March 28, 2006

துப்பாக்கி குண்டுகளே நிரந்தர நிவாரணம்!

பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).

நேற்று தெலுங்கு மொழி தொலைக்காட்சியான தேஜா டி.வி. இந்த கங்காவரம் மீனவ மக்களின் போராட்டம் - போலீசின் துப்பாக்கி சூடு காட்சியை ஒளிபரப்பியது. இந்த காட்சியைப் பார்த்த எவருக்கும் இதயம் ஒரு நிமிடம் அதிராமல் இருக்காது. ஆந்திர போலீசின் அதிரடி தாக்குதல் எதிரிநாட்டு வீரர்களை துவம்சம் செய்வது போல், தன் சொந்த நாட்டு மக்களை - ஏதுமறியா அப்பாவி மக்களை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுத் தள்ளியதும், பெரும் தடிகளைக் கொண்டு - அதுவும் குறிப்பாக மண்டையைப் பார்த்து தாக்கியதும் கல்மனதையும் கலங்க வைத்திருக்கும். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், அதுவும் கைக் குழந்தைகளுடன், தங்களுடைய கைக் குழந்தைகளைக் கூட கீழே விடாமல், தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்று அறிந்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதுபோன்ற சூழலை போலீசின் துப்பாக்கித் தோட்டக்கள் சீறி வந்து - இரண்டு உயிர்களைப் பறித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் - குறிப்பாக பெண்கள் - பித்துப் பிடித்தார்போல், கையில் அந்த நேரத்தில் கூட வேப்பிலையை வைத்துக் கொண்டு சாமியாடுவதுபோல் - அந்த நேரத்திலும் தங்களது கொதித்தெழுந்த ஆவேசத்தோடு போராடிய காட்சி நெஞ்சை உலுக்கியது. இந்த சூழலிலும் போலீசின் மிருக வெறித்தனம் - கோர நர்த்தணம் ஆடியது.

எதற்காக இந்த துப்பாக்கி சூடு? யாரை காப்பதற்காக இந்த துப்பாக்கி சூடு? அப்படியென்ன தேச துரோகம் செய்து விட்டார்கள் இந்த அப்பாவி மக்கள்?

ஆந்திர மாநில அரசு (முன்னாள் - இன்னாள்) விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காரவத்தில் ---தனியார் துறைமுகம்--- ஒன்றை கட்டிக் கொள்ள துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும், டி.வி.எ°. ராஜூ என்ற நிறுவனத்திற்கும் அனுமதியளித்தது. ரூ. 2000 கோடி அளவிலான இந்த திட்டம் 2007ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் துவங்கவுள்ளது.

இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் போதே, கங்காவரம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களின் வாழ்க்கை குறித்த விவாதமும் முன்னுக்கு வந்தது. ஆளும் மாநில அரசு அந்த மக்களுக்கு மாற்று இடம், நிவாரணம் தருவதாக கூறியது. 3600 குடும்பங்கள் இந்தி கிராமங்களில் இருப்பதாக கூறப்படுகிறது, 18000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வாழ்க்கையை கடலோடும், கட்டுமரத்தோடும், மீன்பிடித் தொழிலோடும் பிணைத்துக் கொண்டவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத இந்த மக்களை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றால் என்ன செய்வார்கள்? எந்த தொழிலைச் செய்வார்கள்? அதனால்தான் இந்த மக்கள் தங்களது வாழ்க்கைக்கு நிரந்தரமாக ஒரு தொழிலுக்கான ஏற்பாடும், வாழ்விடமும் தேவை என்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.பெரும் முதலாளிகளும் - ஆளும் மாநில அரசுக்கும் இந்த மக்களின் குரல் எட்டாத தொலைவில் இருந்தன. இந்த சூழ்நிலையில் கட்டாயமாக இந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத் திட்டத்தை அந்த பகுதியில் துவக்கியது, அதையொட்டி மீனவ மக்களின் படகுகள் உட்பட அனைத்தையும் நிர்ப்பந்தமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. அதை எதிர்த்துதான் இந்த மக்கள் ஒன்றுபட்டு போராடினர்.

