May 13, 2006

நச்சுப் பாம்பும் - காட்டுமிராண்டிகளும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக நீதியை நிலைநாட்டியுள்ளனர். ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டது போதும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதே சமயம் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை பலத்தையும் மக்கள் வழங்கிடவில்லை. திமுக இதர கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தனித்து ஆட்சியமைக்கிறது. தமிழக வரலாற்றில் இரண்டு கழகங்களின் ஆட்சியின் மீது மக்களது நம்பிக்கை குறைந்து வருவதைத்தான் இந்த தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.

அதே சமயம் மூன்றாவதாக முரசு கொட்டியுள்ள விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே தனியாக போட்டியிட்டு 28 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவே முதல் முறை. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதை இது உணர்த்துகிறது. எதிர்காலம் கழகங்களுக்கு இனியில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இதனை உணர்ந்து கழகங்கள் மீளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையில்... மக்களது தீர்ப்பு குறித்து விரிவாக பேசியுள்ளார். அந்நேரத்தில் அவர் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். ஏனென்றல் தமிழக வரலாற்றிலேயே எதிர்க்கட்சிகள் இவ்வளவு பலமாக இருப்பது இதுதான் முதல் முறை என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்கள் நச்சுப்பாம்புகளாக கொத்துவதற்கு காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தோல்வியை தழுவியுள்ள ஜெயலலிதா தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும், பின் அவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மிகுந்த நம்பிக்கையோடு இது தற்காலிகமான தோல்விதான் என்று கூறி விட்டு, ஆட்சியில் இருப்பவர்களை காட்டுமிராண்டிகள் எனவே நான் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் தமிழக வாக்காளர்கள் நச்சுப் பாம்புகளையும், காட்டுமிராண்டிகளையும்தான் தேர்ந்தெடுத்துள்ளார்களா? ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் ஒருவொருக்கொருவர் இவ்வாறு தூற்றி பேசுவது சட்டமன்ற - அரசியல் ஜனநாயகத்திற்கு பொருத்தமான செயலா? ஆரம்பத்திலேயே இதுபோன்ற வார்த்தை போர்களை துவக்கினால், வரும் ஐந்தாண்டுகாலம் எப்படி இருக்கும்? எனவே பழுத்த அரசியல்வாதியான கலைஞர்தான் இதில் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், தமிழக முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை அவர் செய்வதன் மூலம் வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கலாம். அவர்களது அமைச்சரவை சகாக்களும், உடன் பிறப்புகளும் இதனை உணர்ந்து செயல்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

திரு. கருணாநிதி அவர்கள் முதல்வர் பதவியேற்றவுடன், அவரது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள முதல் மூன்று வாக்குறுதிகளை (அரிசி, முட்டை, கூட்டுறவு கடன் ரத்து) நிறைவேற்றுவதாக கையெழுத்திட்டுள்ளார். இதனை மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்பார்கள். அதே சமயம் இந்த வாக்குறுதிகள் ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும். மேலும் ரேஷன் அரிசி விலை மிகக் குறைந்து இருப்பதால், இந்த ரேஷன் அரிசிகள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி மார்க்கெட்டுக்கே கடத்தி விற்கப்படாமல் காத்திட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனைத்து கட்சி மற்றும் பொது மக்களைக் கொண்ட கண்காணிப்புகுழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.

12 comments:

கோவி.கண்ணன் said...

//மொத்தத்தில் தமிழக வாக்காளர்கள் நச்சுப் பாம்புகளையும், காட்டுமிராண்டிகளையும்தான் தேர்ந்தெடுத்துள்ளார்களா//

நல்ல கேள்வி, நடுநிலையான பதிவு

மணியன் said...

நடுநிலையான பதிவு.

அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இருகழகங்களிலும் சொல்லளவிலேயே இருக்கின்றன.

இன்று நாகரீகமும் கண்ணியமும் காற்றில் பறக்க விடப் படுகின்றன.
அதே நிலை வலைப்பூக்களிலும் காண்கிறோம்.

சந்திப்பு said...

