September 23, 2008

பெரியார் விழாவில் இராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல்


பெரியார் விழாவில் ராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு துவக்க விழாவும், தந்தை பெரியார் 130வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் நேற்று (செப்டம்பர் 22, 2008) மாலை சென்னை போரூரில் உள்ள பெருமாள் கோவில் தெரு, ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இச்சிறப்பு மிகு கூட்டத்தில் வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், கவிஞர் இரா.தெ. முத்து உட்பட முக்கியமான கலை - இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் முற்போக்கு கலை - இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தப்பாட்டம், உலகை உலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் நாடகம் மற்றும் முற்போக்கு பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது.


காவல்துறையின் அனுமதி பெற்று நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி துவங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் கூட்டம் நடத்துபவர்களிடம் நீங்கள் யாருடைய மனதும் புண்படாதவாறு பேசுங்கள் என்று சொல்லியுள்ளார். இந்த தகவல் எழுத்தாளரும், கவிஞருமான இரா.தெ. முத்துவுக்கு சொல்லப்பட்டது. அவர் மேடையில் ஏறி பேசும் போது, இங்கே நாம் யாருடைய மனதும் புண்படாமல் பேச வேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். யாருடைய மனதும் புண்பாடமல் எப்படி பேச முடியும். நாட்டில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை கூர்ந்து நோக்கும் யாராலும் இப்படி பேச முடியாது. குறிப்பாக ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் குறித்து பேசும் போது எப்படி மனது புண்படாமல் பேச முடியும்? இப்படித்தான் பேச வேண்டும் என்றால் சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எதற்கு? மாற்றுக் கருத்துக்களை - கலைகளை எடுத்துச் சொல்லத்தானே இந்த உரிமைகள் என்று கூறிவிட்டு இங்கே ஒரு கலாச்சார காவலர் இருக்கிறார் அவர் யார் தெரியுமா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்த பொது மக்கள் இராமகோபாலன்என்று சொன்னதுதான் தாமதம்.


ஏற்கனவே இந்த கூட்டத்தில் கலவரத்தை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.ஸ். சங்பரிவார கும்பல் - 20க்கும் மேற்பட்டவர்கள் சகலவிதமான ஏற்பாடுகளுடன் முன்கூட்டியே எப்படி தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். இந்த கலாச்சார காவலரின் குண்டர் படை இப்படி பேசிய உடன் மேடைய நோக்கி பெரிய, பெரிய செங்கற்களை எரிந்ததோடு, கையில் கத்தி, இரும்பு பைப் மற்றும் செயின் என்று ஆயுதங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்களை தாக்கியதோடு, அங்கிருந்த சேர்களையும் தூக்கி எறிந்துள்ளனர். மேலும் இந்த கலாச்சார குண்டர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளும் முறையில் கையில் செந்நிற பட்டை அணிந்து கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்தும் போதே இராமகோபாலன் வாழ்க”, “இந்து முன்னணி வாழ்கஎன்று கோஷம் எழுப்பியவாறு இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.


கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் - குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். யார் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்று கூட எதையும் பார்க்காமல் பெண்கள் மீதும் - குழந்தைகள் மீதும் கூட கற்களை வீறியெறிந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தை தன்னுடைய கண்ணுக்கு எதிரே தன்னுடைய தந்தையை தாக்குவதை கண்ணுற்றபோதுஅதன் அலறல் கல் நெஞ்சையும் கறைய வைக்கும் அளவில் இருந்தது. இந்த குழந்தையின் மனநிலை பாதிப்பு இந்த பாசிச வெறிபிடித்த நரமாமிச சக்திகளான இந்துத்துவ வெறியர்களுக்கு புரியுமா? அல்லது காவியுடையில் வேஷம் தரித்துக் கொண்டுள்ள மனிதகுல விரோதி இராமகோபாலனுக்குத்தான் தெரியுமா? மேலும், அதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த.மு.எ.ச. நடத்திய ஒரு கலை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த விவரம் அங்குள்ள காவல்துறைக்கும் தெரியும். அப்படியிருந்தும் காவல்துறையினர் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த நிலையிலேயே இருந்தனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை.


இந்த தாக்குதல் நடைபெறும் போது, அங்கிருந்த ஒரு பெண் ஒரு காவரைப் பார்த்து இப்படி அநியாயம் பண்றாங்க நீங்க வேடிக்கை பார்க்கறீங்களேஎன்று கேட்டபோது, நானும் மனிதன் தானே என்ற பதில்தான் வருகிறது. இந்த காவலர்கள்தான் நம்முடைய தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்களா? தேச சேவையின் போது மக்களை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையில்லாத இந்த காவலர்களால் நாட்டுக்கு என்ன பயன்? இதுபோன்ற காவலர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் காவல்துறைக்கும் - அங்குள்ள ஐ.எஸ். (காவல்துறை உளவுத்துறைக்கும்) சூழல் நிச்சயம் நன்றாக புரிந்திருக்கும். இருப்பினும் சட்டம் - ஒழுங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் அப்பட்டமாக மறுப்பதற்கும், தாக்குதல் தொடுப்பதற்கும் யார் கொடுத்த தைரியும்?


அண்ணாவின் நூற்றாண்டும், பெரியாரின் 130வது ஆண்டும் நடைபெறும் தருவாயில் இந்துத்துவ பாசிசவாதிகளின் இந்த கொடுங்கோல்தனத்தை பார்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன செய்யப்போகிறது? சங்பரிவாரத்திற்கு எதிராக அண்ணாவின் முழக்கம் என்ன ஆனது? பெரியாரின் பேச்சும், மூச்சும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதே எதனால்? எப்படி இந்த பாசிச விஷ விதை இந்த மண்ணில் முளைத்துள்ளது? இதற்கு இந்த தி.மு.க.வும் - திராவிட இயக்க சக்திகளும் பொறுப்பல்லவா? மேலும், அந்த பாசிச குண்டர்கள் ஒரு ஷட்டர் போட்ட கடைக்குள்ளே ஒளிந்துக் கொண்டிருந்த நிலையில் த.மு.எ.ச.வினர் காவல்துறையிடம் அந்த குண்டர்கள் - ரவுடிகள் இங்கேதான் ஒளிந்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறியபோது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு அவர்களை தப்ப விட்டுவிட்டனர். மொத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உள்ள காவல்துறையே இந்துத்துவ கயவாளிகளோடு கூட்டு சேர்ந்து விட்டதா? என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.


மொத்தத்தில் இந்த சம்பவம் தொடர்பாக முறையான நீதிவிசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பொது மக்களை காக்கத்தவறிய சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் யார்? யார் அங்கு பணியில் இருந்தார்களே அவர்கள் மீதும் துறைபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் போலீசாருக்கு பொது மக்களை காப்பது எப்படி என்ற சிந்தனையையாவது வளர்க்க வேண்டும்.


மொத்தத்தில் பெரியாரின் ஒரு நிகழ்ச்சியில் இந்துத்துவ கலாச்சார குண்டர்கள் தாக்குதல் நடத்தி விட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் நின்று விடும் என்ற பாசிஸ்ட்டுகளின் கனவை தூளாக்குவோம்! மாநிலம் முழுவதும் ஏராளமான பெரியார் நிகழ்ச்சிகளை நடத்தி இந்துத்துவ சக்திகளை - பாசிச வெறியர்களின் உண்மை முகத்தை தோலூரிப்போம்!

25 comments:

Anonymous said...

அந்த ஊர் இந்து இயக்க நண்பர்களுக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள் ,

ஜெய்ஹிந்த்

venu's pathivukal said...

thanks for your prompt report on the fascist attack of the communal forces against a progressive movement. It is a repeat performance of these vandal elements in the same venue. awaiting our call for a protest action. a mere demonstration will not do. Tha Mu Ea Sa shall bring out a small booklet to be distributed to general public on the evil designs as a whole.

svv

லக்கிலுக் said...

சென்னைக்கருகிலேயே இந்துத்துவ பாசிஸ்ட் கும்பலின் வெறியாட்டம் நடந்திருப்பது வருத்தமாக இருக்கிறது.

சந்திப்பு said...

நிழலின் குரல் எப்போதும் நிஜமாகாது. உன்னுடைய பாசிச சிந்தனை ஊரை அழிப்பது மட்டுமல்ல. உன்னையும் அழித்து விடும். அமிலம் எரியப்படும் இடத்தை விட இருக்கும் இடத்திற்குதான் கூடுதல் பாதிப்பு என்று சொல்வார்கள். அதுபோல் உங்களது பாசிச வெறித்தனம் இந்த நாட்டு மக்களை கரை சேர்க்க உதவாது. அது ஒரு அழிவு சக்தி. அழிவு சக்தி உலகில் முன்னேறியதாக - வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. எனவே உங்களது பாசிச சித்தாந்தம் இந்தியாவில் சமாதியடைவது நிச்சயம்.

சந்திப்பு said...

நன்றி நண்பர் வேணுகோபால். இதுபோன்ற பாசிச வெறித்தனத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். இந்த பாசிசத்திற்கு எதிராக நாம் ஒரு சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினை வலுவாக கட்டியெழுப்பி இதனை சந்திக்க வேண்டும்.

சந்திப்பு said...

சென்னைக்கு அருகிலேயே இந்துத்துவ பாசிச அபாயம் என்று தாங்கள் சிறப்பாக உணர்ந்துள்ளீர்கள். கடந்த வாரத்தில் இதே இந்துத்துவ கும்பல்தான் செங்கல்பட்டு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் கிறித்துவ இடுகாட்டில் உள்ள சிலைகளை சேதப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ஒரிசா, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்தை மதவெறி குழிக்குள் தள்ள முயற்சிக்கிறது. எனவே இந்த இந்துத்துவ - பாசிசத்திற்கு எதிராக இணையத்தில் மட்டுமல்ல களத்திலும் ஒன்றுபட வேண்டிய தருணம். நன்றி லக்கி. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அண்ணாவின் உயர்ந்த கோட்பாட்டிற்கு சாவல்தான் இந்த இந்துத்துவ சித்தாந்தம். அது ஒருபோதும் மாற்று சிந்தனைகளை சகிக்காது.

Anonymous said...

தமிழ்நாட்டில் பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், பொதுவுடமை கொள்கையுடயவர்கள், மதச்சார்பற்ற கொள்கையுடையவர்கள், கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உடையவர்கள் என அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

இனி நாம் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் எதற்கும் தயாராகவே செல்லவேண்டும். பார்ப்பன இந்துமதவெறி கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் தக்க பதிலடி உடனுக்குடன் கொடுக்கவேண்டும்.

சந்திப்பு said...

திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி

தாங்கள் கூறியிருப்பது போல் இந்துத்துவ பாசிச வெறியர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டியது அவசியம். தாக்கினால் வீழ்த்துவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Anonymous said...

What action will be taken by Priyar's student MK? It is shame to him also... He should make sure this will not happen again in Dravida Land, Renga

Anonymous said...

//அழிவு சக்தி உலகில் முன்னேறியதாக - வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை.//

ரஷ்யா, சீனாவை சொல்லிகிறீர்கள் என நினைக்கிறேன் ,உண்மைக்கு நன்றி

//எனவே உங்களது பாசிச சித்தாந்தம் இந்தியாவில் சமாதியடைவது நிச்சயம்.//

அதனால் அது உருசியாவிலே தாழைதோங்க ஒரு வழி சொல்லுங்க தோழர்

Anonymous said...

"சென்னை: சென்னை அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

சென்னை அருகே போரூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பெரியாரின் 130வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநிலத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பலர் பங்கேற்றுப் பேசினர். முத்து என்பவர் பேசுகையில், இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ரகளையில் இறங்கினர். கல்வீசி தாக்கப்பட்டது. இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன.

இதையடுத்து கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டினர். இதனால் அங்கு பெரும் அமளியாக இருந்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த வன்முறையில் சில கடைகள் தாக்கப்பட்டன. ரவி, காட்டுராஜா உள்ளிட்ட 3 எழுத்தாளர்கள் காயமடைந்தனர். சப் இன்ஸ்பெக்டர் கணேஷுக்கும் காயம் ஏற்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து போரூர் காவல் நிலையத்திற்கு விரைந்த எழுத்தாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்."

http://thatstamil.oneindia.in/news/2008/09/23/tn-hm-cadres-attack-writers-near-chennai.html

நீங்கள் புதிதாக கரடி விடுகிறீர்கள்.
தைரியமிருந்தால் பிற மத நம்பிக்கைகளை விமர்சித்து
கூட்டங்களில் பேசுங்கள். இந்து விரோதப் போக்கினை கைவிடுங்கள்.
வன்முறையை நான் ஆதரிக்கவில்லை. சிபிஎம் என்றைக்காவது இந்துக்களுக்காக
குரல் கொடுத்ததுண்டா.மலேசியாவில்
இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது
குறித்து மெளனம் காப்பீர்கள், பாலஸ்த்தீனீர்களுக்கு கண்ணீர் விடுவீர்கள். இதுதானே உங்கள்
மதச்சார்பின்மை.
தஸ்லீமாவை விரட்டியடித்த சிபிஎம்
கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது
வெட்கக் கேடு.முதலில் உங்கள் கட்சி
தஸ்லீமாவை விரட்டி அடிதத்திற்கு
மன்னிப்பு கேட்கட்டும்.
'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அண்ணாவின் உயர்ந்த கோட்பாட்டிற்கு சாவல்தான் இந்த இந்துத்துவ சித்தாந்தம். அது ஒருபோதும் மாற்று சிந்தனைகளை சகிக்காது.'

