April 21, 2006

காஷ்மீர்-ஒரு பார்வை

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை இன்று சர்வதேச அளவில் செய்தித்தாள் களிலும், தொலைக்காட்சி களிலும் அலசப்படும் அரசியல் பிரச்சனையாகி விட்டது. அணுஆயுத சண்டைகள் மூலம் தீர்வுகாண இரு ஆட்சியாளர்களும் சவால் விடுவதால் மேலும் ஒரு பயம் உலகை கவ்வியுள்ளது. இந்த வீராப்பு பேச்சுதான் அமெரிக்கா தனது மூக்கை நுழைக்க உலக நாடுகளின் ஆதரவை தன் பக்கம் இழுக்க வசதி செய்தி கொடுத்துள்ளது.


வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பண்பாட்டை ஆட்சியாளர்கள் மறந்து விட்டதால்,
காஷ்மீர் பிரச்சனை உருவானது. அதனுடைய வரலாற்று பின்னணியையும், வரலாற்றையும்
பார்த்தால் இது புரியும்.




இந்தியாவின் தலைப்பகுதியான ஜம்மு-காஷ்மீர் 22,22,236 சதுர கிலோ மீட்டர் அளவு
பரப்பளவைக் கொண்டது. இங்கிருக்கும் மக்கள் தொகை 10,069,917 (2001 கணக்குப்படி).
காஷ்மீரி, உருது, தோக்கிரி, லதாகி, ஹிந்தி, பாகிரி ஆகிய மொழிகளும், ஒரு சில துணை
மொழிகளும் பேசக்கூடிய மக்களை உள்ளடக்கிய தொன்மையான கலாச்சாரத்தை கொண்டுள்ள ஒரு
மாநிலமே காஷ்மீர்.




கிழக்கு சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீர் பிரதானமாக நான்கு
பகுதிகளை உள்ளடக்கியது. ஜம்மு, காஷ்மீர், லதாக், “கில்ஜிட்-பால்ட்டிஸ்தான் -
காஷ்மீரின் ஒரு பகுதியை (ஆஸாத் காஷ்மீர், கில்ஜிட் - பால்டிஸ்தான்) பாகிஸ்தான்
ஆக்கிரமித்துள்ளது. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் 80 சதவீதம் முஸ்லீம்கள்
வசிக்கின்றனர். லதாக்கை பொருத்தவரை நிலப்பரப்பில் பெரியதாக இருந்தாலும் மாநில
மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதத்தினரே அங்கு வசிக்கின்றனர்.




இப்பகுதியின் கலாச்சாரம் தொன்மையானது. இஸ்லாம், பௌத்தம்(புத்தியிஸம்), காஷ்மீரி
பண்டிட்டுகள்-இந்துக்கள், சீக்கியர்களின் கலாச்சார இணைப்பாகவும், அத்துடன்
இஸ்லாத்தில் - ஸூபி என்ற மனித நேயத்தை வலியுறுத்தும் ஒரு கலாச்சார அமைப்பையும்
கொண்டு பல கலாச்சாரங்களின் தங்குமிடமாக காஷ்மீர் உள்ளது. இஸ்லாம் மதத்திலும் கூட
"தர்க்காக்களை வழிபடும்" தனித்தன்மை வாய்ந்த முறையும் இங்குதான் உள்ளது. இக்
கலாச்சாரத்தை இம்மக்கள் "காஷ்மீரியம்" என்று அழைக்கின்றனர். மதச்சார்பின்மை
என்பது இதன் இயல்பான அடிப்படை.




இவ்வாறு பன்முகத்தன்மையுடன் கூடிய காஷ்மீர் இன்று கலவரப்பகுதியாக, அமைதியிழந்து,
உரிமைகளிழந்து, பயங்கரவாதத்துடன் வாழும் வாழ்க்கையாக மாறியுள்ளது. இதுவரை
இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 60,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும்,
நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து டெல்லி, பஞ்சாப்
உட்பட பல்வேறு பகுதிகளிலும், அயல்நாடுகளிலும் குடியெர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒருபுறமும், அவர்களைத் தாக்கும் ராணுவத்தின்
கண்மூடித்தனமான தாக்குதல் இன்னொரு புறமும் என்று மக்கள் பெரும் இன்னலுக்கு
உள்ளாகியுள்ளனர்.




காஷ்மீரின் வரலாற்றுப்
பின்னணி:




காஷ்மீர் பன்னெடுங்காலமாக முகலாயர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், சீக்கியர்கள்,
டோக்ராக்கள் என்று பல்வேறு தரப்பினரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவே இருந்து
வந்தது. இதன் தொடர்ச்சியாக 1846 முதல் டோக்ரா மன்னன் குலாப்சிங்கின் ஆளுகையின்
கீழ் காஷ்மீர் வந்தது. இந்த குலாப்சிங் ஆட்சியில் அமர்ந்த விதமே வெட்கக்கேடானது.




அன்று காஷ்மீர் - பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே சீக்கியர்களின் கீழ்
செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றியது
போலவே பஞ்சாப் சமஸ்தானத்தையும் கைப்பற்ற சீக்கியர்களுடன் போரிட்டது. போரில்
தோல்வியுற்ற பஞ்சாப் சமஸ்தானத்தின் மீது இழப்பீட்டுத் தொகையாக சீக்கியர்கள்
75,00,000 ரூபாயை அபராதமாக கொடுக்க வேண்டும் என்று காலக்கெடுவுடன் கூடிய நிபந்தனை
விதித்தது பிரிட்டிஷ் அரசு. இல்லையெனில் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு கொடுத்துவிட
வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். பஞ்சாப் சமஸ்தானமும் இதை
நிறைவேற்றுவதாக பிரிட்டிஷாருக்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால் அவர்களால் நிறைவேற்ற
முடியாத சூழ்நிலையில் காஷ்மீரை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர்.




இது நடைபெற்ற நான்கு நாட்களிலேயே இந்து டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங்
பிரிட்டிஷாரிடம் இத்தொகையை தான் தருவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட
பிரிட்டிஷார் குலாப்சிங்கிற்கு காஷ்மீரை தருவதாக ஒப்புக் கொண்டனர்.




குலாப்சிங்கிற்கும், பிரிட்டிஷாருக்கும் இடையே நடைபெற்ற "அமிர்த் சரஸ்"
ஒப்பந்தப்படி குலாப்சிங் 75 இலட்சம் ரூபாயும், ஓராண்டு அடையாள வாடகையாக இருபது
பாஸ்மினா வகை ஆடுகளையும், ஒரு குதிரையையும், மூன்று இணை காஷ்மீர் சால்வைகளையும்
கொடுத்து காஷ்மீரை தன்வசப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம்
ஒப்பந்தம் செய்து கொண்டான்.




டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங்கிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது
என்பது ஒரு சுவராஸ்யமான செய்தி. குலாப்சிங் சீக்கிய மன்னர் ரஞ்சித்சிங் என்பவரின்
இராணுவத்தில் அவரது சதிவேலைகளுக்கு துணைநின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக
"ஜம்மு" பகுதியை இனாமாக பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு பின்னர்
சீக்கியரை தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கும் ஒத்துழைத்தார்.




90 சதவீதம் முஸ்லீம்களை கொண்ட காஷ்மீர், ஜம்முவைத் தலைநகராகக் கொண்ட டோக்ரா
மன்னர் குலாப்சிங்கின் கீழ் வந்தது. மன்னர் குலாப்சிங்கின் ஆட்சி, நீதி
நேர்மையற்று இருந்தது.




டோக்ரா இனத்தவருக்கு சலுகை, மற்றவர்களுக்கு தண்டம் என்று இருந்தது.
வேலைவாய்ப்பில் 60 சதவீதம் டோக்ராக்களுக்கே ஒதுக்கப்பட்டது. முஸ்லீம்கள் கல்வி,
தொழில், வேலைவாய்ப்பு, அரசின் நிர்வாகப் பதவிகள் போன்ற அனைத்திலும் ஒதுக்கி
வைக்கப்பட்டனர். காஷ்மீர் மக்கள் மீது கொடுமையாக வரி விதிக்கப்பட்டது. அவர்களது
கால்நடைகளான ஆடு, மாடுகள் மீது கூட கடுமையாக வரி விதிக்கப்பட்டது. அத்துடன்
"கொலைக் குற்றத்திற்கு டோக்ராவைத் தவிர அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க
வேண்டுமென்பது நீதித்துறையின் கொள்கையாக இருந்தது"




குலாப்சிங்கின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்வோர் சித்தரவதை செய்து
கொல்லப்பட்டனர். மிகக் கொடூரமாகவும், தோலை உரித்து அவர்களை தெருவோரத்தில்
நிறுத்தி வைத்து மற்றவர்களுக்கு பயமூட்டினான்.




மன்னர் குலாப்சிங்கின் ஆட்சிக்குப் பிறகு அவரது வாரிசான ரன்பீர்சிங்கின் ஆட்சி
1857 வரையிலும், பின்னர் 1885க்கு பின் பிரதாப்சிங்கின் ஆட்சியும் 1925க்கு பிறகு
மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியும் என மாறி, மாறி ஒரு நூற்றாண்டு காலம் டோக்ராக்களின்
ஆட்சி அதிகாரமே காஷ்மீர் மக்களை வாட்டி வதைத்தது.




மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியிலும் குலாப்சிங் காலத்து கொடுமைகள் தொடர்ந்தன. இவரது
ஆட்சியிலும் முஸ்லீம்கள் இரண்டாந்தர மக்களாகவே நடத்தப்பட்டனர். முதல் ஐந்தாண்டுக்
காலத்தில் வழங்கப்பட்ட 25 நில மானியங்களில் இரண்டு மட்டுமே முஸ்லீம்களுக்கு
வழங்கப்பட்டது. அத்துடன், காஷ்மீரில் ஜமீன்தார்களுக்கு நிலங்களின் மீதான உரிமைகள்
பறிக்கப்பட்டது. காஷ்மீரிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் நிலங்களை
விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அவர்களது மரங்களை வெட்டுவதற்குக்கூட அரசின்
அனுமதியின்றி வெட்டக்கூடாது.




இத்துடன் மன்னர் ஹரிசிங்கின் ஆட்சி வகுப்புவாதப் பார்வையோடும் செயல்பட்டு வந்தது.
முஸ்லீம் பெண்களை மானபங்கப்படுத்துவது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, குரானை
அவமதிப்பது, மசூதிகளை அழிப்பது போன்ற வன்செயல்களையும் செய்து வந்தது.




ஹரிசிங் ஆட்சிக்கு எதிரான
கிளர்ச்சி:




ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக பரவலான அதிருப்தியும், கோபமும் உருப்பெற்று
கலகங்களாக வெடிக்க ஆரம்பித்தன. சேக் முகமது அப்துல்லா என்ற வாலிபர் அலிகார்
முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்து ஸ்ரீநகர் பள்ளி ஒன்றில்
ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஹரிசிங்கின் கொடுமையான ஆட்சிக்கு முடிவு
கட்டவேண்டும் என்ற நோக்கோடு அவரது பணியை விட்டு விட்டு படித்த முஸ்லீம் இளைஞர்களை
அணிதிரட்டி காஷ்மீர் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிறுத்தும்படி
அரசுக்கு மனுக் கொடுத்தார்.




பல்வேறு இடங்களில் கிளர்ச்சிகளும் நடைபெறத் துவங்கியவுடன் மன்னர் முஸ்லீம்களின்
கோரிக்கைகள் குறித்து பேசத் தயாராக உள்ளதாக அறிவித்தார். இதற்காக மாநிலம்
முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவற்றை விளக்கி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.




1931 ஜூன் 25 அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அப்துல் காதர் என்ற இளைஞர்
ஆற்றிய உரையை சட்டவிரோதம் என அறிவித்து, அவரைக் கைது செய்து ஜூலை 6ம் தேதியன்று
விசாரணை நடைபெறும் என்று அரசு அறிவித்தது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள்
திரண்டு விசாரணை நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரணையை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விசாரணை தள்ளி வைக்கப்பட்டு சூலை 13 அன்று ஸ்ரீநகர் சிறையில் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டது.




அன்றைய நாளிலும் பெருந்திரளான மக்கள் கூடி விசாரணையை நிறுத்தும்படி வலியுறுத்தி
சிறைக்குள்ளே நுழைய முயன்றனர். அவ்விடத்திற்கு வருகைத்தந்த ஆளுநர் துப்பாக்கிச்
சூட்டிற்கு உத்தரவிட்டார். அதில் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்நாளே காஷ்மீரில்
"ஜூலை 13 - தியாகிகள் தினமாக" அனுஷ்டிக்கப்படுகிறது.




இரு முகாம்கள்:




1931ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து இன்றைய ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகள்
மன்னருக்கு எதிராக சதி நடப்பதாக கூக்குரல் எழுப்பினர். அதே ஆண்டு ஆகஸ்டில்
நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் "காஷ்மீர் மகாராஜாவுக்கு எதிராக நடைபெறும்
கடுமையான பிரச்சாரத்தை இந்து மகாசபை அச்சத்தோடு நோக்குகிறது." என்று தீர்மானம்
நிறைவேற்றி தங்களது விசுவாசத்தை மன்னருக்கு தெரிவித்து வகுப்புவாதக் கனலை
மூட்டிவிட்டனர்.




இதைத் தொடர்ந்து மகாராஜாவுக்கு ஆதரவாக அவரது அரவணைப்போடு "காஷ்மீர் பண்டிட்
மாநாட்டுக் கட்சி," ஜம்முவில் தொடங்கப்பட்ட "இந்து சபா," சீக்கியர்களுடையே
"சிரோன்மணி கல்சா தர்பார்" என்ற புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன.




இதே போன்று காஷ்மீர் மக்களின் கொழுந்து விட்டு எரியும் எழுச்சியின் தொடர்ச்சி ஒரு
விரிந்து பரந்த இயக்கத்தை உருவாக்கத் தூண்டியது. அதன் விளைவாக 1932ல் உருவானதே
சேக் அப்துல்லா தலைமையிலான "ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி".




இதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேக் அப்துல்லா தனது உரையில் "காஷ்மீர்
இயக்கம் என்பது ஒரு வகுப்புவாத இயக்கமல்ல, அனைத்துப் பிரிவு மக்களும் தமது
மனக்குறைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒரு பொதுத்தளம், இந்துச் சகோதரர்களுக்கும்,
சீக்கியச் சகோதரர்களுக்கும் உதவி செய்ய நாம் எப்போதும் தயார் நிலையில்
உள்ளோம்..." என்று வெளிப்படையாக அறிவித்தார். மன்னரின் நிலப்பிரபுத்துவ
பிற்போக்கு ஆட்சிக்கு எதிராக அணிதிரண்ட அனைவரின் ஆதரவும் பெருவாரியாக
கிடைக்கப்பெற்றது.




ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மதச்சார்பற்ற தன்மையோடு
செயல்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி பின்னர் 1939ல் "ஜம்மு
- காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.




புதிய காஷ்மீர் திட்டம்:




1944ல் தனது இலட்சியங்களை விரிவாக எடுத்துச் செல்ல தேசிய
மாநாட்டுக் கட்சி "நயா காஷ்மீர்" (புதிய காஷ்மீர்) என்ற புதிய திட்டத்தை
தயாரித்தது.




"பெண்கள், தொழிலாளர்கள், சமூகத்தின் நலிந்த பிரிவினர் ஆகியோரின் உரிமைகளை
பாதுகாப்பது என்ற கோரிக்கைகளை வலியுறுத்திய அதே சமயம், பாசிசத்துக்கு எதிராக
போராடிய சோவியத்தின் செம்படைக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்களை
நிறைவேற்றியது" நயா காஷ்மீர் திட்டம் பரவலாக மக்கள் மத்தியில் வரவேற்பைப்
பெற்றது.




"காஷ்மீரை விட்டு வெளியேறு"
இயக்கம்:




சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரின்
பெரும்பான்மை முஸ்லீம்களை அடக்கியாளும் டோக்ரா மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியை
எதிர்த்து 1946ல் "காஷ்மீரை விட்டு வெளியேறு" என்ற வீரஞ் செறிந்த இயக்கத்தை
முன்னெடுத்துச் சென்றனர். மன்னர் ஹரிசிங்கின் இடத்தில் ஒரு முஸ்லீம் மன்னரே இடம்
பெற்றிருந்தாலும் கூட இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கும்.




சுதந்திர நாடுகள்:




1947ல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் உதயமாகின. இதைத்
தொடர்ந்து காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஆதிவாசி மக்களையும், பயிற்சிப்பெற்ற
முன்னாள் ராணுவ வீரர்களையும் தூண்டிவிட்டு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க
ஆரம்பித்தது. இந்நிலையில் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடியதோடு, காஷ்மீரை
இந்தியாவுடன் இணைக்கவும் ஒப்புக் கொண்டு இணைப்புக்கான ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுக் கொடுத்தார். பின்னர் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களால் ஆரவாரமாக
வரவேற்கப்பட்டு, காஷ்மீரிகளும் ராணுவத்துடன் இணைந்து ஊடுருவல்காரர்களை
விரட்டியடித்தனர். இந்திய அரசு இப்பிரச்சனையை ஐ.நா.விற்கு எடுத்துச் சென்றது.
இதன் தொடர்ச்சியாக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையே போர்நிறுத்த கோடு
(Cease Fire Line) என்று அழைக்கப்படுகிறது. பின்னர்
இது (LOC - Line of Control) என மாற்றப்பட்டது.
காஷ்மீரின் ஒரு பகுதி ஆஸாத் காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான் ஆகியவைகள் இன்று
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு (POK - Pakistan Occupied
Kashmir
) பகுதிகளாக உள்ளன.




மாநிலத்தின் உயர்ந்தபட்ச
சுயாட்சி:




காஷ்மீரின் பின்னணியை உட்கொண்டு இந்திய அரசியல் சாசனத்தில் "சிறப்புப் பிரிவு
370" ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக சேர்க்கப்படுகிறது. இராணுவம், வெளியுறவு,
தகவல் தொடர்பு ஆகியவை மட்டுமே இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். தவிர
காஷ்மீருக்கென்று புதிய அரசியல் சாசனத்தையும் அமைத்துக் கொள்ளலாம் என்று பரந்த
அளவிலான அதிகாரங்களை வழங்கியது.




ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதற்கென்று இருக்கக்கூடிய கொடியை பயன்படுத்திக்
கொள்ளவும், அம்மாநிலத்திற்கான சட்டத்தை அவர்களே வடித்துக் கொள்ளவும்
அனுமதிக்கப்பட்டது. அங்கு இருக்கும் முதல்வர் பிரதமர் என்றே
அழைக்கப்படுவார், அத்துடன் கவர்னர் பதவி என்பதும் சரர்-ஈ-செரீப் என்றும், பிரதமர்
பதவி வாசிர்-ஐ-ஹஸாம் என்றும் அழைக்கப்படும். மாநிலத்திற்கான கவர்னரை இந்திய
குடியரசுத் தலைவரால் நியமிக்க முடியாது, அம்மாநில பாராளுமன்றமே தேர்ந்தெடுத்துக்
கொள்ளும் என்றும், தேர்தல் நடத்துவது உட்பட இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தை
கட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணியாளர்களை
ஜம்மு-காஷ்மீருக்கு நியமிக்க முடியாது போன்ற பல்வேறு வகையான விரிந்து பரந்த
அளவிலான அதிகாரங்களை வழங்கியிருந்தது.




சேக் அப்துல்லாவின் நிலச்
சீர்திருத்தம்:




காஷ்மீர் மக்களின் பிரதான செல்வாக்கை பெற்ற தலைவர் சேக்அப்துல்லா விடுதலை
செய்யப்பட்ட பின்னர் இந்திய அரசுக்கும், மன்னர் ஹரிசிங்கிற்கும், சேக்
அப்துல்லாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சேப்
அப்துல்லா மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஹரிசிங்கின் மகன் கரன்சிங்
அம்மாநிலத்தின் முதல் சரர்-ஈ-செரீப் ஆக நியமிக்கப்பட்டார்.




சேக்அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பின் மொத்த உரிமையாளர்களாக மன்னர் ஹரிசிங்கின்
குடும்பத்திற்கும், அவரது ஆட்சியாளர்களுக்குமே சொந்தமாக இருந்தது. இந்நிலையில்
அவற்றை நஷ்ட ஈடு ஏதுமின்றி குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மாநிலத்தில்
இருந்த 396 பெரிய ஜாகிர்தாரர்கள் ஒழிக்கப்பட்டனர். 9000ம் நிலப்பிரபுக்களிடம்
இருந்து 4 இலட்சம் ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. காஷ்மீரத்தை பல
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரை காஷ்மீரிகளே ஆட்சி புரிவது இதுவே முதல்
முறையாக இருந்தது. சேக் அப்துல்லாவின் ஆட்சியில் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டது.




ஆர்.எஸ்.எஸ்.-ன் குரூர
பார்வை:




காஷ்மீரில் சேக்அப்துல்லாவால் நிறைவேற்றப்பட்ட முற்போக்கான நிலச்சீர்திருத்த
நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னரின் வாரிசுகளும், இந்து
நிலப்பிரபுக்களும் ஆவர். டோக்ராக்களின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு நிலத்திற்கான
உரிமைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் நிலத்தை இழந்த பிற்போக்கு சக்திகளும், மன்னர் ஹரிசிங்கும் அவரது
குடும்ப வாரிசுகளும் ஆர்.எஸ்.எஸ்., பிரஜா பரிஷத், ஜனசங்கம் ஆகிய இந்துத்துவ
சக்திகளோடு இணைந்து சேக்அப்துல்லாவின் ஆட்சிக்கு எதிராக தங்களது வகுப்புவாதத்
திட்டத்தை செயலாக்க ஆரம்பித்தன. இதன் ஒரு பகுதியாக...




1. ஜம்மு-காஷ்மீரை இதர மாநிலங்களைப்போல் முழுமையாக இந்தியாவுடன் இணைத்துவிட
வேண்டும்




2. சிறப்பு பிரிவான 370வது பிரிவை வாபஸ்பெற வேண்டும் என்பது உள்ளிட்டு




3. ஏக் விதான்", ஏக் நிஷான், ஏக் பிரதான்" ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொடி




என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜம்முவில் ஜனசங்கம், ஹிந்து மகாசபை, ராம்ராஜ்
பரிசத், பிரஜா பரிஷத் ஆகிய இந்துத்துவா அமைப்புகள் 1951 - 53ல் ஒரு பெரும்
போராட்டத்தை துவக்கியது. இப்போராட்டத்திற்கு சியாம பிரசாத் முகர்ஜி முன்னின்று
நடத்தினார்.




(இதே இந்துத்துவா சக்திகள்தான் ஜம்மு-காஷ்மீரை மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன்
இணைக்க முயற்சித்தபோது எதிர்த்தவர்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.)

இதுமட்டுமல்ல காஷ்மீரின் முதல் கவர்னராக இருந்த மன்னர் ஹரிசிங்கின் வாரிசான
கரன்சிங்கை பயன்படுத்தி இந்திய அரசும் சேக்அப்துல்லாவின் வளர்ந்து வரும்
செல்வாக்கை கட்டுப்படுத்த பல்வேறு சதிச்செயல்களிலும் ஈடுபட்டார்கள்.




சேக்அப்துல்லாவின் முதல் குரல்
:




1951 அக்டோபர் 31ல் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் சேக் அப்துல்லா உரையாற்றும் போது
கீழ்கண்டவற்றை சுட்டிக்காட்டினார்.




"இந்தியாவில் சில போக்குகள் தலை தூக்கத் துவங்கியுள்ளன. இது இந்தியாவை
எதிர்காலத்தில் மத அரசாக மாற்றலாம். அரசாங்கத்தில் வகுப்புவாத அமைப்புகளின் கை
ஓங்குமெனில் அப்போது முஸ்லீம்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும்"




என்று இந்தியா குறித்து தனது அச்சத்தை தெளிவுபட வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன்
சேக்அப்துல்லா இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் குறித்தும் தனது அச்சத்தை
தொடர்ந்து வெளிப்படுத்தினார். இது மட்டுமின்றி காஷ்மீருக்கான வாக்கெடுப்பு
கோரிக்கையையும், சுயாட்சி கோரிக்கையையும் முன்வைக்கத் தொடங்கினார்.




1953 ஆகஸ்ட் 9 அன்று சேக்அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து சேக்அப்துல்லாவுடன் செயல்பட்ட பக்ஷிகுலாம் முகமதுவை சூழ்ச்சி
செய்து பிரித்து காங்கிரஸ் சார்பில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள். இவரது
ஆட்சியைத் தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீரின் சுயாட்சி உரிமைகளை
முழுமையாக செயலிழக்க வைப்பதற்கான திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றத் துவங்கினர்.




இவரது ஆட்சியை பயன்படுத்தி காஷ்மீர் குறித்து இந்திய அரசு பாராளுமன்றத்தில்
சட்டமியற்றும் அதிகாரத்தை பல்வேறு துறைகளில் நீட்டித்துக் கொண்டது. அது மட்டுமல்ல
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சி பணியாளர்களையும் காஷ்மீருக்குள் நியமிப்பதற்கான
உத்தரவை விரிவாக்கிக் கொண்டது. பக்ஷிகுலாம் முகமதுவின் ஆட்சி ஊழல் மிக்க
ஆட்சியாகவும், மக்களது போராட்டத்தை அடக்கியாள்வதற்கான ஆட்சியாகவும் அமைந்தது.
காஷ்மீரை வளமாக்க வென்று இந்திய அரசு ஒதுக்கிய பணத்தை கொண்டு பக்ஷி குலாம்
முகமுதுவின் குடும்ப வாரிசுகள் தங்களை வளமாக்கிக் கொண்டனர். இவரது ஆட்சியை "பக்ஷி
பிரதர்ஸ் கார்ப்பரேஷன்" என்று அழைத்தார்கள் என்றால் இவரது ஆட்சி எவ்வாறு
செயல்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.




1956 நவம்பர் 17ல் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில்
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் 1957ல் தேர்தல் நடைபெற்றது.




காஷ்மீரில் பக்ஷிகுலாம் முகமது முதல் - மீர் காசிம் வரையுள்ள பல்வேறு
ஆட்சியாளர்களை மாற்றி இந்திய அரசு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை
இம்மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான சட்டத்தையும் நீட்டித்துக் கொண்டது. இதே போல்
இன்றைக்கு 370வது பிரிவு என்பது வெறும் சட்ட வடிவத்தில் மட்டுமே எஞ்சியுள்ளது.
அதன் சாரங்கள் அனைத்தையும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி செயலிழக்கச் செய்து
விட்டது.




தேர்தல்களும் - ஜனநாயக சீரழிவும் :




1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லுகள் மூலம்
மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பக்ஷி குலாம் முகமதுவின் கட்சி வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியின்றியே வேட்பாளர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். போட்டியிருந்த அனைத்து இடங்களிலும் போட்டி வேட்பாளர்களது வேட்பு
மனுக்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறே 1962ம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலிலும் பக்ஷியின் கட்சியே 75 இடங்களில் 70 இடங்களில் வெற்றி பெற்றது.
இதேபோல் 1967, 1972 தேர்தல்களிலும் பெரும் முறைகேடுகள், வேட்பு மனுக்கள்
நிராகரித்தல், எதிரணியினரை அச்சுறுத்துதல், வாக்குப் பெட்டிகளையே மாற்றுதல் போன்ற
ஜனநாயக கேலிக்கூத்துக்கள் நடைபெற்றன. 1972ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி
- முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சியான ஜமாய்த்தே இஸ்லாமியை ஊக்கப்படுத்தியது.
தேர்தலில் வெற்றி பெறுவது டெல்லியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களின்
அனுமதியின்றி நடைபெறாது என்ற அளவிற்கு ஜனநாயகம் பெரும் சீரழிவிற்கு
உள்ளாக்கப்பட்டது. 1977ல் நடைபெற்ற தேர்தல் மட்டுமே இதில் விதிவிலக்காக
கூறப்படுகிறது. இதில் சேக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
47 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. நடைபெற்ற தேர்தல்களில் முக்கிய
கோரிக்கைகளாக காஷ்மீரின் சுயாட்சி, வாக்கெடுப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை
பிரதிபலித்து நடைபெற்றது.




பக்ஷிகுலாமின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மக்களிடையே பெரும் கிளர்ச்சியைத்
தூண்டியது. பின்னர் பக்ஷியும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து எஸ்.எம்.
சாதிக், மீர்காசிம் என்று காங்கிரசின் கைபொம்மைகளே காஷ்மீரத்தில் ஆட்சியில்
நீடிக்க முடிந்தது.




இரண்டு போர்கள்:




இதற்கு இடையில் 1965 ஆகஸ்டில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற
ஊடுருவல் காரர்களின் ஊடுருவலைத் தொடர்ந்து இரண்டு மாதக் காலமும், 1971ல் வங்க
தேசப் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தானிற்கு இடையில் இரண்டு போர்கள்
நடைபெற்றன. இவை இரண்டிலும் பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்ததோடு இரண்டு முக்கிய
உடன்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. 1965ல் தாஸ்கண்ட் உடன்பாடும், 1972ல் சிம்லா
உடன்பாடும் ஏற்பட்டது.




சிம்லா உடன்பாடு :




சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் - இந்திராகாந்திக்கும் இடையில் சிம்லாவில் உடன்பாடு
எட்டப்பட்டது. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவில் இவ்வுடன்பாடு
முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வுடன்பாடு எட்டப்பட்டு இரு நாடுகளுக்கு
இடையில் கடந்த 25 ஆண்டுகளில் எந்தவித போரும் (தற்போது கார்கில் தவிர) ஏற்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.




இவ்வுடன்பாட்டின முக்கிய அம்சங்களாக ...




¬ இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளையும், தீர்க்கப்படாமல் உள்ள
பிரச்சனைகளையும் அமைதி வழியில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்வது

¬ இரு நாடுகளின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளையாமல்
காப்பது. இருநாடுகளின் சுயச்சார்பு, அரசியல் சுயச்சார்பு ஆகியவற்றை மதித்து
நடப்பது.




¬ இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொலைத் தொடர்பு, தபால்,
தந்தி, கடல்வழி போக்குவரத்து, வான்வழிபோக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்துவது,




¬ இரு நாடுகளின் எல்லைக்கோட்டை மதித்து நடப்பது, இரு நாடுகளின் சர்வதேச
எல்லையில உள்ள படைகளை வாபஸ் பெறுவது, பொருளாதார, வர்த்தக உறவுகளை வளர்ப்பது,
அறிவியல், தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வது போன்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட
உடன்பாடு கையெழுத்தானது.




இவ்வுடன்பாடு இருநாட்டு மக்களிடையேயும், காஷ்மீர் பகுதி மக்களிடையேயும் பெரும்
வரவேற்பைப் பெற்றது. முற்போக்கு சக்திகள் பலராலும் பாராட்டப்பட்டது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கும் இரு நாடுகளுக்கான பிரச்சனைகள் குறித்து சிம்லா
உடன்பாட்டின் அடிப்படையிலேயே பேச வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.




பரூக் அப்துல்லாவின் ஆட்சி:




1977 தேர்தலுக்கு பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த சேக் அப்துல்லா
தனது அரசியல் வாரிசாக பரூக் அப்துல்லாவை நியமித்தார். 1982 செப்டம்பர் 8ம்
தேதி சேக்அப்துல்லா மறைவைத் தொடர்ந்து பரூக் அப்துல்லா அம்மாநிலத்தின்
முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது சித்து
விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தது. பரூக்கின் தேசிய மாநாட்டுக் கட்சியில் ஒரு
பிளவை உண்டாக்கி எஸ்.எம். ஷாவை முதல்வராக்கியது. பின்னர் 1983ல் நடைபெற்ற
தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பரூக் அப்துல்லா மீண்டும் முதல்வரானார். அதே
சமயத்தில் இந்திராகாந்திக்கு எதிராக இந்திய நாட்டில் ஒரு வலுவான
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உருவானது. பரூக் அப்துல்லா எதிர்க்கட்சிகளோடு ஒரு உறவை
உண்டாக்கிக் கொண்டு செயலாற்றினார். இதை பொறுக்காத காங்கிரஸ் கட்சி, பரூக்கின்
கட்சியில் மீண்டும் ஒரு பிளவை உண்டாக்கியது. பரூக்கை வீழ்த்த காங்கிரஸ்
ஏற்படுத்திய சதித்திட்டத்திற்கு அப்போதைய கவர்னர் பி.கே. நேரு ஒத்துழைக்கவில்லை.




ஜக்மோகனின் ஆட்சி :




காஷ்மீரில் தனது கைப்பாவையாக செயல்பட ஒத்துழைக்காத பரூக்கை எப்படியாவது பதவியில்
இருந்து நீக்க வேண்டும் என்று துடித்த காங்கிரஸ் கட்சி ஜக்மோகனை புதிய கவர்னராக
நியமித்தது. எதிர்பார்த்தது போலவே பரூக்கின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.




ஜக்மோகனின் ஆட்சி இந்து மதவெறியுடன் கூடிய ஜனநாயகத் தன்மையற்றதாக இருந்தது. இவரது
நடவடிக்கைகளே இதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது. ஜக்மோகனின் காலத்தில் அனைத்து
ஜனநாயக போராட்டங்களையும் அடக்கி ஒடுக்குவது என்ற கோட்பாடே மேலோங்கி
செயல்படுத்தப்பட்டு வந்தது. அதுமிட்டுமின்றி ஜக்மோகன் முழுக்க முழுக்க வகுப்புவாத
பார்வையோடு அம்மாநிலத்தில் தனது ஆட்சியை நடத்தினார்.




ஸ்ரீநகரில் கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த முஸ்லீம்களை வெளியேற்றினார்.
ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆடுகள் வெட்டுவதற்கு தடை செய்தார்.




ஏற்கெனவே பக்ஷி குலாம் முகமது ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களுக்கும்,
இந்துக்களுக்கும், சீக்கிய, பௌத்தர்களும் என்று 70 : 30 என்ற விகிதத்தில்
இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. ஆனால் இதில் ஜக்மோகனின் ஆட்சிக்காலத்தில்
முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து
முஸ்லீம்களை பாதிக்கக்கூடிய வேலையையும், ஒடுக்கக்கூடிய வேலையையும் மிகுந்த
கவனத்தோடு செய்தார் ஜக்மோகன், இவரது ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மக்களுக்கு
இந்தியாவின் மீதான அதிருப்தி அதிகரித்தது என்றால் மிகையல்ல.




தீவிரவாதத்திற்கான கரு:




மேற்கண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற இளைஞர்களிடையே இந்தியாவிற்கு
எதிரான உணர்வு எழத் துவங்கியது. இதேபோல் பாகிஸ்தான் வசம் உள்ள பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இதுபோன்ற உணர்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும்
எழுந்தது. காஷ்மீரை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி
"ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி" என்ற அமைப்பு உருவானது. இந்த இயக்கத்துடன்
தொடர்புடைய மக்பூல்பட் என்ற இளைஞன் கொலைக் குற்றச்சாட்டு குறித்து 1976ல் கைது
செய்யப்பட்டான். இவருக்கு தூக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் தண்டனை
நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மக்பூல்பட்
உட்பட ஒரு சிலரை விடுதலை செய்யக்கோரியும், ஒரு மில்லியன் பணம் கோரியும் இந்தியத்
தூதரக அதிகாரி இரவீந்திர மேத்திரி-யை கடத்தினர். பின்னர் மூன்று நாள் கழித்து
அவரை படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இதே ஆண்டு பிப்ரவரி 11ல் சிறையில்
இருந்த மக்பூல்பட்டிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.




தீவிரவாதத்தின் செயல்கள் இவ்வாறு முளைவிடத் துவங்கியது. அடுத்ததாக இவர்களுடைய
இலக்கு, மக்பூல்பட்டிற்கு தூக்குத் தண்டனை அளித்த நீதிபதியை கொலை செய்தனர்.
இவ்வாறு தொடர்ந்து இந்திய அரசிற்கு எதிராக பல்வேறு சதி வேலைகளிலும்,
வன்செயல்களிலும் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஒரு கட்டம் வரை பாகிஸ்தான் ஆதரவு
இருந்தது. பின்னர் இவர்களால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் உட்பட தனிநாடு
வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பினர். இதன் விளைவாக பாகிஸ்தான் அரசு போட்டியாக
"ஹிஸ்புல் முஜாஹிதின்" என்ற அமைப்பினரை பயன்படுத்தி இந்திய அரசிற்கு எதிராகவும்,
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு எதிராகவும் பல்வேறு வன்செயல்களில்
ஈடுபட்டனர்.




சோவியத்தின் வீழ்ச்சியும் - தீவிரவாதத்தின்
வளர்ச்சியும்:




ஏற்கெனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனை சீர்குலைக்க
பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானையும்,
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களையும், பல்வேறு பிற்போக்கு ஆயுதம் தாங்கிய
குழுக்களையும் சோவியத்துக்கு எதிராக ஏவிவிட்டது. பின்னர் சோவியத் அரசு
பின்னடைவுக்குள்ளானதைத் தொடர்ந்து இத்தகைய தீவிரவாதக் குழுக்களையும்
"முஜாஹீதின்கள்" (புனிதப் போர் வீரர்கள்) என்று அழைக்கப்பட்ட இஸ்லாம் மத
அடிப்படைவாதிகளை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தத் துவங்கியது.




1989க்குப் பிறகே ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடவடிக்கைகள் துவங்கியது. இத்தகைய
தீவிரவாதக் குழுக்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முற்போக்கு இயக்கங்களை
சீர்குலைப்பது, அவர்களது தொண்டர்களை படுகொலை செய்வது, பொதுச் சொத்திற்கு சேதம்
விளைவிப்பது, அரசின் செயல்களை முடக்குவது என்று பல்வேறு, அரசியல் கட்சித்
தலைவர்களை கடத்துவது, இதன் ஒரு பகுதியாகத்தான் மத்திய அமைச்சர் முப்தி முகமது
சையத்தின் மகள் ரூபியாவை கடத்திச் சென்றது என நாளுக்கு நாள் இவர்களது வன்செயல்கள்
அதிகரிக்கத் துவங்கியது.




அதன் விளைவாக காஷ்மீர் பள்ளத் தாக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள்
டசன் கணக்கில் முளைக்கத் துவங்கின. ஹிஸ்புல் முஜாஹீதின், லஷ்கர் - இ - தொய்பா,
ஜெய்ஸ்-இ-முகமது, ஹர்ஹத் - வுல் - முஜாஹீதீன்கள், ஹல்உம்மால் முஜாஹீதீன்கள் என
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து இந்தியாவிற்குள்
ஊடுருவலை ஏற்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மதஅடிப்படையில் போதனை அளித்து,
தற்கொலைப் படையாக செயலாற்றி வருகின்றனர். இத்தகைய அமைப்புகள் காஷ்மீர்
பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து தங்களது சதிச்
செயல்களை நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது காஷ்மீர்
சட்டமன்றத்தில் நடைபெற்றத் தாக்குதல்கள், இந்திய பாராளுமன்றத்தின் மீது நடைபெற்ற
தாக்குதல்கள் என தொடர்கிறது.




இதுமட்டுமின்றி காஷ்மீரில் தற்போது ஒரு மறைமுக அரசாங்கத்தையே நடத்தி வருகிறார்கள்
என்றால் மிகையல்ல. காஷ்மீர் மக்கள் மீதும் அவர்களது சுயேச்சையான நடமாட்டத்தையும்
அச்சுறுத்தல் மூலம் தடை செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக காஷ்மீரில்
திரையரங்கங்களை சீர்குலைப்பது, பள்ளிக்கூடங்களை சீர்குலைப்பது போன்ற தாலிபானிய
செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக
Proxy War என்று அழைக்கக்கூடிய ஓர்
மறைமுக யுத்தத்தையே நடத்தி வருகிறது.




அமெரிக்காவின் காஷ்மீர் குறித்த
கொள்கை:




அமெரிக்காவைப் பொருத்த வரை 1947 முதலே காஷ்மீரை "பிரச்சனைக்குரிய பகுதி" என்றே
அழைத்து வருகிறது தற்பொழுது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பெவல் “காஷ்மீர்
சர்வதேச அஜண்டா” என்று முழங்குகிறார். இன்றைய நிலையில் காஷ்மீர் பூகோள
ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
காஷ்மீரை மையமாக வைத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சோவியத், சோசலிச
சீனா ஆகிய 5 நாடுகளின் எல்லைப்புறத்தை மையமாக கொண்டு அமைந்துள்ள, மலைகளும்,
பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதி. எனவே காஷ்மீரை தனி நாடாக மாற்றுவது என்பதே
அமெரிக்காவின் நீண்ட நாளைய கொள்கையாக இருந்து வருகிறது.




சங்பரிவாரின் அபாயகரமான
கோரிக்கை:




சங்பரிவார அமைப்புகள் நீண்ட நாட்களாகவே காஷ்மீர் மக்களை இந்தியாவிலிருந்து
தனிமைப்படுத்தும் வேலைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இதன் ஒரு
பகுதியாக தற்போது காஷ்மீருக்கு என்று அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட சிறப்பு
பிரிவான 370 - யை நீக்க வேண்டும் என்று கோருவதோடு, ஜம்மு-காஷ்மீரை - இந்துக்கள்
வாழக்கூடிய ஜம்மு, முஸ்லீம்கள் வாழக்கூடிய காஷ்மீர், பௌத்தர்கள் வாழக்கூடிய
லதாக் என மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற அபாயகரமான கோரிக்கையும்
முன்வைக்கின்றனர்.




இத்தகைய கோரிக்கை என்பது மதஅடிப்படையில் பாகிஸ்தான் முன்வைக்கும் "மதஅடிப்படையில்
காஷ்மீர்" தன்னுடன் இணைய வேண்டும் என்ற “இரு நாடு கொள்கைக்கு” வலுச்சேர்ப்பதாக
அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபட கூறியுள்ளது. அத்துடன்
மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை சுககுநூறாக உடைத்து நொறுக்கும் செயலாகவே இது
அமையும்.




தற்போது இதற்கும் மேல் ஒரு படி மேலே சென்று "விஸ்வ ஹிந்து பரிஷத்" அமைப்பு
ஜம்மு-காஷ்மீரை நான்கு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளது.
இத்தகைய கோரிக்கைகள் காஷ்மீர் மக்களை மேன் மேலும் இந்தியாவிலிருந்து அன்னியப்பட
வைக்கவே உதவும்.




மாநில சுயாட்சி கோரிக்கையை சங்பரிவார அமைப்புகள் எள்ளவும் ஏற்றுக் கொள்ளவில்லை
என்பதோடு மட்டுமல்ல அதை தொடர்ந்து எதிர்த்தும் வருகிறது. அதே போன்று மாநில
சுயாட்சி குறித்து முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் Sky
is Limit
(வானமே எல்லை) என்று வியாக்கியானம் செய்தார். காங்கிரஸ்
கட்சிக்கும் மாநில சுயாட்சி குறித்து குறுகிய பார்வையே நீடிக்கிறது.




சர்வதேச தலையீடு:




கார்கில் போர் நடைபெற்றதற்கு பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய
எல்லைக்குள் தொடர்ச்சியாக ஆயுதந் தாங்கிய தீவிரவாதிகளையும், தற்கொலை படைகளின்
ஊடுருவலையும் அதிகப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக காஷ்மீரில் துப்பாக்கி
வெடிச்சத்தமும், வெடிகுண்டுத் தாக்குதல்களும், இந்திய இராணுவத்தின் முகாம்களை
தாக்குவது என்று பல்வேறு வடிவங்களில் வன்செயல்கள் புதிய பரிணாமமெடுத்து இரு
நாட்டு உறவுகளை மிகவும் சீரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக இரு நாட்டு
எல்லையில் பெருமளவிலான படைகள் குவிக்கப்பட்டு போர் பதட்டம் தணியாத சூழலே
நிலவுகிறது.




இதன் விளைவாக இப்பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் சமீபகாலத்தில்
அதிகரித்த வண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க, பிரிட்டன் ஆட்சியாளர்கள்
நாளுக்கு ஒருவர் வீதம் ரம்ஸ்பெல்டு, ஜாக்ஷெராக், காலின்பெவல் என காஷ்மீர்
விவகாரத்தின் தங்களது மூக்கை நுழைத்து முயற்சித்து வருகின்றனர்.




மனித உரிமைகள் :




காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரகளின் வன்செயல்களால் ஏதுமறியாத அப்பாவி
மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகின்றனர். அத்துடன் அவர்களது உடமைகள் பொரும்
பாதிப்பிற்கு உள்ளாகின்றது. மதஅடிப்படைவாதிகளின் பல்வேறு கட்டுப்பாடுகளால்
அவர்களது அடிப்படை உரிமைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.




இதே போல் இந்திய இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் விசாரணை என்ற பெயரால்
துன்புறுத்தப்படுவதும், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதும்,
விலைமதிப்பற்ற அப்பாவி மக்களது உயிர்கள் பறிக்கப்படுவதும், அவர்ளது இயல்பு
வாழ்க்கைக்கு பெரும் இடையூறாகவும் இருப்பதை தேசிய, சர்வதேசிய மனித உரிமை
அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.




சமீபத்திய கருத்துக்கணிப்பு:




சமீபத்தில் லண்டனை தலைமையாகமாகக் கொண்ட மோரி என்ற அமைப்பு பல்வேறு கருத்துக்களை
முன்வைத்து நடத்திய கருத்துக் கணிப்பு கூட இன்றைக்கும் காஷ்மீர் மக்கள்
இந்தியாவின் மீது பல்முனைகளில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.




காஷ்மீர் மக்களில் 61 சதவீதம் பேர் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்
பாதுகாப்பானது இந்தியாவுடன் இணைந்து இருப்பதே என்றும், வெறும் 6 சதவீதம் பேர்
மட்டுமே பாகிஸ்தானுடன் என்றும், 33 சதவீதம் பேர் கருத்து ஏதும் கூறவில்லை.




76 சதவீத மக்கள் இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதிக் கொள்வதை விரும்பவில்லை. மாறாக
நிரந்தர தீர்வுக்கு வழியேற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.




காஷ்மீரியம் என்று அழைக்கப்படக்கூடிய பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சார
பகுதிக்குட்பட்டே தீர்வு காணப்பட வேண்டும் என்று 81 சதவீதம் பேர்
வலியுறுத்தியுள்ளனர்.




92 சதவீதம் பேர் காஷ்மீரை மதவழியிலோ, வட்டார வழியிலோ பிரிக்க வேண்டும் என்ற
எண்ணத்தை எதிர்த்துள்ளனர்.




ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய படைகளே பெரும் சீரழிவை
உண்டாக்குகின்றன என்று 65 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர்.




93 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆயுதம் தாங்கிய வன்முறைகளுக்கு முடிவு
கட்டவேண்டும் என்றும் 86 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். எல்லைத் தாண்டிய
ஊடுருவலை நிறுத்த வேண்டும் என்று 88 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர்.




இதேபோன்று பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் மக்களுடனும் தங்களது வர்த்தக - தொழில்,
கலாச்சார உறவுகளை மேம்படுத்த வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இக்கருத்துக்கணிப்பு பல்வேறு அம்சங்களை சிறப்பான முறையில் பிரதிபலிக்கிறது.




பிரச்சனை தீர:




காஷ்மீர் பிரச்சனை தீர அதனை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதன் மூலமே
சாத்தியப்படும். காஷ்மீரியம் என்பது பல்வேறு இன, மொழி, மத அடையாளங்களைக் கொண்ட
பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சார அடிப்படையைக் கொண்டது. இம்மக்களின் மனங்களில்
நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் குறுகிய மனப்பான்மையோடு அணுகாமல், அம்மக்களை
நம்பிக்கையோடும், அரவணைப்போடும் அவர்களது கலாச்சார, பொருளாதார, அரசியல் உரிமைகளை
பாதுகாக்கவும், பாகிஸ்தானின் ஊடுருவலை தடுத்து நிறுத்தவும், உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.




காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்துவது போல்
காஷ்மீர் தனிநாடாக மாறுமானால், ஆப்கானைப் போல் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின்
கைகளுக்கே அது செல்லும். அத்துடன் தாலிபானிய கட்டுப்பாடுகள் அங்கும்
அமல்படுத்தப்படும் அவர்களது உயர்ந்த கலாச்சாரமான காஷ்மீரியம், மதச்சார்பின்மை
நசுக்கப்படுவதோடு, கல்வி உரிமைகள் மறுக்கப்படும், பொருளாதார பிரச்சனைகளும் பெரும்
கேள்விக்குள்ளாகும். அத்துடன் ஏகாதிபத்தியங்கள் தங்களது கைப்பாவையாகவே காஷ்மீரை
மாற்றி தனது பொம்மை ஆட்சியாளர்களை கொண்டு ஆசிய நாடுகளை அச்சுறுத்தவே
பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே காஷ்மீர் தனிநாடு என்பதோ, பாகிஸ்தானுடன் இணைவது
என்பதோ பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. மாறாக பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும்.




தீர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்
ஆலோசனை :




இப்பிரச்சனைகளுக்கான தீர்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு தருணங்களில்
தொடர்ந்து வலியுறுத்தும் முக்கிய அம்சங்கள்




¬ காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.




¬ பாகிஸ்தான் புனித போர், மறைமுகபோர் (Proxy
War", "Holly War")
என்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் ஊடுருவலை உடனடியாக
தடுத்த நிறுத்த வேண்டும்.




¬ இடதுசாரி கட்சிகள் இணைந்து வலியுறுத்தியதுபோல் “பயங்கரவாத நடவடிக்கைகள்
குறித்த, ஐ.நா.வின் 1373வது தீர்மானத்தின் அடிப்படையில்” சமீபத்தில்
நம்முடைய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்த உரிய ஆவணங்களையும்,
பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களையும் ஐ.நா.வின் முன்வைக்க இந்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.




¬ இந்திய அரசு அண்டைநாடுடன் உறவுகளை மேம்படுத்துவது என்ற கொள்கையுடன் அணுக
வேண்டும்.




¬ காஷ்மீர் பிரசச்னை குறித்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு
இடையிலேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நாட்டிற்கு இதில் இடம்
தரக்கூடாது.




¬ 1972ம் ஆண்டு இந்திராகாந்திக்கும் - சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் இடையே
சிம்லாவில் நடைபெற்ற உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.




¬ காஷ்மீருக்கென்று வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பு
பிரிவு 370-ல் வழங்கப்பட்ட உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.




¬ உண்மையான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டும்.




¬ மதச்சார்பின்மையுடன் கூடிய காஷ்மீரியம் என்று அழைக்கப்படக்கூடிய உயர்ந்த
கலாச்சாரம், மொழி, பொருளாதாரம், தனித்தன்மை, வேலைவாய்பு, சுற்றுலா போன்றவற்றை
மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




¬ மாநிலத்திற்கு என்று உயர்ந்தபட்ச சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதோடு, ஜம்மு
பகுதிக்கும், லடாக் பகுதிக்கும் பிரதேச சுயாட்சி அதிகாரத்தை வழங்கிட வேண்டும்.




¬ பாகிஸ்தான் - இந்தியா இருநாடுகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும்.
தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளை இருநாடுகளுக்கிடையிலேயே அமைதி வழியில்,
பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.






பயன்படுத்தப்பட்ட நூல்கள்:






“காஷ்மீரி துயரம்”




“காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம்”




Kashmir; Towards Insurgency,
Puri, Balraj




Save Kashmir, HKS
Surjith




பீப்பிள்ஸ் டெமாக்ரஸ


ி


காஷ்மீர் குறித்த இணையதளங்கள்






ஆகஸ்ட் 2002, மார்க்சிஸ்ட் மாத இதழில் வெளியான
என்னுடைய கட்டுரையே இங்கே வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் குறித்த சரியான நிலைபாட்டை
எடுத்திட இக்கட்டுரை உதவும் என்று கருதுகிறேன்.






- கே. செல்வப்பெருமாள்


14 comments:

வெளிகண்ட நாதர் said...

சந்திப்பு, காஷ்மீர் பற்றிய பிரச்சனைகளை, வரலாற்று சம்பந்தமாய், வழி வழி வந்த பிரச்சனைகளை, அழகாக கட்டுரையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்! நான் வட இந்தியாவில் தங்கி இருந்தபொழுது தெரிந்து கொண்ட இந்த காஷ்மீர பிரச்சனையின் மாறுபட்ட கோணங்களை பதிவா செய்யலாமென்றுருந்தேன். உங்கள் பதிவு நல்ல ஒரு eye opener! நன்றி வணக்கம்!

சந்திப்பு said...

வெளிகண்ட நாதர் உங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் அது ஈடுசெய்வதாகாது. ஏனென்றால் பிளாக்கில் ஒரு மிக நீண்ட பதிவுகளை படிப்பது என்பது அலுப்பூட்டக்கூடியது. இருப்பினும் நானும் சமீபத்தில் முத்துவின் காஷ்மீர் பதிவுக்கு பின், காஷ்மீர் குறித்த விரிவான பார்வையை நம் தமிழ் பதிவுலகிற்கு வழங்க வேண்டும் என்ற கோணத்தில்தான் இதை பதிவு செய்தேன். அதனால்தான் லே-அவுட் பிரச்சினைக்கூட இருக்கிறது. இருப்பினும் தங்களது வாசிப்புக்கு மீண்டும் நன்றி கூறுவதோடு, உங்களது வடஇந்திய அனுபவத்தோடு காஷ்மீர் அனுபவத்தை எழுதினால் அது சுவராசியமாக இருக்கும் எனவே எழுதுங்கள். நன்றி வெளிகண்ட நாதர்.

Muthu said...

சந்திப்பு,

என்னுடைய பதிவில் இந்தியாவில் இஸ்லாமியரின் நிலையைப் பற்றித்தான் முக்கியமாக எழுதி இருந்தேன்.

காஷ்மீர்ப்பற்றி அதில் நிறைய இல்லை.எனக்கு தெரியாது என்பதுதான் உண்மை. சசியின் பதிவில் இருந்து சில தகவல்களும் உங்கள் பதிவில் இருந்து சில தகவல்களும் (சுதந்திரத்திற்கு முன் இருந்த காஷ்மீர் முதலியன) ஆகியவற்றை தெரிந்துகொண்டேன்.இந்த பதிவிற்கு மிகவும் நன்றி.

அந்த பதிவே நான் இஸ்லாமியரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எழுதியதாக சிலர் கூறுவது இன்னும் காமெடி.

சந்திப்பு said...

நன்றி முத்து, இந்தப் பதிவை நீண்ட நாளாக வெளியிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பெரிய பதிவாக இருந்தது ஒரு காரணம். இந்த நேரத்தில் வெளியிடுவதற்கு உங்களது இசுலாமியர்கள் குறித்த பதிவும், சசியின் தொடுப்பும்தான். தமிழ்மணத்தில் காஷ்மீர் குறித்து இப்படி ஒரு பதிவு இருப்பது அவசியம் என்று பட்டது. அதனால்தான் இதை பதிய நேர்ந்தது. தங்களது வாசிப்புக்கு நன்றி!

யார் எதை எழுதினாலும், அவர்களது கருத்துச் சார்ந்த அவர்களை அணுகும் முறைதான் பரவலாக உள்ளது. ஐ.ஐ.டி. குறித்த பதிவின் போது, ஜாதிய பாகுபாடு இல்லாமல், அதே சமயம் எதார்த்ததையும், களையப்பட வேண்டியதையும் உணர்த்தி எழுதினாலும் கூட அதை பார்க்கும் முறை வித்தியாசப்பட்டதை பார்க்க முடிந்தது. எனவே தங்களை இசுலாமியர்களின் ஆதரவாளராக சித்தரித்ததிவில் வியப்பில்லை.

நன்றி முத்து.

Unknown said...

காஷ்மீர் பிரச்சினை குறித்து மார்க்ஸிஸ்ட் கட்சி மிகவும் தெளிவான நேர்மையான அணுகுமுறை கொண்டுள்ளதை மிகவும் பாராட்டுகிறேன்.கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசவிரோதிகள் என நடக்கும் பிரச்சாரத்துக்கு சரியான சம்மட்டி அடியாக இக்கொள்கை உள்ளது.வாழ்த்துக்கள்.

இந்தியாவில் நேர்மையான லஞ்ச ஊழல் இல்லாத கட்சி ஒன்று உண்டென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.கம்யூனிஸ்ட் மீது என்ன புகார் வேண்டுமானாலும் சொல்லுவார்கள்.ஆனால் லஞ்ச புகாரை மட்டும் கம்யூனிஸ்டுகளின் பரம எதிரிகளான பாஜகவும், திரிணமுல் காங்கிரசும் கூட சொல்ல மாட்டார்கள்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.சிதம்பரம் பத்மினி,வாச்சாத்தி போன்ற விவாகாரங்களில் துணிந்து குரல் கொடுத்த ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.

இப்பதிவு ஏன் அதிக பின்னூடம் பெறவில்லை என தெரியவில்லை.இருந்தாலும் பரவாயில்லை.என் மனமார்ந்த பார்ராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உங்களுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Hats off to you santhippu

சந்திப்பு said...

செல்வன் மிகுந்த நன்றி!
பொதுவுடைமை கட்சி குறித்த தங்களது கண்ணோட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது புரிந்துணர்வு மிக நல்லமுறையில் அற்புதமாக அமைந்துள்ளது. வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி வரை போராடியதை சுட்டிக் காட்டியதற்கு சிறப்பான அம்சம். தற்போது பத்மினி விவகாரத்தில் போராடிய தோழர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
மேலும் இங்கு சொல்லப்பட வேண்டிய, விரிவாக எழுதப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மேற்குவங்கத்தில் 7 வது முறையாக இடதுசாரி ஆட்சி மலரவுள்ளது. உலகிலேயே தேர்தல் ஜனநாயகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் கம்யூனி°ட்கள் ஆட்சி நடந்ததில்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது? அதுவும் தேர்தல் களத்தில் தேர்தல் கமிஷன் பல கடுமையான நிபந்தனைகளுடன் தேர்தலை 5 பிரிவுகளா பிரித்து நடத்துகிறது. இருப்பினும் அங்கு 70 - 76 சதவீதம் வரை மக்கள் ஜனநாயகத்தில் பங்கேற்கிறார்கள். இது பற்றி விரிவாக எழுதிட வேண்டும். அதாவது அடித்தள மக்களுடன் உள்ள பலமான பிடிப்புத்தான் இடதுசாரிகளின் வெற்றிக்கு ஆதாரமாக நிற்கிறது. எனவே உலகம் இந்த நோக்கில் பயணிக்க வேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் விருப்பமாக இருக்கும். தற்போது நேபாள் அந்த திசை வழியில் உள்ளது. நன்றி செல்வன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

விரிவான உங்களின் கட்டுரை காஷ்மீர் பிரச்சினை பற்றிப் பலவற்றைத் தெரிந்து கொள்ள உதவியது. நன்றி.

சந்திப்பு said...

நன்றி செல்வராஜ்.

Radha N said...

மிகவும் பயனுள்ள கட்டுரை. வெகு நீளமாக இருப்பதால் படிப்பவர்கள் சலிப்படைய வாய்ப்பிருக்கிறது. தனித்தனிப் பகுதிகளை தனி த்தனி பதிவுகளாக இட்டால் அதிக வாசகர்களை சென்றடையும்.

நன்றி

சந்திப்பு said...

அன்பு நாகு. மிகவும் நன்றி. தங்களது ஆலோசனைக்கேற்ப இதனை விரைவில் மாற்றியமைத்து வெளியிடுகிறேன்.

Sivabalan said...

நல்ல பதிவு!!

அசுரன் said...

வாழ்த்துக்கள்,
சிறப்பான கட்டுரை. திண்ணையில் வெளியிட முயற்சி செய்யலாமே? அங்கு
விசம் கக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு மாற்று மருந்தாக இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆனாஊனா என்றால பண்டிட்கள் படுகொலை
என்று எடுத்துவிடும் இந்துத்துவ வெறியர்களை விரட்டியடிக்க காஸ்மீர்
பிரச்சனையை பற்றிய வரலாற்று பகுப்பாய்வோடு ஒரு கட்டுரை எழுத வேண்டும்
என்று முடிவு செய்தேன்.

எனது வேலையை மிச்சப் படுத்தி, பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக தங்களது
சிறப்பான பங்களிப்பை செய்திருப்பதற்க்கு எனது மனம்திறந்த வாழ்த்துக்கள்.


//காஷ்மீர் பிரச்சனை தீர அதனை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு
அணுகுவதன் மூலமே
சாத்தியப்படும். காஷ்மீரியம் என்பது பல்வேறு இன, மொழி, மத
அடையாளங்களைக் கொண்ட
பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சார அடிப்படையைக் கொண்டது.
இம்மக்களின் மனங்களில்//

உண்மை. இப்படி விசயங்களை வரலாற்று கண்ணோட்டத்தோடு அணுகுவது
இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு தற்கொலை செய்து கொள்வது போல்.

மாப்ளா கலகம் பற்றிய எனது கட்டுரையிலும் இதைத்தான் சொல்லியிருப்பேன்.
**************

//காஷ்மீர் மக்களில் 61 சதவீதம் பேர் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்
பாதுகாப்பானது இந்தியாவுடன் இணைந்து இருப்பதே //

கருத்துக் கணிப்புகள் பல்வேறு முரண்பட்ட முடிவுகளுக்கு இட்டு செல்கின்றது.
அவை நம்பத்தகுந்தாக இல்லை. ஏனெனில் கருத்துக்கணிப்பு அங்குள்ள
உண்மையான நிலைமைகளை கணக்கில் எடுத்து செய்யும் அளவில் அங்கே
நிலைமைகள் சாதகமாக இல்லை.

'Times Of India' ஒரு 2 வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்துக் கணிப்பை
வெளியிட்டிருந்தது. அதில் 56% மேற்ப்பட்ட மக்கள் இந்தியாவுடனும் இருக்க
விரும்பவில்லை, பாகிஸ்தானுடனும் இருக்க விரும்பவில்லை என்பதாக கூறியது.

எது உண்மை??!!


//காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.//

கட்டுரையில் எல்லாம் சரிதான், ஆனால் அதன் முடிவாக தாங்கள் கட்சி தெரிவித்துள்ள முக்கிய அம்சங்களில் முதல் அம்சமான மேற்குறிப்பிட்ட பகுதி சரியா? அவர்கள் எந்த நாட்டோ டு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அங்குள்ள மக்களுக்கே உள்ளது. நியயாமாக அரசு அங்கு மக்களிடம் ஐ.நா. சபையில் ஒத்துக்கொண்டது போல் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆய்வு செய்ய மட்டுதான் வரலாற்று பகுப்பாய்வு செய்வீர்களா என்று சந்தேகம் வருகிறது. மக்களுக்கு எதிராக செல்வது என்று முடிவெடுத்துவிட்டால் அப்புறம் கம்யுனிஸ்டு என்ன கம்முனாட்டி என்ன எல்லோருக்கும் ஒரே கதிதான்.



//காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்துவது போல்
காஷ்மீர் தனிநாடாக மாறுமானால், ஆப்கானைப் போல் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின்
கைகளுக்கே அது செல்லும். அத்துடன் தாலிபானிய கட்டுப்பாடுகள் அங்கும்
அமல்படுத்தப்படும் அவர்களது உயர்ந்த கலாச்சாரமான காஷ்மீரியம், மதச்சார்பின்மை//

தனிநாடு தீர்வு கிடையாது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அதை நாம் விரும்பவுமில்லை. ஆனால் இந்தியாவுடன் இணைவை திணிப்பதற்க்கும் யாருக்கும் உரிமையில்லை. அப்படி அங்கு இந்தியாவுக்கு சாதகமான ஒரு சூழல் இல்லை என்றால், தவறு இந்தியாவின் மேலும் அங்குள்ள முற்போக்கு அமைப்புகள் மேலும் தான் உள்ளது. மக்களின் விருப்பத்தை மீறி நாம் செய்யும் விசயம் அங்குள்ள மதவெறி பிற்போக்கு சக்திகளுக்கு சாதகமான நிலையையே உருவாக்கும் அது அந்த பிரச்சனையை இன்னொரு நூறாண்டு பிரச்சனையாக மாற்றும். ஏதோ சில புள்ளிவிவரங்களின் பேரில் இந்த தவறை வலியுறுத்தும் தாங்கள் ஜனநாயக விரோத நிலையை எடுக்கிறேர்கள். என்ன செய்ய நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற சாக்கடை அடைப்பை உடைப்பதை விடுத்துவிட்டு, அதில் நாமும் ஐய்க்கியமானால் கிடந்து நாற வேண்டும், அரசின் குரலை எதிரொலிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறதல்லவா?

நன்றி,
அசுரன்.

சந்திப்பு said...

அசுரன் தங்களது வாசிப்புக்கும், ஆலோசனைக்கும் நன்றி. காஷ்மீர் பிரச்சினை ரன வேதனைப் படுவதற்கு இந்துத்துவவாதிகள்தான் முதல் முழு காரணமாக திகழ்கின்றனர். பின்னர் அந்த ரணத்தை கீறும் வேலைளை காங்கிசு ஏற்றுக் கொண்டது. தற்போது அதனை மேலும் சின்னாபின்னப்படுத்தி வருகிறது இந்துத்துவா பாசிசுட்டுகள்.

ஆம்! கருத்து கணிப்பு விஷயத்தை பொறுத்தவரை சூழலுக்கு ஏற்ப, கேட்கப்படும் கருத்துக்களுக்கு ஏற்ப மாறும் தன்மையுடையதே! இந்த கணிப்பு, கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில் வெளியானது. ஒரு பாசிட்டிவ் தன்மையை ஏற்படுத்திட இது அந்த நேரத்தில் உதவியது. தற்போதும் உதவுகிறது. எனவேதான் இதை கையாள நேரிட்டது.

சட்டமன்றமும், பாராளுமன்றமும் சாக்கடை, பன்றித்தொழுவம் என்பதெல்லாம் புளித்துப்போன விஷயம். இன்றைய தேவை இதை உடைப்பது அல்ல. இதை பலப்படுத்துவதுதான். இதனை மக்கள் மன்றமாக - ஆரோக்கியமான அரசியல் களமாக மாற்றிட முடியும். நீங்கள் ரஷ்யாவில் லெனின் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்னதை பல அதிதீவிர நக்சல் அமைப்புகள் புத்திசாலித்தனமாக இதனை கையாண்டு வருகிறார்கள். ரஷ்ய பாராளுமன்றத்திற்கும், இந்திய பாராளுமன்றத்திற்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. மேலும் மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகாலமாக சட்டமன்ற ஜனநாயகம் உயர்ந்துள்ளதோடு, ஒரு நிலையான கூட்டணி ஆட்சியையும் சிறப்பாக அமைக்க முடிந்துள்ளது இந்திய வரலாற்றின் மறுபக்கம். உடனே அதை சோசலிச நாட்டின் அளவிற்கு கருதிக் கொண்டு அங்கே இது இருக்கிறது, அது இருக்கிறது என்று கேட்டு விடாதீர்கள். இது முதலாளித்துத்தின் கீழ் செயல்படும் சட்டமன்றம் என்பதை உணர்ந்துதான் இதனை செயல்படுத்தி வருகிறோம். இடது அதிதீவிரம் என்பது மனதில் இருப்பதல்ல: அதனை மக்கள் மனதில் விதைப்பது. இன்றைக்கு ஜனநாயக தத்துவமே மக்களிடம் சென்டையாத சூழலில், இடது அதிதீவிரவாதத்தை பேசுவது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.

ஐ.நா. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இப்போது கூறுவது எடுபடாது. என்பதோட ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. இன்றைய சூழல் காஷ்மீரில் வெகுவாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட வாக்கெடுப்பைதான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் வலியுறுத்துகிறது. இன்றைக்கு காஷ்மீர் மக்களது சுயசிந்தனையே - ஜனநாயக உரிமைகளே பறிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த கருத்துக் கணிப்பு உதவாது. இந்த விஷயத்தை இடது அதிதீவிரவாத கம்முனாட்டிகள்தான் - சோசலிசம் பேசுவதாக நினைத்துக் கொண்டு, அதனை வெகுவாக இடித்துக் கொண்டு வருகிறார்கள்.

நன்றி அசுரன்.

அசுரன் said...

எனக்கு பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது. இடது தீவிர சாகசவாதத்திலும் நம்பிக்கை கிடையாது. மக்கள் திரள் வழியில்,
மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுக்கு கற்றுக் கொடு என்கிற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன்.

சமீபத்தில் ஒரு கட்டுரை பதிவு செய்தேன். நல்ல வரவேற்பு(5 அல்லது 6 மணி நேரத்தில் 200 பேர் வந்து சென்றிருந்தார்கள்). நீங்களும் படித்து கருத்து சொல்லலாமே. நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?

அப்புறம், இந்தியாவில் ஜனநாயகம் இருக்குன்னு சொல்றேங்களா அல்லது
இல்லையின்னு சொல்றேங்களா?(ரஸ்யாவில் புரட்சி நடந்த நேரத்தில் இருந்த அளவுடன் ஒப்பிட்டு நீங்கள் காட்டிய இரு முரன்பட்ட கருத்துக்கள்).

//ரஷ்ய பாராளுமன்றத்திற்கும், இந்திய பாராளுமன்றத்திற்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது.//
//இன்றைக்கு ஜனநாயக தத்துவமே மக்களிடம் சென்டையாத சூழலில், இடது அதிதீவிரவாதத்தை பேசுவது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.//


++++++++++++
நிற்க்க.....

நம்மிடையே உள்ள இந்த தத்துவ முரன்பாடு பற்றிய விவதாங்கள் நமது
எதிரிகளுக்கு சதகமாக போகதா அளவில் வேறு யாரையும் இதில்
நுழைக்காமல் நடத்த விரும்புகிறேன்.

மேலும் இந்த வாதங்களை நமது இருவரையும் பலவீனப்படுத்துவதற்க்கு
எதிரிகள் பயன்படுத்துவதாக தெரிந்தால் இருவரும் கலந்து பேசி ஒரு நிலைப்பாடு எடுத்து அப்படிப்பட்ட தந்திரங்களை அணுகவேண்டும் என்று
விரும்புகிறேன்.

அதாவது நமது உள்முரன்பாடுகளை எதிரி பயன்படுத்திவிடக் கூடாது.

என்ன சொல்லுகிறேர்கள்?

நன்றி,
அசுரன்.