March 23, 2009

ஜெய் ஸ்ரீ... ராம்!

ஜெய் ஸ்ரீ... ராம்... என்று தனது இரண்டு கைகளையும் சிக்சருக்கு தூக்குவது போல உணர்ச்சி பெருக்கெடுத்து, கண்களில் வெறியூட்டும் போதையோடு, வாயைப் பிளந்து கர்ஜித்தான் அந்த பால்வடியும் முகம் கொண்ட இளைஞன். அந்த இளைஞனுக்கு எதிரே இருந்த சிறுங்கூட்டமும் அப்படியே அதே வேகத்தோடு வாயைப் பிளந்தது ஜெய் ஸ்ரீ... ராம்... என்று கர்ஜித்தது.

அந்த இளைஞன் ஜெய் ஸ்ரீ... ராம்..., ஜெய் ஸ்ரீ... ராம்... என்று எத்தனை முறை கத்தியிருந்தாலும் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது பக்தியின் முக்தி என்றே பரவசப்பட்டிருப்பார்கள்! எப்படியாவது அதிகாரம் என்ற நாற்காலியை பிடிக்க வேண்டுமல்லவா? அதனால் அதன் உச்சத்திற்கே சென்றான் அந்த இளைஞன், அப்புறம் என்ன "முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்" என்று ஏதோ சாதாரணமாக தேங்காய் உடைப்பது போல தனது வெறியைக் கக்கினான்.
இப்படி கக்கியது யார்? மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி இவர்கள் வழியில் வந்த சஞ்சய்காந்தி-மேனகா காந்தியின் தவப்புதல்வன் வருண்காந்திதான் இப்படி பேசியுள்ளார். அதாவது, ஜவஹர்லால் நேரு மதச்சார்பற்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இத்தகைய உயர் அரசியல் பின்னணியில் பிறந்து வளர்ந்த இந்த பலகனுக்கு திடீரென்று இப்படி வெறி ஏற்பட என்ன காரணம் என்று ஆராய வேண்டியது கடமையாகிறது.

வருண்காந்தியின் தாய் மேனகாகாந்தி, பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக செயல்பட்டவர். அதாவது, ஆராயச்சிக்காகக் கூட குரங்கு, பூனை போன்ற விலங்குகளை பிடிக்கக்கூடாது என்று சொன்னவர். இதனாலேயே பல மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட சிறப்பான சோதனை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். பல ஆராய்ச்சி சாலைகள் இதனாலி விழிபிதுங்கி நிற்கிறது. சரி இதுவாவது பரவாயில்லை; குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்காக இருந்த சர்க்கசில், புலி, சிங்கம், யானை... போன்ற மிருகங்களை பல வருடங்கள் பழக்கி வித்தை காட்டுவார்கள் இதற்குகூட தடை விதித்தவர்தான் வருண்காந்தியின் தாயார் மேனகா.

இப்படி மிருகத்தின் மீதெல்லாம் அன்பை செலுத்திய அந்த தாய் ஏனோ தனது மகனின் மனதில் இந்த நேசத்தை, மனிதத்தை நேசிக்கும் பண்பை உருவாக்க தவறிவிட்டார். இது அவருடைய குற்றமா? அல்லது தனது மகனின் "கூடா நட்பால்" ஏற்பட்ட வினையா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

காந்தி குடும்பத்தில் பிறந்த வருண் இன்றைக்கு கோட்சேவின் முகாமில் இருக்கிறான். அதாவது பா.ஜ.க.வின் தத்து(வ)ப்பிள்ளையாகி விட்டார். பா.ஜ.க.வும் இவரை உத்திரப்பிரதேசத்தில் உள்ள, பிலிபத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து விட்டது. அங்குள்ள இந்துக்களின் ஓட்டுக்களை முழுமையாக வேட்டையாடுவதற்காகத்தான் இப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக "வெறிக் கூச்சல்" போட்டுள்ளான் அந்த இளைஞன். அதுவும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் கமிசனால் அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில்தான் இவ்வளவு தைரியமாக! முழங்கியுள்ளான் அந்த பாலகன்.

அப்புறம் இந்த விசயம் மீடியாக்களில் கசிய, பின்னர் தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் செல்ல... மீடியாக்கள் கடந்த 10 நாட்களாக 'அவனது குழந்தை முகத்தையும், வெறிக் கூச்சலையும்' ஒருசேர காட்டிக் கொண்டே இருந்தன. (இதனால் பார்ப்பவரின் மனதில் ஒருவிதமான ரசாயண கலவை ஏற்படுவதை டி.வி.யை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர்.) இருந்தாலும் என்ன பயபக்தியோடு மீடியாக்கள் முன்னாள் மண்டியிட்ட அந்த வாலிபன். "தான் அவ்வாறு பேசவில்லை" என்றும், இதற்காக மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும், அது திட்டமிட்ட சதி என்றெல்லாம் தினமும் பவ்யமாக பொய்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். இருப்பினும் என்ன? அறிவியல் யுகத்தில், அதுவும் காந்தியின் குடும்பத்தில் வந்த பேரனின் பேச்சை வீடியோ எடுக்காமல் இருப்பார்களா? அதுவும் கோட்சேவின் முகாமில் உள்ள முக்கிய வி.ஐ.பி. ஆச்சே! வீடியோ ஆதாரங்கள் எல்லாம் தேர்தல் கமிஷன் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்குள் பா.ஜ.க. இவ்விஷயத்தில் பலமுறை ஜகா வாங்கியது. அவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை என்று சொல்லியது. ஏற்கனவே சங்பரிவாரத்திற்குள் குடுமி சண்டைகள் உச்சத்தில் இருக்க இதுவேறவா என்று பம்மியது.

அதற்குள் தேர்தல் கமிஷனும் அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து குற்றவாளி என்று அறிவித்து விட்டதோடு, அவரை தேர்தலில் நிற்பதற்கும் தடை விதித்தது. அத்துடன் மதவெறியையும், இதர மதத்தினர் மீது துவேஷத்தை கக்கிய வருண் காந்தி மீது பல பிரிவுகளில் வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு உறுதியானால் இவருக்கு மூன்று ஆண்டு தண்டணை உறுதி என்றும் கூறப்படுகிறது. ("Varun Gandhi has been booked under Section 153 (a) and Section 188 of the Indian Penal Code as well as Section 125 of the People's Representative Act. Investigations are on," said Senior Superintendent of Police (SSP), Pilibhit, R.K. Chaturvedi. While Section 153 (a) deals with "promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language etc and doing acts prejudicial to maintenance of harmony", Section 188 is on "disobedience to order duly promulgated by public servant". Section 125 of the People's Representative Act deals with "offence of promoting enmity between classes in connection with the elections".) இந்தியாவின் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் சீர்குலைவை உண்டாக்கும் வகையில் பேசிய இந்த பாலகனை சட்டம் நிச்சயம் தண்டிக்க வேண்டும். அது ஒருபக்கம் இருக்கட்டும்!

வருண்காந்திக்கு வேண்டும் என்றால் தலையெடுப்பது புதிதாக இருக்கலாம், ஆனால், பா.ஜ.க.வுக்கு தலையை எடுப்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! ஏற்கனவே, சங்பரிவாரத்தின் முக்கிய அங்கமான விஸ்வ ஹீந்து பரிஷத்தின் தலைவரும், சன்னியாசியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி என்பவர் தமிழக முதல்வர் கருணாநிதியை தலையை எடுக்க வேண்டும் என்று பேசியவர்தானே! குஜராத்தில் 2000 இசுலாமியர்கள் நரேந்திர மோடியால் துடிக்குத் துடிக்க வேட்டையாடப்பட்டார்களே! பூரண இந்துவான மகாத்மாவையே ஆர்.எஸ்.எஸ். நாதுராம் கோட்சே, சவார்க்கர் உட்பட இந்து மதவெறி கும்பலின் சதித் திட்டத்தால் உருப்பெற்று கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்தானே நமது தேசப்பிதா? எனவே, காந்தி குடும்பத்தின் ஒரு உறுப்பினராக வருண் இருந்தாலும் அவர் சேர்ந்திருப்பது மதவெறி கூட்டமல்லவா? அந்த சங்பரிவார சோதனைக் கூடத்தில் உருவாக்கப்படுபவர்கள் கோட்சேக்களாகத்தானே இருக்க முடியும்! பாராளுமன்றத் தேர்தலில் பயங்கரவாதம் முக்கிய அஜண்டாவாக உள்ள நிலையில், சாத்வி பிராக்யா சிங்கும், புரோகித்தும் எப்படி மலேகான் குண்டு வெடிப்பில் மூல காரணமாக இருந்தார்கள். மதவெறி குண்டுகளை எங்கெல்லாம் புதைத்தார்கள் பயங்கரவாதத்தை இராணுவத்திற்குள்ளும் புகுத்த முனைந்தவர்களிலிருந்து முளைத்த வருண்காந்தி மன்னிக்கப்பட வேண்டியவர் அல்ல தண்டிக்கப்பட வேண்டியவரே! அவர் மட்டுமல்ல! அவர் சார்ந்திருக்கும் சங்பரிவாரமும் - பா.ஜ.க. கூட்டமும் முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றே!

3 comments:

Anonymous said...

பாசக அவருக்கு டிக்கெட் கொடுக்கப்போவுதாமே. சப்போர்ட்டுக்கு பால்தாக்கரேவும் வர்றார் அப்புறம் என்ன!

rahini said...

arumai arumai

சந்திப்பு said...

nandri anany & rahini