March 14, 2009

இலங்கை உள்ளும்-புறமும்; அ. மார்க்ஸ் நேர்காணல்

பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளிவரும் "புத்தகம் பேசுது" மார்ச் மாத இதழில் இலங்கை பிரச்சனை குறித்து இடதுசாரி சிந்தனையாளரான அ. மார்க்சிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் தற்போதைய இலங்கையின் பன்முகப் பரிமாணங்களை புரிந்து கொள்வதற்கும்; தீர்விற்கான எல்லைகளை எட்டுவதற்கும் பயன்படும் என்ற முறையில் சந்திப்பில் இதனை பதிவேற்றியுள்ளேன்.
புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை
அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம்

அ. மார்க்ஸ்


“சுய நிர்ணய உரிமை என்பது எந்த மக்கள் சம்பந்தப்பட்டதோ அந்த மக்கள் சுயமாக நிர்ணயிப்பதுதான்; இங்கிருந்து நாம் நிர்ணயிப்பது அல்ல’’-. எனக் கூறும் பேரா. அ. மார்க்ஸ் ஈழ அரசியல், இலக்கியத்தின் மீது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனம் செலுத்தி வருபவர். அவரது கவனக்குவிப்பை டானியல் கடிதத் தொகுப்பை வாசிக்கும் போது நம்மால் அவதானிக்க முடியும்.

மனித சங்கிலி கடையடைப்பு தீக்குளிப்பு என தமிழகத்தை கொதிநிலைக்கு கொண்டு செல்ல எத்தனிக்கும் அரசியல் சூழலில் புத்தகம் பேசுதுக்காக அவரை சந்தித்து உரையாடலிலிருந்து...


சந்திப்பு : சிராஜீதீன் : படங்கள் : பன்னீர் செல்வம்


நான்காண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜா ‘தீராநதி’ நேர்காணலில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது எனச் சொல்லியிருந்தார். அவர் சொல்லிய காலம் ஈழத்தில் போர் நிறுத்த காலம். மீண்டும் போர் உக்கிரமடைந்திருக்கிற இன்றைய சூழலில் அவருடைய கூற்றை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள்?

புஷ்பராஜா அப்படி சொல்லியிருந்தால் ரொம்பவும் வேதனையோடுதான் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவர் அவர். சித்திரவதைகள், சிறைவாசம், அகதி வாழ்க்கை என எல்லாத் துயரங்களையும் இதற்கெனவே அனுபவித்தவர். கண்முன்னே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைக் கண்டு மனம் நொந்தவர். என்னைப் பொருத்தவரையில் ஈழப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது எனச் சொல்வதைக் காட்டிலும் தேக்கமடைந்துள்ளது எனச் சொல்லலாம். போராட்டத்தின் வெற்றி தோல்வியை நடக்கும் போரை மட்டும் வைத்துச் சொல்ல முடியாது. தவிரவும் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை விடுதலைப்புலிகள் நடத்துகிற போருடன் மட்டுமே சமப்படுத்தி விடவும் முடியாது. இன்றையப் போரின் முடிவுக்குப் பின் வரப்போகிற தீர்வு எப்படிப்பட்டதாயினும் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர், உடைமை இழப்புகள், குடும்பச் சிதைவுகள், அகதி வாழ்க்கை ஆகியவற்றின் மீது அமைக்கப்படுவதுதான் அது. இந்தத் தியாகங்களின் மூலம் சிங்களப் பேரினவாத அரசின் இன அடக்குமுறைகளின்பால் உலகின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வின் அவசியம் உணர்த்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியல் சட்டம் மற்றும் அதன் மீது இயற்றப்பட்ட திருத்தங்களின் ஊடாக அது ஒரு பவுத்த மதச் சார்பான, சிங்கள மொழியை முதன்மைப்படுத்துகிற அரசாக, அதன் மூலம் அங்குள்ள இதர மொழி, மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கிற சாசனமாக மாற்றப்பட்டுள்ளநிலை உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்த வகையில் ஈழப் போராட்டத்தை நாம் தோல்வி எனச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

பின் எந்தப் பொருளில் புஷ்பராஜா அப்படிச் சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்?

சுதந்திரத் தமிழ் ஈழ நாடு என்கிற வேட்கையோடு ஆயுதத்தை உயர்த்தியவர்கள் அவர்கள். இன்று அந்தக் கோரிக்கை பின்னுக்குப் போய்விட்டது என்கிற அடிப்படையில் அவர் இதைச் சொல்லியிருக்கலாம்.

ஈழ விடுதலை, தனி ஈழத்தை அங்கீகரித்தல் முதலான முழக்கங்களுடன் தானே இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன? இந்த முழக்கங்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கிறதே ஒழிய ஈழத்தில் இன்று யாரும் இதைச் சொல்வது கிடையாது. விடுதலைப் புலிகள் உட்பட இதுவே இன்றைய நிலை. இந்த ஆண்டு மாவீரர் நாள் உரையின்போதோ, சென்ற ஆண்டிலோ பிரபாகரன் தனி ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தவர், முஸ்லிம்கள், தலித்துகள் எல்லோருடைய கருத்துகளும் இன்று மாறியுள்ளன. ஒற்றைத் தனி ஈழம் என்கிற கோரிக்கைக்கு இவர்களிடமும் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு இணைந்த தனி ஈழத்தை வென்றெடுப்பது என்பது 1975_1985 காலகட்டத்தில் உருவான கோரிக்கை. அதற்குப்பின் இன்று உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1990களுக்குப் பிந்திய உலகில் பல்வேறு மக்கள் குழுக்கள் தம் அடையாளங்களை உறுதி செய்தல், அந்த அடிப்படையில் கோரிக்கைகள் வைத்தல் என்பது உலகெங்கும் பொதுவாகிவிட்டது. நேபாளத்தை எடுத்துக் கொண்டீர்களானால் அதற்குப் பின்தான் ஜன ஜாதியினர், தலித்துகள், மாதேசிகள் முதலானோர் தம் அடையாளங்களை வற்புறுத்தி கோரிக்கைகள் வைத்தனர். ஆயுதந்தாங்கியப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தவர்களாயினும் மாவோயிஸ்டுகள் இந்த நிலையை ஏற்றுக்கொண்டு தமது திட்டத்தை அதற்கு ஏற்றாற்போல அமைத்துக் கொண்டனர். அதே நிலை இன்று ஈழத்திலும் ஏற்பட்டுள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இதை இல்லை எனச் சொல்பவர்கள் கண்ணை மூடிக்கொண்ட பூனையை ஒத்தவர்கள்தான். இது ஒரு வரவேற்கத்தக்க நிலை என்றுதான் கருதுகிறேன். ஏனெனில் தேசிய இனம் என்கிற பேரடையாளத்தை இறுக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் கட்டமைக்கும்போது வர்க்கம் உள்ளிட்ட பல்வேறு சிறு அடையாளங்கள் அதன்மூலம் ஒடுக்கப்படும். எந்தத் தேசிய இனமும் மற்ற தேசிய இனத்தை மட்டுமல்ல, உள்ளே உள்ள பல உட்பிரிவினரையும் ஒடுக்குவதாகத்தானே இருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதையும் புலிகளும், புலி ஆதரவாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அடையாள உறுதியாக்கத்தைப் புரிந்து கொள்ளாததோடு மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுவதற்கு வழி வகுப்பதாகவே புலிகளின் செயற்பாடுகள் அமைந்தன.

வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. ‘எக்ஸில்’ என்றொரு இலக்கியப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர். ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகிறார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “தனி ஈழம்’’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்கிற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது.

எழுபது, எண்பதுகளில் எப்படி இதையெல்லாம் மறந்து ஒற்றைத் தனி ஈழம் என்கிற கோரிக்கை வந்தது?

தேசிய இனக் கோரிக்கைகள் என்பன எப்போதுமே ஒரு சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரால்தான் முன்வைக்கப்படுகிறது. உணர்ச்சிபூர்வமாகப் பின் அது கீழேயும் கொண்டு செல்லப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தி (1948) அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் பேரினவாதத்தை நோக்கிச் சென்றன. தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அந்த வகையில் அங்கே ஓர் இன ஒடுக்குமுறை இருந்தது. இது தேசிய இன உணர்வைக் கீழே கொண்டு செல்கிற முயற்சிகளுக்குப் பக்கத்துணையாக இருந்தது. ஆனால், எல்லாக் காலங்களிலுமே ஈழச் சமூக உருவாக்கம் என்பது ஒற்றைத் தன்மையுடையதாக இருந்திருக்கவில்லை. உள் வேறுபாடுகளும் யாழ்ப்பாண மேலாதிக்கம் குறித்த அச்சமும் எப்போதும் பிறரிடம் இருந்து வரத்தான் செய்தது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என அறியப்படுகிற ஈழத்தமிழறிஞர் கா. சிவத்தம்பியின் ‘இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைப்பின் சில அம்சங்கள்’ என்கிற கட்டுரையை (1979) வாசித்துப் பாருங்கள். இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களிடையே குறைந்தபட்சம் கீழ்க்கண்ட பிரிவுகளைச் சொல்லுவார்.

1. பெருந்தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்கள் _ இவர்கள் என்றைக்கும் தனி ஈழக் கோரிக்கைக்குள் வந்தது கிடையாது.

2. இலங்கைச் சோனகர் _ தமிழ் மட்டுமே பேசுகிற முஸ்லிம் தமிழர்களைத்தான் பேராசிரியர் இப்படிச் சொல்லுகிறார்.

3. கிழக்கு மாகாணத் தமிழர் _ இவர்களை மட்டக்களப்புத் தமிழர் என்றும் பேராசிரியர் சொல்லுவார்.

4. வட மாகாணத் தமிழர்கள் _ இவர்களையும், பேராசிரியர் இரண்டாகப் பிரிப்பார். அவை (அ) வன்னி, மன்னார் மாவட்டத் தமிழர்கள் (ஆ) யாழ்ப்பாணத் தமிழர்கள்


புவியியல், பொருளியல் ஒழுங்கமைப்பு, சமூகக் கட்டுமானம், அபிவிருத்தி மட்டம் என்கிற அடிப்படைகளில் இந்தப் பிரிவினை செய்யப்படுவதாகப் பேராசிரியர் குறிப்பிடுவார். பேராசிரியரின் கவனத்திற்கு வராத, ஆனால் வந்திருக்க வேண்டிய இன்னொரு முக்கியப் பிரிவு பஞ்சமர்கள் எனச் சொல்லப்படும் தலித் மக்கள். இவர்களின் தனித்துவம், இவர்கள் மீது மற்ற தமிழர்களால் கடைபிடிக்கப்பட்ட கொடுந் தீண்டாமை ஆகியவற்றை அறிய டானியல் எழுத்துக்களைப் படியுங்கள். தேசிய இனப் பிரச்சினையில் இவர்களின் இடம் குறித்து டானியல் தனது கடிதங்களில் விரிவாகப் பேசியுள்ளார். டானியல் கடிதங்கள் நூலில் அவற்றைப் பார்க்கலாம். பேராசிரியரே 30 ஆண்டுகளுக்குப் பின்னால் _ இன்று _ இக்கட்டுரையை எழுதியிருப்பாரேயானால் தலித்களையும் தனியாகச் சுட்டிக்காட்டியிருப்பார். இல்லையா?

யாழ்ப்பாண மேலாதிக்கம் குறித்த அச்சத்தின் காரணமாக வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்த ‘இதர தமிழர்கள்’ தம் மக்கள் நலன் என்று கூறி சிங்கள அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத் தமிழர் ஆதிக்கம் வகித்த தமிழர் கட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதே வரலாறு. மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான செ. இராஜதுரை, தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தபோது ‘கிழக்கு மாகாணத் தமிழரின் அபிவிருத்திக்காக’ இப்படிச் செய்வதாகக் கூறினார். இதைச் சுட்டிக்காட்டும் சிவத்தம்பி, “தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மொழிப் பிரச்சினையோ, வகுப்புவாதப் பிரச்சினையோ மட்டுமல்ல’’ என்பார். மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமானும் இப்படிச் சொல்லித்தான் அரசில் அங்கம் வகித்தார். டொனமூர் குழு அறிக்கை அமலுக்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் முன்னின்று நடத்திய ‘தேர்தல் பகிஷ்கரிப்பில்’ மட்டக்களப்புத் தமிழர்கள் பங்கு பெறவில்லை. ஈ.ஆர்.தம்பிமுத்துவை அரசாங்க சபைக்கு அவர்கள் தேர்வு செய்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பைப் பற்றிச் சொல்ல வரும்போது, “இது இந்திய சுயராஜ்ஜிய இயக்கத்தின் அருட்டுணர்வால் ஏற்பட்டது’’ எனப் பேராசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது. வடக்கு, கிழக்கு இரு பகுதிகளிலும் சாதி முறை, தேச வழமைச் சட்டங்கள், பொருளாதார ஒழுங்கமைப்பு _ கிழக்கு மாகாணம் பெரும்பான்மையாக விவசாயத்தைச் சார்ந்தது _ எனப் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளை எல்லாம் மீறி பேரினவாத ஒடுக்குமுறையினூடாக ஓர் ஒற்றுமை ஏற்பட்டது வரவேற்கத்தக்கதுதான். இந்த வேறுபாடுகள் உணர்ந்து, அங்கீகரிக்கப்படுவதன் மூலமாகத்தான் இந்த ஒற்றுமை தக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்தது வேறு. அதன் விளைவே இன்றைய தேக்கம்.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இங்குள்ள தமிழ் தேசியர்களிடம் பெற்ற ஆதரவு அளவிற்கு ஈழத்தில் இப்போதுள்ள மக்களிடம் விடுதலைக்கான ஆதரவு இருக்கும் என நினைக்க வாய்ப்பு இருக்கிறதா?

நானறிந்தவரை இன்று ஈழத்தின் பல பிரிவு மக்களின் மனநிலையும் எவ்வாறு உள்ளது எனச் சொன்னேன். வெறும் ஊகமாக அல்ல எனக்குள்ள அனுபவங்கள், வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்கிறேன். எந்தத் தீர்வுக்கும் முன்னால் ஒரு கருத்துக்கணிப்பு, பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். முப்பதாண்டு காலமாகப் போர் நடந்து கொண்டுள்ள ஒரு நாட்டில் அப்படியான கருத்துக் கணிப்பு உடனடிச் சாத்தியமில்லை என்பது உண்மைதான். தவிரவும் அதை வெற்றி போதையிலிருக்கும் பேரினவாத அரசின் கீழ் நடத்தக் கூடாது. ஐ.நா. சபை அல்லது மேலாதிக்க நாட்டமில்லாத லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளின் கண்காணிப்பின்கீழ் இதை நடத்தலாம். இப்போது நான் குறிப்பிட்ட பல்வேறு தமிழ்ச் சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் உள்ளடக்கப்பட வேண்டும். எங்களைத் தவிர வேறு யாரையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை தங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவைக் கணக்கில் கொண்டாவது புலிகள் விட்டுக் கொடுக்க வேண்டும். இங்கேயுள்ள தமிழ்த் தேசியர்களைப் பற்றிக் கேட்டீர்கள். அவர்கள் பெரும்பாலும் புலிகளின் ஆதரவாளர்கள். புலிகளின் பக்தர்கள். புலிகளின் முகவர்கள். புலிகள் = ஈழத் தமிழர் என்கிற சமன்பாட்டை உருவாக்கிச் செயற்படுபவர்கள். ஈழத் தமிழ்ச் சமூக அமைப்பு, போராட்ட வரலாறு, இன்றைய உலகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி எல்லாம் எந்தக் கவலையுமின்றி ‘கடைசியாக தேசியத் தலைவர் எதையாவது செய்து வெற்றி பெற்று விடுவார்’ என்கிற நம்பிக்கையில் திருப்தியாக இருப்பவர்கள். இவை குறித்தெல்லாம் சிந்திக்கிறவர்கள்தான் எஞ்சியுள்ள தமிழர்களின் இன்றைய நிலை குறித்து எந்த நம்பிக்கையும் சாத்தியமின்றி வேதனைப்பட வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் 83ல் இருந்த ஈழ எழுச்சியையும் தற்சமயம் உள்ள எழுச்சியையும் வித்தியாசப்படுத்த முடியுமா?

நிச்சயமாக. 1983 இனப் படுகொலையை ஒட்டி தமிழகமே அன்று கொந்தளித்திருந்தது. இன்றும் போரினூடாக அங்கே நடைபெறும் இனப் படுகொலைகள் பற்றி தமிழகம் கொந்தளித்திருந்தாலும் அன்றுள்ள அரசியல் சூழலும் இன்றுள்ள நிலையும் வேறுபட்டுள்ளன. அன்று புலிகள் மட்டுமல்ல, டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப். இன்னும் சில இடதுசாரிக் கொள்கை உடைய என்.எல்.எப்.டி. போன்ற அமைப்புகள் எனப் பலரும் அப்போது இயங்க வாய்ப்பிருந்தது. தமிழ் மக்கள் எல்லோருக்கும் உதவினர். அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளுடனும் உறவு கொண்டிருந்தன. உதவிகள் புரிந்தன. ஈழப் போராட்ட அமைப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈழ விடுதலை குறித்த கருத்தொருமிப்பு இருந்தது. 1985 ஜூலையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்களுடன் மட்டும்தான் பேச வேண்டும் என்கிற நிபந்தனையைப் பிரபாகரன் விதிக்கவில்லை. “திம்புக் கோட்பாடுகள்’’ எனக் கூறப்படுகிற நான்கு அம்ச கூட்டறிக்கை ஒன்று எல்லாத் தரப்பும் பங்குபெற்ற “தூதுக்குழுவால்’’ முன்வைக்கப்பட்டது. இத்தகைய பொதுக் கருத்தின் அடிப்படையில் தமிழக மக்களின் ஆதரவும் பொதுவாக இருந்தது. எல்.டி.டி.ஈ. ஆதிக்கம் மிக்க ஒரு இராணுவ சக்தியாக மாறியபோது படிப்படியாகப் பிற இயக்கங்கள் அழித்தொழிக்கப்பட்டன. முதலில் ‘டெலோ’ தாக்கி அழிக்கப்பட்டது. அதன் தலைவர் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்டார். 1986 இறுதிக்குள் ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’, ‘பிளாட்’ ஆகிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிடப்பட்டது. பத்மநாபா, உமாமகேஸ்வரன் எல்லோரும் கொல்லப்பட்டனர். யாரும் யாரையும் கொல்கிற, கடத்துகிற ஒரு கொடிய சூழல் அதன்பின் உருவானது. மாற்றுக் கருத்துகள் வேரறுக்கப்பட்டன. புலிகளின் கருத்தே பொதுக் கருத்து என்பதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் களத்தில் நிற்கிறவர்கள் அவர்கள்தானே...’’ என்றொரு ‘நியாயம்’ பேசி புலிகளின் எல்லாவிதமான மனிதஉரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ, மௌனமாகவோ ஆதரிக்கும் நிலையை இங்குள்ள புலிகளின் முகவர்கள் மேற்கொண்டனர். இன்று ஈழத் தமிழர்களின் பொதுக் கருத்து என்று ஏதுமில்லை. அப்படி ஏதும் சொல்ல முடியுமானால் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். சிவிலியன்கள் சுதந்திரமாகப் போர்ப் பகுதியிலிருந்து வெளியேறுவது அனுமதிக்கப்பட வேண்டும் என்பவைதான் பொதுக் கருத்தாக இருக்க முடியும். எனவேதான் இன்றைய ஆதரவு எழுச்சி போர் நிறுத்தம் என்கிற மட்டோடு நிற்கிறது. புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே தனி ஈழத்தை அங்கீகரி என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கின்றனர்.

தவிரவும் இன்றைய எழுச்சியில் இங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு அப்பட்டமான சந்தர்ப்பவாதத் தன்மையில் அமைகிறது. பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை எடுத்துக் கொண்டீர்களானால் காங்கிரசை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள். சத்தமில்லாமல் ஆறாவது உறுப்பினராக பா.ஜ.க.வின் இல. கணேசனும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். பா.ஜ.க தலைவர்களும், தா. பாண்டியனும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒரே மேடையில் தோன்றுகின்றனர். எந்தக் காரணம் கொண்டும் மதவாத, பாசிச சக்திகளுடன் கம்யூனிஸ்டுகள் கைகோர்க்க மாட்டார்கள் என்கிற பெருமையையும் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது. பல்வேறு கூட்டணிகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் யாரும் இங்கே அரசியல் பேசக் கூடாது என உத்தரவு போடுகிறார் நெடுமாறன். கட்சிக் கொடிகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடாது. சுவரொட்டிகளில் கட்சிப் பெயர்கள் போடக் கூடாது. ஆக ஈழப் போராட்ட ஆதரவு என்கிற பெயரால் இங்கே ஓர் அரசியல் நீக்கம் நடைபெறுவதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்கிற பெயரில் இங்குள்ள அரசியலுக்குத் துரோகம் இழைத்துவிடக் கூடாது. நெருக்கடி நிலை எதிர்ப்பு, நவ நிர்மாண் இயக்கம் என்கிற பெயர்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாரதிய ஜனசங்கை இணைத்துக் கொண்டது, நரேந்திர மோடியை முன்னிறுத்தியது ஆகியவற்றின் கொடிய விளைவுகளை நாம் ஒருமுறை சந்தித்தது போதாதா? இந்துக்கள் என்பதால்தான் ஈழத் தமிழர்களை உலகம் கண்டுகொள்ளவில்லை என்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழ் முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது என ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் மருத்துவர் ராமதாஸ். தமிழர்கள் என்றில்லாவிட்டாலும் இந்துக்கள் என்றாவது ஈழத் தமிழர்களுக்கு உதவலாமே என்கிறார் தொல். திருமாவளவன். எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகைத்த தா. பாண்டியன், அந்தக் கால தி.மு.க பாணியில் கனக விசயர் தலையில் கல்லேற்றிய பெருமை பேசுகிறார். “வீரமரணம் அடையத் தயாராகுங்கள்’’ எனத் தமிழ் இளைஞர்களை நோக்கி அறைகூவல் விடுக்கிறார். தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் முதலான சிறு அமைப்புகளுக்கு இதுகாறும் தலைமை ஏற்றுவந்த நெடுமாறன் பெரிய கட்சிகளை நோக்கித் திரும்பிவிட்டதால் இவர்கள் ஒரு கணம் தடுமாறி நிற்கின்றனர். சீமான் போன்ற உணர்ச்சிப் பேச்சாளர்களிடம் தஞ்சமடைகின்றனர். போர் நிறுத்தம் தவிர வேறு அம்சங்களில் இன்று பொதுக் கருத்து கிடையாது.