ரஷ்யாவில் சோசலிச ஆட்சியில்
மாற்று சிந்தனைக்கு என்ன இடமிருந்தது.

சந்திப்பு said...


தைரியமிருந்தால் பிற மத நம்பிக்கைகளை விமர்சித்து
கூட்டங்களில் பேசுங்கள். இந்து விரோதப் போக்கினை கைவிடுங்கள்.


அனானி நன்பரே. கம்யூனிஸ்ட்டுகள் எந்த மத நம்பிக்கையையும் விமர்சிப்பதில்லை என்ற உண்மையை இதுநாள்வரை தெரிந்து கொள்ளாமலிப்பதற்காக வருந்துகிறேன்.

நாங்கள் விமர்சிப்பது மக்களை இந்து என்ற அடிப்படையில் பிரித்து அதன் மூலம் மதவெறியை தூண்டி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் இந்துத்துவா பாசிச சக்திகளைத்தான் விமர்கிக்றோம். நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால் மனிதனை மனிதன் கொள்ளும் மதவெறி சங்பரிவாரத்தை ஆதரிக்க கூடாது. அதுதான் உண்மையான அகிம்சையாக இருக்க முடியும். இந்த மோடித்துவ பாசிஸ்ட்டுகள் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை வெட்டி படுகொலை செய்த படுபாவிகள் என்பதைததான் நாங்கள் விமர்சிக்கிறோம். மேலும் ஒரிசாவில் கிறித்துவர்கள் மீது தாக்குதல்தொடுப்பதைத்தான் எதிர்க்கிறோம். எனவே தங்களுக்குள் இருக்கும் தவறான கருத்தை மாற்றிக் கொள்ளவும்.



சிபிஎம் என்றைக்காவது இந்துக்களுக்காக குரல் கொடுத்ததுண்டா.மலேசியாவில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்து மெளனம் காப்பீர்கள், பாலஸ்த்தீனீர்களுக்கு கண்ணீர் விடுவீர்கள். இதுதானே உங்கள் மதச்சார்பின்மை.


சி.பி.எம். எப்போதும் இந்து - முஸ்லீம் - கிறித்து என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பிரச்சினையின் அடிப்படையில்தான் விசயத்தை அணுகுவோம். மேலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் மலேசியாவில் இந்தியாவில் இருப்பதைவிட அதிகமான கோவில்களை கட்டிக் கொண்டு குஜால் போடுவது நீங்கள் சொல்லக்கூடிய இந்துக்கள்தான். ஆனால், அது ஒரு இசுலாமிய நாடாக இருந்தாலும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தது. ஆனால் இந்துத்துவவாதிகள் அங்கும் தங்களது பாசிச குணத்தை காட்டி விட்டனர். இவர்களுக்கு மக்களின் பசி - பட்டினி பற்றியெல்லாம் எப்போதும் கவலையில்லை. இந்து - முஸ்லீம் என்ற பிரிவினைதான் அவர்களது ஒரே கவலை. அதுவும் அவர்களது சுயநல கேவலமான அரசியலுக்காக.


ரஷ்யாவில் சோசலிச ஆட்சியில் மாற்று சிந்தனைக்கு என்ன இடமிருந்தது.


இது குறித்து ருசிய மக்கள்தான் கவலைப்பட வேண்டும். இங்கிருக்கும் நாம் அல்ல. அதை அவர்கள் தீர்மானிப்பார்கள் புரிந்ததா அம்பி.

Anonymous said...

இந்துவெறி கூலிக் குண்டர்படையின் மற்றொரு தாக்குதல்.

தந்தை பெரியாரின் 130ஆவது பிறந்தநாள் கூட்டமொன்றை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னை – போரூரில் நேற்று (22/09/2008) நடத்தியிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் மீது கடுமையான தாக்குதலை பார்ப்பனீய-இந்துவெறியர்கள் தொடுத்திருக்கிறார்கள்.

இதில் பலர் காயமடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடுமையாக தாக்கப்பட்டவர்களில் போரூர் போலீஸ்-உதவி ஆய்வாளரும் ஒருவர். “பெரியாரின் பெயரைச் சொல்லி எங்கு கூட்டம் நடத்தினாலும் நாங்கள் விடமாட்டோம்” என்று இந்துவெறியர்கள் கோஷமிட்டுத் தாக்கியதாக அக்கூட்டத்தில் தாக்கப்பட்ட ஒருவர் சொன்னார்.


போரூரில் த.மு.எ.ச.காரர்கள் தாக்கப்படுவது அல்லது அவமானப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நடத்தமுடியாமல் துரத்தியடிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இந்துவெறி பயங்கரவாதிகளின் கூடாரமாக சென்னையைப் பொருத்தவரை போரூர்தான் முன்னனியில் இருக்கிறது. காஞ்சி கொலைகார கிரிமினல் சங்கராச்சாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட்ட போது அவனுக்கு அடியாளாக ஆயுதங்களுடன் வந்து வழக்கறிஞர்களை கொலைவெறியோடு தாக்கிய இந்துவெறிக் கூலிப்படைக் குண்டர்கள்தான் போரூர் ஆர்.எஸ்.எஸ். கும்பல். உயர்நீதிமன்ற வளாகத்திலேயே எமது அமைப்புகளைச் சார்ந்த சுமார் 25தோழர்கள் களத்தில் இறங்கி மேற்கண்ட நூற்றுக்கணக்கிலான போரூர் கூலிப்படைக் குண்டர்களை அடித்து விரட்டினர்.


வெறும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மட்டுமே இந்துவெறியர்கள் இருப்பதால் கொள்கைசார்ந்த சமூகப் போராளிகளின் உணர்ச்சிகளோடு மோதமுடியாமல், நமது தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கி ஓடி ஒளிகிற நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு உதாரணம்தான் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்கெட் பகுதியில் எமது தோழர்கள் இந்துவெறி கூலிக்குண்டர்களை வீதிவீதியாக விரட்டிப் பந்தாடியது முதலாக, கோவை-கவுண்டம்பாளையத்தில் பெரியார் திராவிடக் கழகத் தோழர்களை எதிர்கொள்ள முடியாமல் பதுங்கி ஓடியது வரை. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னால் அதே இடத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வில், அந்த இந்துவெறிக் காலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சிபிஎம்-தமுஎச வினர் முறையான எதிர்விணை (சட்டரீதியாகக் கூட…) ஏதும் செய்யாததினால் துளிர்விட்ட நிலையில் இதுபோன்ற தொடர்தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். சிபிஎம் கட்சினியர் இந்துவெறியர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போதும் எதிர்விணையாற்றாத அவர்களுடைய உணர்ச்சியற்ற தன்மை கேலிக்குரியது.

தில்லியில் உள்ள சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கிலான இந்துவெறிக் குண்டர்களுடன் புகுந்து அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் வரை அனைவரையும் தாக்கினார்கள். அதற்கும் முறையான எதிர்விணையேதும் இல்லை. சாதாரணமாக ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் நடைபெறும் சிறு சிறு குழாயடிச் சண்டைகளையொத்த மோதல்களுக்கு அதிக முக்கியத்துவமளித்து பெரிய தேசியப் பிரச்சினையைப் போல உருவகப்படுத்திப் பேசும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு இந்துவெறியர்களுடனான மோதல் ‘அரசியல்’ ரீதியான மோதலாகத் தெரிவதில்லை.

ஆனால், போரூரில் நேற்று பெரியாரின் பெயரைச் சொல்லி நிகழ்ச்சிகள் நடத்திய காரணத்தாலேயே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள காரணத்தால் இவ்விசயத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்நிகழ்விற்கு சிபிஎம் கட்சியினர் எதிர்விணையாற்றவில்லையென்றாலும், இச்சம்பவத்தைக் கண்டித்து பார்ப்பனீய-இந்துவெறி எதிர்ப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி பெரியாரின் மண்ணில் இந்துத்துவ நச்சுப்பாம்புகள் தலையெடுக்க முடியாமல் நசுக்கியெறியவேண்டிய பொருப்பு நமக்கு இருக்கிறது. பார்ப்பனீயத்தோடு சமரசம் செய்துகொண்டு அல்லது அவ்வப்போது இந்துவெறி பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டும் இருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து உண்மையான உணர்வாளர்களை உடனடியாக வெளியேறி, பார்ப்பனீய பயங்கரவாதத்துக்கு எதிராண சமரசமற்ற போரில் பங்கேற்க அழைக்கிறோம்.

“வேத, புராண, உபநிடதங்களில்தான் இந்தியாவுக்கான மார்க்சீயம் இருக்கிறது” என்று எழுதிய கேரளத்து சங்கரன் நம்பூதிரி (இ.எம்.எஸ். நம்பூதிரிபாடுதான் அவரு…) முதல், “நான் முதலில் பார்ப்பனன், பிறகு இந்தியன், பிறகுதானடா நன் ஒரு மார்க்சிஸ்ட்” என்று மேற்குவங்க சட்டமன்றத்திலேயே கொக்கரித்த சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மே.வங்க அமைச்சருமான சுபாஷ் சக்கரவர்த்தி வரை நீளுகிறது இவர்களது பார்ப்பனீய அடிமைச் சேவகம். கொலைகார சங்கராச்சாரியைக் கைது செய்ததைக் கூட கண்டித்த அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான சீத்தாரம் யெச்சூரி அவர்களையும் இதில் கொசுறாக நினைவுகொள்ளலாம்.

குஜராத் இனப்படுகொலையை அம்பலப்படுத்தி தெகல்கா வெளியிட்ட ஆதாரங்களை காங்கிரஸ், பாஜக பாணியிலேயே இருட்டடிப்பு செய்த துரோகக் கும்பல்தான் இந்த போலிக் கும்பல். தெகல்காவின் ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் வைத்துப் பேசத் திராணியில்லாமல்தான் அந்த ஆதாரங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருக்கின்றன.


“போலி மதச்சார்பின்மை பேசுபவர்களின் (போலிகளின்) கள்ள மவுனம்தான் இந்துவெறியர்களின் கொலைவெறியாட்டத்தைவிட கொடூரமானது” என்று எழுதினார் தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் (அடுத்த இதழில்). ஆனால், இன்றுவரை அதற்கொரு பதிலை நேர்மையாகத் தெரியப்படுத்தாமல் இந்துத்துவத்துக்கு துணைபுரியும் போலிகளின் கைக்கூலித்தனத்தையும் அக்கட்சியிலுள்ள உண்மையான மதச்சார்பின்மை பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பார்ப்பனீய-இந்துவெறி பயங்கரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்கள்தான், பெரியாரியம் பேசிப்பேசி சோர்ந்துபோயுள்ள பகுத்தறிவாளர்களையும் முற்போக்காளர்களையும் மேன்மேலும் செயலுக்கு இழுப்பதாக இருக்கிறது. இதுபோன்ற தருணங்களை நாம் முறையாக, உணர்ச்சிமயமாக உட்கொள்ளாமலும் எதிர்விணையாற்றாமலும் இருந்தால் காலம் நம்மை மன்னிக்காது. பார்ப்பன-இந்துவெறி பயஙரவாதம் தமிழகத்திலிருந்து அடியோடு துடைத்தெறியப்படும் வரை தொடர்ச்சியான போராட்டகளோடு ஒன்றுபடுவோம்.

http://www.orkut.co.in/CommMsgs.aspx?cmm=37515815&tid=5249009313629615244&na=1&nst=1

சந்திப்பு said...

கலைவேந்தன் தங்களது உணர்வு நியாயமானது. அதே சமயம் கடந்த முறை த.மு.எ.ச. நிகழ்வு நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடைபெற்றது. பின்பு நேற்றைக்கு முன்தினம் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கூட்டத்தில் வந்திருந்த தோழர்கள் சற்று நேரத்தில் பெண்கள் - குழந்தைகளை பாதுகாத்துக் கொண்டு அவர்களை விரட்டியுள்ளனர். தோழர்கள் எச்சரிக்கை அடைந்ததை கண்ட குண்டர் கும்பல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி ஒளிந்துக் கொண்டது.

இன்றைக்கும் இந்த இந்துத்துவா கும்பலை நேருக்கு நேர் இந்திய அளவில் சந்தித்துக் கொண்டிருப்பது சி.பி.எம். மட்டுமே. கேரளாவில் அவர்களால் ஒன்றையும் கழட்ட முடியவில்லை. இந்த கோழைகள் எப்போதும் முதுகுக்கு பின்பு இருந்துதான் தாக்குவது வழக்கம். எனவே இந்த சக்திகள் இன்றைக்கு மக்களிடம் வெகுவாக அம்பலப்பட்டுள்ளது. இதில் முன்னணியில் இருப்பது சி.பி.எம். என்பது குறிப்பிடத்தக்கது.

வேதங்களையும், புரானங்களையும் எப்படி பார்க்க வேண்டும். அதன் பிற்போக்கு அம்சங்கள் என்ன? அதன் வரலாற்று வழி என்ன என்ற கோணத்தில்தான் தோழர் இ.எம்.எஸ். அணுகியுள்ளார். எனவே இந்திய மண்ணில் தோன்றிய அனைத்தும் விவாதிப்பதற்கும் - விமர்சிப்பதற்கும் இடம் உண்டு. இதனை தாங்கள் பார்ப்பதுபோல் வறட்டு சித்தாந்த பார்வையில் பார்க்கக் கூடாது.

தங்களது கருத்துக்கு நன்றி.

இதுபோன்ற நேரங்களில் விவாத்தை திசை திருப்புவதே உங்களது அமைப்பின் குழுவின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ சக்திகளை களத்தில் எதிர்ப்பதில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? என்று நான் இங்கே வினா எழுப்ப விரும்பவில்லை. அது தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.

விடுதலை said...

