March 28, 2007

இழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை!

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்று பாடினார் ஒளவை பாட்டி. ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் சாதிக்கப் பிறந்தவர்கள்தான். ஆனால், வாழ்க்கைச் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவதுதான் இந்த முதலாளித்துவ சமூகத்தின் விதியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரத்தையும், நிதியையும் வழங்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், குக்கிராமத்தில் இருக்கும் - ஏழ்மையில் இருக்கும் சாதனை வீரர்களை பராமுகமாக இருப்பது அவர்களது வர்க்க குணாம்சம். ஆனால், ஆளும் ஆட்சியாளர்களும் இத்தகைய இளைஞர்களை அலட்சியப்படுத்துவதால், ஒரு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய ஒரு சாதனை - முன்னோக்கு இளைஞனை நம் தமிழ் சமூகம் இழந்து விட்டிருக்கிறது. இதற்காகத்தான் இளைஞர்களுக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினாலும், ஆட்சியாளர்கள் கேளா காதினராய் இருப்பதால், இன்னும் எத்தனைப் பேரை இழப்போமோ!
ஏழ்மையால் தனது படிப்பும், சாதனை முயற்சிகளும் தடைபட்டதால் மனம் உடைந்த கோவையைச் சேர்ந்த மாணவர் அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்வரன். தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட சதீஷ்வரன் புறங்கையால் தண்டால் எடுத்து சாதனை படைத்தவர். இதற்காக இவரது பெயர் லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
150 தண்டால்களை எடுத்து லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றார் சதீஷ்வரன். அடுத்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார் சதீஷ்வரன்.
ஆனால் அவரது சாதனை முயற்சிகளுக்கு பணம் பெரும் தடையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வாய்ப்புகளை இதனால் நிராகரிக்க வேண்டியதாயிற்று.
பலரிடம் பணம் கேட்டும் பணம் கிடைக்காததால், இந்த நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை சதீஷ்வரானால். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ஏழூர் என்ற கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற சதீஷ்வரன் அங்கு அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் சதீஷ்வரன். அதில், எனது பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை. படிக்காமல் எந்த சாதனையையும் செய்ய முடியாது, அதனால் பலன் இருக்காது என்று அவர்கள் கூறியதை நான் புறக்கணித்து விட்டேன்.
என்னால் பல சாதனைகளை செய்ய முடியும். ஆனால் எனது பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாது. என்னதான் எனக்காக அவர்கள் பல தியாகங்களைச் செய்தாலும், அவர்களுக்கு என்னால் எந்த நன்றிக் கடனையும் செலுத்த முடியாத நிலைதான் உள்ளது.
இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். அடுத்த பிறவியில் நான் சாதனை வீரனாக, விளையாட்டு வீரனாகத்தான் பிறப்பேன் என்று கூறியுள்ளார்.
Thanks : Thatstamil

No comments: