங்க அரசே செலுத்துகிறது.

குறிப்பாக ரேஷன் முறை. 14 அத்தியாவசியப் பொருட்கள் அங்கே முறையாக மாதந்தோறும் விநியோகிக்கப்படுகிறது.

சாலை மேம்பாடு - கல்கத்தா உட்பட வெவேகமாக மாறி வருகிறது.

அத்துடன் மேற்குவங்கத்திற்கும் - பங்களாதேஷிற்கும் நதிநீர் ஒப்பந்தம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து அமலாக்கப்பட்டு வருகிறது.

வேலையில்லா கால நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் காவல்துறையினருக்கும் சங்கம் வைக்கும் உரிமை வங்கத்திலே வழங்கப்பட்டுள்ளது.
போராடக்கூடிய ஊழியர்களை காவல்துறையினர் தாக்குவது வங்கத்தில் பார்க்க முடியாத விஷயம். இங்கே குடிநீருக்காக போராட்டம் நடத்தினால் கூட தடியடிதான்...

தற்போது உலகமயச் சூழலில் மேற்குவங்கம் ஏதோ அந்நிய முதலீட்டார்களுக்கு தாராளமாக கதவு திறந்து விட்டுள்ளது போல் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அப்படியொன்றும் அங்கே நடப்பதில்லை.

மேற்குவங்க தொழில் கொள்கை மூன்று வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.1. முற்றிலும் நலிவடைந்த - நஷ்டத்தில் இயங்கக்கூடிய தொழில்கள் தனியாரிடம் வழங்கப்படுகிறது.2. கூடிய வரைக்கும் அரசும் ஞு+ தனியாரும் இணைந்து நடத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகிறது.3. நலிவடைந்த தொழிற்சாலைகளை மீட்பதற்கு மேற்குவங்க அரசு விசேஷ முயற்சிகளை எடுக்கிறது.

அந்நிய முதலீடு என்று வரும் போது, என்ரான், வால்மார்ட் போல சரணாகதி ஒப்பந்தங்களை மேற்குவங்க அரசு போடுவதில்லை. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற்சாலைகளுக்குத்தான் வங்கத்தில் அனுமதிக்கப்படுகிறது. உள்ளூர் தொழிற்சாலைகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் மேற்குவங்கம் அனுமதி வழங்குவதில்லை.

இதைவிட மிக, மிக முக்கியமானது உள்ளாட்சி நிர்வாகம், இந்த உள்ளாட்சி நிர்வாகம்தான் இந்தியாவிலேயே மிக முன்னுதாரணமாக செயல்படுவது வங்கத்தில் மட்டுமே. 50 சதவீத நிதி உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டங்களை அவர்களே தீட்டிக் கொள்ளலாம். இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் தலித் - பழங்குடி - பெண்கள். இந்த விகிதம் இந்தியாவிலேயே வங்கத்தில்தான் அதிகம்.

இப்படி எண்ணற்ற சாதனைகளை மிக நேர்மையாக செயல்படுத்தி வரும் இடதுமுன்னணி இந்தியாவின் மாற்று கொள்கையை முன்வைத்து செயல்படும் மாற்று அரசுக்கான முன்னுதாரணமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் தமிழகம் உட்பட இதர மாநிலங்களும் வங்கத்தின் சிவப்பு நட்சத்திரத்தை நோக்கியதாக மாறும்.
இந்திய சூழலுக்கு ஏற்ப மக்கள் ஜனநாயக புரட்சியை இந்தியாவில் அமலாக்கிட உறுதிபூண்டுள்ள சி.பி.எம்., இந்திய சூழலுக்கு ஏற்ப கம்யூனிச கொள்கைகளை பரவலான மக்கள் திரளிடம் கொண்டு சென்றுள்ளது. இது வெற்றி பெற்றும் வருகிறது. வங்கம், கேரளம், திரிபுரா என்று... அடுத்து ஆந்திரமும் - தமிழகமும் இந்தப் பாதையில் நடைபோடும்.... வெற்றி நிச்சயம்!

3 comments:

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல செய்தியை அள்ளிக்கொடுத்த தலிவர் வாள்க!

உங்கள் மகிழ்வில் நானும் நண்பரே!

இரா.சுகுமாரன் said...

//கம்யூனிச ஆட்சி என்றாலே அது, புரட்சியின் மூலம்தான் வர முடியும். இதுதான் உலக அனுபவம்! ஆனால் மேற்குவங்கத்தில் ஜனநாயக முறைப்படியே மக்கள் இடதுசாரிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதன் பின்னணியைப் பார்ப்போம்!//

அந்த மக்கள் இந்தியாவின் மற்ற மக்களைப்போல் அல்லாமல் கொஞ்சம் சூடு சொரணையுள்ள வர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது..

சந்திப்பு said...

நன்றி பாலபாரதி...

ஆம்! சுகுமாறன் மேற்குவங்கம் என்றாலே மாற்றுப் பாதைத்தான். அது போராட்டப்பாதைத்தான். சுதந்திரப்போராட்ட காலத்திலேயே வங்கத்தின் வழி வீறுகொண்ட வழியாக இருந்தது. இதை தாங்களும் அறிந்திருப்பீர்கள். நன்றி சுகுமாறன்.