September 29, 2008

அமைதியை எதிர்நோக்கும் காஷ்மீர்!

புத்தக அறிமுகம்

உலகில் தீர்வு காணப்படாத பிரச்சினைகளில் ஒன்று காஷ்மீர். எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போன்று அமர்நாத் நிலப்பிரச்சினை விசுவரூபம் எடுத்து காஷ்மீரை ரணகளமாக்கியுள்ளது. எழிலாடும் காஷ்மீர் ராணியின் இதயத்தில் எண்ணற்ற தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களின் அபஸ்வரம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
இந்தியர்கள் மனதில் எண்ணற்ற கேள்வி ஓட்டங்களை காஷ்மீர் எழுப்பியுள்ளது. இந்த பிரச்சனையின் ஆதியும் - அந்தமும் என்ன? பயங்கரவாத குழுக்களின் விதை எப்போது? யாரால் தூவப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை பகரும் முகமாக, காஷ்மீர் பிரச்சினையின் ஆழத்தையும் - அகலத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தமிழுக்கு அலைகள் வெளியீட்டகத்தின் மூலம் புதிய வரவாக வந்துள்ளது.
திரு. கி. இலக்குவன் அவர்களது தொடரும் காஷ்மீர் யுத்தம் என்ற புத்தகம். 150 பக்கத்தில் 21 தலைப்புகளில் காஷ்மீர் சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்க முனைந்திருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக இந்திய அரசியலின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ள நிகழ்ச்சி நிரலில் ஒன்று 370வது சட்டப் பிரிவு. இந்துத்துவ மற்றும் சங்பரிவார சக்திகள் தொடர்ந்து இந்த 370வது பிரிவுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்று பிரசங்கித்து வருவதை அறிவோம். காஷ்மீரின் உயிர் நாதமே இந்த 370வது பிரிவுதான். தற்போது இந்த சட்டப்பிரிவு குற்றுயிரும், கொலையுருமாகவே இருக்கிறது. அதன் முழுமையான சாரம் எப்படியெல்லாம் மத்திய ஆட்சியாளர்களால், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்கால் அரிக்கப்பட்டது; அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை இந்தப் புத்தகம் விலாவரியாக படம் பிடித்துக் காட்டுவதோடு இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதல் அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையோட்டத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
அதேபோன்று பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை எப்படி மத அடிப்படையில் துண்டாடினார்கள் என்பதை ஆரம்பத்திலேய அம்பலப்படுத்தும் இப்புத்தகம். அதன் தொடர் விளைவுகளில் ஒன்றாக காஷ்மீர் இன்றைக்கு எப்படி மாறியுள்ளது என்று விளக்குவதோடு, இன்றைக்கும் காஷ்மீரின் அமைதியை குலைப்பதில் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளின் பங்கு என்ன? என்று உரைப்பதோடு, மறுபக்கத்தில் பாகிஸ்தான் ஆரம்பம் முதற்கொண்டே காஷ்மீரை முற்றிலுமாக அபகரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எத்தனை எத்தனை என்று விளக்கியுள்ளதோடு, இன்றைக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் எப்படி காஷ்மீருக்குள் நுழைந்து கலகத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டுகிறார்கள் என்பதை விளக்குவதோடு, தற்போது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதி மக்கள் எப்படி பாகிஸ்தானிய அரசோடு முரண்பட்டுள்ளார்கள் என்பதையும் மிக அழுத்தமாக வரைந்துள்ளார்.
காஷ்மீரின் கலாச்சார பாரம்பரியம் எப்படி மதச்சார்பற்ற கொள்கையின் உயிர் மூச்சாக இருந்தது. காஷ்மீரின் தன்னிகரில்லா தலைவராக உருவெடுத்த ஷேக் அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்தம்தான் இந்தியாவிலேயே முதன்மையானது என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு அதன் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவை எப்படி தங்களது கைப்பாவையாக மாற்ற காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் முனைந்தார்கள். குறிப்பாக ஷேக் அப்துல்லாவை சிறையில் தள்ளி பொம்மை அரசை கொண்டு வந்த இந்திய அரசின் சதிச் செயல்களால் அம்மக்கள் இந்தியாவிடமிருந்து விலகும் புள்ளிகள் ஆரம்பித்ததையும் பின்னர் ஒரு கட்டத்தில் 370வது சட்டப் பிரிவை நீர்த்துப் போகச் செய்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததும் அப்போது ஆளுநராக இருந்த ஜக்மோகனின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலைகளையும் - அடக்குமுறைகளையும் பட்டியலிட்டு எப்படியெல்லாம் காஷ்மீர் நம் கையை விட்டு நழுவுவதற்கான வாய்ப்பை இந்திய அரசே உருவாக்கியது என்பதை தெளிவாக விளக்குகிறார். ஜே.கே.எல்.எப்., ஹிஸ்புல் முஜாஹிதீன், அல்பத்தா, அல் ஜீஹாத் என்று டசன் கணக்கில் உருவெடுத்துள்ள பிரிவினைவாத மற்றும் தீவிரவாத - பயங்கரவாதி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் ஒரு அறிமுகத்தை வாசகர்களுக்கு முன்வைப்பதன் மூலம் அங்குள்ள நிலைமையை அறிந்து கொள்வதற்கு உதவிகரமாக உள்ளது.
அதேபோல் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு காண பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறிப்பாக 1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் துவங்கி, அயலுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரம் - முன்னேற்றம் குறித்தும் அதன் சாதகமான அம்சங்களை அமலாக்குவதில் பாகிஸ்தான் காட்டும் சுணக்கம் போன்றவற்றையும் விளக்கிச் செல்கிறது இப்புத்தகம். இது தவிர, இந்திய ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் காஷ்மீரில் ஜனநாயகத்த சித்தார்கள். குறிப்பாக சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல்கள் எப்படி கேலிக்கூத்தாக்கப்பட்டது.
தேர்தல் ஜனநாயகமே சிதைக்கப்பட்டது இதனால் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை போன்றவைகள் எல்லாம் எப்படி பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாட்டுக்கு துணை போகும் நிலைக்குச் இட்டுச் சென்றது என்று பல உதாரணங்களோடு விளக்கிச் செல்கிறார். மேலும், தற்போது இந்துத்துவவாதிகள் காஷ்மீர் பிரச்சினைக்கு காஷ்மீரை லடாக், ஜம்மு, காஷ்மீர் என்று மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று மேலும் ஒரு பிரிவினைக்கு வித்திட்டு காய்களை நகர்த்தும் போது, அது இயல்பாகவே காஷ்மீரியம் என்ற உயர்ந்த பண்பாட்டுக்கு எதிரானதாகவும் அம்மக்கைள மேலும் பிரிவினைக்கு உள்ளாக்கி அந்நியப்படுத்தும் நிலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், காஷ்மீரில் அமைதியை - தீர்வை விரும்பும் இடதுசாரி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் 370வது பிரிவில் அரிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவும், பிரதேச சுயாட்சி உரிமைகளை வழங்கி, ஜனநாயக ரீதியாக அம்மக்களை நம்பிக்கையூட்டி ஒரு வெளிப்படையானத் தன்மையோடு அணுக வேண்டும் என்ற கருத்தையும், காஷ்மீர் மீது அக்கறைக் கொண்ட குழுக்களையும், பிரிவினை எண்ணம் கொண்ட குழுக்களையும் வேறுபடுத்திப் பார்த்து ஜனநாயக நீரோட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் ஈர்ப்பதை நோக்கி இந்திய அரசு பயணிக்க வேண்டும் என்று தீர்வுக்கான பாதைகளில் பல்வேறு விஷயங்களோடு அடிப்படையோன இந்த அம்சங்களையும் இப்புத்தகம் கொண்டு வந்துள்ளது. மொத்தத்தில் காஷ்மீர் குறித்து ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்கு இப்புத்தகம் உதவிடும்.
தொடரும் காஷ்மீர் யுத்தம்
ஆசிரியர் : கி. இலக்குவன்
அலைகள் வெளியீட்டகம்
4/9, 4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
சென்னை - 600 024
விலை ரூ. 80.00


காஷ்மீர் குறித்த எனது விரிவான பதிவு

No comments: