March 09, 2007

டாடா கார் தொழிற்சாலை????????????


மார்ச் 4ம்தேதியிட்ட ஜூனியர் விகடனில் மேற்கு வங்காளத்தைப் பற்றி திரும்பவும் ஜென் ராம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முந்தைய கட்டுரையில் டாடா கார் தொழிற்சாலையின் பூமி பூஜை பற்றி சாமியாடியிருந்தார்.

இந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தில் மூலதனம் பெறுவது குறித்து ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சென்றவாரம் அவர் எழுதிய கட்டுரைக்கு நாம் ஒரு மறுப்பு எழுதியிருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஜென்ராமுக்கு. அவரைப் பற்றி ஏதோ தகாத முத்திரை குத்து வது போல் துடித்திருக்கிறார்.இந்த வாரமோ நாய் விற்ற காசு குரைக் காது என்ற நாகரீக உதாரணத்தோடு இந்தோ னேசியாவில் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்த சுகர்த்தோ என்பவருக்கு வேண்டிய சலீம் குழுமம் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய அனுமதி கொடுத்திருப்பது பற்றி எழுதியிருக்கிறார்.

தீ, கதிர்களை சாம்பலாக்கிவிடக்கூடாது என்று வார்த்தை ஜாலமும் காட்டியிருக்கிறார். இந்த தீக்கதிர் எதையும் சாம்பலாக்காது. மாறாக, இந்தக் கதிரின் வெப்பம், கதகதப்பு வேண்டியவற்றிற்கு கதகதப்பு தரும். பச்சை தானியங்களை இளம் சூடாக்கி மனிதர்களுக்கு சுவையான உணவாக மாற்றித்தரும். மனிதகுல எதிரிகளை சுடும். அதுதான் இதன் பாரம்பரியமே தவிர, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எப்போதும் தன்நிலையை மாற்றிக்கொள்ளாது.விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டுமாம். நமக்குச் சொல்லித் தருகிறார் ஜென்ராம். அவரால் தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் மேலே சொன்ன நாய், உதாரணத்தோடு கட்டுரையை நிரப்பியிருக்கிறார்.

பிற கட்சிகளோடு விமர்சன யுத்தம் நடத்து வது மட்டுமல்ல; சொந்தக் கட்சிகளுக்குள்ளேயே சுய விமர்சனம் - விமர்சனம் என்ற பதங்களை முன் வைத்து தங்களுடைய அனைத்து பணி களையும் அக்குவேறு ஆணி வேறாய் அலசிக் கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.உட்கட்சி ஜனநாயகத்தையும், விமர்சனத் தையும் மார்க்சிஸ்ட் கட்சி போல ஊக்கப்படுத்து கிற கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ஜென்ராம் போன்றவர்கள் பேனாவை எடுத்து பேப்பரை நிரப்புவதற்கு முன்னதாகவே மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தீர்மானங்கள், தலைவர்களின் பேட்டிகள் போன்றவற்றை படித்துக்கொண்டோ, கேட்டுக்கொண்டோ விமர்சனம் செய்ய முற்படுவது நல்லது.காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தையும், இந்திராகாந்தி உருவாக்கிய இருண்டகாலத் தையும் மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்து ஜென்ராம் எழுதியிருக்கிறார். இது - கருப்பாய் இருப்பதால் காகமும், குயிலும் ஒன்று; வெள்ளையாய் இருப்பதால் பாலும், சுண்ணாம்பும் ஒன்று என்பதைப்போல் உள்ளது.

காங்கிரஸ் என்பது ஒரு தனிமரம். ஒருநபர் படை. மார்க்சிஸ்ட் கட்சியோ பல மரங்கள் கொண்ட ஒரு தோப்பு. பல்லாயிரம் வீரர்கள் கொண்ட சைன்யம். எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அதாவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. மேற்குவங்கத்தில் தொழில்மயமாக்குதலின் முதல்கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டதற்கு குதியோ குதி என்று மம்தாவும், நக்சலைட்டுகளும் குதிக்கிறார்கள். இவர் களுக்கு எப்போதுமே சேணம் கட்டிய குதிரைப் பார்வைதான் போலும். வரலாற்றிற்கு பல பக்கங்கள் உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மேற்குவங்கத்தில் பி.சி.ராய் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் துர்க் காபூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலைக்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை. அன்றைக்கு எதிர்க் கட்சி தலைவராக இருந்த தோழர் ஜோதிபாசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஏனெனில், அன்று ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சித்தலைவர் ஜோதிபாசு. இன்றைய மம்தா வைப் போல எதிரிக்கட்சித் தலைவர் அல்ல; 1952 முதல் 1967 வரை விளைநிலங்கள் காங் கிரஸ் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறது. இதை அங்குள்ள ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் எதிர்த்ததே இல்லை. காரணம் வேளாண்மையும், தொழில் வளமும் மாநில முன்னேற்றத்திற்கான இரண்டு கண்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்.

ஏன்? தமிழகத்தில் கூட நெய்வேலி அனல் மின் நிலையம், பாரத் மிகு மின்நிலையம் போன்ற பெருந்தொழிற்சாலைகள் உருவாக தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய போதும், மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. 1967 முதல் 1994 வரை மேற்குவங்கம் தொழில் வளர்ச்சியில் மத்திய அரசால் புறக் கணிக்கப்பட்டே வந்தது. அன்று முதலமைச் சராக இருந்த தோழர் ஜோதிபாசு, பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள எதிர்க்கட்சிகள் அனைத் தையும் அழைத்தார். எந்தவொரு கட்சியும் ராஜீவ்காந்தியை சந்திக்க வரவில்லை. மாறாக தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடவே செய்தார்கள். இன்றைக்கும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலும் கூட இன்னும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உண்டு. அதுதான் பக்ரேஷ்வர் அனல்மின் நிலையத் திட்டம். மின் பற்றாக்குறை அதிகம் உள்ள மேற்குவங்கத்தில் மின் பற்றாக் குறையைப் போக்குவதற்குத்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. வழக்கம்போல் மத்திய அரசு இதற்கு உதவவில்லை. அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி வாளாயிருந்திடவில்லை. தன்னுடைய கட்சியின் லட்சோப லட்ச இளைஞர்களை ரத்த தானம் உள்பட செய்ய வைத்து நிதி திரட்டி அந்த திட்டத்தை நிறைவேற்றியது. மேற்குவங்கம் இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தை சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம். உணவு உற்பத்தியிலும், காய்கறி உற்பத்தி யிலும், இறைச்சி உற்பத்தியிலும் முதன்மையான மாநிலம். இதன் காரணமாக, மக்களிடம் வாங் கும் சக்தி கூடியிருக்கிறது. சிறுதொழில்கள் வளர வாய்ப்புகள் பெருகியிருக்கிறது. இதற்கு ஆதாரமான மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது.

விவசாயத்தில் பெற்ற வளர்ச்சியை, முன்னேற்றத்தை தக்க வைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழில் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிறது. அதைத் தான் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி அங்கு செய்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு நில விநியோகம் செய்கிற பொழுது எதிர்த்த நக்சல்பாரிகள், காங் கிரஸ்காரர்கள், பிஜேபியைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கு அந்த நிலங்களிலிருந்து தொழிற் சாலைகளை உருவாக்கும்போதும் எதிர்க்கிறார்கள்.

பசித்தவன் தின்னாததில்லை; பகைத்த வன் சொல்லாததில்லை என்பதற்கு நடமாடும் உதாரணமாக கொடி பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்.மேலும், மார்க்சிஸ்ட் கட்சியினுடைய அகில இந்திய தலைமை முதல் மேற்குவங்க கட்சி கிளைகள் உட்பட விவாதித்து ஏற்றுக்கொண் டதுதான் இந்த தொழில்மயமாக்கும் பிரச்சனை. இது புத்த தேவின் சொந்தப் பிரச்சனையல்ல. சென்ற வருடம் டெல்லியில் நடைபெற்ற 18வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் 2வது பிரிவில் தொழில்மய மாக்கல் பற்றி விரிவாகப் பேசித் தெளிவாக முடிவு செய்திருக்கிறோம். எனவே, மேற்குவங் கத்தை தொழில் மயமாக்குவதுதான் மார்க் சிஸ்ட் கட்சியின் முழு முதற்கடமை.மேற்குவங்கத்திற்கு முதலீடு செய்ய வரும் சலீம் குடும்பம் சுகர்த்தோவால் வளர்த்துவிடப் பட்டதாக ஜென்ராம் சொல்கிறார்.

ஆனால், அதை நாங்கள் பயன்படுத்துவது என்பது அந்த சுகர்த்தோ கும்பலுக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பத்தான். அவர் கள் விரலைக் கொண்டு அவர்கள் கண்ணையே குத்துகின்ற கலை எங் களுக்கும் தெரியாமலா இருக்கும்? சமீபத்தில் கூட வியட்நாம் நாட்டிற்கு அமெ ரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் சென்றது மட்டு மல்ல, அந்த நாட்டின் பாரம்பரிய உடையிலேயே போட்டோவிற்கு போஸ் கொடுத்தது நம்மூர் நாளிதழ்களிலும் வந்திருந்தது. 25 ஆண்டுகாலம் தங்கள் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து லட்சோபலட்சம் மக் களை கொன்றுக்குவித்த அமெரிக்க ஏகாதிபத் தியத்தை வியட்நாம் மக்களும் மறக்கவில்லை. ஜார்ஜ் புஷ்சும் மறக் கவில்லை.

நாங்களும் இதை ஆட்சேபிக்கவில்லை.ஒருகாலத்தில் சீனாவை ஐ.நா. சபைக்குள் நுழைய விடமாட்டேன் என்று கொக்கரித்த அமெரிக் காவின் தலைவர்கள், இன்று வாரம் ஒருமுறை பிக்னிக் போவது போல் சீனாவிற்கு போகவில்லையா? இந்த பயணங்கள் உணர்த்தும் உண்மை - எதையும் மறக்கும் சூழ்நிலையில் நாங்களும் இல்லை; மறைக்கும் சூழ்நிலையில் அவர்களும் இல்லை என்பதுதான்.

ஏனெனில், வளர்ந்த நாடுகளின் தொழில் நுட்பம் வளரும் நாடுகளான வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்கு தேவைப்படுகிறது. வளரும் நாடுகளின் பணம் வளர்ந்த நாடுகளுக்கு தேவைப்படுகிறது. இதுவொரு வகையான கொடுக்கல் வாங்கல்தான். ஜென்ராம் போன்றவர்கள் இதற்குப் பிறகா வது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றியும், மேற்கு வங்கத்தில் அதன் செயல்பாடுகள் பற்றியும் புரிந்து கொண்டால் நல்லது. இல்லையெனில், தவறாக சிந்திக்கப்படும் எதுவும் தவறாகவே வெளிப் படுத்தப்படும் என்பார்கள். இதை சரியாகவே செய்திருக்கிறார் ஜென்ராம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

Thanks: by Jyothiram

15 comments:

அசுரன் said...

//ஏனெனில், வளர்ந்த நாடுகளின் தொழில் நுட்பம் வளரும் நாடுகளான வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்கு தேவைப்படுகிறது. வளரும் நாடுகளின் பணம் வளர்ந்த நாடுகளுக்கு தேவைப்படுகிறது. இதுவொரு வகையான கொடுக்கல் வாங்கல்தான். ஜென்ராம் போன்றவர்கள் இதற்குப் பிறகா வது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றியும், மேற்கு வங்கத்தில் அதன் செயல்பாடுகள் பற்றியும் புரிந்து கொண்டால் நல்லது. இல்லையெனில், தவறாக சிந்திக்கப்படும் எதுவும் தவறாகவே வெளிப் படுத்தப்படும் என்பார்கள். இதை சரியாகவே செய்திருக்கிறார் ஜென்ராம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்//

ஆமாம் நீங்கள் உலகமயத்தின் பிரதிநிதியா? கம்யுனிஸ்டா?

வாய்ப்பில்லாத காரணத்தினால் விரிவான விமர்சனங்களை முன் வைக்க இயலவில்லை. ஆயினும் இது குறித்து விரிவான பார்வையுடன் கட்டுரை எழுதும் எண்ணமுள்ளது. அப்பொழுது CPM-ன் சித்தாந்த திரிபு வாதஙக்ளும், சந்தர்ப்பவாதஙக்ளும் விமரிசையாக பேசப்படும்.

அசுரன்

Unknown said...

நல்ல பதிவு சந்திப்பு.

மாநிலத்தில் தொழில்மயமாக்கலை விரிவுபடுத்தினால் தான் வேலை வாய்ப்புக்கள் பெருகும். இதை எதிர்த்து அரசியல் நடத்துவது சீரழிவு அரசியலையே காட்டுகிறது. டாட்டா நாளை வேறு மாநிலத்துக்கு போனால் நஷ்டம் மேற்குவங்க மக்களுக்குத்தான். ஜெயலலிதா பாணி சீரழிவு அரசியலை மேற்குவங்கத்தில் மமதா கடைபிடிப்பதாகவே தெரிகிறது. தான் எந்த ஜென்மத்திலும் அங்கே ஆட்சிக்கு வரமுடியாது எனும் விரக்தி நிலையே இதற்கு காரணம் என நினைக்கிரேன்

தற்போது எழுப்பப்படும் பிரச்சனை லொகேஷன் பற்றிய ஒன்றுதான். இதற்கு மாற்றிடத்தை மேற்குவங்கத்திலேயே கண்டுபிடிப்பது அல்லது விவசாயிகளுக்கு மேலும் அதிக இழப்பீட்டுத்தொகை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதிலும் தவறில்லை.

சந்திப்பு said...

நன்றி அசுரன். தங்களது விரிவான விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன். இருப்பினும் ஒரு சில விஷயங்களை இங்கே பரிமாறுவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.

வர்த்தகம் என்பது இருவழி பாதை. ஒரு வழிபாதையாக இருக்க முடியாது. ஆனால், இத்தகைய வர்த்தகம் இரண்டு தரப்புக்கும் இலாபமுடையதாகவும், பயனுள்ளதாக இருக்க வேண்டும். இது எந்த நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பொருந்தும். அந்த அடிப்படையில்தான் உலகமயத்தின் சாதக, பாதக அம்சங்களை நாம் பரிசீலித்திட வேண்டும். உலகமயக் கொள்கைகள் ஏகாதிபத்திய - பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமேயில்லை. இருப்பினும், சீனா இன்றைக்கு அத்தகைய பெரும் நிறுவனங்களோடு போட்டியிடத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே சீன அரசு உலகமயக் கொள்கையை பயன்படுத்துகிறது.

அதேபோல்தான், மேற்குவங்கத்திலும் சி.பி.ஐ.(எம்) மற்றும் இடது முன்னணி அரசு கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மாநிலத்தில், நிலச்சீர்திருத்தத்தின் மூலம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இன்றைக்கு புதிதாக உருவாகியிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உட்பட புதிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டிய கடமை இடது முன்னணி அரசுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே டாடா கார் நிறுவனமாக இருந்தாலும் சரி, சலீம் குழுமமாக இருந்தாலும் சரி அவற்றை பயன்படுத்திட மேற்குவங்கம் விரும்புகிறது. மேற்குவங்கத்தில் இருக்கும் படித்த நவீன இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகவோ அல்லது உயர் கல்விக்காகவோ வேறு மாநிலங்களை நோக்கி ஓடக்கூடிய நிர்ப்பந்தத்தை மேற்குவங்க அரசு உருவாக்காது. தவிர, இன்றைக்கு முதலாளித்துவ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் அரசுதான் மேற்குவங்க அரசு என்பதை அதிதீவிர இடதுசாரிகள் உணர மறுக்கிறார்கள். அவர்களது பார்வை இன்னும் விரிய வேண்டியுள்ளது. தவிர, தத்துவார்த்த ரீதியாக பார்த்தால்கூட இந்தியா ஒரு அரை நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ நாடு என்பதை நாம் மறக்கக்கூடாது. நிலப்பிரபுத்துவ, ஜாதிய கட்டமைப்புகளை உடைப்பதற்கும், நவீன பாட்டாளிகளை உருவாக்குவதற்கும் முதலாளித்துவ தொழில் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அது போகிற போக்கில் விட வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல சி.பி.ஐ.(எம்) கட்சியினர். மக்களை அரசியல்பாணிகளாக்குவதும், இடதுசாரி அரசியல் தத்துவத்தின் கீழ் அவர்களை அணிதிரட்டி முறிப்பை ஏற்படுத்தும் கடமையைச் செய்துக் கொண்டே இத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. நாம் புரட்சிக்காரர்கள் என்று கூறிக் கொண்டு, சமகால சமூகத்தில் அவர்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தத்துவதம் பேசுவதால் காட்டிற்குள் அடைந்துக் கொண்டு புரட்சியை பற்றிய கனவுகளை மட்டுமே கான முடியும். இந்த விவகாரத்தில், விவசாயிகளை அழித்து விட்டு தொழில் வளர்ச்சி என்பதல்ல மேற்குவங்க அரசின் கொள்கை. மாறாக, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதமும் அளிப்பதோடு, அவர்களின் புதிய சந்ததியினருக்கு வேலைவாய்ப்பும், அதனைச் சார்ந்த உதிரி தொழில்களும் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதே இடது முன்னணி அரசின் கொள்கை. ஆனால், புரட்சி பேசும் நக்சல் அமைப்பினர், மக்களிடம் இருந்து தனிமைப்பட்ட தீவிர புரட்சிவாதிகள் மம்தாவின் பின்னாள் ஒளிந்துக் கொண்டு சீரழிவுகளை ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் இந்த விஷயத்தில் அவர்கள் சாதிக்கவில்லை.

சந்திப்பு said...

செல்வன் தங்களது கருத்து மிகச் சரியானது. நன்றிகள்... தொழில் வளர்ச்சி ஒரு நாட்டின் ஆதாரமானது என்பதை இந்த அடாவடி அரசியல் வியாதிகள் எப்போது உணர்வார்களோ?

Voice on Wings said...

ஒரு புறம் தொழிலாளர் நலம், மறுபுறம் நிலமற்ற கூலி விவசாயிகளின் நலம். இவையிரண்டும் முரண்படும்போது, தங்கள் ஆதரவு யார் பக்கம் என்பதில் இடது சாரிகள் தெளிவாகவே உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இப்பதிவு.

Anonymous said...

This article has been reproduced from Theekathir.I dont know why the source has not been cited.
http://theekathir.in

மேற்குவங்கத்திற்கு முதலீடு செய்ய வரும் சலீம் குடும்பம் சுகர்த்தோவால் வளர்த்துவிடப் பட்டதாக ஜென்ராம் சொல்கிறார்.

ஆனால், அதை நாங்கள் பயன்படுத்துவது என்பது அந்த சுகர்த்தோ கும்பலுக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பத்தான். அவர் கள் விரலைக் கொண்டு அவர்கள் கண்ணையே குத்துகின்ற கலை எங் களுக்கும் தெரியாமலா இருக்கும்?

Whom are they trying to fool.
Cant they find better excuses to
justify whatever they do.
Perhaps soon they will say that they are working with Tatas to eradicate capitalism and to bring in revolution.Santhippu will faithfully reproduce that also.

Of course the intellectual level of discourse in Theekathir is so
horrible that only fools or persons who have mortgaged their brains to CPI(M) would buy these arguments.
ravi srinivas

அசுரன் said...

உங்களுக்கு மன்மோகன் சிங்குக்கும் என்ன வித்தியாசம்?

சீனாவும் மே.வாவும் ஒன்னா?

சீனா சோசலிசத்தை மாவோ காலகட்டத்தில் அடைந்தது, மே.வா முதலாளித்துவத்தையே அடையவில்லையே.

இன்னும் சொன்னால் இந்தியாவின் மற்றைய சில மாநிலங்களைவிட அது பின் தங்கித்தான் உள்ளது. எந்த வகையிலும் இந்தியாவிலேயே இருக்கும் ஒரு முன்னேறிய மாநிலம் என்று மே.வாவையும், கேரளாவையும் சொல்லிவிட முடியாது. பிறகு எப்படி சீனாவையும், மே.வாவையும் ஒப்பிட்டு உலகமயத்திற்க்கு இப்படி ஒரு வக்கிரமான காவடி?

தோழர் உங்களை தனிப்பட்ட ஒரு தோழராக கருதித்தான் போலி கம்யுனிஸ்டு என்ற அடிப்படையில் விமர்சனம் செய்யாமல் இருந்தேன். நீங்களோ அது குறித்த விவாதத்திற்க்கும் வரத் தாயாரில்லை(முந்தைய பதிவுகளில் எனது பின்னூட்டங்கள்) மாறாக போலி கம்யுனிஸ்டுகளின் அப்பட்டமான திரிபுவாத கருத்துக்களை கடை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் இந்த கட்டுரை தங்களை தனிப்பட்ட அளவில் ஒரு கம்யுனிஸ்டாக கருத இருந்த கொஞ்சம் இடத்தையும் உடைத்துவிட்டது.

ஏன் இன்னும் கம்யுனிஸ்டு என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

தோழர் வாய்ஸ் ஆப் விங்க்ஸ், தயவு செய்து அவர்களை இடது சாரிகள் என்றூ கூறி எம்மை அவமானப்படுத்த வேண்டாம். எந்த வகையில் சிங்கூர் விசயத்தில் தொழிலாளர் நலம் பேணப்பட்டுள்ளது என்று கூறவும். ஒரு வேளை சலீம், டாடா தரகு முதலாளிகளைத்தான் தொழிலாளர் என்று நினைத்து பேசுகிறீர்களா என்று தெரியவில்லை.

அசுரன்.

அசுரன் said...

இங்கு சந்திப்பு கஸ்டப்பட்டு ஒப்பிடும் இந்திய தொழில் வளர்ச்சி நடவடிக்கைகள் யாவும் பொது துறை நிறுவனங்களுக்கான நடவடிக்கைகளே.
அவற்றை நாம் ஆதரிக்கிறோம். மே.வாவுக்கு அப்படியென்ன தொழில் நுட்ப பஞ்சம் வந்து ஆடுகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் காலம் முன்புதான் அங்கு பட்டினியில் கிடப்பவர்கள் குறித்து எழுதி அது தமிழ்மணத்தில் வெகு விமரிசையாக இடது சாரிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்டது. அந்த பிரச்சாரத்தின் போலித்தனம் முறியடிக்கப்பட்டது என்பதிருக்க. இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் மே.வாதான் தொழில் நுட்பம் மூலதனம் என்று வேசம் போடுகிறது.

இதைத்தான் நாமும் சொன்னோம். இந்த சட்டமன்ற நாடாளுமன்ற வடிவத்துக்குள் இருந்து கொண்டு எவ்வள்வு உயர்சாதி குதிரையை ஓட்டினாலும் குண்டு சட்டியின் விளிமபை கடந்து எங்கு சென்று விடமுடியாது.

இதோ மார்க்ஸிஸ்டுகள் என்ற போலி கம்யுனிஸ்டுகள் தமது ஒவ்வொரு நடவடிக்கையில் தாம் குண்டு சட்டியின் விளிம்பில் அல்ல மாறாக மையத்திலேயே குதிரை ஓட்டி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாய நிற்கிறோம் என்கிறார்கள்.

சங்க்ராச்சாரிக்கு காவடி தூக்கிய கேரள போலிகள், உட்கட்சி பூசலை யாகம் வளர்த்து தீர்க்க முயன்ற கேரள போலிகள், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இன்று வரை ஆட்டம் போடும் கேரள போலிகள், சிகப்பு விளக்கு கோஸ்டிகளுடன் கைதான கேரள் போலிகள்,

ஸ்டிரைக் நடத்த தடை விதித்த மே.வங்க போலிகள், பார்ப்ன்ன் என்று வெளிப்படையாக அறிவித்த மே.வா போலிகள், அப்பட்டமாக ஏகாதிபத்தியத்தின் அடிவருடிய மே.வா போலிகள். இப்படி இவர்களின் இன்றைய நடவடிக்கையானாலும் சரி, இவர்களின் முதல் நடவடிக்கையான நக்சல்பாரி எழுச்சி துரோகமானாலும் சரி, இந்திய சட்டமன்ற குண்டு சட்டிக்கு பொருத்தமான குதிரை என்ப்தை நிரூபித்தே வருகீறார்கள்.