நன்றி கோவி கண்ணன், மணியன்.
அத ஏன் கேக்குறீங்க... அண்ணா, பெரியார் எல்லாம் இவர்களுக்கு எப்பவோ மறந்து போச்சு. தம்பி பதவியேற்கும் நாளான இன்று அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மாலையில்லாமல் கிடந்தது பார்ப்பதற்கு வெறுமையாய் இருந்தது. பெரியார் சிலை இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.

Anonymous said...

சூப்பர் பதிவு.

Radha N said...

சரி இவர்பாட்டுக்கு வாக்குறுதியினை நி றைவேற்றமுனைவார். ஆனால் அரசின் வருமானத்திற்கு ஏதாவது யோசனை வைத்திருக்கி றாரா? விவசாயக்கூட்டுறவு கடன்கள் ரத்து என்கிறார்? இதில் எத்தனைபேர் உண்மையி லே வறுமையில் உழல்பவர்கள். அவர்களை தவிர்த்து மற்றபேர்களிடம் வசூல் செய்யலாமே! நல்ல கதையாக இருக்கிறதே ஊர்த்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தமாதிரி!

சந்திப்பு said...

நன்றி ரமேஷ். எப்படி இருக்கீங்க! தேர்தல் பிசியால் தங்களது தளத்தை பார்க்கவில்லை. இனிமேல் ஜமாய்ப்போம்... கலாய்ப்போம்... அடுத்து வைகோவுக்கு கிடைத்தது தனிப்பட்ட தோல்வியல்ல ரமேஷ். அது அவரது தவறான கொள்கைக்கு கிடைத்த பலமான அடி... இனிமேலாவது திருந்துவாரா வைகோ!

சந்திப்பு said...

நாகு விவசாயிகள் விஷயத்தில் இந்த அளவுகோலை கடைப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை! ஏனென்றால் ஆந்திராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் எல்லோரும் பணக்கார விவசாயிகள் என்று கூறப்படுகிறது. எனினும் விவசாயத்தை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கைகளை ஐய்யா எடுத்தால் தமிழகத்திற்கு நல்லது! பார்ப்போம்... நன்றி நாகு.

சந்திப்பு said...

Thanks Anony...

விட்டுது சிகப்பு said...

நல்ல பதிவு.

//அதே சமயம் இந்த வாக்குறுதிகள் ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும். //
இது முக்கியம்.

//மேலும் ரேஷன் அரிசி விலை மிகக் குறைந்து இருப்பதால், இந்த ரேஷன் அரிசிகள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி மார்க்கெட்டுக்கே கடத்தி விற்கப்படாமல் காத்திட வேண்டும்.//
இது ரொம்ப முக்கியம். வரலாறு திரும்பகூடாது

//ரேஷன் கடைகளுக்கு அனைத்து கட்சி மற்றும் பொது மக்களைக் கொண்ட கண்காணிப்புகுழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.
//
இது நடக்கவே நடக்காது

விட்டுது சிகப்பு said...

நல்ல பதிவு.

//அதே சமயம் இந்த வாக்குறுதிகள் ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும். //
இது முக்கியம்.

//மேலும் ரேஷன் அரிசி விலை மிகக் குறைந்து இருப்பதால், இந்த ரேஷன் அரிசிகள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி மார்க்கெட்டுக்கே கடத்தி விற்கப்படாமல் காத்திட வேண்டும்.//
இது ரொம்ப முக்கியம். வரலாறு திரும்பகூடாது

//ரேஷன் கடைகளுக்கு அனைத்து கட்சி மற்றும் பொது மக்களைக் கொண்ட கண்காணிப்புகுழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.
//
இது நடக்கவே நடக்காது

Sivabalan said...

//ரேஷன் கடைகளுக்கு அனைத்து கட்சி மற்றும் பொது மக்களைக் கொண்ட கண்காணிப்புகுழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.//

நலல யோசனை!!

திரு. கருணாநிதி அவர்கள் மூத்த அரசியல்வாதி, நிச்சய்ம் செய்வார் என நம்புவோமாக!!

சந்திப்பு said...

உங்களைப் போலவே நானும் நம்புகிறேன்... நன்றி சிவபாலன்.