இந்திய குடியரசுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரி வேட்பாளரான பிரதீபா பாட்டிலின் வெற்றி உறுதியாகி விட்டது. பிரதீபா பாட்டிலின் அரசியல் வாழ்க்கையே, அவரை இந்த பதவிக்கு தேர்வு செய்ய முதன்மைத் தகுதியாக அமைந்தது.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்த்தை பெறவுள்ள பிரதீபா பாட்டில் குறித்து கலங்கிக் கிடக்கும் பா.ஜ.க. உள்குத்து, சதிவேலைகளில் இறங்கி வருகிறது. இதையெல்லாம் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் கடமையை காங்கிரசும், அதன் தோழமை கட்சிகளும் செய்து வருகிறது.
ஆனால் சமீபத்தில் பிரதீபா பாட்டில், தொலைக்காட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உரியதே! அதாவது, "இந்த ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை முன்கூட்டியே பாபாஜி ஆவியாக வந்து அருள் வாக்கு கூறினார்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை(அவர்தான் அமைப்பின் தலைவர்) சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார். அப்போது பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு எனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது என்றும் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். (Thanks: http://www.thatstamil.com/)
பிரதீபா ஜிக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை உட்பட, எந்த நம்பிக்கைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவர் உரிமை. அதே சமயம், இந்திய நாட்டின் உயர் பொறுப்பிற்கு வரும் ஒருவர் பேசும் பேச்சுக்கள் மற்றும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்கு உரியதாகவும் - மூடநம்பிக்கைக்கு உட்பட்டதாகவும் அமைவது ஏற்கத்தக்கதல்ல. சரியானதும் அல்ல.
இந்திய ஜனாதிபதியாக பல மகத்தான தலைவர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். குறிப்பாக தத்துவார்த்த துறையில் பெயர்பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஆர். நாராயணன் போன்றோரை சுட்டிக் காட்டலாம். அத்தகைய உயர்ந்த இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, இனியாவது நாம் எந்த கருத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதை நிதானித்து வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன், தன்னுடைய பதவிக் காலம் முடித்து வெளியே வரும் போது, ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். அதாவது, "அவர் பதவியில் இருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் எந்த இடத்திலும் மதம் சார்ந்த தலைவர்களின் கொட்டேஷனை பயன்படுத்தியதே இல்லை என்று குறிப்பிட்டார். (உதாரணமாக விவேகானந்தர். இராமகிருஷ்ணர் போன்றவர்கள்)" இப்படி மிகத் தெளிவாக செயல்பட்டவர்கள் இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, ஆவிகளுக்கு மயங்க ஆரம்பித்தால், ஆட்சியே நடத்த முடியாத நிலை ஏற்படும். எதிர் காலத்தில் இந்திய அரசை, அரசியல் வழி நடத்துவதற்கு பதிலாக, ஆவிகளின் வழி நடத்தும் துன்ப நிலைக்கு தள்ளப்படலாம். (இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தனிக்கதை) ஆவிகள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பலத்தை தரலாம். ஆனால், நாட்டிற்கு அது பலவீனத்தையே கொண்டு வரும்!
பிரதிபா ஜியிடம் அரசியல் ரீதியாக பல விஷயங்கள் பாசிட்டிவாக இருந்தாலும், இதுபோன்ற நெகட்டிவான விஷயங்கள் புறக்கணிக்க கூடியதல்ல. ஏடறியா - எழுத்தறியா மக்களை, மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்நேரத்தில், நீங்களே அதன் புதை சேற்றுக்குள் மூழ்குவதை ஏற்க முடியாது. ஆவி வழி அரசியல் அயோக்கியர்களுக்கே பயன்படும். மதவாத சக்திகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இது பிற்போக்கு சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இதற்கு இந்திய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
ஆவி, முன் ஜன்மம், கடவுள் போன்ற கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையானது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. இதனை ஆதிகால அடிமைச் சமூகத்தில் இருந்து ஆளும் வர்க்கம் தன்னுடைய சொத்தாக போற்றி பாதுகாத்து வருகிறது. இத்தகைய கருத்திற்கு நாம் இறையானால் நம்முடைய சிந்தனையை நாமே செயலிழக்க வைக்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.