April 10, 2009

நவீன அடிமைகள்!

அதிகாலை 06.00 மணிக்கெல்லாம் பட்டாளத்தில் உள்ள வீரர்களைப் போல தலையில் மஞ்சள் கலர் ஹெல்மெட்டுகளை மாட்டிக் கொண்டு, கையில் பெரிய, பெரிய ஸ்டீல் பாத்திரத் தூக்குகளை தூக்கிக் கொண்டு ஆளுக்கும், காலுக்கும் சம்பந்தம் இல்லாத அழுக்கடைந்த சட்டைகளையும், பேண்ட்டுகளையும் அணிந்து கொண்டு வாயில் பீடியுடன் டாய்லெட் போவதற்கு உட்காருவதைப் போல் வரிசையாக உட்கார்ந்து காத்திருக்கின்றனர் தங்களை ஏற்றிச் செல்லும் பேருந்தின் வருகைக்காக. இனிமேல் இந்த வண்டி தேறாது என்ற நிலையில் டிராவல் ஏஜண்டுகளால் கைவிடப்பட்ட ஓட்டை - ஒடைசலான அந்த பேருந்துகள்தான் தற்போது இவர்களின் சொகுசு வாகனங்கள்.
யார் இவர்கள், எதற்காக இவர்கள் இப்படி காத்திருக்கின்றனர் என்ற கேள்வி மேலிடாமல் இல்லை. இவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள். பீகார், சட்டீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் கூலித் தொழிலாளர்களாக, காண்ட்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம், எம்.ஆர்.எல்., திருவொற்றியூர் - எண்ணூரில் உள்ள இரும்பு ஆலைகள், சென்னை பெருங்குடியில் உள்ள நவீன ஐ.டி. கட்டிடங்களைக் கட்டும் தொழிலாளர்களாகவும், சாலைகளை தோண்டி புதுப்பிக்கும் தோழர்களாகவும், பாதாள சாக்கடை முதல் அனைத்து கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபடும் புதிய ரக பிசாசுகளைக் (முதலாளிகள் இவர்களை இப்படித்தான் அழைக்கின்றனர்)கண்டுப்பிடித்துள்ளனர் நமது காண்ட்டிராக்டர்களும், முதலாளிகளும்.
நாள் முழுவதும் வற்றலும், தொற்றலுமாக - எலும்பும், தோலுமாக இருக்கும் அந்த தொழிலாளர்கள் குறைந்தது 12 நேரத்திற்கு மிகாமல் வேலை செய்கின்றனர். அதுவும் கடினமான வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். நமக்கெல்லாம் மாதத்திற்கு 30 நாட்கள் என்றால், இவர்களுக்கு மட்டும் 50 நாட்கள். என்ன வித்தியாசமாகத் தெரிகிறதா ஆம் அப்படித்தான் கணக்கு. இவர்களுக்கு ஒரு மாதக் கணக்கு என்றால் 50 நாட்கள் என்று அர்த்தம். இந்த 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி எவ்வளவுத் தெரியுமா? 4000 முதல் 4500 வரை மட்டுமே. 17-18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட அடிமைகள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவார்கள். கப்பலில் கையிலும், காலிலும் விலங்குகள் பூட்டப்பட்டு பல்வேறு அடுக்குகளை அமைத்து அதில் கட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் பல அடிமைகள் நோய்வாய்ப்பட்டோ, அல்லது துன்புறுத்தப்பட்டோ இறப்பதும் நடக்கும். அப்போதுகூட பக்கத்தில் அவரது கையில் இணைக்கப்பட்டுள்ள கைதிகள் அந்த பிணத்துடனேயே பயணம் செய்ய வேண்டி வரும். சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் கப்பல் முழுவதும் வீசும். அந்தக் காட்சிகளைத்தான் தற்போது சென்னை மாநகரமும், தமிழகத்தின் முக்கிய நரங்களும் சந்தித்து வருகின்றன என்றால் மிகையாகாது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கோவளத்திற்கும், கேளம்பாக்கத்திற்கும் புறப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேர் வெளி மாநில தொழிலாளர்களே! மறைமலை நகர் முதல் ஹுண்டாய் கார் கம்பெனி வரை பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காண்டிராக்ட் அடிமைகளாக இந்தத் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு பன்றி குடிசைகள் போன்று வெறும் தகர கொட்டாய்கள் அமைத்து ஒரு அறைக்கு 5 முதல் 10 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குளிப்பதற்கும், கழிப்பிடத்திற்கும் கூட போதுமான தண்ணீர் கூட கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அது மட்டுமா? ஒரு ரூபாய் அரிசியைக் கொண்ட இவர்களது காலம் ஓட்டப்படுகிறது. மேலும் இத்தொழிலாளர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள காலியிடங்களில் காலைக் கடனை கழிப்பதற்கு சென்றால் அங்குள்ளவர்கள் துரத்துவதும், கல்லால் அடிப்பதும்கூட நடக்கிறது. ஏன் இவர்களை ஊருக்குள்கூட செல்வதற்கு அனுமதிப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளும், காண்டிராக்ட் கொள்ளையர்களும் இவர்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. உண்மையில் கல்லைக் கொண்டு அடிக்க வேண்டியவர்கள் இந்த நவீன கொள்ளையர்கள்தான்.
பல இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் தொழிலாளிகள் விபத்துக்களால் மரணம் அடைவதும் நிகழ்கிறதாம். அப்படிப்பட்ட சூழலில் வேலை செய்யும் நிறுவனமோ? அல்லது காண்டிராக்டரோ பொறுப்பேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. பல மரணங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பதும் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் இதுபோன்ற வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இராயபுரத்தில் ஒரு திருமண மண்டபம் எடுத்து அங்கேயே 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்துள்ளனர். இத்தகைய நரக வாழ்க்கைகூட இந்தத் தொழிலாளர்களுக்கு சுகம் அளிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் ஒரிசாவிலும், பீகாரிலும், சத்தீஸ்கரிலும், இன்னும் பல மாநிலங்களில் உள்ள இதுபோன்ற சாதாரண உழைப்பாளி மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பையோ அல்லது பாதுகாப்பான வாழ்க்கையேயோ ஏற்படுத்திக் கொடுக்காத மாநில அரசுகளும், 60 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரசும், இதுபோன்ற தொழிலாளர்களை வைத்தே பில்லினியர்களாகவும், டிரில்லினியர்களாகவும் கணக்கை காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுமே இவர்கள் விஷயத்தில் முதல் குற்றவாளிகள்.
சென்னை உட்பட தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் இதுபோன்ற நவீன அடிமைகளாக பணிபுரிகின்றனர். உலகமயச் சுரண்டலுக்கு கிடைத்துள்ள நவீன பிசாசுகளாய் முதலாளிகள் இவர்களை பார்க்கின்றனர்.
60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எதை சாதித்தது காங்கிரசும், பா.ஜ.கவும். - இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய பா.ஜ.க. இன்றைக்கு அதனை அப்படியே மறந்து விட்டு, அத்வானி ஆட்சிக்கு வந்தால் ஐ.டி. துறையில் பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கிறார். இதுபோன்ற அடிமட்டத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். ஐ.டி. பார்க்கில் புல் வெட்டுவார்களா? புல் புடுங்குவார்களா? என்பது அத்வானிக்கே வெளிச்சம்.
ஏன் திமுக அரசு மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறது. சென்னையில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநில அரசின் தலைமைச் செயலகம் உருவாக்கும் பணியில் கூட இத்தகைய தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களது வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் தமிழக அரசு ஏதாவது உத்திரவாதம் செய்துள்ளதா? அல்லது முறையான கூலியை இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உத்திரவாதம் செய்துள்ளதா? என்ற கேள்வியை இந்த நேரத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அது மட்டுமா? எதிர்கால முதல்வர் என்றும், இளையவர் மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியான ரூ. 80 வழங்க வேண்டும் என்று போராடிய போது, போராடியவர்களைப் பார்த்து, இவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்றும், புரோக்கர்களாக செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். இதுதான் எதிர்கால முதல்வரின் கரிசனப் பார்வை! அதாவது மாநில அரசால் தீர்மானிக்கப்பட்ட சட்டக்கூலியைக் கூட ஒழுங்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல வேண்டியவர். கொள்ளையர்களுக்கு துணை போகும் போது, இவர்கள் எப்படி வெளி மாநிலத் தொழிலாளர்களை கண்டு கொள்ளப் போகிறார்கள். கண்டு கொள்வார்கள். ஒருவேளை இந்த தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் தரகர் வேலையைக் கூட திமுகவினர் எடுத்துள்ளார்களோ என்னவோ! என்ற சந்தேகமே மேலிடுகிறது.
மொத்தத்தில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் கடமையாற்ற, இவர்களுக்காக குரல் கொடுக்க, தமிழக தொழிலாளி வர்க்கம் எழவேண்டும். அப்போதுதான் இவர்களைப் பயன்படுத்தி சுரண்டும் இந்த கூட்டத்திற்கு வேட்டை வைக்க முடியும். ஓட்டு கேட்கும் காங்கிரசே, பா.ஜ.க.வே, திமுகவே உங்கள் ஆட்சிகளின் அலங்கோலமே மேற்கண்ட அவலம் என்று பறைசாற்ற வேண்டிய நேரமாகவே இதனை கருதுகிறேன்.

