April 29, 2009

ஒபாமாவுக்கு சாவேஸ் கொடுத்த புத்தகம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் "டெவில்-பேய்" என்று அழைக்கப்பட்டவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா, மாற்றத்தின் குறியீடாக சித்தரிக்கப்பட்டவர்.
இந்நிலையில் அமெரிக்க நாடுகளின் மாநாடு ஏப்ரல் 17-18 தேதிகளில், டோபாகோ-டிரீனிடாட்டில் நடைபெற்றது. இதில் 34 நாடுகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இம்மாநாட்டில் கியூபா மீதான தடையை நீக்கக்கோரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வேதனைகள்" (Open Veins of Latin America) என்ற புத்தகத்தை வழங்கினார்.
இப்புத்தகத்தை எழுந்து நின்று, கைகுலுக்கி சாவேசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒபாமா, "நான் நினைக்கிறேன் இது சாவேசின் புத்தகங்களில் ஒன்று என" கூறியதோடு, "என்னுடைய புத்தகம் ஒன்றை உங்களுக்கு கொடுக்கிறேன்" என நகைச்சுவையோடு கூறினார்.

இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த சில மணிநேரங்களில் "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வெதனைகள்" என்ற புத்தகத்தின் விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. உருகுவே எழுத்தாளரான இடுரானோ காலியானோவால் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் 1971-இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு 1972-ல் வெளிவந்தது.
அமேசான் டாட்காம் நிறுவனத்தின் வியாபார பட்டியலில் 54,295 இடத்தில் இருந்த இப்புத்தகம் 24 மணி நேரத்தில் 6வது இடத்திற்கு வந்து விட்டது, தற்போது இது இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது. ஒரே ஒரு வாரத்தில் இதன் விற்பனை உச்சத்திற்கு சென்று விட்டது. லட்சக்கணக்கான பிரதிகள் வெகு விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் இப்புத்தகம், கடந்த 500 ஆண்டுகாலமாக அமெரிக்கர்களாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளாலும் எப்படி ஒட்டச் சுரண்டப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து லோடு கணக்கில் தங்கமும், மலைபோல் வெள்ளியும், பெட்ரோலிய பொருட்களும், கோகோ, பருத்தி, ரப்பர், பழங்கள், அலுமினியம், நிக்கல், என்று அனைத்து கனிமவளங்களையும் எப்படி சுரண்டிச் சென்றனர் என்பதை விளக்குகிறது இப்புத்தகம். பல்வேறு கனிம வளங்களைக் கொண்ட லத்தீன் அமெரிக்காவில் மட்டும் 28 பேர் வசிக்கின்றனர். இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் துன்பப்படுவதோடு, மோசமான ஸ்லம் பகுதி என்று சொல்லக்கூடிய வகையிலான வாழ்க்கையையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வறுமையை லத்தீன் அமெரிக்க பகுதிகளில் ஏற்படுத்தியது யார் என்ற கேள்விக்கு அமெரிக்காவும் - பிரிட்டனும் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.
இப்புத்தகம் குறித்து சாவேஸ் கூறும்போது, "லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றைச் சொல்லும் இப்புத்தகம், வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு உதவுவதோடு, வரலாற்றை உருவாக்கிடவும் உதவுகிறது" என்று கூறுகிறார்.
மொத்தத்தில் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்கா கியூபாவின் சுவடுகளை பின்பற்றி வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்குவாடர் என்று வரிசையாக இடதுசாரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைக்கொண்டு உலகின் போராடும் சக்திகளுக்கு ஊக்க மருந்தாக திகழ்கிறது.
மறுபுறத்தில் உலக ஏகாதிபத்தியத்தின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றைக்கு ஆட்டம் கண்டுள்ளது. அதன் பணச்சூதாட்டம் அப்பாவி மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. கோட்டீஸ்வர நாட்டின் குடிமகன்கள் இன்றைக்கு வீதிகளில் கையேந்திக் கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்ட அமெரிக்காவும் அதன் எடுபிடிகளும் தற்போதைய நெருக்கடி குறித்து கள்ள மெளனம் சாதிக்கின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடியின் ஊடாக அதனை உணர்ந்துக் கொண்டுள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவை சுரண்டிய கைகள்தான் தற்போது 123-ஹைடு சட்டத்தின் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சுரண்டி திவாலான பொருளாதாரத்தை நிலைநிறுத்த துடிக்கிறது அமெரிக்காவும் - பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும். இதற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது காங்கிரசும் - பாஜகவும். எனவே இத்தேர்தலில் இவர்களை மூழ்கடிப்பதன் மூலமே தேசத்தை சுரண்டலிலிருந்து காப்பாற்ற முடியும். நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும் காஸ்ட்ரோ - சாவேசின் பாதையில் அடிவைக்கும் முதல் அடியாக மாறிட உங்கள் வாக்குகள் அதற்கு பயன்படும்.

2 comments:

மாதவராஜ் said...

பல் முக்கிய விஷயங்களுடன் கூடிய சிறப்பான பார்வை. வாழ்த்துக்கள் தோழரே!

சந்திப்பு said...

நன்றி மாதவ்