December 21, 2005

கானல் நீராய்ப்போன ஹாங்காங் மாநாடு



ஹாங்காங்கில் நடைபெற்ற 6வது உலக வர்த்தக மாநாடு ‘பெரும் தோல்வியில் முடிந்தது’ என்ற சூழலை தவிர்ப்பதற்காக அமெரிக்காவும் - ஐரோப்பாவும் ஏற்கெனவே வைக்கப்பட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்து, சில விஷயங்களில் நுனிப்புல் அளவிற்கு சமரசத்தை செய்து கொண்டு, தங்களது கைத்தேர்ந்த கண்கட்டி வித்தைகள் மூலம் இம்மாநாட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உலக வர்த்தக மாநாட்டில் நான்கு முக்கிய விஷயங்கள் குறித்து அலசப்பட்டது. அவை 1. விவசாய சந்தையை திறந்து விடுதல் - மானியங்களை வெட்டுதல், 2. தொழில் உற்பத்தி பொருட்களுக்கான வரியை விலக்கிக் கொள்ளுதல், 3. சேவைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கதவைத் திறந்து விடுதல், 4. தொழிற்சார்ந்த அறிவுச் சொத்து உரிமை குறித்து.

ஒவ்வொரு விஷயமாக சில மேலோட்டமான பார்வையை செலுத்தினாலே மேலை நாடுகளின் சூட்சமத்தை புரிந்து கொள்ள முடியும்.

முதலில், இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகள் ஒன்றுபட்டு உரத்து குரலெழுப்பிய முக்கிய விஷயம் ‘அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியத்தை வெட்ட வேண்டும்’ என்பதே!

இந்த விஷயத்தில் நடந்தது என்ன! அமெரிக்காவும் - ஐரோப்பாவும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் ஒற்றுமையை கண்டு மிரண்டுப்போனாலும், இவர்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசுவதன் மூலம் தங்களது செல்லப் பிராணிகளாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற வித்தையை காட்டியுள்ளனர்.

‘2013ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கு வழங்கி வரும் மானியத்தை வெட்டிக் கொள்வதாக அறிவித்துள்ளது.’

உண்மை என்ன? அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியத்தில், ஏற்றுமதிக்கு வழங்கும் மானியம் என்பது வெறும் 3.5 சதவீதமே! இதைத்தான் தாங்கள் 2013ஆம் ஆண்டுக்குள் வெட்டிக் கொள்வதாக மார்தட்டிக் கொள்கின்றன.

கடுகளவு மானியத்தை வெட்டுவதன் மூலம் வளர்ந்த நாடுகளின் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதுவும் மேலை நாடுகள் தங்களது விவசாயிகளை பாதுகாக்க பல நவீன டெக்னிக்கையெல்லாம் கையாளும். அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை கண்டாலே போதும்

உதாரணம் 1 : உலகிலேயை அதிகமான ஏழை மக்களை கொண்ட ஆப்ரிக்காவில் அமெரிக்காவும் - ஐரோப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு “கோழி கறி”யை இறக்குமதி செய்கின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோழி கறியின் விலை ஆப்பிரிக்காவில் தெருக்களில் உள்ள சாதாரண மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கு குறைவு. இதன் மூலம் ஆப்பிரிக்காவில் கோழி வளர்ப்பு - விற்பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 1999இல் 1000 டன் கோழி கறி ஏற்றுமதி செய்த மேலை நாடுகள் 2003இல் 12,000 டன் அளவிற்கு தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அமெரிக்காவும் - ஐரோப்பாவும் கோழிகளுக்கு மானியத்தை வழங்குவதில்லை. ஆனால் கோழிகளை வளர்க்கப் பயன்படும் “தானியத்திற்கு” - கோழி உணவிற்கு மானியத்தை வழங்குகின்றன. கோழி வளர்ப்பவர்கள் அதிகமாக செலவழிக்க வேண்டியதே அதன் தீவனத்திற்குத்தான். நேரடியாக கோழிக்கு மானியம் அளித்தால்தான் பிரச்சினை, கோழி உணவுக்கு மானியம் என்பது எந்த ஒப்பந்தத்திலும் இல்லையென்பது மேலை நாடுகளின் வாதம்! இதுதான் அமெரிக்கா!

உதாரணம் 2 : உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையை தீவிரமாக அமலாக்கி வரும் நம்முடைய இந்திய நாட்டில் மட்டும் இதுவரை 40,000 விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். விவசாய மானியங்கள் கடுமையாக வெட்டப்பட்டதும், உரம் உட்பட விவசாய இடுபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் நொடிந்துப்போயுள்ள இந்திய விவசாயிகளுக்கு எந்தவிதமான கருணையையும் நம்முடைய மன்மோகன் அரசு காட்ட வில்லை என்பதை கருத்திக் கொண்டால் - பன்னாட்டு முதலாளிகளுடன் எத்தகைய ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட முடியும் என்பதே நம்முடைய கேள்வி?

அடுத்து, 2006ஆம் ஆண்டிற்குள் பருத்திக்கான மானியத்தை வெட்டிக் கொள்வதாக அறிவித்துள்ளது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.

ஏற்கெனவே பருத்தி உற்பத்தியில் கடும் பாதிப்பை சந்தித்து திவாலாகிப் போயுள்ளது ஆப்பிரிக்க - மற்றும் ஆசிய நாட்டு விவசாயிகள், இந்தச் சூழலில் அவர்கள் முன்னேறுவதற்கோ, போட்டி போடுவதற்கோ வாய்ப்பில்லாத சூழலில் தங்களது கருணையை வெளிப்படுத்தியுள்ளன மேலை நாடுகள்.

பருத்தி விவசாயிகளுக்கு மட்டும் வளர்ந்த நாடுகள் 1999-2003 ஆண்டு காலத்தில் 12.47 பில்லியன் டாலர் மானியமாக வாரி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்க விவசாயிகள் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் நேரடியாக நஷ்டம் அடைந்துள்ளனர். அமெரிக்க - ஐரோப்பாவின் இத்தகைய செயலால் இரண்டு கோடி விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டுள்ளனர்.

நாமா : தொழிற்சாலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை நீக்குதல் தொடர்பானது.

இந்த விஷயத்திலும் மேலை நாடுகள் நமக்கு நாமத்தையே போட்டுள்ளனர். குறிப்பாக வளர்ந்த நாடுகளின் உற்பத்தி திறனும், வளரும் நாடுகளின் உற்பத்தி திறனும் வேறுபடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவும் அமெரிக்கா தற்போத 97 சதவீத பொருட்களுக்கு இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. அத்தகைய பொருட்கள் வெறும் உப்பு, சப்பு போன்ற உதவாக்கரை பொருட்களாகவே இருக்கும். மீதம் இருக்கும் மூன்று சதவீதம் என்பது மிக முக்கியமாக வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களாகத்தான் இருக்கும். ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் சீனாவின் ஜவுளி - கம்பளி இறக்குமதியில் கைகழுவும் போக்கை கடைப்பிடிப்பதை உதாரணமாகக் கொண்டால், திறந்தவெளி பொருளாதார கொள்கை நம் இந்திய மக்களின் உயிர்களை வேகமாக அள்ளிச் செல்லும் திறந்த வெளிக் கொள்கையாகவே மாறும்.

சேவைத்துறையை எடுத்துக் கொண்டால் இப்போது உள்ள நிலையில் இன்சூரன்ஸ், வங்கி, டெலிகாம், ஐ.டி., பி.பி.ஓ. என்று பல வகைகளில் அந்நிய நாடுகளின் பெரும் முதலீடுகளை ஈட்டும் கேந்திரமாக இந்திய நாடு மாறியுள்ளதை நாம் அறிவோம்! மிச்சமிருப்பதையும் கொள்ளையடிப்பதற்கே வழிவகுத்துள்ளது ஹாங்காங் பாதை.