போர் நிறுத்தம் என்பது இரு சாராரையும் நோக்கி வைக்கப்பட வேண்டும்தானே?

ஆமாம். ஆனால், அதிலொரு அம்சத்தை நாம் கவனிக்கத் தவறலாகாது. இன்று புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளனர். வெளிப்படையாக அறிவிக்கவும் செய்கின்றனர். கடும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள அவர்கள் இப்படி கூறுவது தவிர வேறு வழியில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்துக் கொண்டுள்ள இலங்கை இனவாத அரசோ இந்த இறுதி வாய்ப்பை நழுவவிடத் தயாராக இல்லை. இதுதான் இன்றைய சூழலின் வேதனையான அம்சம். அரசியல் தீர்வுக்குத் தயார் எனச் சொல்லிக் கொண்டே, எந்தப் புதிய அதிகாரப் பரவல் திட்டங்களையோ, தீர்வையோ முன் வைக்காமலேயே புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை என்கிறது ராஜபக்ஷே அரசு. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தார்களானால் முடியாட்சி நீக்கப்பட வேண்டும் என்கிற பொதுக் கருத்து அங்கே உருவாகியிருந்தது. அரசியல் சட்ட அவைக்கான தேர்தல் என்கிற உடன்பாடு ஏற்பட்டது. அதற்குப் பின்னும்கூட ஆயுதங்களை அவர்கள் ஐ.நா. மேற்பார்வையில்தான் ஒப்படைத்தார்கள். இதுபோன்ற எந்தத் தீர்வுமின்றி ஆயுதங்களைப் போடச் சொன்னால் அது எப்படிச் சரியாக இருக்க முடியும்? குறைந்தபட்சம் கூட்டரசு ஆட்சி முறையை அனுமதிக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசியல் யாப்பின் பிரிவு 2 மற்றும் 76 ஆகியவற்றை ராஜபக்ஷே அரசு நீக்க ஆவன செய்ய வேண்டும். சிங்களம், தமிழ் தேவையானால் ஆங்கிலம் ஆகிய மூன்றும் அரசு கரும மொழிகள் என்றவாறு 18வது பிரிவு திருத்தப்பட வேண்டும். பவுத்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மை நிலை மறுக்கப்பட்டு இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடு எனப் பிரகடனப்படுத்தும் வகையில் 9ஆம் பிரிவு திருத்தப்-பட வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் தலித், முஸ்லிம் மக்களின் கருத்துகளை அறிய கருத்துக் கணிப்பு நடத்த ஒப்புதலளிக்க வேண்டும். இப்படியான ஒரு உருப்படியான தீர்வு திட்டமின்றிப் புலிகளை ஆயுதங்களைக் கீழே போடுங்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?

இன்னொன்றையும் நாம் மறக்கக்கூடாது. 30 ஆண்டுப் போரால் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அவலங்களின் சகல பரிமாணங்களும் இங்கே பேசப்படுவதில்லை. உடனடியாக அங்கே மிகப்பெரிய அளவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவம், கல்வி, மனித உரிமைகள் ஆகிய மூன்று அம்சங்களுக்குப் பிரதானம் அளித்து சர்வதேசச் சமூகம் களமிறங்க வேண்டும். இத்தகைய நிர்மாணப் பணியில் இந்தியாவுக்குப் பிரதான பங்கிருக்கிறது. ஒருவேளை புலிகள் மற்றவர்களுடன் சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படும் பட்சத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்காக பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற அபத்தக் கோரிக்கைகளை எல்லாம் இந்திய அரசு விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவது அந்தத் ‘துன்பியல்’ சம்பவத்திற்காக மட்டுமா அல்லது வேறு ஏதும் பொருளாதாரக் காரணிகள் உள்ளனவா?

தென் ஆசியாவில் ஒரு ‘தாதா’வாகவும் உலக அளவில் ஒரு வல்லரசாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பேராசையோடு இயங்கும் நாடு இந்தியா. இதை நான் ‘விரிவாக்க நோக்கம்’ என்று சொன்னால், அதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களோ என்னவோ. தொடக்கம் முதல் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகல் முறை இரட்டை நிலையுடனேயே இருந்து வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருபக்கம் இரு தரப்புக்கும் இடையில் சமாதான முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளையும் இன்னொரு பக்கம் போராளிக் குழுக்கள் எல்லாவற்றிற்கும் பயிற்சி மற்றும் ஆயுதம் அளிக்கும் வேலையையும் செய்தார் இந்திரா காந்தி. தமிழ் மக்களின் விதியை நிர்ணயிப்பதற்கு அவர்களைச் சம்பந்தப்படுத்தாமலேயே ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனாவுடன் செய்து கொண்டார் ராஜீவ் காந்தி. ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக ‘அமைதிப்படை’யை அனுப்பி கடும் மனித உரிமை மீறல்களுக்கும் அவர் காரணமானார். பெரும் இழப்புக்களுடனும், அவமானத்துடனும், தோல்வியுடனும் திரும்ப நேர்ந்தது இந்திய அமைதிப்படை. உச்சகட்டமாக அந்த ‘துன்பியல் சம்பவமும்’ நிகழ்ந்தேறியது. இந்தியாவின் இந்த விரிவாக்க நோக்கத்தில் அதன் பொருளாதார நலன்களும் அடங்கும். சிலவற்றை நானும் ஷோபா சக்தியும் முன்பே கூறியுள்ளோம். ஒரு வேளை போர் நின்று நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுமானால் பெரிய அளவில் அதில் இந்திய முதலாளிகள் பங்கு பெறுவார்கள். இந்தியா தலையிட்டு, தா.பா. மொழியில் பேசுவதானால் ஒரு ஏவுகணையை வீசி இலங்கையை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என இங்கே எழும்பும் குரல் இன்றைய உலகச் சூழல், இந்தியாவின் வெளியுறவு அரசியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமையின் விளைவே. சென்ற மாதம் சென்னையில், காங்கிரஸ் நடத்திய ஈழப் பிரச்சினை விளக்கக் கூட்டத்தில் இன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளிப்படையாக இதைப் போட்டுடைத்தார். காஷ்மீரில் நாங்கள் என்ன வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோமோ அதே வேலையைச் செய்யக் கூடாது என நாங்கள் எப்படி இலங்கை அரசிடம் கோர முடியும் என்று அவர் வெளிப்படையாகக் கேட்டார் அல்லவா? செப்டம்பர் 11க்குப் பின் மாறியுள்ள உலக நிலையை புலிகளும் சரி, புலி ஆதரவாளர்களும் சரி கண்டு கொள்வதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை.

சிங்கள இனவாத அரசுக்கெதிரான மக்களின் விடுதலை எழுச்சியைச் சிதைத்ததில் புலிகளின் பங்கு என எவற்றையெல்லாம் வரையறை செய்யலாம்?

நிறையத் தவறுகளை அவர்கள் செய்துள்ளனர். பிற இயக்கங்களை அழித்தது, கருத்துரிமையைப் பறித்தது, முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தவர் எல்லோரையும் அந்நியப்படுத்தியது, ராஜீவ் காந்தி கொலை மூலம் இந்திய அரசை நிரந்தரப் பகையாக்கிக் கொண்டது, ரணில் விக்ரமசிங்கேக்கு ஓட்டுப் போட வேண்டாமெனச் சொல்லி ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தது, ஈழப் போராட்டத்தின் மிகப்பெரிய ஆதரவுத் தளமான தமிழகத்தில் தமது முகவர்களாக உள்ளவர்களோடு மட்டுமே உறவைப் பேணி பிற ஜனநாயக, இடதுசாரி சக்திகளிடமிருந்து விலகி நின்றது என நிறையச் சொல்லலாம். குறிப்பாகப் போராட்டத்தை அவர்கள் வன்முறையாக மக்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். தமிழ் மக்களை கப்பம் மட்டும் செலுத்துபவர்களாகவும் வாய்மூடி ஆதரவளிப்பவர்களாகவும் மட்டுமே ஆக்கினார்கள். இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றுள்ள சூழலில் நாம் புலிகளை மட்டும் வைத்து பிரச்சினைகளை அணுகுவதைச் சற்றே ஒத்தி வைப்போம். 2000 புலிகளைக் கொல்வதற்கு 2 லட்சம் மக்களைக் கொன்றாலும் பரவாயில்லை என இலங்கை அரசு இன்று நினைக்கிறது. 2000 புலிகள் தப்பித்தாலும் 2 லட்சம் மக்கள் காப்பற்றப்படட்டும் என்கிற நோக்கில் நாம் போர் நிறுத்தம் என்கிற கோரிக்கையில் மற்றவர்களுடன் ஒன்றிணைவோம்.
தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த சிங்கள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இலங்கை இடதுசாரிகள் முன்வரவில்லை தானே?

கடந்த சுமார் 60 ஆண்டுகளாகவே ஒரு வகை இனம் சார்ந்த அரசியல் வடக்கிலும் தெற்கிலும் நிலவிய ஒரு சூழலில் இடதுசாரிகள் இரு புறத்திலும் பலவீனப்பட்டே இருந்தனர். 1975க்குப் பின் இரண்டு பக்கங்களிலும் தீவிர இன உணர்வுகள் வெளிப்பட்டபோது அவர்கள் முற்றிலுமாக அரசியற் களத்திலிருந்து நீக்கப்பட்டனர். இது ஒரு வேதனையான வருந்தத்தக்க நிகழ்வு. எனினும் இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகிவந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.

திராவிட, தமிழ் இயக்க மரபென்பது இயல்பாகவே பார்ப்பன எதிர்ப்புணர்வு கொண்டது என்ற நிலை மாறி பார்ப்பன ஆதரவு சக்திகளாக மாறிப் போயுள்ள நிலை இன்றைய ஈழ ஆதரவு இயக்கங்களில் வெளிப்படுகிறது எனலாமா?

திராவிட_தமிழ் மரபு என்பது இயல்பாகவே பார்ப்பன எதிர்ப்பு மரபு என்றெல்லாம் பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் இங்கே இருவிதப் போக்குகள் இருந்து வருகின்றன ஒன்று பார்ப்பனர்களை விலக்கி பிற மொழிச் சிறுபான்மையினர் எல்லோரையும் ‘திராவிடர்’களாக உள்ளடக்கும் போக்கு, பெரியார் மற்றும் இதர திராவிட இயக்கங்களை இதற்கு எடுத்துக்காட்டாய் சொல்லலாம். மற்றது மொழிச் சிறுபான்மையினரைப் பிரதான எதிரிகளாக நிறுத்தி பார்ப்பனர்களையும் தமிழர்களாக ஏற்கும் போக்கு. ம.பொ. சிவஞானம், பெங்களூர் குணா மற்றும் பல தமிழ்த் தேசிய இயக்கங்கள் இந்த வகையில் வரும். எனவே, தமிழ்த் தேசியம் என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என நாம் பொருள் கொள்ளக் கூடாது. தனித்தமிழ் பேசிய பலரும் கூட பண்பாட்டு அடிப்படையில் சைவத்தையும் இதர பார்ப்பனக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். இது தமிழ்ச்சூழலில். ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் கிடையாது. அந்த இடத்தில் அங்கே வேளாள ஆதிக்கமும் சைவமும் அமர்ந்து கொள்கின்றன. “யாழ்ப்பாணத்தில் எல்லாம் தமிழ் என்பது அவ்வளவு சரியானதல்ல. ஆதிக்கமுடைய வெள்ளாளச் சாதியினர் அவர்களுடைய குறித்த சில வர்க்கப் பண்புகளோடு, தமது தேவைகளையும் கோரிக்கைகளையும் தமிழர்களுடைய கோரிக்கைகளாக வெளிப்படுத்தினர் என்பதைக் காலம் மறுபடியும் நிரூபித்துள்ளது. காராளசிங்கம் இதனை ‘வெள்ளாள மேலாதிக்கம்’ எனக் குறிப்பிடுவார்’’ என்று நான் சற்று முன் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார். எனவே, தமிழ், தமிழ்க் கலாசாரம் முதலியவற்றை முன்னிறுத்தும்போது பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்பு முதலியன நீர்த்துப் போவதும் தமிழர்களை இந்துக்களாகப் பார்ப்பதும் வியப்புக்குரியதல்ல. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வெறும் மொழி மட்டுமே தேசிய இனத்தை அடையாளப்படுத்தி விடுவதில்லை என்பதற்கு தமிழை மட்டுமே பேசுகிற இலங்கை முஸ்லிம்களை இலங்கைச் சோனகர் என்பதாகப் பார்க்கும் நிலை ஒரு எடுத்துக்காட்டு.

சிங்களப் பெருந் தேசிய இனவாதம், தமிழ்த் தேசியவாதம் ஆகியன உருப்பெற்றதில் வரலாற்றின் பங்கு என்ன?

