சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும், துணைநகரங்களிலும் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பல்வேறு நிறங்களில் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளை கலர் போர்டு, ம;"சள் கலர் போர்டு, பச்சை கலர் போர்டு, நீலக்கலர் போர்டு, எம்-சர்வீஸ், டீலக்ஸ், ஏ.சி. பேருந்து என்று விதவிதமான கலர்களில், விதவிதமான கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தி கொள்ளையோ கொள்ளை என்று நாள்தோறும் கொள்ளை அடித்து வந்தது திமுக அரசும்-போக்குவரத்து கழகங்களும். கடந்த ஒன்னறை ஆண்டுகளாக மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. குறிப்பாக முதியவர்கள், படிப்பறிவற்றவர்கள், கிராமப்புறத்தினர், வறிய நிலையில் உள்ளவர்கள் இந்தப் பேருந்தில் ஏறிவிட்டால் பேந்தப் பேந்த முழிப்பதும், கண்டக்டரிடம் தகராறும்தான் வழக்கமான ஒன்றாகிப் போனது. கையில் காசில்லாதவர்கள் கால் நடையாக நடக்கவே பழக்கப்படுத்திக் கொண்டனர்.
மாநகர மக்களுக்கோ இந்தப் பேருந்துகளை விட்டால் வேறு வழியே இல்லை. இருக்கிற ஷேர் ஆட்டோக்களும் குறைந்த தூரத்திற்கு 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி மக்களை ஆட்டோவுக்குள் திணித்துச் செல்லும் காட்சிகள் அடிமைகால சமூகத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது.
4000 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் பேருந்து கட்டணத்திற்கே மாதந்தோறும் 600 முதல் 900 ரூபாய் வரை செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மாநகரங்களில் தள்ளப்பட்டனர். இதனால் கடன் சுமையும், மனச்சுமையும் ஏறியதே தவிர மக்கள் வாழ்க்கை உயரவில்லை. ஒரு பக்கத்தில் ஒரு ரூபாய் அரிசி தனது ஆட்சியின் சாதனை என்று பறைசாற்றும் கருணாநிதி மறுபுறத்தில் பிக்பாக்கெட் கொள்ளையன் போல் மக்களிடம் 5 ரூபாய் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் என்று மக்கள் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. மே 13-ம் நாள் மக்கள் வாக்களிக்கத் தீர்மானித்து விட்டனர். தேர்தல் நாள் நெருங்க நெருங்க கருணாநிதிக்கு பிரஷர் கூடிக்கொண்டே செல்கிறது. முதலில் இலங்கைப் பிரச்சனையில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல 4 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி மக்களிடம் அம்பலப்பட்டுப்போனார்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிரடியாக மேற்கண்ட கலர் கலர் பேருந்துகளின் கட்டணங்களை எல்லாம் வெள்ளை போர்டு பேருந்து கட்டணத்திற்கு குறைத்துவிட்டார் ஒரே ஒரு ரகசிய உத்தரவின் பேரில். இது தொடர்பாக மக்களுக்கு எந்த அறிவிப்பும் கூட செய்யவில்லை. திருட்டுத்தனமாக இப்படி விலை குறைப்பதால் வாக்குகள் தனது பெட்டிக்குள் நிரம்பிவிடும் என்ற நப்பாசைதான் காரணம். காலையில் வேறு வழியில்லாதவர்கள் டீலக்ஸ் பேருந்தில் ஏறி போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் கேட்கும்போது, அவர் வழக்கமாக கொடுக்கும் 10 ரூபாய் டிக்கெட் கொடுக்காமல் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்க மக்களுக்கு சந்தேகம் எழுந்து விட்டது. "ஏம்பா நான் தி நகர் போறேன் அதுக்குப்போய் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்குறீயே" என்று கேட்க. அப்புறம் நடத்துனரும் நகைப்புடன் இப்ப எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று சொல்ல. மக்கள் ஆகா கருணாநிதியின் நாடகமே நாடகம்தான்! என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆட்சியாளர்களை ஓட ஓட துரத்தும் வல்லமை படைத்தது ஓட்டு. இதனால் மனம் மாறினார் கருணாநிதி ஆனால் அவரது கலர்தான் மாறவில்லை!
நமது வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளாக அமையட்டும்! மத்தியில் மாற்றாட்சி அமைந்திட மூன்றாவது மாற்றை கொண்டுவர, வாக்குத் தவறிய ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணியையும், மதவாத பா.ஜ.க. கூட்டணியையும் புறமுதுகிட்டு ஓடவைப்போம்! தேசத்தை காக்கும் இடதுசாரிகளின் பங்கேற்போடு மத்தியில் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் தமிழகத்தில் அதிமுக அணிக்கு