நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வேப்பில்லைக்காரி’ சீரியல் பார்க்க நேர்ந்தது. அதில் வந்த காட்சிகளுக்கும் - என் மனதில் எழுந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை. ஆதலால்தான் இந்த பதிவைப் போடுகிறேன்.
21ஆம் நூற்றாண்டில் வல்லரசு இந்தியா, விரல் நுனியில் உலகம், அசுர தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று எவ்வளவுத்தான் பேசினாலும் நாம் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது சன் தொலைக்காட்சியின் வேலைப்பில்லைக்காரி.
அப்படி என்னத்த ஒளிபரப்பினார்கள் என்று கேட்கிறீர்களா? இருங்க பொறுமையா - சுருக்கமாக சொல்றேன்.
இரண்டு பெரும் பண்ணைகளைக் கொண்ட விவசாய குடும்பங்கள் - அதில் இவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் இதுதான் இந்த தொடரின் எபிசென்டர்.
சந்திரசேகரின் தம்பி திடகாத்திரமான உடல் வாகு கொண்டவர். நல்ல நிலையில் வேலைக்குப் போகிறார். மாலையில் ஏதோ அரிப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரிப்பு அதிகமாகி உடம்பெல்லாம் தீயைப் போல் எரிய ஆரம்பிக்கிறது. தீக்காயங்கள் போல ஆங்காங்கே வட்டம், வட்டமாக தோலில் அரிப்பு... அவரால் தாங்க முடியவில்லை.
இந்த விஷயத்தை அண்ணன் சந்திரசேகரிடம் அவர் கூற, அதை கேட்ட சந்திர சேகர் ஏதாவது பூச்சி கடிச்சுதா? என்று கேட்க:
இல்லன்னா, நான் வயல்ல கூட இறங்குல என்று சொல்கிறார்... கூடவே எரிச்சலால் துடி துடித்துக் கொண்டிருக்கிறார்.
(இந்த நேரத்தில் என்னுடைய மனதில் அவரை அவசர, அவசரமாக காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது...)
அடுத்த காட்சியில், சரிடா கொஞ்சம் பொறுத்துக்கோ! விபூதி தடவினால் எல்லாம் சரியாயிடும் என்று கூறுகிறார் சந்திரசேகர்.அதே போல் வீட்டுக்குச் சென்று, மிக பொறுமையாக - அன்பாக விபூதி தடவுகிறார், வீட்டில் உள்ள அவரது மனைவி - தம்பிகள் என குடும்பமே மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறது...அதற்குள் அவருக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவரால் தாங்க முடியவில்லை.இந்த நிலையில் விபூதி பத்தாது என்று, வேப்பில்லையை அரைத்து சந்திரசேகரின் மனைவி ஆங்காங்கே பூசிக் கொண்டிருக்கிறார்...அதற்குள் அவரால் தாங்க முடியாத வாந்தி ஏற்படுகிறது.
(இப்போதாவது மருத்துவமனைக்கு அவரைச் தூக்கிச் செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்... ஆனால் நடக்கவில்லை.)
திரும்பவும் ஒரு டயலாக் பேசுகிறார் சந்திரசேகர்: போய் ஐந்து ரூபாய் காசை ஒரு துணியில் முடித்து வேப்பில்லைக்காரிக்கிட்ட வைச்சுட்டு, அவன் கையில கட்டு - எல்லாத்தையும் வேப்பில்லைக்காரி பார்த்துக் கொள்வாள் என்று கூறுகிறார்.அதற்குள் வேறு காட்சி காட்டப்படுகிறது.
.அந்தக் காட்சி இவர்களது எதிர் முகாம் தரப்பு குறித்து: அந்த காட்சியில் துஷ்ட தேவதைகள் - வேலைப்பில்லைக்காரிக்கு எதிராக எப்படி செயல்படுவது போன்ற அறிவுரைகளை வழங்குகிறது.மொத்தத்தில் வேப்பில்லைக்காரி - துஷ்ட தேவதைகள் - பெரும் கடவுளை மிஞ்சம் - சிறிய தீங்கான கடவுள்கள் என்று இந்த சீரியல் செல்கிறது.
இதைத் தொடர்ந்து என் மனதில் எழுந்த சில கேள்விகள்...மனிதர்களிடத்தில்தான் ஏற்றத்தாழ்வும் - பொறாமையும் - கெடு செயல்களும் நிறைந்திருக்கிறது என்றால் இந்த கடவுள்களிடம் கூடவா? ஏற்றத்தாழ்வுகளும் - சதிச் செயல்களும் நிறைந்திருக்கிறது?
இந்த துஷ்ட தேவதைகளின் வேலையே பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகச் செய்வதுதான்.இது போன்ற காட்சிகளை இந்த விஞ்ஞான யுகத்தில் காட்டுவதன் மூலம் மக்களிடமும் - குழந்தைகளிடமும் எதை விதைக்கிறது திராவிட மீடியா (சன் தொலைக்காட்சி)
சரி! குறைந்த பட்சம் அரிப்பு ஏற்பட்டவரை மீட்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளை அமைத்தாலாவது இந்த நூற்றாண்டில் கிராமப்புற மக்களை விழிப்புணர்வு அடைய வைக்க உதவிடும்.ஆனால், இதற்கு நேர் மாறாக - மருத்துவ உலகம் இன்டர்நெட் - வீடியோ கான்பிரன்சு முறைகள் மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு டாக்டர் - இந்தியாவில் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க கூடிய அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் கிராமப்புறங்களில் உள்ள மக்களிடையே நிலவி வரும் மூடப்பழக்கங்களை உடைத்து - அவர்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்க மருத்துவமனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் மேலும் மூட நம்பிக்கையில் திராவிட மீடியா ஏன் அழுத்துகிறது.
மூட நம்பிக்கைக்கு எதிராக பெரியார் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அவருக்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் சராணாகதி அடைவது வேலைப்பில்லைக்காரியாக இருக்கும் போது! பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வு இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுவது நியாயமே!
பெரியாரிய சிந்தனையை மக்கள் கடைப்பிடிக்கவில்லையென்றால் அதை புரிந்து கொள்ளலாம். ஆனால் திராவிட தலைவர்களே கடைப்பிடிக்காத போது - கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று கூறிய வள்ளலார் போல் - பெரியாரியத்துக்கும் மணியடித்து விட்டார்களோ!
18 comments:
ஆனாலும் உங்களுக்கு அசாத்தியப் பொறுமை.
நானும் ஒருநாள் தற்செயலா இந்த 'வேப்பிலைக்காரி'யைப் பார்க்க நேர்ந்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்ததுலேயே
நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். நல்லவேளை. இதெல்லாம் வராத இடத்துலே இருக்கேன். கடவுள் காப்பாத்திட்டார்!
சந்திப்பு,
சன் டிவி முதலாளிகளான கலாநிதி மாறன் வகையறாக்கள் என்றுமே சன் டிவி திராவிட கொள்கைகளை காக்கவென்றெ அவதாரம் எடுத்ததாக சொல்லவதில்லை.அவர்கள் வியாபாரிகள். பல வியாபார உத்திகளை கொண்டு அவர்கள் வியாபாரத்தை அவர்கள் செய்கிறார்கள்.
கீழ்த்தரமான மூடநம்பிக்கைகளை கொண்ட தொடர்கள், மெகா தொடர்கள் எனப்படும் கேவலங்கள் ஆகியவற்றை சன் டிவி முதற்கொண்டு எல்லா டிவியும் செய்கிறது.
For them business is primary and ideals are secondary now
அப்புறம் இன்னொன்று,
இதெல்லாம் இங்கு சொல்லாதீர்கள்..வேப்பிலைக்காரியை பற்றி உங்களுக்கு தெரியாமல் நீங்கள இதை பேசக்கூடாது என்றும் உங்கள் வீட்டு எதிரில் வேப்பமரத்தை வைத்துக்கொண்டு இதை பேசக்கூடாது என்றும் யாராவது சொல்வார்கள். மற்ற சிலர் வந்து ஜோராக கைதட்டுவார்கள்.
நன்றி துளிசி கோபால்!
அத ஏன் கேக்கறீங்க... நானும் இப்படித்தான் பல நாட்கள் விட்டுட்டேன். பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரியுது. இது ஹீரேஷிமா அணுகுண்டை விட கொடியது என்று.
முத்து! நான் சன் டி.வி. முதலாளிகள் வியாபாரிகள்தான்; இதில் மாற்றுக் கருத்து இல்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் கருணாநிதிக்கும் இதில் பங்கு இருந்ததை மறுக்க முடியாது! சன் தொலைக்காட்சி மட்டுமல்ல; ஜெயா டி.வி., ராஜ் டி.வி. உட்பட எல்லாமும் இதே வகையறாக்கள்தான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
இங்கே என்னுடைய பிரதான கேள்வியே! பெரியாரின் சுயமரியாதை - மூட நம்பிக்கை எதிர்ப்பு - கடவுள் மறுப்பு - பெண்ணுரிமை என அனைத்தையும் ஓட்டுக்காக முதலில் சமரசம் செய்தார் அண்ணா --ஒன்றே குலம் ஒருவனே தேவன்-- என்று.
அண்ணாவிற்கு பின்னால் வந்த திராவிட தலைவர்கள் ஓட்டுக்காக முழுவதுமாக பெரியார் கொள்கைளை கரைத்து விட்டனர். இப்போது அங்கே வியாபாரம் வந்து விட்டது. பெரியார் கொள்கைகளை காக்க வேண்டியவர்களே இப்படி வியாபாரமாக்குவது கொடுமையல்லவா! இதை மீட்கப் போவது யார்?
விசயகாந்த்
//ஆனாலும் உங்களுக்கு அசாத்தியப் பொறுமை?// :-))))))))))))))))))
சந்திப்பு,
நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த ஒரு விசயம், எழுதி யாரும் திருந்த போவதில்லை, தொடரை பார்க்கும் மக்களோ, அல்லது இது மாதிரியான தொடரை தயாரிப்பவர்களோ அல்லது இதை ஒளிபரப்பு செய்பவர்களோ.
மக்களை முட்டாள்களாக ஆக்கி வருகிறார்கள்.
அதிலும் திராவிட இயக்கத்தின் குழுவினரை சேர்ந்த தொலைக்காட்சி இது போன்ற அபத்தமானவற்றை ஒளிபரப்பு செய்வது வெட்கக்கேடு.
சிந்துபாத் என்ற தொடரில் ஒரு சிறுவன், அந்த வயதிலேயே பதவி வெறியில் தன் தந்தையை அடித்து கொல்வது போல் காட்சி, இது கண்டிப்பாக ஒரு சில குழந்தைகளையாவது பாதிக்கும்.
அலாவுதீன் பூதம் அப்படி இப்படி எல்லாம் சொல்லிவிட்டு அம்மன் கோயிலை சுத்தி வருகிறார்கள், இது மட்டரகமாக இருக்குது.
இது எங்கே போய் முடிய போகிறது, எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்
ஐய்யய்ய! இந்த நாடகங்கள எல்லாம் பாக்குறீங்களா? இதெல்லாம் பாக்கவே கூடாது. லூசுல விடனும். இல்லைன்னா நம்ம லூசாயிருவோம்.
சொல்ல மறந்துட்டேனே...வேலன்னு ஒரு தொடர் வந்தது. ஏதோ முருகன் பேராச்சேன்னு ரெண்டு நாள் பாத்தேன். sleepy hallow அது இதுன்னு கொழப்பி...நான் அந்தத் தொடரையே பாக்குறத நிப்பாட்டீட்டேன். ஆனா அதுவும் ரொம்ப நாளா (வருஷமா) ஓடிச்சுன்னு நெனைக்கிறேன்.
//விசயகாந்த்
ராகு காலம், எமகண்டம், குளிகையெல்லாம் பாத்து மீட்பாரோ?
பரஞ்சோதி க்ரெக்ட்டா சொன்னீங்க! இதெல்லாம் அவங்களுக்கே வெளிச்சம்! வேற என்னவாக இருக்கும் - மக்களை மூடர்களாக வைத்திருப்பதுதான் அவர்களது லட்சியமாக இருக்கும். இல்லன்னா பெரியார் பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க ஆரம்ப கல்வியைக் கூட இன்னும் தமிழகத்தில் கொண்டு போகவில்லையே! இன்றைக்கும் 35 சதவீதம் பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது! பெரியார் இப்ப உயிரோட இருந்தா என்ன செஞ்சிருப்பாரோ அதை நாம செய்ய வேண்டிய காலம் வந்துட்டது.
ராகவன் நாமெல்லாம் லூசுல விடறதுனாலத்தான் சன் டி.வி.க்கு கொண்டாட்டமா இருக்கு! இதுக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரத்தை கண்டிப்பா கொண்டு போகனும்ன்னு நினைக்கிறேன்.
தேர்தலுக்கு அப்புறம் அவர மீட்கப் போவது யார்ன்னு பாப்போம்!! நன்றி பெத்தராயுடு
antha iyakkathil ulla thalaivarkale ithai adharikkumbothu sadhrana makkal enna seiya mudiyum?Kadavul nambikkai enbathu veru mooda nombikkai veru. ivarkal irandaiyum kuzhappi kolkirarkal.
ஆம்! கீதா சாம்பசிவம்! கடவுள் நம்பிக்கை என்பது நம்பிக்கையற்ற உலகில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு ஒளிக் கீற்று. ஆனால் மூடநம்பிக்கை என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது! இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தி காட்சிப்படுத்துவதன் மூலம் பணத்தை அள்ளும் கலையில் வல்லவர்களாக மாறி விட்டனர் திராவிட தளகர்த்தர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ, தெரியாமலோ செய்கிறார்கள் என நான் நம்பமாட்டேன்.
அவர்கள் நோக்கமே, கடவுள் நம்பிக்கை என்ற மெய்யான ஒன்றை, இந்த மூட நம்பிக்கை விவகாரங்களோடு இணைத்து, மக்களைக் குழப்பி அவர்களை முட்டாள்களாகவே வைத்திருப்பதுதான்!
இந்த வலுவான ஓட்டு வங்கியை அறிவுறுத்தித் திருத்துவதா இவர்கள் நோக்கம்?
கூடவே, பணத்துக்குப் பணமும் ஆச்சு!
பெரியார் இன்று உயிரோடிருந்தால் சன் தொலைக்காட்சியின் இந்த பிற்போக்குத்தனத்தை நிச்சயம் எதிர்க்க முன்னணியில் இருந்திருப்பார். மாறன் குடும்பத்திற்கு கொள்கையை விட, கருத்தியலை விட பணம் முக்கியமாகிவிட்டது. இந்த தொடர்கள் எந்த சாதி அல்லது மத எதிர்ப்பாளருக்கு மட்டுமல்ல மனித உறவுகளுக்கும் எதிரானது.
இங்கே நமது கருத்துக்களை எழுதுவது இருக்கட்டும். இந்த தொடர்களை நாம் புறக்கணிக்க ஒரு போராட்ட வடிவத்தை நாமே துவக்கலாமே! எந்த போராட்டமும் வெற்றியடையும் என்ற உயர்ந்த நம்பிக்கையில் தான் பிறக்கிறது. அந்த வகையின் எந்த வடிவமான போராட்டம் இதற்கு சிறந்தது என அறியத்தருக!
'யார் பையன்' என்று ஒரு படம்.
50-களில் வெளிவந்தது!
அதில் கலைவாணரும் திருமதி.மதுரமும் பேசிக்கொள்வார்கள்.
7 மணிக்குள் வந்து 'பையனைப்' பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருப்பார்கள் இவர்கள்.
மணி 6.55
மதுரம் பதைப்பார்.
"முருகா! 7 மணிக்குள் யாரும் வராமல் இருக்கணுமே"
கலைவாணரின் பதில்:
"அதுக்கு முருகனை யேண்டி வேண்டறே! முள்ளைய்த் திருப்பி 7-ல வைய்டீ!"
