March 13, 2009

தோப்புக்கரணத்துக்கு காப்புரிமையாம்!

கடந்த சில மாதங்களாக “சூப்பர் பிரைன் யோகா” என்ற செய்தியும், யூ-டியூப் காட்சியும் இமெயிலில் மிக வேகமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு பயன்படும் யோகா என்றால் யார்தான் விடுவார்கள்! ஜப்பானில் துவங்கி, அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, சீனா, இந்தியா என்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த யோகாசனம்.

இந்தியா, இலங்கை தவிர்த்து இதனை காணும் பிற நாட்டு மக்கள் பெரும் வரப்பிரசாதமாக கருதுகின்றனர். ஆனால், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் நகைப்புத்தான் வருகிறது! வராமல் இருக்குமா என்ன? நமக்கெல்லாம் இளம் பருவத்தில், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கொடுக்கும் தண்டனையே அந்த “சூப்பர் பிரைன் யோகா”தானே! தண்டனை மட்டுமா? வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெருவில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில்களுக்கு முன்னாள் நமது மக்கள் தினமும் காலை முதல் மாலை வரை இந்த அற்புதமான “சூப்பர் பிரைன் யோகாவை” செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

‘அட சீக்கிரம் சொல்லித் தொலைப்பா! அது என்ன யோகா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ‘பெரிய பீடிகையெல்லாம் போட்டு டைம்மை வேஸ்ட் பண்ணாதே...’ சரி! சரி!! சொல்லிடுறேன்.

அட வேற ஒண்ணுமில்லிங்க! “தோப்புக்கரணம்தான்” அந்த சூப்பர் பிரைன் யோகா! அப்படியா? அது எப்படி சூப்பர் பிரைன் யோகாவா மாறுச்சுன்னு ஆச்சரியமா பாக்குறீங்களா? அது நம்ம இந்தியாவுல தோன்னும்போதே அப்படித்தான் இருந்துச்சு! ஆனா அதன் சூட்சுமத்தை நேரடியாக மக்களுக்கு விளக்காம விட்டதால தண்டனையா மாறிடுச்சு! அப்புறம் என்ன? இப்போ அதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்து - காப்புரிமையும் பெற்று விட்டார்கள். ஆமாங்க! இனிமேல் பிள்ளையார் கோவிலுக்கு சென்று யாராவது தோப்புக்கரணம் போடனும் நினைச்சா அந்த நிறுவனத்துக்கு காப்புரிமை செலுத்திவிட்டுதான் தோப்புக்கரணம் போடனும் போல இருக்கு!

தோப்புக்கரணம் போடுவதை மாஸ்டர் சோ கோ சூய் என்பவர் அறிவியல் பூர்வமாக சோதனை செய்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, தினமும் காலையில் சூரியனுக்கு நேராக நின்று 14 முறை தோப்புக்கரணம் போட்டால் போதுமாம் நம்முடைய மூளை சுறுசுறுப்படைவதோடு, சூப்பர் பிரைனாகவும் மாறிடுமாம்! 
அதாவது தோப்புக்கரணம் போடும் போது நம்முடைய இடது கை வலது காதையும், வலது கை இடது காதையும் தொட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மின்சார சக்தி போன்று உற்பத்தியாகி அது மூளையை விருத்தியடைச் செய்கிறதாம். இதன் மூலம் நம்முடைய மூளையில் உள்ள நியூரான் செல்கள் உற்பத்தியும் நடைபெறத் துவங்குகிறதாம்! மேலும் தோப்புக்கரணம் போடும் போது வாயை மூடிக் கொண்டு மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டுமாம். உட்கார்ந்து எழுந்திருக்கும் போது உள்ளிழுத்த காற்றை வாய் வழியாக வெளியே விட வேண்டுமாம் இதுதான் அந்த டெக்னிக்!

அப்புறம் என்னன்ன இந்த தோப்புக்கரணத்தை 14 முறை செய்ய வேண்டும். அளவுக்கு மீறி செய்யாதீங்க அப்புறம் மூளை ரொம்ப வளர்ந்துடம் பெரிய பிரச்சனையாகி விடும். அப்புறம் உங்க மூளையை உங்களாலேயே கண்ட்ரோல் செய்ய முடியாமல் போய்விடும்! இப்படி வெறும் 45 நொடிகளுக்குள் செய்யும் இந்த உடற் பயிற்சி கிட்டத்தட்ட 20 நிமிடம் நடப்பதற்கு சமம் என்றால் பாருங்களேன். இதைவிட வேற என்ன வேணும் நமக்கு!
நம்ம ஊரு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் மருத்துவ குணம் உள்ளதாகக் கூறி ஏற்கனவே அமெரிக்காவில் காப்புரிமை பெற்ற விட்டார்கள்! தற்போது இந்த லிஸ்டில் “தோப்புக்கரணமும்” சேர்ந்து விட்டது. இன்னும் என்னென்ன சேருமோ தெரியலை! பேசாம ஒன்ணு பண்ணலாம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அமெரிக்காவில் பேட்டன்ட் செய்து விட்டால் அப்புறம் யாரும் எதற்கும் உரிமை கொண்டாட முடியாதல்லவா!

ரொம்ப முக்கியமான மருத்துவ விசயம் என்னவென்றால் "மூளை வளர்ச்சி குறைவான" குழந்தைகளுக்கு தோப்புக்கரணம் நல்லா வேளை செய்கிறதாம்! அதாவது ஆட்டிசம் என்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு கூட இது வேலை செய்கிறதாம். எதற்கும் இதையெல்லாம் நம்ம ஊரில் உள்ள சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட மருத்துவர்களும் சோதனை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம். இல்லையென்றால் நம்ம சங்பரிவாரக்கூட்டம் இதை வைச்சே தங்கள் அரசியல் வியாபாரத்தை நன்னா செய்ய ஆரம்பித்து விடுவாங்கள். மேலும், மந்தமாக இருக்குற மாணவர்களுக்கு எல்லாம் தற்போது மேலை நாடுகளில் நல்லா தோப்புக்கரணம் போடச் சொல்றாங்களாம்.

பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இதுவும் இப்போ வேகமாக பரவுது! இருந்தாலும் இது உடல் நலத்துக்கு நல்லது என்பதால் நாமும் கொஞ்சம் இதற்கு மார்க்கெட்டிங் பண்ணலாம்! அதற்குள் இருக்கவே இருக்கிறார்கள் கலாச்சார காவலர்கள் - வந்துவிட்டார்கள் இது “சயிண்டிபிக் இந்துயிசமாம்!” அடடா... இப்பத்தான் உஷாராக இருக்க வேண்டும். அதாவது இந்து என்கிற சொல்லை கண்டுப்பிடிப்பதற்கு முன்பே இந்தியாவில் கணங்களின் கடவுளாக தலைவராக விநாயகர் வழிபாடு தொடங்கி விட்டது என்பதுதான். இந்த இந்து என்கிற வார்த்தையையே நமக்கு கடனாக கொடுத்தது பிரிட்டிஷ்காரன்தான்! நல்ல வேளை இதற்கு அவன் பேடன்ட் வாங்கல! ஏற்கனவே நமது சித்தர்களும், ரிஷிகளும் உடலை எப்படி வளப்படுத்துவது என்பதற்காக பல சுயபரிசோதனைகளை செய்து இறுதியில் கண்டெடுத்தவைகள்தான் மேற்கண்ட தோப்புக்கரணம் முதல் இன்றைய மார்டன் யோகாசனம் வரை. அப்புறம் இன்னொரு குட்டி தகவல் பசுமாட்டு மூத்திரத்தில் கோலா தயாரிக்கப்போவதாக சங்பரிவாரக் கூட்டம் ஒருபுறம் உளறிக் கொண்டிருக்கிறது. எனவே, ஏதாவது அறிவியல் முகமூடி போட்டு வந்தால் அது என்ன? ஏதுன்னு ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதுதான் நம்ம மூளைக்கும் வாழ்க்கைக்கும் பொறுத்தமானது!

கடைசியா ஒரு வார்த்தை, நாளையில இருந்து நீங்க தோப்புக்கரணம் போட ஆரம்பித்து விடுவீர்கள் என்று எனக்கு நல்லாத் தெரியும்! நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதற்காக தோப்புக்கரணம் மட்டும் போட்டா மூளை வேண்டும் என்றால் வளரலாம்! மன்னிக்கவும் வீங்கலாம். சூப்பர் பிரைனாக மாறலாம் ஆனால் அறிவு வளராது அதற்கு அனுபவமும் - வாசிப்பும் - நடைமுறையும் அவசியம். அதுதான் இயக்கவியல். இது இரண்டும் இணைந்தால் நீங்கதான் சூப்பர் பவர் மனிதன்! ஓ.கே. பாய்... சீ.யூ...

இதுகுறித்த மற்ற இணைப்புகள்

http://www.ehow.com/how_2330888_do-super-brain-yoga.html
http://www.superbrainyoga.org

5 comments:

Mugunth said...

http://www.pranichealing.org/SuperBrain/SBY_ContactUs.html இந்த தளத்தில் போய் உங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு காட்டுங்கள்.

சந்திப்பு said...

என்னுடைய எதிர்ப்பை காட்டிவிட்டேன். தோப்புக்கரணத்திற்கான எங்களது மரபுரிமைக்கு நீங்கள் எப்படி காப்புரிமை வாங்க முடியும் என்று கேட்டுள்ளேன். நன்றி முகுந்த்

இரா.சுகுமாரன் said...

நம்மகூட ஒன்னு செய்யலாம். செருப்பால அடிச்சிட்டு அத கூட காப்புரிமை வாங்கிடலாம். ஆனா என்ன? எப்படி எப்படி எல்லாம் இவர்களை போன்றவர்களை அடித்தால் மக்களுக்கு நல்லது என்பதை விளக்கி காப்புரிமை வாங்க வேண்டும்.

சந்திப்பு said...

நன்றி சுகுமாறன்... நீங்கள் சொல்வது போல் அடிப்பதற்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் நமது மக்கள் விரைவில் அதற்கு தயாராவர்கள் என்று எதிர்பார்க்கலாம்.

G. Krishnamurthy said...

தோப்புக்கரணம் முதியவர்களுக்கு மிகவும் நல்லது. தவறாமல் செய்து பயன் பெறலாம்.