வடநாட்டு பார்ப்பனர்களுக்கு தமிழ்-நாட்டு மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு பிடிபடாத ஆச்சர்யம் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்து மதத்தை நம்புகிறவர்கள்-தான். அந்த மதத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்-தான். ஆனால், அங்குதான் இந்து மதத்தின் கலாச்சார சின்னமாக கருதப்படுகின்ற இராமனை, எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்க முடிகிறது. இது வடநாட்டு பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு பிடிபடாத ஆச்சர்யம். இந்த ஆச்சர்யத்திற்கு காரணகர்த்தா அல்லது நாயகனின் பெயர்தான் தந்தை பெரியார்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துத்துவா எப்படி காலூன்றுவது. இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கின்ற உத்திகளில் ஒன்றுதான் கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இரவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
சரி, குண்டு வைத்தது யார்? சுலபமான பதில் இசுலாமியர்கள் என்பதுதான். இப்படித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கப்-பட்டிருக்கிறது. ஆனால், உண்மை என்ன? ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள்தான். இந்த செய்தியை உள் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் 1948 ஜனவரி 30க்குச் சென்று திரும்ப வேண்டும். நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது. இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான். சரி, இப்பொழுது கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி நடந்த தென்காசி சம்பவத்-திற்கு வருவோம். சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகள் முதலில் கைப்பற்றியது முசுலீம்களின் தொப்பிகள் சிலவற்றைத்தான். ஆனால், சங்கராச்சாரியை கைது செய்தது போல, தென்காசி சம்பவத்திலும் போலீசார் நேர்மையுடன் செயல்பட்டு இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார், நாராயண சர்மா போன்றோரையும் இன்னும் சிலவரையும் கைது செய்தனர். அந்த வகையில் தமிழக அரசு சரியான நிலைப்பாடு எடுத்தது மிகவும் பாராட்டத்தகுந்தது. குண்டு வெடித்தபோது அலறிய நாளிதழ்கள், குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ். காரர்தான் என்று தெரிந்ததும் பத்திரிகா தர்மம் பேசும் நாளேடுகள் அடக்கி வாசித்தன. இந்து நாளேடு கூட 18.2.2008 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

இதுமட்டுமா? முசுலீம்களின் வீட்டு முகவரியை குறித்து வைத்துக் கொண்டு, இந்துத்துவாவாதிகளால் கோர தாண்டவம் நடத்தப்பட்ட மும்பாய் கலவரம் ஆகட்டும், தொலைபேசி கையேட்டை கையில் வைத்துக் கொண்டு, காவல் துறை உதவியுடன் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் நடத்திக் காட்டிய மனித நேயமற்ற படு-கொலைகளும், இவை எல்லாம் எதைக்-காட்டுகிறது என்றால், தென்காசி சம்பவத்-தையோ, முத்துப்பேட்டை சம்பவத்-தையோ எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைத்தான். நடக்கப்போகும் மும்பை போன்ற, குஜராத் போன்ற கலவரங்களுக்கு கால் கோளாகத்தான் கருத வேண்டும். ஆக, கலவரங்களை விதைக்கவும், தூண்டவும், களத்தில் இறங்கி படுகொலைகளை நிகழ்த்தவும் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்றை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் இயங்கி வருவதை இனிமேலாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட பயங்-கரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடவேண்டும். அதற்கான அழுத்தத்தை மதசார்பற்ற அமைப்புகள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
தென்காசியில் நடந்த சம்பவத்தின் குற்றவாளி-யாக கைது செய்யப்பட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரான குமார் பாண்டியனின் வாக்கு மூலம் நமது கருத்துக்கு மேலும் வளம் சேர்க்கிறது. தனது வீட்டில் 4 பேர் பலியான போதும், இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. குண்டுவெடித்தத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை என்கிறார் கூறுகிறது. இதுதான் அவர்கள் எதிர்-பார்ப்பது. ஆனால், இது தமிழ்நாடு என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். பகுத்தறிவு பாதையில் இந்த மண் பண்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இன்னமும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதை எப்படியாவது மாற்றியமைத்திட வேண்டு-மென்று தான் சென்னை அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்துத்துவாதிகள் இப்படிப்-பட்ட தொடர் நிகழ்வுகளை (குண்டுவெடிப்பு, கலவரங்கள்) நிகழ்த்தி வருகின்றனர். சில அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இரு சமுதாயங்-களுக்கிடையே மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதறக்-கூடாது என்பதிலிலேயே குறிக்கோளாக இருந்து வருகின்றன.
அதே போல, இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தத்தின் இடுப்பை முறித்துப் போடு-கின்ற வலிமையை, சுயமரியாதை இயக்கங்-களுக்குப்பிறகு, பொதுவுடைமை இயக்கங்-களுக்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.ன் பார்வை சமீப காலங்களில் பொதுவுடைமை இயக்கங்-களின் அலுவலகங்களுக்கு குண்டு வைப்பதும், பொதுவுடைமை இயக்கங்களின் தொண்டர்-கள் மீது தாக்குதல் நடத்துவதும் என்று தனது ஆக்டோபஸ் காரங்களை நீட்ட ஆரம்பிக்-கிறது. பந்தடிக்க துப்பில்லை என்பதால், நன்றாக ஆடுபவர்களின் கால்களைத் தாக்குவது என்ற போக்குதான் இது.
இதற்கு அத்தாட்சிதான் புதுடில்லியிலும், புனே உள்ளிட்ட இடங்களில் மார்க்ஸ்ட் அலுவலகங்கள் மீதும், தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள். இவர்கள் நீட்டி முழக்குகின்ற இந்துத்துவா கொள்கையில் இராமன் பிறந்த இடமென சொல்லப்படுகின்ற உத்திர பிரதேசத்திலே பாபர் மசூதியை இடித்தும்கூட, இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட முடியாமல் தனது கோர பற்களை தென்னகத்தில் காட்ட ஆரம்பித்துள்ளன.

முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்-கடியான சந்துகளில் அமைந்துள்ள முசுலீம் வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. நெருக்கமான முசுலீம் வீதிகளில் பட்டாசு-களைக் கொளுத்துதல், துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு இந்து நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு - என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளி வாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல். இவற்றின் விளைவாக முசுலிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றல், அதை ஒட்டி முசுலீம்கள் மீது வன்முறை கட்ட-விழ்த்து விடப்படுதல். இவை தொடர் கதையாகி-விட்டது. இந்த நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு - என்ற முழக்கம் தவிர, ராமர் கோயில் கட்டுவோம் - என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. (ரிட் எண் 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கிய-தோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.
இது மட்டுமா, முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் மீதே இந்துத்துவா சக்திகளால் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்தப் பிரச்-சினையில் சர்வ கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல் துறையும் சேர்ந்து அமுக்க முனைவதையும், பிரச்சினையை பெரிதுபடுத்தினால் இந்துத்துவா சக்திகள் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பார்கள் - என அரசியல் பிரமுகர்கள் சொல்லி தமது ஜாதிக்காரர்களான வன்முறையாளர்களை காக்க முனைவதையும், முசுலீம்கள் செய்ததாக செய்தியை பரப்பும் நோக்கில் இந்த குண்டு வீசப்பட்டிருப்பதையும் உண்மை அறியும் குழு கண்பிடித்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதற்கு காரணமாக அமைந்து வினாயகர் பொம்மை ஊர்வலம்தான். அது தடை செய்யப்பட வேண்டும். தேவையானால், நூற்றாண்டு பாரம்-பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முசுலீம்கள் தயாராக உள்ளதாக உண்மை அறியும் குழு அறிவித்திருக்கின்றனர்.
ஆகவே, இந்த தென்காசி, முத்துப்பேட்டை சம்பவங்கள் இன்னுமொரு மும்பை, குஜராத், கோவை கலவரப் பிரச்சினை விதம் என்பதை உணர்வைத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. அத்தகைய நிலையை எட்ட வேண்டிய மதசார்-பற்ற அமைப்புகள் தகுந்த அழுத்தத்-தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதும், அவசரமானதும் ஆகும்.

சந்திப்பு said...

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

தமிழகத்தில் சமீபகாலமாக பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் வன்முறைகளை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்து முன்னணி போன்ற பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னின்று நடத்துகின்றன.
கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, கற்கள், சோடாபாட்டில்களை வீசி வன்முறையில் பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள இறங்கினர். இதில் பெரியார் தி.க.வை சேர்ந்த தோழர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புகாரின் பேரில் இந்து முன்னணியினர் மீது கொலைமிரட்டல், தாக்குதல், கல்வீச்சு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

23-09-2008 அன்று இரவு போரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் தாக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளனார்கள். இது தொடர்பாக காவல்துறை இந்து முன்னணியினர் இருவரைக் கைது செய்துள்ளது.

இது மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற
பார்ப்பனிய இந்துத்துவ வெறி அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை முஸ்லிம், கிருத்துவர்கள் மீது மட்டுமல்லாது பெரும்பான்மையாக உள்ள இந்துமதத்தில் பிறந்த தமிழர்கள் மீதும் இவ்வமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போக்கை இனியும் அனுமதிக்காமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். முற்போக்கு இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள்
இணைந்து பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்களின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.


தோழமையுடன்,
கவிபாஸ்கர்,
செயலாளர்,
தமமிழ்க் கலை இலக்கியப் பேரவை

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'சி.பி.எம். எப்போதும் இந்து - முஸ்லீம் - கிறித்து என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பிரச்சினையின் அடிப்படையில்தான் விசயத்தை அணுகுவோம். மேலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் மலேசியாவில் இந்தியாவில் இருப்பதைவிட அதிகமான கோவில்களை கட்டிக் கொண்டு குஜால் போடுவது நீங்கள் சொல்லக்கூடிய இந்துக்கள்தான். ஆனால், அது ஒரு இசுலாமிய நாடாக இருந்தாலும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தது. ஆனால் இந்துத்துவவாதிகள் அங்கும் தங்களது பாசிச குணத்தை காட்டி விட்டனர். இவர்களுக்கு மக்களின் பசி - பட்டினி பற்றியெல்லாம் எப்போதும் கவலையில்லை. இந்து - முஸ்லீம் என்ற பிரிவினைதான் அவர்களது ஒரே கவலை. அதுவும் அவர்களது சுயநல கேவலமான அரசியலுக்காக.
'

மிக்க நன்றி, சந்திப்பு.இதன் மூலம்
நீங்கள் இந்து விரோதி என்பதை
காட்டி விட்டீர்கள்.முஸ்லீம்களுக்கு
ஆதரவாக உங்கள் கட்சி இருக்கிறது.
அவர்களை திருப்திப்படுத்த தஸ்லீமாவை விரட்டி அடிதத்து.
சிபிஎம் மின் மதச்சார்பின்மை
போலி மதச்சார்பின்மை என்பதுதான்
உண்மை.அதை அம்பலப்படுத்தி
எழுதுவேன்.

பெரியார் கம்யுனிஸ்ட் கட்சிகளை
திட்டியவர்.கீழ்வெண்மணி
படுகொலைகளையொட்டி விட்ட
அறிக்கையில் கம்யுனிஸ்ட் கட்சிகள்
இருக்கக் கூடாது என்று எழுதியவர்.
சாகும் வரை கம்யுனிஸ்ட்களை
எதிர்த்தவர். அவருக்கு பிறந்த நாள்
கூட்டம் நடத்தும் தமுஎச விற்கு
வெட்கமும் இல்லை,அறிவும்
இல்லை. நீ என்னை திட்டினாலும்
நான் உன்னை தலையில் தூக்கி
வைத்துக் கொண்டாடுவேன்
என்று கொண்டாடுகிறார்கள்.

இந்த்துவாவை எதிர்ப்பது என்பதற்காக
சிபிஎம் ஐ ஆதரிக்க முடியாது.அது
மதவாத,சாதியவாதக் கட்சியாகி
விட்டது.

சந்திப்பு said...

ரவீ சீனிவாசன்


சிபிஎம் மின் மதச்சார்பின்மை போலி மதச்சார்பின்மை என்பதுதான் உண்மை.அதை அம்பலப்படுத்தி எழுதுவேன்.


தாராளமாக எழுதுங்கள். இதற்காக நாங்கள் ரவுடிப் படையை உங்கள் மீது ஏவ மாட்டோம். அது உங்கள் இந்துத்துவ பாசிச புத்தியிலேயே இருக்கட்டும்.


பெரியார் கம்யுனிஸ்ட் கட்சிகளை திட்டியவர்.கீழ்வெண்மணி படுகொலைகளையொட்டி விட்ட அறிக்கையில் கம்யுனிஸ்ட் கட்சிகள் இருக்கக் கூடாது என்று எழுதியவர். சாகும் வரை கம்யுனிஸ்ட்களை எதிர்த்தவர். அவருக்கு பிறந்த நாள் கூட்டம் நடத்தும் தமுஎச விற்கு வெட்கமும் இல்லை,அறிவும் இல்லை. நீ என்னை திட்டினாலும் நான் உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன் என்று கொண்டாடுகிறார்கள்.



ரவீ சீனிவாசன் உங்களது பிரிவினை புத்தியை இங்கேயும் வந்து காட்டுவதுதான் வேடிக்கையானது. பெரியாரும் - கம்யூனிஸ்ட்டுகளும் பிரிக்க முடியாத இரண்டு தண்டவாளங்கள். இரண்டும் எப்போதும் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த தேசம் என்ற மக்களை கரையேற்றுவதற்காக. எங்களுக்குள் விமர்சனமும் உண்டு. ஒற்றுமையும் உண்டு. அதற்காக உங்களது பாசிச வேர்கள் இந்த மண்ணில் புதைவதை ஏற்க முடியாது. அதனை சுடு நீரிட்டு அழிப்பதே எங்களின் முதல் வேலை. ஏதோ இந்துக்களுக்காக நீங்கள் இருப்பது போல் முதலைக் கண்ணீர் வடிக்காதீர்கள்! இந்துக்கள் யாரும் உங்கள் பக்கம் இல்லை. உங்களிடம் இருப்பவர்கள் எல்லாம் பாசிஸ்ட்டுகள் மட்டுமே.





இந்த்துவாவை எதிர்ப்பது என்பதற்காக சிபிஎம் ஐ ஆதரிக்க முடியாது.அது மதவாத,சாதியவாதக் கட்சியாகி விட்டது.



ஏதோ இந்து மத பக்தர் போல் வேஷமிடும் நீங்கள். இந்துக்களில் பெரும்பான்மையினராக உள்ள தலித்துக்களை கோவில் பூசாரிகளாக பணியாற்ற அனுமதிப்பீர்களா? அட ஏம்பா. குறைந்தபட்சம் அந்த மக்களை மனிதர்களாவவது மதிப்பீர்களா?

Anonymous said...

“நான் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதை என்னுடைய எதிரிதான் தீர்மாணிக்கிறான்“ என்று மாவோ கூறுகிறார்.

“கருத்துக்கு கருத்துக்கு
அடிக்கு அடி“

இந்த வழியில் முற்போக்காளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயம்

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரந்தள், சங்பரிவார் போன்றவர்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆயுத பயிற்சி அளிக்கிறார்கள். இவர்களின் பயிற்சிக்கு சட்டத்தில் இடம் உண்டு என்றால் நமக்கும் அந்த உரிமை உண்டு. சட்டத்தில் இடமில்லை என்றால் மதவெறி கூட்டத்தினரின் ஆயுத பயிற்சியை மத்திய மாநில அரசுகள் இதுவரை கண்டுகொள்ளாதது ஏன்?

பார்ப்பன இந்து மதவெறி கூட்டங்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால் நாடு தாங்காது சாமி...

சந்திப்பு said...

நன்றி தோழர் கரிகாலன். தங்களது கருத்துடன் உடன்படுகிறேன். நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்று நம்முடைய வர்க்க எதிரிதான் தீர்மானிக்கிறேன். தற்போது மதவெறிக்கு எதிராக நமது ஒன்றுபட்ட பலத்தினை ஆயுதமாக திரட்டுவோம். நன்றி

Anonymous said...

//At 10:12 AM, சந்திப்பு said...
கலைவேந்தன் தங்களது உணர்வு நியாயமானது. அதே சமயம் கடந்த முறை த.மு.எ.ச. நிகழ்வு நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடைபெற்றது. பின்பு நேற்றைக்கு முன்தினம் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.//

அன்புக்குரிய நண்பர் சந்திப்பு அவர்களே, எதிரிகள் எங்கும் எப்போது சொல்லிவிட்டு வரமாட்டார்கள். அதனினும் இங்கே உங்கள் அமைப்புத் தோழர்களைத் தாக்கியவர்களோ 'வாலியை மறைந்திருந்து பின்னால் குத்திய' பேடி ராமனின் பக்தர்கள். இவர்கள் அதனினும் பேடித்தனமாகத்தான் தாக்குவார்கள். சென்ற முறை அங்கேயிருந்து தமுஎச காரர்களும் சென்னை கலைக்குழுவினரும் விரட்டியடிக்கப்பட்டபோது இந்துவெறியர்களுக்கு எதிராக சண்டையிட்டவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் சொல்கிறேன். அந்த சம்பவத்திற்காக பெயரளவில் கூட ஒரு வழக்கு கூட பதியாமல் தமுஎச பின்வாங்கியது அவமானகரமானது. ஆகவே மீண்டுமொருமுறை கூட்டம் நடத்தப் போகும் போது இப்படிப்பட்ட புறவயமான பிரச்சினைகளை எதிர்பார்க்காமல் செல்வது கேனைத்தனமானது. முறையான வழிகாட்டுதல் இன்றி தோழர்களைக் குடும்பத்துடன் அங்கே விடுவது ஆபத்தானது. நமக்குள் இருக்கும் அரசியல் முரண்பாடுகளுக்கு நீங்கள் விளக்கமளித்தது போதும் (சகிக்கவில்லை) இதுபோன்ற சாதாரணமான கருத்துக்களையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள்.

Anonymous said...

//இன்றைக்கும் இந்த இந்துத்துவா கும்பலை நேருக்கு நேர் இந்திய அளவில் சந்தித்துக் கொண்டிருப்பது சி.பி.எம். மட்டுமே. கேரளாவில் அவர்களால் ஒன்றையும் கழட்ட முடியவில்லை. இந்த கோழைகள் எப்போதும் முதுகுக்கு பின்பு இருந்துதான் தாக்குவது வழக்கம். எனவே இந்த சக்திகள் இன்றைக்கு மக்களிடம் வெகுவாக அம்பலப்பட்டுள்ளது. இதில் முன்னணியில் இருப்பது சி.பி.எம். என்பது குறிப்பிடத்தக்கது.//

இந்துத்துவா வெறியர்களை நீங்கள் சமரசமற்று எதிர்க்கிறீர்கள் என்பது உண்மை என்றால் தெகல்கா வெளியிட்ட ஆதாரங்களை இருட்டடிப்பு செய்தது ஏன் தோழர்?

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்தியாவில் வேறெங்கும் வளராத அளவிற்கு ஒரு அசுர வளர்ச்சியில் இந்துவெறி ABVP (அகிலபாரத வித்யார்த்தி பரிஷத்) என்கிற பாசிச அமைப்பு வளர்ந்திருக்கிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள் தோழர். உங்களது SFI, DYFI போன்ற அமைப்புகளின் முன்னனி ஊழியர்களில் பலர் அவ்வமைப்பில் தீவிரமாக செயல்பட்டும் வருகிறார்கள். உங்களுக்கு பெயர் மற்ற விபரங்கள் எதுவும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் நானே தருகிறேன்.

ரஜினி ரசிகன் பாணியில் இருக்கிறது உங்களது கேரளாவைப்பற்றிய புளகாங்கிதம்.

Anonymous said...

//வேதங்களையும், புரானங்களையும் எப்படி பார்க்க வேண்டும். அதன் பிற்போக்கு அம்சங்கள் என்ன? அதன் வரலாற்று வழி என்ன என்ற கோணத்தில்தான் தோழர் இ.எம்.எஸ். அணுகியுள்ளார். எனவே இந்திய மண்ணில் தோன்றிய அனைத்தும் விவாதிப்பதற்கும் - விமர்சிப்பதற்கும் இடம் உண்டு. இதனை தாங்கள் பார்ப்பதுபோல் வறட்டு சித்தாந்த பார்வையில் பார்க்கக் கூடாது.

