February 13, 2009

அட்டாக் பாண்டியனும் - அஞ்சா நெஞ்சனும் மத்திய சிறை அனுபவம்!

பரந்து விரிந்த அந்த மைதானத்தில் கைதிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ சினிமா படங்கள் திரையிடுவது வழக்கம். இங்குள்ள கைதிகள் பிரார்த்தனா போன்ற ஓப்பன் தியேட்டரில் கிடைக்கும் அதே சுகத்தோடுதான் சினிமாவை பார்ப்பார்கள். இந்த கலையரங்கம் கடந்த இரண்டு வருடங்களாக காட்சிகள் இல்லாமல் கலையிழந்து இருந்தது.

அந்த அகண்ட மைதானத்திற்கு மேற்கு பக்கத்தில்தான் அடக்க முறையாத அல்லது கொடுமையான சிறை கைதிகளை அடைப்பதற்கான மிகக் குறுகிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளிலிருந்து காற்று வெளியேறுவதற்கான துவாரங்கள் கூட கிடையாது. இரவு நேரத்தில் பேய் வீடு என்பார்களே அதுபோலத்தான் இருந்திருக்கும். இரண்டரை அடி இரும்பு கதவுகளுடன் பூட்டப்பட்ட மிகச் சிறிய அறைகள்தான் இவைகள்.

உள்ளே இருக்கும் கைதிகளில் யாராவது அடிக்கடி வம்பு செய்து கொண்டிருந்தாலோ அல்லது போலீசாரிடம் ஏடா கூடமாக நடந்துக் கொண்டாலோ இந்த சிறைக்குத்தான் அனுப்புவார்களாம். இந்த சிறையில் இருப்பவர் பக்கத்து அறையில் உள்ள கைதியிடம் கூட பேச முடியாது. அந்த அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு கைதியை ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்தாலே அவன் சித்தம் கலங்கி பைத்தியக்காரனாக மாறி விடுவானாம்! அனுபவம் வாய்ந்த ஒரு முன்னாள் கைதி சொன்னது. இரண்டு நாள் இருந்தாலே போதும் அவனது மூளை கிறு கிறுக்க ஆரம்பித்து விடும் என்கிறார்கள். அதாவது மனிதனின் மூளை ஒரு நேரம் இருப்பது போல் இருக்காது சார்! என்றார்.

இதுபோன்ற சிறையில்தான் தென்னாப்பிரிக்காவின் விடுதுலை வேந்தர் நெல்சன் மண்டேலா 21 வருடம் கழித்தார் என்றால் அவரது திட உறுதியை என்னவென்று சொல்வது! அவர் மட்டுமா? இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சியின் மூளையை 20 ஆண்டுகாலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினாரே! அவர் அடைக்கப்பட்ட சிறை எப்படியிருந்திருக்கும். இத்தாலியில் ஆட்சிக்கு வந்த முசோலினி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாட ஆரம்பித்தான். அப்போது அந்தோனியா கிராம்சியை நாட்டை விட்டு வெளியேறிவிடும்படி சக தோழர்களும், கமிட்டியும் முடிவு செய்தது. இருந்தாலும் அதனை ஏற்க மறுத்து விட்டார் கிராம்சி. அவர் கூறிய வார்த்தைகள் என்றும் உயிருடன் திகழும். "மூழ்கும் கப்பலில் கடைசியாக வெளியேறுபவன் கேப்டனாக இருக்க வேண்டும்" என்று உறுதிபடக் கூறினார். அப்படிப்பட்ட மகத்தான போராளியைத்தான் இப்படிப்பட்ட கொடூமையான சிறையில் அடைத்தார்கள். அவ்வாறு அடைக்கும் போது, நீதிபதி இப்படித்தான் கூறினார். 20 வருடம் அவரது மூளையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த கிராம்சி - முதுகு கூன் வளைந்தவர். இந்நிலையில் இந்த தனிமைச் சிறையில் அதிகமான ஒளி பொருந்திய விளக்கு அவர் மீது அடிக்கப்படுமாம். அந்த விளக்கு ஒளியில் அவரது மூளை சூடேறி குழம்பி விடவேண்டும் என்பது பாசிஸ்ட்டுகளின் எண்ணம். பல நேரங்களில் அந்த சிறை கம்பிகளில் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் வடிவதுகூட உண்டாம். இத்தகைய வலிகளின் ஊடேதான்.
இத்தாலியிலும், உலகத்திலும் மார்க்சியத்தை மேன்மைப்படுத்துவ குறித்தும் - மார்க்சியத்தின் பிரயோகம் குறித்தும் தனது குறிப்புகளை எழுதி வைத்தார். கிட்டத்தட்ட 3000 பக்கங்களைக் கொண்டது. 29 நோட்டுப் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தார். இந்த குறிப்புகள் அவரது மைத்துனியால் எப்படியோ கடத்திக் கொண்டு வரப்பட்டது. இவைதான் "சிறை குறிப்புகள்" prison Notes என்ற பெயரில் பின்னாளில் புகழ் பெற்றது. தொழிலாளி வர்க்கம் புரட்சியை மேற்கொள்வதற்கு முன் முதலில் வெகுஜன மக்களின் உள்ளத்தை புரட்சிக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய மகத்தான வீரன் தன்னுடைய வாழ்நாளை அந்த கொடுமையான சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழித்ததால் நோய்வாய்ப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்து விட்டார்.

