
தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களில் முன்னணியில் நிற்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூக விடுதலை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற புரட்சிகரமான கொள்கைகளை தமிழகத்தில் துணிந்து பேசியும், எழுதியும், எதிர்ப்பு காட்டியும் களத்திலிறங்கி போராடியவர் தந்தை பெரியார்.
ஜாதிய சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்களை விடுவிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தவர். ஜாதி மறுப்புக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் தனது கருத்துக்களை கூறுவதற்கு என்றைக்குமே தயங்கியதில்லை.
இவரது சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். இவரது சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததே திராவிடர் சித்தாந்தம்.
1925 - 30களில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலருடன் இணைந்து ஈரோட்டுப் பாதையை அமைத்து ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தவர் பெரியார். பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இந்த இரண்டு சிகரங்களும் ஒன்றிணைந்த புள்ளிகளும் - விலகிய புள்ளிகளும் சீர்தூக்கிப் பார்த்து. இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் அவரது இலக்கு எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நின்று நிதாணித்து சிந்திக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் இடதுசாரி முகாமிலேதான் இருப்பார். (இது கற்பனா வாதம் ஆகாது) பெரியாரிய சிந்தனையின் எதார்த்தம்.
அந்த அடிப்படையில் இன்றைக்கு பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு முனை மழுங்கிப் போய் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதிய சீரழிவிற்கு இட்டுச் சென்றது.
பெரியாருக்குப் பின் பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரவலான வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு மாறாக அவரது திராவிடர் கழகம் ஒரு கார்ப்பரேட் அலுவலகமாக மாறியதோடு, அவரது பெயரில் கல்லூரிகளைத் துவக்குவது, பெனிபிட் பண்ட் நடத்துவது, பெரியார் புறா நடத்துவது... என்று திசை மாறி அவரது கொள்கையிலிருந்து முற்றிலுமாக விலகி இன்றைக்கு வீரமணியின் சிந்தைக்குள் அடைப்பட்டு கிடக்கிறது திராவிடர் கழகம்.
பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் பேசப்படுவதில்லை. பெயருக்கு ஒரிரு மாநாடுகள் நடத்துவதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவமாக நின்று விடுகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் வரும் அதி்முக, திமுக என மாறி, மாறி தனது சொத்திற்கு பாதுகாப்பு தேடும் கழகமாக மாறிவிட்டது.
தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டிய திராவிடர் கழகம் பல நேரங்களில் வெறும் அறிக்கையோடு நின்று விடுகிறது. அதற்கான களப்பணிகள் எதனையும் செய்வதில்லை.
இந்நிலையில் வீரமணியோடு கருத்து வேறுபாடு கொண்டு வேறு களம் கண்டு பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது வழக்குத் தொடுப்பதும். பெரியாரின் கொள்கைகளை - கருத்துக்களை முழுக்க முழுக்க தனதாக்கிக் கொண்டு உரிமைக் கொண்டாடுவதும் பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருத முடிகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உப்புச் சப்பில்லாத சொத்தை காரணம் மட்டுமே. அதாவது, யார் வேண்டும் என்றாலும் பெரியார் கருத்தை வெளியிடலாம் என்றுச் சொன்னால் அவரது கருத்தை திரித்து விடுவார்களாம்.
திரு வீரமணி அவர்கள் இதுவரை அப்படி எந்த வகையில் பெரியாரின் கருத்துக்களை அவரது எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் திரித்திருக்கிறார்கள்? அல்லது வேறு யார் திரித்திருக்கிறார்கள் என்று உலகுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்.
மொத்தத்தில் ஒரு புரட்சிக்கரமான சிந்தனையாளரின் கருத்துக்களை கழகத்திற்குள் பூட்ட முனைவது பெரியாரின் சுதந்திர கொள்கைக்கு எதிரானது. எனவே தமிழக மக்கள் பெரியாரின் கருத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க வரவேண்டும். அப்போதுதான் பெரியாரையே நாம் மீட்க முடியும். பெரியாருக்கு சிலை வைத்தால் போதாது அவரது சிந்தனையை விதைக்க வேண்டும் அதுவே தமிழகமும் - இந்தியாவும் எதிர்பார்க்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சக்திகள் பெரியாரிய எதிர் சிந்தனை சக்திகளே!
இணையத்தில் திராவிடம் பேசுபவர்கள் - அல்லது பெரியார் பெயரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா? செயல்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்! அது வரை பெரியாரை மீட்கும் சக்திகளுடன் துணை நிற்போம். இணையத்தில் இதற்காக
தமிழச்சி அவர்கள் சிறப்பான போராட்டத்தை தொடுத்து வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
விரைவில் இணையத்தில் "பெரியார் சிந்தனை மீட்பு கழகம்" ஏதாவது ஒன்று உருவானால் நாட்டுக்கு நல்லது என்று முடிக்கிறேன்.