இந்த மக்களின் நியாயத்தை உணராத காவல்துறையும், மாநில அரசும், முதலாளிகளும் எப்படியும் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிட துப்பாக்கி குண்டுகளை பரிசாக அளித்து விட்டு, அதையே நிரந்தரமான நிவாரணமாக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

தனியார்மயம், உலகமயம், தாராமயம் இவையெல்லாம் யாருக்காக? உள்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவா? அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணமூட்டையை வீங்க வைக்கவா? பிரான்சில் கூட 15 லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அங்கெல்லாம் கூட இத்தகைய போலீசின் அடக்குமுறைiயும், மிருகத்தனத்தையும் பார்க்க முடியவில்லை. ஏன் இந்த நிலைமை இந்திய மக்கள் ஏதுமறியாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சுதந்திரத்தின் சுவாசக் காற்று அவர்களுக்கு தெரியாது? ஜனநாயகம், போராட்டம் இதெல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது - அகிம்சை வழியில் கோரிக்கை வைப்பவர்கள் - இதுதான் இந்திய பாரம்பரியம் என்று முடிவு கட்டி விட்டீர்களா? இல்லை! இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், இந்திய மக்கள் குமுறி எழுவார்கள் - உங்களது உலகமயக் கொள்கை ஊரை விட்டே ஓட்டப்படும். துப்பாக்கிகள் உங்களுக்கு காவலாகலாம் - எங்களிடம் உழைத்து உருக்கேறிய - வலுவான கோடிக்கணக்கான கைகள் உள்ளன!

எங்கள் மீது சமாதி எழுப்பலாம் என்று கணா கண்டால், உங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது நிரந்தர சமாமி எழுப்பிட உழைக்கும் மக்கள் தயாராவார்கள்!

7 comments:

ROSAVASANTH said...

இந்த செய்தியை நான் இன்னமும் படிக்கவில்லை, பார்க்கவில்லை. இந்தியாவில் அரசு தொடர்ந்து நடத்தி வரும், வெறி பிடித்த தாக்குதல்களின் இன்னொரு நிகழ்ச்சியாகவே தெரிகிறது. ஏதேனும் சுட்டிகள் தரமுடியுமா?

சந்திப்பு said...

ரோசா வசந்த், ஆம் நேற்று மாலையில் இந்த செய்தியை நான் முதன் முதலில் என்.டி. டி.வியில் பார்த்ததுமே என்னுடைய முதல் பதிவை எழுதினேன். அதைத் தொடர்ந்து இரவி தேஜா டி.வி. காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. இந்திய பத்திரிகை உலகம் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அவர்களுக்கு ஐசுவர்யா ராயின் நடனம் வித, விதமான கோலத்தில் வெளியிடுவதே பத்திரிகை தர்மமாக தெரிகிறது. நன்றி ரோசா வசந்த்:

இதோ சுட்டிகள்:
http://www.telegraphindia.com/1060328/asp/frontpage/story_6025171.asp

http://dnaindia.com/report.asp?NewsID=1020357

http://www.thehindu.com/2006/02/27/stories/2006022713110300.htm

குழலி / Kuzhali said...

//பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).
//
எப்போதும் எந்த அரசாங்கத்திடமும் பலியாவது ஏழை மக்கள்.... என்று நிற்கும் இந்த அரச பயங்கரவாதங்கள்?

Anonymous said...

அருமையான பதிவு நண்பரே.

Muthu said...

dear perumal,

excellent article...try to give some more details like

1. government really relocated these people as claimed?

2.viability of the project?

சந்திப்பு said...

குழலி --அரசு பயங்கரவாதம்-- என்று மிகப் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஏழை மக்களின் உயிர்கள் இவர்கள் கண்ணுக்கு மிக மலிவாகத் தெரிகிறது. அரசு பணம் 10,000 கோடி ரூபாய் ஊழல் செய்த தெல்ஜி, ஹர்ஷத் மேத்தா போன்ற கொடிய திருடர்களின் உயிர்களுக்கு கூட இந்தியாவில் மதிப்பு இருக்கிறது. தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவோமோ என்று ஏங்குகிற மக்களை ஏய்த்திடும் எந்த அரசாக இருந்தாலும் மன்னிக்க முடியாது.

நன்றி வெங்காயம்... இந்த துப்பாக்கி சூடு குறித்து நம் தமிழ் பத்திரிகை உலகம் கண்டு கொள்ளவே இல்லை.

முத்து, இது குறித்த விபரங்களையும், தொடரும் போராட்டங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி. இங்கே பின்னூட்ட மிட்ட பின்பு மீண்டும் இணைய பக்கம் இப்போதுதான் வர முடிந்தது. நீங்கள் குறுப்பிட்டது போல இது குறித்த தீவிரமான செய்திகளை பார்க்க முடிய்வவில்லை. (டெகான் க்ரோனிகிளில் ஒரு பெண்ணை இழுத்து சென்று போலீஸ் அடிக்கும் படம் வெளிவந்திருந்தது.) இது குறித்து மேலும் எழுதுங்கள். நன்றி