5 comments:

Anonymous said...

Neither ADMK nor DMK will bother about them. If the left is really interested in these labourers then it should do something.It should file a PIL. It should publish the list of contractors who are violating the rule. It should point out to the state govt. the violations of labours laws in constructing the new complexes for the govt. Government should ensure
that contractors and sub-contractors do not violate the laws and adequate wages are paid to these labourers.

In this election your party is with
ADMK. In future your party may join hands with DMK for another
election. Your party knows well that these parties have no concern for the labourers and are least bothered about the working class. Yet your party is wasting time and energy in supporting these parties and helps them to come to power.
In the process your party has lost its credibility.

Anonymous said...

very nice article exposing the current position of the national situations.All places the situations prevailing.Contract and casual laborer problems are touch the peak.no "messiah" has come to rescue them.
In near future no permanent jobs will be here.All contract workers going to work in the places.
But why no resistance has not been intensified by the Trade unions is the main questions.Still unanswered.
At least, in the late hours,after the election,will the THIRD FRONT TAKE UP THE ISSUE VIGOROUSLY TO BAN THE THINGS? CONTRACT /CASUAL LABORER METHODS
MUST BE ABOLISHED-R.SELVAPRIYAN-CHALAKKUDY

Anonymous said...

வெளி நாடுகளில் நாய்கள் போல் உழைக்கும் தமிழர்கள்?

ஹரிகரன் said...

தமிழகத்தில் பீகாரிகளும் ஒரிஸ்ஸாவிலிருந்தும் வந்து வேலை செய்வது போல தமிழர்கள் வேறு மானிலங்களில் கொத்தடிமைகளாக உள்ளனர், அதாவது உள்ளூர் காரனை வேலைக்கு வைத்தால் “டிமாண்ட்” செய்வான் என்று சுரண்டலுக்கு புதிய அணுகுமறைகளை கண்டுபிடித்துள்ளனர். உழைப்பைத்தவிர இவர்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.

சந்திப்பு said...

அனைவருக்கும் நன்றிகள்