June 28, 2007

ஆவி வழி அரசியலுக்கு அடிபோடும் பிரதீபாஜி!

இந்திய குடியரசுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரி வேட்பாளரான பிரதீபா பாட்டிலின் வெற்றி உறுதியாகி விட்டது. பிரதீபா பாட்டிலின் அரசியல் வாழ்க்கையே, அவரை இந்த பதவிக்கு தேர்வு செய்ய முதன்மைத் தகுதியாக அமைந்தது.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்த்தை பெறவுள்ள பிரதீபா பாட்டில் குறித்து கலங்கிக் கிடக்கும் பா.ஜ.க. உள்குத்து, சதிவேலைகளில் இறங்கி வருகிறது. இதையெல்லாம் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் கடமையை காங்கிரசும், அதன் தோழமை கட்சிகளும் செய்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் பிரதீபா பாட்டில், தொலைக்காட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உரியதே! அதாவது, "இந்த ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை முன்கூட்டியே பாபாஜி ஆவியாக வந்து அருள் வாக்கு கூறினார்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை(அவர்தான் அமைப்பின் தலைவர்) சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார். அப்போது பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு எனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது என்றும் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். (Thanks: http://www.thatstamil.com/)

பிரதீபா ஜிக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை உட்பட, எந்த நம்பிக்கைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவர் உரிமை. அதே சமயம், இந்திய நாட்டின் உயர் பொறுப்பிற்கு வரும் ஒருவர் பேசும் பேச்சுக்கள் மற்றும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்கு உரியதாகவும் - மூடநம்பிக்கைக்கு உட்பட்டதாகவும் அமைவது ஏற்கத்தக்கதல்ல. சரியானதும் அல்ல.
இந்திய ஜனாதிபதியாக பல மகத்தான தலைவர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். குறிப்பாக தத்துவார்த்த துறையில் பெயர்பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஆர். நாராயணன் போன்றோரை சுட்டிக் காட்டலாம். அத்தகைய உயர்ந்த இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, இனியாவது நாம் எந்த கருத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதை நிதானித்து வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன், தன்னுடைய பதவிக் காலம் முடித்து வெளியே வரும் போது, ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். அதாவது, "அவர் பதவியில் இருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் எந்த இடத்திலும் மதம் சார்ந்த தலைவர்களின் கொட்டேஷனை பயன்படுத்தியதே இல்லை என்று குறிப்பிட்டார். (உதாரணமாக விவேகானந்தர். இராமகிருஷ்ணர் போன்றவர்கள்)" இப்படி மிகத் தெளிவாக செயல்பட்டவர்கள் இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, ஆவிகளுக்கு மயங்க ஆரம்பித்தால், ஆட்சியே நடத்த முடியாத நிலை ஏற்படும். எதிர் காலத்தில் இந்திய அரசை, அரசியல் வழி நடத்துவதற்கு பதிலாக, ஆவிகளின் வழி நடத்தும் துன்ப நிலைக்கு தள்ளப்படலாம். (இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தனிக்கதை) ஆவிகள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பலத்தை தரலாம். ஆனால், நாட்டிற்கு அது பலவீனத்தையே கொண்டு வரும்!

பிரதிபா ஜியிடம் அரசியல் ரீதியாக பல விஷயங்கள் பாசிட்டிவாக இருந்தாலும், இதுபோன்ற நெகட்டிவான விஷயங்கள் புறக்கணிக்க கூடியதல்ல. ஏடறியா - எழுத்தறியா மக்களை, மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்நேரத்தில், நீங்களே அதன் புதை சேற்றுக்குள் மூழ்குவதை ஏற்க முடியாது. ஆவி வழி அரசியல் அயோக்கியர்களுக்கே பயன்படும். மதவாத சக்திகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இது பிற்போக்கு சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இதற்கு இந்திய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
ஆவி, முன் ஜன்மம், கடவுள் போன்ற கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையானது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. இதனை ஆதிகால அடிமைச் சமூகத்தில் இருந்து ஆளும் வர்க்கம் தன்னுடைய சொத்தாக போற்றி பாதுகாத்து வருகிறது. இத்தகைய கருத்திற்கு நாம் இறையானால் நம்முடைய சிந்தனையை நாமே செயலிழக்க வைக்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.

June 27, 2007

அணு ஆயுத கப்பலை எதிர்க்க வாருங்கள்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார்பில் பேரபாயம் மிக்க அணு ஆயுதக் கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னை துறைமுகத்திற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜுலை 2 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை துறைமுகம் வாயிலருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
நீங்களும் வாருங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு எதிராகவும். அதற்கு துணை போகும் மன்மோகன் அரசுக்கு எதிராகவும் முழக்கமிடுவோம். உலக மக்களை காப்போம்!

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணு ஆயுதக் கப்பலை விரட்டியடிக்க அணித்திரள்வோம்.
------------------------------------------------------------------------------
Against Permitting US War ship "USs Nimitz" at Chennai Harbour.

Protest Demonstration in front to Chennai Harbour Gate
On
2nd July 2007 Evening 4.00 p.m.
All are Welcome. Your Voice and Hands up against American Imperialism.

June 26, 2007

அமெரிக்க அணு அரக்கனே சென்னைக்குள் நுழையாதே!

அமெரிக்க அணு சக்தி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் ஜுலை 1 அன்று சென்னை துறைமுகத்திற்கு வரவுள்ளது. ஜுலை 5 வரை சென்னையில் இக்கப்பல் முகாமிட்டிருக்கும்.
உலகின் மிகப் பெரிய போர் கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வரவிருக்கிறது.
இக்கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற ராட்சத கப்பல் உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று.
1975ம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.
மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன.
இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்தக் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நீர் போக்குவரத்துப் பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கூறுகையில்இ இந்தக் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பெருமளவில் கதிர் வீச்சு ஏற்படும். அதனால் சென்னை நகரம் முழுமையாக அழிந்து போய் விடும். அது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
இந்த ஆபத்தை விவரித்து அமெரிக்க அணு சக்தி கப்பலை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய அமைச்சரவைச் செயலாளர்இ கப்பல் துறை செயலாளர்இ சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆகியோருக்கு நரேந்திர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
பயங்கர ஆயுதங்கள் அணு உலைகளுடன் வரும் இந்த அமெரிக்கக் கப்பலால் சென்னை துறைமுகத்தில் பெரும் பீதி நிலவுகிறது.
ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் உள்ளது என்ற பெயரில் ஈராக் நாட்டை அழித்து துவம்சம் செய்த அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் சதாமையும் துக்கிலிட்டது. மொத்தத்தில் அந்நாட்டின் இறையாண்மையையே அழித்து நொறுக்கியது.
தற்போது ஈரான் மீது கண் வைத்திருக்கும் அமெரிக்கா. அந்நாட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தடை விதிக்க கோருவதோடு முற்றிலுமாக கைவிட வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறது. அடுத்த ஒரு போர்ச் அமெரிக்கா தயார் செய்து வருகிறது.
அதே போல் வடகொரியா. சிரியா. கியூபா என பல்வேறு நாடுகளை ரவுடிகள் நாடுகளாக பட்டியலிட்டுள்ளதோடு. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் இறையாண்மைக்குள் மூக்கை நுழைத்து வருகிறது.
இந்திய ஆட்சியாளர்களும் நாளுக்கு நாள் அமெரிக்க உலக ரவுடிக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்து வருகின்றனர். அமெரிக்காவை நம்பிய எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. உலகம் முழுவதும் அணு சக்தி உற்பத்திக்கு தடை கோரும் அமெரிக்க கப்பல் அதுவும் அணு உலைகளைக் கொண்டு இயங்கும் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் போர்க்கப்பல் என்பதோடு மட்டுமல்ல அது தனக்குள்ள பேரழிவு மிக்க அணு ஆபத்தையும் கொண்டுள்ளது. இத்தகைய கப்பலில் ஏதாவது சிறு ஆபத்து நேர்ந்தால் கூட அது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும் - ஆந்திரா உட்பட புல் - பூண்டு இல்லாமல் அழியும் ஆபத்து உள்ளது. இத்தகைய அபாயகரமான கப்பலை சென்னைக்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்-யை இந்தியாவிற்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


லிட்டில் பாய். பேட் பாய் என்று ஹிரோஷிமா - நாகாசாகியை அழித்து மனித குலத்தையே நாசமாக்கிய அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னையை அழிக்க அனுமதிக்கலாமா? ஆர்த்தெழுவோம் அணு அரக்கனை விரட்டியடிக்க!
ஈராக்கை அழித்த அரக்கனை சென்னையை அழிக்க விடலாமா? அகிம்சையை விதைத்த மண்ணில் அரக்கர்களை அனுமதிக்கலாமா? மனித குலத்தை மண்ணுலகிற்கு அனுப்பும் அமெரிக்க போர் வெறியை - நாடுபிடிக்கும் நாட்டாண்மையை நிர்மூலமாக்குவோம்!

June 22, 2007

மதம் மாறும் டோணி!

இங்கிலாந்து பிரதமர் டோணி பிளேர், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார். இதற்காக போப்பாண்டவரை சந்தித்து கத்தோலிக்கராக மாறத் திட்டமிட்டுள்ளார்.
டோணி பிளேர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த நிலையில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவுக்கு மாற அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக வாட்டிகன் சென்று போப்பாண்டவரை சந்தித்து அவர் முன்னிலையில் கத்தோலிக்கராக மாறவுள்ளார். அடுத்த புதன்கிழமை பிளேர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார். நிதித்துறை அமைச்சர் கார்டன் பிரவுன் புதிய பிரமதராக பதவியேற்கவுள்ளார். பிளேரின் மதப் பிரிவு மாற்றம் குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரோம் நகருக்கு நாளை பிளேர் செல்கிறார். பின்னர் போப்பாண்டவரைச் சந்தித்து மாற்றம் குறித்து அவரிடம் விவாதிக்கிறார். பின்னர் மாற்றம் நடைபெறும் என்றார். பிளேரின் மனைவி செர்ரி மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹலோ நானும் உங்களைப் போலத்தான் நம்ம சிக்ஸர் டோனியாக்கும் என்று ஆவலோடு வந்தால் டோணி பிளேயராகிப் போச்சு! பரவாயில்லை. இருந்தாலும் இந்த சப்ஜக்டையே விவாதமாக்கிடலாமே!
நல்லகாலம் டோணி இங்கிலாந்தில் பிறந்தார். இந்தியாவில் இருந்திருந்தால் சங்பரிவாரின் கோபத்திற்கு ஆளாகியிருப்பார்.
மதம் மாறுவது ஒரு தனிநபரின் உரிமை. சமூகத்தின் உரிமை. எந்தக் காலத்தில் எது மனிதனுக்கு நன்மை புரியும் என்று அவன் அல்லது சமூகம் நம்புகிறதோ அதற்கு மாறிக் கொண்டேதான் வந்திருக்கிறது சமூகம். இந்தியாவில் கூட என்றைக்கும் ஒரே மதம் இருந்தது இல்லை.
ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தொடரும் கிராம தெய்வ வழிபாடு. இது ஒவ்வொரு குலத்திற்கும் - குடும்பத்திற்கும் மாறுபடும். பாரம்பரியமாக தொடர்ந்து கொண்டிருப்பது. இதையும் தாண்டி சமணம். ஜைனம். பெளத்தம். சார்வாகம். மீமாம்சம் என பல எதிரும் புதிருமான நம்பிக்கைகளைக் கொண்ட கொள்கைகள் இந்தியாவில் நிலவி வருகிறது. இந்து மதம் என ஒன்று இதுவரை இந்தியாவில் இல்லவே இல்லை. இதை உருவாக்கியது பிரிட்டிஷ் கிறித்துவர்கள்தான். இந்தியாவில் இன்றைக்கும் சைவமும் - வைணவமும் ஒன்றல்ல. இருவரின் கொள்கைகளும் வெவ்வேறானது. இதையும் தாண்டி பிராமணீ இந்து மதம் கோலோச்சுகிறது. இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுத்துவ வர்க்கம் தனது தேவைக்கு ஏற்ப உருவாக்கியதே மனுதர்மம். இந்த ஆண்டான் - அடிமை சமூகத்தை இந்திய வடிவில் நீடிக்கச் செய்தது. இன்றைக்கும் இதன் தாக்கம் இந்தியாவில் வலுவாக ஆலம் விழுதுகளைப் போல் ஊன்றியுள்ளது. இத்தகைய கடை நிலை மனிதனை இந்து மதம் மனிதனாகவே மதிப்பதில்லை. இவர்களை மனிதனாக முதலில் மதித்த மதங்கள் பெளத்தமும் - கிறித்துவமும் - இசுலாமும்தான். காலப் போக்கில் இவர்களும் மனுதர்மத்துக்குள் சிக்கி விட்டனர் என்பது வேறு கதை. இருப்பினும் சமூக இழிவிலிருந்து மீள வேண்டும் என்று கருதிய மனிதர்கள் தங்களது மதங்களை - கடவுள்களை மாற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அது அவர்களது உரிமை. எது அவர்களுக்கு சுதந்திரம் தருகிறதோ அதை அவர்கள் நாடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பா.ஜ.க. - சங்பரிவாரம் இதனை சமூக பிரச்சினையாக கருதாமல் மதப் பிரச்சினையாக - இந்து மதத்திற்கு எதிராக மற்ற மதங்களை நிறுத்தி மனிதர்களுக்குள் மோதலை உண்டு பண்ணி வருகிறது. மென்மையான இந்துத்துவ வாதியான ஜயலலிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்தான் மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார். இதனைப் பின்பற்றி ராஜஸ்தானில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தில் கையெழுத்து இடமாட்டேன் என்று திருப்பி அனுப்பிய உத்தமர்தான் தற்போதைய ஜனாதிபதி போட்டியில் இருக்கும் திருமதி பிரதீபா பாட்டில் என்பது பெருமைப்பட வேண்டிய விசயம்.
இந்தியாவில் மதம் மாறலாம். ஆனால் ஜாதி மாற முடியாது! ஜாதியிலிருந்தும் விடுபட முடியாது. இது மனுதர்மம் - இந்திய அடிமைத்தனம் நமக்கு பூட்டிய அடிமைத்தளை. இத்தகைய நிலையிலிருந்து சமூகத்தை மீட்சிக்கு கொண்டு வர தற்போது இருக்கும் சமூக அமைப்பை தலைகீழாக மாற்ற வேண்டும். டோனியின் சிக்சர்களைப் போல் நிலவுடைமை - ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக நாம் அணித் திரளவேண்டும். இதற்கு தடையாக இருக்கும் சங்பரிவாரம் போன்ற மதவாத - அடிப்படைவாத சக்திகளை - பாசிஸ்டுகளை முற்றிலும் துடைத் தெறிய வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட போராட்டங்கள் அவசியம்.
இறுதியாக. டோனி பிளேயர் மதம் மாறலாம். ஆனால். அவரது வர்க்கம் மாறாது. அதாவது ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரியும் வர்க்கத் தன்மை மாறாது. அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதிலும் - ஈராக் மக்களை கொன்றொழிப்பதிலும் - உலக செல்வங்களை சுறையாடும் ஏகாதிபத்திய குணம் மாறாது. ஒரு வேளை பாவ மன்னிப்பிற்காக டோனி மதம் மாறுகிறாரோ? அவருக்கே வெளிச்சம்!

June 21, 2007

அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்!

கலாம் மீண்டு(ம்) வருவாரா?
எதிர்கால ஜனாதிபதிக்கான போட்டியில் குதிக்கத் தயாராகி விட்டார் தற்போதைய ஜனாதிபதி கலாம். கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி. அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு இன்னொரு மாமா. தமிழ் ஆர்வலர். கட்ட பிரம்மாச்சாரி. இதுதான் அவருடைய ஒட்டுமொத்த பலம்.
இதையும் தாண்டி கலாமுக்கும் - பொதுவாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? அவருக்கும் அரசியலுக்கும் உள்ள நட்புறவு என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் ஏதாவது ஒன்றில் பணியாற்றிய அனுபவம் உண்டா? மேலும் மதச்சார்பற்ற இந்தியாவில் செயல்படும் கட்சிகளின் கொள்கைகள். செயல்பாடுகள் பற்றி அவரது மதிப்பீடு என்ன? என்ற கேள்விகளை இந்த நேரத்தில் முன்வைக்காமல் வேறு சமயத்தில் விவாதிக்க முடியாது?
ஜனாதிபதி பதவி என்பது அரசு - ஆட்சி இவற்றோடு தொடர்புடைய மிக முக்கியமான உயர்ந்த பதவி. இத்தகைய பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும். யார் பொருத்தமானவர் என்பதும் மிக முக்கியமான ஒரு கேள்வி!
உதாரணமாக இஸ்ரோவின் தலைவராக அம்மா ஜயலலிதாவையோ அல்லது சந்திரபாபு நாயுடுவையோ தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் கலாமின் தேர்வும்!
காந்திய கொள்கைகளை கடைப்பிடிக்கும் கட்ட பிரம்மச்சாரி கலாமை யாருடைய வேட்பாளராக முன்மொழியப்பட்டார். யார் காந்தியை கொன்றார்களோ - ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் கோட்சேவின் தற்போதைய வாரிசுகளான பா.ஜ.க.வின் வேட்பாளர்தான் கலாம் என்பதை மறப்பதற்கு இல்லை.
இந்திய நாட்டில் மதவெறியைத் தூண்டிவிட்டு பல ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்கிய இந்து மதவெறி - பாசிஸ்டுகளின் வேட்பாளராகவே கலாம் களம் இறங்கினார். இந்துத்துவ பாசிசம் குறித்து கலாமின் பார்வை என்ன?
மூச்சு 30 தடவை இந்தியா வல்லரசாக வேண்டும் என்றும் முழங்கும் கலாம். இந்து மதவெறி பாசிசம் குறித்து கண்டித்ததுண்டா? இவ்வளவு ஏன் இராமர் பாலம் என்ற பெயரில் பொய்யை பரப்பும் இந்துத்துவ சக்திகளின் சதிச் செயலுக்கு எதிராக இந்த சுத்து சுயம்புவான விஞ்ஞானியின் பதில் என்ன? அது வெறும் மணல் மேடு என்று கூறுவாரா? அல்லது இராமர் பாலம்தான் என்று முழங்குவாரா?
இந்தியாவில் 32 கோடி பேர் கடுமையான வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்துக் கொண்டிருக்கையில் - தங்களது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் பா.ஜ.க. ஆட்சியில் அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்! என்ன இந்தியா வல்லரசாகி விட்டதா?
இந்தியா 2020 என்று கனா காணும் கலாம். இந்தியாவுக்கு இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று கூறி தற்போதைய ஜனநாயக வடிவத்தை கேலிக்கூலித்தாக்கும் இவர் அரசியல் கடமையை நிறைவேற்றும் உயர் பொறுப்புக்கு பொருந்துவாரா?
நாள்தோறும் வல்லரசு கூச்சல் போடும் இவர் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்திட என்ன செய்தார்? இவரது வல்லரசு கனவுகள் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் - பெரும் நிறுவனங்கள் கனவுதானேயொழி சாதாரண குடிமகனின் கனவல்ல!
தற்போது நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறது. தன்னுடைய வேட்பாளர் இவர்தான் என்று உறுதியாக கூறுவதற்கு மாறாக இழிவான செயலில் இறங்கியிருக்கிறது. ஒரு கொள்கை போட்டியைக் கூட நடத்த முடியாத கேடுகெட்ட நிலையில் இருக்கிறது பா.ஜ.க. மற்றும் ஜோக்கர் கூட்டணி. (ஜயலலிதா - சந்திரபாபு கூட்டணி). எப்படி சிவாஜி பற்றி பிரம்மை உருவாக்கி வியாபாரம் நடைபெறுகிறதோ அதேபோல்தான் கலாம் பற்றிய பிரம்மை உருவாக்கப்படுகிறது.
எனவேதான் இடதுசாரிகள் மிகத் தெளிவாக கூறிய கருத்து இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் அரசியல் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். பொதுவாழ்வில் தூய்மையானவராக இருக்க வேண்டும். இத்தகைய அம்சங்களை ஒருங்கே கொண்டிருப்பவர்தான் திருமதி பிரதீபா பாட்டில்.
கலாமின் கனவு கரையேறுமா? கரையொதுங்குமா? என கேள்வி எழுப்புவது பொறுத்தமாக இருக்காது. கலாமின் கனவு கலைய வேண்டும் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
இது தொடர்பான மற்ற பதிவுகள்:

June 20, 2007

கடவுளின் இல்லம்

கடவுளின் இல்லம்


பிரேம்சந்த்
தமிழில்: ச. வீரமணி
மூன்று நாட்களாக சுகியா சோறோ, தண்ணீரோ எதையும் தொடவில்லை. கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவளுடைய மகன் அவளுக்கு முன்னால் பிரக்ஞையற்றுக் கிடந்தான். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் கண்களையே திறக்க வில்லை. சுகியா சிறிது நேரம் அவனைத் தூக்கி வைத்திருந்தாள். பின்னர் மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். திடீரென்று அவனுக்கு என்னவாயிற்று? யாராலும் சொல்ல முடியவில்லை. சுகியா ஏற்கனவே தன் இரு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். அவள் கணவன் அதற்கு முன்னாலேயே போய் விட்டான். வாழ்க்கையில் அவளுக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, இந்தக் குழந்தைதான். அவனை ஒரு நிமிடம் கூட அவள் பிரிந்திருக்க மாட்டாள். அவள் பிழைப்புக்காக புல் அறுக்கச் செல்லும் போதும், அவற்றை விற்கச் செல்லும்போதும் அவன் கூடவே இருப்பான். அவள், அவனுக்கு ஒரு பொம்மை அரிவாள் வாங்கிக் கொடுத்திருந்தாள். அவன், ''என்கிட்டே ஒரு நிஜ அரிவா கொடு'ம்மா. நானும் உன்னோடு நிறைய புல் அறுப்பேன். அப்புறம் நீ ஒன்னும் வேலை செய்ய வேணாம். நானே மார்க்கெட்டுக்குப் போயி, வித்திட்டு வருவேன்'' என்று சொல்வான்.

''எனக்கு என்ன வாங்கிட்டு வருவே, மகனே'' என்று அவள் கேட்பாள். ''உங்களுக்கு சிவப்பு புடவை வாங்கிட்டு வருவேன்'' என்று ஜைவான் கூறுவான். கள்ளங்கபடமற்ற அவனின் மழலைப் பேச்சும் மற்றும் அவனது நடவடிக்கைகளும் ஒன்றன்பின் ஒன்றாக, எதிரே உட்கார்ந்திருக்கும் அவள் கண்முன்னே வந்து கொண்டிருந்தன. இரவு நீண்டு கொண்டே போனது. சுகியா வருத்தத்தில் மூழ்கிப் போனாள். எந்தக் கடவுள் கண் திறந்து என் கஷ்டங்களைப் பார்ப்பார்? என் குழந்தைக்காக எந்த அம்மனிடம் வேண்டுவது?

இதே சிந்தனைகளுடன் அவள் சற்றே கண்ணயர்ந்தாள். திடீரென்று அவள் கணவன் அவள் பக்கத்தில் வந்து நிற்பதைப் பார்த்தாள். அவன் தன் கையை குழந்தையின் நெற்றியில் வைத்துப் பார்த்துவிட்டு, சொன்னான்:

''அழாதே சுகியா, நம் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகிவிடும். நாளைக்கு, தாகூர்ஜி காலடியில் கொண்டுபோய் குழந்தையைக் கிடத்தி, வேண்டிக்கொள். அவர்தான் நம்மைக் காப்பவர்.''

உடனே சுகியா எழுந்துவிட்டாள். கனவில் வந்து கணவன் சொன்னது அவளை மலர்ச்சிபெறச் செய்து விட்டது. ''அவர் இன்னும் என்னைப் பத்தியே நினைச்சிக்கிட்டிருக்காரு'' என்று சுகியா முணுமுணுத்துக் கொண்டாள்.

இவ்வாறான சிந்தனைகள் அவளை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தின. அவள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துச் சொன்னாள்:

''ஓ, கடவுளே! இவனை மீண்டும் நல்லபடியா செஞ்சுடு. நான் உன்னை முழுசா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். பாழாய்ப் போன இந்த விதவை மீது இரக்கம் காட்டு.''

கொஞ்ச நேரம் கழித்து, ஜைவான் தன் கண்களைத் திறந்து குடிக்கத் தண்ணீர் கேட்டான். தாய் அவனுக்குக் கொஞ்சம் கொடுத்தாள். தண்ணீரைக் குடித்தபின் ஜைவான் கேட்டான்

''இன்னும் ராத்திரியாகத்தான் இருக்கா'ம்மா?''

''சீக்கிரம் விடிஞ்சிடும், மகனே'' என்று கூறிய சுகியா, பின்னர், ''உனக்கு இப்போ எப்படி இருக்கு?'' எனக் கேட்டாள்.

''பரவாயில்லை'ம்மா. நான் சீக்கிரம் நல்லாயிடுவேன்'' என்று ஜைவான் கூறினான்.

''கடவுள்தான் உன்ன நல்லாக்கி இருக்கார், மகனே'' என்று கூறிய சுகியா, ''உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?'' என்று கேட்டாள்.

''எனக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு'ம்மா''

''சர்க்கரை வேணாம் மகனே, ஜுரத்தில் கிடந்திருக்கிற உனக்கு ஒத்துக்காது. கொஞ்சம் கஞ்சி வச்சுத் தர்ரேன்'' என்று சுகியா சொன்னாள்.

''கொஞ்சமாவது சர்க்கரை கொடு'' ஜைவான் வற்புறுத்தினான்.

''நான் உன்னக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வேணாம் கண்ணா!''

ஆயினும் ஜைவான் கேட்டதை அவளால் தட்ட முடியவில்லை. கூடையைத் திறந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக் கொடுத்தாள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து யாரோ கூப்பிட்ட குரல் கேட்டு அவள் வெளியே வந்தாள். ஜைவான் கூடையிலிருந்து மேலும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டான்.

ஜைவானுக்கு அன்று பகல் முழுதும் நன்றாக இருந்தது.கொஞ்சம் சோறு கூட சாப்பிட்டான். வீட்டின் கதவருகில் உட்காரந்து அவன் நண்பர்கள் விளையாடுவதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான். குழந்தைக்கு நன்றாகிவிட்டது என்றே சுகியா கருதினாள். கொஞ்சம் காசு புரட்டிக் கொண்டு தாகூர்ஜி கோவிலுக்குப் போய், வேண்டுதலை நிறைவேத்தணும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அப்போது மிகவும் குளிர் காலம். சீக்கிரமே இரவு வந்துவிட்டது. மாலையானதும் ஜைவானுக்கு மீண்டும் ஜுரம் வந்து விட்டது. சுகியாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடனே சென்று கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேத்தாததால்தான் மகனுக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ என பயந்தாள். எனவே, உடனடியாக பூசைக்கு வேண்டிய சாமான்களை சேகரித்தாள். தன்னுடைய ஆண்டையினுடைய தோட்டத்திலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தாள். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வளர்ந்திருந்த துளசியையும் கொஞ்சம் பறித்துக் கொண்டாள். தாகூர்ஜிக்கு பூசை செய்வதற்கு இன்னும் தேவைப்பட்டது, கொஞ்சம் இனிப்பு வாங்கணும், அதற்கு ஒரு அணா தேவைப்படும். அவள் அந்தக் கிராமம் முழுக்க சுற்றி வந்து யார் யாரிடமோ கடனாகக் கேட்டுப் பார்த்தாள். யாரும் அவளுக்குக் கடன் தரவில்லை. அவள் தன் வெள்ளி வளையல்களை அடகு வைத்து அதன் மூலம் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கொண்டாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போனாள்.

கோவில் மணி முழங்கிக் கொண்டிருந்தது. இதுதான் பூசை செய்யும் நேரமாகும். ஒரு சில பக்தர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். சுகியாவும் சென்று கோவிலின் முன் நின்றாள். கோவிலுக்கு வெளியே வந்த பூசாரி அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக, ''உனக்கு என்ன வேணும்?'' எனக் கேட்டான்.

சுகியா, கோவில்படிகிளன் அருகே வந்து நின்றுகொண்டு, ''சாமி, என் குழந்தைக்கு உடல் சரியாயிடுச்சுன்னா, அவனை தாகூர்ஜியின் காலடியில் கிடத்துவதாக, வேண்டிக்கிட்டேன். வேண்டுதலை நிறைவேத்துறதுக்காக வந்திருக்கேன், சாமி!'' என்றாள்.

கோவிலில் இருந்த பக்தர்கள் எல்லாம் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். சுகியோ சக்கிலியப் பெண். இவள், இதுபோன்ற வேண்டுதலுடன் வருவாள் என்பதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. ஆயினும் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பூசாரி, ''நீ, இந்த இடம் பூராவையும் தீட்டாக்கணும்னு பாக்கிறியா? போ, போ.'' என்று விரட்டினார்

அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர், ''தாகூர்ஜியைப் புனிதப்படுத்த வந்திருக்கிறாள்'' எனக் கிண்டலடித்தார்.

''பூசைக்கு வேண்டிய எல்லாமும் கொண்டு வந்திருக்கேன், சாமி. எல்லாத்தையும் தாகூர்ஜி காலடியில் வச்சுட்டு, தொட்டுக் கும்பிட்டுட்டுப் போயிடறேன், சாமி'' கெஞ்சினாள், சுகியா.

''உனக்கு என்ன, பைத்தியமா?'' பூசாரி அதட்டினார். ''எப்படி நீ தாகூர்ஜியின் கால்களைத் தொட முடியும்?''

சுகியா இப்போதுதான் முதன்முறையாக தாகூர்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஆச்சரியம்.

''ஏன், சாமி! தாகூர்ஜி உலகத்தக் காப்பதற்காக வந்தவர், இல்லையா? பாவம் செய்தவங்க, அவர்கிட்ட வந்து, முறையிட்டு, தங்கள் பாவத்தைப் போக்கி, தங்களைக் காப்பாத்த சொல்வதில்லையா? நான் தொடுவதால் அவர் எப்படி தீட்டாவார்?'' என மிகவும் அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.

''நீ ஒரு சக்கிலியச்சிதானே?'' பூசாரி கேட்டார்.

''ஆம், ஆனால், இதே கடவுள்தான் எங்களையும் படைச்சார், இல்லீங்களா, சாமி''

சுகியாவின் வாதம் எல்லாம் கொஞ்சமும் எடுபடவில்லை.

''எங்களுக்கும் இவர்தான் கடவுள். ஒண்ணும் வித்தியாசம் இல்லை, தயவுசெய்து என் வேண்டுதலை நிறைவேத்த விடுங்க'' சுகியா ரொம்பவும் கெஞ்சினாள்.

சற்று முன் கிண்டல் செய்த பக்தர் மிகவும் வெகுண்டு, ''இந்த இடத்தை பூராவும் தீட்டாக்குவதற்கு முன்னாடி, இங்கேயிருந்து ஓடிப்போயிடு, பிசாசே! இந்த உலகத்துக்கு என்ன வந்துடுச்சு, சக்கிலியர்கள் கூட இந்தக் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்யணும்னு கேட்கிற நிலை வந்துடுச்சே'' என்று கத்தினார்.

''உலகம் சீக்கிரம் அழியப் போவுது. ஏழை தாகூர்ஜி, சக்கிலியர்களிடமிருந்து கூட பூசை புனஸ்காரங்களைப் பெறக்கூடிய நிலைக்கு வந்துட்டாரே'' என்று மற்றொருவர் புலம்பினார்.

அது குளிர்கால மாலைப் பொழுது. குளிர்காலத்திற்கான உடைகள் அவளிடம் இல்லை. சுகியா நடுங்கிக் கொண்டே நின்றாள். மதத்தின் காவலர்கள் உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை, தாயின் உடம்பிலிருந்து கதகதப்பைப் பெறுவதற்காக அவளை நடுக்கத்துடன் மிகவும் கட்டியணைத்துக் கொண்டது.

சுகியா மிகவும் உறுதியுடன் அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டாள். எப்படியாவது கோவிலுக்குள் சென்று தாகூர்ஜியின் காலடியில் குழந்தையை வைக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் இருந்தாள்.

''தாகூர்ஜி, யாருடைய தனிச்சொத்தும் கிடையாதே!'' அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ''எங்களைப் போன்ற கீழ் சாதிக்காரர்களுக்கும் அவர்தானே கடவுள்! என்னைத் தடுப்பதற்கு இவர்கள் யார்?''

இவ்வாறு அவள் நினைத்தாலும் அவர்கள் தன்னைப் பலாத்காரமாகத் தூக்கி வெளியே எறிந்து விடுவார்களோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது. எனவே, அவர்களுக்கு நேராக, கடுமையான காரியங்கள் எதையும் செய்வதை அவள் தவிர்த்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை. கோவிலுக்குச் சற்று தூரத்தே இருந்த மரத்தடிக்குச் சென்று மறைந்து நின்று கொண்டாள்.

கோவிலில் பிரார்த்தனைகள் முடிந்ததும், பக்தர்கள் பகவத்கீதையிலிருந்து சில ஸ்லோகங்களைப் பாடினார்கள். அவர்கள் ஸ்லோகங்களைப் பாடி முடிக்கும்போது மணி பத்தாகி விட்டது. அதுவரை சுகியா அங்கேயே மரத்தடியிலேயே காத்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் பக்தர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பூசாரி மட்டுமே இருந்தார். சுகியா மீண்டும் வந்து, கோவிலின் வராந்தாவிற்கருகில் நின்றாள். பூசாரி, கடவுளை வேண்டிப் பரவசத்துடன் பாடிக்கொண்டே இருந்தார். காலடி சத்தம் கேட்பதைக் கேட்டு, தலையைத் திருப்பிப் பார்த்தபோது, சுகியா நிற்பதைக் கண்டார். மிகவும் எரிச்சலடைந்து, ''இன்னும் நீ இங்கேயேவா இருக்கிறாய்?'' என்றார்.

''சாமி, நான் மிகவும் அதிர்ஷ்டங் கெட்டவள். என் வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே பிடிமானம், இந்தக் குழந்தைதான். மூணு நாளா இவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறான்.'' கூறிக் கொண்டிருக்கும்போதே கதறத் தொடங்கி விட்டாள். அவள் கதறல் பூசாரியினுடைய தூங்கிக் கொண்டிருந்த மனிதாபிமானத்தை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆயினும், அவளைக் கோவிலுக்குள் விட அவர் பயந்தார். ஒரு சக்கிலியச்சி, தாகூர்ஜியின் காலடிகளைத் தொடுவதால் ஏற்படும் தீட்டால் கிராமத்திற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால்? என்ன நிகழும் என்று யாரறிவார்? எப்படியாவது அவளை அனுப்பி வைப்பதற்காக, அவர் கூறினார்:

''வீட்டுக்குப் போய், பிரார்த்தனை செய். கடவுள் கிருபை இருந்தால், உன் மகன் விரைவில் குணமடைந்து விடுவான். நான் கொஞ்சம் துளசி தீர்த்தம் தர்றேன். அதை அவனுக்குக் கொடு.''

சுகியா கெஞ்சினாள். ''சாமி, நான் கடவுளின் காலைத் தொட்டுக் கும்பிட அனுமதிங்க சாமி! பூசைக்கான சாமான்கள் கடன் வாங்கி, வாங்கிட்டு வந்திருக்கேன். தாகூர்ஜியை வேண்டிக்கொள்ள சொல்லி, செத்துப்போன என் கணவர், கனவில் வந்து கேட்டுக்கிட்டாரு. என் கிட்டே இப்போது ஒரு ரூபா இருக்கு. இவை வச்சுக்கிட்டு, கடவுள் காலடியில விழ என்னை அனுமதிங்க, சாமி!''

ஒரு ரூபா இருக்கிறது என்று சுகியா சொன்னதும், பூசாரிக்கும் கொஞ்சம் சபலம் வந்தாலும், யாருக்கேனும் தெரிந்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்ற பயமும் வரவே, அதனைப் பெற்றுக்கொள்ளாமல் அவரைத் தடுத்துவிட்டது. தன் சபலத்தை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர் கூறினார்:

''முட்டாள் மாதிரி பேசாதே, உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால், கடவுளின் கால்களில் விழுவதால் மட்டும் ஒன்றும் நடந்து விடாது. மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய தாயத்து ஒன்று என்னிடம் இருக்கு. அதனை நான் உனக்கு ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறேன். குழந்தையின் கழுத்தைச் சுற்றி அந்தத் தாயத்தைக் கட்டு. நாளைக்கு அவனுக்கு எல்லாம் சரியாகிவிடும்.''

''ஆனால், கடவுளின் கால்களைத் தொடுவதற்கு என்னை அனுமதிக்க மாட்டீங்களா?'' அவள் மன்றாடினாள்.

''இதற்கு முன் எவரும் செய்யாத காரியத்தை நீ செய்வதற்கு நான் எப்படி அனுமதிக்க முடியும்? அதன் விளைவாக கிராமத்திற்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னாவது? நீ இந்தத் தாயத்தை எடுத்துக் கொண்டு, போ. கடவுள் மனது வைத்தால் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் இன்றிரவே சரியாகிவிடும்'' என்று பூசாரி சமாதானம் செய்தார்.