அறிவுச் சொத்துரிமை விஷயத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைய நீடிக்கிறது. அதாவது அமெரிக்காவோ - ஐரோப்பாவோ உயிர் காக்கும் மருந்து மற்றும் ஏதாவது அத்தியாவசியமான பொருட்களுக்கான காப்புரிமையை பதிவு செய்து விட்டால், அது போன்ற பொருட்களை எந்த நாடும் உற்பத்தி செய்ய முடியாது என்பதோடு 20 ஆண்டுகளுக்கு நாம் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். இதன் மூலம் நம்முடைய சுயேச்சையான அறிவியல் ஆராய்ச்சி தடை படும். சமீபத்தில் நான் படித்த செய்தி ஒன்றையும் சொல்லி விடுகிறேன். சம்முடைய பாரம்பரியமான நார்த் இந்திய புட் என்று கௌரவமாக அழைக்கும் “சப்பாத்திக்கு” கூட அவர்கள் பேட்டன்ட் வாங்கியுள்ளனர். எதிர் காலத்தில் உங்கள் வீட்டில் சுடும் சப்பாத்திக்குகூட நீங்கள் அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டி வரும்.

இது ரொம்ப ஓவர் என்று நீங்கள் பீல் பன்னினால், தண்ணீர் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழங்கிய தண்ணீர் இன்றைக்கு வியாபாரமாகிப் போயுள்ளது. உங்கள் வீட்டின் குழாய்களில் வரும் தண்ணீருக்கு நீங்கள் வரி கட்டாமல் அது உங்களை வந்தடையாது!

உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் பாஸ்கல் லாமி கூறியது போல்,
“ஹாங்காங் மாநாடு ஏழைகளுக்கு உதவும் ஏன்று வாய் கிழிய பேசியதோடு சரி! எந்தவிதத்திலும் ஏழைகளுக்கும் உதவ வில்லை! திறந்த சமச்சீரான போட்டிகளைக் கொண்ட சந்தைக்கும் வழிவகுக்கவில்லை”.

இப்போது சொல்லுங்கள் ஹாங்காங் மாநாடு கானல் நீரா? அல்லது மினரல் வாட்டரா? என்று. இந்த மாநாட்டின் மூலம் நம்முடைய இந்திய நாடு அடைந்த பயன் என்ன என்று நாடாளுமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் இந்திய அரசும், வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தும்தான் விளக்க வேண்டும்! ஒருவேளை உங்களுக்குத் தெரிந்தால் கூட சொல்லலாம்.

4 comments:

உலகன் said...

கண்ணோட்டம் சரியானது தானா என்று தெரியவில்லை. இருப்பினும் உபயோகமான பதிவு. இந்த விவாகரத்தில் அனைவரின் கவனம் திருப்ப உதவும்.

சந்திப்பு said...

நன்றி! உலகன்.

மாறுபட்ட கருத்துக்களும் நம்முடைய வலைப்பூவில் பதிவதன் மூலமும் - விவாதத்தின் மூலமும் சரியான கண்ணோட்டத்திற்கு வர முடியும்.

உட்டோ, உலகவங்கி, ஐ.எம்.எப். போன்ற அமைப்புகளின் செயல்கள் ஏழை நாடுகளுக்கும், ஏழை மக்களுக்கும் எதிரானவையாகத்தான் இதுவரை இருந்துள்ளது. ஹாங்காங் முடிவும் அதில் ஒன்று.

Muthu said...

பெருமாள்,

வலதுசாரிகள் அதிகம் உள்ள நம்முடைய தமிழ்மணத்தில் இதுப்பற்றி விவாதிக்க யாரும் வரவில்லை என்பது ஆச்சரியம்தான்.ஆகவே நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் விடையளியுங்கள்.பதில் வரவழைக்கத்தான்.இதன்மூலம் என்
அறியாமை வெளியே தெரிந்தாலும் பரவாயில்லை.

ஒ.கே. ரெடி ஸ்டார்ட்

எதற்காக முன்னேறிய நாடுகள் தமது விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கக்கூடாது?
அவர்கள் பிறகு எப்படி சாப்பிடுவார்கள்?

நமது அரசாங்கம் எங்கிருந்து இந்த மானியங்களை தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
(பி.எஃப் பணத்திற்கு வட்டி கூட தரமுடியாத நிலையில் இருக்கிறது இந்திய அரசு)

Muthu said...

நீங்கள் கூறும் மாற்றுவழி என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வி..சீனாவே அன்னிய முதலீடை வரவேற்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?(விளக்கமாக போடவும்..தனிப்பதிவாகவும் இருக்கலாம்)