பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமிழக அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு பண்பாளர். தமிழ் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை சமூகத்தில் பரப்பி வருவதில் அவரது பங்கு அனைவராலும் போற்றப்படுகிறது.
பேராசிரியர் சுப.வீ. அவர்களின் இன்றைய பணி. தி.மு.க.வின் - கருணாநிதியின் கொள்கைப் பரப்பும் செயலாளராக மாறிவிட்டதுதான். தமிழகம் முழுவதும் நடைபெறும் தி.மு.க. கூட்டங்களில் சுப.வீ. முக்கிய பேச்சாளராக மாறிவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்டால் அண்ணா நூற்றாண்டு கூட்டம். அதனால் கலந்து கொள்கிறேன் என்று சப்பைக் கட்டு கட்டுவார். அண்ணா நூற்றாண்டுக்காக அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் யாரும் இதனை பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் தி.மு.க. அரசியல் மேடைகளில் சுப.வீ. காட்சியளிப்பதும்... அந்த இடங்களில் இவர் பேசும் அரசியலும்தான் நம்மை கேள்விக்கு உள்ளாக்கி தூண்டுகிறது.
குறிப்பாக திருவொற்றியூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகிறார். பெரியாரும் - அண்ணாவும் அரும்பாடுபட்டு இந்த சமூகத்தை முன்னேற்றினர் இதற்காக ஏராளமான தியாங்கள் செய்தனர். அவர்களது கொள்கைகளை கருணாநிதி இன்று வரை கட்டிக்காத்து வருகிறார்... ஆனால் இன்றைக்கு யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். விஜயகாந்த முதல் வடிவேலு வரை ஏன் நமீதா கூட வரலாம்... என்று தி.மு.க. பேச்சாளர்களுக்கு எள்ளவும் குறையாத அளவில் குஷீயாக பேசினார்.
இங்கே நமது கேள்வி என்ன? பெரியாரும் - அண்ணாவும் வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகள் மக்களிடம் இன்றைக்கு செல்வாக்கிழந்து ஏன் விஜயகாந்திடமும் - வடிவேலுவிடமும் - நமீதாவிடமும் சரணடைந்தது என்று இந்த பேராசிரியர் விளக்க வேண்டாமா? அது குறித்து ஆய்வு நடத்த வேண்டாமா? திராவிட இயக்க கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு - தங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டவர்கல்லவா தி.மு.க.வினர்.
அது மட்டுமா? 1967 இல் அண்ணா காங்கிரசை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரசை தமிழகத்தில் அரசியல் ரீதியாக விரட்டியடித்தவர் அண்ணா. ஆனால் இன்று நிலைமை என்ன? தி.மு.க.தானே அந்த மூழ்கும் கப்பலை கரையேற்றிக் கொண்டிருக்கிறது. தோளில் தூக்கி காவடி சுமந்து வருகிறது.
தி.மு.க. காங்கிரசை மட்டுமா சுமந்தது? பா.ஜ.க.வையும்தானே! இவைகள் எல்லாம் அண்ணா நூற்றாண்டில் பரிசீலிக்க வேண்டாமா? அடுத்து அவர் கூறுகிறார். பெரியார் கடவுளின் எதிரி என்பது போல் சித்தரித்து விட்டார்கள். அவரது மற்ற கொள்கைகளை பேசுவது கிடையாது என்று அதே மேடையில் கூறினார். யார் பெரியாரை அவ்வாறு சித்தரித்தார்கள் என்று விளக்க வேண்டாமா? ஒரு வேளை பெரியாரின் கடவுள் மறுப்பு சித்தாந்தத்திலிருந்து விலகி, ஒன்றே ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று அண்ணா முழங்கினாரே அந்த விலகல் சரியானது என்கிறாரா? இந்த பேராசிரியர்.
மேலும் போகிற போக்கில் தி.மு.க. தொண்டர்களுக்கு கிக் ஏற்றும் வகையில் வடிவேலுவின் கட்சி ஆரம்பித்தால் அவர்களுடன் கூட இடதுசாரி கட்சிகள் உறவு வைத்துக் கொள்வார்கள்... என்று கிண்டல் வேறு.
கேள்வி என்ன? தி.மு.க.வுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லவில்லையே! இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் நிறைவேற்றத் துணிந்தபோது அதற்கு துணை போக வேண்டாம் என்று தி.மு.க.வை இடதுசாரிகள் எச்சரித்தார்கள். ஆனால் எப்போதும் அவர்களுக்கு கொள்கை என்ற கோமணம் (பதவி)தான் பெரியது என்றால் அதனை விடாமல் பிடித்துக் கொள்ள இன்றும் உறவைத் தொடர்கிறார்கள். எனவேதான் இந்த நிலையில் காங்கிரஸ் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்ளாத கட்சிகளுடன் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்போம் என்று நாடு முழுவதும் அதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள் இடதுசாரித் தலைவர்கள். இந்நிலையில், சுப.வீ. அணு சக்தி ஒப்பந்தம் பற்றி அறியாதவரா? இதில் அவரது நிலை என்ன? தி.மு.க.வின் நிலையோடு ஒத்து ஊதுகிறாரா? அல்லது மேடை கிடைத்து விட்டால் போதும் கொள்கை கோமணத்தை அப்புறம் சரி செய்து கொள்ளலாம் என்று சிந்திக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் சுப.வீ.யின் சொந்த கட்சிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கு கூட ஆள் கிடைக்காத நிலையில் பாவம் அவர் என்ன செய்வார். தி.மு.க.வின் அரசியல் அனானியாக மாறுவதைத் தவிர!