உலக மக்களை கரை சேர்க்குமா?
WTO ஹாங்காங் மாநாடு
உலக வர்த்தக அமைப்பின் 6வது உச்சி மாநாடு, சீனா நாட்டில் உள்ள ஹாங்காங்கில் டிசம்பர் 13 - 18 வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் எடுக்கப்படும் முடிவே உலக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.
148 நாடுகள் உறுப்பினராக உள்ள “உட்டோ”வின் உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம் சம்பந்தமான ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கம்.
ஆனால், “உட்டோ” துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. இன்னும் அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்றால் “வளர்ந்த பெரும் கார்ப்பரேட்” நிறுவனங்களின் நலனை முன்னிறுத்துவதாகவே இருந்துள்ளது.
இம்மாநாட்டின் முடிவும் “வளரும் நாடுகளுக்கும் - வளர்ந்த நாடுகளுக்கும்” இடையிலான பெரும் முரண்பாட்டை மேலும் அதிகரிப்பதற்கே இட்டுச் செல்லும்.கடந்த 2003 ஆம் ஆண்டு மெக்சிகோவில், கான்கன் நகரில் நடைபெற்ற “உட்டோ” மாநாடு எந்தவிதமான முடிவும் எடுக்காமல் பெரும் தோல்வியில் முடிந்தது. “உட்டோ”வின் பாரபட்சமான நிலைபாட்டிற்கு வளரும் நாடுகளிடையே எழுந்த ஆவேசக்குரலும், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் குரலும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வலுவான எதிர்ப்புக்குரலுமே இம்மாநாட்டை தோல்வியுறச் செய்தது.
குறிப்பாக கான்கன் மாநாட்டின்போது “உட்டோ” அமைப்பு உலக விவசாயிகளை தற்கொலைக்கும் தூண்டும் அமைப்பாகவே செயல்படுகிறது என்று எதிர்ப்புக்குரல் எழுப்பிய தென் கொரிய விவசாயி “லீ குயூங் ஹே” தற்கொலை செய்துக் கொண்டு, “உட்டோ” அமைப்பின் கோர முகத்தை உலக மக்கள் முன்வெளிப்படுத்தினார்.
தற்போது நடைபெற்று வரும் “ஹாங்காங்” மாநாட்டில் குறிப்பாக இரண்டு விசயங்கள் விவாதிக்கவுள்ளனர்.
1. விவசாயம் சார்ந்த வர்த்தகம் குறித்து
2. விவசாயம் சாராத வர்த்தகம் குறித்து
குறிப்பாக விவசாயம் சார்ந்த வர்த்தகம் என்றால், இன்றைக்கு பல்வேறு வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அற்பு “மானியத்தை” கூட வெட்ட வேண்டும் என்பது உட்பட, வளரும் நாடுகள் தங்களது விவசாய சந்தைகளை மேல்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி உட்பட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தியுள்ளனர்.தற்போது, உலகம் முழுவதும் நாள்தோறும் 24,000 விவசாயிகள் இத்தகைய மோசமான பொருளாதார கொள்கைகளால் மரணமடைந்து வருகின்றனர். கடன் மற்றும் பட்டினி கொடுமைக்கும், வறுமையால் பீடிக்கப்பட்டு நோய்வாய்பட்டவர்கள் நாள்தோறும் செத்துக் கொண்டு வருவதற்கு “உட்டோ”வின் வர்த்தக கொள்கைகளே!
குறிப்பாக நமது இந்திய நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் என பல மாநில விவசாயிகள் ஆண்டுக்கு 5000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைவதை பல பத்திரிகை செய்திகளில் கண்டுள்ளோம்.
இந்தியாவின் பொருளாதார பலமே விவசாய உற்பத்தியில்தான் இருக்கிறது, “உட்டோ”வின் வர்த்தக கொள்கையால் “விவசயாம் என்பது ஏற்றுமதிக்கே - உணவுக்கு அல்ல” என்ற கொள்கையை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கின்றனர் வளர்ந்த நாடுகளும் - பெரும் ஏகபோக நிறுவனங்களும்.
விவசாயத்திற்கான கதவுகள் அந்நியர்களுக்கு இந்திய நாட்டில் திறந்து விட்டால் கோடிக்கணக்கான ஏக்கர் இந்திய மண்வளம் ஏகபோகங்களில் கைகளுக்கு மாறுவதோடு, தொழிற்சாலையைப் போன்ற பெரும் உற்பத்தியும் - அதிலிருந்து ஏழை விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படக்கூடிய அபாயமும் ஏற்படும். அத்துடன் நமது நாட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, காய்கறிகள் போன்ற உற்பத்தி என்பதற்கு பதிலாக பருத்தி போன்ற பணப் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதி செய்வார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் நமது இந்திய நாடு சோற்றுக்கு அமெரிக்காவையோ - ஐரோப்பாவையோ நம்பியிருக்க வேண்டியிருக்கும்!
