நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கவுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசும், ஆட்சியை இழந்த பா.ஜ.க.வும் - இரண்டையும் நிராகரித்து மக்களுக்கான மாற்றை முன்வைக்கும் இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் முக்கோணமாய் மோதிக் கொண்டிருக்கின்றன.
தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று வாக்காளர்களை சிந்திக்க வைப்பதற்கு மாறாக, பா.ஜ.க.வும் - காங்கிரசும், அத்வானிக்கும் - மன்மோகன் சிங்குக்கும் இடையில் நடைபெறும் குடும்பச் சண்டையாய் மாற்றிவிட்டன.
கடந்த ஐந்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலம் பற்றி பா.ஜ.க. இதுவரை வாயே திறக்கவில்லை. மறுபுறத்தில், காங்கிரசும் பா.ஜ.க. எப்படியெல்லாம் பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயலாற்றியது என்பதைப் பற்றியும், அதன் மதவெறியால் நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டது குறித்தும் வாய் திறக்கவில்லை. இரண்டும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகளல்லவா?
மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும்? எனவே, பக்குவமாய் திசை திருப்பினார் அத்வானி. தொடையை தட்டிக் கொண்டு 'மன்மோகன் சிங் லாயக்கற்றவர் - வீக்கானவர்! என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா' என்று மல்லுக்கட்ட. தேர்தல் விவாதமே திசை திருப்பிப் போனது.
அப்புறம் என்ன? பதிலுக்கு மன்மோகன் - 'என்னுடன் விவாதிப்பதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது' என்று கேட்க,
அடுத்த கட்டத்தில் அத்வானி, 'காங்கிரஸ் கிழக்கட்டைகளின் கட்சி என்று சொல்ல,' பதிலுக்கு ராகுலும், பிரியங்காவும் பரிதாபமாக 'நாங்கள் எல்லாம் கிழமா?' என்று அப்பாவித்தனமாக அத்வானியைப் பார்த்து கேட்டது.
அத்தோடு விட்டாரா அத்வானி, 'மன்மோகன் ஒரு தலையாட்டி பொம்மை, சோனியாவால் ஆட்டிவிக்கும் பொம்மை. சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்' என்று கூற,
இதுவரை சும்மா இருந்த அம்மையார் சோனியா களத்தில் இறங்கி, 'அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. உன்னால் எதையும் சொந்தமாக கழட்ட முடியாது' என்று ஒரு குண்டை வீச...
இந்தக் களோபரத்தில் குழம்பிப்போன மன்மோகன் தான் ஒரு ஞான சூன்யம் என்பதை நிரூபித்து விட்டார். நேற்றைய தினம் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, "மாநில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவை. இதனால் தேசிய கட்சிகள் பாதிக்கப்படுகிறது. நிலையான ஆட்சிக்கு மாநில கட்சிகள் உதவாது" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.
என்னதான் இருந்தாலும் மன்மோகன் சிங் ஒரு உலகவங்கி உருவாக்கிய சித்தாந்தத்தின் கையாள்தானே. அவருக்கு இந்தியாவின் அரசியல் அமைப்பு பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ என்ன பெரிதாக கவலை இருந்து விடப்போகிறது. அமெரிக்காவும், அந்நிய மற்றும் உள்நாட்டு பன்னாட்டு - பெரும் நிறுவனங்கள் தாங்கள் விரும்புகிறபடி கொள்ளையடிப்பதற்கு ஒரு நிரந்தரமான ஆட்சி தேவை. அதற்கு ஏற்ப ஒரு நிரந்தர ஆட்சி தேவை என்ற கனவைதான் மன்மோகன் இப்படி கொட்டியுள்ளார்.
ஐய்யா டாக்டர் மன்மோகன் சிங். இதற்காகவே காங்கிரசை மக்கள் மீண்டும் புதை குழியில் தள்ளுவார்கள். "இந்தியா ஒரு கூட்டாட்சி ஜனநாயக நாடு. இது பல நாடுகளைக் கொண்ட ஒரு நாடுதான்." பல்வேறு கலாச்சாரம், மொழி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போன்றவற்றைக் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடு." எனவே, இந்த நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப, அந்தந்த மக்களின் நலன்களை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் நாள்தோறும் தோன்றுவது இயல்பானது. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ? அல்லது மக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் பின் மக்கள் நிற்பார்கள். இதுதான் ஜனநாயகம்!