எல்லாத் தேசிய இன உருவாக்கங்களையும் போல இங்கும் வரலாறு முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக 18, 19_ம் நூற்றாண்டுகளில் உலகளவில் பிரபலமாக இருந்த ‘இனவியற் கோட்பாடு’ (ஸிணீநீவீணீறீ tலீமீஷீக்ஷீஹ்) இந்தியத் துணைக் கண்டத்தின் சம கால வரலாற்றில் பெரும் பங்கு வகித்துள்ளதை நான் எனது ‘ஆரியக் கூத்து’ நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 1788ல் வெளியான வில்லியம் ஜோன்சின் ஐரோப்பிய இந்திய மொழிகளுக்கிடையிலான அமைப்பு ரீதியான ஒற்றுமைகளை வெளிப்படுத்தி வந்த நூல் ஒரு மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘இந்தோ ஐரோப்பிய மொழிகள்’ என ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளும் ஒன்றாக, ஒத்தவைகளாக முன் வைக்கப்பட்டன. மொழிகளுக்கிடையேயான இந்த ஒற்றுமையை யாரும் மறுக்க இயலாது. ஆனால் தவறு எங்கே நடந்தது என்றால் மொழிகளுக்கிடையேயான இந்த ஒற்றுமை மொழி பேசும் மக்களுக்கிடையேயான ஒற்றுமையாகவும் நீட்டப்பட்டதுதான் பிரச்சினை. இவர்கள் ‘ஆரியர்’ எனக் குறிப்பிடப்பட்டனர். செமிடிக் அல்லாத ஐரோப்பிய _ இந்திய மக்களின் பொது மூலத்தைக் கூறும் இக்கோட்பாட்டை “வரலாற்றின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு’’ என ஹெகல் கூறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கருத்து பெரிய அளவில் பிரச்சாரமாவாதற்கு மேக்ஸ்முல்லர் உதவினார். பின்னாளில் தனது தவறுக்கு அவர் வருந்தினார் என்றபோதிலும், இன்று இனக் கோட்பாடு தவறு என ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த ‘ஆரிய இனக்’ கொள்கை உலகைப் பிடித்தாட்டியது. ஆரிய மேன்மைக் கொள்கையின் அடிப்படையில் ஹிட்லர் உருவாக்கிய பாசிசக் கொள்கை, யூத இன அழிப்பு, இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றை நாம் மறந்துவிட இயலாது. முல்லரின் கருத்துக்கு இலங்கையில் சிங்கள அறிஞர்கள் மத்தியிலும் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் 1856ல் கால்டுவெல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தி இன்னொரு பெரும் அரசியல் எழுச்சிக்கு வித்திடுகிறார். ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து அனைத்து வகைகளிலும் வேறுபட்ட ஓர் உள்ளூர் மொழிக் குடும்பமாக இது கருதப்பட்டது மட்டுமல்ல, இம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘திராவிடர்கள்’ எனக் கருதப்பட்டனர். திராவிடர்கள் உள்நாட்டுப் பூர்வ குடியினர், சிந்து சமவெளிக் கலாசாரம் அவர்களுடையது. படை எடுத்து வந்த ஆரியர்கள் அவற்றை அழித்தனர். இராமாயணம் இதை விளக்குகிற காவியம் என அடுத்தடுத்து கோட்பாடுகளும் அதை ஒட்டிய அரசியலும் உருவாயின. எனினும் காலங் காலமான ஒரு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முற்போக்கு அரசியல் கூறு இதிலிருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஈழத் தமிழ் தேசிய முன்னோடிகளுக்குக் கால்டுவெல் எந்த அளவிற்குப் கைகொடுத்திருப்பார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. “தமிழரிடையே மொழி பண்பாடு பற்றிய உணர்வு’’ என்கிற பேராசியர் க. கைலாசபதி அவர்களின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். நிறையத் தகவல்கள் கிடைக்கும்.

ஆரியப் பரம்பல் கொள்கை ‘மகாவம்சத்தில்’ காணப்படும் விஜயன் பற்றிய தொன்மம் பிரபலமாவதற்கும் சிங்களர்கள் தம்மை ஆரிய இனத்துடன் அடையாளம் காண்பதற்கும் வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மூலக் குடியேற்றக்காரர்களாகவும், சிங்கள தீபத்தை நிறுவியவர்களாகவும் தம்மைக் கட்டமைத்துக் கொள்வதற்கும் உதவியது. குறிப்பாக டி. அல்விஸ், 1866ல் எழுதிய சிங்கள மொழியின் தோற்றம் பற்றிய கட்டுரையைச் சொல்ல வேண்டும். சிங்கள மொழி திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளிலிருந்து வேறுபட்ட ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என அவர் ‘நிறுவினார்’. ‘செம்பு நிறச்’ சிங்களவரை ஆரியர் எனவும் அவர் கூறினார். இந்த அடிப்படையில் மகாவம்சம், தீபவம்சம் முதலானவை மறு வாசிப்பிற்குள்ளானதும், சிங்கத்தின் மக்களாகத் தம்மையும், சிங்கத்தின் நாடாக இலங்கையையும் அவர்கள் கற்பித்துக் கொண்டதும், புலியின் ‘மக்களான’ தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை நிறுத்தியதும் மிக வேகமாக நடந்தேறின. “சிங்கத்தின் வழிவந்தோர் _ வரலாற்றிலும் வரலாற்றியலிலும் சிங்கள உணர்வு’’ என்கிற ஆர்.ஏ.எல்.எச் குணவர்த்தனாவின் விரிவான கட்டுரை சிங்கள இன உணர்வுத் தோற்றத்தை மிக ஆழமாக விளக்குகிறது. (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவத் தமிழ் அறிஞர்களால் சி.வை. தாமோதரம்பிள்ளை போன்ற கிறிஸ்தவ வேளாளர்களும் இதில் உள்ளடங்குவர்) உருவாக்கப்பட்ட ‘தமிழ் மறுமலர்ச்சியில்’ கால்டுவெலின் பங்களிப்பை கைலாசபதி குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் பின்னர் வரலாறும் தொன்மங்களும் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டனர். சிங்களர் பக்கம் விஜயன், துட்டகைமுனு போன்ற திருஉருவங்கள் கட்டமைக்கப்பட்டார்கள் என்றால் தமிழர்கள் பக்கம் எல்லாளன், பண்டார வன்னியன் ஆகியோர் உருவாக்கப்பட்டனர். இப்படி நிறையச் சொல்லாம். இன்றைய அரசியல் நலன்களிலிருந்து பண்டைய வரலாற்றை எழுதுகிற முயற்சி எத்தனை ஆபத்தானது என்பதற்கு இலங்கை வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. உண்மை என்னவெனில் இன்று யாரும் இனக் கொள்கையை ஏற்பதில்லை. ஆரியர் திராவிடர் என்றெல்லாம் மனிதச் சமூகங்களைப் பிரிக்க இயலாது. இந்த அடிப்படையில் இனப் பண்புகளை வரையறுப்பது இன்னும் பெரிய அபத்தம். ஆரிய இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்து பரம்பி வந்தனர் என்பதைக் காட்டிலும் ஆரிய மொழிக் குழுவினர் வந்தனர் என்பதே சரியாக இருக்கும். இந்த இனக்கோட்பாட்டை அன்றே ஏற்காது மாற்றுச் சிந்தனை ஒன்றை டாக்டர் அம்பேத்கர் முன் வைத்தது இங்கே குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ஈழத்தில் யாழ்ப்பாண அறிஞர்களால் முன் வைக்கப்பட்ட இத்தகைய வரலாறு ரொம்பவும் சைவம் சார்ந்த ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதி தீவிர இடதுசாரிகள் என்றழைக்கப்படும் நக்சல்பாரிகள் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தில் இருந்து விலகி தமிழ் இனவாதப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாடு குறித்துச் சொல்ல முடியுமா?
இந்தக் கேள்வியில் சில தவறுகள் இருப்பதாக உணர்கிறேன். ஈழத்தில் இன்று நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழும்பும் குரல்கள் எல்லாவற்றையும் ‘தமிழ் இனவாதப் போராட்ட ஆதரவு’ என்பதாகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. 90களுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எல்லா இடதுசாரி இயக்கங்களுமே தம் அணுகல் முறைகளில் மாற்றங்களை -ஏற்படுத்தியுள்ளன. இவற்றை வர்க்கப் போராட்டத்திலிருந்து வழுவுவதாகப் பார்ப்பதெனில் அது எல்லா இடதுசாரிகளுக்குமே பொருந்தும். நக்சல்பாரி இயக்கத்தவரை மட்டும் அப்படிச் சொல்லிவிட இயலாது. நக்சல்பாரி இயக்கத்தவரைப் பொருத்தமட்டில் அவர்கள் பிற இடதுசாரி இயக்கங்களிலிருந்து வேறுபட்ட, அடிப்படையான மூன்று நான்கு அம்சங்களில் தேசிய இனம் குறித்த அணுகுமுறையும் ஒன்று. அந்த வகையில் அவர்கள் இந்தியாவைப் ‘பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக’ வரையறுத்தனர். இன்றைய அவர்களின் நிலைப்பாடுகளை இதன் தொடர்ச்சியாகவே நாம் காண வேண்டும். தவிரவும் எல்லா நக்சல்பாரி இயக்கங்களையும் ஒட்டு மொத்தமாகப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களாகவும் பார்க்க இயலாது. ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர். அதே போல எல்லோரும் தனி ஈழம் என்றும் சொல்வதில்லை. சுய நிர்ணய உரிமை என்கிற அம்சத்தில் எல்லோரும் ஒன்றுபட்டிருந்தாலும் தனி ஈழத்தை அங்கீகரி, ஈழ விடுதலை ஒன்றே தீர்வு முதலான முழக்கங்களை எல்லோரும் வைப்பதில்லை. ‘புதிய போராளி’ என்றொரு இயக்கம் பொது வாக்கெடுப்பு என்பதை முன் வைக்கிறார்கள். த.ஓ.வி. முதலான அமைப்புகளும் கூட புலிகளை விமர்சனத்தோடேயே பார்க்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை மாவோயிஸ்டுகள் என அறியப்படும் நக்சல்பாரி அமைப்பின் வெகுஜன இயக்கங்களே தனி ஈழம், புலி ஆதரவு முதலியவற்றைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அவர்களின் சில சமீபத்திய வெளியீடுகளை அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் புலிகளின் வெளியீடு என்றே யாரும் கருதக் கூடும். நெடுமாறன் முதலான புலி ஆதரவாளர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதில்லை. இவர்கள் நடத்துகிற ஈழம் தொடர்பான கூட்டங்களும் அப்படித்தான் நடக்கின்றன. இந்த அடிப்படையிலிருந்துதான் உங்களின் கேள்வியும் எழுகிறது என நினைக்கிறேன். மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழுவின் கருத்தும் இதுதானா, இல்லை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஆர்வக் கோளாறாக இப்படிச் செய்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இன்றைய நக்சல்பாரி இயக்க இளைஞர்களில் பலர் மிக்க நேர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்கவர்களாக இருந்தபோதிலும் மார்க்சிய அறிவில் மிகவும் குறைபாடு உடையவர்களாகவே உள்ளனர். படிப்பு என்பது மிகவும் குறைந்திருப்பதும், மீடியா மினுமினுப்பில் மயங்கி நிற்பதும் இவர்களிடம் உள்ள குறைபாடாகப் பார்க்கிறேன். இது ஆயுதப் போராட்டங்களை விமர்சனமின்றி வழிபடும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. ஏதாவது கேட்டால் லெனின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தவில்லையா என்பார்கள். உண்மைதான். சுய நிர்ணய உரிமை என்பது எந்த மக்கள் சம்பந்தப்பட்டதோ அந்த மக்கள் சுயமாக நிர்ணயிப்பதுதான். இங்கிருந்து நாம் நிர்ணயிப்பது அல்ல. தனி ஈழம். ஒன்றே என்ற கோரிக்கை இன்று ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஈழப் போராட்டம் உச்சத்திலிருந்த 80களின் இறுதியில் நான் தஞ்சையிலிருந்தேன். இன்றைய மாவோயிஸ்ட் கட்சியின் மூதாதையான மக்கள் யுத்தக் குழுவில் இருந்தேன். அந்த அமைப்பில் வெகுஜன இயக்கமான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக ‘ஈழப் போராளிகளின் சிந்தனைக்கு’ என்றொரு வெளியீட்டைக் கொண்டு வந்தோம். ‘எரிதழல்’ என்கிற எனது அன்றைய புனை பெயரில் அது எழுதப்பட்டிருந்தது. மக்களைச் சார்ந்திராமல் ஒரு ஆயுதக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பது குறித்த விமர்சனம் அதில் இருந்தது. போராட்டத்தை விமர்சிப்பவர்களைத் தாக்குவது, கொல்வது என்கிற சூழல் இருந்த காலம் அது. சுமார் 20 கி.மீ தொலைவில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் அப்போது ஓர் ஈழ அமைப்பின் முகாம் இருந்தது. அங்கு நடைபெற்ற சித்திரவதைகள் முதலியவற்றைத்தான் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் குறிப்பிடும். அந்த முகாமிலிருந்து இருவர் 12/28 அம்மாலயம் சந்து, வடக்கு வீதி, தஞ்சை என்கிற முகவரியில் இருந்த எனது வீட்டிற்கு ஏகே 47 துப்பாக்கியுடன் வந்து அந்நூலை எழுதியதற்காக மிரட்டி விட்டுச் சென்றனர். அந்த நூலின் கருத்துகளையும், இன்று அவர்களின் வெளியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் எந்த அளவிற்குப் பாதை விலகியுள்ளார்கள் என்பது விளங்கும்.