மேலும், தற்போது இந்திய நாட்டில் பின்பற்றி வரும் “உட்டோ” வடிவமைத்த கொள்கை காரணமாக நமது பொதுத்துறைகளான இரயில்வே, மின்சாரம், விமானத்துறை, சுரங்கம், துறைமுகம் போன்ற அடிப்படையான கட்டமைப்புகள் தனியார்மயமாகி வருகின்றன. மிச்சமிருப்பதை பங்கு போடுவதற்குதான் இந்த உட்டோ மாநாடு உதவும். இதன் மூலம் இந்திய நாட்டில் வேலையிண்மை பெருகுவதோடு, வறுமையின் கோரப்பிடியில் நம்நாடு செல்ல வேண்டிய அபாயம் காத்திருக்கிறது!எனவே, “உட்டோ” போன்ற அமைப்புகள் பாரபட்சமானதோடு, பன்னாட்டு முதலாளிகளின் நலன் காப்பதற்கும், வளர்ந்த நாடுகளின் நலனுக்காகவுமே இவை பாடுபடுகின்றன!
உலக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மனிதநேய அமைப்புகள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அமைப்புகள் குறிப்பாக தற்போது வெனிசுலாவும் - கியூபாவும் இரு நாடுகளும் பர°பர ஒப்பந்தங்களின் மூலம் பெரும் பயனை அடைந்து வருவதோடு அமெரிக்காவிற்கே சவாலாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய அடிப்படையில் இந்தியா - சீனா - ரஷ்யா என்று ஆசிய நாடுகள் வலுவாக கரம் கோர்ப்பதும் இந்த அணியில் ஆசிய நாட்டில் உள்ள சிறிய நாடுகளையும் கூட்டாளிகளாக்கிக் கொண்டு உண்மையான - வளர்ச்சிக்கான - ஏழ்மையை ஒழிப்பதற்கான வர்த்தகத்தில் ஈடுபடுவதுமே நம் மக்களுக்கு பயன்படும்.
5 comments:
நல்ல பதிவு பெருமாள்.
உங்க சிறுகதையை இன்னும் படிக்கவில்லை ..படித்துவிட்டு சொல்கிறேன்.
முக்கியமான ஒரு issue ad valorem equivalents (AVEs)பற்றினது
ஐரோப்பியன் யூனியன் ஒது வர மாட்டேங்கிதே. நல்ல விஷயம் செல்வப்பெருமாள், பேச தான் ஜாஸ்தி ஆள் வரமாட்டாங்க!
நேர்றைய பிபிசி செய்தியிலே, ஐரோப்பிய ஒன்றிய "சொந்த சந்தை காப்பாளர்களுக்கு" விளங்க வைத்து , விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சப்ஸிடி கிடைக்கச் செயவது ஆகக்குடிய ஒன்றுதான் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். நடந்தால் சந்தோஷம்தான்.
ஆனாலும், சொந்தச் சந்தை என்பதை பொறுததளவில் நஷ்டம் நிச்சயமாய் உள்நாட்டு விவசாயிகளிடம் இருக்குமென்றே தோன்றுகிறது.
நன்றி! வெளிகண்ட நாதர்,
வளர்ந்த மேலை நாடுகள் என்றைக்கும் தங்களது நலனை விட்டுக் கொடுக்காது. இன்றைக்கு கூட நம்முடைய இந்திய அமைச்சர் கமல்நாத் சுட்டிக்கட்டியிருப்பது போல் விவசாயம் சாராத வர்த்தகத்திற்கு இந்திய நாடு 74 சதவீதம் வரி விலக்கு அளித்துள்ளபோது, மேலை நாடுகள் வெறும் 24 சதம் மட்டுமே அளித்துள்ளன என்பதை குறிப்பிட்டுள்ளது கவணிக்க வேண்டிய ஒன்று.
தங்களுக்கும் இதுகுறித்து எழுதினால் நலமாக இருக்கும்.
கே. செல்வப்பெருமாள்
நன்றி கார்த்திக்!
ஐரோப்பிய யூனியனின் விவசாய மானியம் என்பது, நம்முடைய சந்தையை அவர்கள் கொள்ளையடிப்பதற்கு கொடுக்கப்படும் சன்மானமாகவே தெரிகிறது. எனவே விவசாயம் மற்றும் சில முக்கிய அம்சங்ளை உலக வர்த்தக அமைப்பிலிருந்து நீக்குவதே சரியானதாக இருக்கும். அப்போதுதான் வளரும் நாடுகள் முதுகெலும்புடன் நடமாட முடியும்.
கே. செல்வப்பெருமாள்
Post a Comment