ஆனால் மன்மோகன் இது புரியாமல், தான் மன்னராவதற்கு மாநில கட்சிகள்தான் தடையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு. மாநில கட்சிகள் மீது பாய்ந்துள்ளார். அதாவது கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவையும், பல மாநிலங்களையும் ஆண்ட கட்சிதான் காங்கிரஸ். அதனால்தான் நாட்டில் உண்மையில் ஏற்படவேண்டிய வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலையில் துவங்கி, பசியோடும், பட்டினியோடும், சத்தாண உணவுகள் கிடைக்காமையாலும் நோயாலும் மடிந்து வருகின்றனர் இந்திய மக்கள். ஒரே சீரான கல்வியை இந்தியாவில் இதுவரை அரசாண்ட காங்கிரசால் வழங்க முடியவில்லை. தொழில் வளர்ச்சியும் அதே கதிதான். இதனால் உருவானதே வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் பிரச்சனைகள் துவங்கி காஷ்மீர் வரையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ்தான். எனவே, யார் வளர்ச்சிக்கு மத்தியில் தடையாக இருந்தார்களோ அவர்களே தற்போது மாநில கட்சிகள்தான் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்று மண்ணை அள்ளிப் போடுவது எதனால்?
காங்கிரசுக்கும் - பா.ஜ.க.வுக்கும் மூன்றாவது மாற்றாக மாநில கட்சிகள் பெரும் சவாலாக உருவெடுத்து ஒரு கட்சி ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டதும். ஒரு உண்மையான கூட்டாட்சி மலர்வதற்கு வழி ஏற்படுத்தியதுமே காங்கிரசுக்கு வயிற்றெச்சல் அதனைத்தான் மன்மோகன் உளறிவிட்டார்.
தமிழகத்தில் உள்ள பாண்டிய மன்னன் கருணாநிதி, எப்போதும் மாநில சுயாட்சிக்கு தான் உறுதியாக பாடுபடுவதாக மார்தட்டுவார். இப்போது மன்மோகன் சிங் மாநில கட்சிகளே கூடாது என்கிறாரே என்னப் பன்னப் போகிறார்? கட்சியை காங்கிரசுடன் இணைத்து விடப்போகிறாரா? அல்லது நானே வீராதி வீரர் என்று கவிதை வசனம் எழுதி மாநில சுயாட்சியை காக்கப் போகிறாரா? மதுரையில் உள்ள பாண்டிய மன்னரைப் பற்றியே சதா காலமும் யோசிக்கும் கருணாநிதிக்கு மாநில சுயட்சி பற்றிதான் கவலை எழுமா என்ன!
மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி ஒதுக்க வேண்டும் என்று சும்மா உதார் விடும் கருணாநிதி, தனது அரசாட்சியின் கீழ் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு வெறும் 9 சதவிகிதம் மட்டுமே பிச்சைப் போடுகிறார். இவர்தானே மன்மோகனை எதிர்த்து விடப்போகிறார்! இவரது வீராப்பு எல்லாம் பாண்டியர்கள் மீதுதான் இருக்குமே ஒழிய மன்மோகன் மீது இருக்காது!
1 comment:
எப்படியெல்லாம் காங்கிரசும் பிஜேபியும் நாடும் மக்களும் சந்தித்துக்கொண்டுள்ள பிரட்சினைகளை திசை திருப்புகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். இரண்டு கட்சிகளும் பேசி வைத்துக்கொண்டு இப்படிச் செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.உலக வங்கி சித்தாந்தத்தின் அடியாளான மன்மோகனும் ஆர் எஸ் எஸ்ஸின் அடியாளான அத்வானியும் மோதிக் கொள்ளும் குத்துச் சண்டையாக தேர்தலை நினைக்கிறார்கள். கருணாநிதி இதுவரை கரிகால் சோழன் என்று நினைத்து வந்தார்.சோழப் பரம்பரையில் பிறந்த பாண்டிய மன்னனாக தனது மகன் பால்குடிக்கும் பிள்ளை, அஞ்சாநெஞ்சர் அழகிரியை பார்க்கிறார் கருணாநிதி. மக்கள் நீ சோழனும் இல்லை உன் மகன் அழகிரி பாண்டியனும் இல்லை என்று சொல்லப்போகிறார்கள்.
Post a Comment