அது போல, இதற்கு என்று என்ன ஒரு போராட்டம்.
அவரவர்கள் 'கனெக்ஷனை கட்' பண்ணுங்க சார்!
:-)
பாரதி, எ°.கே. அனானி அனைவருக்கும் நன்றி.
பாதியின் கோபம் மிக நியாயமானது. திராவிடர் கழகம் பெரியாரின் நேரடி இயக்கமாக இருப்பதால், மூடநம்பிக்கைக்கு எதிரான அவர்கள்தான் முதலில் நடத்தியிருக்க வேண்டும். சன் டி.வி.க்கு எதிராக இயக்கமா? என்ற மூடநம்பிக்கையில் இருக்கிறார்களோ என்னவோ?
அனானி கூறியது போல் நாமேகூட நம்மால் முடிந்த போராட்டத்தை துவக்கலாம். எ°.கே. கூறிய ஆலோசனையும் சரியானதுதான். இங்கே என்னுடைய ஆலோசனையையும் பதிவு செய்கிறேன். இதுபோன்ற சீரில்களை நிறுத்தச் சொல்லி சன் டி.வி.க்கு இ-மெயில் அனுப்பலாம். இதற்கான நல்ல வாசகத்தை உருவாக்கி ஒரே மாதிரியாக அனுப்பினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
அன்புடையீர்,
தமிழைக் கொலை செய்யும் ஊடகங்களின் ஒட்டுமொத்த உருவம் சன் தொலைக்காட்சி.
சென்னை சென்றிருந்தபொழுது நேரில் சென்றேன். அங்குள்ள பொறுப்பான அதிகாரியிடம் 5 மணித்தியாலம் பேசினேன்.
"இந்த தமிழ் வாத்திகளுக்கு எல்லாம் வேறு வேலை இல்லை. இவரை அனுப்பி வையப்பா" என ஏவலாளிடம் கூறி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டனர்.
"காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியும் அப்பா!!"
முடிந்தால் எல்லோரும் இணைப்பைத் துண்டித்துவிட்டு "அக்கடா"வென இருக்க முயலுங்கள்.
ஞானவெட்டியான் நன்றி.
தங்களது அனுபவம் வருத்தத்தை அளிப்பதுதான். இவைகள் யாருக்கும் நிகழக் கூடாதது. மேலும் நீங்கள் தமிழ் பற்றி கூறியுள்ளதால், திராவிட இயக்கத்தின் தமிழ் பற்று குறித்தும் இங்கே என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதாலேயே அவர்கள் தமிழ் பற்றாளர்கள் போல் சித்தரிக்கப்படுகின்றனர். உண்மையில் தமிழுக்காக திராவிட இயக்கம் செய்தது என்ன பட்டியலிட முடியுமா? என அவர்களை கேட்கத் தோன்றுகிறது. 35 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தவர்கள் உயர் கல்வியிலும், மருத்துவத்திலும், தொழில்நுட்ப கல்வியிலும் தமிழை கொண்டு வந்தார்களா? பக்கத்தில் உள்ள இலங்கை, மலேசியாவில் கூட இதுபோன்ற துறைகளில் தமிழ் முன்னேறியுள்ளது. ஏன் எனக்குத் தெரிந்து சட்டமன்றத்தில் முதலில் தமிழில் பேசியது பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த பி. ராமமூர்த்திதான். இதில் திராவிட இயக்கத்திற்கு பங்கு இல்லை. அதேபோல் தமிழில் தந்தி கொண்டு வந்தது ஏ. நல்லசிவன் எம்.பி. இவரும் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர்தான்.... அதை விட கலைஞரின் தொல்காப்பிய நூல் குறித்து புலவர் நக்கீரனார் எழுதிய புத்தகம் நிச்சயம் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது. தொல்காப்பியம் வியாபாரமானது எப்படி என்பது முதல் தொல் காப்பியத்தில் கலைஞரின் தகிதத்தம்களை பிட்டு பிட்டு வைத்துள்ளார்...
Post a Comment