சுகியா தன்னுடைய வளையல்களை இரண்டு ரூபாய்க்கு அடகு வைத்திருந்தாள். ஒரு ரூபாய் ஏற்கனவே செலவாகிவிட்டது. மீதம் இருந்த ஒரு ரூபாயைத் தற்போது பூசாரியிடம் கொடுத்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் தாயத்தை, குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கட்டினாள். ஆனாலும், இரவு ஆக ஆக, அவனுடைய ஜுரம் அதிகமாகியது. அதிகாலை 3 மணியிருக்கும்போது அவனுடைய கைகளும் கால்களும் மிகவும் ஜில்லிட்டுப் போய்விட்டன. சுகியா மிகவும் பயந்தாள். தாகூர்ஜியின் காலடியின் அவனை வைத்து, சாமியிடம் வேண்டாததற்காகத் தன்னைத் தானே மிகவும் கடிந்துகொண்டாள். நேரம் ஆக ஆக, அவள் நிம்மதியின்மையும் அதிகமாகியது. இனி நேரத்தை வீணாக்கிப் பயன் இல்லை. கோவிலுக்கு மறுபடியும் செல்வதென அவள் தீர்மானித்தாள். ''தாகூர்ஜி அப்படி ஒன்றும் பூசாரியின் சொந்த சொத்து கிடையாதே, அவர் எப்படி என்னைப் பூசை செய் விடாது தடுக்க முடியும்?'' இவ்வாறு சொல்லிக்கொண்டே, குழந்தையை ஒரு கம்பளியில் போட்டுக் கட்டிக்கொண்டு, மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டாள்.

கடும் இருட்டு. குளிர் காற்று கோரமாக வீசிக் கொண்டிருந்தது. வயல் வெளிகள் வழியாகத்தான் கோவிலுக்குப் போக வேண்டும். சில சமயங்களில் நாய்கள் குரைத்தன. சில சமயங்களில் நரிகள் ஊளையிட்டன. மரங்கள் சலசலப்பது பேயிரைச்சல் போல் வந்தது. கிராமத்தின் இப்பகுதியில் பேய்கள் நடமாடுவதாக மக்கள் பேசிக்கொள்வதுண்டு. இதுபோன்ற இரவு நேரத்தில் ஆண்கள் கூட இந்தப் பக்கத்தில் வருவதற்குத் துணிய மாட்டார்கள். சாதாரண காலமாக இருந்திருந்தால், லட்சம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட, சுகியா இவ்வாறு இந்தப் பக்கம் வர ஒப்புக்கொண்டிருக்க மாட்டாள். ஆனால், இப்போது? ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய எந்த சத்தத்தையும் அவள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தாகூர்ஜியின் பெயரை மட்டும் வாயில் உச்சரித்துக் கொண்டே, கோவிலை நோக்கி விடாப்பிடியாக சென்று கொண்டிருந்தாள்.

கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது, கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. எங்கே தாகூர்ஜி தப்பித்து ஓடிவிடுவாரோ என்ற முறையில் கோவில் கதவுகள் மூடப்பட்டு, சங்கிலிகளால் இணைக்கப்பட்டு, ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த அறையில் பூசாரி தூங்கிக் கொண்டிருந்தார். சுகியா, குழந்தையைக் கீழே கிடத்தினாள். ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து, வெறித்தனமாகப் பூட்டை உடைப்பதற்காக அடிக்கத் தொடங்கினாள். விரைவில் சங்கிலி உடைந்து கழன்று கொண்டது. ஆனால் அந்த சத்தத்தில் பூசாரி எழுந்துவிட்டார். அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைய யத்தனித்த சமயத்தில், பூசாரி, ''திருடன்'', ''திருடன்'' என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்தார். பூசாரியின் சத்தத்தைக் கேட்டு நிறைய பேர் ஓடி வந்தனர். சுகியா கொஞ்சமும் அஞ்சவில்லை. மிகவும் அமைதியாக அவர்களைப் பார்த்து, ''இங்கே திருடன் யாரும் இல்லை. தாகூர்ஜியைப் பூசிப்பதற்காக நான் இங்கே வந்திருக்கேன்'' என்றாள்.

பூசாரி, ''என்ன தப்பு செய்ய இருந்தாய்?'' என்று கூறிக்கொண்டே அவள் தலைமுடியைப் பிய்த்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தார். ''இந்தத் தீண்டத்தகாத சக்கிலியப் பெண், தாகூர்ஜியைத் தீட்டாக்கிவிட்டாளே'' என்று கத்தினார்.

பூசாரியின் வார்த்தைகள் அநேகமாக அங்கே நின்றிருந்த அனைவரையுமே சுகியா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. கல் கடவுளுக்கு அவள் செய்த அவமதிப்புக்குப் பழி தீர்க்கும் வகையில் அனைவரும் அவள் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்தனர். திடீரென்று ஒரு சிலர் அவளைக் கீழே தள்ளினர். குழந்தை அவள் கையிலிருந்து கீழே விழுந்தது. குழந்தையை எடுக்க அவள் குனிந்தாள். ஆனால் அதற்குள் அதன் உயிர் பிரிந்து விட்டது.

''ஐயோ, என் குழந்தையைக் கொன்னுட்டாங்களே,'' சுகியா பெரும் வலியுடன் ஓவென்று கதறினாள். கூட்டத்திலிருந்த அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.

அவள் கூட்டத்தினரைப் பார்த்து, ''இப்போது ஏன் வாயை மூடிக்கிட்டிருக்கீங்க. குழந்தை செத்துப்போச்சு. என்னையும் கொன்னுடுங்க. அப்போதான் உங்க தாகூர்ஜி சமாதானமாவார். நீங்களும் பாதுகாப்பா இருக்கலாம்.''

யாரும் அசையவில்லை. அங்கே மயான அமைதி நிலவியது. சுகியா இறந்த குழந்தையை மீண்டும் பார்த்தாள். அனைவரின் நெஞ்சையும் பிழியக்கூடிய அளவிற்குக் கதறிக்கொண்டே கீழே அவளும் சாய்ந்து மூர்ச்சையாகிப் போனாள். பின்னர் அவள் எழுந்திரிக்கவே இல்லை.

தன் குழந்தையின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த ஒரு தாயின் க்தை இவ்வாறு முடிவுற்றுவிட்டது.

June 18, 2007

அம்மா வலையில் சிக்குவாரா அப்துல்கலாம்!

இந்திய அரசு குறித்து நம்முடைய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் இறையாண்மைவாய்ந்த சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று பொறித்துள்ளது. இத்தகைய மகத்தான கொள்கை உறுதி கொண்ட நாட்டின் அரசியல் கடமையாற்றும் உயர்ந்த பொறுப்புதான் ஜனாதிபதி என்ற மகுடம்.

