பிரான்சு அரசு “புதிய வேலை காண்ட்டிராக்ட் சட்டம்” ஒன்றை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என பிரான்சு சமூகமே கடந்த ஒரு மாத காலமாக பெரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் மட்டும் 15 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். பாரீசில் மட்டும் நான்கு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண முடியாமல் பிரான்சு ஆளும் வர்க்கம் விழி பிதுங்கி நிற்கிறது.
கடந்த ஆண்டு பிரான்சில் வாழும் குடிசை பகுதி மக்களின் எழுச்சி மிக்க போராட்டம், இன வேறுபாடு போன்றவற்றை எதிர்த்து மாபெரும் சமூக புரட்சி வெடித்தது. இந்த மாபெரும் கலகத்தின் மூலம் பிரான்சில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு, வேலையின்மை, சுகாதாரமின்மை, மிக மோசமான வாழ்க்கை சூழல் போன்றையெல்லாம் உலக மக்களின் கவனத்திற்கு வர நேர்ந்தது.
தற்போது, பிரான்சில் வேலையில்லா திண்டாட்டம் 30 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிக்கிறது. 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ள வாலிபர்கள் கிட்டத் தட்ட 30 சதவீதம் பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அது மட்டுமின்றி புலம் பெயர்ந்தோர் போன்றவர்களையும் சேர்த்துக் கொண்டால் வேலையில்லாத் திண்டாட்டம் 40 சதவீதம் என்று பட்டியலிடப்படுகிறது.
இந்தப் பின்னணியில், பிரான்சு அரசாங்கம் “வேலையில்லாத் திண்டாட்டம் குறைக்கப்போவதாக கூறிக் கொண்டு “புதிய வேலை காண்ட்டிராக்ட் சட்டம்” ஒன்றை கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத்தின் விதிகள் சர்வதேச தொழிலாளர் விதிகளுக்கு புறம்பாக உள்ளதோடு, வேலையில்லாத இளைஞர்களை வேல் கொண்டு சாய்ப்பது போல் உள்ளது.
உதாரணமாக, புதியதாக வேலையில் சேரும் எந்த இளைஞரையும் இரண்டு வருட காலத்திற்குள் - எந்த விதமான காரணமும் கூறாமல், வேலையில் இருந்து நீக்கி விடலாம். இதற்காக குறிப்பிட்ட நிறுவனம் எந்தவிதமான ஈட்டுத் தொகையும் தர வேண்டியதில்லை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.அதே போல் வேலையில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், தங்களது ஓய்வு காலம் முடிந்து விட்டாலும் விருப்பப்பட்டால் குறைந்த ஊதியத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்றலாம் என்று கூறுகிறது.இந்த சட்டத்தின் விதிகளை கண்டு பிரான்சு முதலாளிகள் குதுகலத்தில் இருக்கின்றனர். மறுபுறம் பிரான்சு முழுவதும் இருக்கின்ற நூற்றுக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் - வேலையில்லாத வாலிபர்கள் - தொழிலாளர்கள் என்று பல தரப்பினர் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தொடர் வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விட்டிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பிரான்சு போலீசு கடுமையான அடக்குமுறையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நூற்றுக்கக்கான வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், போலீசு தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றுள்ளனர். போலீசு அடக்குமுறை எப்படி இருந்தாலும் போராட்டத்தின் தீவிரம் எரிதழல் போர் மேலும், மேலும் பரவி வருகிறது. இதனால் பிரான்சு பொருளாதாரமே நிலை குலைந்து போயுள்ளது.
மனித குலத்தை விடுவிக்கும் மாமருந்தாக முதலாளித்துவமே இருக்கும் என்பது ஒரு மாயை என்பதை பிரான்சு சமூகம் உணர்த்துகிறது. ஏகாதிபத்திய அரசுகளும், முதலாளித்துவ அரசுகளும் முதலாளிகளின் சொத்துக்களை எப்படியெல்லாம் குவிக்க முடியும் என்பதில்தான் கவனமாக இருப்பார்களேயொழிய தொழிலாளர்களின் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்களா? அல்லது ஈயத்தை காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை!
உலகமயமாக்கல் கொள்கையை உலகுக்கு அளித்தவர்கள், அதை உள்ளூரில் கூட வெற்றிகரமாக பயன்படுத்த முடியாதவர்கள்தான், உலகமயமாக்கல் என்ற சரக்கை உரக்க கூவி விற்க முயற்சிக்கின்றனர். அதன் நோக்கம் வேறு ஒன்றும் அல்ல; உலக முதலாளிகளின் லாபத்தை மேலும் குவிப்பதே! பிரான்சு, அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மானிய முதலாளிகளின் பணக்குவிப்புக்கு உதவிடுவதே உலகமயமாக்கல் - எனவே பிரான்சு தொழிலாளர்களுக்கு ஆதரவாக உலக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுப்பதன் மூலம், உலகமயமாக்கல் கொள்கையை நாம் ஊனமாக்கலாம்.
உலக மாமேதை மார்க்° கூறியது போல் “முதலாளித்துவம் தனக்கான கல்லறையை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது” என்ற புகழ் பெற்ற நிதர்சனம் பிரான்சு அரசாங்கத்தை தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தில் மக்கள் நல அரசு ஒன்று ஏற்படும் என்பதை நம்புவோம்!
பிரான்சில் ஏற்பட்டுள்ள இளைஞர்கள் புரட்சி குறித்து, நம் தமிழ் மக்கள் வலைப்பதிவில் விரிவாக எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment