December 22, 2005

முத்துவின் முத்தான கேள்விகள்:
WTO விவாதம்

முத்து : எதற்காக முன்னேறிய நாடுகள் தமது விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கக் கூடாது? அவர்கள் பிறகு எப்படி சாப்பிடுவார்கள்?

சந்திப்பு : ஹாங்காங்கில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை கோரிக்கையே இதுதான். அமெரிக்காவும்-ஐரோப்பாவும் விவசாயத் துறைக்கு கொடுத்து வரும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே!

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம். அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் விவசாயிகள் என்றுச் சொன்னால் நமது நாட்டில் உள்ள குப்பனும், சுப்பனும் அரை ஏக்கர் ஒரு ஏக்கர் என்று வைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்கள் அல்ல; ஆனால், அங்கே விவசாயம் என்பது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துக் கொண்டு பெரும் தொழிலாக நடத்துகின்றனர். அதை நடத்துபவர்கள் பெரும் முதலாளிகள். இதைத்தான் “கார்ப்பரேட் பார்ம்ஸ்” என்று கூறுகிறார்கள்.

இத்தகைய பெரும் முதலாளிகளுக்குத்தான் ஆண்டுக்கு 400 பில்லியன் டாலரை மானியமாக கொடுக்கின்றனர். இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் (Westvaco, Chevron, John Hancock...) உலகின் 500 முன்னணி நிறுவனங்களில் முதல் 15 இடத்தில் இருக்கின்றன.மேலும், அமெரிக்காவிலும் நம் நாட்டில் உள்ள சுப்பனும், குப்பனும் போன்ற விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு மானியம் என்பது எட்டாக்கனியே!சரி! அமெரிக்க பெரும் முதலாளிகளுக்கு மட்டும் எப்படி மானியம் கிடைக்கிறது என்ற ரகசியத்தை அறிந்து கொள்வது மிக சுவராஸ்யமானது. அமெரிக்க சட்டப்படி இரண்டு விஷயத்திற்காக மானியம் வழங்கப்படுகிறது.
  1. அமெரிக்க அரசு சொல்லக்கூடிய பணப் பயிர்களை விளைவிக்க வேண்டும். அவை பருத்தி, சோளம், கோதுமை, அரிசி போன்றவை.
  2. இத்தகைய பொருட்களை யார் அதிகமாக உற்பத்தி செய்கிறார்களே, அதற்கேற்றார்போல் மானியத்தின் அளவும் உயரும்.

இந்த இரண்டு அளவு கோலை வைத்துக் கொண்டு பெரும் இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை வழங்குகின்றனர்.உதாரணமாக: அர்கன்சாசில் உள்ள “டைலர்ஸ் பார்ம்ஸ்” என்ற ஒரே ஒரு நிறுவனம் 1996 - 2000 ஆண்டுகளில் மட்டும் 23.8 மில்லியன் டாலர் (119 கோடி ரூபாய்) மானியமாக பெற்றுள்ளது. (பாவம் அவர் பரம ஏழை!!!)

இதேபோல் 2000 ஆண்டில் அமெரிக்காவில் 57,500 விவசாய பண்ணைகள் ஒரு லட்சம் டாலர் தொகையை மானியமாக பெற்றனர். ஆனால் 154 பெரும் கார்ப்பரேட் பண்ணைகள் பெற்ற மானியம் எவ்வளவு தெரியுமா? வெறும் 10 இலட்சம் டாலர்தான்.

அதே சமயம் மிகக் குறைந்த நிலங்களை அளவுள்ள நிலங்களை வைத்துக் கொண்டுள்ள விவசாயிகள் இதே பணப் பயிர்களை விளைவித்தாலும் அவர்களுக்கு மிகச் சிறிய அளவிலேயே மானியம் கிடைக்கும். அமெரிக்காவில் இத்தகைய பணப்பயிர்களைத் தவிர 400க்கம் மேற்பட்ட விவசாய விளை பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் மானியம் கிடைப்பதில்லை. சாதாரண விவசாயிகள் அங்கேயுள்ள லோக்கல் சந்தைத் தேவைக்கேற்ப தங்களது பிழைப்பை நடத்துகின்றனர்.

இத்தகைய பெரும் கார்ப்பரேட் விவசாய பண்ணைகளுக்கு மானியம் மட்டுமின்றி, விவசாயம் செய்வதற்கான கடன் வழங்குவதோடு, அந்த பயிர்களுக்கான இன்சூரன்ஸூம் செய்யப்படுகிறது. சுனாமி, காத்ரீனா போன்று ஏதாவது இயற்கை பேரழிவு ஏற்படும் காலத்தில் இதற்கான இழப்பீட்டையும் அரசு வழங்குகிறது.

நம்முடைய தமிழக - இந்திய விவசாயிகளை நினைத்துப் பாருங்கள். சமீபத்தில் பீகாரில் மனிதர்களை வைத்து உழுது விவசாயம் செய்யும் நிலையே மேலோங்கியுள்ளது. இத்தகைய மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 மட்டுமே கூலியாக தரப்படுகிறது. மாடுகளை வைத்து உழுதால் கட்டுபடியாகது என்ற நிலை. இந்த விவசாயிகளைத்தான் அமெரிக்க கார்ப்பரேட்டோடு போட்டி போடச் சொல்கிறார்கள்.

உண்மையில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏழை விவசாயிகளுக்கு மானியம் கிடைத்தால் நிச்சயம் வரவேற்கலாம். அத்தகைய விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தேயாக வேண்டும்! இது உலகமயமாக்கல் யுகம், அதுவும் கார்ப்பரேட் உலகமயமாக்கல் இதன் நலன் அவர்களைக் காக்கவே.

முத்து : நமது அரசாங்கம் எங்கிருந்து இந்த மானியங்களை தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? (பி.எஃப் பணத்திற்கு வட்டிகூட தரமுடியாத நிலையில் இருக்கிறது இந்திய அரசு)

சந்திப்பு : முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திக் கொள்வோம். அரசுகள் என்றாலே மக்களை வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களை காப்பதற்குமே! இந்த அடிப்படையில்தான் ஏழை மக்களுக்கும் - விவசாயிகளுக்கும் மானியத்தை அரசு வழங்குகிறது. ஆனால் நம்முடைய இந்திய நாட்டில் தற்போது உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்படுவதால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம், சமையல் எரிவாயு, மின்சாரம், போக்குவரத்து என அனைத்திற்கும் மானியம் வெட்டப்பட்டு வருகிறது. அநேகமாக தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் வெட்டப்பட்டு விட்டது.

நமது இந்தியா ஏழைகளின் நாடே தவிர ஏழை நாடல்ல. டிசம்பர் 21 வெளியான இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட புள்ளி விவரங்களை இதற்குச் சான்று:

மானியங்களுக்காக இந்தியா 1,15,825 கோடி செலவிடுகிறது. அதில் ஒரு ரூபாயில் 15 சதவீதம் கூட உரியவர்களை சென்றடைவதில்லை. மற்றவை கள்ளச் சந்தைக்கு சென்று விடுகிறது என்பதே அந்தி அதிர்ச்சிகரமான தகவல். (இந்த மானியங்கள் எங்கே செல்கிறது? யார் பயனடைகிறார்கள்)நமது நாட்டில் 1996ல் 40,000 கோடியாக இருந்த கருப்பு பணப் புழக்கம் தற்போது 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் இந்திய அரசின் கண்ணில் மண்ணைத் தூவி, வரியை ஏய்த்து தற்போது பங்குச் சந்தையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இது தவிர நம்முடைய தாராள மனது கொண்ட இந்திய அரசு வங்கிகளில் கடனாக பெறப்பட்டு இதுவரை செலுத்தாத 1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது. இவைகளெல்லாம் நம்முடைய விவசாயிகள் பெற்ற கடன் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாட்டை முழுங்கி ஏப்பம் விடும் நிறுவனங்கள்தான். இந்த லி°டில் நம்மூர் நடிகர்கள் கூட வருவார்கள்.இவையெல்லாம் போக, நம்முடைய இந்திய அரசு ஆண்டு தோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் ரிலைன்°, டாடா, பிரேம்ஜி, நாராயணமூர்த்தி... என பெரும் முதலாளிகளுக்கு கருணை காட்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிச் சலுகைகளை செய்து வருகிறது.

இப்போது சொல்லுங்கள்! நம்முடைய ஏழை விவசாயிகளுக்கு மானியம் வழங்க நமது அரசிடம் பணம் இல்லையா? என்று! மனம் இல்லையே தவிர பணம் இல்லை என்பது மாய்மலம்.

முத்து : நீங்கள் கூறும் மாற்று வழி என்ன? சீனாவே அன்னிய முதலீட்டை வரவேற்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

சந்திப்பு : அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு நாடும் ஒரேயடியாக முழுக்குப் போட முடியாது! இதற்கு சீனாவும் விதி விலக்கு அல்ல; இங்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும்.

நாட்டுக்குள் வரக்கூடிய அந்நிய முதலீடு, உள்நாட்டு பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் சூறையாடுவதாக இருக்கக்கூடாது. மேலும் புதிய தொழில்நுட்பத்தையும் குறிப்பிட்ட நாட்டில் வேலைவாய்பை உருவாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் முதலீடு போடக்கூடிய அந்நிய நிறுவனங்களுக்கும் இலாபம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சீனா அந்நிய முதலீட்டை வரவேற்கிறது.

உதாரணமாக நம்முடைய இந்திய நாட்டில் குளிர்பானத்துறையில் கோக்கையும், பெப்சியையும் அனுமதித்ததால் இன்றைக்கு நம்முடைய குளிர்பானத் தொழில் மூட்டைக் கட்டிக் கொண்டுள்ளது.பல வெளிநாட்டு டி.வி. நிறுவனங்களை நாம் அனுமதித்துள்ளதால் டையனரோ போன்ற டி.வி. நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எனவே போட்டி என்பது சமதையாக இருக்க வேண்டும். அதைச் சமாளிக்ககூடிய விதத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சீனா அதற்கு தயாராக இருக்கிறது. இந்தியாவின் நிலை அதுவல்ல?

இன்னொரு விஷயம், எந்த ஒரு நாட்டின் சூழலையும் வேறு ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்பதே என் கருத்து. அங்குள்ள பிரத்தியோக சூழலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.இங்கு என்ரான், போ°கோ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் அதிக இலாப உத்திரவாதத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முதலீடு செய்வதும், இதனால் உள்நாட்டு கனிவளம், மக்கள் நலன் போன்றவை பாதிப்புக்கு உள்ளாவதும்தான் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.

மொத்தத்தில் அமெரிக்கா - ஐரோப்பா - இந்தியாவில் உள்ள சாதாரண விவசாயிகளும், தொழிலாளர்களும் இணைவதே இன்றைய உடனடியத் தேவையாகும். இதில் பி.பி.ஓ. - மென்பொருள் தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.

மாற்று வழி! நான் சொல்வதை விட நம்முடைய நாட்டில் நோபள் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னைக் கேட்டால் வாரி வழங்குவார். இதற்காகவே அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இந்திய நாடும் சீரான பாதையில் செல்லும். அதற்கு தேவை பரந்த விவாதமும் - பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான்.

இந்த விவாதத்தில் ஈடுபட்ட நண்பர் முத்துவக்கு
ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும்
பங்கேற்கலாம்!

16 comments:

முத்து(தமிழினி) said...

thanks perumal,

i will come up with some other questions later

சந்திப்பு said...

நன்றி முத்து!

தங்களது கேள்விகள் மூலம் குறிப்பிட்ட பொருளில் என்னுடைய ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறீர்கள். மிக்க நன்றி!

தங்களது வலைப்பூவில் டோன்டுவிற்கு பதில் கொடுத்துள்ளீர்கள்! அது ஒரு பெரிய பாதாள சுரங்கமாக இருக்கும் போல் இருக்கிறது....

பட்டணத்து ராசா said...

well said santhipu

சந்திப்பு said...

Thank you Raaza...

Samudra said...

Europeல ஒரு மாட்டுக்கு 24,000 ஆயிரம் ரூபாய indirect ஆக மானியம்(ஒரு வருடத்திர்க்கு மட்டும்) கொடுக்கபட்டுவருகிறது என்று எங்கோ படித்த நினைவு.


2013 முதல் இத்தகைய மானியங்கள் குறைக்க படும் என்பது போல தான் பேசியுள்ளார்கள்.

இதை போன்ற பேச்சுவார்தைகளை சாம்ர்த்தியமாக கையாண்டு வரும் இந்திய அரசை பாராட்டியே ஆகவேண்டும்.

பி.கு : கம்யுனிச நாடான சீனாவே WTO இல் உறுப்பினர் என்பதால் இங்கே ideology பேசி பயன் இல்லை என்பது எனது என்னம்.

Samudra said...

//இந்தியாவின் நிலை அதுவல்ல?//

தவறு.


டாட்டா, ரிலையன்ஸ, ஓனிடா, சத்யம், விப்ரோ, ஆதித்யா பிர்லா, பாரதி டெலி, மஹேந்திரா ஆகிய கம்பனிகள் நல்ல நிலையில் தான் உள்ளன.


மேலும் இந்திய நிறுவங்கள் பல வெளிநாட்டு நிறுவங்களை acquire செய்து உள்ளன.

ஆகவே, எந்த துறையில் நாம் பலமாக உள்ளோம் என்பதை அறிந்து அதில் போட்டியிடலாம்.

விவசாயிகள் crop insurance,kisan credit போன்ற சிலவற்றை பயன்படுத்தி தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இங்கேயும் நாம் கவனமாக Land reforms போன்ற சிலவற்றை செயல்படுத்த வேண்டும்.

முத்து(தமிழினி) said...

//மானியங்களுக்காக இந்தியா 1,15,825 கோடி செலவிடுகிறது//

இந்த தொகை ஒரு ஆண்டுக்கா அல்லது ஒரு மாதத்திற்கா....

//1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது.//

முதலில் இந்த வராக்கடன் விசயத்தை பார்ப்போம். அக்கவுண்டிங் பர்ப்பஸ்க்கு தான் இது கணக்கில் எடுத்துக்கொள்ளபடுவதில்லையே தவிர, இந்த பணத்தை வசூல் செய்ய மாட்டார்கள் என்று யார் சொன்னது?

சில் சட்டங்கள் (securitisation act) வந்துள்ளன. அவை உதவும்.

நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொண்டாலும் இந்த பணம் முழுவதையும் வசூல் செய்தால் அவ்வளவு பணத்தையும் உபயோகித்தால் கூட ஒரு ஆண்டுக்தானே மானியம் கொடுக்க முடியும்....

முத்து(தமிழினி) said...

சந்திப்பு,

டோண்டு அய்யாவிற்கு பதில் என்று நீங்கள் கூறும் பதிவும் அது சம்பந்தப்பட்ட மற்ற பதிவுகளும் பிரபாகரன் பாணியில் சொல்லப்போனால் " ஒரு துன்பியல் சம்பவம்" என்றுதான் சொல்லவேண்டும்.

முத்துகுமரன் said...

//" ஒரு துன்பியல் சம்பவம்" என்றுதான் சொல்லவேண்டும்//

முத்து Full Formல இருக்கீங்க போல :-)

முத்து(தமிழினி) said...

சரி சரி ஒரு இன்பவியல் சம்பவம் என்று வேண்டுமானால் போட்டுக்கோங்க... எனக்கென்னவாம்?

சந்திப்பு said...

நன்றி சமூத்திரா

தாங்கள் கருத்து மிகச் சரியானதே! இதைத்தான் என்னுடைய உலக வர்த்தக அமைப்பு குறித்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். “உலகில் ஏழை மனிதனாக பிறப்பதை விட அமெரிக்கா - ஐரோப்பாவில் மாடாக பிறக்கலாம்” என்று.
அடுத்து, சீனாவைப் பற்றியது! அநேகமாக அது கம்யூனி°ட் நாடு அல்ல என்றுதான் நினைக்கிறேன். உலகில் எந்த மூலையிலும் கம்யூனி°ட் நாடாக மாறவில்லை என்றே கருதுகிறேன். அநேகமாக அது முதலாளித்துவத்தில் இருந்து சோசலி°ட் நாடாக மாறும் இடைநிலையில்தான் இருக்கிறது.
தவறாக இருந்தால் திருத்தவும்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

சந்திப்பு said...

முத்துவின் கேள்விகளால் திக்கு முக்காடிப் போனாலும், அத்தகைய கேள்விகள் மிக நியாயமானதுதான்.

முதலில், நம்முடைய நாட்டில் ஆண்டிற்கு சுமார் 40,000 கோடி முதல் 50,000 கோடி வரை மானியமாக அளிக்கப்படுகிறது. இதிலும் பெரும் பகுதி அடித்தட்டு மக்களைச் சென்றடைவதில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டாவது, பி.பி.ஓ. போன்ற சேவைத் துறையில் மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரியை ஏய்ப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரத்தை இந்த வார இந்தியா டுடே பத்திரிகையை பார்க்கவும் (டிசம்பர் 21, 2005). எனவே சாதாரண மக்களுக்கு மானியம் வழங்க நம்முடைய நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பெரும் வசதி படைத்தவர்கள்தான் இந்த வரி ஏய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். தொழிலாளர்கள் அல்ல.

வராக்கடன் குறித்து தாங்கள் குறிப்பிட்டது சரிதான்! ஆனால், பெரும் வசதிப்படைத்த முதலைகளிடம் இருந்த அந்த பணத்தை இதுவரை பெற முடியவில்லை என்பதுதான் விஷேசம். மேலும் அவர்கள் அரசை ஏமாற்றி பல கடன்களை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு, சிறு வியபாரிகளுக்கு கடன் கொடுப்பதற்கு வக்கற்ற நிர்வாகமாகத்தான் நம்முடைய அமைப்பு இருப்பதை தாங்கள் நன்றாக உணர்ந்தவர் என்பதை நான் அறிவேன்.

வங்கிகளில் கேட்கப்படும் ஏராளமான பார்மாலிட்டி°கள் - டாக்குமெண்டுகளுக்கு பயந்து சாதாரண மக்கள் அந்த பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அத்துடன் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்தி போன்டியாகிப் போகிறார்கள் என்பதே உண்மை.
தங்களது கேள்விகளுக்கு மிக்க நன்றி! இவைகள் நிச்சயம் என்னைப் போன்ற சாதாரண ஆட்களுக்கு ஒரு தூண்டுகோலே.

முத்து(தமிழினி) said...

நன்றி பெருமாள்,
நிறைய எழுதுங்கள்..இது போன்ற விசயங்களில் பலரும் கலந்துரையாட வருவதில்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. நாளை வங்கிகளின் நிலை பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.பார்ப்போம்.

சந்திப்பு said...

வங்கிகளின் நிலை குறித்த தங்களுடைய பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தங்களது சொந்த அனுபவம் இதற்கு பேரூதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
எப்ப போடுவீங்க!

ENNAR said...

இன்றைய அவசியத் தேவை உரவிலையைக் குறைக்க வேண்டும் மாணியத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
நல்ல பதிவு

சந்திப்பு said...

என்னார் தங்களது வருகைக்கும், வாசிப்புக்கும் மிகுந்த நன்றி!

நீங்கள் கூறுவதுபோல் மத்திய அரசு உடனடியாக உர விலையை குறைக்க வேண்டும். அதே சமயம் உர விலை ஏன் உயர்ந்தது? என்றும் நாம் பார்க்க வேண்டுகிறேன். மானியத்தை வெட்டுவதே உர விலை உயர்வுக்கு முக்கிய காரணம். எனவே, இவைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது.

நாமும் இணைந்து செயல்பட்டால், இந்த அரசுகளை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். அதற்குத் தேவை விழிப்புணர்வு? ஏன், எதற்கு என்ற வினாக்களே!

நன்றி என்னார்.