March 27, 2009

மகுடம் சூட்டிக் கொண்ட பிரதமர்கள்!

15வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருடத்திற்கு முன்னதாகவே பா.ஜ.க. தரப்பில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவரும் தானே அடுத்த பிரதமர் என்ற கித்தாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மறுபுறத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு டாக்டர் மன்மோகன்சிங்தான் என்று பதிலுரைத்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமர் ஆக வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு இந்திய ஜனநாயகமும், மக்களும் விடைகொடுத்துவிட்ட பின்னணியில் மத்தியில் யார் வந்தாலும் அது கூட்டாட்சிதான் என்ற மந்திரம் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்கிவிட்டது.
தானே ராஜா, தானே மந்திரி என்று வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சீண்டுவதற்கு யாரும் இல்லை. அவர்களது ஐக்கிய முற்போக்கு கூட்டணியெல்லாம் காற்றில் கலந்து கரைந்துவிட்டது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உ.பி.யிலும், பீகாரிலும் காங்கிரசுக்கு பார்ட்னர் யாரும் கிடையாது! பா.ஜ.க. மட்டுமென்ன அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேங்கிறார்கள். இப்போதே பல பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முட்டை உறுதியாகி விட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் முட்டைக்கு அட்வான்ஸ் புக்கிங்கெல்லாம் செய்து விட்டார்கள். அப்புறம் என்ன? காங்கிரசும் இதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே மூழ்கும் கப்பல் என்று புரிந்து கொண்ட மாநில கட்சிகள் தங்களது அரசியல் மரியாதையை உயர்த்திக் கொள்ள, "என் வழி தனி வழி" என்று ராஜபாட்டையில் நடைபோடத் துவங்கி விட்டது. லாலுவும், ராம் விலாஸ்பஸ்வானும், முலாயமும் காங்கிரசுக்கு டூ... விட்டு விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அத்வானி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் மன்மோகன் சிங்கைப் பார்த்து... யார் சிறந்த நிர்வாகி என்று பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்! மக்களுக்குத் தெரியும் இந்த இரண்டு பேருமே உருப்படியானவங்க இல்லையென்று!


அத்வானி ஹவால கேஸ் முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளி... அது மட்டுமா? நடப்பு பாராளுமன்றத் கூட்டத்தொடர்களிலும் குறிப்பாக பட்ஜெட் சமர்ப்பிக்கும் காலங்களிலும் உருப்படியான எதிர்கட்சியாக நடந்து கொள்ளாமல், தனது கருத்துக்களை பாராளுமன்றத்தில்கூட தெரிவிக்காமல் மன்மோகன் சிங்கிடம் புறக்கதவு வழியாக சென்று கருத்து தெரிவிக்க முற்பட்டு மூக்கு உடைபட்டவர்தான் அத்வானியும் பா.ஜ.க.வும். இதிலிருந்தே தெரியும் இவர்கள் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் என்று?

ரத யாத்திரைகள் மூலம் மதவெறியைத் தூண்டி சொந்த நாட்டு மக்களை சுய அரசியல் லாபத்திற்காக கொன்ற மதவெறிக் கூட்டத்தின் தலைவர் இந்த தேசத்தின் பிரதமர் என்பதை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. இதன் மதச்சார்பற்ற மாண்புகள் ஏற்கனவே உ.பி.யில் இல்லாதது ஒழித்து விட்டது பா.ஜ.க.வை இந்த தேர்தலில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! இதுவே மக்கள் தீர்ப்பாக மாறிட வேண்டும்.


மன்மோகன் சிங் மக்களை சந்திக்காதவர் என்பதால், இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்குரலையும் பொருட்படுத்தாமல், பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமெரிக்காவுடன் தேனிலவு வைத்துக்கொண்ட அமெரிக்க பித்தர்!

எனவே, இந்த இரண்டு பேர் சார்ந்துள்ள கட்சிகள் முறியடிக்கப்பட் வேண்டியவை என்பதுதான் இந்த தேர்தலின் தீர்ப்பாக மக்கள் எழுதவுள்ளனர்.
அடுத்து, பா.ஜ.க. தனது ஆட்சிக்காலத்தில் தற்போதைய அரசியல் சட்டத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கூட மாற்றி தனக்கு சாதகமாக மாற்ற முயன்ற ஒரு பாசிச அமைப்பு. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கனவு கொண்ட அமைப்பு. எனவேதான் நானே பிரதமர் என்று உளறிக் கொண்டிருக்கிறார் அத்வானி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் இதில் பெரும்பான்மை பெறுபவர்கள் கூடி தங்களுக்கான பிரதமரை தேர்வு செய்துக் கொள்வார்கள். இதுதான் இந்திய ஜனநாயகம் காட்டியுள்ள வழி. ஆனால் இதனை பை-பாஸ் செய்ய முனையும் காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டையும் ஓடவிடுவோம்! மூன்றாவது மாற்றை - மக்களுக்கான மாற்றை - மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை வலுவாக்கும் போன்ற முழக்கத்துடன் இடதுசாரிகளும் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் பலம் பெற்று வருகின்றனர். இவர்களை ஆதரிப்போம்!

2 comments:

Anonymous said...

//ரத யாத்திரைகள் மூலம் மதவெறியைத் தூண்டி சொந்த நாட்டு மக்களை சுய அரசியல் லாபத்திற்காக கொன்ற மதவெறிக் கூட்டத்தின் தலைவர் இந்த தேசத்தின் பிரதமர் என்பதை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது.// you have rightly said abt the past two rulers of our country.We have given them all changes.What we get back is Price rise/job loss/fear of future/uncertainty with the economic policies of the govt.So we have to change the economic policies first.So our vote this time not to congress and BJP >>-Selvapriyan _Chalakudy

சந்திப்பு said...

Thanks Selvapriyan

I will write in detail future.