தங்களது கருத்துக்கு நன்றி.//

இப்பதிவை நான் இங்கே பதியும்போது ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டேன். அதற்காக மன்னிக்கவேண்டுகிறேன்.இங்கே நான் பதிந்த மேற்படி செய்தி ஆர்குட் சமூகங்களில் நான் பார்த்தது. அதனைத்தான் இங்கு பதிவிட்டேன். அதற்கான சுட்டியை மட்டும் கொடுத்துவிட்டு இவ்விபரத்தை பதிவிட மறந்துவிட்டேன். அது எனது சொந்த கருத்து இல்லையென்றாலும் அக்கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்ததால் அதனை இங்கு பதிந்தேன்.

இ.எம்.எஸ். எழுதியது பற்றிய வறட்டுத்தனமான வாதம்தான் அது என்றால், உங்களுடைய முறையான விளக்கத்தை எனக்குத்தாருங்கள் elamperiyar@gmail.com என்பதுதான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி.

அப்பதிவிலேயே சுபாஷ்சக்கரவர்த்தி பற்றிய விமர்சனமும் இருக்கிறது. அதற்கு நீங்கள் எதுவும் சொல்லவில்லை. 'அவர்மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம்' என்று கண்துடைப்பு நாடகம் எதுவும் போட்டுக்காட்டாமல் நேர்மையாக பதில்சொல்லுங்கள் தோழர்.

//இதுபோன்ற நேரங்களில் விவாத்தை திசை திருப்புவதே உங்களது அமைப்பின் குழுவின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ சக்திகளை களத்தில் எதிர்ப்பதில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? என்று நான் இங்கே வினா எழுப்ப விரும்பவில்லை. அது தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.///

இதில் உங்களுடைய காழ்ப்புணர்வு மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது தோழர். நான் என்னுடைய அமைப்பு என்று எதையும் இப்போது கொண்டிருக்கவில்லை. சிபிஎம் கட்சியின் செயல்பாடுகளில் ஒரு பெரும் அதிருப்தியினால் வேற்று அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சிறிது நிதானம் காட்டவேண்டியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு செய்யும் எந்தக் காரியமும் முறையானதாக இருக்காது என்பதை சிபிஎம் கட்சியில் இணைந்து பணியாற்றியதில் இருந்து கற்றுக் கொண்டேன். ஆகவே சம்பந்தப்பட்ட பதிவுக்கு பதில் சொல்லாமல் அமைப்புச் சாயம் பூசுவது சரியானது அல்ல.

பொதுவாக இந்துவெறிக்கு எதிரான போராட்டங்களிலும், பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டங்களிலும் சிபிஎம்/சிபிஐ கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து பெரியாரிய, புரட்சிகர இயக்கங்கள் சமரசமின்றியே போராடிவரூகின்றன. கோவையில் இயக்குனர் சீமான் தாக்கப்பட்ட போது கூட சிபிஎம் அல்லாத அமைப்புகள் அங்கே அணிதிரண்டு ஒன்றாக நின்றன. அதேபோல தில்லைப் போராட்டத்தில்கூட சிபிஎம் கட்சியைத் தவிர மற்ற அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் ஓரணியில் நின்றன. "தீட்சிதர்களை 'பார்ப்பனர்கள்' என்று நீங்கள் விமர்சிப்பீர்கள் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று சொல்லி உங்களது சிபிஎம் கட்சி அப்போராட்டக் குழுவிலிருந்து தொடக்கத்திலேயே விலகியிருக்கிறது. இவையெல்லாம் மற்ற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தெரிவிப்பதற்கும் உங்கள் கட்சியின் இரட்டைத்தன்மையை உணர்த்துவதற்கும்தான் நான் இங்கே தெரிவித்திருக்கிறேன். விவாதத்தை திசைதிருப்ப அல்ல.

இயக்குனர் சீமான் கோவை இந்துவெறியர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்தும் அதனை நீங்கள் கண்டித்து எழுதியதாக நான் எங்கும் படிக்கவில்லை தோழர்.

சந்திப்பு said...

By mail

தோழர் செல்வபெருமாள் அவர்களுக்கு வணக்கம்!

இன்றுதான் போரூர் தமுஎச மீதான வன்முறை பற்றிய உங்களின் வலைப் பதிவைப் படித்தேன்.

துல்லியமான படப்பிடிப்பாக இருந்தது,அந்த வலைப் பதிவு.

தமிழ்நாட்டில் தமுஎச வுக்கென்று ஓர் எழுத்து நடை, பேச்சு நடை இருக்கிறது. அந்த நடை எதிரியையும் பக்குவமாய் தன் பக்கம் இழுக்கும் காந்த நடை. இது தமிழ்நாட்டுக்கே தெரியும்.

பெரியாரை விட்டுக் கொடுக்காத உங்களின் விவாத எழுத்து நடை, பக்குவமாக,நெருப்பாய்,சரியாய்,சிலசமயம் பனியாய்,பூவாய்,புயலாய் வந்து விழுகிறது...!

ஆச்சரியங்கள் தொடரட்டும்..!

தமுஎச ஒரு கையில் பேனாவும் ,இன்னொரு கையில் தற்காப்பு ஆயுதத்தையும் தூக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

நல்லவனுக்கு கோபம் வந்தால் இந்த ஒரு பூமி பத்தாது என்று புரிய வைக்கும் காலம் நெருங்குகிறது என்று நினைக்கிறேன்.

நன்றி!

ஆதிசிவம்.

♥ மனிதன்@சென்னை ♥ said...

தோழர் செல்வபெருமாள் அவர்களுக்கு வணக்கம்!

இன்றுதான் போரூர் தமுஎச மீதான வன்முறை பற்றிய உங்களின் வலைப் பதிவைப் படித்தேன்.

துல்லியமான படப்பிடிப்பாக இருந்தது,அந்த வலைப் பதிவு.

தமிழ்நாட்டில் தமுஎச வுக்கென்று ஓர் எழுத்து நடை, பேச்சு நடை இருக்கிறது. அந்த நடை எதிரியையும் பக்குவமாய் தன் பக்கம் இழுக்கும் காந்த நடை. இது தமிழ்நாட்டுக்கே தெரியும்.

பெரியாரை விட்டுக் கொடுக்காத உங்களின் விவாத எழுத்து நடை, பக்குவமாக,நெருப்பாய்,சரியாய்,சிலசமயம் பனியாய்,பூவாய்,புயலாய் வந்து விழுகிறது...!

ஆச்சரியங்கள் தொடரட்டும்..!

தமுஎச ஒரு கையில் பேனாவும் ,இன்னொரு கையில் தற்காப்பு ஆயுதத்தையும் தூக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

நல்லவனுக்கு கோபம் வந்தால் இந்த ஒரு பூமி பத்தாது என்று புரிய வைக்கும் காலம் நெருங்குகிறது என்று நினைக்கிறேன்.

நன்றி!

ஆதிசிவம்.