April 07, 2006

பெரியாரும் தலித்துக்களும்

------------------------------------------------------------------------------------------------------

நக்கீரன் வெளியீடான, இனிய உதயம் நாவலில் வெளியான மதிப்புமிகு சிவகாமி ஐ.ஏ.எ°. அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில் இரண்டு கேள்விக்கு அவர் அளித்த பதிலை இங்கே பதிகிறேன். விவாதத்திற் காகத்தான்:

------------------------------------------------------------------------------------------------------

கேள்வி : தந்தை பெரியார் பார்ப்பனியத்துக்கு எதிராக உயர் ஜாதி இந்துக்களைத்தான் முன்னிறுத்தினார். தலித்துகளை இல்லை என்ற ஒரு கருத்து தற்போது பேசப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில் : திராவிட பேரரசியலில் தலித் என்ற நுண் அரசியல் கரைந்து விட்டது. பெரியார் இதற்கு ஒரு வகையில் காரணமானவர். தலித்துகளுக்கான எந்த வேலைத் திட்டங்களையுமே முன்னெடுக்காத அவர் தலித்துக்களுக்காகப் பாடுபட்டார் என்ற பெயர் பெற்றுள்ளார். இது விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விஷயமே.


கேள்வி : பெரியாருடைய சிந்தனைகள் மக்களிடம் பரவலாகச் சென்றடைந்தது போல, அயோத்தியதாசரின் சிந்தனைகள் மக்களிடம் சென்றடையாததற்கு என்ன காரணம்?

பதில் : அயோத்தியதாசர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தது தான் அவரது படைப்புகள் மூழ்கடிக்கப்பட்டதற்கான காரணம்.


------------------------------------------------------------------------------------------------------

விவாதத்திற்காக என்று கூறிவிட்டு நான் ஒதுங்கிக் கொள்ள முடியாது. எனவே எனது கருத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன். சிவகாமி அவர்களின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

------------------------------------------------------------------------------------------------------

13 comments:

Muthu said...

தலித் எதிரிகளுக்கு உறைக்கும் வகையில் கம்யூனிஸ்டு தோழர்கள் தலித் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் போடுங்கள் சந்திப்பு அவர்களே.

பாப்பாபட்டி கீரிப்பட்டியில் மற்றும் பல கிராமங்களில் கம்யூனிஸ்டு நண்பர்கள் தலித் விஷயத்தில் செய்யும் சேவைகளையும் நிறைய எழுதுங்கள்...

தேவையற்ற புகழ் யாருக்கும் , அது பெரியாராக இருந்தாலும் போகவேண்டாம். ஒன்றுபடுவோம்.போராடுவோம்.

Anonymous said...

சரியான சமயத்தில் நிறைவான பதிவு நண்பரே.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி ப்ரச்னைகளையும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்.

சந்திப்பு said...

முத்து, திராவிட இயக்கம் குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்தே - தலித் அரசியலும் அதில் திராவிட இயக்கத்தின் பங்கும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
முதலில் திராவிட அரசியலின் துவக்கம் எது என்று பார்த்தோம் என்று சொன்னால் பிராமணர், பிராமணரல்லாதோர் என்ற பிரச்சினையே முதன்மையானது. 1910 - 20 களில் பிராணமர்களின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் வியாபித்து இருந்தது. அரசியல், கல்வி, அதிகாரம் என அனைத்தும் அவர்களிடம் குவிந்திருந்தன. இந்தச் சூழலில்தான் தலித் - பிற்படுத்தப்பட்டோர் அல்லாத மேல் ஜாதியினர் குறிப்பாக முதலியார், செட்டியார் போன்றோர் பெரும் சொத்துடைமை வர்க்கமாக இருந்தனர். பிராமணர்களின் இடத்தில் தங்களை உயர்த்திக் கொள்ளவே பிராமணரல்லாதார் இயக்கம் துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியே நீதிக்கட்சி இந்தக் கட்சியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெயரளவுக்கு கூட இடமில்லை. இந்தப் பின்னணியில் தான் திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த இயக்க வளர்ச்சியும், கொள்கைகளும் வெறும் பிராமணர், பிராமணரல்லாதோர் என்று முன்னிலைப்படுத்தப்பட்டு - அதில் தலித்துக்களின் நிலை பலியிடப்பட்டது.
இந்திய சுதந்திரப்போராட்டம் மிக உச்ச கட்டத்தில் இருந்தபோது கூட இதே வாதத்தை முன்னுக்கு வைத்து தமிழக மக்களை சுதந்திரப்போராட்டத்தில் இருந்து திசை திருப்பியது திராவிட இயக்கம்.
1930களில் தமிழகத்தில் காலுன்றிய பொதுவுடைமை இயக்கம்தான் தமிழகத்தில் முதன் முதலில் தலித் உரிமைகளுக்காக பெரும் குரலை எழுப்பியது. தலித் மக்களை விலங்குகளை விட கேவலமாக நிலவுடைமையாளர்கள் நடத்தியபோது, -அடித்தால் திருப்பி அடி- என்று அவர்களை வீறு கொள்ளச் செய்தது பொதுவுடைமை இயக்கம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்களின் எழுச்சிகரமான போராட்டம் - நிலவுடைமையாளர்களைப் பார்த்து கூனிக் குறுகி இருந்தவர்கள் தோளில் துண்டு போட்டு நடக்க ஆரம்பித்தார்கள். காலில் செருப்பு அணிந்து - மேல் ஜாதிக்காரர்களின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் வெண்மணி....
எனவே பொதுவுடைமை வாதிகள்தான் உண்மையிலேயே தீண்டாமைக்கு எதிராகவும், அந்த மக்களை தலைநிமிர வைப்பதற்காகவும் குரல் கொடுத்தார்கள். இதில் திராவிட இயக்கத்திற்கு எந்த பங்கும் இல்லை. பெயருக்கு தீண்டாமைக்கு எதிரான வசனங்கள் பேசப்பட்டன.
இந்த நேரத்தில் வாய்வீச்சில் வல்லவரான அண்ணாவின் பேச்சை நினைவுப்படுத்துகிறேன்.
பொதுவுடைமை வாதிகள் நாளைக்கே சுதந்திரம் கேட்டால், நாங்கள் இப்போதே கேட்கிறோம் என்று ஒரு மேடையில் முழங்கினார். எனவே திராவிட இயக்கம் வார்த்தை ஜாலத்தில் மக்களை மயக்கும் மகுடிதானே தவிர மக்கள் காவலர்கள் அல்ல.

சந்திப்பு said...

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் இன்னும் தமிழகத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக பொதுவுடைமை இயக்கம் எவ்வாறு கிளர்ந்தெழுந்தது என்பதையும் எழுதுகிறேன்.

Muthu said...

இது சம்பந்தமாக உங்கள் மனதில் உள்ள அனைத்தும் எழுதுங்கள். எனக்கு பதில் கொடுப்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்.படிப்பவர்கள் அனைவருக்குமாக எழுதுங்கள்.

உண்மைகள் வெளியே வரவேண்டும்.நன்றி.

Anonymous said...

//அதன் தொடர்ச்சியே நீதிக்கட்சி இந்தக் கட்சியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெயரளவுக்கு கூட இடமில்லை//

niithikatchin aatsiyil thaan thiru.raja enkira dalit aranilayaththurai amaissaraanaar.ungal karuththukku aatharaavai thavaraana varalaralai ezhuththiirkal

சந்திப்பு said...

அனானி வரலாற்றை திரிப்பது என்னுடைய நோக்கம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று விஷயத்தில் தவறு இருந்தால் நான் பொறுப்பேற்கிறேன். அதே சமயம் இங்கே நடக்கும் விவாதத்திற்குதான் நான் முதலிடம் தருகிறேன் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். அதாவது திராவிட இயக்கம் - தலித்துகளுக்காக குரல் கொடுத்ததா? என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை பதிகிறேன். தயவு செய்து அனானியாக வருவதை தவிர்க்கவும்.

வரவனையான் said...

என் தமிழெழுத்துரு அச்சமயத்தில் இயங்கவில்லை.அதனால் தான் அனானியாக எழுத வேண்டியதாகிவிட்டது.மன்னிக்கவும்

வரவனையான் said...

சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?



நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே ""பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து ""ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.




13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955



தோழர் மேற்படி இணைப்பை படிக்கவும்.

வரவனையான் said...

உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்: ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.

பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம். அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.



(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

Anonymous said...

It is meaningless to blame brahmins for all evils and wrong things done in the country. The reality is when some OBCs want to
supress dalits and deny their rights it is easy to blame the brahmins than to challenge the power of OBCs.This is the tatics of all dravidian parties including DK.Why is that DK never dared to launch any direct action program
in villages like Keeripatti. Instead they talk big, quoting endlessly what Periyar said.
Dalits have seen through this
game.You cant fool all people
all time.

