December 31, 2008
புத்தாண்டு வாழ்த்து! வீழ்த்தப்பட்டது எங்கள் வேர்கள் அல்ல
செருப்படி மூலம் ஏகாதிபத்தியத்திற்கு
பதிலுரைத்த 2008-க்கு சல்யூட்!
இந்திய வெடிகுண்டுகளுக்கு பின்னால்
பயங்கரவாதிகள் மட்டுமா
சன்னியாசிகளும் இருப்பர்
சங்பரிவாரமும் இருக்கும்
என்று கண்டுரைத்த
தியாகி கார்க்கரேவை
அடையாளம் காட்டிய 2008க்கு சல்யூட்!
அமெரிக்க சூதாட்ட பலுனை
இனியும் ஊத முடியாது என்று
வெடித்துக் காட்டி
முதலாளித்துவ நெருக்கடியை
உலகுக்கு உணர்த்திய 2008க்கு சல்யூட்!
அமெரிக்காவுடன் - காதல் புரிந்த
காங்கிரசும்
கள்ளக் காதல் புரியூம் பா.ஜ.க.வும்
அணு ஒப்பந்தத்தின் மூலம்
அரசியல் ஒப்பந்தத்தையும்
ஏற்படுத்திக் கொண்டதற்கு
பதிலுரைக்க வருகைத்தரும் 2009 வருக!
கியூபப் பாதையில்
அடியெடுத்து வைத்திருக்கும்
வெனிசுலா, பொலிவியா
பிரேசில், உருகுவே
வழியில்...
நேபாளத்திலும்
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
செங்கொடிகளின் கூட்டுச்
செயல்பாட்டால்
ஜனநாயகத்தை மீட்டெடுத்த
பாதையை நோக்கி
ஏகாதிபத்திய - முதலாளித்து
சீரழிந்த பாதையிலிருந்து விலகி
வழிகாட்டும் கியூப் பாதையை
நோக்கி சமூகத்தை இட்டுச் செல்ல
வருகைத் தரும் 2009 வருக!
முதலாளித்துவ சீரழிவால்
ஈபிள் கோபுரம்
அமைந்திருக்கும்
பிரான்சும்,
கலாச்சார மேம்பாட்டின்
இருப்பிடம் என்று வருணிக்கப்பட்ட
ரோமும் பற்றி எரிகிறது...
அங்கு வைக்கப்பட்டுள்ள தீ
மூலதனத்திற்கு எதிரான
முதல் பொறி...
மார்க்சின் மூலதனத்தில்
விடைகான வழிகாட்டி 2008.
அதன் வழியிலேயே விடையளிக்க
வருகை தரும் 2009-யை
வரவேற்வோம்!
2008 தமிழகத்தில்
பல்லிளித்த தீண்டாமை
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரும்....
சட்டக் கல்லூரியில்
அம்பேத்காரை தீண்டிய
தீண்டாமையும் தமிழகத்தில்
அணையாத கணலாய்
எரிந்து கொண்டிருக்கும்
தீண்டாமையை
சுனாமி பேரலைகளைக் கொண்டு
2009- இல் பொசுக்குவோம்!
மனிதனை குரங்கிலிருந்து மீட்ட
டார்வினின் 200வது பிறந்த தினமும்
தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட்
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின்
150வது பிறந்த தினத்துடன்
2009 துவங்க உள்ளது.
இரு பெரும் சிந்தனையாளர்களின்
சிந்தனையை
சிறப்பாய் விதைத்திடுவோம்
2009-இல் முன்னேற்றத்தை
ஏற்படுத்திடுவோம்!
வருக! 2009... 2009... 2009...
தமிழ் வலைப்பதிவுகள்
சிறகடித்து பறந்திட
வண்ணத்துப் பூச்சிக்கள் போல்
கண்ணுக்கு இன்மையான
வண்ணத்தை மட்டுமல்ல
கருத்துக்களையும் வழங்கிட
சந்திப்பின்
வாழ்த்துக்களுடன் புத்தாண்டை
வரவேற்கிறேன்
அன்புடன்
கே. செல்வப்பெருமாள்
December 30, 2008
பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள்
மனித சமுதாயத்தின் மிகப்பெரிய மேதைகளுள் ஒருவரான சார்லஸ் டார்வின் - இன் இருநூறாவது பிறந்த நாளை, பிப்ரவரி 12-லும், அவருடைய மாபெரும் படைப்பான “உயிரினங்களின் தோற்றம்” பிரசுரிக்கப்பட்டதின் 150வது ஆண்டை நவம்பர் 2009லும் உலகம் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பரிணாமக் கோட்பாட்டிற்கு கடவுள் நம்பிக்கை அடிப்படையிலான எதிர்ப்பு மேற்கத்திய உலகில் இன்றளவும் வலுவாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் விநோதம் என்னவென்றால் உலகின் மிகச் சிறந்தமருத்துவ உயிரியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்டதாகவும், மிகஅதிக எண்ணிக்கையில் நோபல் விருது பெற்றவர்களின் குடியிருப்பாகவும், திறனூக்கம் கொண்ட உயிரியல் தொழில்நுட்ப தொழிற்சாலைகளைத் தன்னகத்தே கொண்டதுமான அமெரிக்க நாட்டில்தான் இதுபோன்ற எதிர்ப்புணர்வு வலுவாக உள்ளது! மரபணு கட்டமைப்பை விளக்கியும், மரபணு ரகசியங்களை உடைத்தும், மரபணுக்களை வரிசைப்படுத்தியும், தொகுத்தும் வெளியிடப்பட்டுள்ள நவீனகால ஆய்வு விளக்கங்கள், பூமியின் அனைத்து உயிர் இனங்களும் ஒரு பொதுவான துவக்கத்திலிருந்தே தோன்றின என்கிற டார்வினின் கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகின்றன. உயிர் வாழ்வனவற்றின் பல்வேறு வடிவங்கள், பயனுள்ள மரபணு மாற்றங்களை பரப்புதலும், கேடு பயப்பனவற்றை களை நீக்குதலும் என்கிற இயற்கைத் தேர்வு எனும் செயல்வழியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.
ஆயினும், பரிணாமக் கோட்பாட்டிற்கு ஆதரவாக மிக வலுவான விஞ்ஞான ஆதாரங்கள் இருந்தாலும் பைபிள் கூறும் படைப்புத் தத்துவத்தை ஆதரிப்பவர்களின் எதிர்ப்பு குறையவில்லை. கல்விக்கூடங்கள் நெடுங்காலமாகவே இவர்களின் போர்க்களமாக இருந்து வருகின்றன. 1925ல் டென்னஸி மாநிலத்தில் நடைபெற்ற அவப்பெயரடைந்த “ஸ்கோப்ஸ் விசாரணை” அம்மாநில அரசு தடை செய்த பரிணாம கோட்பாட்டை போதித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிரான குற்ற விசாரணையாகவே அமைந்தது. இதன் பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம், படைப்பு தத்துவத்தை பள்ளிகளில் கற்பிப்பது அரசியல் சட்டவிதிகளுக்குப் புறம்பானது எனக்கூறி தடைவிதித்தது.
அண்மை ஆண்டுகளாக, அறிவார்ந்த திட்டம் (Intelligent Design) எனும் கூற்றுக்கு ஆதரவான இயக்கங்கள் மூலமாக பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பி, படைப்புத் தத்துவத்தை மீண்டும் பள்ளிகளில் போதிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போலி விஞ்ஞான மதம் சார்ந்த நம்பிக்கைகளின் ஆதரவாளர்கள், உயிர்களின் வடிவமைப்புகள் ஒரு அறிவார்ந்த திட்டம் மட்டுமே இவற்றை படைத்திருக்க முடியும் என்கிற அளவிற்கு மிகச் சிக்கலானவை என்று வாதிடுகின்றனர். மூன்று ஆண்டுகட்கு முன்னர் பென்ஸில்வேனியா மாகாண நீதிபதி அறிவார்ந்த திட்டம் என்பது படைப்புத் தத்துவத்தின் வாரிசுதான் எனக்கூறி இதனை கற்பிக்கும் முயற்சிக்கு எதிராக தீர்ப்பளித்தார். துரதிருஷ்டவசமாக, பரிணாமக் கோட்பாட்டின் மீது அவநம்பிக்கை என்பது அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடவில்லை. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரிட்டனின் அரசு பள்ளி விஞ்ஞான ஆசிரியர்களில் கால்பகுதியினர் பரிணாமக் கோட்பாடுடன், படைப்புக் கோட்பாடும் கற்றுத் தரப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர், உயிரியியலாளரும், பாதிரியாருமான மைக்கேல் ரெய்ஸ் என்பவரின் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றிய கருத்து ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டதால் அரசவைக் கல்விக் குழு இயக்குநர் பொறுப்பிலிருந்து பதவி துறப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். “நேச்சர்” (Nature) எனும் பத்திரிகை தனது தலையங்கத்தில் பேராசிரியர் ரெய்ஸ், வகுப்பறையில் படைப்பு வாதம் பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டால் படைப்புக்கோட்பாடு ஏன் விஞ்ஞானப்பூர்வமற்றது எனவும், பரிணாமக் கோட்பாடுதான் விஞ்ஞான அடிப்படையிலானது என்றும் ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று தான் கூறியிருந்தார் என எழுதியுள்ளது. அவர் கூறியது சரியானது. அதுதான் விஞ்ஞானப்பூர்வமுறை- விடைகளைக் காணும் முறை, வெறும் காட்சிகளின், விதிகளின் கோட்பாடுகளின் கலவையாக மட்டும் விஞ்ஞானத்தைப் போதிக்காமல் விஞ்ஞான முறைப்படி ஆதாரங்களைச் சேகரித்து விடைகளைக் காணும் இந்த முறையைத் தான் உலகெங்கும் உள்ள வகுப்பறைகளில் அழுத்தமாக சொல்ல வேண்டும்.
(இந்து தலையங்கம்- 24.12.08)
தமிழில் : நீலகண்ட சுப்பிரமணியன், சேலம்.
வினவு - வினை செய்! மாமா வேலை செய்வோருக்கு எதிராய்!
அதாவது ம.க.இ.க. என்கிற அமைப்பு ஏதோ பெரிய புரட்சிகர அமைப்பு போல பண்ணையார் அரசியல் செய்து வருகிறது. அதாவது பண்ணையார் வைத்ததே சட்டம். அதனை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்கிற நிலப்பிரபுத்துவ - ஏகாதிபத்திய மனோபாவம் வெளிப்படுத்துவதை இணையவாசிகள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.
சரி, ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அடிப்படை ஒரு புரட்சிகர கட்சி! தன்னை ஒரு புரட்சிகர அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ம.க.இ.க. என்கிற ஒரு கலை அமைப்பு பிரதானப்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு எது என்று யாராவது கேட்டால், இது உளவுத்துறை கேட்கும் கேள்வி! என்று ஒரே வரியில் முடித்துக் கொள்வார்கள்.
உண்மையில் இந்த அமைப்பின் பின் இயங்கும் அரசியல் சக்தி - ம.க.இ.க. மறைமுகத் தலைமை CPI-ML [SOC] என்பதே. இன்றைய நவீன ஜனநயாக உலகில் - தங்களை நக்சலைட்டுகள் என்று பகிரங்கமாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க. அதன் கட்சிப் பெயரை மட்டும் வெளியில் சொல்லவே சொல்லாதாம். உண்மை இங்குதான் இருக்கிறது. தன்னுடைய கட்சி இது என்று கூறிவிட்டால் அப்புறம் வரக்கூடிய இடிகளை யார் தாங்குவது என்கிற அவநம்பிக்கையான அரசியல்தான் காரணம்.
சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் மார்க்சும், எங்கெல்சும் 1847 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
சரி, ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் அடிப்படை அம்சைமே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு.
அதாவது அந்த அமைப்பின் கிளைகள் முறையாக கூட வேண்டும். குறிப்பாக கட்சி மேலிருந்து கட்டப்படுவது. அந்த அமைப்புக்கான மாநாடுகள் திட்டமிட்ட கால அளவில் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஆவணங்களை இறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகளை மேற்கண்ட அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.ஓ.சி. குழு எப்படி மேற்கொள்கிறது! பரலோகத்திலா? அல்லது இணையத்தின் மூலமே ஏதாவது சாட்டிங் கான்பிரன்ஸ் மூலம் நடத்துகிறீர்களா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே!
நேபாளத்தில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள நேபாள மாவோயிஸ்ட்டுகள் கூட தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள். அத்துடன் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்?
அது மட்டுமா? இந்தியாவில் உள்ள பல நக்சல் அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துகிறார்கள். (இதில் எனக்கு வித்தியாசம் உண்டு அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை.)
ஆனால், தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்.
மேலும், தற்போது ம.க.இ.க.வில் செயல்படும் யாருக்கும் சொந்தப் பெயர் கிடையாது! போலிகள்தான். அனானிகள்தான். அது மட்டுமா இணையத்தில் கூட அனானியாக பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புரட்சிகர மாமா வேலை பார்ப்பதுதான் இவர்கள் வேலை.
அது மட்டுமல்ல; ஒரே ஒரு ம.க.இ.க. ஆட்களாவது தாங்கள் குடி இருக்கும் இடத்தில் செயல்படுகிறார்களா? என்றால் இருக்கவே இருக்காது. அப்புறம் சாயம் வெளுத்து விடுமே! அதனால்தான் சி.பி.எம். செயல்படற இடமா பார்த்து பிரச்சாரம் செய்வது - பிரச்சனை செய்வது என்பது இவர்களின் தொடர் கதையாகிப் போயுள்ளது. வீண் வம்புக்கு இழுப்பது இவர்கள்தான் எல்லா இடத்திலும். சி.பி.எம். கூட்டம் போட்டால் அங்கே இவர்களது புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது சீர்குலைவு அரசியலின் உச்சகட்ட சீரழிவே ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் சீரழிந்த அரசியல்.
இவர்களது வர்க்க எதிரி யார் என்று கேட்டால் இன்று வரைக்கும் தெரியாது? ஏனென்றால் இவர்களிடம் கட்சித் திட்டமே கிடையாதே! அதனால்தான் தற்போது இவர்கள் "இந்தியா மறுகாலனியாவதை எதிர்க்கிறார்களாம்". அது சரி உங்கள் அமைப்போ எஸ்.ஓ.சி. மாநில அமைப்பு கமிட்டி. அப்படியென்றால் உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் "தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ம.க.இ.க.-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.
இந்திய புரட்சி பற்றி பேசும் இந்த புரட்கிர ஓநாய் கூட்டம் தமிழில் பேசாத மக்களை எந்த நாட்டிற்கு கடத்தக் கோருகிறது என்று கேட்டால் பல்ளிளிப்பார்கள். இதுதான் கேள்வி! உங்கள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? அல்லது பிழைப்புவாத இயக்கமா? உங்கள் புரட்சி தமிழகத்தில் மட்டுமா? அல்லது நாடு தழுவியதா? என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது. இதுவெல்லாம் உளவுத்துறை கேட்கும் கேள்வி என்று பசசப்புவார்கள்.
அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான். அதாவது பா.ஜ.க. மற்றும் காங்கிரசை எதிர்ப்பதெல்லாம் சும்மா பெயருக்கு புரட்சி என்று காட்டிக் கொள்ளத்தான். அதாவது இந்தியாவில் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக சி.பி.எம். வளர்வதை இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகளும் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் புரட்சியைப் பேசிக் கொண்டே சி.பி.எம்.யை எதிர்க்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு செயலாற்றுகிறார்கள். இதுதான் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மையான அரசியல்.
அது மட்டுமா? ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் கீழைக் காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.
மேலும் இந்த அமைப்பில் சேர்ந்து செயலாற்றிய பல தொண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கூட இந்த அமைப்பpல் நீடிப்பதில்லை என்பது உண்மையானது. அந்த அளவிற்கு இவர்களது அரசியல் சாக்கடை வீசும். தற்போது இவர்களது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு தொண்டர்கள் இவர்கள் அரசியல் சாக்கடையைப் பார்த்து ஓடி விட்டார்கள். மேலும் தற்போது இவர்கள் வினவு - வினை செய் என்று இணையத்தில் தூண்டில் வீசுகிறார்கள். உன்னுடைய உண்மையான முகம் என்ன என்று வினவுங்கள் நன்பர்களே. இன்னே வினை செய்யுங்கள். இந்த ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக.
அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!
அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!
தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!
ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்...
கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!
December 29, 2008
காவியம் படைத்த அரசியல் கவிஞன்!
மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின் 400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.
மதவாதிகளும், பழமைவாதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.
இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம், இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.
உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’ எழுதுவதற்கு கருவானது.
கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas), கோமாஸ் (Comus)..
அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.
The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,... (Book 1, 286-290
‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)
கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.
இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639 இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன் 1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.
சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட் கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி, தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ் மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.
மன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ‘ஏரோபிஜிடிகா’ (Areopagitica) என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ‘ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்’ என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார். 1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.
ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள் சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாக’ கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டால் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.
1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் “ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்” (On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக!
இருப்பினும், இதில் மனம் தளராத மில்டன், தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் ‘இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை 1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12 புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்ட ஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.
குறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது ‘கடவுளை வென்ற சாத்தான்’ என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.
விண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில், புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு, ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்’ என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள், ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும், மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.
இந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.
What though the field be lots? All is not lost.
(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,
(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.
மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர்மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம் ‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Regained).
இது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.
தனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.
400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ். ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும், தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.
கே. செல்வப்பெருமாள்