Showing posts with label 123. Show all posts
Showing posts with label 123. Show all posts

September 11, 2008

யாருக்காக இந்த ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய ஆளும் வர்க்கமும் - அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளும் இணைந்து அதிவேகமாக செயலாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் கண்ணில் மண்ணைத் தூவி அம்பலப்பட்டு விழிபிதுங்கி நின்ற காட்சிகள்தான் பிம்பமாய் நிழலாடுகிறது. 


இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் புஷ்ஷின் பதவிக் காலத்திற்குள்ளாக இதனை முடிப்பதற்கு அமெரிக்க ஆட்சியாளர்கள் சிரத்தை எடுத்துச் செயலாற்றுகின்றனர். இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயமடையப்போவது யார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கான விவாதம் இந்தியாவிலும் - அமெரிக்காவிலும் வெகுஜோராக இப்போதே தொடங்கி விட்டது. 


இடதுசாரி கட்சிகளும் - இதர ஜனநாயக சக்திகளும் இந்த ஒப்பந்தம் 1. இந்திய நாட்டின் சுயேச்சையான அயல்துறை கொள்கைக்கு வேட்டு வைக்கப்படுகிறது, 2. நேருவின் அணி சேரா கொள்கை என்ற கோட்பாடு பலியிடப்படுகிறது, 3. ஆசியாவில் அமெரிக்காவின் கேந்திர கூட்டாளியாக இந்தியாவை மாற்றும் நோக்கம் கொண்டது, 4. சுயேச்சையான அணு சக்தி கொள்கை கை கழுவப்படுகிறது. . . என்று அடுக்கடுக்காக வைத்த குற்றப் பத்திரத்திற்கு இதுவரை சரியான பதிலை வழங்காத ஐ.மு.கூ. அரசு கிளிப் பிள்ளைப் போல் ஒரே விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறது. அது என்னவென்றால், ‘இந்தியாவை கடந்த 25 ஆண்டுக் காலமாக அணு சக்தி துறையில் உலகளவில் ஒதுக்கி வைத்ததிலிருந்து விலக்கு பெறுகிறது’ என்று பெருமையடித்துக் கொள்கிறது. 


இந்த விஷயத்தில் கூட, எதிர்காலத்தில் நாம் அமைக்கக்கூடிய அணு உலைகளுக்கு தடையில்லாமல் யுரேனிய எரிபொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கிடைக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை உருப்படியான விடையில்லை என்பதே உண்மை நிலை. மேற்கண்ட விஷயங்கள் அப்படியே தொடரும் நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல், “அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. இதன்படி நமது நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தாராளமாக முதலீடு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார். 


அதாவது, இதுவரை அணுசக்தி துறையில் அரசுத் துறை மட்டுமே ஈடுபட்டு வந்தது என்ற கொள்கை கைகழுவப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த ஒப்பந்தம் யாருடைய நலனிற்காக இவ்வளவு அவசர கதியோடு நிறைவேற்றப்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. அதேபோல் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் சமீபத்தில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து கூறும் போது, இந்தியாவில் நிறுவப்படவுள்ள 40 அணு உலைகளுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டதாகவும், இதன் மூலம் வரும் 15 ஆண்டுகளில் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். 


அத்துடன் நிற்காமல் அணு சக்தி துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக்கல், யூ.எஸ்.யூ., வெஸ்ட்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றன. இதன் மூலம் தங்களது பங்கையும் உறுதிப்படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது குறித்து இந்திய -– அமெரிக்க வர்த்தக கவுன்சில் தலைவர் ரோன் சுமர் கூறும்போது, 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு தோராயமாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் 2020 வாக்கில் 40,000 மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேற்கண்ட நிறுவனங்கள் எதுவும் தற்போது அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அணு உலைகள் எதுவும் கட்டியெழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 1979 ஆம் ஆண்டு மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தை அடுத்து புதிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் ஆதர்சமாகத் திகழ்கிறது. மற்றொரு புறத்தில் அணு சக்தி தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிடம்தான் பெருவாரியான அணு வர்த்தகம் நடைபெறும் என்று விவாதிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்கா இந்த உடன்பாட்டிற்கு முன்நின்ற நாடு என்ற முறையில் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்கினை உறுதி செய்வதற்கு முந்திக் கொண்டு வருகின்றனர். 


மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார சூதாட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் இழப்புகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒரு மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்வதற்கு ரூ. 8 - 9 கோடி ஆகும். இதுவே நிலக்கரியின் மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 4 – 5 கோடி மட்டுமே. இதையே கே° மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 3 – 4 கோடி ஆக மட்டுமே இருக்கும். மேலும் அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 3 – 5 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் மற்ற முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய 2 – 3 வருடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணு மின்சார விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 6.5 இருக்கும். மற்ற மரபுசார்ந்த துறை மூலம் உற்பத்தி செய்வதில் ரூ. 2- 3 வரை மட்டுமே இருக்கும். மின் கட்டணம் உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் சொல்லாமலே உயர்ந்து விடும் என்பது எளிய உண்மை. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயம் அடையப்போவது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களே பெருத்த இலாபமும், நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெருத்த நட்டமும் ஏற்பட்டு பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள இராணுவ ரீதியான உறவு; அதனால் ஏற்படும் வர்த்தகம் என்று தொடர் சங்கிலி போல் அமெரிக்காவின் தடுமாறும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஆயுதமாக இந்த ஒப்பந்தம் அச்சாணியாகியுள்ளது. இராணுவத்துறையில் இரண்டு டசன் “ஹார்புன் வகை ஏவுகணைகளை” வாங்குவதற்கு மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. 


மேலும் 126 சண்டையிடும் ஜெட்களை வாங்குவதற்கு 10 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவிற்கு இந்த உடன்பாட்டின் மூலம் மேலும் ஒரு கூடுதல் ஆதாயம் என்னவென்றால், ‘உலகின் வர்த்தக ரீதியான 40 சதவிகித எண்ணெய் பொருட்கள் இந்திய கடல்வழியில்தான் கொண்டுச் செல்லப்படுகிறது. குறிப்பாக செங்கடல் மற்றும் மலாய்க்கா ஸ்டிரேய்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் நடைபெறும் கடற்கொள்ளை வியாபாரத்தை இதன் மூலம் தடுக்க முடியும். இதற்கான பாதுகாப்பையும் - ஒத்துழைப்பையும் இந்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதுகிறது. மொத்தத்தில் இந்தியாவிற்கு இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் என்ன? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் விடை கிடைக்குமா? அல்லது இந்த ஒப்பந்தமே இந்திய – அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக செய்துக் கொண்டதுதான் என்ற குற்றச்சாட்டையும் வழக்கம் போல் கண்டுக் கொள்ளாமல் விடுமா? என்பதே நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!

July 11, 2008

123 பிரகாஷ் காரத் சிறப்பு பேட்டி


நாட்டின் நலன்களைக் காவு கொடுத் துள்ள மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் வாக்களிக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்திய - அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப் படுவதைத் தடுத்திட, இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பிரகாஷ்காரத் கூறி னார். மதவெறி சக்திகள் வளர்ந்து வருவ தைக் கட்டுப்படுத்தவும் கையாலாகாத நிலையில் காங்கிரஸ் உள்ளதாகக் குற் றஞ்சாட்டிய பிரகாஷ் காரத், இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து செயலாற்றும் என்றார்.


ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஏடுகளின் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்திட்ட பதில் களும் வருமாறு:


இன்றைய இக்கட்டான சூழ்நிலை யில் இடதுசாரிக் கட்சிகள் அர சுக்கு அளித்து வந்த ஆதரவை ஏன் விலக்கிக் கொண்டுள்ளன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்காமல் தடுத் திட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளிக்கத் தீர்மானித்தன. ஆனால், பிரதமரும் காங்கிரஸ் தலை மையும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற் கான நடவடிக்கைகளில் இறங்கிடத் தீர் மானித்திருக்கின்றன. இதுதொடர்பாக 2007 நவம்பரில் இடதுசாரிக் கட்சிக ளுக்கு அவர்கள் அளித்திட்ட உறுதி மொழியையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். அதாவது, சர்வதேச அணு சக்தி முகமையிடம் பேச்சு வார்த்தை களுக்காகச் செல்வோம், பின் திரும்பி வந்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை இடதுசாரிக் கட்சிகள் முன்வைப்போம், இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தால், அர சாங்கம் தொடர் நடவடிக்கையை மேற் கொள்ளாது என்று உறுதிமொழி அளித் திருந்தார்கள்.


மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக் காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற் படுத்திக் கொள்ள முன்வந்திருப்பதுதான் அதற்கு அளித்து வந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொள்வதற்கு முதல் முக்கிய காரணமாகும். இதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒரு திறவுகோல். இத்தகைய கூட்டணியானது நம்முடைய நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கைக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவை அமெரிக்கா வுடனான ராணுவக் கூட்டணிக்குள் சிக்கவைத்திடும் சூழ்ச்சியே இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும். நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் கூட இனி அமெரிக்காவின் கட்டளை களுக்கிணங்கவே மேற்கொள்ளப்படும்.


அமெரிக்காவில் இதுவரை இருந்து வந்த ஜனாதிபதிகளிலேயே, புஷ் மிக கொடூரமான ஏகாதிபத்தியவாதி என்ப தை மெய்ப்பித்திருக்கிறார். இத்த கையவ ரின் தலைமையில் உள்ள அரசாங்கத் துடன் கூடிக் குலாவ மன்மோகன் சிங் அர சாங்கம் ஆர்வம் காட்டுவதற்கான கார ணங்கள் என்ன? புஷ் தற்போது ஈரா னைத் தாக்கப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு இந்தியாவும் துணைபோகப் போகிறதா? அமெரிக்கா வின் நிர்ப்பந்தத்தின் விளைவாக இப் போது மத்திய அரசு இஸ்ரேலுடன் நெருக் கமான இராணுவ உறவுகளை மேற் கொண்டுள்ளது. அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு இடதுசாரிகள் ஆதர வினை அளித்திட முடியாது.


இந்த அரசானது விலைவாசி உயர் வையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத் திட முழுமையாகத் தவறிவிட்டது என் பது ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதற் கான இரண்டாவது காரணமாகும். கடந்த ஓராண்டு காலமாக அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்து அத்தியா வசிய உணவுப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்துள்ளதைப் பார்க்கிறோம். இதன் விளைவாக சாமா னியர்களின் வாழ்வில் தாங்கமுடியாத அளவிற்கு துன்பதுயரங்களை ஏற்படுத்தி யுள்ளது. நவீன தாராளமயக் கொள்கை களை பின்பற்றும் இந்த அரசாங்கமானது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற் குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மறுக்கிறது. பொது விநியோக முறையை விரிவாக்கிட அது தயாராக இல்லை. இப்போதும் அது போலித்தனமான மற்றும் மோசடியான வறுமைக் கோட்டுக்கு மேலே / கீழே என்று பாகுபடுத்தியுள்ள குடும்ப அட் டைகளையே (ரேஷன் கார்டுகளையே) பயன்படுத்தி, நாட்டு மக்களில் பெரும் பாலோரை பொது விநியோக முறையிலி ருந்து அப்புறப்படுத்திடும் சூழ்ச்சியையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்திட இடதுசாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் அது நிராகரித்துவிட்டது. அத்தியாவசிய உண வுப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்த கத்தை அது ஏன் தடை செய்ய மறுக்கிறது? ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பாராது அடைந்திடும் கொள்ளை லாபத்தொகை (றiனேகயடட யீசடிகவை) யின் மீது வரி விதிக்க ஏன் மறுத்துக் கொண்டிருக்கிறது?


பிரதமரை இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் சந்தித்தபோது, ‘‘விலைவாசி உயர் வால் மக்கள் கடும் துன்பத்திற்காளாகி யிருக்கிறார்கள்’’ என்று சொன்னபோது, அதற்குப் பிரதமர் ‘‘மக்களின் துன்ப துய ரங்களை அரசியல்கட்சிகள் அரசியலாக் கக் கூடாது’’ என்று எங்களிடம் கூறி னார். மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளாமல் வேறு எதனை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? இதுதான் இந்த அரசாங்கத்தின் சிந்தனையோட் டமாக இருக்கிறது.


மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப் பிடித்திடும் நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாகத் தான் அதனால் விவசாய நெருக்கடியை யும் விவசாயிகளின் வாழ்வு சூறையாடப் படுவதையும் தீர்த்து வைக்க முடிய வில்லை.


முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் கடைப்பிடித்து வந்த வலதுசாரி பொருளாதாரக் கொள்கை களை, ஐமுகூ அரசாங்கமானது முழுமை யாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் எதிர்பார்த் தன. அதன் அடிப்படையில்தான் மக்கள் ஆதரவு கொள்கைகள் சிலவற்றை குறைந்த பட்ச பொதுச் செயல்திட்டத் தின் மூலம் பரிந்துரைத்தன. ஆனால் எதற்கெடுத்தாலும் வாஷிங்டன்னையும், உலக வங்கியையும் சர்வதேச நிதியத் தின் கட்டளைக்காகவும் காத்துக் கொண் டிருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்த கொள் கைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.


அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சனை யில் இடதுசாரிக் கட்சிகள் தனி மைப்பட்டு விட்டனவா?


பிரகாஷ்காரத்: 2005 ஜூலையில் பிரதமர் வாஷிங்டன் சென்றிருந்த சமயத் தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக முதல் அறிவிப்பு வந்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டையும், அணுசக்தி ஒப்பந்தத்தை யும் எதிர்க்கத் தொடங்கி விட்டோம். இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எவ்விதப் பிசிறுமின்றி இவற்றை எதிர்த்து வந்ததன் காரணமாகத்தான், இன்றைக்கு நாட்டின் இறையாண்மையை அச்சுறுத் தக்கூடிய இத்தகைய பிரச்சனைகள் நாடு முழுதும் பிரதானமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளன. இப் பிரச்சனை மீது தனிமைப்பட்டிருப்பது நாமல்ல, மாறாக இந்த அரசாங்கம்தான். 2007 நவம்பர் - டிசம்பரில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நடை பெற்ற விவாதம், இப்பிரச்சனையில் இந்த அரசுக்கு எதிராகவே பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நாட்டுக்குக் காட்டியது.


இப்பிரச்சனையை முன் வைத்து அடுத்த தேர்தலை சந்தியுங்கள் என்று காங்கிரஸ் கட்சியிடமும் நாம் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நிலை பாட்டை மக்கள் நிராகரிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.


அணுசக்தி ஒப்பந்தம் இப்போது நிறைவேறிவிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


பிரகாஷ்காரத்: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படக் கூடாது என்பதற்காக நாம் ஒவ் வொரு கட்டத்திலும் எதிர்த்து வந்திருக் கிறோம். தற்சமயம், சர்வதேச அணுசக்தி முகமையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத் தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் வாசகங்களை இந்த அரசாங்கம் ஏன் ரகசியமாக வைத்திருக்கி றது? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சமயங்களில் எல்லாம் இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறது. 1991இல் நர சிம்மராவ் அரசாங்கத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் இந்திய அரசாங்கமானது சர்வதேச நிதி யத்துடன் 5 பில்லியன் டாலர் கடன் ஒப் பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அந் தக் கடனைப் பெறுவதற்காக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகள் என்ன என்று கேட்ட போது, ஒப்பந்தத் தின் வாசகங்களை வெளியிட அரசாங் கம் மறுத்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் அதனை வாஷிங்டன் னிலிருந்து பெற்று அதன் முழு வாசகங் களையும் வெளி யிட்டது.


பாதுகாப்பு ஒப்பந்தம் மூலமாக நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம் என்று அரசாங்கம் சவடாலடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை யில் நாம் எதுவுமே பெறவில்லை என் பதே நம்முடைய புரிதலாகும். சர்வதேச அணுசக்தி முகமை என்பது ஒழுங்கு முறை குழுமமாக செயல்படும் ஓர் அமைப்பு. அவ்வளவுதான், அது எப்படி எரிபொருள் விநியோகம் தொடர்பாக உறுதிமொழிகளை அளித்திடும்? இந்தி யாவுடன் முழுமையான அளவில் ராணு வம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு என்ப தைச் சட்டப்படி செல்லாததாக்கக்கூடிய ஹைடு சட்டத்தின் அனைத்து ஷரத்துக் களும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றன.


மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஆயுள்காலத்தில் இந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படாதிருந்திட நாம் தொடர்ந்து போராடுவோம்.


மக்களவையில் நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றி பெற்றுவிடு வோம் என்று காங்கிரஸ் நம்பிக் கையுடன் இருக்கிறதே? ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவினை விலக்கிக்கொண் டுள்ள நிலையில் அரசியல் நிகழ்ச் சிப்போக்குகள் எப்படி இருந் திடும்?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக்கொண்ட அந்தக் கணமே ஐமுகூ அரசாங்கமானது ஆட்சி யில் நீடிக்கக்கூடிய சட்டரீதியான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. அது மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப் பில் வெற்றிபெற்றாக வேண்டும். மற்ற வர்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல். நாட்டின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிகள் வாக்களிப்பார்கள்.


காங்கிரசும் ஐமுகூ அரசாங்கமும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருவ தை எவரும் மறந்துவிடக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சமீபத்திய அகில இந்திய மாநாடு இத்தகைய மதிப்பீட்டிற்கு வந்திருக்கிறது. காங்கிரசுடன் இணை வதன் மூலம் எவராவது தங்கள் எதிர் காலத்தை சூன்யமாக்கிக் கொள்ள விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.


இடதுசாரிகளின் நிலைபாடு, பாஜகவிற்கும் மதவெறி சக்திக ளுக்கும்தான் உதவிடும் என்று காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின் றனவே, இதற்கு உங்கள் பதில் என்ன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடுதான் இத்தனை ஆண்டு காலமும் ஐமுகூ அரசாங்கத் திற்கு ஆதரவினை அளித்து வந்தோம். ஆனால், 2007 தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திட ஒரு துரும்பைக்கூட அசைக்காததை நாம் பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கி றோம். மாநிலங்களில் நடைபெற்ற ஒவ் வொரு தேர்தலிலுமே, காங்கிரஸ் கட்சி பாஜகவினால் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏன் இவ்வாறு நடக் கிறது? இதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில், எங்கெல்லாம் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தனவோ அங்கெல் லாம் அது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கை களையே கடைப்பிடித்து வந்தன. அதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி பாஜக அங்கெல்லாம் மீண்டும் ஆட்சியில் அமர வசதி செய்து கொடுத்து விட்டது. மேலும், இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதைப்போல காங்கிரஸ் கட்சியானது பாஜக-விற்கு அரசியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த ரீதியா கவோ எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மேலும் மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்த போது கடைப்பிடித்த அதே கொள்கை களைத்தான் காங்கிரசும் பின்பற்றுகிறது. அது ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசும் அயல்துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தாலும் சரி, இந்த இரு கட்சிகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடித்திட தொடர்ந்து போராடும்.


மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதற்கான காரணங் களை விளக்கி நாடு முழுவதும் பிரச்சாரத்தில் இறங்கப் போகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு மற்றும் இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கான மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் விளக்கிடுவோம். காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் - மாறாக ஒரு மூன்றாவது மாற்று தேவை என்று உணர்கிற மற்ற ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிசேர்ப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.


இப்பிரச்சாரத்தின்போது, நாட்டின் எரிசக்தித் தேவையை ஈடுசெய்திட மாற்று வழிகள் என்னென்ன இருக்கின் றன என்பதையும் , விவசாயிகள் - கிராமப்புற ஏழைமக்கள், தொழிலாளர்கள் மற் றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவின ருக்கும் கேடு விளைவித்துள்ள தற்போ தைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் அதற்கு முற்றிலும் வேறுபட்ட மாற்றுப் பொரு ளாதாரக் கொள்கையையும் மக்கள் மத்தி யில் எடுத்துச் செல்ல உள்ளோம்.


இப்போது மூன்றாவது மாற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதா?


பிரகாஷ்காரத்: சமீபத்தில் நடை பெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட் டில், மூன்றாவது மாற்று குறித்த நம் புரிந் துணர்வை மிகத் தெளிவாக்கி இருக்கி றோம். அது ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும், காங்கிரஸ் மற்றும் பாஜக- கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்திட வேண்டும், அவற்றை வென்றெடுக்க கூட்டுப் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் மூலமாக உருக்கு போன்று உருவாக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி போன்ற உருவாக்கம் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதை அனுபவம் வாயிலாக நாம் உணர்ந்திருக் கிறோம். மாற்றுக் கொள்கைகளின் அடிப் படையில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துப் போராடுவதன் வாயிலாகவே இடதுசாரி மற்றும் இதர சக்திகளை ஒன்றுபடுத்துவதன் மூலமே ஒரு மூன்றாவது மாற்று உருவாகி வலுப்பெற முடியும். தேர்தல் அல்லது மற்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக அத்தகைய மாற்று உருவாவதுடன் இதனை இணைப்பது பிழையாகிவிடும். தளம் மிக விரிவானது. மற்ற சக்திகளை ஒருங்கிணைத்து இதனை வார்த்தெடுத்திட இடதுசாரி கட்சிகள் முன்முயற்சி எடுப்பார்கள்.

July 10, 2008

123... மன்மோகன் அரசு!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. தேச நலனை முன்னிட்டே இதனைச் செய்வதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மையில் ஜார்ஜ் புஸ்சுக்கு காவடித் தூக்கிக் கொண்டுள்ளனர் என்பதைதான் அவர்களது நடைமுறை காட்டுகிறது.


அணு சக்தி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் கூட ஐ.ஏ.இ.ஏ.வுடனான ஒப்பந்தம் தொடர்பான உண்மையான அறிக்கையை சமர்ப்பிக்க மாட்டோம் என்று அடம் பிடித்த பிரணாப் முகர்ஜீ இது அரசின் ராஜீய ரீதியான உறவு சம்பந்தப்பட்டது. எனவே இதனை முன்வைக்க முடியாது என்று கூறினார்.


மறுபுறத்தில் ஜீ-8 கூட்டத்தில் ஒரு இளைய பங்காளியாக கலந்து கொள்ளச் சென்ற மன்மோகன் சிங், போகும் போதே இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம். இடதுசாரிகளின் மிரட்டலுக்கு நாங்கள் அசரப்போவதில்லை என்று சவடால் அளித்துச் சென்றார். பின்னர் அங்கு சென்று புஸ்சுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு உரையாடிய அவர். இரண்டு நாடுகளுக்கும் நெருக்கம் அதிகப்பட்டிருப்பதாகவும் - உறவு பலப்பட்டிருப்பதாகவும் பேட்டியளித்தார்.


இன்னொரு புறத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்த விசயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசித் தீர்த்துக் கொள்ளுவோம் என்று உறுதியளித்து பின்னர் இந்த கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஐ.மு. அரசு தற்போது அறிக்கையை இடதுசாரிகளுக்கும் காட்டாமல் - நாட்டு மக்களுக்கும் காட்டாமல் துரோகம் இழைத்தது. மறுபுறத்தில் தற்போது என்ன நடந்துள்ளது. இந்த ஐ.ஏ.இ.க. பாதுகாப்பு தொடர்பான நகல் அறிக்கை தற்போது அமெரிக்க மற்றும் இந்தியத் தளங்களில் இலவசமாகவே கிடைக்கிறது. யார் வேண்டும் என்றாலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் இவர்களது ரகசியம் எல்லாம் யார் நன்மையைக் காப்பதற்காக என்று வெளிச்சமாகியுள்ளது.


தற்போது மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, உத்திரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த முலாயமுடன் கொள்கையற்ற கூட்டுச் சேருவதற்கு காங்கிரஸ் துடித்துக் கொண்டுள்ளது. அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். மறுபுறத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் எதற்காக இந்த காங்கிரசுடன் போக வேண்டும் என்று முலாயம் கட்சி எம்.பி.க்கள் இப்போதே கட்சி மாறி தங்கள் இடத்தை உத்திரவாதப்படுத்தத் துவங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி தற்போது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்ற குதிரை வியாபாரத்தில் இறங்கியுள்ளது.


மத்திய அரசின் மீது இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு தவிர இந்த தேசத்தையே அமெரிக்காவுக்கு அடிமையாக்கத் துடிக்கும் இராணுவ ஒப்பந்தம் உட்பட பல்வேறு பேரங்களின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் இந்த காங்கிரஸ் எப்படியெல்லாம் இடதுசாரிகள் முன்வைத்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியது என்ற குற்றப் பத்திரிகையை மக்கள் முன் வைத்துள்ளது.


குறிப்பாக ரேசன் பொருட்களை அனைத்து மக்களுக்கும் வழங்குவதில் உத்திரவாதம் வேண்டும் என்று கோரியதையும்,


பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும்,


ஆன் லைன் வர்த்தக சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று கோரியதையும்,


பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் மீது விண்ட்பால் வரி விதிக்க வேண்டும் என்று கோரியது


உட்பட எதனையும் மத்திய அரசு நிறைவேற்ற முன்வராமல் எப்படியெல்லாம் அமெரிக்க ஆதரவு கொள்கைகளுக்கு குத்தாட்டம் போடுகிறது என்பதையும் மக்கள் முன் வைத்துள்ளது.


மொத்தத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டின் மூலம் இந்திய இறையாண்மையை பலி கொடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூ. ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மறுபுறத்தில் அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்ற நிலையில் மதவாத பா.ஜ.க. துடித்துக் கொண்டிருக்கிறது. முற்போக்கு வேடம் போட்டுத் திரியும் அரசியல் வியாபாரிகள் மதவாதமே பெரிய ஆபத்து என்று அணு ஒப்பந்தத்திற்கு பச்சைக் கொடிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.