Anonymous said...

You cant fool all people
all time.//

thats what we are saying for last 75 years - you cant fool all people all time.

சந்திப்பு said...

செந்தில் இந்த உரைகள் யாருடையது என்று குறிப்பிடவும்.

என்னைப் பொறுத்தவரை தலித் ஒருவர் மந்திரியாக வருவதாலோ, பிரதமராக வருவதாலோ தலித்துக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை கொண்டவனல்ல.

இங்கே அடிப்படையான பிரச்சினையென்னவென்றால், சமூகத்தில் அடக்கப்பட்ட ஜாதியாக இருக்கக்கூடிய தலித்துக்களும் - பிற்படுத்தப்பட்ட மக்களும் ஓட்டாண்டிகளாக இருப்பதுதான். இதற்கான மாற்றத்தை கிராமங்களில் இருந்துதான் துவங்க வேண்டும். அதாவது நகர்ப்புறத்திலோ, கிராமப்புறத்திலோ இருக்கும் தலித் ஒருவரோ, சிலரோ வேண்டுமானால் இந்த சமூகத்தில் மேல்நிலைக்கு வந்து விடலாம். ஆனால் கீழ்நிலையில் இருக்கும் தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் - செல்வாக்கு உயராமல் தீண்டாமையும், இழிநிலையும் உயராது.

தமிழகத்தில் பெரியாரின் வாரிசுகள்தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மேற்குவங்கத்திலும், கேராளாவிலும், திரிபுராவிலும் நிலச்சீர்திருத்தம் செய்திருப்பதுபோல் தமிழகத்தில் இவர்கள் மேற்கொண்டிருந்தால் நிச்சயம் தலித் மக்களின் வாழ்க்கையில் பெரும் விடுதலை கிடைத்திருக்கும். அதை ஏன் இவர்கள் செய்யவில்லை. இதுதான் என்னுடைய அடிப்படையான கேள்வி. இங்கே தான் திராவிட இயக்கமே தோல்வியடைந்துள்ளது.

அடுத்து, மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் பல இடங்களில் தலித் விகிதத்தை விட - தலித் தலைவர்களின் விகிதம் உயர்ந்துள்ளது. அதே போல் பெண்களின் விகிதமும் உயர்ந்துள்ளது. அதாவது, சமூகத்தில் தலித் மக்கள் மதிக்கக்கூடிய தலைவர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். அங்கே ஜாதிய ஏற்றத்தாழ்வுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்றும் கூட கிராமப்புறத்தில் நிலவுடைமையாளர்களும், மேல் ஜாதிக்காரர்களும்தான் உள்ளாட்சி தலைவர்களாக உயர முடியும். இந்த இடத்திலும் திராவிட இயக்கம் தோல்வி கண்டுள்ளது.

மொத்தத்தில் ஜாதிய ஏற்றத் தாழ்வினை ஆழப்படுத்தும் வேலையைத்தான் திராவிட இயக்கம் செய்கிறதே தவிர (பிராமணர் - பிரமணரல்லாதார் - மேல் ஜாதியினர் - கீழ் ஜாதியினர் என்று) இந்த பாகுபாடுகள் ஒழிய வேண்டுமானால் அனைவருக்கும் அடிப்படையில் நிலமும், கல்வியும் கிடைக்க வேண்டும். தஞ்சையில் இன்றைக்கு தலித் மக்களின் வாழ்வு மற்ற பகுதிகளை விட சற்று உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதற்கு பொதுவுடைமை இயக்கங்கள்தான் காரணம். திரு. பி. சீனிவாசராவ் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தஞ்சை மாவட்ட தலித் மக்களின் தத்துப்பிள்ளையாகவே மாறி, அந்த மக்களை நிலப்பிரபுக்களுக்கு எதிராக தலைநிமிரச் செய்வதவர்.

ஆனால், இதற்கு மாறாக திராவிட இயக்கங்களின் ஆட்சி 50 ஆண்டுகள் கழித்தப் பின்னும் மலத்தை திணிப்பது, கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது .... இப்படி பல தீண்டாமை கொடுமைகள் தமிழகத்தில்தான் நிலவுகிறது. இந்த நிலையில் பெரியாரின் கொள்கை எப்படி வெற்றிபெற்றுள்ளது என்பதை விளக்கிட வேண்டுகிறேன்.