May 31, 2006

கலைஞரின் மிக நல்ல முடிவு

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள், தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வாக்குறுதிகள் அனைத்துமே தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமிருக்காது.

அந்த வகையில், இன்று சட்டமன்றத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்திருக்கிறார்.

1. அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீதம் இடஒதுக்கீடு.

2. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடாமாக இந்த கல்வியாண்டு முதலே அமலாக்கியுள்ளார்.

இந்த இரண்டு முடிவுகளும் தமிழகத்தில் கல்வியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திடும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

இடஒதுக்கீடு என்பது தற்போது அரசு கல்லூரிகளில் மட்டுமே அமலாகி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் அரசு கல்லூரிகளைத் தவிர்த்துப் பார்த்தால் அதிக எண்ணிக்கையில் தனியார் கல்லூரிகள்தான் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய கல்லூரிகளில் பணம் உள்ளவர்களுக்கே முதலிடம் என்பது தாரக மந்திரமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 69 சதவீத இடஒதுக்கீடு இத்தயை கல்லூரிகளில் அமலாக்கியுள்ளதன் மூலம் பெரும் மாற்றங்கள் ஏற்படும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது.

அதே போல் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் மிக நீண்ட நெடுங்காலத்து கோரிக்கையான தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேறியுள்ளது மிக சிறப்பான முடிவு. தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நல்லாதரவு நடவடிக்கைகள் தொடர்ந்து வாழ்த்துகிறன்.

முந்தைய அரசின் அடாவடித்தனங்களோ, ஆடம்பரமோ இல்லாமல், மக்களை வஞ்சிக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை அமலாக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஐந்தாண்டுகாலம் தொடர்ந்திட வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

May 30, 2006

அமெரிக்காவிலும் இடஒதுக்கீடு

மண்டல் 2-வை எதிர்த்து ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் - இயக்கங்கள் நடத்தி வருகின்றனர். திறமைக்கு மதிப்பு இருக்காது என்றும், தரம் போய் விடும் என்றும் அலறி வருகின்றனர். தங்களுக்கு ஜாதி தேவையில்லை என்று பேசி வருகின்றனர். சமத்துவத்தை இந்த அரசு சாகடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு இன்போசிசு நாராயணமூர்த்தி உட்பட பல்வேறு பெரும் வர்த்தக நிறுவனங்களும், மீடியாக்களும் ஒத்தூதி வருகின்றது. நமது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இத்தகைய உயர்ஜாதி மாணவர்கள் பெரும் பகுதியினர், தங்களது படிப்பை முடிப்பதற்கு முன்பே அமெரிக்க மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதற்கு தயாராகி விடுகின்றனர்.

இன்றைக்கும் நமது மக்களின் வரிப்பணத்தில் பயின்றி நூற்றுக்கணக்கான உயர் கல்வி மாணவர்கள் அமெரிக்காவில்தான் தங்களது பிழைப்பை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஏன் பலரும் அமெரிக்க பிரஜையாகவே மாறிவிட்டனர். கிரீன் கார்ட் சிட்டிசனாகி விட்டனர்.

எனவே, இத்தகைய அறிவாளிகளுக்கு அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவர்களுக்கு இப்போது இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாது? உலகமயமாக்கல், ஓருலகதத்துவம் என எக்கச்சக்கத்திற்கு பேசித் தெரியும் அமெரிக்கா உலக சாம்ராஜ்ஜியத்தின் மூடி சூடா மன்னாக திகழ்கிறது. இத்தகைய அமெரிக்காவிலே கூட இன்றைக்கும் அங்கிருக்கும் கருப்பின மக்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு கிட்டத் தட்ட 40 வருடங்களாக அமலாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து விதத்திலும் முன்னேறிய ஒரு நாட்டில், உலக பொருளாதாரத்தையே தன்னுள் வைத்துக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்து வரும் அமெரிக்காவில் கூட கறுப்பின மக்களுக்கும், செவ்விந்திய மக்களுக்கும் முழுமையான விடுதலை (வெள்ளையர்களுக்கு நிகராக) கிடைக்கவில்லை. இதற்காகத்தான் இந்த மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என பல துறைகளிலும் அபர்மேட்டிவ் ஆக்ஷன் (Affirmative Action) என்ற பெயரில் அங்கே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களாக இருக்கும் மிக்சிகன் பல்கலைக் கழகம், மாசாசூட்சு பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு மருத்துவ பல்கலைக் கழகங்களில் 16 சதவீதம் இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல; ஆப்பிரிக்காவிலும் இதுபோன்ற திட்டம் செயல்படுகிறது.

இங்கே போராடும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் ஏதோ இந்தியாவில் மட்டும் திட்டமிட்டு இவ்வாறு புகுத்தப்படுவதாகவும், திறமைக்கு வேட்டு வைப்பதாகவும், திறமை கொலை செய்யப்படுவதாகவும் கூக்குரலிடுவது வேடிக்கையானது. தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்குத்தான் இது பயன்படுமே தவிர நமது நாட்டில் சமூக நீதி தழைத்திட, கிட்டத்தட்ட 3000 வருடங்களாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்விழந்து இருக்கும் மக்கள் சமூகத்தில் கல்வியிலும், வேலைவாய்பிலும், அதிகாரத்திலும் ஒரு சமத்தன்மையை எட்டிட இத்தகைய இடஒதுக்கீடு அவசியமானது. எனவே இதனை குருட்டுத்தனமாக எதிர்க்கும் மனோபாவத்தை விட்டு, இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தின் பக்கம் இருப்பதே ஈக்குவாலிட்டி என்று அவர்கள் முழங்குவதற்கு உண்மையான அர்த்தமாக அமையும்.

தங்களை அறிவாளிகாளக, திறமை சாலிகளாக பறைசாற்றிக் கொள்ளும் உயர்ஜாதி மாணவர்கள், மருத்துவர்கள் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நடைமுறைகளையும், நம்முடைய நாட்டில் நிலவும் தீண்டாமை போன்ற ஜாதிய ஏற்றத் தாழ்வுகளையும், சமூக - பொருளாதார - கல்வி ரீதியான ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் போராடுவதைப் பார்க்கும் போது, அவர்களது திறமை மிக குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறதோ என்ற சந்தேசத்தை தோற்றுவிக்கிறது.

May 29, 2006

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யோகா? வாழ்விக்கும் கலையா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யோகா கலையில் வல்லுனர், இவரது யோகாவுக்கு வாழும் கலை என மிக அழகாக பெயர் சூட்டியுள்ளார். ஆனால் இவரது சிந்தனை மக்களை வாழ்விக்கும் கலையாக இல்லாமல் வீழ்த்தும் கலையாக இருப்பதுதான் வேடிக்கை.

பலருக்கு மூக்கு மேல் வியர்க்கலாம். ச்சீ. ச்சீ என்ன இது... நம்ம ரவிசங்கர் ஜியைப் பற்றி இப்படி யெல்லாம் எழுதுறாங்களேன்னு வருத்தம்கூட இருக்கலாம்.

கீழே படியுங்கள்! நீங்களே முடிவுக்கு வாருங்கள்...

வாழும் கலை அமைப்பின் நிர்வாகி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இருந்து மே 25 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்:
என்ன தெரியுமா?

"உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீடு சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது.குறிப்பிட்ட ஒரு ஜாதியில் பிறந்ததே ஒருவருக்கு சாபமாக அமைந்து விடக்கூடாது. அனைத்து

சமுதாயங்களிலும், எல்லா ஜாதி மற்றும் பிரிவிலும் ஏழைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உரிய அதிகாரமும், உறுதியான பொருளாதார ஆதரவும் வழங்கப்பட வேண்டியது அவசியம். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை களைந்து ஒற்றுமையை உருவாக்கும் நடவடிக்கைகளே இந்தியாவுக்கு இப்போதைய தேவை.
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேற்றுமைகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் சுயகவுரவத்தையும் பாதிக்கும். ஜாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை அரசியல்வாதிகள் பிரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் - மே 26, 2006, சென்னை பதிப்பு.
உலகமயமாக்கல் சமூகத்தில், வேக வேகமாக மாறிவரும் நவீன உலகில் நம் மக்கள் அமைதியிழந்து வருவதோடு, பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இதையே மூலதனமாகக் கொண்டு, அம்மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதாக கூறிக் கொண்டு ஆண்டுக்கு பல நூறு கோடிகளை சம்பாதித்துக் கொண்டு, உலகம் முழுவதும் இதற்காக பல்வேறு ஏஜண்டு களையும், கிளைகளையும் நிறுவிக் கொண்டு செயல்படுவர் அவரது தொழிலை மட்டும் நடத்திக் கொண்டிருந்தால் யாரும் எதுவும் கூறுப் போவதில்லை. இங்கே இடஒதுக்கீடு குறித்து அவரது கூற்று தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டு, உயர்ஜாதியினருக்கு (இவர்கள்தான் இவரது பக்தர்கள்) வக்காலத்து வாங்குவதுதால் நாம் இவருக்கு பதில் கொடுக்கவேண்டிய சூழலில் உள்ளோம்.

"குறிப்பிட்ட ஒரு ஜாதியில் பிறந்ததே ஒருவருக்கு சாபமாக
அமைந்து விடக்கூடாது."

இவ்வாறு கூறியிருப்பது ஏதோ தீர்க்க தரிசனம் என்றெல்லாம் புலங்காங்கிதம் அடைந்து விட வேண்டாம். இதைத்தான் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்து விட்டதாலேயே அவர்கள் பார்க்கக்கூடாதவர்களாகவும், தொடக்கூடாதவர்களாகவும், பொதுக்கிணற்றில், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாதவர்களாகவும், கல்வியே மறுக்கப்பட்டவர்களாகவும் இச்சமூகத்தில் 3000ஆம் ஆண்டுகளாக நிலவுகிறதே இது குறித்து என்றைக்காகவது ரவிசங்கர்ஜி வாய்திறந்தது உண்டா? இப்படி சமூகத்தில் எற்றத்தாழ்வை உருவாக்கிய மனுவுக்கு எதிராக கருத்துச் சொன்னது உண்டா? இன்றைக்கும் கோவில்கள், கல்விக்கூடங்கள், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரங்கள் என அனைத்தையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள உயர்ஜாதியினருக்கு ஏதாவது அறிவுரை சொன்னது உண்டா?

இடஒதுக்கீடு என்று அமலாக்குவதற்கு மத்திய அரசு முனையும் போது, உயர்ஜாதி இந்துக்களுக்கு ஆதரவு இவர் வாய் திறப்பதன் நோக்கம் இப்போதுதான் புரிகிறது!

"சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேற்றுமைகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் சுயகவுரவத்தையும் பாதிக்கும்."

ஆம் ரவிஜீ நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். ஆனால் யாருக்கு இதனைச் சொல்ல வேண்டுமா? அவர்களுக்குச் சொல்வதுதான் இங்கே பிரச்சினை! இடஒதுக்கீடு சுயகவுரவத்தை பாதிக்கும் என்று சொல்கிறீர்கள்! யாருடைய கவுரவும்? 3000ஆம் ஆண்டுகளாக சமூகத்தின் சொத்து முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு கால் மேல், கால் போட்டுக் கொண்டு இருக்கும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னமும் அந்த இடத்தை விடாமல், தக்கவைத்துக் கொள்வதற்காக போராடுகிறார்களே அவர்கள் இப்போது இடஒதுக்கீடு வேண்டாம் என கேட்பதுதான் இழுக்கான செயல்!

மாறாக, மத்திய அரசின் இடஒதுக்கீடு யாசகம் அல்ல. அது உரிமை! 3000 ஆம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமை! இந்த உரிமையையும் தட்டிப்பறித்து விடத் துடிக்கும் உங்கள் சித்தாந்தம் யாரை வாழ்விக்கப் போகிறது? நீங்கள் வாழும் கலை வல்லுனரா? அல்லது பெரும் பகுதி மக்களை வீழ்த்தும் கலையில் வல்லுனரா? ரவிஜீயே பதில் சொல்!

இறுதியாக ஒரு கேள்வி? சமீபத்தில் மரணமடைந்த கோவை - வேதாந்த மகிரிஷி அவர்கள் தன்னுடைய யோகாவை எந்தவிதமான பணத்தையும் எதிர்பார்க்காமல் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் இந்த கலை மிக எளிமையாக சேர வேண்டும் என்பதற்காக இலவச சேவை செய்து வருகிறது அவரது யோகா மையங்கள். இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணடைந்து வருகின்றனர். உங்களைப் போல் டிஜிட்டல் விளம்பரங்கள் எல்லாம் இந்த மையங்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உங்களது வாழும் கலை யாருக்கு பயனளிக்கிறது. காசு உள்ளவர்களை வாழ்விப்பதற்கே உங்களது இதுவரை பயன்பட்டுள்ளது. என்றைக்காவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உங்களது கலையை இலவசமாக பயிற்று வித்தது உண்டா? பெரும் திருமண மண்டபங்களிலும், ஏ.சி. ஹாலிலும் அல்லவா உங்களது யோக வித்தை காட்டப்படுகிறது. இதுதான் உங்களது சமூக நீதி! எனவே உங்களைப் போன்றவர்களுக்கு உண்மையான சமூக நீதி தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதுவும் கருப்பின மக்களின் மண்ணில் இருந்து இந்த அறிக்கையை விட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று!

May 27, 2006

அம்மாவின் தைரியம்!

அம்மா ஜெயலலிதா இன்று தனியாக சட்டமன்றத்திற்குச் சென்று கிளிப் பிள்ளைப்போல் போராடி 30 நிமிடம் அனுமதி பெற்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்ப்பது மிக முக்கியமான கடமை. எனவே, பிரதான எதிர்க்கட்சியக இருக்கிற அதிமுக தொடர்ந்து ஜனநாயகப்பூர்வமாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்திட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம்: அம்மாவின் சட்டமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை சுதந்திரமாக பேச அனுமதித்தது உண்டா? அல்லது சட்டமன்ற கூட்டத் தொடரைத்தான் மரபு படி நடத்தியது உண்டா? இதையெல்லாம் செய்யாத ஜெயலலிதா இன்றைக்கு ஜனநாயக வேடம் போடுவது பூணை புலியானதுபோல் உள்ளது.

சட்டமன்றதில் ஜெயலலிதா இரண்டு அடிப்படை விஷயங்கள் மீது பேசியிருக்கிறார்.

1. தரிசு நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக. இவருக்கு இருக்கும் சந்தேகத்தை சட்டமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். அதாவது 86 லட்சம் நிலமற்ற விவசாயிகள் இருக்கும் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தை எப்படி பிரித்துக் கொடுப்பீர்கள் என்பதும், மேலும் அரசின் தரிசு நிலம் வெறும் 3 லட்சம் மட்டுமே என்றும், மீதியுள்ளது அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் இதை எப்படி பிரிக்கப் போகிறீர்கள் எனறு கூறியிருக்கிறார். கேள்விகளைப் பார்த்தால் மிக நியாயமாகத் தெரியும்.

இதே விஷயத்தில் அம்மா தனது ஆட்சியில் செய்தது என்ன? இதே 50 லட்சம் ஏக்கர் நிலத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு - பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து பண்ணைகளை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்தார். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இதன் மூலம் சாதித்தது என்ன?

2. கூட்டுறவு கடன் விஷயத்தில் ஜெயலலிதா சண்ட பிரண்டமே செய்துள்ளார். ஒரு இடத்தில் அவர் கூறும் போது ‘நாணயமாக கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு, அந்த தொi திருப்பிக் கொடுக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் யாரைக் கேவலப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் நாணயமானவர்கள் என்றால், செலுத்தாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அம்மாவின் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு உருப்படியான விலையோ, விவசாயமோ செழிக்கவில்லை. இதற்கான தீர்வினை இந்த அம்மாதான் கண்டிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டவர் இப்போது நியாயம் பேசுகிறார்!

சாதாரண உழைக்கும் மக்களை, அவர்களது இல்லாமையை - திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களை வஞ்சிக்கும் வகையில் பேசுவது ஒரு முன்னாள் முதல்வருக்கு அழகா?

ஜெயலலிதாவின் தைரியம் எல்லாம் தனியாக சட்டமன்றத்தில் பேசுவதில் மட்டும்தான் இருக்கும். ஆனால், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இவரது தைரியம் எங்கே போனது! என்பதுதான் இன்றைய கேள்வி!

May 26, 2006

என் முதல் நூல்

நன்பர்களே வணக்கம்.
நான் எழுதிய ‘மே தினம்’ என்ற நூல் 2005ஆம் ஆண்டு சென்னை, பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நூலை தற்போது நம்முடைய தமிழ் வாசகர்களுக்கு படிப்பதற்காக வெளியிட வேண்டும் என்று விரும்பி, இதனை பி.டி.எப். வடிவில் தயாரித்துள்ளேன்.இதனை பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.இது குறித்த தங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
கே. செல்வப்பெருமாள்

May 19, 2006

ஆரியருக்கும் - தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.


இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.


அத்தகைய மூத்த ஆய்வாளரான சாமி சிதம்பரனார் அவர்கள் திராவிட கொள்கை குறித்து எழுதியவற்றை, அதாவது -தொல்காப்பிய தமிழன்- நூல் அறிமுகம் ஒன்றை விசுவாமித்திரர் எழுதி - திண்ணையில் வெளி வந்துள்ளது. திராவிடம் குறித்து சூடு பறக்கும் இணையதளத்தில் உலா வருவதால் இதனை மறு பதிப்பாக இங்கே வெளியிடுகிறேன். நன்றி திண்ணை, விசுவாமித்திரர்.

சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.

இது தமிழ்வளர்ச்சியா ?
இலக்கிய வளர்ச்சியா ?

தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

  • நூல் வெளியீடு:

  • தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
    நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
    41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
    அம்பத்தூர், சென்னை - 600 098.

May 18, 2006

திராவிட தமிழன்?

திராவிட தமிழர்கள் வலைத்தளம் இது குறித்த அறிவிப்பை முத்துவின் தளத்தில் கண்டேன். முத்துவிடம் இருந்து இப்படியொரு முயற்சியை நான் எதிர்பார்க்கவில்லை! இன்றைய உலகமயச் சூழலில் இந்த வாதம் எந்த அளவிற்கு எடுபடும் என்றும் தெரியவில்லை. எனினும் இது குறித்து சிறிதளவாவது பரிசீலிப்பது நல்லது.

இந்தியா ஜாதிகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்காது. அதே போல் ஆரியர் - திராவிடர் என்ற வாதங்களும் 100 ஆண்டுகளாக உலா வருகிறது. குறிப்பாக பிராமணர்களை ஆரியர்கள் என்றும், பிராமணரல்லாதவர்களை திராவிடர்கள் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர வேறொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. திராவிடம் என்றால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களைக் கொண்டது. இதையே திராவிட நாடு என்று பெரியார் - அண்ணா போன்றவர்கள் அடையாளம் காட்டி. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல்... என்று ஒரு கோஷத்தை முன்வைத்தனர். இந்த கோஷத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக வீறுகொள்ள வேண்டிய இம்மக்களை ஆரியம் - திராவிடம் என்று பேசி வெள்ளையர்களுக்கு ஆதரவாக நின்றதைத்தான் வரலாறு கண்டது.
பெரியாரின் திராவிட நாடு ஒரு கனவாகவே மறைந்து விட்டது. அதே போல் அவரின் கடவுள் எதிர்ப்பும் அண்ணாவால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோஷத்தின் மூலம் சாம்பலாக்கப்பட்டது. தற்போது முத்து போன்ற நண்பர்கள் திராவிட தமிழன் என்று கூறுவது கண்டு நகைப்புத்தான் வருகிறது.

முதலில் இவர்கள் கூறும் இந்த சிந்தனை அதாவது, திராவிட தமிழன் என்று கூறுவதன் மூலம் முதல் பிரிவினையை செய்து விட்டார்கள். திராவிடத்திற்கு உள்ளேயே பிரிவினை. இதனை மற்ற திராவிடர்கள் (எனக்கு திராவிடத்தில் உடன்பாடு இல்லை) எப்படி உணர்வார்கள். அதாவது, மலையாளி திராவிடர்கள், கர்நாடக திராவிடர்கள், ஆந்திர திராவிடர்கள் இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து திராவிட தமிழர்கள். தமிழர்கள் என்று இவர்கள் சொல்லும் போது யாரை தமிழர்கள் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. ஜாதிய நிலப்பிரபுத்து முதலாளித்துவ சமூகத்தில் ஒரு ஜாதி இன்னொரு ஜாதிக்கு எதிராக களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இதில் எவ்வாறு ஒற்றுமைக் காண வேண்டும் என்று பார்ப்பதற்கு பதிலாக திராவிட தமிழகர்கள் என்று பொதுவாக கூறுவதன் மூலம் ஒற்றுமை உண்டாகுமா?

நேரடியாக கேள்வியை தொடுக்கிறேன். இன்றைக்கும் திமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக தமிழர்களான மேல் ஜாதியினர் தான எதிராக இருக்கின்றனர். இதனை மறுக்க முடியுமா? எனவே இந்த பொதுவான வரையறை என்பது கூட சமூக தளத்தில் உள்ள முரண்பாட்டை மூடி மறைக்கும் மாயா வாதத்தைதான் கொண்டு வருகிறது.

சரி! இவர்களது தேவைக்கு திராவிட தமிழன் தேவப்பட்டார் அடுத்து ஆரிய தமிழனும் வருவான், அதற்கடுத்து திராவிட தமிழ் வன்னியன், திராவிட தமிழ் முதலியார், திராவிட தமிழ் செட்டியார், திராவிட தமிழ் தலித்... இப்படியே அடிக்கிக் கொண்டே போகலாம். அவரவரர் தரப்பிற்கு ஏதோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும்.

இந்தியா 21ஆம் நூற்றாண்டை நோக்கி வேகமாக பயணிக்க வேண்டும் என்று போராடுகிற இந்த தருணத்தில், அதுவும் உலகமயச் சூழலில் ஜாதி, மதம் இவைகள் எல்லாவற்றின் கண்ணிகளும் வெகு வேகமாக வேறறுக்கப்பட்டு வருவதை இவர்கள் ஏன் உணரவில்லை? ஒரு தரப்போடு களம் காணுவது முரண்பாடுகளை அதிகரிக்கத்தான் உதவிடுமே தவிர, ஒற்றுமையை உருவாக்கிட உதவிடாது. எனவே இத்தகைய முயற்சியை இந்த நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!

புதிய அரசின் புத்துணர்வு நடவடிக்கைகள்!

wwதமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி திமுக அரசு புத்துணர்வு வேகத்தில் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவைகள். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருவதன் மூலம், தமிழக மக்கள் மீது அழுந்திக் கிடக்கும் பாரத்தை சிறிது இறக்கி வைக்கலாம். அந்த அடிப்படையில் கலைஞரின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்திட வேண்டும்.
குறிப்பாக ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி, விவசாய கூட்டுறவு கடன்கள் ரத்து, சத்துணவில் முட்டை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க நடவடிக்கை, கண்ணகி சிலைக்கு மீண்டும் உயிர் என மிகுந்த முனைப்போடு தமிழக அரசு சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் ஐந்தாண்டு காலமும் இருந்திட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும், சமீபத்தில் தமிழறிஞர் தமிழண்ணனின் கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் பரிசீலித்திடுவதோடு, காலதாமமின்றி உடனடியாக அமலாக்கிட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் மேனிலை கல்வி வரை தமிழை தொடாமலே கல்வி பயிலலாம் என்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் கட்டாய பாடமாக்கிட வேண்டும். தாய்மொழியை புறக்கணித்து விட்டு மற்ற கல்வியை பயிலுவது என்பது ஏற்புடையதன்று. எனவே தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் கலைஞர் இதனை அவர் காலத்திலேயே நிறைவேற்றிடுவது தமிழுக்கு அவர் செய்திட்ட தொண்டாக இது மலரலாம். இந்த கோரிக்கையில் நியாயம் உண்டு.
அதே போல் குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திட நிலச் சீர்திருத்தம் 2 ஏக்கர் நில விநியோகத்தையும் உடனடியாக துவக்கிட வேண்டும். இதனை உறுதியுடன் அமலாக்கிட வேண்டும். இது கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றுவதோடு, தமிழக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து - தமிழகத்தையே மாற்றும்!பொது விநியோகம் ஊழலற்று அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் பொருட்கள் கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடும் அடிப்படை நடவடிக்கைகளையும் காலதாமதமின்றி எடுத்திட வேண்டும். இதற்காக மிகப்பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும் என்று அர்த்தமல்ல; உருவாக்க வேண்டியது அவசியம் என்றாலும், தற்போதைக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விசேஷ நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். (உதாணரமாக சத்துணவுக்கான முட்டை தயாரிப்புகளை சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதுபோல்)
விலைவாசி உயர்வினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
மிக முக்கியமானது. திமுக ஆட்சியில் ரவுடியிசம் தலை தூக்கும் என்ற பேச்சு சாதாரணமாக கீழ் மட்டத்தில் நிலவுகிறது. எனவே இதற்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்காமல், ரவுடியிசத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும். இது காந்தியின் மண் என்பதை விட, சிங்காரவேலர் - பெரியார் பிறந்த மண் என்பதற்கு அடையாளமாக அனைத்து மக்களும் சுதந்திரமாக உலவுவதற்கும், அவரவர்களது உடமைகளுக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும்.கிராமப்புற - நகர்ப்பு சுகாதாரத்தை பராமரித்தல் - மேம்படுத்துவதில் அடிப்படை கவனத்தை இந்த அரசு செய்திட வேண்டும். இதில் ஒரு மறுமலர்ச்சியையே ஏற்படுத்திட வேண்டும்.
அடுத்து, உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாக நடத்துவதற்கு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும். உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 27 அதிகாரங்களையும் வழங்குவதோடு, அதிக நிதியினையும் உள்ளாட்சிகளுக்கு வழங்கிட வேண்டும். மாநில சுயாட்சி குறித்து அடிக்கடி பேசும் கலைஞர் உள்ளாட்சிகளின் சுயாட்சிகளையும் பார்க்கத் தவறமாட்டார் என நம்பலாம்!
ஜனநாயக உரிமைகள் பாதுகாத்திட, கூட்டம் கூடும் உரிமைகள் உட்பட மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்திட மீண்டும் உரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத நல்லிணக்கத்தோடு, ஜாதிய நல்லிணக்கத்தையும் அனைத்து விதத்திலும் கொண்டு வர சீரிய முயற்சிகள் எடுத்திட வேண்டும்.
தலித் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக இந்த புதிய அரசு விசேஷ திட்டங்களை தீட்டிட வேண்டும்.
கல்வி தனியார்மயம் என்பது சாதாரண நகர்ப்புற, கிராமப்புற மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. கல்வி கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்திட உடனடியாக அரசு ஆணையை வெளியிட வேண்டும். ஆரம்ப பள்ளி படிப்பதற்கே மக்கள் ரூ. 5,000 முதல் 10,000 வரை செலுத்திட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலைக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஏக்கங்கள் ஏராளம், எதிர்பார்ப்புகளும் ஏராளம், தேவை கலைஞரின் தாராளம்!

May 13, 2006

நச்சுப் பாம்பும் - காட்டுமிராண்டிகளும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக நீதியை நிலைநாட்டியுள்ளனர். ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டது போதும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதே சமயம் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை பலத்தையும் மக்கள் வழங்கிடவில்லை. திமுக இதர கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தனித்து ஆட்சியமைக்கிறது. தமிழக வரலாற்றில் இரண்டு கழகங்களின் ஆட்சியின் மீது மக்களது நம்பிக்கை குறைந்து வருவதைத்தான் இந்த தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.

