April 30, 2008

மே தினம் : பறிபோகும் பெற்ற உரிமைகள்!

கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக் கூடிய உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!
அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய உலகமயம் இன்றைக்கு உலகை நெருக்கடியின் விளம்பிம்பிற்குள் தள்ளியுள்ளது. விலைவாசி உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம், வீட்டு வாடகை உயர்வு, வேலை நேரம் அதிகரிப்பு என அனைத்து முனைகளிலும் தொழிலாளர்களும் - உழைக்கும் மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில் ஆளும் வர்க்கமும் - ஆட்சியாளர்களும் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக முலாம் பூசி மொழுகி வருகின்றனர். பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் பைகள் மட்டும் நிரம்பிக் கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரமாக மாறியுள்ளது. பல புதிய கோட்டீஸ்வரர்களைக் கூட இந்தியா உலகிற்கு அளித்துள்ளது எப்படி? கோடிக்கணக்கான இந்திய உழைப்பாளிகளின் இரத்தமும் - சதையும் உறிஞ்சப்பட்டு பெரு முதலாளிகளும் - பன்னாட்டு முதலாளிகளும் இரத்தம் குடிக்கும் அட்டைகளாய் உருமாறியுள்ளனர். எட்டு மணி நேர வேலைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான உழைப்பாளி மக்களின் தியாகம் உலகமயம் என்ற பெயரில் கண்ணெதிரே பறிக்கப்பட்டு வருவதை காண்கிறோம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இது வேக - வேகமாக அமலாகி வருகிறது. இந்த நோய் மற்ற தொழில்களையும் வேகமாக பற்றி வருகிறது.
மேலும் உலகமயத்தின் நவீன முகம் தொழிலாளர் உரிமை பறிப்பு முகமாகவும், ஜனநாயக உரிமை பறிப்பு முகமாகவும், தொழிற்சங்க உரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிப்பு முகமாகவும் மாறியுள்ளது. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய உழைப்பாளி மக்களின் அடித்தட்டு மக்களாகவும் - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களாகவும் உள்ள தலித் மக்களின் வாழ்நிலை அவலங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீண்டாமை கொடுமைகளுக்கு நாள்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பலியாவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய அவலங்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொள்வது இம் மேதினத்தின் கடமையாக முன்னுள்ளது.
தமிழகத்தில், அதுவும் சென்னை தலைநகரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக தொழிலாளர்களுக்காக சங்கம் வைக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நிர்வாகமும் - ஆளும் வர்க்கமும் - காவல்துறையும் முக்கூட்டு நடத்திக் கொண்டு தொழிலாளர் உரிமையை முற்றிலுமாக காலில் போட்டு நசுக்கி வருகிறது.
ஏப்ரல் 29 அன்று தொழிலாளர்கள் ஏற்றிய சி.ஐ.டி.யூ. கொடியையும், கொடிக்கம்பத்தையும் நிர்வாகமும் - போலீஸ் கூட்டாளிகளும் சேர்ந்துக் கொண்டு இரவோடு இரவாக அடித்து உடைத்துள்ளனர். இதனை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தொழிலாளர்களின் புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. இத்தகைய முக்கூட்டு ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து மறியல் செய்த தொழிலாளர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். நாளைய தினம் மே தினத்திற்கு நாங்கள்தான் அரசு விடுமுறை அளித்தோம் என்று பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க. அரசு எப்படி தொழிலாளர் உரிமைகளுக்காக விழுந்து விழுந்து பாடுபடுகிறது என்பதற்கு ஹூண்டாய் சம்பவமே சாட்சியாய் விளங்குகிறது.
உலகமய அவலங்களுக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்! ஏகாதிபத்திய - உலகமய கொள்கைகளை வீழ்த்துவோம்! மே தினத்தில் சபதமேற்போம்!

April 29, 2008

இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!

காத்மாண்டு: இந்தியாவின் உதவியில்லாமல், நேபாளத்தில் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை நேபாள மாவோயிஸ்டு கட்சி தெளிவாக புரிந்து கொண்டி ருப்பதாக அதன் தலைவர் பிரசந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு:
நேபாளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நேபாள அரசியல் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இணக்கத்தை ஏற்படுத்திய திலும், ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கான சூழ்நி லையை ஏற்படுத்தியதிலும் இந்தியா சிறப்பான பங்க ளிப்பை செலுத்தியுள்ளது. இருந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்களும், நேபாள மாவோயிஸ்டுகளும் இன் னும்கூட ஒருவரையருவர் சந்தேகத்துடனேயே பார்க்கின் றனர் என்ற கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?
நேபாளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற் றத்திற்கு இந்தியாவின் பங்க ளிப்பு ஏராளம். குறிப்பாக எங்களுக்கும், நேபாளத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் இடையே 12 அம்ச உடன் படிக்கை ஏற்பட 2005ம் ஆண் டில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளே காரணம். இந்தி யாவின் ஆதரவும், முயற்சியும் இல்லாவிட்டால் அத்தகைய உடன்பாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை எனலாம். அதிலிருந்து தற்போது வரை இந்தியா - நேபாளம் இடையேயான உறவு குறிப் பிடத்தக்க வளர்ச்சியை எட்டி யுள்ளது. குறிப்பாக மாவோயி ஸ்டுகளாகிய எங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே யான உறவில் பெரும் வளர் ச்சி ஏற்பட்டுள்ளது. நேபா ளத்தில் பொதுத்தேர்தலை நடத்தாமல் அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்த முடி யாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியு றுத்தி வந்தது. எனவே தேர் தல் மூலம் நேபாளத்தில் அமைதியை முன்னெடுத்துச் செல்ல இந்தியா மேற் கொண்ட முயற்சிகள் அனை வருக்கும் தெரிந்ததே. இதன் மூலம் இருதரப்பு உறவும் பெருமளவு அதிகரித்துள்ளது. ஆனாலும் தேர்தலுக்கு முன்புவரைகூட எங்கள் மீதான சந்தேகம் இந்திய அர சுக்கு தீரவில்லை. எங்கள் செயல்பாடுகளை மிகவும் ஐயத்துடனேயே இந்தியா பார்த்தது. நாங்கள் தேர்தலில் பங்கேற்போம் என்பதை இந் தியா நம்பவில்லை. தேர்த லுக்கு முன்பு இந்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், “நேபாள மாவோயிஸ்டுகளை எங்களால் நம்பமுடியவில்லை. நேபாள காங்கிரஸ் கட்சியை மடடுமே நம்புகிறோம்” என கூறியிருந்தது. இந்திய அரசின் இந்த அறிக்கை எங்களை மிகவும் கவலையடையச் செய்தது. எங்கள் மீதான இந்த நீண்ட கால சந்தேகம், தேர்தல் முடிவு களை பாதிக்குமோ என நாங் கள் பெரிதும் கவலைப் பட்டோம். எனவேதான் இந் திய அரசு அறிக்கை குறித்து நான் உடனடியாக பதில் அறிக்கை வெளியிட்டேன். தேர்தல் நேரத்தில் இவ்வாறு இந்திய அரசு அறிக்கை வெளியிடுவது சரியல்ல என அந்த அறிக்கையில் கூறியிருந் தேன். எனினும் தற்போதைய தேர்தல், அதன் மூலம் கிடை த்த முடிவுகள் ஆகியவற்றின் மூலம் இந்த சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தாகி விட்டது. மேலும் புதிய சூழ்நி லைக்கேற்ப, புதிய ஒற்றுமை மற்றும் புதிய ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு நாம் தயாராக வேண்டும். ஏனெனில் தற்போ தைய சூழல் தலைகீழாக மாறி யுள்ளது என நான் நம்புகி றேன். ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் எவ்வித நிபந்தையு மின்றி சேர்ந்து பணியாற்று வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை இந்திய அரசும் தெளிவுபடுத்தி யுள்ளது.
எனவே இந்திய - நேபாள இருதரப்பு உறவில் தற்போது புதிய திருப்புமுனை ஏற்பட் டுள்ளது எனக் கூறலாமா?
ஆம். அதுதான் எனது நம் பிக்கை. தொடக்கத்தில் ‘மன்ன ராட்சி துணையுடன் பல கட்சி ஜனநாயகம்’ என்பதே நேபாளம் பற்றிய இந்தியா வின் கொள்கையாக இருந்தது. ஆனால் மன்னராட்சி முறை தான் நேபாளத்தின் வளர்ச் சிக்கு மிகப்பெரும் தடை கல் என்பதை நாங்கள் நீண்ட காலமாகவே கூறி வருகிறோம். மேலும் மன்னராட்சிக்கு ஆதரவான கொள்கைகளை இந்தியா கைவிட்டு, நேபாளத் தில் மக்களாட்சி அமைய ஆத ரவளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தோம். எனி னும் இந்திய அரசு தலை மையில் நேபாள கட்சிகளுக் கிடையே நடைபெற்ற இழு பறியான விவாதத்துக்குப் பின் ஒரு முடிவு ஏற்பட்டது. நேபா ளத்தில் எத்தகைய ஆட்சி வேண்டும் என்பதை நேபாள நாட்டு மக்கள் முடிவு செய் யட்டும். குடியரசு ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்தா லும்கூட அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவு. இந்திய அரசின் கொள்கை யில் ஏற்பட்ட இந்த மாற்ற த்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றமாக நாங்கள் கருதுகி றோம். அதேபோல் அப்போது ஏற்பட்ட 12 அம்ச உடன் படிக்கையால் மாவோயிஸ்டு களான எங்களது அணுகு முறையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டது. அப்போது முதல் தேர்தல் வரை ஏற்பட்ட பற்பல முன் னேற்றங்களால் தற்போது நேபாளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட் டுள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். ஏனெனில் இந்திய, நேபாளத்துக்கு இடையேயான உறவு என்பது கலாச்சார ரீதி யாக, வரலாற்று ரீதியாக, பூகோள ரீதியாக மிகவும் நெருக்கமானது. மேலும் தற் போது இந்தியாவில் மிக வேக மான வளர்ச்சி ஏற்பட்டு வரு கிறது. இந்நேரத்தில் இந்தியா வின் ஆதரவு, உதவி, ஒத்து ழைப்பின்றி நேபாளத்தில் நிலைத்தன்மையையும், வளர்ச் சியையும் ஏற்படுத்திவிட முடி யாது என்பதே உண்மை. எதார்த்த நிலையோடு செயல் படும் எந்த தலைவரும், அமைப்பும் இந்தக் கருத்தை நிராகரிக்க முடியாது. நான் தற்போது மேலும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், நேபாளத்தில் அரசியல் நிலைத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்பட வேண் டும் என்பது மட்டுமே இந்திய தலைவர்கள் மற்றும் இந்திய மக்களின் பிரதான எண்ண மாக இருந்து வந்தது. ஆனால் அத்தகைய அமைதியான, நிலைத்தன்மை மிக்க, வளர்ச்சி யான நேபாளம் உருவாக வேண்டுமானால் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைப் போன்ற புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டியதன் அவசியத்தை இப்போது அவர்கள் உணர்ந் திருக்கிறார்கள். எனவே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து மாற்றத்தின் மூலம் நம் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் நம்புகிறேன். இந்தியா - நேபாளம் இடையேயான 1950ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறி வந்தீர்கள். அந்த உடன் படிக்கையில் எத்தகைய மாற் றம் வேண்டும் என விரும்பு கிறீர்கள்? 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் உள் ளோம். எனவே இன்றைய சூழலுக்கு ஏற்ப உடன்பாடு ஏற்படுவது அவசியம். எனவே இந்தியா-நேபாளம் இடையே புதிய உடன்பாடு ஏற்படுவது நல்லது என நாங்கள் கருதுகி றோம். அவ்வாறு விரும்பு வதன் அடிப்படை என்ன வென்றால், புதிய சூழலின் அடிப்படையில் நம் இரு நாடு களுக்கும் இடையே ஒத்து ழைப்பையும், ஒற்றுமையையும் அதிகரிக்கும் வகையில் உடன் பாடு உருவாக வேண்டும் என் பதே ஆகும். 12 அம்ச உடன் படிக்கை ஏற்பட்டது முதல், தேர்தல் முடிவுகள் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் உடன்பாடு அமைய வேண்டும். அது பற்றி இரு தரப்பினரும் அமர்ந்து பேசி தீவிரமாக விவாதித்து முடிவுக்கு வர வேண்டும்.
முன்னர் 1996ம் ஆண்டில் உங்கள் கட்சி 40 அம்ச திட்டத்தை முன்னிறுத்தி செயல்பட்டது. இந்தியா - நேபாளம் இடையே திறந்தவெளி எல்லையை கூட மூட வேண்டும் என கூறியிருந்தீர்கள். அவ்வாறு செய்தால் பிழைப்பு தேடி இந்தியா வரும் லட்சக்கணக் கான நேபாளியர்களை தடுத்து நிறுத்துவது போல் ஆகாதா?
எங்கள் தேர்தல் அறிக்கையில் இந் தியா - நேபாள எல்லையை மூடுவது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. எல்லை யை முழுவதும் மூட வேண் டும் என்பது எங்கள் நோக் கமல்ல. ஆனால் குற்றச்செயல் களை தடுக்கும் வகையில் எல்லையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.
இந்திய திரைப்படங்க ளுக்கு நேபாளத்தில் தடை விதிக்க வேண்டும் என்ற 1996ம் ஆண்டின் உங்கள் கோரிக்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
தற்போது சூழ்நிலை மாறி யுள்ளது. தற்போதைய புதிய மாற்றங்களுக்கு ஏற்ப செயல் படவே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளையும் சமதூரத்தில் வைத்து உறவினைப் பராமரிப் போம் என்ற உங்கள் அறிவிப்பு பற்றி இந்தியாவில் சிலர் எழுப்பியுள்ள ஐயம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளில் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாட்டு டன் கூட்டணி சேர்வதில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனை தெளிவுபடுத்தவே அவ்வாறு கூறினோம். மேலும் இந்தியாவுடன் எங்களுக் குள்ள கலாச்சார, வரலாற்று, பூகோள உறவுக்கும், சீனா வுடன் உள்ள உறவுக்கும் அடிப்படையில் பல வித்தியா சங்கள் உள்ளன. இந்தியாவுக் கும் நேபாளத்துக்கும் இடை யே திறந்தவெளி எல்லைகள் உள்ளதுபோல, சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே திறந்தவெளி எல்லைகள் இல்லை. எனவே இந்தியா, சீனா ஆகிய இரு நாடுக ளோடும் எங்களுக்குள்ள தொடர்புகளில் பல வேறு பாடுகள் உள்ளன. ஆனால் வெளியுறவு கொள்கைகளில் இருவரையும் சமமாக பாவிப் பது என்பதையே நாங்கள் அவ்வாறு கூறினோம்.
இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ராணுவத் துக்கு நேபாள கூர்காக்களை தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளீர்களே?
ஆமாம். நேபாளியர்கள் எந்த நாட்டு ராணுவத்துக் காகவும் பணியாற்றக் கூடாது. ஆனால் மிகவும் சிக்கலான இந்த பிரச்சனைக்கு நாங்கள் மட்டுமே தீர்வு காண முடி யாது இங்கு அமையப்போ வது கூட்டணி ஆட்சி. எனவே கூட்டணியின் பிற கட்சிக ளுடனும் கலந்தாலோ சித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
இந்திய உளவு அமைப்பு `ரா’ வின் முன்னாள் தலைவர் பி.கே. ஹோர்மிஸ் தாரகான் எழுதியுள்ள கட்டுரையன் றில், நேபாள மாவோயிஸ்டு களின் வெற்றி மூலம் இந்திய மாவோயிஸ்டுகளும் ஊக்கம் பெறுவார்கள். இதனால் அவர்களும் ஜனநாயக அரசிய லுக்கு திரும்புவார்கள் என கூறியுள்ளார். இந்நிலை யில் இந்திய மாவோயிஸ்டுக ளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
நேபாள மக்களின் உணர் வுகளை மதிக்கும் வகையிலும், அவர்களின் நம்பிக்கையை பெறும் விதத்திலும் நாங்கள் செயல்பட்டோம். அதனால் வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற நாட்டு மாவோயிஸ்டு கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான உரிமை எங்களுக்கு இல்லை. எனினும் இந்திய மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகளுக்கும் நாங்கள் சில செய்திகளை கூற விரும்புகிறோம்.நாங்கள் எவ்வாறு துப்பாக் கிக் குண்டுகளிலிருந்து வாக் குச் சீட்டுகளுக்கு மாறினோம் என்பதை, நேபாள மக்களின் இதயங்களை நாங்கள் எவ் வாறு வென்றெடுத்தோம் என்பதை, நேபாளத்தின் அரசாங்கத்துக்கே தலைமை வகிக்கும் இடத்துக்கு எவ் வாறு வந்தடைந்தோம் என் பதை, நாட்டின் புதிய அரசி யல் சட்டத்தையே எழுதக் கூடிய அதிகாரத்தை எவ்வாறு பெற்றோம் என்பதை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.எங்களது இந்த வெற்றி குறித்து பரவலான விவாதம் நடத்தப்பட வேண்டும். இத னால் மாவோயிஸ்ட் இயக் கங்களின் செயல்பாடுகளில் பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுத்த முடியும் என கருது கிறோம். உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நாங்களும் மாறிக்கொண்டோம்.ஆனால் எங்கள் கொள்கையின் அடிப் படையை நாங்கள் சிறிதும் இழக்கவில்லை. மக்கள் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலும் கூட நேபாளத் தில் பல கட்சி ஆட்சி முறை யே சிறந்தது என்பதை நாங் கள் உறுதியாக நம்பினோம். ஜனநாயகப் புரட்சி தளத்தில் மட்டுமல்ல, சோசலிச புரட்சி களத்தில் கூட பல கட்சி ஆட்சி முறையால்தான் சிறந்த நாட்டையும், மிகச்சிறந்த சமுதாயத்தையும் கட்டமைக்க முடியும் என நம்புகிறோம். 20ம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் இதுவே. எனவே இந்திய மாவோயிஸ்ட் தலைவர்களும், தொண்டர்களும் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். அந்த பாதையானது, மக்களுக்கான பாதையாக, மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பாதையாக இருப்பது மிகவும் அவசியம்.
Thanks: Janasakthi & Hindu

April 25, 2008

ம.க.இ.க. காலனிய சோசலிசமும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை (CPI-ML [SOC]) நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தனது கும்பலை திருப்திப்படுத்துவதற்காக பாசிச ஹிட்லரை மிஞ்சும் அளவிற்கு கோயபல்ஸ் பாணியில் சி.பி.எம்.க்கு எதிராக தனது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது. குறிப்பாக தாங்களே இந்தியாவில் சோசலிசத்தை கொண்டுவரப் போகிறோம் என்று குத்தாட்டம் போடுகிறது.
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தற்போதைய கட்டம் சோசலிசம் அல்ல என்று தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததை தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கப்போகிறவனுக்கு கிடைத்த சிறு மரக்கட்டையைப் போன்று கெட்டியாக பற்றிக் கொண்டது ம.க.இ.க. மறைமுகத் தலைமை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டதாக ஓலமிடுகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ மீடியாக்கள் இந்திய உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சி.பி.எம்.க்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதற்கும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டிக் கொள்வதில் விந்தையேதும் இல்லை!

இருப்பினும் ம.க.இ.க. மறைமுகத் தலைமையின் சோசலிசத் திட்டம்தான் என்ன? என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அதை கொஞ்சம் இங்கே பார்ப்போம். எஸ்.ஓ.சி. கட்சித் திட்டம் இந்தியாவில் அவர்கள் மேற்கொள்ளப் போவதாக கூறும் புரட்சிக்கான திட்டம் குறித்து 46வது பிரிவு கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.

"இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டம் அரை நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய சமுதாயத்தை ஒழித்து, சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கு இடைப்பட்ட, மாறிக் கொண்டிருக்கும் ஒரு கட்டமாகும். அதாவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் கட்டமாகும். புதிய ஜனநாயக புரட்சியானது சோசலிசப் புரட்சிக்கான இன்றியமையாத முன் தயாரிப்பாகும். சோசலிசப் புரட்சியானது புதிய ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க இயலாத பின்விளைவாகும். புதிய ஜனநாயகப் புரட்சியை முதலில் நிறைவேற்றுவதின் மூலம் மட்டுமே நமது நாடு ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டத்திற்கு முன்னேற முடியும். "

மேற்கண்ட நிர்ணயிப்பின் மூலம் எஸ்.ஓ.சி. கும்பல் செய்யக்கூடிய புரட்சி எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது, அரை அடிமை நாடாக இருக்கக்கூடிய இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது. மேலும் அரை நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுதலை கொடுப்பது! இதைதான் இவர்கள் புதிய ஜனநாயக புரட்சி என்று சொல்லுகின்றனர். இதன் மூலம் இவர்கள் வெப்படையாக சொல்லுவது என்ன? இவர்கள் செய்யப்போவது சோசலிசப் புரட்சியல்ல என்பதுதானே! அப்புறம் எப்படி இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டது என்று கோயபல்ஸ் போன்று கதைப்பார்கள்! இதனை ஏகாதிபத்திய ஆதரவு சேவை என்று அழைக்காமல் எப்படி அழைப்பது! அல்லது மார்க்சியத்தை திரித்த இந்த திரிபுவாதிகள் தற்போது அவர்களது திட்டத்தையும் கூட திரிக்கத் துணிந்து விட்டனர் என்றுதானே அர்த்தம்.

இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் கூற வருவது என்னத் தெரியுமா? தற்போதைய ஆளும் வர்க்கமான பெரு முதலாளித்துவத்தை மேலும் பெருக்க வைப்பதற்கான புரட்சியையே இவர்கள் நடத்தப் போகிறார்கள். அதாவது முழுமையான முதலாளித்துவ புரட்சி. ஏனெனில் இவர்களது நிர்ணயிப்பின்படி தற்போது அரை காலனியும் - அரை நிலப்பிரபுவுமே ஆளும் வர்க்கமாக இருப்பதாக சித்தரிக்கின்றனர். எனவே இந்த பிற்போக்கு வர்க்கத்தை வீழ்த்துவதன் மூலம் முழுமையான முதலாளித்துவத்தையே இவர்கள் கட்டத் துடித்துக் கொள்கிறார்கள். இதுதான் இவர்களது மறைமுக சோசலிச முகம்!

மொத்தத்தில் இந்த ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் திரிபுவாதத்தையே தனது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது என்ற முடிவுக்கு வரலாம். இது கிடக்கட்டும்! இவர்கள் சோசலிசத்தை எப்போது கொண்டு வருவார்கள் என்பதற்கான விளக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள் அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.

ம.க.இ.க. மறைமுக கட்சித் திட்டம் பிரிவு 45-இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதையும் ஆழமாக படியுங்கள்

"...புதிய ஜனநாயகப் புரட்சி என்ற முதற்கட்டம் முழுமைபெற்ற உடனேயே இந்தியப் புரட்சியானது எத்தகைய இடைவெளியுமின்றி சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு செல்கிறது. சோசலிசப் புரட்சி எவ்வளவு துரிதமாக முழுமை பெறும் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், நமது பலத்தின் அளவையும், உணர்வு பூர்வமாக, அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமைந்த இந்திய உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட அமைப்பின் பலத்தையும், உலக சோசலிச இயக்கத்தின் பலத்தையும் பொறுத்திருக்கும். கட்சி ஒரு தங்கு தடையற்ற புரட்சிக்காக நிற்கிறது. நமது கட்சியின் இறுதி நோக்கம் முதலாவதாக ஒரு சோசலிச சமுதாயத்தையும் பின்னர் ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தையும் அதாவது வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற, போர்களற்ற சமுதாயத்தையும் நிறுவுவதாகும். "

அதவாது இந்தியாவில் இவர்கள் கூறும் திட்டத்தின் அடிப்படையில் சோசலிசம் எப்போது வரும் என்றால், 1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.2. இந்திய உழைக்கும் மக்களிடையே ஐக்கியப்பட்ட பலம் அதிகரிக்க வேண்டும்.3. உலக சோசலிச இயக்கம் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.இந்த மூன்று அம்சங்களும் இணைந்திருந்தால்தான் சோசலிச புரட்சி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். இவை எப்போது சாத்தியம்! அதாவது, இன்றைக்கு உலகளவில் முன்னுக்கு வந்திருக்கும் முரண்பாடுகளில் பிரதானமாக இருப்பது சோசலிசத்திற்கும் - ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடே. எனவே ஏகாதிபத்தியத்தை பின்னுக்குத் தள்ளும் வரையில் இந்த முரண்பாடு நீடித்துக் கொண்டே இருக்கும். மேலும் இவர்களது வாதப்படி ரஷ்யா (தற்போது இல்லை) அது சமூக ஏகாதிபத்தியமாக மாறி விட்டது. சீனாவை இவர்கள் முழு சோசலிச நாடாக ஏற்கவில்லை. அப்புறம் மிச்சம் மீதி இருப்பத குட்டி குட்டி நாடுகளாக கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் போன்றவைகளே... இந்த நிலையில் உலக சோசலிச பலம் எவ்வாறு அதிகரிக்கும் என்று தெரியவில்லை? அல்லது இந்தியாவிற்கு முன்னால் உலகில் வேறு பல நாடுகளில் சோசலிசம் வரும் என்ற கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே இந்த ம.க.இ.க. வின் சோசலிசம் என்பது வெறும் கற்பனாவாத சோசலிசமே! என்ற முடிவுக்கு வரலாம்.

உண்மை இவ்வாறிருக்க, சி.பி.எம்.க்கு எதிரான இவர்களது கோபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் இவர்கள் பெரும் திருப்தி அடைவதாக மட்டுமே தெரிகிறது. நாம் இவர்களது கட்சித் திட்டம் தேய்ந்து போன - நொண்டிக் குதிரை என்று விமர்சித்தால்... நந்திகிராம் - சிங்கூர் என்று பாட்டு பாடுகிறார்கள்.

இது குறித்து ம.க.இ.க. சிந்தனைப் புலி நண்பர் அசுரன் எழுதியுள்ளதை கவனியுங்கள்.

நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

நந்திகிராம் - சிங்கூர் குறித்து ஏற்கனவே விரிவான பதிவுகள் சந்திப்பில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து எங்களது நிலைபாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், மூழ்கப் போகும் ஓட்டைப்படகில் பயணம் செய்யும் ம.க.இ.க. இன்னமும் அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் சுருக்கமாக இரண்டு - மூன்று கேள்விகளை மட்டும் எழுப்ப விழைகிறேன்.

ம.க.இ.க. மறைமுகத் திட்டப்படி இந்தியா ஒரு அரை காலனி நாடு, அதுவும் நான்கு நாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு. இந்த காலனியாதிக்கத்தை தூக்கியெறிவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமைப்புதான் ம.க.இ.க.! இவர்களது வாதப்படியே வைத்துக் கொண்டால், ஒரு காலனி நாட்டிற்குள் - அதுவும் மாநிலத்திற்குள் சோசலிசம் இருக்க முடியுமா? மேற்குவங்கம், கேரளா, திரிபுரா இந்த மூன்று மாநிலங்களில் ஏதோ சி.பி.எம். தலைமையில் சோசலிச ஆட்சி நடைபெறுவதாக அறிவித்தது போல் ஒப்பாரி வைப்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட திட்டத்திற்கு எதிர்வினையாக அமையவில்லையா?

மேற்குவங்கத்தில் 25 ஆண்டு காலம் முதல்வர் பொறுப்பில் இருந்த தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான். எந்தவிதமான நிதியதிகாரமோ அல்லது தொழில் வளர்ச்சியை சுயேச்சையாக ஏற்படுத்துவதற்கான அதிகாரமே இல்லாத இந்திய அரசின் முதலாளித்துவ அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகளே மாநிலங்கள். இந்த மாநில அரசில் பங்கேற்பது என்பது முதலாளித்துவ திட்டங்களுக்கு உட்பட்டு மிகச் சிறிய நன்மைகளை மட்டுமே இந்த மக்களுக்கு செய்ய முடியும்.

அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி மேற்குவங்கம், கேரளா, திரிபுராவில் நாட்டிற்கே முன்னுதாரணமாக 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்கள் பயனடையும் விதத்தில் நில விநியோகம் செய்து பெரும் பகுதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது.அதேபோல் பஞ்சாயத்தில் 50 சதவிகித நிதியை ஒதுக்கி - அதிக அதிகாரங்களை வழங்கியதோடு, தலித் மற்றும் பெண்களின் அரசியல் ரீதியான பங்கேற்பை ஊக்குவித்துள்ளது.கல்வி ரீதியாகவும், சிறு தொழில்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கவும் நாட்டிலேயே முன்னணியில் நிற்கிறது.இந்தப் வரிசையில் தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாகவே சிங்கூர் - நந்திகிராம் திட்டமிடல் முன்னுக்கு வந்தது. படித்து முன்னேறியுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகளை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மாநில அரசு என்ற முறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த மாக்கான்கள்... இல்லை... இல்லை இவர்கள் கடப்பாரையோடும், கலப்பையோடும்தான் இருக்க வேண்டும் என்று உறுமுகிறார்கள். இப்படித்தான் இவர்கள் உற்பத்தி சக்தியை வளர்த்தெடுப்பார்கள் போலும்...

எனவே, ம.க.இ.க. தலைமை இந்திய அரசைப் பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கோளாறு... முதலாளித்துவ சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்பதில் போய் முடிந்துள்ளது.

இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிறைவேற்ற உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சியில், ஏகாபத்தியத்துடன் உறவு கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்புரக்களை ஒழிப்பதுதான் முதற் கடமையாக கொண்டுள்ளது. இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது கட்டத்தில் இந்தியா நின்றுள்ளது. மூன்றாவது கட்டத்தில்தான் சோசலிசத்தை நோக்கிய பயணம் துவங்கும். இறுதிக் கட்டமே கம்யூனிசம்.

இந்த உண்மையின் அடிப்படையிலேயே தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவும் தங்களது மாநிலத்தில் தனியார் மூலதனத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தற்போதைய கட்டம் சோசலிசத்திற்கானது அல்ல என்று தெளிவாக உரைத்தார்கள். இதனை மாக்கான்கள் திரித்து தனது ஏகாதிபத்திய சேவையை நன்றாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கம் ஊளையிடுபவர்கள் பின்னால் ஒரு போதும் இருந்தது கிடையாது!
ம.க.இ.க. தொடர்பான முந்தைய விவாதங்களின் பட்டியல்

April 23, 2008

ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்!


ம.க.இ.க.வின் மறைமுகத் தலைமையான (மாநில ஒருங்கிணைப்புக்குழு - இந்திய பொதுவுடைமை கட்சி - மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியென அழைத்துக் கொண்டு திரிபுவாதத்தையும், சீர்குலைவுவாதத்தையுமே முதலாக கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக செயலாற்றிக் கொண்டு வருவதை முன்பதிவுகளில் பார்த்தோம்.

இந்திய அரசியலையும் - அதன் வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே, அதன் ஒட்டுமொத்த நடைமுறை தந்திரம் தொடர்பான நிர்ணயிப்புகளுக்கும் அடிப்படைத் தவறாக அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரத்தை போலி சுதந்திரமாக பார்ப்பதும், இன்னமும் இந்தியா அரை காலனி - நான்கு நாட்டு அடிமை சேவகம் - மறு காலனி என்று தொடர்ந்து காலனி மோகத்தில் குளிர் காய்வதால் இந்திய பாராளுமன்ற அரசியலிருந்து துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதன் தத்துவ ஊனம் அடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து “பாராளுமன்றம் பன்றித் தொழுவம்”, “போலி தேர்தல்”, “போலி பாராளுமன்றம்”, “ஓட்டுப் பொறுக்கிகள்” என்று அடுக்கடுக்காக வாய்ஜாலம் பேசி தேர்தல் அரசியலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இந்திய மக்களின் விரோதிகள் நாங்கள் மட்டுமே புரட்சிக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை பம்மாத்து செய்வதோடு அதற்கு மாற்றாக ஆயுதப் புரட்சி என்று கூறி அவமானப்படுத்துகிறது.

இவர்களது பாராளுமன்ற அரசியல் குறித் குறித்து எஸ்.ஓ.சி. திட்டம் 26வது பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“இந்தியப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் தங்களின் கொடுங்கோன்மைச் சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும் பொருட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் முகத்திரையைப் பயன்படுத்துகின்றன. சாராம்சத்தில் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் விசுவாசமான ஊழியர்களான திரிபுவாதிகளும், நவீன திரிபுவாதிகளும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் அதிகாரமற்ற அமைப்பை மக்களின் விருப்பங்களுக்கான கருவி என்று ஒப்பனை செய்கிறார்கள். சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....”

இவ்வாறு கூறுவதன் மூலம் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து தன்னை மிக உயர்வுகாக காட்டிக் கொள்ள முனைகிறது இந்த தத்துவ குருட்டுப் பூனை. மேலும் திரிபுவாதிகள் என்று இடதுசாரிகளை குற்றம் சுமத்துவது சாட்சாத் இவர்களுக்கே மிகச் சரியாக பொருந்துகிறது. குறிப்பாக, இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை! சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை. இவர்களது கற்பனை கோட்டைக்கு அளவில்லாமல் போனதன் விளைவும் தனது அணியினை திருப்திப்படுத்துவதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு என்று கூறி திண்ணை வேதம் ஓதுகிறது இந்த பார்ப்பனீயத் தலைமை!

பாராளுமன்ற அரசியல் குறித்து மாமேதை லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்! விஞ்ஞானப் பூர்வ கம்யூனிசத்திற்கு பாதை அமைத்தவர் தோழர் லெனின். ரஷ்ய மற்றும் உலக அனுபவங்களின் மூலம் கம்யூனிச தத்துவத்திற்கு பாதையமைத்த லெனின் “இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” என்ற புத்தகத்தில் - முதலாளித்துவ பாராளுமன்றங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்ற துணைத் தலைப்போடு இது குறித்து விரிவாக ஆராய்கிறார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:

“முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்”

தோழர் லெனின் அவர்களின் மேற்கண்ட நிலைபாடு ம.க.இ.க. மறைமுகத் தலைமைக்கு மட்டும் பொருந்தாது! ஏனெனில் இவர்கள் இந்தியப் புரட்சியை வெறும் கற்பனையில் மட்டும் பார்ப்பதால் - தங்களது கற்பனை வளத்தின் மூலமே இந்திய அரசை வெகு சீக்கிரத்தில் தூக்கியெறியும் அசுர பலத்தோடு இவர்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு, வெகுஜனங்களின் எளிய உணர்வுகளை அரக்கத்தனமான காலில் போட்டு மதித்து விட்டு, போலி பாராளுமன்றம் என்று புரளி பேசி, மக்களின் அரசியல் உணர்வுகளை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியும் - திசை திருப்பும் செயலினைத்தான் இவர்களிடம் பார்க்க முடிகிறது.

மேலும் இதுபோன்ற வாய்ச்சவடால் அமைப்புகள் குறித்து லெனின் கீழ்வருமாறு உரைக்கிறார்:

“பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.”

அதாவது, ஜெர்மானிய நிலைமையை முன்வைத்து அவரது வாதம் இங்கே கட்டமைக்கப்பட்டாலும், தற்போதைய இந்திய நிலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும். இந்தியாவில் உள்ள 110 கோடி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் கல்வியறிவு பெறாதோராய், மிகவும் வறிய நிலையில் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையில் இருப்பதைத்தான் காண்கிறோம். எனவே இத்தயை எளிய மக்களின் அரசியல் உணர்வு மட்டம் தனிபர் ஹீரோயிசம் சார்ந்ததாகவே இருக்கும்.

எனவே இத்தகைய எளிய மக்களிடம் வெளிப்படையாக செயலாற்றி அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு மாறாக, ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.

“ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது பிழையை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம் தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சியல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”

மேற்கண்ட நிர்ணயிப்பின்படி நாம் தொடர்ந்த வலியுறுத்துவது போல் ம.க.இ.க. நக்சலிச கும்பல் ஒரு குழுவேயன்றி பாட்டாளி வர்க்க கட்சியல்ல என்பது நிருபனமாகிறது.

மேலும் தோழர் லெனின் கூறுவதை கேளுங்கள்:

“வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் நீண்ட நெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கி விட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.”

ம.க.இ.க. குழுவினர் லெனினின் பிறந்த நாளுக்கு அவரது எண்ணங்களில் ஒருசிலவற்றை போட்டு விட்டு தங்களைப் புரட்சிகரமானவர்களாக நிலைநாட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவரது சிந்தனையை குழிதோண்டிப் புதைப்பதைத்தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கான புரட்சியை சீன பாணியைக் கொண்டு காப்பியடிக்க முற்படுகிறார்களே ஒழிய எதார்த்த அனுபவங்களை எந்த உரை கல்லிலும் பரிசீலிப்பதில்லை. இவர்களைப் போன்றே நக்சலிசம் பேசிய லிபரேசன் குழுவினர் தங்களது ஒட்டுமொத்த திட்டத்தையும் தற்போது தலைகீழாக மாற்றி விட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் இவர்களது கற்பனையில் மட்டும் இந்தியாவில் ஏதோ மாபெரும் புரட்சிகர எழுச்சி நிலவி வருவதாகவும் அதற்கு தடையாக மற்றவர்கள் இருப்பதாகவும் கணா கண்டுக் கொண்டிருக்கிறது.

ம.க.இ.க. தலைமை வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மையை காண்பதற்கு பதிலாக தங்களுக்குள் மட்டுமே அது உயர்வாக இருப்பதாக மதிப்பிடுவதே அதன் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது. மேலும் இவர்களது போலி பாராளுமன்ற வாதம் எப்படிப்பட்ட அயோக்கியத்தனமானது என்பதை லெனினின் வார்த்தைகள் மூலமே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

“பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, பாராளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகர” மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிக மிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிக மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகி விடுவதில்லை.”

மேலும் தோழர் லெனின் இது குறித்து விளக்கும் போது,

“நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள். ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளாலான சிறந்த பாராளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குப் பாராளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறு பிள்ளைத்தனமானதல்லவா?”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிலவும், ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து - மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மக்கள் பங்கேற்கும் நாடாளுமன்ற அரசியலிலும் பங்கேற்கிறது. அதற்காக நாடாளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி விடுவோம் என்று எங்கும் சி.பி.எம். கூறவில்லை. மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு, சில - பல விஷயங்களில் ஏழை - எளிய மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுத்தர முடியும் என்ற கடமையைத்தான் சி.பி.எம். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய அரசியல் பதவிக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையவில்லை! இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! இதையெல்லாம் வேண்டும் என்றே புறம் சொல்லி - தரம் தாழ்த்தும் குணம் படைத்த ம.க.இ.க. தலைமை தங்களது தொண்டர்களை தேர்தல் பாதைக்கு தள்ளி விட்டால் அவர்கள் முதலாளித்துவ கட்சிகளைப் போல் சீரழிந்து விடுவார்களோ என்ற சந்தேகப் பார்வைதான் விஞ்சுகிறது!

மேலும், முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக தேர்தலில் வெறும் சீட்டுக்காகவும், பெற்ற சீட்டுக்காக கோடிக்கணக்கில் தனிநபரே செலவழிக்கும் இழிவான முதலாளித்துவ செயலை சி.பி.எம். மேற்கொள்வதில்லை. எந்த இடத்திற்கு - யாரை கட்சி நிறுத்துகிறதோ அவர்களுக்கான தேர்தல் செலவு முழுவதையும் கட்சியே ஏற்கிறது. (மக்கள் பணம்) அவ்வாறு தேர்வு செய்யப்படும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முழுவதையும் கட்சியிடமே ஒப்படைத்து விட வேண்டும். அதுதான் இதுவரை நடந்துக் கொண்டிருக்கிறது. முழுநேர ஊழியர் முதல் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் வரை புதியதாக வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட கட்சியிடம் அனுமதி பெற்ற பிறகே கட்ட முடியும்! எனவே பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி சி.பி.எம். மீது சேறை அள்ளி வீசும் வாய்ஜாலத்தால் மட்டும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை புரட்சிகர சக்தியாக மாறி விட முடியாது! மாறாக அதன் அரசியல் நடைமுறைத் தந்திரம் ஏகாதிபத்திய சீரழிவிற்கும் - கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து பிரிக்கும் தந்திரத்திற்குமே வழிவகுக்கும். மொத்தத்தில் சீரழிந்த அரசியலுக்கு மொத்த குத்தகை எடுத்திருப்பவர்களே ம.க.இ.க. குழுவினர்.

மேலும் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் ஜார் காலத்தில் இருந்த படு பிற்போக்கான டூமாவில் சில நேரங்களில் புறக்கணித்தும் சில நேரங்களில் ஆதரித்தும் பணியாற்றி வந்தனர். இதற்கான அடிப்படையாக அமைந்தது. ஒரே காரணிதான். ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கம் புரட்சிகர எழுச்சி பெற்றிருக்கும் தருணத்தில் டூமாவை புறக்கணித்தது. மாறாக, புரட்சிகர தாகவும் சோர்வுற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்தியது. இத்தகைய எந்த அனுபவத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பது ம.க.இ.க.வின் இளம் பிள்ளை வாதத்தைத்தான் காட்டுகிறது!

தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது! நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது! என்று மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறியதற்கு மொத்தமாக பொருந்துபவர்கள் ம.க.இ.க. குழுவினரே!

April 22, 2008

இடி அல்லது இடிப்போம்...

ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதைகோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லைஇனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.
நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?
ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.
ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.
செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.
ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.
பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.
1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.
2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை
3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)
4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.
5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.
இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.
தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.
இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.
சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.
ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.
மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).
18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.
சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?
இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.
சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

Thanks : http://www.keetru.com/

Other Related Links

http://news.webindia123.com/news/articles/India/20080227/895128.html

http://www.hindu.com/2008/04/18/stories/2008041860891700.htm

http://pd.cpim.org/2008/0309_pd/03092008_tn.htm

April 21, 2008

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!

ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்ற பெயரில் உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே எஸ்.ஓ.சி.யின் திட்டம் உள்ளது.

(சி.பி.ஐ.-எம்-எல்) எஸ்.ஓ.சி.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "

"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "

அதாவது இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...

இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொடர்ந்த முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.

இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சியையும், ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடதுசாரி - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்டதைதான் இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.

ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.

இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!

இந்த வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?

".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "

தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.

மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!

நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.
ம.க.இ.க. தொடர்பான முந்தைய விவாதங்களின் பட்டியல்

April 19, 2008

அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை எஸ்.ஓ.சி. - யின் கட்சித் திட்டத்தை வாசிக்கும் எந்தக் குழந்தைக்கும் அதிலுள்ள ஏராளமான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் நகைப்பைத்தான் ஏற்படுத்தும். இந்தியாவை (மன்னிக்கவும் அவர்கள் இந்தியா என்ற ஒரு நாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை) நான்கு நாடுகளின் அரை அடிமையாக இருப்பதாக சித்தரித்து விட்டு பின்னர் அதற்கு பவுடர் பூசி, பொட்டு வைத்து, அழகுபார்த்து சீவி, சிங்காரித்து, கிரீடமெல்லாம் வைத்து அதனை அரியாசனத்தில் ஏற்றி வைத்து மகாராஜா பட்டம் சூட்டி அழகு பார்க்கின்றனர்.
அவர்களது கட்சித் திட்டத்தின் 26வது பாரா கீழ்க்கண்டவாறு கூறுகிறது. அதற்கு விளக்கமே தேவையில்லை! நீங்களே புரிந்து கொள்ள முடியும்!
"இந்திய அரசு நமது நாட்டின் பொருளாதாரத்தை இராணுவமயமாக்கியிருக்கிறது. படுவேகமாகப் போர்த் தயாரிப்பு செய்வதில், ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறது. தெற்கு ஆசியாவில் இந்தியாவைச் சுற்றிலுமுள்ள சிறு நாடுகளைப் பொருத்தவரை விரிவாக்கக் கொள்கையையும் பிராந்திய துணை வல்லசுக் கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. அவற்றைத் தனது சொந்தச் சார்பு நாடுகளாக அல்லது துணை நாடுகளாக மாற்றும் நோக்கத்துடன் அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. பிற்போக்கு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அந்நாட்டைத் துண்டாடியது. சிக்கிமை அபகரித்துக் கொண்டது. பூடானையும், நேபாளத்தையும், இலங்கையையும், வங்கதேசத்தையும் அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் நமது நாட்டைச் சுற்றிலுமுள்ள சிறிய ஆசிய நாடுகளின் சுதந்திரமும், பிரதேச ஒருமைப்பாடும் தொடர்ந்து இந்திய பிராந்திய விரிவாக்கக் கொள்கையின் அபாயத்தில் இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன....."
அன்பர்களே, நண்பர்களே இந்தியா ஒரு அரை அடிமை நாடு. அதுவும் நான்கு நாட்டு அடிமை நாடு. மேலும் இந்திய முதலாளிகள் முதுகெலும்பில்லாத பிச்சைக்கார முதலாளிகள் அதாவது தரகு அதிகார வர்க்க முதலாளிகள். சொந்த மூளை இல்லாதவர்கள். இப்படிப்பட்ட படு வீக்கான நோயாளியான இந்திய அரசு ஆசிய பிராந்தியத்தில் துணை வல்லரசாக செயல்படுகிறதாம்! அதாவது அடிமை மகாராஜா பட்டம் சூட்டியுள்ளது ம.க.இ.க. தலைமை. ஆஹா என்ன அரசியல் முதிர்ச்சி! அரசியல் நிலைபாடு.
இவர்கள் வாதப்படி எதிர்காலத்தில் இந்த சூரப்புலிகள் ஆட்சிக்கு வந்தால் சிக்கிமை கழற்றி விட்டு விடுவார்கள். அதை எந்த நாட்டிடம் தாரை வார்ப்பார்கள் என்பதுதான் புரியவில்லை. அல்லது நான்கு நாடுகளில் எது அதற்கு உரிமைக் கொண்டாடும் என்பதும் மர்மமாக உள்ளது. இல்லையென்றால் ம.க.இ.க. தலைமை ஒரு துணை கிரகமாக இருப்பது போன்று சிக்கிமை அந்தரத்தில் தொங்க விட்டு விடுவார்கள் போலும்.
இந்தியாவின் எல்லைப் புறங்களையே காப்பாற்ற முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கும் இந்தியா குட்டி நாடுகளையெல்லாம் ஆக்கிரமிக்கிறதாம்! அதை விட கொடுமை நேபாளத்தை இந்தியா அச்சுறுத்துகிறதாம்! தற்போது ஆட்சிப்பொறுப்பேற்கும் மாவோயிஸ்ட்டுகள் கூட இந்த நிலையைக் கேட்டால் கெக்கலிப்பார்கள். மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட கூறியிருப்பதென்ன இந்தியாவுடன் எங்களுக்கு பாரம்பரியமான உறவு உள்ளது. எனவே சீனாவை விட அதிகமான நெருக்கத்தை இந்தியாவுடன் வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இங்கே இருக்கக்கூடிய ம.க.இ.க. போலி நக்சலிசவாதிகள் போல் அவர் கருதியிருந்தால் இந்தியாவை குட்டி ஏகாதிபத்தியம் என்று விமர்சித்திருக்க மாட்டாரா?
அதைவிட கொடுமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்ததாம்! பிரச்சினையே இங்கே தலைகீழாக இருக்கும்போது இந்தியா ஆக்கிரமிக்கிறது என்று ம.க.இ.க. கூறுவது அதன் அரசியல் பழுத்த முதிர்ச்சியினையே வெளிப்படுத்துகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை உட்உட ஆசிய பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவது ஏகாதிபத்திய நாடுகளின் சதியே! கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீரை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனி நாடாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. இந்நிலையில் அது பாகிஸ்தானுக்கு கொம்பு சீவி விட்டு... இந்தியாவுக்கு எதிராகவும் - பொருளாதார ரீதியாக பலம் பெற்று வரும் சீனாவுக்கு எதிராகவும் பயன்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வலையில் இந்தியாவைம் தற்போது இழுப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்திய ஆட்சியாளர்களின் இந்த கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து இந்தியா மக்கள் இடதுசாரிகள் தலைமையில் வீரமுடன் எதிர்த்து வருவததால் அணுசக்தி திட்டம் ஈராக்கிற்கு படை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க இந்தியா ஒரு துணை வல்லரசாக - பேட்டை ரவுடியாக வலம் வருகிறதாம்!
அது சரி, இந்தியா ஒரு அரை காலனி நாடு என்றால், நான்கு நாட்டு அடிமை நாடு என்றால் பாகிஸ்தான் என்ன சுதந்திர நாடா? இது பற்றி ம.க.இ.க. நிலை என்ன?
இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆபத்து ஏற்படுகிறது என்று நாம் கூச்சல் எழுப்பினால் அய்யய்யோ இந்தியாவால் சுற்றியிருக்கும் குட்டி நாடுகளுக்கு எல்லாம் ஆபத்து என்று ஓலக் குரல் எழுப்புவது எந்த வர்க்கத்தின் நலனை காப்பதற்காக?
மேலும் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் எந்த தலைமையையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. அதாவது அனைவரும் இந்திய சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள். மேலும் ஏகாதிபத்திய அடி வருடிகள் யார்? இந்திய கம்யூனிஸ்ட் தலைமை உட்பட. அப்படியென்றால் இவர்கள் யாருடைய வாரிசுகள்! இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட - தியாகவும் புரிந்தவர்களின் தியாகத்தை நாங்களே உயர்த்திப் பிடிக்கிறோம் என்று டமாரம் அடிக்கும் இந்த அல்பவாதிகளின் கட்சித் திட்டம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது.
எனவே இவர்களுக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இவர்களது உண்மையான வர்க்க குணம் ஏகாதிபத்திய சீர்குலைவுவாத சேவை செய்வதே அதை உறக்க கத்தி வியாபாரம் செய்ய துணியும் தலைமையே ம.க.இ.க.

April 17, 2008

பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!

ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. - இ.பொ.க.-மா.லெ.) இந்திய சுதந்திரத்தை எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை விடுதலை செய்வதற்காக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - முஸ்லீம் லீக் மற்றும் நவஜவான் பாரத் சபா போன்ற பல்வேறு மிதவாத - தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து போராடி பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றியது. இதற்காக எண்ணற்ற இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்திய மண்ணிலும் - அயல்நாட்டிலும் தியாகம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்! இந்த சுதந்திரப்போராட்ட தியாகிகளின் கனவுகள் தற்போதைய இந்திய அரசில் நிறைவேறாமல் போயிருக்கலாம். இருப்பினும் இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விரட்டியடித்த பெருமை இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திய - மகத்தான தியாகங்களை செய்த இந்திய மக்களையேச் சாரும்.

இந்த தியாகங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தியுள்ளது ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. குருட்டு கும்பல். மேலும் அவர்களுக்கு குட்டி முதலாளித்துவவாதிகள் என்ற நாமகரணத்தையும் சூட்டியுள்ளது. ம.க.இ.க. திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுவதைப் பாருங்கள்

“நாட்டுப் பற்று என்னும் உள்ளுணர்வால் உந்தப்பட்ட புரட்சிகர அறிவுத்துறையினரும் குட்டி முதலாளிய இளைஞர்களும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் - அதாவது கொடுங்கோலர்களான ஆங்கிலேயே நிர்வாகிகளைத் தனித்தனியே அழித்தொழிப்பதின் மூலம் - வெறுக்கத்தக்க காலனிய ஆட்சிக்கு முடிவுகட்ட முனைந்தார்கள்.....” மேலும், “...நாட்டு விடுதலைக்குப் பரந்துபட்ட மக்களை அவர்கள் சார்ந்து நிற்கவுமில்லை..” தொடர்ந்து, “....இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நமது மக்கள் மதிப்பிட முடியாத படிப்பினைகளைப் பெற்றார்கள்... “

23 வயதில் தூக்குமேடைய ஏறிய பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், இன்னும் உத்தம்சிங், கொடிகாத்த குமரன், கல்பனாதத்.... போன்ற எண்ணற்ற இளைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு உட்பட பல்வேறு அரக்கக்கத்தனத்திற்கு அவர்கள் பாணியிலேயே விடைகொடுக்க முனைந்தனர். இது இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த வீரதீரமிக்க செயல்கள். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தனர் நமது தியாகிகள் குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து பாசிச ஜப்பான் உதவி உட்பட அனைத்தையும் நாடினார். இதற்காக அவரை பாசிஸ்ட் ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியுமா? இந்திய விடுதலைப் போரின் ஈட்டி முனையாக இளைஞர்களின் தியாகம் - இந்திய மக்களை வீறு கொண்டு எழச் செய்தது. இத்தகைய தியாகத்தை இவர்களது நாலாந்தர அரசியல் முடிவை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்று சித்தரித்து பின்லேடனுக்கு இணையாக காட்சிப்படுத்துவது இவர்களின் சீரழிந்த அரசியல் பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது.

மேலும் அந்த தியாகப்பூர்வமான இளைஞர்கள் பரந்துப்பட்ட மக்களை சார்ந்து நிற்க வில்லையாம்! இதிலிருந்து நமது மக்கள் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்று முடிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? நக்சலிசம் பேசும் இந்த திண்ணை வேதாந்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தியா முழுவதும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறு என்ன? மேலும் இவர்களது வெகுஜன அரசியல் நடவடிக்கை என்ன? வெட்டிப்பேச்சும் - வாய்ஜாலமுமே! அடுத்து இணையத்தில் குப்பை கொட்டுவது. நக்சலிசம் இன்றைய தினம் வர்க்கப்போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சாதாரண கூலி உழைப்பாளிகளையும் - தலித் மக்களையும் ஆள்காட்டிகள் என்ற பெயரால் கொன்றதைத் தவிர வேறு என்ன கிழித்தது! எத்தனை கிராமத்தை விடுவித்துள்ளது? தமிழகத்தில் எந்த கிராமத்தையாவாது இவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து சுகபோக வாழ்க்கையை கொடுத்துள்ளார்களா? இவர்களது பயங்கரவாத செயல்களில் தினந்தோறும் பலியாவது உழைப்பாளிகள்தானே! இந்த ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. கும்பலுக்கும் வெகுஜன மக்களுக்கும் என்ன தொடர்பு! இவர்கள் எப்போதும் இணையத்தில் அடிக்கடி கூறும் வேதம் என்ன தெரியுமா? நாங்கள் எண்ணிக்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல என்று சொல்லுவதுதான்! இந்த வேதாந்திகள்தான் கூவுகிறார்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தீரமிக்க இளைஞர்களுக்கு பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு இல்லையாம்?

தற்போதைய சுதந்திர இந்தியாவைப் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இது பெயரளவிற்கான சுதந்திரம் மட்டுமே; அதாவது இன்னும் இந்தியா அரை அடிமை நாடாக இருக்கிறது! பிரிட்டிஷ் இந்தியாவிடம் அடிமைப்பட்டிருந்த நமது நாடு தற்போது நான்கு நாடுகளிடம் அடிமைப்பட்டிருக்கிறதாம்! அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா. அதெப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியை மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் பங்கிட்டுக் கொண்டது? மேலும் ரஷ்யாவை இவர்கள் சமூக ஏகாதிபத்தியம் என்று அழைப்பார்கள். தற்போது அந்த சோசலிச சோவியத் யூனியனே இல்லை? ஆனால் இவர்களது திட்டம் அதையே வேதம் ஓதிக் கொண்டிருகிறது. எ°.ஓ.சி. கும்பல் இதனை பக்தி சிரத்தையோடு விமர்சனமின்றி மனப்பாடம் செய்துக் கொண்டு திரிகிறது. மொத்தத்தில் நாம் நான்கு நாட்டு அடிமைகள்! இந்த நான்கு நாட்டு அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக இவர்கள் ஏந்தக் கூடிய ஆயுதம் என்ன தெரியுமா? புல் - பூண்டுகள்தான்....
அமெரிக்காவுக்கு மட்டும்தான் உண்டா பின்லேடன் போன்றவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் உரிமை? எங்களுக்கு இல்லையா என்று அதற்கு மொத்த உரிமையை குத்தகை எடுத்துக் கொண்டு நமது அளப்பரிய தியாகிகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தியுள்ளது ம.க.இ.க. கும்பல்.

விலை உயர்வு! யெச்சூரி எச்சரிக்கை!!


Cartoons: Thanks Webulagam

விலை உயர்வு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல என்றும், அதனால் ஏற்படும் அனைத்து விதமான சமூக விளைவுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.
புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
‘‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தபடி விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் தொடங்கி இருக்கிறது. விலைவாசிப் பிரச்சனை என்பது நாட்டு மக்களை மிகவும் பாதித் திருக்கக்கூடிய பிரச்சனை என்பதால்தான், இதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, இது பல்வேறு முனைகளிலும் மக்களைத் தாக்கும் ஒரு பிரச்சனையுமாகும். குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பது, ‘‘ஒளிர்கின்ற” இந்தியா வுக்கும் ‘‘துன்பப்படுகின்ற’’ இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளியை மேலும் கடுமையான முறையில் அதிகமாக்கும்.
உதாரணமாக மத்திய அரசு, குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கியிருக்கிறது. இப்போதுள்ள விலைவாசி உயர்வி னால், அந்தக் குழந்தைகளுக் காக அரசு ஒதுக்கியுள்ள ஒதுக் கீடும் உயரப்போவதில்லை. அது அப்படியேதான் இருக்கும். விளைவு, குழந்தைகளுக்கு வாங்கக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் அளவு குறையும். இதனால் அக்குழந்தைகளுக்கு போதிய அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பது குறையும்.
அதேபோன்று இன்றைய தினம் நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் 70 முதல் 80 சதவீதம் வரை போதிய அளவிற்கு உணவு உட்கொள்ள இயலாததால் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வினால் அவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். எதிர்கால இந்தியாவை சுமந்திருக்கும் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்படு வது, எதிர்கால இந்தியாவையே பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு விலைவாசி உயர்வினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாக நாம் மதிப்பிட்டாக வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வால் மக்கள் அப்பொருள்களை வாங்க முடியாமல் மிகவும் கொடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள் ளனர்.
எனவேதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். சமையல் எண்ணெய் உட்பட 25 அத்தியாவசியப் பொருள்களை ஊக வர்த்தகத் தில் ஈடுபடுத்துவதிலிருந்து தடை விதிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளில் ஊக வர்த்தக முறையும் ஒன்று என்பதால் இதனைச் செய்திட அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இரண்டாவதாக, விலைவாசி உயர்வு என்பது உலக அளவில் உள்ள ஒரு பிரச்சனை என்று சொல்லி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. அமெரிக்காவில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிக்கட்டிட அங்கு விலைவாசி உயர்வு செயற்கையாக ஏற்படுத் தப்பட்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தைச் சரிசெய்வதற்காக அங்கு அத்தியாவசியப் பொருள்களில் ஊக வர்த்தக முறை அமல்படுத் தப்பட்டிருக்கிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஊக வர்த்தக முறை மூலம் அத்தியா வசியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
எனவேதான் ஊகவர்த்தக முறையை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அடுத்து, மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் அளவைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி இருக்கிறது. அதனை சரி செய்து ஏற்கனவே அளித்திட்ட அளவிலேயே உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும். குறிப்பாக கேரளா வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. அதனை வெட்டிச் சுருக்கி இப் போது வெறும் 21 ஆயிரம் டன்னாகக் குறைத்திருக்கிறது. அதே போன்று மேற்கு வங்கத்திற்கும் 2 லட்சம் டன் கோதுமை அனுப்பப்பட்டு வந்தது. இப்போது வெறும் 62 ஆயிரம் டன்னாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவற்றைச் சரி செய்து முன்பு அனுப்பிய அள விற்கு அனுப்பிட வேண்டும். பொது விநியோக முறையில் அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும்.
அடுத்து, முந்தைய பாஜக கூட்டணி அரசு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை எல் லாம் நீக்கிவிட்டது. இதனால் அந்தச் சட்டத்திற்கு கள்ளச்சந் தைக்காரர்கள் எவரும் இப் போது பயப்படுவது கிடையாது. எனவே அச்சட்டத்தை மீண்டும் முன்பிருந்தது போலவே கடு மையானதாக மாற்ற வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோரைக் கடுமையான முறையில் தண்டிக்கக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
நான்காவதாக, நாங்கள் தொடர்ந்து சொல்லிவருவது போல், பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரியை மாற்றி அமைத்திட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள் ளது. அனைத்து மாநிலங்க ளும் தங்களுடைய விற்பனை வரி மூலம் பெற்றுள்ள வருவாய் வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் என்பதுடன் இதனை ஒப்பிட்டால் இதன் தன்மை யைப் புரிந்து கொள்ள முடியும். பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விதிப்பதனால், அதன் விளைவாக பல் வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகி விடுகிறது. எனவேதான் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் குறைத்திட இந்நான்கு நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

April 15, 2008

அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.
கொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும். இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்! போககட்டும்!
தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்!
அது சரி! இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம்! இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது? இதன் கொடி என்ன? இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்? என்று நாம் கேட்டு விட்டால் உடனே இந்த கேள்வியில் உளவு பார்க்கும் தோரணைதான் தெரிகிறது என்று உளவு பட்டம் கட்டுவார்கள் இந்த ஏகாதிபத்திய சீர்குலைவு கைக்கூலிகள். உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் இந்த நிஜ அனானிகள்.
எஸ்.ஓ.சி. தன்னை இந்திய பொதுவுடைமை கட்சி என்று அழைத்துக் கொள்வதுதான் பரிதாபம்! இதைப் பார்த்து ஏதோ இவர்களுக்கு இந்தியா முழுவதும் பெரிய வலைப் பின்னல் இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்... சிலந்தி வலைதான் அவர்களை சுற்றியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குள் மட்டும் தவளை கத்தல் கத்தும் ஒரு அமைப்பே தவிர அகில இந்திய அமைப்பு அல்ல. ஒரு முக விலாசத்திற்காக அப்படி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது ஏதாவது அகில இந்திய அளவில் செயல்படும் நக்சலிச அமைப்பின் துணை கிரகமாக செயலாற்றுகிறார்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.
போகட்டும்! இவர்களது திட்டம்தான் என்ன? பாவம் இவர்களிடம் இதை மட்டும் கேட்டு விடக் கூடாது! பரம ரகசியமாக பதுங்கி விடுவார்கள்! 1976இல் துவக்கப்பட்ட இந்த துணை கிரகத்திற்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி திட்டமே இல்லை என்பதுதான் வேடிக்கையானது! இந்த கருப்பிண்டங்கள்தான் உலப் புரட்சியை நடத்தப்போவதாக ஊளையிடுகின்றன. வெறும் நகல் திட்டமாகத்தான் உலா வருகின்றன. அதாவது இறுதி பெறாத திட்டம்; அதாவது அடிக்கடி தேவைக்கேற்ப கையை - காலை வெட்டிக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்! அப்பத்தான் அரசியலில் அடிக்கடி புரட்சிகர ஜோக்கர் வேஷம் போடலாம்!
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காதவர்கள்; வெறும் வார்த்தையில் - எழுத்தில் பம்மாத்து காட்டுபவர்கள் அவர்களது திட்டத்தின் முதல் பாராவை கிழே கொடுத்துள்ளேன். எங்கேயும் இந்தியா நாடு என்று வராது. அதுதான் அவர்களது மறைமுக பாரதீய அஜண்டா... இந்திய மக்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

"நமது அன்பிற்குரிய இந்நாடு உலகின் மிகப் பெரியதும், பழைமையானதுமான நாடுகளில் ஒன்று. 95 கோடி மக்களைக் கொண்ட நாடு. உழவர் பெருங்டிக மக்களை மிகப் பெருமான்மையாகக் கொண்ட விவசாய நாடு....."
காரல் மார்க்ஸ் இந்திய பொருளுற்பத்தி முறையை ஆசிய பாணி பொருளுபத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறார். இந்த வரியை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு தனது திட்டத்திலும் சேர்த்துக் கொண்டு குழப்புவதில்தான் இவர்களது அலாதியான திறமையே வெளிப்படுகிறது.
"இந்திய சமுதாயத்தில் ஆசிய சொத்துடமை வடிவமும் அதன் அடிப்படையிலான கிழக்கத்தியக் கொடுங்கோன்மையும் நீண்ட காலம் நிலவியது. இதன் கீழ் சட்டபூர்வமாகத் தனிச் சொத்துடைமை இல்லை...."
அன்பு அனானிகளே! இணையத்தில் உலாவும் பொருளாதார ஞானிகளே இவர்களது கூற்று சரியா? என்பதை கொஞ்சம் எனக்கும் விளக்குங்கள்! அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லையாம்? அப்படியென்றால் சோசலிச சமூகமாக இருந்தது என்று கேள்வி எழுப்பாதீர்கள்? அவர்கள் பார்வையில் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வைத்திருந்த குறுநில மன்னர்கள், நிலப்பிரபுக்கள், நிலத் திமிங்கலங்கள் எல்லாம் பாடமல் போனதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது! இப்போது தெரிகிறதா? இவர்கள் யாருடைய நலனை காப்பதற்காக செயல்படுகிறார்கள் என்று! இவர்களின் உண்மையான வர்க்க முகம் ஏகாதிபத்திய சீர்குலைவு முகமே! உடனே நவீன வழக்கறிஞர்கள் போல் வாதாடலாம் மடயனே சட்டப்பூர்வமாகத்தானே இல்லையென்று சொல்லியுள்ளோம் என்று. அதை கண்டு நீங்கள் நகைக்க வேண்டாம்!
ம.க.இ.க. பார்ப்பனீம் என்று சொல்லும் போது நமக்கு கூட ஒன்றும் புரியவில்லை! அவர்கள் மனு அதர்மர்த்திற்கே ஐ.எஸ்.ஓ. 2000 சான்றிதழ் வழங்குவதை கீழே கவனியுங்கள்.
"பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வர்ணங்களும் மற்றும் வர்ணத்தில் சேராத பஞ்சமர் - சண்டாளர் அடங்கிய சமூக எஸ்டேட்டுகள், அவற்றிற்கு அடிப்பைடயாக அமைந்த சாதிய அமைப்புகளின் அடிப்படையிலான வேலைப் பிரிவினைகள் இருந்தன...."
தமிழச்சிகள், பெரியாரியவாதிகள் கோபப்படக் கூடாது. அதாவது மனு நமக்கு விதித்தது வேலைப் பிரிவினையைத்தான் தீண்டாமையை அல்ல! இதைத்தான் அவர்கள் ம.க.இ.க. தலைமை மிக அழுத்தமாக குறிப்பிடுகிறது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வு பெரும் பகுதி உழைப்பாளி மக்களை சுரண்டி - கொழுத்து தீண்டத் தகாதவர்களாக வெறும் நடைப்பிணங்களாக ஆக்கி வைத்துள்ளதற்கான அடிப்படையே நால்வருணத் தத்துவம்தான்! ஆனால் இதனை வேலைப் பிரிவினை நம்மை ஏய்கிறது எஸ்.ஓ.சி. இவர்கள்தான் நவீன மனுதர்மவாதிகள்.
அதைவிட கொடுமை என்னத் தெரியுமா? ஆசியபாணி சமூகம் என்று சொல்லி நிலம் தனிவுடைமையாக இல்லை என்று கூறிய பிறகு இவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.
"எல்லா கிராமச் சமூகங்களுக்கும் மேலே அதி உயர்ந்த அதிகாரமாகவும் இணைக்கும் ஒருமையாகவும் விளங்கிய மத்திய அரசிடமிருந்து தனி நபர்கள் அனுபோக உரிமைகளைப் பெற்றனர்..."
அதாவது, கிராம மக்கள் நிலத்தை தாங்கள் தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்களாம்! எந்த மத்திய அரசு என்பதை மட்டும் விளக்க மறந்து விட்டார்கள்? பிரிட்டிஷ் அரசா? அல்லது தற்போதைய மத்திய அரசா? (ஐயையோ.... இப்ப உள்ள அரசு காலனி அரசு... அதாவது அடிமை அரசு...) பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையில் வைத்திருந்த மூப்பனார்கள் - வாண்டையார்கள் - சாம்பசிவ ஐயர்களிடம் எல்லாம் அப்போது அதிகாரமில்லையா? மத்திய அரசை ஆட்டியதே இந்த நிலப்பிரபுக்கள்தானே! அப்புறம் எப்படி மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்கள்?
கடைசியா இந்த ஆசியபாணி சமூக பித்தலாட்டத்தை இவர்களே அம்பலப்படுத்துவதை கொஞ்சம் கவனியுங்கள்.
"ஆங்கிலேயே காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை காலனியாக்கிய பின் அதுவரை நீடித்திருந்த ஆசியச் சொத்துடமை வடிவிலான சிறு கிராம சமூகங்களின் நிலப்பிரபுத்துவப் பொருளாதார அடிப்படையைத் தகர்த்தனர். பொதுச் சொத்துடைமையின் இடத்தில் தனியுடைமையப் புகுத்தினர்..."
ஆஹா... அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேள்விப் பட்டிருக்கோம்... எஸ்.ஓ.சி. புளுகு இப்பத்தான் வெளிப்பட்டது. முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லை என்று கூறி விட்டு, அப்படியே 3வது பிரிவில் அந்தர் பல்டி அடித்து பிரிட்டிஷ் அரசு ஆசிய பாணி சொத்துடைமையை ஒழித்து விட்டது என்று கூறுவது யாரை திருப்திப்படுத்த! அதை விடக் கொடுமை நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படையைக் கூட தகர்த்து விட்டனராம்! அதாவது இந்தியாவில் தற்போது எங்கும் நிலப்பிரபுக்கள் இல்லை! அனைத்து நிலங்களையும் பிரிட்டிஷ் அரசு பிரித்துக் கொடுத்து புரட்சி செய்து விட்டது! நம்புங்கள் ம.க.இ.க. தலைமை ஊளையிடுகிறது அது நரி என்று நம்புங்கள்!...

April 12, 2008

கம்யூனிஸ்ட் அறிக்கை 160!

1848 இல் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் வெளியான பாட்டாளி வர்க்கத்தின் முதல் பிரகடனம் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சால் படைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் அதன் கருத்துச் செறிவு இன்றைக்கும் இளமையோடு அமைந்திருப்பதோடு, பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய், தத்துவார்த்த போரின் முன்னணி தளபதியாய் திகழ்வதை காண முடியும்.
2007 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் 90ஆம் ஆண்டை முன்னிட்டு ரஷ்யாவில் உள்ள பெலாரஸ் - மின்ஸ்க் நகரில் கூடிய சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் 9வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட 160வது ஆண்டை வெகு சிறப்பாக கொண்டாடுவது; கம்யூனிஸ்ட் அறிக்கையினை உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடம் கொண்டுச் செல்வது என்ற அறைகூவலை விடுத்திருந்தது. அந்த நோக்கத்தினை முன்னெடுக்கும் முகமாகவே இந்த கட்டுரை வரையப்படுகிறது.
ஏகாதிபத்திய உலகமயச் சூழலில் வர்க்கப் போராட்டம் பன்முனையில் கூர்மையடைந்து வரும் தருவாயில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் உள்ளடக்கம் பொதுவாக இன்றைக்கும் பொருத்தப்பாடாக அமைவதோடு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
அறிக்கை உருவான பின்னணி
1840களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடி ஐரோப்பாவிற்கும் பரவியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து கொந்தளிப்பான நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கலாம் என்ற உச்சகட்ட நிலை நிலவியது. இங்கிலாந்தில் சார்ட்டிஸ்ட் இயக்கமும், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 1834 இல் துவக்கப்பட்ட நாடு கடத்தப்பட்டவர்களின் கழகமும் செயலாற்றி வந்தது. இதில் பாரிஸ், ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர். இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கு ஆதரவாக மார்க்சும், ஏங்கெல்ஸ்சும் நிவாரண உதவிகள் உட்பட பல்வேறு பணிகளை ஆற்றி வந்தனர்.
மார்க்சும் - ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்டுரைகளை தீட்டி ஐரோப்பா முழுவதும் நன்கு அறியப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக 1847இல் மார்க்சையும் - ஏங்கெல்சையும் நேர்மையாளர் கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட மார்க்சும் - ஏங்கெல்சும் நேர்மையாளர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இக்கழகத்தின் முதல் மாநாடு 1847 ஜூன் மாதம் 2 முதல் 9 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஏங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். மார்க்ஸ் பணப் பிரச்சினை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இம்மாநாட்டில் மார்க்சுடனான கலந்தாலோசனையின் பேரில் நேர்மையாளர் கழகம், கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் அதன் முந்தைய மனித நேய கோஷமான அனைவரும் சகோதரர்களே என்ற முழக்கம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

என்ற புரட்சிகர முழக்கத்தை வைத்தனர். மேலும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு, அமைப்பு விதிகள் மாற்றம் மற்றும் கீழ்க்கண்ட அடிப்படையில் அதன் நோக்கத்தை புரட்சிகரமாக வடிவமைத்தனர்.
...பூர்ஷ்வா வர்க்கத்தை தூக்கி எறிவது, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்துவது, வர்க்கப் பகைமைகளை அடிப்படையாகக் கொண்ட பழைய பூர்ஷ்வா சமுதாயத்தை ஒழித்துக்கட்டி வர்க்கங்களற்ற, தனிச் சொத்துடைமை அற்ற ஒரு புதிய சமுதாய்ததை நிறுவுவது.
- கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, முன்னேற்றப் பதிப்பகம், பக்கங்கள் 143-144.
கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது காங்கிரஸ் 1847 நவம்பர் 29 அன்று லண்டனில் கூடியது. இம்மாநாடு 10 நாட்கள் நடைபெற்றது. இதில் மார்க்ஸ்சும் - எங்கெல்ஸ்சும் கலந்துக் கொண்டனர். பொதுவாக மாநாடு மாலை நேரத்திலேயே நடைபெற்றது. கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களில் பெரும்பாலோர் தொழிலாளிகளாய் இருந்த காரணத்தினால், அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும் பொழுது மாலை நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே இருந்தது.
இந்த காங்கிரசில் கம்யூனிஸ்ட் லீகின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் தந்திரங்கள் மற்றும் அமைப்பு விதிகள் அனைத்தும் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியில் லீகின் அமைப்பிற்கான வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு காரல் மார்க்சையும் - எங்கெல்சையும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இந்த அப்படையிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் பாட்டாளி வர்க்க சர்வதேச பிரகடனம் ஒரு மாத காலத்திற்குள் உருவாக்கப்பட்டு 1848 பிப்ரவரியில் லண்டனில் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட பொழுது மார்க்சுக்கு 28 வயது, எங்கெல்சிற்கு 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை ஒன்றுதான் உலகிலேயே மதச்சார்பற்ற நூல்களில் முதன்மையாக திகழ்வதோடு, மிக அதிகமான மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்ய புரட்சி நடைபெறுவதற்கு முன்பே 35 மொழிகளில் 544 பதிப்புகள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ரஷ்யப் புரட்சிக்கு முன்பே 35 மொழிகளில் 70 பதிப்புகள் வெளிவந்ததாக எரிக் ஹாப்ஸ்வம் குறிப்பிடுகிறார். இந்த ஒன்றே கம்யூனிச தத்துவம் உலக மக்களை ஆகர்ஷிக்கும் பெரும் சக்தியாய் மாறியுள்ளதை பறைசாற்றியது.
அறிக்கை அன்றும் - இன்றும்
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பத்தியிலேயே, "ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது; கம்யூனிசம் என்ற பூதம். பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும், போப்பாண்டவரும், ஜார் மன்னனும், மெட்டர்னிக்கும் கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மானியப் போலீஸ் ஒற்றர்களும், இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். என்று துவங்கும்.
ஆம்! மார்க்சும் - எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் போது அவர்கள் கண்முன்னே நின்றது ஐரோப்பிய முதலாளித்துவ சமூக சூழலே. 1840களில் ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் என்ற கருத்தாக்கம் ஒரு பௌதிக சக்தியாய் மாறியிருந்தது. அது மட்டுமின்றி முதலாளித்துவ சுரண்டல் கொடுமையிலிருந்து விடுபட, சுரண்டலுக்கு வக்காலத்து வாங்கும் ஆளும் வர்க்க ஆட்சியாளர்களை தூக்கியெறிவதற்காக பல்வேறு வகையான சோசலிச சிந்தனைக் கொண்டவர்களும், கம்யூனிச எண்ணம் கொண்டவர்களும் செயலாற்றிவந்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான ஒரு சில மாதங்களிலேயே ஜெர்மன், இத்தாலி, பிரான்சில் பெரும் புரட்சி வெடித்தெழுந்ததே இதற்கு சாட்சி. கிட்டத்தட்ட ஐரோப்பாவில் 13 நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன.
இந்த முதலாளித்துவ புரட்சிகளில் எல்லாம் முன்னணியில் நின்றது பாட்டாளி வர்க்கமே என்பது குறிப்பிடத்தக்கது. தெருக்களில் பெரும் தடையரண்களை எழுப்பி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக களத்தில் நின்று, இரத்தம் சிந்தி நேருக்கு நேர் சந்தித்தது. இதில் ஜெர்மனியும், இத்தாலியும் - ஆஸ்திரிய மற்றும் ரஷ்ய அரசுகளின் ஆதிக்கதிலிருந்து விடுபட்டன. பிரான்சில் மட்டுமே, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்தோடு தொழிலாளி வர்க்கம் செயல்பட்டது என்று ஏங்கெல்ஸ் தனது முன்னுறையில் குறிப்பிடுகிறார். அறிக்கை வெளிவந்த தருணத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட்டுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் விதைத்தது. இது குறித்து பிரீட்ரிஹ் லெஸ்னர் என்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இவ்வாறு கூறுகிறார் :
பிப்ரவரி புரட்சி பற்றிய இந்தச் செய்தி எங்கள் மீது ஏற்படுத்திய பலமான பிரதிபலிப்பை என்னால் விளக்க முடியாது. உற்சாகத்தால் நாங்கள் போதையுற்றோம். எங்களுள் நிறைந்திருந்த ஒரே உணர்ச்சி, ஒரே சிந்தனை: மனித வர்க்கத்தின் விமோசனத்திற்காக எங்கள் வாழ்வினையும் மற்ற அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே!
- மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக்குறிப்புகள், புரோகிரஸ் பதிப்பகம், மாஸ்கோ. பக்கம் 232.
இவ்வாறு அறிக்கை வெளிவந்தது முதல் இன்றைக்கு வரை உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் அமைப்பாளனாகவே செயலாற்றி வருகிறது. கடந்த 160 ஆண்டு காலத்தில், குறிப்பாக ரஷ்ய சோசலிச புரட்சி துவக்கி வைத்த வெற்றிப் பாதையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் வெற்றி நடைபோட்டதோடு, சின்னஞ்சிறிய கியூபா, வடகொரியா, வியட்நாம், சீனா, லாவோஸ் என்று இன்றைக்கும் சோசலிச சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து மனித குலத்திற்கு நம்பிக்கையூட்டி வருகின்றன. தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரி மாற்றும், ஆசியாவில் - நேபாளம், இந்தியா என பல நாடுகளில் அரசியலில் இடதுசாரிகள் ஏற்படுத்தி வரும் தாக்கமும் அறிக்கையின் வெற்றிப் படிக்கட்டுகளின் பகுதியே!
அறிக்கையின் முக்கிய கூறுகள்!
கம்யூனிஸ்ட் அறிக்கை பிரதானமாக நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
1. பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்
2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்
3. சோஷலிஸ்ட் இலக்கியமும் கம்யூனிஸ்ட் இலக்கியமும்
4. இன்றுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் சம்பந்தமாகக் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை
மொத்தத்தில் இந்த அறிக்கையின் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அமைந்திருப்பது. வரலாற்றை பொருள் முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அணுகுவதும், வர்க்கப் போராட்டத்தின் பகுதியே வரலாறு என்று உரைத்திருப்பதும், முதலாளித்துவ அமைப்பின் வெற்றி அதற்கு முன்பிருந்த பழைய சமூகத்தையெல்லாம் கவிழ்த்துப் போட்ட சாதனைகளும், அதே முதலாளித்துவ சமூகத்திற்கு சவக்குழி வெட்டப் போகும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கியிருப்பதும், மொத்தத்தில் எதிர்காலத்தில் வர்க்கங்களற்ற சமூகத்தை நிர்மாணிக்கும் இலட்சியத்தையும் பறைசாற்றும் முரசாக கம்யூனிஸ்ட் அறிக்கை விளங்குகிறது.
முதல் பகுதியில், இதுவரை இருந்து வந்திருக்கிற வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (பூர்வீகக் காலத்தில் நிலம் பொதுச் சொத்தாக விளங்கிய முறை கரைந்தொழிந்ததிலிருந்து-ஏங்கெல்ஸ்) என்று துவங்கி, முதலாளித்துவத்தின் புரட்சிகர அசுர வளர்ச்சியின் சாதனைகளையும், அது பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்கு முன்னிருந்த சமூகங்கள் சாதித்தவைகள் அனைத்தையும் கீழே தள்ளி, குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான சாதனைகளை நிகழ்த்தியதையும், மேலும் மனித குலத்திற்குள் உறைந்து கிடந்த உற்பத்தி ஆற்றலை வெளிக்கொணர்ந்ததையும், தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ மற்றும் பழமைவாத சமூக அமைப்புகளை துடைத்தெறிந்ததையும், முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக பிறந்த பாட்டாளி வர்க்கத்தை அரசியல் ரீதியாக தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதையும், பல்வேறு சமூக அமைப்புகளில் நிலவிய சிக்கலான வர்க்க உறவுகளுக்கு மாறாக, மிக எளிமையான வர்க்க உறவுகளை கட்டியமைத்ததையும், முதலாளித்துவம் மனித உறவுகள் அனைத்தையும் வெறும் பண உறவாக மாற்றியமைத்ததோடு, கௌரவமான தொழில் புரிந்த வழக்கறிஞர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரையும் வெறு கூலி உழைப்பாளிகளாக மாற்றியதையும் மிக எளிமையாகவும், கணக் கச்சிதமாகவும், பிரம்மிக்கத்தக்க அளவிலும் சொல் நேர்த்தியோடு அறிக்கையில் பதிவு செய்துள்ள மார்க்சும் - ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கமே நிலவும் முதலாளித்துவ சமூகத்திற்கு சவக்குழித் தோண்டப்போகும் புரட்சிகரமான வர்க்கம் என்று அழுத்தமாக வலியுறுத்தியதோடு, பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே சமூகம் முழுமைக்குமான - பெரும்பான்மையோரின் விடுதலைக்கான புரட்சியாக அமையும் என்று அறுதியிட்டு கூறியுள்ளதை நோக்கும் போது மார்க்சிய மூலவர்களின் வரலாற்று பொருள் முதல்வாதப் பார்வை எத்தகைய புரட்சிகரமானது என்பதை உணர முடியும்.
இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், ஓருலகத் தத்துவம் என்ற பெயரில் உலகம் முழுமையிலும் தனது ஆக்டோபஸ் சுரண்டல் கரங்களை, சுதந்திர வர்த்தகம் என்ற பெயரிலும், நிதி மூலனம் என்ற அரக்கத்தனமான மாய கைகளை பயன்படுத்தி நாடுகளையும், பாட்டாளிகளையும் சுரண்டிச் சூறையாடி வருவதையும், செல்வக் குவிப்பை மிகச் சிறுபான்மையோர் கைகளில் கொண்டுச் சேர்க்கும் இன்றைய உலகமயம் குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையில் அன்றைக்கே வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு தொலை நோக்கு பார்வை கொண்டது என்பதை அறிய முடியும்.
தன் பொருட்களை விற்பதற்கு, இடைவிடாமல் விரிவடையும் மார்க்கெட் பூர்ஷ்வா வர்க்கத்துக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தேவை, பூர்ஷ்வா வர்க்கத்தை உலகப் பரப்பு முழுவதற்கும் துரத்துகிறது. அது ஒவ்வோர் இடத்துக்கும் சென்று கூடு கட்டி அடைய வேண்டும், குடியேற வேண்டும், தொடர்புகளை கொள்ள வேண்டும்.
மேலும், முதலாளித்துவ வர்க்கத்தின் உயிர் வாழ்வின் அடிப்படை எதன் மீது கட்டப்பட்டுள்ளது - அதன் விளைவாக சமூக உறவிலும் - அரசியல் ரீதியாக ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை இரத்தினச் சுருக்கமாக அறிக்கை விளக்கிச் செல்கிறது.
பூர்ஷ்வா வர்க்கம் உயிர் வாழ வேண்டுமானால், அது பொருளுற்பத்திக் கருவிகளைப் புரட்சிகரமான வகையில் இடைவிடாமல் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்; அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும், அத்துடன் சலக சமுதாய உறவுகளையும் இடைவிடாமல் புரட்சிகரமான வகையில் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், குறிப்பாக கணிணித்துறையில் ஏற்படுத்தி வரும் வளர்ச்சி - மாற்றங்கள் மிக அதிவேகமாக நடைபெற்று வருகிறது. ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறைகளில் ஒவ்வொரு நாளும் புதிய, புதிய அதிவேக கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்துக் கொண்டேயிருப்பதும், மார்க்கெட்டில் புதிது புதிதாக உலாவருவதன் மூலம் நுகர்வோர் அதனைச் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுவதும் நடைபெற்று வருவது நிகழ்கால உதாரணமாக திகழ்கிறது.
அதேபோல், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவுட்சோர்சிங் மூலம் நடைபெற்று வரும் நவீன சுரண்டல் தொழிலாளர்களை கண்டம் விட்டு - கண்டம் மாறிச் செல்ல வைத்ததோடு, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிவுத் திறன்மிக்க ஊழியர்களை பயன்படுத்தி, குறைந்த கூலிக்கு சுரண்டி கொழுப்பதும் மிக வேகமாக நடந்தேறி வருகிறது. நவீனத் தொழில்நுட்ப உற்பத்தி கருவிகள் மூலம் சுரண்டலை நடத்தி வரும் மைக்ரோ சாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களே உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளதை காண முடியும்.
இவ்வாறு முதலாளித்துவ சுரண்டல் அம்சங்களையும் நுணுக்கமாக பட்டியலிட்டுள்ள அறிக்கை இந்த முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வாயிலாக ஏற்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான மாற்றத்தையும் சுட்டியுள்ளதோடு, சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க அரசியல் போராட்டத்தையும் அதன் முக்கிய அம்சங்களையும் அறிக்கை வெளிப்படுத்தும் கருத்துக்கள் இன்றைக்கும் பயனுள்ள அம்சமாக திகழ்கிறது.
மேலும், தொழிலாளர்களின் ஒற்றுமை இடைவிடாமல் விரிவடைந்து கொண்டிருப்பதிலேயே அடங்கியிருக்கிறது. நவீனத் தொழில் படைத்திருக்கும் முன்னேற்றமடைந்துள்ள போக்குவரத்துச் சாதனங்கள், இந்த ஒற்றுமை உருப்பெறுவதற்கு உதவுகின்றன.
அறிக்கையின் மேற்கண்ட கூற்று நவீன தொழில்நுட்ப உலகிற்கும் அப்படியே பொருந்துவதை காண முடியும். இணையதளம் - இமெயில் - வலைப்பதிவு போன்ற நவீன கணிணி நுட்பங்கள் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒரே கண்ணியில் இணைத்திருக்கிறது. மிக விரைவான - குறுகிய காலத்திற்குள் உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை விரல் நுனியில் கொண்டு வந்திருப்பதோடு - சர்வதேச அளவில் நடைபெறும் போராட்டங்களை உடனுக்குடன் இதர நாட்டு பாட்டாளி வர்க்கத்துடனும் பகிர்ந்துக் கொள்ள முடியும். உலக சமூக மாமன்றத்தின் சார்பில் மாற்று உலகம் சாத்தியமே என்ற கோஷத்தினை முன்வைத்து உலகமயமாக்கலுக்கு எதிராக உலகளாவிய போராட்டம் நடைபெற்றதை இந்தக் காலகட்டத்தில் பார்க்க முடிந்தது.
முதல் பகுதியின் இறுதியில், பூர்ஷ்வா வர்க்கம் எதை உற்பத்தி செய்கிறது? தனக்குச் சவக்குழி தோண்டுகிறவர்களையே. அதன் வீழ்ச்சி. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதவையாகும். என்ற புரட்சிகர அறிவிப்போடு நம்பிக்கையூட்டி முடிவடைகிறது.
அறிக்கையின் இரண்டாவது பகுதியில், கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கம் பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான நலன்களிலிருந்து வேறுபட்ட நலன்கள் ஒன்றுமில்லை என்று பறைசாற்றி துவங்குகிறது. இப்பகுதியில் பாட்டாளிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள உறவினை விளக்குகிறது.
குறிப்பாக முதலாளித்துவ அறிவுஜீவிகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால், உங்களது சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள்; உங்கள் வீட்டில் இரண்டு மாடுகள் இருந்தால் அதில் ஒன்றை எடுத்துக் கொள்வார்கள், மூன்று கோழி இருந்தால் அதில் ஒன்றரை கோழியை எடுத்துக் கொள்வார்கள், ஒரு வீடு இருந்தால் அதை இரண்டாக பிரித்து எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் பீதியூட்டுவதை அறிவோம். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அறிக்கை மிகத் தெளிவாக பதிலுரைக்கிறது.
சொத்துடைமையை ஒழிப்பது என்பது அல்ல, பூர்ஷ்வா உடைமையை ஒழிப்பது என்பதே கம்யூனிசத்தின் விசேஷ அம்சமாகும்
இன்றை உலகமயச் சூழலில் ஏகாதிபத்திய சுரண்டல் இருவேறுபட்ட பாதாள உலகத்தை மட்டுமே படைத்துள்ளது. குறிப்பாக 497 பன்னாட்டு முதலாளிகளிடம் மட்டும் 5.3 டிரில்லியன் டாலர் சொத்து குவிந்துள்ளது. (ஒரு டிரில்லியன் = 1000000000000, ) இது உலக மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 7 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. பூர்ஷ்வா பொருளுற்பத்தி சமூக அமைப்பு எவ்வாறு ஒரு சிலர் கையில் மட்டும் செல்வாதாரங்களை குவித்துள்ளது என்பதற்கு இடைவிட வேறு என்ன வேண்டும்?
இந்திய அரசு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் முதன் முறையாக 2007-2008 ஆம் ஆண்டுதான் 1.16 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (பொருளாதார ஆய்வறிக்கை, எக்கனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 29, 2008) அதாவது, 115 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு பொருளாதாரத்தைவிட ஐந்து மடங்கு சொத்துக்கள் வெறும் 497 பேரிடம் குவிந்துள்ளது. ஆஹா இதுதான் முதலாளித்துவ உலகமயமாக்கலின் ஜால வித்தையோ?
அதே சமயம், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் உள்ள 240 கோடி மக்களிடம் 1.6 டிரில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. இது உலக மொத்த வருவாயில் 3.3 சதவிகிதம் மட்டுமே!
மறுபுறத்தில், உலக பணக்கார நாடுகளிலுள்ள தோராயமாக 100 கோடி மக்களிடம் 36.6 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் குவிந்துள்ளது. இது உலக மொத்த வருவாயில் 76 சதவிகிதம்!
மேற்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து பூர்ஷ்வா சொத்துக் குவிப்பின் மையம் எது என்பதை எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய முதலாளித்துவ உடமையை உடைத் தொழிப்பதன் மூலமே உலக மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த முடியும்!
நிலவக்கூடிய ஏகாதிபதிய - முதலாளித்துவ சமூக அமைப்பு பொருள் உற்பத்தி முறையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருந் தாலும், அதன் சுரண்டல் கரங்கள் நீண்டதே தவிர உலக மக்களின் வறுமை போக்கப்படவில்லை.
உலக மக்களில் கிட்டத்தட்ட 300 கோடி பேர் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு டாலருக்கு குறைவாகவே வருமானம் ஈட்டக்கூடியவர்களாக உள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் உலக மக்களின் 40 சதவிகிதம் பேருக்கு உலக வருவாயில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது.
முதலாளித்துவ அறிவு ஜீவிகள் பெரும்பான்மையாக உள்ள ஏழை - எளிய பாட்டாளிகளிடத்தில் அவர்கள் வைத்துள்ள சொற்ப வருவாயை கம்யூனிஸ்ட்டுகள் ஒழித்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி வருகிறார்கள்.
பூர்ஷ்வாக்களின் இந்த புரளிகளுக்கு அறிக்கை வெகு சிறப்பாக சாட்டையால் விளாசியுள்ளது. ஏழை - எளிய உழைப்பாளி மக்களிடம் இருந்த சொத்துடைமை ஏற்கனவே முதலாளித்துவத்தால் எவ்வாறு சூறையாடப்பட்டு விட்டது என்பதை அறிக்கை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
சிறு கைத்தொழிலாளி, சிறு விவசாயி ஆகியோரின் சொத்தை - பூர்ஷ்வா சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த அந்தச் சொத்து வடிவத்தை - குறிப்பிடுகிறீர்களா? அதை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை; முன்பே தொழில் வளர்ச்சி அதைப் பெரிய அளவுக்கு அழித்து விட்டது; இப்பொழுதும் தினசரி அதை அழித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாங்கள் தனி உடைமையை ஒழித்து விட உத்தேசித்திருக்கி றோமென்பதைக் கண்டு நீங்கள் நடுங்குகிறீர்கள். ஆனால் தற்காலத்திலுள்ள உங்களுடைய சமூகத்தில், ஜனத்தொகையில் பத்தில் ஒன்பது பேரின் தனி உடைமை முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தப் பத்தில் ஒன்பது பேருக்குச் சொத்து இல்லாமல் இருக்கும் ஒரே காரணத்தால்தான் ஒரு சிலருக்கு சொத்து இருக்கிறது.
முதலாளித்துவ கூலி அறிவு ஜீவிகளின் வாதம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் சுக்குநூறாக்கப்படுவதை காணமுடிகிறது.!
முதலாளித்துவவாதிகள் தனியுடைமையை ஒழித்துவிட்டால், சமூகத்தில் சோம்பேறித்தனம் மலிந்து விடும், யாரும் உழைக்க மாட்டார்கள் என்று கம்யூனிசத்திற்கு எதிராக இன்றும் கூட குற்றம்சாட்டுவதை நாம் அறிவோம். இதுபோன்ற மலிவான குற்றச்சாட்டுகளுக்குள்ளும் அறிக்கை மிகச் சிறப்பாக கவனம் செலுத்தி பதிலடி கொடுத்திருக்கிறது.
உண்மை என்ன? சமூகத்தில் உழைக்கின்ற பெரும் பகுதி மக்களின் சொத்துக்கள் ஏற்கனவே முதலாளித்துவத்தால் அபகரிக் கப்பட்டுவிட்டது.

அவர்களுக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. மேற்கண்ட குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்த முதலாளித்துவ சமூகம் பாழ்பட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? உழைக்கின்ற மக்களுக்கு சொத்துக்கள் இல்லை! சொத்து வைத்திருப்போர் எந்த உழைப்பையும் செலுத்துவதில்லை என்று அறிக்கை பதிலுரைக்கிறது.
முதலாளித்துவ அறிவு ஜீவிகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது சாட்டப்படும் இன்னொரு அற்ப குற்றச்சாட்டு, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவாக்கி விடுவீர்கள் என்பதே! இந்த மலிவான குற்றச்சாட்டிற்குள் ஒளிந்திருக்கும் சுரண்டல் வர்க்கத்தன்மையினை அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
பூர்ஷ்வா தன் மனைவியை ஓர் உற்பத்திக் கருவியாக மட்டுமே பார்க்கிறான். உற்பத்திக் கருவிகள் பொதுவில் பயன்படப் போகின்றன வென்று அவன் கேள்விப்படுகிறான். எனவே, எல்லோருக்கும் பொதுவாகப் பயன்படும் நிலைமை பெண்களுக்கும் ஏற்பட்டுவிடுமென்றுதான் அவன் இயல்பாகவே முடிவு செய்ய முடியும்.
அதாவது, சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் பொதுவுடைமையாக்கப்படும். இந்த உற்பத்தி கருவிகளின் தனியுடைமை அம்சம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இதனை அடிப்படையாக வைத்தே முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் மட்டரகமான சிந்தனை பெண்களை வெறும் உற்பத்தி கருவிகளாகவே பார்க்கும் மனப்போக்கு கொண்டவர் களாக உள்ளனர். அதனால் சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தில் பெண்களையும் பொதுவாக்கிவிடுவார்கள் என்ற வெட்கம் கெட்ட பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் பெண்களை வெறும் உற்பத்திக் கருவிகளாக பார்க்கும் போக்கினையே ஒழிக்க விரும்புகிறார்கள் என்று முகத்திலிறைகிறது அறிக்கை.இதன் தொடர்ச்சியாக அறிக்கை, கம்யூனிஸ்ட்டுகள் பெண்களைப் பொதுவாக்கத் தேவையில்லை; பெண்களைப் பொதுவாக்குவது அனாதி காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது. என்று அறிக்கை குற்றஞ்சாட்டுவதோடு, அதிலிருந்து பெண்களை முழுமையாக விடுதலை செய்வது குறித்தும் தனது கருத்தை ஆழமாக பதிக்கிறது.அதாவது, இன்றைய உற்பத்தி முறையை ஒழிப்பதன் மூலம் அந்த முறையிலிருந்து தோன்றியிருக்கும் பொது மகளிர் முறையும் ஒழியும் என்பது, அதாவது பகிரங்க விபசாரம், ரகசிய விபசாரம் இரண்டும் ஒழியும் என்பது நிதர்சனமான விஷயமாகும்.
தொடர்ந்து முதலாளித்துவ சமூக அமைப்பில் உள்ள கல்வி முறை எவ்வாறு ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தி, அதனை ஆளும் வர்க்க செல்வாக்கிலிருந்து மீட்க வேண்டும் என்று கல்வி குறித்த தனது ஆழமான வர்க்கப் பார்வையை அறிக்கை செலுத்துகிறது.
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டல் ஆட்சியதி காரத்தை பலாத்காரமாக வீழ்த்தி, உற்பத்தி கருவிகளை படிப்படியாக முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அறிக்கை, இது, பொருளுற்பத்தி முறையை முற்ற முழுக்கப் புரட்சிகரமாக்கு வதற்குரிய சாதனங்கள் என்ற முறையில் இந்த நடவடிக்கைள் தவிர்க்க முடியாதவை என்று சுட்டுகிறது. அதே சமயம் இத்தகைய நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாகத்தான் இருக்கும் என்றும் மிக அழுத்தமாக வலியுறுத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றப் பாதை என்பது உலகம் முழுமைக்குமான ஒரே பாதைல்ல; அது ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் உற்பத்தி உறவு மற்றும் வர்க்க முரண்பாடுகளுடன் இணைந்த ஒன்று என்று தெளிவுபடுத்துகிறது. கம்யூனிசத்தை கணித சூத்திரம் போல் அமலாக்க முடியாது என்பதை வெகுவாக சுட்டிக் காட்டுகின்றனர் மார்க்சும் - எங்கெல்சும். இந்தியாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யா பாதையையோ, சீனப் பாதையையோ பின்பற்றாமல், இந்திய சூழலுக்கேற்ப மக்கள் ஜனநாயகப் புரட்சி என்கிற புரட்சிகர பாதையை உயர்த்திப் பிடிக்கிறது. இந்தக் கட்டத்தில், ஏகாதிபத்தியத்துடன் சமசரம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பினை வீழ்த்துவது என்ற கடமையினை முன்னெடுத்துச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சோஷலிச, கம்யூனிச இலக்கியம் என்ற மூன்றாவது பகுதியில், ஐரோப்பாவில் நிலவிய பல்வேறு ரகமான கற்பனாவாத சோசலிச மற்றும் கம்யூனிச வகைகளை பட்டியலிடும் அறிக்கை. ஒவ்வொரு சித்தாந்தத்திற்குள்ளும் ஒளிந்துக் கொண்டிருக்கும் வர்க்க பாசத்தை நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
1. பிரபுத்துவ சோசலிசம், 2. கிறித்துவ துறவு சோசலிசம், குட்டிப் பூர்ஷ்வா சோசலிசம், 4. கற்பனாவாத சோசலிசம், 5. முதலாளித்துவ சோசலிசம்... என பல வகைகளை பட்டியலிடுகிறது. பிரபுத்துவ சோசலிசம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் வீழ்த்தப்பட்ட பிரபுத்துவம் அதனை பழிவாங்குவதற்காக பாட்டாளிகள் பக்கம் பேசுவது போல் நாடகமாடுகிறது. அத்தோடு முதலாளித்துவ வர்க்கத்தின் மூலம் கிடைக்கும் பலன்களையும் அனுபவிக்கத் தவறுவதில்லை. தன்னுடைய நலனை காத்துக் கொள்வதற்காக பாட்டாளிகளின் பிச்சைப் பாத்திரத்தை கொடிகளாக தூக்கி திறிந்தது என்று ஏளனம் செய்கிறது.
அதேபோல் கிறித்துவ துறவு மனப்பான்மையை சோசலிசம் என்று முத்திரை குத்துவதை விட எளிய விஷயம் வேறு எதுவுமில்லை என்று உரைப்பதோடு, பிரபுத்துவக் கோமானுடைய மனப்புகைச்சலைப் புனிதம் பெறச் செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோஷலிசம்.
இதேபோல்தான் குட்டி முதலாளித்துவ சோஷசலிசமும் முதலாளித்துவ வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நகர வணிகத்தார்கள், சிறு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாளொரு மேனியாக பாட்டாளி வர்க்கத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இவர்கள் பாட்டாளிகள் பக்கமும் - முதலாளிகள் பக்கமுமாக ஊசலாடிக் கொண்டிருப் பார்கள். இவர்களது சித்தாந்தமும் தனது வர்க்க நிலையிலிருந்து எழுந்ததே தவிர பாட்டாளிகளை விடுவிப்பதற்கானது அல்ல!
கற்பனாவாத சோசலிசம்! இது முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவதை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, சலுகைகள் வழங்குவது போன்றவற்றின் மூலம் நிலவக்கூடிய சமூகப் பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டது. அதாவது முதலாளித்துவ வர்க்கத்திற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சோசலிசம் பேசியது!
இது குறித்து 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரையில் ஏங்கெல்ஸ் குறிப்பிடும் போது, பல்வேறு வகையான போலி சோசலிசம் நிலவிய காரணத்தினாலேயே இதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கை என்று பெயர் சூட்டினோம். இருப்பினும் இந்த பெயரை விலக்கிவிடும் எண்ணம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நம்முடைய இந்திய நாட்டிலும் இப்படிப்பட்ட பல்வேறு வகையான சோசலிச சித்தாந்தங்கள் வலம் வந்ததை நாம் அறிவோம்! காந்திய சோசலிசம், நேருவின் ஆவடி சோசலிசம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் சோசலிசம் என அவ்வப்போது தோன்றி காணாமல் போவதை கண்டுள்ளோம்.
எனவே விஞ்ஞானப் பூர்வ கம்யூனிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, முதலாளித்துவ சுரண்டல் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான பாட்டாளி வர்க்க விடுதலை என்ற உண்மையான முழக்கத்தை உயர்த்திப்பிடிப்பதும், போலி சோசலிச வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம் என்பதையே இதன் மூலம் அறிக்கை வலியுறுத்தியது.
இறுதியாக, முதலாளித்துவ சமூக அமைப்பின் கொடுமையி லிருந்து விடுபடுவதற்காக சோசலிச மற்றும் ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து நிற்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலைக்கான விஞ்ஞானப்பூர்வமான வழிகாட்டுதலை அளிப்பதோடு, நிலவக் கூடிய முதலாளித்துவ சமூக அமைப்பை பலவந்தமாக வீழ்த்த வேண்டும் என்று பாட்டாளிகளுக்கு அறை கூவுகின்றனர்.
கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் வர்க்கங்கள் நடுங்கட்டும்! பாட்டாளிகளுக்குத் தமது அடிமைத் தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!
என்ற புரட்சிகர அறிவிப்போடு அறிக்கையை நிறைவு செய்கிறார்கள்.பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைவதற்கு, பாட்டாளி வர்க்க கட்சி அமைப்பின் முக்கியத்துவத்தையும், தொழிலாளர்களுக் கிடையிலான ஒற்றுமையையும் மிக அழுத்தமாக வலியுறுத்து கின்றது. மேலும், எதிர்காலத்தில் அமையக்கூடிய சோசலிச மற்றும் கம்யூனிச சமுதாயத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையும் - சமுகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று கீழ்க்கண்டவாறு அறிக்கையில் வலியுறுத்துகின்றனர்.

வர்க்கங்களையும், வர்க்க விரோதங்களையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமூகத்துக்குப் பதிலாக, ஒவ்வொருவருடைய சுதந்திரமான வளர்ச்சியும், அனை வருடைய சுதந்திர வளர்ச்சிக்கு அவசியமாயுள்ள ஒரு அமைப்பை நாம் பெறுவோம் கம்யூனிஸ்ட் அறிக்கையை திரும்பத், திரும்ப படிப்பதன் மூலம் பல்வேறு கருத்துக்களை நுட்பமாக அறிந்துக் கொள்ள முடியும். நிலவக்கூடிய சமூக அமைப்பின் முரண்பாடுகளையும், இயங்கியல் விதிகளையும், வர்க்க கண்ணோட்ட அணுகுமுறையையும் பகுப்பாய்வு செய்வதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைத்த பேராயுதமே கம்யூனிஸ்ட் அறிக்கை! 160வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்நேரத்தில் பரவலான பாட்டாளிகளிடமும், இளைஞர்களிடமும் கொண்டுச் செல்வதன் மூலம் சமூக மாற்றத்திற்கான களத்தினை விரிவுபடுத்திடவும், விரைவுபடுத்திடவும் முடியும்.
தமிழகத்தில் மார்க்சிய சிந்தனைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1930களில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையின் வாயிலாக பொதுவுடைமை கருத்துக்களை மிக எளிய முறையில் மக்களுக்கு புரியம் வகையில் எழுதி வந்த சிங்காரவேலரே 1931 இல் முதன் முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இருப்பினும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே அன்றைக்கு வெளி வந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ஜனசக்தி ஏட்டில் இஸ்மத் பாஷா மொழி பெயர்ப்பில் முழுமையான அறிக்கை 1948-லேயே வெளியானது என்பதையும் இந்நேரத்தில் நினைவுகூறத்தக்கதாகும்.
பயன்படுத்திய நூல்கள்:
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, அயல் மொழிப் பதிப்பகம்.
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, சோவியத் நாடு வெளியீடு.
மார்க்சையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள், புரோகிரஸ் பதிப்பகம், மாஸ்கோ.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கி. இலக்குவன், பாரதி புத்தகாலயம்.
வெல்வதற்கோர் பொன்னுலகம், பாரதி புத்தகாலயம்.
மார்க்சியத்தின் எதிர்காலம், தொகுப்பு : ஞானி, நிகழ் வெளியீடு.
http://www.globalissues.org/ - Poverty Facts and Stats- கே. செல்வப்பெருமாள்- ksperumal@gmail.com