December 30, 2008

பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள்

மனித சமுதாயத்தின் மிகப்பெரிய மேதைகளுள் ஒருவரான சார்லஸ் டார்வின் - இன் இருநூறாவது பிறந்த நாளை, பிப்ரவரி 12-லும், அவருடைய மாபெரும் படைப்பான உயிரினங்களின் தோற்றம்பிரசுரிக்கப்பட்டதின் 150வது ஆண்டை நவம்பர் 2009லும் உலகம் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பரிணாமக் கோட்பாட்டிற்கு கடவுள் நம்பிக்கை அடிப்படையிலான எதிர்ப்பு மேற்கத்திய உலகில் இன்றளவும் வலுவாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் விநோதம் என்னவென்றால் உலகின் மிகச் சிறந்தமருத்துவ உயிரியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்டதாகவும், மிகஅதிக எண்ணிக்கையில் நோபல் விருது பெற்றவர்களின் குடியிருப்பாகவும், திறனூக்கம் கொண்ட உயிரியல் தொழில்நுட்ப தொழிற்சாலைகளைத் தன்னகத்தே கொண்டதுமான அமெரிக்க நாட்டில்தான் இதுபோன்ற எதிர்ப்புணர்வு வலுவாக உள்ளது! மரபணு கட்டமைப்பை விளக்கியும், மரபணு ரகசியங்களை உடைத்தும், மரபணுக்களை வரிசைப்படுத்தியும், தொகுத்தும் வெளியிடப்பட்டுள்ள நவீனகால ஆய்வு விளக்கங்கள், பூமியின் அனைத்து உயிர் இனங்களும் ஒரு பொதுவான துவக்கத்திலிருந்தே தோன்றின என்கிற டார்வினின் கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகின்றன. உயிர் வாழ்வனவற்றின் பல்வேறு வடிவங்கள், பயனுள்ள மரபணு மாற்றங்களை பரப்புதலும், கேடு பயப்பனவற்றை களை நீக்குதலும் என்கிற இயற்கைத் தேர்வு எனும் செயல்வழியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.

 

ஆயினும், பரிணாமக் கோட்பாட்டிற்கு ஆதரவாக மிக வலுவான விஞ்ஞான ஆதாரங்கள் இருந்தாலும் பைபிள் கூறும் படைப்புத் தத்துவத்தை ஆதரிப்பவர்களின் எதிர்ப்பு குறையவில்லை. கல்விக்கூடங்கள் நெடுங்காலமாகவே இவர்களின் போர்க்களமாக இருந்து வருகின்றன. 1925ல் டென்னஸி மாநிலத்தில் நடைபெற்ற அவப்பெயரடைந்த ஸ்கோப்ஸ் விசாரணைஅம்மாநில அரசு தடை செய்த பரிணாம கோட்பாட்டை போதித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிரான குற்ற விசாரணையாகவே அமைந்தது. இதன் பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம், படைப்பு தத்துவத்தை பள்ளிகளில் கற்பிப்பது அரசியல் சட்டவிதிகளுக்குப் புறம்பானது எனக்கூறி தடைவிதித்தது.

 

அண்மை ஆண்டுகளாக, அறிவார்ந்த திட்டம் (Intelligent Design) எனும் கூற்றுக்கு ஆதரவான இயக்கங்கள் மூலமாக பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பி, படைப்புத் தத்துவத்தை மீண்டும் பள்ளிகளில் போதிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போலி விஞ்ஞான மதம் சார்ந்த நம்பிக்கைகளின் ஆதரவாளர்கள், உயிர்களின் வடிவமைப்புகள் ஒரு அறிவார்ந்த திட்டம் மட்டுமே இவற்றை படைத்திருக்க முடியும் என்கிற அளவிற்கு மிகச் சிக்கலானவை என்று வாதிடுகின்றனர். மூன்று ஆண்டுகட்கு முன்னர் பென்ஸில்வேனியா மாகாண நீதிபதி அறிவார்ந்த திட்டம் என்பது படைப்புத் தத்துவத்தின் வாரிசுதான் எனக்கூறி இதனை கற்பிக்கும் முயற்சிக்கு எதிராக தீர்ப்பளித்தார். துரதிருஷ்டவசமாக, பரிணாமக் கோட்பாட்டின் மீது அவநம்பிக்கை என்பது அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடவில்லை. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரிட்டனின் அரசு பள்ளி விஞ்ஞான ஆசிரியர்களில் கால்பகுதியினர் பரிணாமக் கோட்பாடுடன், படைப்புக் கோட்பாடும் கற்றுத் தரப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர், உயிரியியலாளரும், பாதிரியாருமான மைக்கேல் ரெய்ஸ் என்பவரின் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றிய கருத்து ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டதால் அரசவைக் கல்விக் குழு இயக்குநர் பொறுப்பிலிருந்து பதவி துறப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். நேச்சர்(Nature) எனும் பத்திரிகை தனது தலையங்கத்தில் பேராசிரியர் ரெய்ஸ், வகுப்பறையில் படைப்பு வாதம் பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டால் படைப்புக்கோட்பாடு ஏன் விஞ்ஞானப்பூர்வமற்றது எனவும், பரிணாமக் கோட்பாடுதான் விஞ்ஞான அடிப்படையிலானது என்றும் ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று தான் கூறியிருந்தார் என எழுதியுள்ளது. அவர் கூறியது சரியானது. அதுதான் விஞ்ஞானப்பூர்வமுறை- விடைகளைக் காணும் முறை, வெறும் காட்சிகளின், விதிகளின் கோட்பாடுகளின் கலவையாக மட்டும் விஞ்ஞானத்தைப் போதிக்காமல் விஞ்ஞான முறைப்படி ஆதாரங்களைச் சேகரித்து விடைகளைக் காணும் இந்த முறையைத் தான் உலகெங்கும் உள்ள வகுப்பறைகளில் அழுத்தமாக சொல்ல வேண்டும்.

(இந்து தலையங்கம்- 24.12.08)
தமிழில் : நீலகண்ட சுப்பிரமணியன், சேலம்.

 


No comments: