September 01, 2008

இருளில் மூழ்கும் தமிழகம்!


இந்தியா ஒளிர்கிறது - இந்தியா இஸ் ஷைனிங் என்று 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. - வாஜ்பாய் வகையறாக்களால் முன்வைக்கப்பட்ட கோஷம். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் முக்கிய பங்குதாரராக இருந்தவர் தமிழகத்தின் தொல் காப்பியர் மாண்புமிகு கலைஞர் அவர்களும், அவரது திராவிட முன்னேற்றக் கழகமும்.
கடைசி நேரத்தில் இந்த கப்பல் மூழ்கும் என்று தெரிந்தவுடன் அதிரடியாக குதித்து வெளியேறிய அரசியல் வித்தகர் கலைஞர் கருணாநிதி. இருப்பினும், இந்தியா ஒளிர்கிறது கோஷத்தில் அவருக்கும் மறைமுகமாக பங்குண்டு என்று நம்பலாம்.
தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதலிடம் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வது கழக கண்மணிகளுக்கு கைவந்த கலை. தற்போது இவர்களது ஒன்னரை ஆண்டுகால ஆட்சியின் தலையாய ஒரே சாதனை ஒரு ரூபாய் அரிசி என்று பிதற்றி கவிதை மழையில் குளித்துக் கொண்டிருக்கின்றனர் உடன் பிறப்புகள்.
தமிழக மக்களோ இது அவர்களுக்கு போடப்பட்டுள்ள வாய்க்கரியாகத்தான் பார்க்கிறார்கள். இது குறித்து பேருந்து பயணத்தில் ஒரு பெண் பயணி சொன்னது இன்னும் காதில் ரிங்காரம் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அடப்போங்க! அந்த ரேஷன் அரிசியை வேக வைக்கிறதுக்குள்ள இருக்கிற கேஸ் கூட காலியாகி விடும். தமிழக மக்கள் என்ன கருதுகிறார்கள் என்றெல்லாம் கலைஞர் கவலைப்படுவாரா? தெரியாது! இன்னொருவர் அடித்த கமெண்ட் பேருந்தில் கைதட்டலையே பெற்று விட்டது. ஆமாம்பா... இன்னும் கொஞ்சம் கடத்துறதுக்கு லைசன்ஸ் கொடுத்துட்டார்! என்று தனது அரிய கண்டு பிடிப்பை தெரிவித்தார்.
உண்மை என்ன? வெளி மார்க்கெட்டில் சாதாரண மக்கள் சமைப்பதற்கான அரிசி விலை விண்ணைத் தொட்டு விடும் போல் இருக்கிறது. 22 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலை ஏறிவிட்டது. அதேபோல் சோப்பு விலை கண்ணுக்குத் தெரியாமல் உயர்ந்து விட்டது. 16 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த அமாம் சோப்பு ரூ. 22க்கு விற்கப்படுகிறது. திடீர் என்று 6 ரூபாய் ஏறிவிட்டது.
அடப்போங்க... டீ கூட இனிமேல் ஐந்து ரூபாய்க்குத்தான் கிடைக்குமாம்! என்று இன்னொருவர் சொன்னார். இப்படி அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாக ஏறிக் கொண்டிருக்கையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் கலைஞர் கடிதம் எழுதி எழுதி குவித்து சாதனை படைத்து வருகிறார்! நீரோ மன்னனை இந்த நேரத்தில் நினைக்காதீர்கள். அவர் ரொம்ப நல்லவராம்!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட - அறிவிக்கப்படாத பவர் கட். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் சாதாரண கூலித் தொழிலாளர் முதல் சொந்தமாக தொழில் நடத்தும் சிறு வியாபாரிகள் முதல், சிறுதொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை கடையை மூடி விடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
இந்த திடீர் பவர் கட்டால் மேலும் விலை உயரும் நிலை மக்களை அச்சத்தின் படியில் தள்ளியுள்ளது. அத்துடன் 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு வெல்டிங் தொழிலாளிக்கு 3 மணி நேரம் வேலை இல்லை என்றால், அவருக்கு ஏற்கனவே கிடைக்கும் கூலியிலும் வெட்டு விழப்போகிறது. இதனால் மத்தாளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
மறு முனையில் தமிழக தொழில் வளர்ச்சி என்பது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே இருக்கப் போகிறது. அது தவிர ஐ.டி. தொழில் உட்பட பல முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் நிலவும் இந்த பவர் கட்டைக் கண்டு செய்வதறியாது திகைத்து வாடுகிறார்கள்.
இதை விட கொடுமையானது. சமீபத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெருகி வரும் கொலை - கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த இருட்டு வசதி செய்து கொடுத்துள்ளது போல் அமைந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் சுதந்திரமாக இருட்டில் நடமாட முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே தமிழகத்தின் மீது படிந்துள்ள இந்த இருள் பல சமூக விரோத செயல்களுக்கு இடம் அளித்து தமிழக மக்களின் வாழ்க்கையை மேலும் இருட்டுக்குள் தள்ளிவிடும் ஆபத்தும் உள்ளது. இதனை தமிழக அரசும், தமிழக முதல்வரும் உணர்ந்தால் சரிதான்!
ஆனால், ஆற்காடு வீராசாமி குடியிருக்கும் மன்னிக்கவும் பவர்கட் வீராசாமி பகுதியில் மட்டும் கரண்ட் கட்டாவதேயில்லையாம்! பரவாயில்லை அந்த பகுதி மக்களுக்காவது இவர் சேவை செய்கிறாரே!
25 ஆண்டு காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்த மூத்த குடிக்கு எதிர்கால தமிழகத்தில் என்ன நிகழப்போகிறது என்று தெரியாமல் போனது ஏனோ என்ற கேள்விதான் எழுகிறது. தமிழக வளர்ச்சிக்கு ஏற்ப மின்திட்டத்தை உருவாக்குவதில் ஏன் இந்த தடுமாற்றம்? காற்று வரவில்லை; அதனால் காற்றாலைகள் இயங்கவில்லை; நமக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்ற வரிகளை நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை! இதைச் சொல்வதற்கு யார் வேண்டுமானாலும் அந்த முதல்வர் பதவியில் இருக்கலாம்! ஆனால்!...
கலைஞர் தினமும் தனது உடன் பிறப்புகளுக்கு கவிதை எழுதி  ஆயசப்படுத்துகிறார்! தமிழகம் இருளில் மூழ்குவது குறித்தும் ஒரு கவிதை எழுதினால் அவர் வரலாற்றில் இடம் பெற்ற இன்னொரு நீரோவாக மாறலாம்!

2 comments:

Anonymous said...

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் மட்டுமே பொற்கால ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கரெண்ட் கட் இல்லை. விவசாயிகள் மீது தாக்குதல்கள் இல்லை. ஆயிரம் இருந்தாலும் மேற்கு வங்காளம் மாதிரி வருமா?

சந்திப்பு said...

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் அனானி அவர்களே.

மேற்குவங்க மாநிலம் தன்னுடைய மாநிலத்திற்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கும் விற்று வருகிறது. அதாவது உபரியாக மின்சாரம் உற்பத்தியாகிறது. தங்களது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு திட்டமிட்டு முன்னேறியுள்ளது நெருக்கடியான சூழலிலும். ஆனால், மூத்த குடி கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. இதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை!

தமிழகத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், என அனைத்து தரப்பினர் மீதும் தினந்தோறும் தடியடி நடத்தப்படுகிறது. கூலி கேட்டு போராடிய விவசாயிகள் மீதும் தடியடி - துப்பாக்கி சூடு நடத்தி அதிலும் சாதனை படைக்கிறது தமிழக அரசு. ஆனால் மேற்குவங்கம் போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. தயவு செய்து உண்மையை கண்டறிந்து உண்மையின் பக்கம் நிற்க கற்றுக் கொள்ளுங்கள் அதுதான் ஒரு மனிதனுக்கு அழகு. நாட்டுக்கும் அதுவே சிறந்தது.