அதே சமயம் மூன்றாவதாக முரசு கொட்டியுள்ள விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே தனியாக போட்டியிட்டு 28 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவே முதல் முறை. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதை இது உணர்த்துகிறது. எதிர்காலம் கழகங்களுக்கு இனியில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இதனை உணர்ந்து கழகங்கள் மீளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையில்... மக்களது தீர்ப்பு குறித்து விரிவாக பேசியுள்ளார். அந்நேரத்தில் அவர் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். ஏனென்றல் தமிழக வரலாற்றிலேயே எதிர்க்கட்சிகள் இவ்வளவு பலமாக இருப்பது இதுதான் முதல் முறை என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்கள் நச்சுப்பாம்புகளாக கொத்துவதற்கு காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தோல்வியை தழுவியுள்ள ஜெயலலிதா தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும், பின் அவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மிகுந்த நம்பிக்கையோடு இது தற்காலிகமான தோல்விதான் என்று கூறி விட்டு, ஆட்சியில் இருப்பவர்களை காட்டுமிராண்டிகள் எனவே நான் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் தமிழக வாக்காளர்கள் நச்சுப் பாம்புகளையும், காட்டுமிராண்டிகளையும்தான் தேர்ந்தெடுத்துள்ளார்களா? ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் ஒருவொருக்கொருவர் இவ்வாறு தூற்றி பேசுவது சட்டமன்ற - அரசியல் ஜனநாயகத்திற்கு பொருத்தமான செயலா? ஆரம்பத்திலேயே இதுபோன்ற வார்த்தை போர்களை துவக்கினால், வரும் ஐந்தாண்டுகாலம் எப்படி இருக்கும்? எனவே பழுத்த அரசியல்வாதியான கலைஞர்தான் இதில் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், தமிழக முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை அவர் செய்வதன் மூலம் வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கலாம். அவர்களது அமைச்சரவை சகாக்களும், உடன் பிறப்புகளும் இதனை உணர்ந்து செயல்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

திரு. கருணாநிதி அவர்கள் முதல்வர் பதவியேற்றவுடன், அவரது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள முதல் மூன்று வாக்குறுதிகளை (அரிசி, முட்டை, கூட்டுறவு கடன் ரத்து) நிறைவேற்றுவதாக கையெழுத்திட்டுள்ளார். இதனை மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்பார்கள். அதே சமயம் இந்த வாக்குறுதிகள் ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும். மேலும் ரேஷன் அரிசி விலை மிகக் குறைந்து இருப்பதால், இந்த ரேஷன் அரிசிகள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி மார்க்கெட்டுக்கே கடத்தி விற்கப்படாமல் காத்திட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனைத்து கட்சி மற்றும் பொது மக்களைக் கொண்ட கண்காணிப்புகுழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.

May 05, 2006

வழிகாட்டும் மேற்குவங்கம்

மேற்குவங்கத்தின் 7வது செஞ்சுரி!

மேற்குவங்கமும் - சிவப்பும் இணை பிரியாதது. ஐந்து மாநில தேர்தல்களில் மேற்குவங்கத்தில் சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி மீண்டும் 7வது முறையாக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கியுள்ளனர். நிச்சயம் இடது முன்னணி வெற்றி பெறும்.
பலருக்கு ஆச்சர்யம், பலருக்கு பொறாமை இவர்கள் மட்டும் எப்படி தொடர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் திராவிடங்கள் ஐந்து வருடம் ஆட்சி செய்தாலே மக்களுக்கு அலர்ஜியாகி விடுகிறது. அடுத்த தேர்தலில் எச்சில் இலையாக பறக்க விடுகின்றனர் மக்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுதான் ஏதோ சாதனைகளையும், தியாகங்களையும் செய்து சுதந்திரத்தைப் பெற்றது என்று வரலாறுகளை வடிவமைத்துக் கொண்டாலும், கதை, கதையாய் கதைத்துக் கொண்டிருந்தாலும் காங்கிரசால்கூட தொடர்ந்து வங்கத்தைப்போல் எங்கும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

மார்க்சி°ட்டுகள் அப்படி என்ன செய்து விட்டார்கள் அங்கே? இந்த வியப்பான கேள்விகள் எல்லோர் மனதிலும் இழையோடுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் எல்லாம் இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவதில்லை! அப்படியிருந்தும் எப்படி இந்த வெற்றி?

இந்தியா மட்டுமல்ல உலகமே வியக்கிறது. வரலாற்றை ஆராய்கிறது. ஆம்! கம்யூனிசம் என்கிற பெரும் வரலாற்று நீரோட்டத்தில் மேற்குவங்கத்தின் அனுபவங்களும் பதிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச ஆட்சி என்றாலே அது, புரட்சியின் மூலம்தான் வர முடியும். இதுதான் உலக அனுபவம்! ஆனால் மேற்குவங்கத்தில் ஜனநாயக முறைப்படியே மக்கள் இடதுசாரிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதன் பின்னணியைப் பார்ப்போம்!

முதலில் ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்தி விடுவோம்: மேற்குவங்கம்தான் இந்தியாவின் கூட்டணி ஆட்சிக்கு முதல் முன்னுதாரணம். ஆம்! சி.பி.எம். தனித்த மெஜாரிட்டியோடு ஆட்சியமைக்க வாய்ப்பு இருந்தாலும், அப்படி ஒருமுறை கூட அமைத்ததில்லை. கொள்ளையடிப்படையில் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சிதான் மேற்குவங்கத்தில் நடைபெறுகிறது. (இது கொள்கை அடிப்படையிலானது. சீட்டு எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியதும் அல்ல)

1977இல் ஆட்சிக்கு வந்த இடதுமுன்னணி இன்றுவரை தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம், 2011 வரை ஆட்சியில் இருக்கும். அதற்கு பிறகு நடைபெறும் தேர்தலிலும் வங்கத்தில் சிவப்பின் ராஜ்யம்தான்.

1977இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், அங்கு நடைபெற்ற விவசாயிகள் போராட்டம். குறிப்பாக விவசாயத் தொழிலாளிகள் போராட்டம் பல மாவட்டங்களில் வீறு கொண்டு எழுந்தது. அதன் விளைவாக தரிசு நிலங்களையும், உபரி நிலங்களையும் - நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மீட்டுக் கொள்ளும் மிகப்பெரிய இயக்கம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகவும், பின் ஆட்சிக்கு வந்த இடதுமுன்னணி ஆட்சியில் வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பின் விளைவாகவும், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் கிடைத்தது. இதன் மூலம், இன்றைக்கு இந்தியாவிலேயே கிராமப்புற பொருளாதாம் மிகப்பெரிய அளவில் இருப்பது வங்கத்தில்தான்.

இந்தியாவில் இதுவரை நாடு முழுவதும் செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் 22 சதவீதம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, விவசாய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலிச்சட்டம் கறாராக அமலாக்கப் படுகிறது.

அதேபோல் மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சிக்காக இடதுசாரிகள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் தான் இந்திராவும், ராஜீவும்... ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிட மத்திய அரசின் அனுமதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டி நிற்க வேண்டிய நிலைமை.

இந்தச் சூழலில் கூட, மேற்குவங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அதேபோல் மேற்குவங்கத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், மூடப்பட்ட தொழிலாளிகளை பாதுகாத்திட மாதம் ரூ. 500 வழங்குகிறது. இது இந்தியாவில் வேறெங்கும் நடைபெறுவதில்லை.

அதேபோல், படித்த மாணவர்கள் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணத்தை மேற்குவங்க அரசே செலுத்துகிறது.

குறிப்பாக ரேஷன் முறை. 14 அத்தியாவசியப் பொருட்கள் அங்கே முறையாக மாதந்தோறும் விநியோகிக்கப்படுகிறது.

சாலை மேம்பாடு - கல்கத்தா உட்பட வெவேகமாக மாறி வருகிறது.

அத்துடன் மேற்குவங்கத்திற்கும் - பங்களாதேஷிற்கும் நதிநீர் ஒப்பந்தம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து அமலாக்கப்பட்டு வருகிறது.

வேலையில்லா கால நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் காவல்துறையினருக்கும் சங்கம் வைக்கும் உரிமை வங்கத்திலே வழங்கப்பட்டுள்ளது.
போராடக்கூடிய ஊழியர்களை காவல்துறையினர் தாக்குவது வங்கத்தில் பார்க்க முடியாத விஷயம். இங்கே குடிநீருக்காக போராட்டம் நடத்தினால் கூட தடியடிதான்...

தற்போது உலகமயச் சூழலில் மேற்குவங்கம் ஏதோ அந்நிய முதலீட்டார்களுக்கு தாராளமாக கதவு திறந்து விட்டுள்ளது போல் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அப்படியொன்றும் அங்கே நடப்பதில்லை.

மேற்குவங்க தொழில் கொள்கை மூன்று வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.1. முற்றிலும் நலிவடைந்த - நஷ்டத்தில் இயங்கக்கூடிய தொழில்கள் தனியாரிடம் வழங்கப்படுகிறது.2. கூடிய வரைக்கும் அரசும் ஞு+ தனியாரும் இணைந்து நடத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகிறது.3. நலிவடைந்த தொழிற்சாலைகளை மீட்பதற்கு மேற்குவங்க அரசு விசேஷ முயற்சிகளை எடுக்கிறது.

அந்நிய முதலீடு என்று வரும் போது, என்ரான், வால்மார்ட் போல சரணாகதி ஒப்பந்தங்களை மேற்குவங்க அரசு போடுவதில்லை. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற்சாலைகளுக்குத்தான் வங்கத்தில் அனுமதிக்கப்படுகிறது. உள்ளூர் தொழிற்சாலைகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் மேற்குவங்கம் அனுமதி வழங்குவதில்லை.

இதைவிட மிக, மிக முக்கியமானது உள்ளாட்சி நிர்வாகம், இந்த உள்ளாட்சி நிர்வாகம்தான் இந்தியாவிலேயே மிக முன்னுதாரணமாக செயல்படுவது வங்கத்தில் மட்டுமே. 50 சதவீத நிதி உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டங்களை அவர்களே தீட்டிக் கொள்ளலாம். இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் தலித் - பழங்குடி - பெண்கள். இந்த விகிதம் இந்தியாவிலேயே வங்கத்தில்தான் அதிகம்.

இப்படி எண்ணற்ற சாதனைகளை மிக நேர்மையாக செயல்படுத்தி வரும் இடதுமுன்னணி இந்தியாவின் மாற்று கொள்கையை முன்வைத்து செயல்படும் மாற்று அரசுக்கான முன்னுதாரணமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் தமிழகம் உட்பட இதர மாநிலங்களும் வங்கத்தின் சிவப்பு நட்சத்திரத்தை நோக்கியதாக மாறும்.
இந்திய சூழலுக்கு ஏற்ப மக்கள் ஜனநாயக புரட்சியை இந்தியாவில் அமலாக்கிட உறுதிபூண்டுள்ள சி.பி.எம்., இந்திய சூழலுக்கு ஏற்ப கம்யூனிச கொள்கைகளை பரவலான மக்கள் திரளிடம் கொண்டு சென்றுள்ளது. இது வெற்றி பெற்றும் வருகிறது. வங்கம், கேரளம், திரிபுரா என்று... அடுத்து ஆந்திரமும் - தமிழகமும் இந்தப் பாதையில் நடைபோடும்.... வெற்றி நிச்சயம்!

May 04, 2006

கேந்திர வித்யாலயாவில் இடஒதுக்கீடு வருமா?

இது என் சொந்த அனுபவப் பதிவு

மத்திய அரசின் நேரடி பொறுப்பில் நடத்தப்படும் பள்ளிகள்தான்
கேந்திர வித்யாலயா. இந்த பள்ளிகளின் தரம் மிக சிறப்பானது. குறிப்பாக என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் மத்திய அரசின் நேரடி பள்ளி - கல்வி ஆராய்ச்சிகள் முதலில் அமலாக்கப்படும் பள்ளிகள். அந்த அளவில் இந்த கேந்திர வித்யாலயா பள்ளி சிறப்பு வாய்ந்தது. இதைவிட முக்கியமானது கல்வி கட்டணம் மிக குறைந்தது. இது போன்ற கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்திட வேண்டும். மாநில அரசுகளும் இந்த பள்ளிக்கு நிகராக தங்களது கல்வி நிறுவனங்களை மாற்றிட வேண்டும்.

இந்த பள்ளியில் எனது இரண்டு மகள்களை சேர்த்திட கடந்த ஆண்டே நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தேன். இந்த ஆண்டும் இடம் கிடைக்கவில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது. இருப்பினும் அப்படி ஏதாவது ஒன்று நடத்தியிருந்து என்னுடைய குழந்தைகள் அதில் தவறியிருந்தால், அந்த சீட்டு கிடைக்காததற்கு நான் வருந்திப்போவதில்லை.

ஆனால் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் அடிப்டையாக உள்ளது.இந்த பள்ளியில் சேர கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.
1. இந்த பள்ளியில் இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் முக்கியத்துவம் உண்டு. மத்திய பள்ளியாக இருப்பதால் நிச்சயம் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தேயாக வேண்டும்.
2. மத்திய அரசு ஊழியராக இருக்க வேண்டும். அல்லது மாநில அரசு ஊழியராக இருக்க வேண்டும்.
3. இவைகள் எதுவும் இல்லையென்றால் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியராக இருந்திட வேண்டும்.இதனை 7 கேட்டகிரிகளாக உருவாக்கியுள்ளனர்.
4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. (மத்திய - மாநில அரசு ஊழியர்களாக இருந்தால் நிச்சயம் இடம் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதாக இருந்தால் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம்)
மத்திய அரசு ஊழியர்களில் யாராவது இடம் மாற்றம் செய்யக்கூடிய பதவிகளில், வேலைகளில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை நிச்சயம் அளித்திட வேண்டும். மாநில அரசு ஊழியருக்கு இந்த விதிவிலக்கு தேவையில்லை என்பது என் கருத்து.

இவ்வாறு இல்லாமல் இருப்பவர்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான கேள்வி! ஏனென்றால் மத்திய - மாநில அரசு ஊழியர்களும், பொதுத்துறை ஊழியர்களும் நல்ல வருமானத்தோடு பணியாற்றக்கூடியவர்கள். இந்த சமூகத்தில் அவர்கள் தனியார் பள்ளிகளிலோ அல்லது அவர்கள் விரும்பு மெட்ரிக் பள்ளிகளிலே சேர்ப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்காது.

ஆனால், என்னைப் போன்றவர்கள் தனியார் நிறுவனங்களில் (அசோக் லேலண்ட், பாரி... போன்ற நிறுவனங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை) பணிபுரிபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இந்த பள்ளியில் தன்னுடைய மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. கிடைக்காது. இதுதான் பிரச்சினையே! ஏனென்றால் அவர்கள் வரையறுத்துள்ள 7 கேட்டகிரிகளில் இவர்கள் இடம் பெறுவதில்லை.

நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் (ஐயா, ஜாதி பேசுகிறேன் என்று கூறிவிடாதீர்கள்) என்னைப் போல் பலரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்திருந்தால், குறைந்தபட்சம் விண்ணப்பித்திருப்பவர்களில் ஒரு 10 பேருக்காவது கிடைக்கும் என நம்பலாம். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு முதல் +2 வரை இந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்திட வேண்டும் என்றால் திறமையோ? சமூக நிலையோ முக்கியமல்ல; மாறாக அவர்கள் வரையறுத்துள்ள 7 கேட்டகிரியில் இருந்திட வேண்டும் என்பது என்னை கடுமையாக பாதித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ஐ.ஐ.டி. உட்பட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதுபோல், கேந்திரிய வித்யாலயா உட்பட உள்ள மத்திய பள்ளிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முன்வரவேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, மத்திய அரசு வழங்கிடும் பள்ளியில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து படிக்கும் அளவிற்கு பரவலாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவதோடு, அதில் ஏழை - எளிய வீட்டுப் பிள்ளைகள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும்.

அம்மாவின் பக்குவம்!

w.அகில உலக அதிமுக தலைவி அம்மா, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகரில் அனல் வேக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நானும் கூட, அம்மாவின் பிரச்சாரத்திற்கு எந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது, என்று அறிந்து கொள்ள விரும்பியிருந்தேன். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு அலுலவகத்தில் பணிகளை முடித்து விட்டு, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன், தி.நகர் - வெங்கட்டநாராயணா சாலையில் உள்ள - திருப்பதி பெருமாள் கோவில் அருகில் உள்ள சந்திப்பு அருகே செல்லும் போது, காவல்துறையினரின் கண்ணியமான கெடுபிடி அதிகமாக இருந்தது. புரிந்து விட்டது. பழம் - நழுவி பாலில் விழுந்ததுபோல் இருந்தது. எல்லாம் அம்மாவின் வருகைக்காக 15 நிமிடத்திற்கு முன்பே டிராபிக்கை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டிருந்தனர்.


அம்மாவை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் சிலர் - சிலர் மட்டுமே (குறிப்பாக பெண்கள்) சாலையோராத்தில் உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். அம்மா வருவதற்கு முன் காவல்துறையினரின் எச்சரிக்கை ஒலியோடு, மிக வேகமாக பல வேன்கள் வந்தது. எல்லோரும் அம்மா எந்த வேனில் இருப்பார்கள் என்று ஆவலோடு பள, பளவென்று ஒளி வெள்ளத்தில் வந்து கொண்டிருந்த வேனையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!விஷயம் இதுதான். அம்மா அதற்கு முன்னால் சென்ற வேனில், லைட்டையெல்லாம் அணைத்து விட்டு, இருட்டில் முகம் தெரியாமல் - போய் விட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாலைகளில் மக்கள் ஆவலோடு இருக்கும் போது, அதுவும் தேர்தல் அனல் தக, தகவென்று வீசிக் கொண்டிருக்கும் போது, இருட்டுக்குள் ஏன் ஒளிந்து கொண்டார் என்று தெரியவில்லை!

மொத்தத்தில் அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள். இது வித்தியாசமாக இருக்கிறது - அம்மாவின் தேய்பிறையைத்தான் இந்த அணுகுமுறை காட்டுகிறது. ஒரு வேளை இதுதான் அம்மாவின் பக்குவமோ! இரண்டாண்டு முதல்வராக இருந்தவர் இரண்டு வருடத்திற்கு பின்தான் பக்குவமடைந்திருக்கிறார்! இதிலும் ஜெயம்மாவுக்கு முதலிடம்தான்.

May 03, 2006

தலைகீழாய் சுற்றப் போகும் பம்பரம்

234 தொகுதிக்கும் நக்கீரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அதிமுக அணி வெற்றிபெறும் என்று கணித்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதேபோல்தான் நக்கீரன் சொல்லியது. ஆனால் அதற்கு நேர் மாறாக மார்க்சி°ட் வேட்பாளர் வெற்றி பெற்றார்.இந்த முறையில் பம்பரம் தலைகீழாக சுற்றப்போவதன் மூலம் நக்கீரன் கணிப்புகள் சரியானதல்ல என்பதை நிரூபிக்கவுள்ளது.

பெரம்பூரில் தற்போது நிலவும் சூழலுக்கும் - நக்கீரனின் கணிப்புக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பூர் தொகுதியில் அனைத்து மக்களின், அனைத்து கட்சிக்காரர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளவர் மகேந்திரன். இன்னும் சொல்ல வேண்டுமானால் அதிமுகவும் - மதிமுகவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதும், வெட்டிக் கொள்வதும்தான் தொகுதியில் நடைபெறுகிறது.

சென்னை மாநகரத்திலேயே மோட்டர் பைக்கில் வலம் வந்த ஒரே எம்.எல்.ஏ. மகேந்திரன் மட்டுமே. ஐந்தாண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த மகேந்திரனுக்கு இன்னும்கூட பெரம்பூரில் சொந்த வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் ஒரு கவுன்சிலராக இருந்தாலே சுமோவில் பறக்கின்றனர்.

மார்க்சி°ட் வேட்பாளரான மகேந்திரன், பெரம்பூர் மக்களின் தாகத்தை தீர்த்திருக்கிறார். அத்துடன் பல இடங்களில் மக்கள் நலன் பணிகள் சீராக நடைபெற்றுள்ளது.
இந்த தொகுதி மார்க்சி°ட்டுகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதில் பலதரப்பினர் கண்ணும், கருத்துமாக தீவிரமாக செயல்பட்டனர். ஆனால், இறுதியில் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டதுதான் மிச்சம். இந்த சூழலில் நக்கீரன் கணிப்பும் சரியானதாக இருக்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கள நிலைமையில் நிற்பதால், இதை எழுதிட வேண்டியுள்ளது
.
இறுதியாக இந்த சர்வவே ரகசியம் ஒன்றையும் கூறிவிடுகிறேன்.

2.50 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் வெறும் 270 பேரிடம் சர்வே செய்து விட்டு, அதாவது 0.3 சதவீதம் பேரிடம் மட்டுமே சர்வே எடுத்துவிட்டு - இதுவே ஒட்டுமொத்த பெரம்பூர் மக்களின் கருத்து என்பது விஞ்ஞானப்பூர்வமானதா? நக்கீரன் விளக்கிட வேண்டும்.

என்ன ஆச்சு என் பிளாகுக்கு?

என்னுடைய பிளாக்கில், நான் போடும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடும்போது, அது தமிழ்மணத்தில் --அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்-- பகுதியில் காண்பிக்கப்படுவதில்லை. என்ன ஆச்சு என்றே தெரியவில்லை! யாராவது உதவிட முடியுமா? தமிழ்மண நிர்வாகி காசி அவர்களே உங்களையும்தான் கேட்டுக் கொள்கிறேன்... முத்து... என் குரல் கேட்கிறதா?

இளைஞனின் மனசாட்சி

மே தின விழா கொண்டாட்டத்தில் நானும், என் நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டோம். இந்த முறை மே தினத்தில் துபாய் ராஜேந்திரன் - புதியதாக இரண்டு இளைஞர்களை கூட்டி வந்திருந்தான். இது இந்த வருட மே தினத்தில் எங்களுக்கு கிடைத்த புது வரவு என்று எண்ணிக் கொண்டோம்.மே தின பேரணி முடித்துவிட்டு, களைப்பில் டீ கடை முன் கொட்டி வைத்திருந்த மணலில் நாங்கள் உட்கார்ந்தோம். ஆளுக்கு ஒரு டீ, பி°கட்டை சாப்பிட்டு விட்டு, அரசியல் பற்றி கதைக்க ஆரம்பித்தோம். இந்த அரசியல் விவாதத்தில் ஆர்வம் செலுத்திய புதிய நண்பர்கள் (இவர்கள் முதன் முதலாக ஓட்டுப் போடப்போகிறவர்கள்) அம்மா குறித்தும், அய்யா குறித்தும் பல கேள்விகளை கேட்டனர். அதில் முக்கியமானது. அம்மா 35 லட்சம் பேருக்கு வேலை தருகிறேன் என்கிறார். அய்யா 5 லட்சம் பேருக்கு வேலை தருகிறேன் என்கிறார். எங்களுக்கு வேலை கிடைக்குமா? இதுதான் கேள்வி!

உண்மையில் இது எங்களுக்கு தர்ம சங்கடமான கேள்விதான்! ஏனென்றால் ஆட்சியாளர்கள்தான் இதற்கு உறுதியளிக்க முடியும். என்னால் முடியாது. அப்புறம் என்ன? இரண்டு கட்சிகளையும் வண்டவாளம் ஏற்றியதுதான் மிச்சம். உண்மையை போட்டு உடைத்து விட்டோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.

எல்லாம் தேர்தல் கோஷம் தானப்பா? அரிசி, தங்கம், வேலை, நிலம் எல்லாம் அரசியல் கோஷமே... இதுவெல்லாம் அமலாக்குவதற்கான கொள்கை அவர்களிடம் இல்லை என்று கூறி. இதற்கு தேவை இவரா, அவரா என்று சிந்திக்காமல் - கொள்ளை ரீதியாக முடிவுவெடுக்கும் ஆட்சிகள் நம்மிடம் வரவேண்டும் என்று கூறிவிட்டு, வழக்கம் போல் உருக்குலையா வங்கம் குறித்தும், கேரள நிலச் சீர்திருத்தம் குறித்தும் உரையாடி அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையூட்டினோம்.

இதற்குள் திரும்பவும் அவர்களுக்கு ஒரு சந்தேகம். விஜயகாந்த் சொல்றாரு, இரண்டுப் பேரையும் பாத்துட்டோம்; எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு, அதனால அவருக்கு ஓட்டுப் போடலாமே! என்று மீண்டும் அந்த புதிய முகங்கள் கேட்க! அரசியலுக்கும் - விஜயகாந்த்துக்கும் உள்ள தொடர்பையும், அவருக்கு மக்கள் மீது ஏற்பட்ட திடீர் கரிசனத்தையும், இதுவும் ஒரு சினிமா என்று விரிவாக விளக்கினோம்.
குழம்பிப்போன அவர்கள் நாங்க யாருக்குத்தான் ஓட்டுப் போடுறது என்று கேட்க!மீண்டும், விஷயத்தை வேறு கோணத்தில் விளக்கி, முதலில் தமிழகத்தில் ஜனநாயகம் வேணும், அது சட்டமன்ற ஜனநாயகம் தொடங்கி கூட்டம் கூடும் - போராடும் ஜனநாயகம் - பத்திரிகை ஜனநாயகம் வரை தேவைப்படுகிறது. இதையெல்லாம் அம்மாவிடும் எதிர்பார்க்க முடியாது. அந்த விதத்தில் ஐய்யவே தேவலை என்று சொல்லி அவர்களை டி.பி.ஏ.வுக்கு ஓட்டுப் போட சம்மதிக்க வைத்து விட்டோம். (இதுதான் புரட்சியா? என்று கேட்டு விடாதீர்கள்-அது வேற இடத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம்)

இருந்தாலும், அவர்கள் வேலை குறித்து திரும்ப - திரும்ப கேட்டது, இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கும் - வறண்ட மூளைகளுக்கும் உரைக்குமா? எனத் தெரியவில்லை.அண்ணா சொல்லியிருக்கிறார். வேலையில்லாதவனின் மூளை சாத்தானைப் போன்றது என்று. திராவிடங்கள் அண்ணாவின் பெயரை மூச்சு முப்பது தடவை உச்சரித்தாலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் கொள்கை விஷயத்தில் அவர்களது கவனம் சென்றதே இல்லை. இது இருவருக்கும் பொருந்தும்.

இறுதியாக அவங்க வேலை தரலைன்னா நாமெல்லாம் சேந்து போராடலாம்னு நம்பிக்கையூட்டி முடித்தோம்!

May 01, 2006

மே தின நல் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்!

மே தின தியாகிகளின் தடம் பதித்திடுவோம்!

அவுட் சோர்சிங் என்ற பெயரால் 12 மணி நேர வேலை வாங்கும் நவீன சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்!

நேபாளில் ஜனநாயகம் மலர்ந்ததைப் போல்,

பிரான்சில் வாலிபர் விரோத - தொழிலாளர் விரோத அடிமைச் சட்டத்தை தூக்கியெந்ததைப்போல்

தமிழகத்தில் தொழிலாளர், விவசாயிகள், மாணவர், வாலிபர், மாதர் விரோத ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம் - மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டிடுவோம்!

புதிய ஆட்சிக்கு பூபாளம் பாடுவோம்!

மே தின வாழ்த்துக்கள்....