இது மட்டுமா சமீபத்தில் ஈராக்கில் கைது செய்யப்பட்ட வீரர்களை அபு கிரைப் சிறைகளில் நிர்வாணமாக ஆக்கி அவர்களை கொடுமைப்படுத்தியதையெல்லாம் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. உலக ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் மனித உரிமைகளின் சாட்சியமாக அபு கிரைப் சிறைகள் இன்றைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. அபு கிரைப் சித்திரவதை முகாம்கள் ஏகாதிபத்திய சிறைக் கொடுமைகளின் நிகழ்கால சாட்சியமாக விளங்குகிறது என்றால் 172 ஆண்டு கால சென்னை மத்திய சிறைச்சாலையின் அந்த இருட்டு சிறைகளில் எப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்திருக்குமோ? இது குறித்து பழைய கைதிகள் யாராவது உயிருடன் இருந்து வெளிப்படுத்தினால் ஒழிய... அந்த இருட்டிற்குள்ளேயே இருட்டாக மறைந்து போயிருக்கும்.
இறுதியாக இந்த இரண்டு நூற்றாண்டு வரலாற்றில் சென்னை மத்திய சிறையை வரலாற்று பக்கங்களில் இருந்து பிரிக்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து - கொடுமையான எமர்ஜென்சி முதல் தற்கால அரசியல் மற்றும் வெகுஜன போராட்டங்களில் களம் கண்டவர்களையும், இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட குற்றவாளிகளிகளின் மனப்பதிவுகளையும் எங்கே தேட முடியும்! அதற்கு சாட்சியமாய் விளங்கிய சென்னை மத்திய சிறைசாலையில் இன்னும் சில நாட்களில் இந்த வரலாற்று சுவட்டை எங்கே விட்டுச் செல்லப் போகிறது? ஆனால் இதற்கு பொறுப்பான காவல்துறையும் - தமிழக அரசும் இந்த வரலாற்று பதிவுகளை மக்கள் மத்தியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் மக்களுக்கு சிறையை திறந்து விட்ட காவல்துறை - அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அக்கறையற்று கிடப்பது காவல்துறை சிந்தனையில் மண்டியுள்ள அழுக்கைத்தான் வெளிப்படுத்துகிறது.

இறுதியாக குற்றவாளிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பது குறித்து வரலாறு என்னை விடுதலைச் செய்யும் நூலில் பிடல் காஸ்ட்டிரோ பாடிஸ்டா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட்ட போது எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் - சமூகத்தின் மூளை முடுக்குகளிலும் மோதிக் கொண்டுதான் இருக்கிறது. அவர் பேசும் போது, மதிப்புக்குரிய நீதிபதி அவர்களே, உங்கள் முன்னாள் நிறுத்தும் அனைவருக்கும் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கும் கடமையை மட்டுமே செய்து வருகிறீர்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் முன்னாள் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து நீ எத்தனை நாளாய் பட்டினியாய் கிடக்கிறாய், உனக்கு வீடு உண்டா, வேலை உண்டா, உன் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியது உண்டா என்று நீதிமன்றத்தையும், நீதியைப் பார்த்து கேட்ட கேள்விகள் மிகப் பொருத்தமானது. குற்றவாளிகளில் 90 சதவிதிகத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கை ஓட்டத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டவர்கள். ஒரு புத்தக சாலை திறக்கும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது தெருவுக்கு தெரு போட்டிப் போட்டுக் கொண்டு கோவில்களை உருவாக்கும் சமூகத்தைத்தான் நாம் பெரியாரிய வெளிச்சத்தில் கட்டியமைத்து உள்ளோம். அவர்களின் அறிவுத் தேடலுக்கான நூலகத்தை உருவாக்குவதற்கு நமக்கு நேரம் உண்டா? சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றால் சிந்தனைச் சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். நம்முடைய நிகழ்கால சமூகம் பிரசவித்துக் கொண்டிருப்பது கிராம்சிக்களையும், மண்டேலாக்களையும் அல்ல; அட்டாக் பாண்டியன்களையும், அஞ்சாநெஞ்சர்களையும் அல்லவா தற்போதைய திராவிட கலாச்சாரம் கட்டியெழுப்பி வருகிறது. எனவே மாற்றத்தை விரும்பும் ஜனநாயக - இடதுசாரி சக்திகள்தான் இதனை உருவாக்க முடியும்!...

2 comments:

Anonymous said...

எல்லாம் சரிதான்...

ஆனா, “அட்டாக் பாண்டியனும் - அஞ்சா நெஞ்சனும் - புரட்சித் தலைவி ஜெயா மாமியும், மத்திய சிறை அனுபவம்” என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.. சரியா தோழரே?

vimalavidya said...

Fantastic references>>quotaions>>The prison life is not a ordinary one as majority thinking..Many unknown persons lost their thinking power-many became mad-Many became unconscious-I had a bitter experience in prison>>When i was in prison for political causes that time there was a dirty conditions prevailed in jails.
I used to eat tiffin first and then i used to went for latrine on the same tiffein papers+banana leaf and bundled it to avoid the bad smell in the small room.unfortunately there is no public awareness and lack rights organizations involvement in the matters of prison reformations.
your articles really an excellent contribution to civil rights groups. congrates Sir---Selvapriyan