6 comments:

Anonymous said...

நல்ல நேரத்தில் வந்துள்ளது மார்க்ஸ் இன்டர்வியூ.

Anonymous said...

இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து சிந்திப்பதில் தவறில்லை. அது இயல்பானது.ஆனால் உணர்வு மட்டும் சார்ந்து சிந்திப்பது தவறான முடிவுகளுக்கும் விளைவுகளுக்கும் காரணமாக அமையும்.உணர்வை மட்டும் தூண்டிவிடும் போக்குகள் திட்டமிட முறையில் சில அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் அதைத்தான் செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்பொழுது நிலவிவரும் அரசியல் சூழல் தமிழக மக்கள் மத்தியில் தவறான புரிதலை இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் ஏற்படுத்தி உள்ளது. அதனால் தமிழகத்தில் நிகழ்ந்துவரும் வெளிப்பாடுகள் இலங்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ராணுவ நடவடிக்கை தொடர்கின்றது. அப்பாவித் தமிழர்களின் துயரமும் தொடர்கின்றது. அ. மார்க்ஸ் அவர்களின் நேர்காணல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சரியான புரிதலை ஏற்படுத்த உதவும். அதுமட்டுமல்லாமல் வைகோ, பழ நெடுமாறன், தா பாண்டியன்,திருமாவளவன் போன்றவர்களின் நிலையையும் அம்பலப்படுத்தும்

vimalavidya said...

//ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர். அதே போல எல்லோரும் தனி ஈழம் என்றும் சொல்வதில்லை. சுய நிர்ணய உரிமை என்கிற அம்சத்தில் எல்லோரும் ஒன்றுபட்டிருந்தாலும் தனி ஈழத்தை அங்கீகரி, ஈழ விடுதலை ஒன்றே தீர்வு முதலான முழக்கங்களை எல்லோரும் வைப்பதில்லை.//
These opinions are widely differed from the stand of CPI-ML(SOC) MA.KA.EE.KA. I BELIEVE shri.A.MARX is continuously reading the articles of "VINAVU". MARX article needs some simplicity.As he RIGHTLY SAID the middle class CPI-ML cadres are arguing the ("சுய நிர்ணய உரிமை என்கிற")policy with closed eyes.Those opinions are very old and the modern world has many new and wide aspects towards the present problems.Merely quoting the old Lenin's quotations are not fully applicable to the present situations of the differed conditions.we have to think fresh and take the Philosophy into new heights. with the basic foundations we have to build the new concepts and advance further.
The LTTE has to learn more from the Nepal maoists---Selvapriyan-Chalakudy

சந்திப்பு said...


இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து சிந்திப்பதில் தவறில்லை. அது இயல்பானது.ஆனால் உணர்வு மட்டும் சார்ந்து சிந்திப்பது தவறான முடிவுகளுக்கும் விளைவுகளுக்கும் காரணமாக அமையும்.

அனானி நன்பரே மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். தாங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்களிடம் இருந்து ஏற்கனவே தனிமைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஒரே அரசியல் அஜண்டா இனவாத பார்வை என்பதால் இலங்கை அவர்களுக்கு ஒரு ஊன்று கோலாக அமைகிறது. நமக்கு உள்ள பிரச்சனையெல்லாம் இலங்கையில் உள்ள அப்பாவி மக்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே. ராஜபக்ஷே அரசு வெறும் இராணுவ ரீதியாக இதனை எட்டலாம் என்பது பகல் கனவாகவே முடியும்.

சந்திப்பு said...

திரு. செல்வப்பிரியன் தாங்கள் சொல்வது போல திரு. அ. மார்க்ஸ் மகஇக அமைப்பு புலிகளை பாசிசமாக கருதுகிறது என்ற கருதுகோள் அவர்களது பழைய நிலையை குறிப்பதாக உள்ளது. தற்போது அவர்கள் புலிகளை திருத்த முயற்சிக்கிறார்களாம் - அதாவது அவர்களை விமர்சித்து மாற்றுகிறார்களாம்! மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து கீழ்மட்ட அணிக்கும் அவர்களது மேல்மட்ட அணிக்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. அதைவிட கொடியது. இலங்கை பிரச்சனையில் திருமாவளவன், பழ நெடுமாறன்களை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் தமிழ் இனவாதப் பார்வையோடு செயலாற்றி வருகிறது. தற்போது அவர்களது குவிமையம் எல்லாம் ஈழப் பிரச்சனையை வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துவதுதான். அதைத்தான் உயர்நீதிமன்ற வக்கீல்கள் போராட்டத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது மக்கள் மத்தியில் இவர்களது இலங்கை பிரச்சனையை கொண்டு செல்வதில் தோல்வி கண்ட இந்த போலி நக்சலிச மகஇக கும்பல் வக்கீல்கள் பெயரிலும் - மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு என்ற போர்வையிலும் தங்களை முகத்தை மறைத்துக் கொண்டு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சீர்குலைவுவாதத்தின் ஒட்டுமொத்த முகமாக இன்றைக்கு வினவு உள்ளது. மேலும் வினவில் இலங்கைப் பிரச்சனையில் மகஇகவின் கொள்கை இதுதான் என்று இதுவரை எதுவும் வரவில்லை. அதைவிடக் கொடுமையானது வினவு தளத்தை தாங்கள் ஒரு போலி நக்சலிச அமைப்பு என்று காண்பிக்காமல் அரசியல் நடத்துகிறார்களாம்!

Anonymous said...

புலிகளை எப்படி பார்ப்பது அதன் தலைமையை எப்படி பார்ப்பது என்பதை மா.லெனிய அணுகுமுறையோடு பார்ப்பது அதாவது சுயநிர்ணய உரிமை என்று பேசுவது தவறு அதாவது லெனின் உடைய அரசியல் திசைவழி தவறு. அல்லது மாவோ சொன்ன தேசிய போராட்டத்தில் வர்க்கப் போராட்டம் தேசியப் போராட்டத்தின் வடிவத்தை எடுகக்கிறது என்பதெல்லாம் இன்று காலம் கடந்த விசயங்கள் என விமல வித்யா குறிப்பிடுவதற்கான அளவுகோல்களாக எவற்றை வைத்துள்ளார். அது எப்படி மா.லெனிய வகைப்பட்டது என விளக்க முடியுமா...

விமர்சனம் பற்றிய அடிப்படை மார்க்சிய அறிவை சிபிஎம் தோழர்கள் பெறாதது பற்றி வருத்தமாக உள்ளது. ம.க.இ.க வில் மேல்மட்ட கீழ்மட்ட அணிகளுக்கு இடையில் உள்ள அரசியல் நிலைப்பாட்டின் வேறுபாடுகளை பட்டியலிடுவதை விட்டுவிட்டு தினமலர் நக்கீரன் கிசுகிசு போல எழுதுவது எப்படி தரமான நடைமுறையாகும்....

தமிழ் இன வாதப் பார்வை என்பதை ஒரு பேச்சுக்காக ஒத்துக்கொண்டால் நீங்கள் தமுஎச மாநாடட்டில் நடத்திய பெண்ணிய அரங்கு, தலித்திய அரங்கு .. என்ஜிஓ ஸபான்சர் சுற்றுச்சூழல் அரங்கு என தனித்தனியாக மார்க்சியத்தை வெட்டி சிதைத்ததை எப்படி பார்ப்பது....

மக்களிடம் ஈழம் பற்றிய உங்களது கருத்துக்களை நீங்கள் எடுத்து சொல்லாமல் பயந்து இருந்து கொண்டு இணையத்தில் மாத்திரம் பேசுவது வீரமான செயலா... மக்களிடம் ம.க.இ.க இப்பிரச்சினை ஐ நீங்கள் போனதைவிட அதிகமாகவே குறைவான தோழர்களைப் எபற்றிருந்தும் செய்து உள்ளனர். மக்களிடம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வுதான் சாத்தியம் என்றும் இன உணர்வு தவறு என்று பேசி பார்த்து விட்ட பிறகுதான் உங்களது கட்சி மக்களிடம் போனதாக பீற்றிக் கொள்ள முடியும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் என்பது பெயர். அது சரி அப்படியானால் போராடுவது அவர்கள் மட்டுமல்ல. அனைத்து வகக்கீல்களும்தான் ஏன் உங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ வக்கீல் வைகை கூட ஆக்டிவான போராட்ட உறுப்பினராகத்தான் உள்ளார். அவர் கூட் அப்படியானால் ஜனநாயக சீர்குலைவு வேலைதான் செய்கிறாரா... அந்த சீர்குலைவு வேலையை கட்சி செய்வதாக எடுத்துக் கொள்வதா அல்லது கட்சியில் விலக்கப்பட்ட வைகை செய்வதாக எடுத்து கொள்வதா...

மக இக நிலைப்பாட்டை அல்லது வினவு சொல்லாததை பற்றி பேசுவதை விட எத்தனையோ கோரிக்கைகள் வைக்கின்றீர்கள்.... மக்கள் பாதிக்ககபட கூடாது என்ற வெற்ம் அரசியலற்ற வாதத்தை கூட பிற மாநில காம்ரேட்டுகளிடம் வற்புறுத்தி போராட ஏற்பாடு செய்யாத நீங்கள் அதாவது ஜனநாயக உரிமைதானே உயிர்வாழ்வது.... எப்படி சீர்குலைவு பற்றி பேச முடிகின்றது ...

போலி நகசலிச அமைப்பு என்றால் என்ன... தயவு செய்து கேள்விகளுக்கான பதிலை புரிகின்ற வகையில் விளக்கவும்.

கட்டுப்படுத்தப்பட்ட தாராள மயத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கை ஆதரிக்கின்றதே இதை இந்தியாவுக்கு சொல்கின்றீர்களா அல்லது உலகில் இருப்பதாக கனவு கானும் பாராளுமன்றத்திற்கு சொல்கின்றீர்களா...

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது சரி... அரசு மருத்துவமனையை க்ட்டுப்பாட்டுடன் மூடலாம். முழுக்க இலவச மின்சாரம் விவசாயிக்கு தேவையில்லை.... இலவசமாக மாத்திரமே கல்வி தந்தால் கல்வியின் அருமை தெரியாது... பொதுத்துறையை லாபம் வருமெனில் விற்கலாம்.... இதெல்லாம் பிஜேபி காங்கிரசு சொல்ற நடுத்தர வர்க்க பார்வை இல்ல. புரட்சித்தலைவியோட சேர்ந்து நீங்க வர்ற எலக்சன்ல கட்டுப்படுத்தப்ட்ட தாராளமயத்தை ஆதரிப்பதால பேசப் போற பேச்சுக்கள்.