நமது ஆட்சேபனையெல்லாம் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

மார்க்ஸியத்தை எந்த இடத்திலும் இவர்கள் ந்டைமுறைப்படுத்துவதில்லை பிறகு ஏன் மார்க்ஸிஸ்டு என்கிறார்கள்.

சந்திப்பு சிங்கூர் விசயத்தை பொறுத்த்வரையான போலி கம்யுனிஸ்டுகளின் மார்க்ஸிய அடிபப்டை என்னவென்று இங்கு முன் வைக்கட்டும் அதிலுள்ள ஓட்டைகள் நான் முன் வைத்த் இவர்கள் போலிகள் என்பதை தத்துவ ரீதியாகவும் நிரூபிக்கிறேன். செய்வாரா?

அசுரன்

Voice on Wings said...

அசுரன், என்னை 'தோழர்' என்றெல்லாம் அழைக்க வேண்டாம், 'தோழன்' போதும் :) எனக்கு இடது சாரிகள், அவர்களிடையே உள்ள பிரிவுகள் பற்றியெல்லாம் அதிக அறிமுகம் கிடையாது. கடைநிலை மக்களின் நலனை முந்நிறுத்துபவர்கள் என்ற பரந்த புரிதல் மட்டுமே உண்டு.

மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரை, ஒரு காலத்தில் தொழில்மயமாக்கத்தின் உச்சாணியிலிருந்த மாநிலம் அது. தற்போது அங்கு தொழில்துறை என்று சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை (தொழிற்சங்க activism இதற்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது, அதில் உண்மையிருக்க வாய்ப்பிருக்கிறது). ஆகவே, தொழிலாளர் வர்க்கம் வேலையில்லாமல் திண்டாடுகிறது. இந்நிலையைப் போக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து தொழிற்சாலைகள் மீண்டும் அதிக அளவில் இயங்கும் நிலையை அடைய வேண்டும். அதைத்தான் குறிப்பிட்டேன், தொழிற்சாலைகள் வருவதால் ஏற்படும் தொழிலாளர் நலன் என்று. சீனா உலக முதலாளிகளுடன் கொஞ்சிக் குலாவுவதற்கும் அதுவே காரணமாயிருக்க முடியும்.

இந்தப் போக்கால் பாதிப்படைவது தொழில்சாராத வாழ்வாதாரங்களைக் கொண்ட மிகக் கடைசி நிலையிலிருப்பவர்கள் - தினக்கூலி விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர் etc. நில உரிமையாளர்களாவது இழப்பீடு பெற்றுக் கொண்டு எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள். அப்படியான எந்தவொரு உடைமைகளையும் கொண்டிராத நிலமற்ற கூலிகளோ், ஒரு இழப்பீடும் இல்லாது நடையைக் கட்ட வேண்டியதுதான், காலகாலமாகப் பார்த்து வந்த வேலையையும், வாழ்ந்த வாழ்கையையும், இருந்த சூழலையும் இழந்த நிலையில்.

இவர்களைப் பற்றிக் கவலைப்பட கம்யூனிஸ்டுகளுக்கு நேரமில்லை என்பதே எனது கணிப்பு. அவர்களுக்குத் தேவை, அவர்களை ஆதரிக்கும், மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்கள் நலன், அதனை அடைய உதவக்கூடிய தொழில்மயமாக்கம் , உலகமயமாக்கம் etc. நான் கூறுவது போல், இது எனது கணிப்பு மட்டுமே.

அசுரன் said...

தோழா வாய்ஸ் ஆப் விங்க்ஸ்(இது நல்லாருக்கா?),

தொழில் வளம், வேலைவாய்ப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் அதில் உலகமய திட்டங்களுக்கு ஆதரவாக இது போல வைக்கப்படும் சப்பைக் கட்டுகளின் அடிபப்டையை கேள்வி எழுப்பியுள்ளேன்.

அந்நிய மூலதன்ம் என்பது எந்த வகையிலும் வளர்ச்சிக்கானது அல்ல. ஜனநாயகமில்லா இந்தியாவின் போலி பாரளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டால் இப்படி சீர்திருத்தவாத்ம்தான் பேச வேண்டும். அது போல பேசுவத்ற்க்கு மார்க்ஸியம் தேவையில்லை. காங்கிரஸும், BJPயும் இதையேதான் பேசுகீறார்கள். நான் குறிப்பிட்டதெல்லாம் கம்யுனீஸ்டு என்று கூறிக் கொள்வதற்க்கு அவர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது பெயர் பலகை மட்டும்தான்.

இதோ இன்று 11 பேர் CPMஆல் கொல்லப்பட்டனர். கம்யுனிஸ்டு கட்சி யாரை கொல்ல வேண்டும்? நிலபிரபுக்களை, பன்னாட்டு பன்றிகளை, தரகு முதலாளிகளை. மாறாக CPM ஆட்சிக்கு வந்த காலம் முதல் மே.வாவில் கொல்லப்படுவது விவசாயிகளும், தொழிலாளர்களும்தான்.

அசுரன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

நமது ஆட்சேபனையெல்லாம் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
Thankfully there is no copyright over that name , nor is there a Church of Marx to object to this.
If ML groups can use names like
TNOC,SRC,Red Flag,Maoist , ML etc
let CPI(M) also have the right to use Marxist in their name.Of course now CPI(M) means Mandal/Muslim given the positions taken by the CPI(M) in some issues.

அசுரன் said...

சந்திப்பு,

நான் எனது கேள்வியை மிகத் தெளிவாகவே வைத்திருந்தும் நீங்கள் கவனியாமல் பத்ரி தளத்தில் பின்னூட்டமிட்டிருந்தீர்கள். இதோ கீழே நான் இந்த பதிவின் பின்னூட்டம் ஒன்றீல் கேட்டிருந்த கேள்வி.

///சந்திப்பு சிங்கூர் விசயத்தை பொறுத்த்வரையான போலி கம்யுனிஸ்டுகளின் மார்க்ஸிய அடிபப்டை என்னவென்று இங்கு முன் வைக்கட்டும் அதிலுள்ள ஓட்டைகள் நான் முன் வைத்த் இவர்கள் போலிகள் என்பதை தத்துவ ரீதியாகவும் நிரூபிக்கிறேன். செய்வாரா?///

அசுரன் said...

In another interesting example, the CPM government in West Bengal has acquired some 400 hectares of fertile land for the Tatas to set up an automobile factory at Singur, near Kolkata. Technically speaking Singur is not an SEZ, but what makes the deal politically significant is that the State government has actually acquired the land at cost of Rs.140 crores. It has then been made available to the Tatas for a mere Rs.20 crores, one-seventh of the cost price. Even that can be treated as a loan for 5 years. Ironically, while the poor rural women in self-help groups (SHGs) in West Bengal pay a minimum annual interest rate of 24 per cent for micro-credit, the Tatas will be charged a nominal rate of 0.1 percent for macro-credit. In Kerala too, the communist government is gung-ho over the promise of SEZs.


Asuran

thiagu1973 said...

//சமகால சமூகத்தில் அவர்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தத்துவதம் பேசுவதால் காட்டிற்குள் அடைந்துக் கொண்டு புரட்சியை பற்றிய கனவுகளை மட்டுமே கான முடியும்//

thiagu1973 said...

சமகால சமூகத்தில் அவர்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தத்துவதம் பேசுவதால் காட்டிற்குள் அடைந்துக் கொண்டு புரட்சியை பற்றிய கனவுகளை மட்டுமே கான முடியும்//
இந்த கருத்தின் மூலம் சிபிம்மற்ற அனைவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள் என சொல்லவர்றீங்களா
சந்திப்பு