May 18, 2006

புதிய அரசின் புத்துணர்வு நடவடிக்கைகள்!

wwதமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி திமுக அரசு புத்துணர்வு வேகத்தில் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவைகள். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருவதன் மூலம், தமிழக மக்கள் மீது அழுந்திக் கிடக்கும் பாரத்தை சிறிது இறக்கி வைக்கலாம். அந்த அடிப்படையில் கலைஞரின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்திட வேண்டும்.
குறிப்பாக ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி, விவசாய கூட்டுறவு கடன்கள் ரத்து, சத்துணவில் முட்டை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க நடவடிக்கை, கண்ணகி சிலைக்கு மீண்டும் உயிர் என மிகுந்த முனைப்போடு தமிழக அரசு சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் ஐந்தாண்டு காலமும் இருந்திட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும், சமீபத்தில் தமிழறிஞர் தமிழண்ணனின் கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் பரிசீலித்திடுவதோடு, காலதாமமின்றி உடனடியாக அமலாக்கிட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் மேனிலை கல்வி வரை தமிழை தொடாமலே கல்வி பயிலலாம் என்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் கட்டாய பாடமாக்கிட வேண்டும். தாய்மொழியை புறக்கணித்து விட்டு மற்ற கல்வியை பயிலுவது என்பது ஏற்புடையதன்று. எனவே தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் கலைஞர் இதனை அவர் காலத்திலேயே நிறைவேற்றிடுவது தமிழுக்கு அவர் செய்திட்ட தொண்டாக இது மலரலாம். இந்த கோரிக்கையில் நியாயம் உண்டு.
அதே போல் குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திட நிலச் சீர்திருத்தம் 2 ஏக்கர் நில விநியோகத்தையும் உடனடியாக துவக்கிட வேண்டும். இதனை உறுதியுடன் அமலாக்கிட வேண்டும். இது கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றுவதோடு, தமிழக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து - தமிழகத்தையே மாற்றும்!பொது விநியோகம் ஊழலற்று அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் பொருட்கள் கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடும் அடிப்படை நடவடிக்கைகளையும் காலதாமதமின்றி எடுத்திட வேண்டும். இதற்காக மிகப்பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும் என்று அர்த்தமல்ல; உருவாக்க வேண்டியது அவசியம் என்றாலும், தற்போதைக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விசேஷ நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். (உதாணரமாக சத்துணவுக்கான முட்டை தயாரிப்புகளை சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதுபோல்)
விலைவாசி உயர்வினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
மிக முக்கியமானது. திமுக ஆட்சியில் ரவுடியிசம் தலை தூக்கும் என்ற பேச்சு சாதாரணமாக கீழ் மட்டத்தில் நிலவுகிறது. எனவே இதற்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்காமல், ரவுடியிசத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும். இது காந்தியின் மண் என்பதை விட, சிங்காரவேலர் - பெரியார் பிறந்த மண் என்பதற்கு அடையாளமாக அனைத்து மக்களும் சுதந்திரமாக உலவுவதற்கும், அவரவர்களது உடமைகளுக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும்.கிராமப்புற - நகர்ப்பு சுகாதாரத்தை பராமரித்தல் - மேம்படுத்துவதில் அடிப்படை கவனத்தை இந்த அரசு செய்திட வேண்டும். இதில் ஒரு மறுமலர்ச்சியையே ஏற்படுத்திட வேண்டும்.
அடுத்து, உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாக நடத்துவதற்கு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும். உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 27 அதிகாரங்களையும் வழங்குவதோடு, அதிக நிதியினையும் உள்ளாட்சிகளுக்கு வழங்கிட வேண்டும். மாநில சுயாட்சி குறித்து அடிக்கடி பேசும் கலைஞர் உள்ளாட்சிகளின் சுயாட்சிகளையும் பார்க்கத் தவறமாட்டார் என நம்பலாம்!
ஜனநாயக உரிமைகள் பாதுகாத்திட, கூட்டம் கூடும் உரிமைகள் உட்பட மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்திட மீண்டும் உரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத நல்லிணக்கத்தோடு, ஜாதிய நல்லிணக்கத்தையும் அனைத்து விதத்திலும் கொண்டு வர சீரிய முயற்சிகள் எடுத்திட வேண்டும்.
தலித் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக இந்த புதிய அரசு விசேஷ திட்டங்களை தீட்டிட வேண்டும்.
கல்வி தனியார்மயம் என்பது சாதாரண நகர்ப்புற, கிராமப்புற மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. கல்வி கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்திட உடனடியாக அரசு ஆணையை வெளியிட வேண்டும். ஆரம்ப பள்ளி படிப்பதற்கே மக்கள் ரூ. 5,000 முதல் 10,000 வரை செலுத்திட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலைக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஏக்கங்கள் ஏராளம், எதிர்பார்ப்புகளும் ஏராளம், தேவை கலைஞரின் தாராளம்!

9 comments:

கசி said...

நல்ல பதிவு.

சந்திப்பு said...

Thankyou Kasi..

இரா.சுகுமாரன் said...

//ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி,//

இரண்டு ரூபாய்க்கு அரிசி திட்டம் ஏழைகளுக்கு சோறு போடும் திட்டம் தான் என்று பலர் வரவேற்கலாம்.

ஆனால் இது உண்மையில் உழவர்களின் வயிற்றிலடிக்கும் திட்டம் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இலவச அரிசிக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தப்போவதில்லை. பின் எப்படி விலை குறைக்க முடியும்.
நெல் கொள்முதல் விலையைத்தான் குறைப்பார்கள்.

இது விளைபொருளுக்கு கட்டுப் படியான விலை வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு இது எதிரானதாகும்.

இரா.சுகுமாரன் said...

//திமுக ஆட்சியில் ரவுடியிசம் தலை தூக்கும் என்ற பேச்சு சாதாரணமாக கீழ் மட்டத்தில் நிலவுகிறது. எனவே இதற்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்காமல், ரவுடியிசத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.//

உண்மையாகச் சொன்னால் பெரிய ரவுடியைப் பார்த்து சிறிய ரவுடிகள் பயந்தது போல் தான் செயா ஆட்சி நடந்தது.

அதுவே ஒரு ரவுடி அரசுதான்.

வைகோ, நெடுமாறன் சுபவீரபாண்டியன் உள்ளிட்ட பலரை ரவுடி அரசியல் முலம் தான் சிறை வைத்தார் செயலலிதா.

Radha N said...

கலைஞர் செயல்படுத்தும் திட்டங்களில் கட்சித்தலையீடுகள் இல்லாமல் நெறிமுறைப்படுத்தப்படவேண்டியது மிகமிக அவசியம்.

Anonymous said...

1."மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்திட மீண்டும் உரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்."

அடுத்த வாரம் சீரணிஅரங்கம் அடிக்கல்
நாட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.


2."ஆரம்ப பள்ளி படிப்பதற்கே மக்கள் ரூ. 5,000 முதல் 10,000 வரை செலுத்திட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலைக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்."

அரசு உதவிபெறும் பள்ளிகளின்
வெளியில் அனுமதிக்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிப்புப்பலகை ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது.

3."இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடும் அடிப்படை நடவடிக்கைகளையும் காலதாமதமின்றி எடுத்திட வேண்டும்.

தொழில்பேட்டைகளில் புதிதாக தொழில்
தொடங்க வருவோருக்கு தேவையான
அனைத்து அடிப்படை வசதிகளும் காலதாமதமின்றி உடனடியாக செய்து தரப்படும் என சட்டசபையில் ஆற்காடு வீராசாமி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

மேலும் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, விவசாய கூட்டுறவு கடன்கள் ரத்து, சத்துணவில் முட்டை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க நடவடிக்கை,மீண்டும் கண்ணகிசிலை என பல ஆணைகள் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்திற்குள்.

இன்னும் பல ஏராளமான ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் தீரும் வகையில் கலைஞர் ஐந்தாண்டு காலமும் தாராளமான,தரமான வெளிப்படையான நல்லாட்சி புரிவார் என நம்புவோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

Anonymous said...

1."மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்திட மீண்டும் உரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்."

அடுத்த வாரம் சீரணிஅரங்கம் அடிக்கல்
நாட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.


2."ஆரம்ப பள்ளி படிப்பதற்கே மக்கள் ரூ. 5,000 முதல் 10,000 வரை செலுத்திட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலைக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்."

அரசு உதவிபெறும் பள்ளிகளின்
வெளியில் அனுமதிக்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிப்புப்பலகை ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது.

3."இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடும் அடிப்படை நடவடிக்கைகளையும் காலதாமதமின்றி எடுத்திட வேண்டும்.

தொழில்பேட்டைகளில் புதிதாக தொழில்
தொடங்க வருவோருக்கு தேவையான
அனைத்து அடிப்படை வசதிகளும் காலதாமதமின்றி உடனடியாக செய்து தரப்படும் என சட்டசபையில் ஆற்காடு வீராசாமி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

மேலும் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, விவசாய கூட்டுறவு கடன்கள் ரத்து, சத்துணவில் முட்டை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க நடவடிக்கை,மீண்டும் கண்ணகிசிலை என பல ஆணைகள் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்திற்குள்.

இன்னும் பல ஏராளமான ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் தீரும் வகையில் கலைஞர் ஐந்தாண்டு காலமும் தாராளமான,தரமான வெளிப்படையான நல்லாட்சி புரிவார் என நம்புவோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

சந்திப்பு said...

Thanks Nagu, Dubai Raja

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...
This comment has been removed by a blog administrator.