May 02, 2008

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ம.க.இ.க.!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை CPI-ML [SOC] - இன் கட்சித் திட்டம் குறித்து இதுவரை ஆறு கட்டுரைகளை சந்திப்பில் பதிந்துள்ளேன். எஸ்.ஓ.சி. கட்சித் திட்ட நிர்ணயிப்புகள் குறித்து இதுவரை எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காத நன்பர்கள் திரும்பத் திரும்ப சி.பி.எம். மீதான அவதூறுகளை கிளப்பி திசை திருப்பவே முனைவதுதான் அபத்தம். மாறாக, அசுரன் மட்டும் பழைய கட்டுரைகளை தோண்டித் துருவி புதிய முலாம் பூசி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இந்தக் கட்டுரையில் அவர்களது இலக்கை அடைவதற்கான யுத்த தந்திரம் குறித்து பார்க்கலாம். இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்த இவர்களது தவறான நிலைபாடுகளே மொத்த தவறுகளுக்கும் அஸ்திவாரமாக திகழ்கிறது. மொத்தத்தில் இந்திய ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்காக இவர்கள் காட்டும் பாதை ஹாரிபாட்டர் கதைகளை மிஞ்சக் கூடிய சாகசமாகவே இருக்கிறது.

எஸ்.ஓ.சி. கட்சித் திட்டப் பிரிவு 39 இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

".... முதலில் கிராமப்புறங்களை விடுதலை செய்து இறுதியாக நகர்ப்புறங்களைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தோடு ஒருங்கிணைக்கும். "

பிரிவு 40 இல்... "இந்தியாவின் விடுதலைக்கான பாதை மற்ற எல்லா காலனிய, அரைக்காலனிய - அரை நிலப்பிரபுத்துவ நாடுகளையும் போலவே நீண்டகால மக்கள் யுத்தப் பாதையாகும்... "

பிரிவு 42 இல், "உழவர்களைச் சார்ந்து நிற்பது, கிராமப்புறங்களில் தளப் பிரதேசங்களை நிறுவுவது, நீண்டகால ஆயுதப் போராட்டத்தில் அழுந்தி நிற்பது, கிராமப்புறங்களைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களைச் சுற்றி வளைத்து இறுதியில் நாடு முழுமையையும் கைப்பற்றுவது; ஆகியவற்றின் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம வெற்றிகரமான மக்கள் யுத்த்தைத் தொடுக்க முடியும். "

எஸ்.ஓ.சி. போலி நக்சலிசவாதிகள் தாங்களது முதலாளித்துவ புதிய ஜனநாயக புரட்சியை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதை மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதாவது, நான்கு நாட்டு அடிமை இந்தியாவை தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சியை மேற்கொள்ளப் போவதாக கதைக்கிறது இவர்களது கட்சித் திட்டம். அதுவும் கொரில்லாப் போர்முறையில் என்பதுதான் வேடிக்கையானது. எப்படி மேற்கொள்ளப் போகிறார்கள்? முதலில் கிராமப்புறங்களை தங்களது தளப் பிரதேசங்களாக மாற்றுவது பின்னர் படிப்படியாக முன்னேறி நகர்ப்புறங்களை கைப்பற்றுவது இப்படித்தான் இந்தியாவில் புரட்சியை நடத்தப் போகிறார்கள் இந்த எஸ்.ஓ.சி. நக்சல் குழுவினர்.
என்ன? கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து பிடித்த கதையாகத்தான் இருக்கிறது இவர்களது புரட்சிகர போர்த்தந்திர திட்டம்!

பிரச்சினையின் ஆரம்பமே எங்கே இருக்கிறது என்றால்? இந்தியா இன்னும் முழுமையாக விடுதலை அடையாத நாடு? அது அடுத்தவன் தயவில் அதுவும் நான்கு நாடுகளின் ஆதரவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சும்மா ஒரு ஊது ஊதினால் இந்த ஏகாதிபத்திய சக்திகள் பறந்தோடி விடும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர் எஸ்.ஓ.சி. குழுவினர். இந்திய பெரு முதலாளிகள் தலைமையிலான ஆளும் வர்க்கம் மிகவும் பலமானது என்பதை உணர்ந்து கொள்ளாததாலும், அது தன்னுடைய சுயேச்சையான வழியில் செல்லத் தக்கது என்பதை அனுபவத்தின் மூலம் உணராததாலும், தன்னுடைய வளர்ச்சிக்கு அது ஏகாதிபத்தியத்தையும் - நிலப்பிரபுத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற உண்மையை மறந்ததால் வந்த வினையே இந்த ஹாரிபாட்டர் புரட்சி கதை!

இன்றைக்கு இந்தியாவை துணை வல்லரசு என்று கதைக்கும் இதே எஸ்.ஓ.சி.தான் அடிமை நாடு என்றும் பட்டம் சூட்டுகிறது என்ற உள் முரண்பாட்டை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம்.

அதாவது, இந்திய பெரு முதலாளித்துவ அரசின் அரசு எந்திரம் மிக வளுவானது என்பதை எஸ்.ஓ.சி. கும்பல் மறக்கிறது. இந்திய அரசின் இராணுவம் - அரசு கட்டமைப்பு - பொருளாதாரம் இவையனைத்தும் ஒரு வலுவான கண்ணியாக பின்னிப் பிணைந்துள்ளது. இவர்களின் வர்க்க நலனை காப்பதற்காக தற்போதைய அரசு எந்திரம் நன்றாக பயிற்று விக்கப்பட்டுள்ளது. எனவேதான் எஸ்.ஓ.சி. கும்பல் கனா கான்பது போல் ஒரே ஒரு கிராமத்தைக்கூட இன்னும் இவர்களால் கைப்பற்ற முடியவில்லை. தங்களது தளப் பிரதேசங்களாக மாற்ற முடியவில்லை. இவர்களின் தளப் பிரதேசங்களை இந்திய இராணுவத்தைக் கொண்டுக் கூட நசுக்க வேண்டியதில்லை. மாநில போலீசைக் கொண்டே நசுக்கி விடும் என்ற உண்மையைக் கூட உணராத பாலகத்தன்மையோடு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்திய சட்டீஸ்கர் உதாரணம் என்ன? நக்சலிச வன்முறை அரசியலை முறியடிப்பதற்காக, மாநில அரசு அங்குள்ள பழங்குடியின மக்களைப் பயன்படுத்தி சல்வாஜூடும் என்ற அமைப்பை உருவாக்கி நக்சலிசத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்த வைத்துள்ளது. தற்போது நக்சலிசவாதிகள் இவர்களை தங்களது பிரதான எதிரி வர்க்கம் போல் கருதி சுட்டுக் கொல்வதும் - அவர்களது குடிசைகளுக்கு தீயிடுவதும் வாடிக்கையாகியுள்ளது. அதாவது, எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்கள் நிற்கிறார்களே அந்த வர்க்கமே இவர்களுக்கு எதிரியாகவும் திருப்பப்படுகிறது.

இங்கேதான் இவர்களது நடைமுறை தவறுகள் பாடமாக படிகிறது. பெருந்திரளான மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவதற்கு பதிலாக சிறு குழுக்களை வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் செய்வதால் மாற்றம் வரும் என்பது இந்திய சூழலுக்கு பொருந்துமா? என்பதை இவர்கள் பரிசீலிக்கத் தயாராக இல்லை. தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியதன் மூலம் கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவே இன்றைக்கு சி.பி.எம். உட்பட பல்வேறு இடதுசாரி கட்சிகள்? ஏன் இவர்களது வாரிசுகளான லிபரேசன் - செங்கொடியினர் - டெமாக்ரசி போன்றவர்கள் எல்லாம் கூட ஜனநாயக ரீதியாக வெளியிலிருந்து செயல்படுவதற்கு வந்து விட்டார்கள் என்ற உண்மையை உணராமல் பழைய பஞ்சாகத்தை தனது கட்சி அணிகளுக்கு போதித்து வருகிறது எஸ்.ஓ.சி.
1976இல் துவக்கிய எஸ்.ஓ.சி. கடந்த 30 ஆண்டுகளாக எத்தனை கிராமங்களை தனது தளப் பிரதேசங்களாக மாற்றியது? தமிழகத்தில் அதற்கு எத்தனை கிளைகள் உள்ளது? இவர்களது கொரில்லா போர் முறைகள் எல்லாம் வெறும் எழுத்தில் மட்டும் தானா? வெகுஜன தேர்தல் அரசியலை நடைமுறை தந்திரப் போர் முறையின் ஒரு பகுதியாக கொண்டுள்ள சி.பி.எம்.யை விமர்சிக்கும் எஸ்.ஓ.சி. தாங்கள் எழுதி வைத்துள்ள எதனையும் எள் முனையளவு கூட நிறைவேற்ற வில்லை என்பதையாவது உணருமா?

மேலும், தற்போது இந்திய பெரு முதலாளி வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ கூட்டு உட்பட பல்வேறு முனைகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முனைகிறது. (இத்தகைய கூட்டினை சி.பி.ஐ.(எம்) தொடர்ந்து எதிர்த்து வருகிறது.) மேலும் ஒடுக்குமுறை கருவியான இராணுவத்தையும் - போலீசையும் நவீனப்படுத்தி வருவதோடு, மக்கள் மீது அவற்றை ஏவுவதற்கும் - போராட்டங்களை ஒடுக்குவதற்கும் பெரும் பலம்பெற்றதாக விளங்குகிறது. இந்நிலையில், தங்களது போர்முறையான கொரில்லா போர்முறை என்பது உயிர்பலிகளை கொண்டதொரு வன்முறை வழியே தவிர புரட்சிகர வழியாகாது! அவ்வாறு மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் முளையிலேயே கிள்ளியெறியும் இந்திய ஆளும் வர்க்கம்! இது ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டுமே நடக்கக்கூடிய செயலாக இருக்குமே தவிர மக்கள் மத்தியில் செயலாற்றக்கூடிய புரட்சிகர பணியாக இருக்காது.
இதற்காக இவர்கள் சீனாவில் நடைபெற்ற புரட்சியை உதாரணம் காட்டலாம். ஆனால் நடைமுறையில் சீனாவின் புரட்சி நடைபெற்ற காலமும் - தற்போதைய காலமும் முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் சீனாவின் புரட்சிகால வர்க்கத் தன்மைக்கும் இந்தியாவின் தற்போதைய வர்க்கத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபாடு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே புரட்சியை இறக்குமதி செய்ய முடியாது? ஒவ்வொரு நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்க சக்திகளை அடையாளம் காண்பதும் - அதற்கேற்ப யுத்த தந்திர மற்றும் நடைமுறை தந்திரங்களை கடைப்பிடிப்பதுமே புரட்சியை வெற்றிகரமாக்கும். ஆனால் எஸ்.ஓ.சி. நடைமுறையில் நிறைவேற்ற நினைப்பது வெறும் கற்பனாவாத புரட்சியே தவிர வேறல்ல.
எஸ்.ஓ.சி. கும்பல் தனது புரட்சிகர வாய்ச் சவடாலை நிறுத்தி விட்டு இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய தவறான மதிப்பீடுகளிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற உள்கட்சி சர்ச்சையிலாவது ஈடுபடலாம் அதுவே இந்த ஓட்டைப் படகை கரையேற்றவாவது வழிவகுக்கும்.

2 comments:

Anonymous said...

இந்தியாவில் அதுவும் நகர்மயமாக்கம் அதிகமான தமிழ்நாட்டில் அதுவும் ஏகாதிபத்தியத்தின் நுழைவாயிலான சென்னையில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவை முதலாளித்துவ அரசுதான் ஆள்கிறது என்று கதை விடுகிறார் சந்திப்பு. இந்திய மாநகரங்கள் வேண்டுமானால் முற்றிலுமாக முதலாளித்துவ வடிவத்திலான ஒரு அரசை கொண்டிருக்கலாம். ஆனால் கிராமங்களில், மத்திய நகரங்களிலும் ஆட்சி செய்வது சாதிதான். சந்திப்பின் கணக்கில் முதலாளித்துவ நாடாக மாறி 60 வருடங்கள் கழிந்து விட்ட இந்தியாவில் இந்த வாரம் தான் ஒரு தீண்டாமை சுவர் உடைக்கப்பட்டது, சமீபத்தில் பெரியார் திக போராடிய இரட்டை குவளை எதிர்த்து போராடியது. சமீபத்திய பாப்பாபட்டி கீரிபட்டி சம்பவங்களும் நிகழ்ந்தன. இவையெல்லாம் இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகள் எதால் ஆளப்படுகிறது என்பதற்க்கு சான்றுகளாக உள்ளன.

இந்தியாவிலேயே அதிகமாக முதலாளித்துவம் ஊடுருவிய ஒரு மாநிலம் தமிழகம் இங்கேயே இதுதான் நிலைமை எனில் முதலாளித்துவ ஊடுருவல் மிக பின் தங்கிய வட மாநிலங்களின் நிலமை இதை விட மிகமோசம்(பிஹார் சம்பவங்களும், காட்டாட்சி நடக்கும் சட்டீஸ்கரும் எடுத்துக்காட்டுகள்). அங்கே நேரடியாக சாதிகள்தான் ஆட்சி செய்கின்றன. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு கதை விடுகிறார் சந்திப்பு.

இவர்கள்து போலீசு, ராணூவத்தின் அருகதையை சமீபத்தில் அமெரிக்கா இந்திய அரசை எச்சரிக்கை செய்திருந்த சம்பவம் அம்பலப்படுத்தியது. அதாவது நக்சல்பாரிகள் வலு வடைந்து வருகிறார்களாம். இந்திய அரசு கையாலாகமல் இருக்கிறது என்று அமெரிக்கா எச்சரிக்கிறது.

பிரதமரோ கதறுகிறார் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அபாயம் நக்சல்பாரிகள் என்று. ஏன் அபாயம் என்றும் காரணம் சொல்கிறார். அதாவது இந்திய வளங்களை உபயோகப்படுத்தப்படுவதை அவர்கள் தடுக்க்றார்களாம். இந்திய வளங்களை யார் உபயோகப்படுத்த நக்சல்பாரிகள் தடையாக இருககிறார்கள்? வேறு யாருமல்ல ஒரிஸ்ஸாவின், சட்டீஸ்கரின், ஆந்தாராவின், கர்நாடகாவின் இயறகை வளங்களை சுரண்டி கொழுக்க வரும் பன்னாட்டு கம்பேனிகளை வரவிடாமல் பயமுறுத்துகிறார்கள் நக்சல்பாரிகள். முக்கியமாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ள நக்சல்பரி அபாயா மாநிலங்களின் மேற்கு வங்களாம உள்ளது(சந்திப்பு மே வாவில் நக்சல்பாரிகள் இல்லை என்று கதை விட்டு வருகிறார்). இதனை எதிர்க்கும் வலுவின்றி போலீசு உள்ளதாக பிரதமர் வருந்துகிறார்.

சந்திப்பு, நாடாளுமன்றத்த்ல் உட்கார்ந்து கொண்டு நந்திகிராமில் நீங்கள் கிழித்தது தெரியும். மாறாக நக்சல்பரி பீனிக்ஸ் பறவையாக நெருப்பிலிருந்து பிறந்து கொண்டேதான் உள்ளது. மறையாது மடியாது நக்சல்பரி....

எனவே கதையடிப்பது நிருத்தி விட்டு யாதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

நக்சலைட்

ஏகலைவன் said...

((((////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்/////

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.))))

இப்படி பல ரிமைண்டர் நான் கொடுத்துவிட்டேன். அவற்றையெல்லாம் முறையாக பதிப்பிக்காவிட்டாலும்கூட பரவாயில்லை, கட்டபொம்மன் வைத்த இந்தக் கேள்விக்கு உமது பதில் எங்கே?