மார்ச் 4ம்தேதியிட்ட ஜூனியர் விகடனில் மேற்கு வங்காளத்தைப் பற்றி திரும்பவும் ஜென் ராம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முந்தைய கட்டுரையில் டாடா கார் தொழிற்சாலையின் பூமி பூஜை பற்றி சாமியாடியிருந்தார்.
இந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தில் மூலதனம் பெறுவது குறித்து ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சென்றவாரம் அவர் எழுதிய கட்டுரைக்கு நாம் ஒரு மறுப்பு எழுதியிருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஜென்ராமுக்கு. அவரைப் பற்றி ஏதோ தகாத முத்திரை குத்து வது போல் துடித்திருக்கிறார்.இந்த வாரமோ நாய் விற்ற காசு குரைக் காது என்ற நாகரீக உதாரணத்தோடு இந்தோ னேசியாவில் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்த சுகர்த்தோ என்பவருக்கு வேண்டிய சலீம் குழுமம் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய அனுமதி கொடுத்திருப்பது பற்றி எழுதியிருக்கிறார்.
தீ, கதிர்களை சாம்பலாக்கிவிடக்கூடாது என்று வார்த்தை ஜாலமும் காட்டியிருக்கிறார். இந்த தீக்கதிர் எதையும் சாம்பலாக்காது. மாறாக, இந்தக் கதிரின் வெப்பம், கதகதப்பு வேண்டியவற்றிற்கு கதகதப்பு தரும். பச்சை தானியங்களை இளம் சூடாக்கி மனிதர்களுக்கு சுவையான உணவாக மாற்றித்தரும். மனிதகுல எதிரிகளை சுடும். அதுதான் இதன் பாரம்பரியமே தவிர, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எப்போதும் தன்நிலையை மாற்றிக்கொள்ளாது.விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டுமாம். நமக்குச் சொல்லித் தருகிறார் ஜென்ராம். அவரால் தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் மேலே சொன்ன நாய், உதாரணத்தோடு கட்டுரையை நிரப்பியிருக்கிறார்.
பிற கட்சிகளோடு விமர்சன யுத்தம் நடத்து வது மட்டுமல்ல; சொந்தக் கட்சிகளுக்குள்ளேயே சுய விமர்சனம் - விமர்சனம் என்ற பதங்களை முன் வைத்து தங்களுடைய அனைத்து பணி களையும் அக்குவேறு ஆணி வேறாய் அலசிக் கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.உட்கட்சி ஜனநாயகத்தையும், விமர்சனத் தையும் மார்க்சிஸ்ட் கட்சி போல ஊக்கப்படுத்து கிற கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ஜென்ராம் போன்றவர்கள் பேனாவை எடுத்து பேப்பரை நிரப்புவதற்கு முன்னதாகவே மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தீர்மானங்கள், தலைவர்களின் பேட்டிகள் போன்றவற்றை படித்துக்கொண்டோ, கேட்டுக்கொண்டோ விமர்சனம் செய்ய முற்படுவது நல்லது.காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தையும், இந்திராகாந்தி உருவாக்கிய இருண்டகாலத் தையும் மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்து ஜென்ராம் எழுதியிருக்கிறார். இது - கருப்பாய் இருப்பதால் காகமும், குயிலும் ஒன்று; வெள்ளையாய் இருப்பதால் பாலும், சுண்ணாம்பும் ஒன்று என்பதைப்போல் உள்ளது.
காங்கிரஸ் என்பது ஒரு தனிமரம். ஒருநபர் படை. மார்க்சிஸ்ட் கட்சியோ பல மரங்கள் கொண்ட ஒரு தோப்பு. பல்லாயிரம் வீரர்கள் கொண்ட சைன்யம். எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அதாவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. மேற்குவங்கத்தில் தொழில்மயமாக்குதலின் முதல்கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டதற்கு குதியோ குதி என்று மம்தாவும், நக்சலைட்டுகளும் குதிக்கிறார்கள். இவர் களுக்கு எப்போதுமே சேணம் கட்டிய குதிரைப் பார்வைதான் போலும். வரலாற்றிற்கு பல பக்கங்கள் உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள்.
மேற்குவங்கத்தில் பி.சி.ராய் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் துர்க் காபூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலைக்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை. அன்றைக்கு எதிர்க் கட்சி தலைவராக இருந்த தோழர் ஜோதிபாசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஏனெனில், அன்று ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சித்தலைவர் ஜோதிபாசு. இன்றைய மம்தா வைப் போல எதிரிக்கட்சித் தலைவர் அல்ல; 1952 முதல் 1967 வரை விளைநிலங்கள் காங் கிரஸ் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறது. இதை அங்குள்ள ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் எதிர்த்ததே இல்லை. காரணம் வேளாண்மையும், தொழில் வளமும் மாநில முன்னேற்றத்திற்கான இரண்டு கண்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்.
ஏன்? தமிழகத்தில் கூட நெய்வேலி அனல் மின் நிலையம், பாரத் மிகு மின்நிலையம் போன்ற பெருந்தொழிற்சாலைகள் உருவாக தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய போதும், மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. 1967 முதல் 1994 வரை மேற்குவங்கம் தொழில் வளர்ச்சியில் மத்திய அரசால் புறக் கணிக்கப்பட்டே வந்தது. அன்று முதலமைச் சராக இருந்த தோழர் ஜோதிபாசு, பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள எதிர்க்கட்சிகள் அனைத் தையும் அழைத்தார். எந்தவொரு கட்சியும் ராஜீவ்காந்தியை சந்திக்க வரவில்லை. மாறாக தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடவே செய்தார்கள். இன்றைக்கும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதிலும் கூட இன்னும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உண்டு. அதுதான் பக்ரேஷ்வர் அனல்மின் நிலையத் திட்டம். மின் பற்றாக்குறை அதிகம் உள்ள மேற்குவங்கத்தில் மின் பற்றாக் குறையைப் போக்குவதற்குத்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. வழக்கம்போல் மத்திய அரசு இதற்கு உதவவில்லை. அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி வாளாயிருந்திடவில்லை. தன்னுடைய கட்சியின் லட்சோப லட்ச இளைஞர்களை ரத்த தானம் உள்பட செய்ய வைத்து நிதி திரட்டி அந்த திட்டத்தை நிறைவேற்றியது. மேற்குவங்கம் இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தை சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம். உணவு உற்பத்தியிலும், காய்கறி உற்பத்தி யிலும், இறைச்சி உற்பத்தியிலும் முதன்மையான மாநிலம். இதன் காரணமாக, மக்களிடம் வாங் கும் சக்தி கூடியிருக்கிறது. சிறுதொழில்கள் வளர வாய்ப்புகள் பெருகியிருக்கிறது. இதற்கு ஆதாரமான மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது.
விவசாயத்தில் பெற்ற வளர்ச்சியை, முன்னேற்றத்தை தக்க வைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழில் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிறது. அதைத் தான் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி அங்கு செய்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு நில விநியோகம் செய்கிற பொழுது எதிர்த்த நக்சல்பாரிகள், காங் கிரஸ்காரர்கள், பிஜேபியைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கு அந்த நிலங்களிலிருந்து தொழிற் சாலைகளை உருவாக்கும்போதும் எதிர்க்கிறார்கள்.
பசித்தவன் தின்னாததில்லை; பகைத்த வன் சொல்லாததில்லை என்பதற்கு நடமாடும் உதாரணமாக கொடி பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்.மேலும், மார்க்சிஸ்ட் கட்சியினுடைய அகில இந்திய தலைமை முதல் மேற்குவங்க கட்சி கிளைகள் உட்பட விவாதித்து ஏற்றுக்கொண் டதுதான் இந்த தொழில்மயமாக்கும் பிரச்சனை. இது புத்த தேவின் சொந்தப் பிரச்சனையல்ல. சென்ற வருடம் டெல்லியில் நடைபெற்ற 18வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் 2வது பிரிவில் தொழில்மய மாக்கல் பற்றி விரிவாகப் பேசித் தெளிவாக முடிவு செய்திருக்கிறோம். எனவே, மேற்குவங் கத்தை தொழில் மயமாக்குவதுதான் மார்க் சிஸ்ட் கட்சியின் முழு முதற்கடமை.மேற்குவங்கத்திற்கு முதலீடு செய்ய வரும் சலீம் குடும்பம் சுகர்த்தோவால் வளர்த்துவிடப் பட்டதாக ஜென்ராம் சொல்கிறார்.
ஆனால், அதை நாங்கள் பயன்படுத்துவது என்பது அந்த சுகர்த்தோ கும்பலுக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பத்தான். அவர் கள் விரலைக் கொண்டு அவர்கள் கண்ணையே குத்துகின்ற கலை எங் களுக்கும் தெரியாமலா இருக்கும்? சமீபத்தில் கூட வியட்நாம் நாட்டிற்கு அமெ ரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் சென்றது மட்டு மல்ல, அந்த நாட்டின் பாரம்பரிய உடையிலேயே போட்டோவிற்கு போஸ் கொடுத்தது நம்மூர் நாளிதழ்களிலும் வந்திருந்தது. 25 ஆண்டுகாலம் தங்கள் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து லட்சோபலட்சம் மக் களை கொன்றுக்குவித்த அமெரிக்க ஏகாதிபத் தியத்தை வியட்நாம் மக்களும் மறக்கவில்லை. ஜார்ஜ் புஷ்சும் மறக் கவில்லை.
நாங்களும் இதை ஆட்சேபிக்கவில்லை.ஒருகாலத்தில் சீனாவை ஐ.நா. சபைக்குள் நுழைய விடமாட்டேன் என்று கொக்கரித்த அமெரிக் காவின் தலைவர்கள், இன்று வாரம் ஒருமுறை பிக்னிக் போவது போல் சீனாவிற்கு போகவில்லையா? இந்த பயணங்கள் உணர்த்தும் உண்மை - எதையும் மறக்கும் சூழ்நிலையில் நாங்களும் இல்லை; மறைக்கும் சூழ்நிலையில் அவர்களும் இல்லை என்பதுதான்.
ஏனெனில், வளர்ந்த நாடுகளின் தொழில் நுட்பம் வளரும் நாடுகளான வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்கு தேவைப்படுகிறது. வளரும் நாடுகளின் பணம் வளர்ந்த நாடுகளுக்கு தேவைப்படுகிறது. இதுவொரு வகையான கொடுக்கல் வாங்கல்தான். ஜென்ராம் போன்றவர்கள் இதற்குப் பிறகா வது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றியும், மேற்கு வங்கத்தில் அதன் செயல்பாடுகள் பற்றியும் புரிந்து கொண்டால் நல்லது. இல்லையெனில், தவறாக சிந்திக்கப்படும் எதுவும் தவறாகவே வெளிப் படுத்தப்படும் என்பார்கள். இதை சரியாகவே செய்திருக்கிறார் ஜென்ராம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
Thanks: by Jyothiram