இத்தகைய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரசியலில் தேர்ச்சி மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி தன்னலமற்ற பொதுச் சேவை அரசியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். நெருக்கடியான காலகட்டங்களில் பாரபட்சமின்றி நிதானமாக கடமையாற்றுபவராக இருக்க வேண்டும்.

இத்தகைய உயர்ந்த பொறுப்பு வகித்தவர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை தவிர வேறு யாரும் ஒரு முறைக்கு மேல் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். வெங்கட்ராமன் பதவி வகித்த காலங்களில் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்ற கடும் விமர்சனத்திற்கு ஆளானது. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக இந்தப் பதவியில் இருப்பவர் செயல்பட ஆரம்பித்தால் ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு செயல்டும் பொம்மலாட்ட பொம்மையாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே இந்தப் பதவியில் இருப்பவர் வில் பவுர் (ஆண்மையுள்ளவராக) செயல்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் ஐந்தாண்டு செயல்பாட்டை விமர்சன ரீதியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர் உபயோகப்படுத்தும் அரசியல் கமெண்ட்டுகளை நிச்சயமாக விமர்சிக்க வேண்டும். அதில் ஒன்று சமீபத்தில் அவர் இரு கட்சி ஆட்சிமுறை வேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஏற்கனவே நடப்பில் உள்ள ஆட்சி முறையை கடுமையாக விமர்சிப்பதாகும். இப்படி பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்ட முடியும். இன்றைக்கு மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜயலலிதா தலைமையிலான அணி ஜனாதிபதி தேர்தலில் யு.பி.ஏ.இடதுசாரி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திருமதி பிரதீபாவின் தேர்வு குறித்து அது ஒரு ஜோக் என்று ஜயலலிதா விமர்சித்தார். இந்தியாவின் ஜனாதிபதியாக விப்ரோ முதலாளி நாராயணமூர்த்யை தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னவர்தான் கலாம் உண்மையில் யார் ஜோக்கர் என்ற கேள்வி இங்கே எழுகிறது. சரி இந்த விசயத்திற்குள் நாம் தற்போது செல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.

பா.ஜ.க. தன்னுடைய எதிர்கால அரசியல் குள்ளநரித்தனத்தை பைரோன் சிங் செகாவாத் மூலம் நிறைவேற்றிக் கொள்ள கண்ட கனவில் மண் விழுந்ததால் தற்போது சுயேச்சை வேட்பாளராக பைரோன் சிங் செகாவாத்தை களம் இறக்கியுள்ளது. எப்படியாவது புறக்கடை வழியாக தங்களது ஏஜண்டை அப்பதவியில் அமர்த்த துடிக்கிறது பா.ஜ.க. அரசியலை அரசயில் ரீதியாக எதிர்கொள்ளும் திராணியற்ற வேலையில்தான் இறங்கியுள்ளது பா.ஜ.க.. பா.ஜ.க. வேட்பாளர் என்றால் என்.டி.ஏ.க்கு உள்ளோயே ஆதரவு இல்லாத நிலை வருமோ என்ற பயமே இதற்கு காரணம்.

திருமதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்தது குறித்து முன்கூட்டியே ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்று புலம்பும் வாஜ்பாய். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அப்துல் கலாமை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலா தேர்ந்தெடுத்தார்? இடதுசாரிகள் கே.ஆர். நாராயணனை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கலாம் என்று முன்மொழிந்த போது அதனை சங்பரிவார அரசியல் கண்கொண்டு நிராகரித்தவர்கள் தானே இவர்கள்.

மேலும் தற்போது புதிய யூ.என்.பி.ஏ. தனது வேட்பாளர் இவர்தான் என்று கூறுவதற்கு பதிலாக அப்பீல் விடுவது இவர்களிடையே அரசியல் ரீதியாக முடிவெடுக்க முடியாத அரசியல் தோல்வியைத்தானே வெளிப்படுத்துகிறது. ஜயலலிதா ஜனாதிபதி பதவியை அரசியலாக்க கூடாது என்று அரசியல் ஆக்க கூடாது என்று அரசியல் பேசுவது வேடிக்கையானது.

யூ.பி.ஏ. - இடது வேட்பாளரான திருமதி பிரதீபா பாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தன்னை பொது வாழ்வில் இணைத்துக் கொண்டு சிறந்த அரசியல் சேவை புரிந்திருக்கிறார். மூன்று முறை எம்.எல்.ஏ. மாநில அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் மக்களவை . மாநிலங்களவை எம்.பி. மாநிலங்களவை துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதுவரை தான் நின்ற எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர் இது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் முதுகெலும்போடு சங்பரிவாரம் ராஜஸ்தானில் கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பியவர். இந்தப் பின்னணியில் பா.ஜ.க. எப்படி இவருக்கு ஆதரவு தரும். இதற்குள் அரசியல் இல்லை என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா?

மென்மையான இந்துத்துவ கொள்கையை கடைப்பிடிக்கும் ஜயலலிதாதானே இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னோடி. இவர் கூறுகிறார் திருமதி பிரதீபா பாட்டீலின் தேர்வு குறித்த ஜோக் என்று! பல்வேறு ஊழல் மற்றும் ஆக்கிரமிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜயலலிதா மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குவதுதான் வேடிக்கையானது.

இறுதியாக சுதந்திர இந்தியாவில் சிறந்த அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்ற பெருமையோடு ஒரு பெண் என்ற அந்தஸ்தோடு ஜனாதிபதி என்ற மகுடத்தை அலங்கரிக்கும் பிரதீபா எதிர்கால இந்தியாவின் வழிகாட்டியாக அரசியல் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார் சரித்திரம் அவர் பக்கம் நிற்கும். மக்கள் அவர் பக்கம் நிற்பர் இது காலத்தின் கட்டாயம்!

ஜயலலிதாவின் அரசியல் வலையில் சிக்காமல் இருப்பாரா அப்துல் கலாம்!

June 15, 2007

பிரதீபா பாட்டில்: தலைமகளாகும் திருமகள்!பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!என ஆனந்த கும்மியடித்த மகாகவி பாரதியின் கனவு 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நனவாகிறது. இந்தியத் தலைமகளாய் - குடியரசின் தலைவராய் உயரப் போகிறார் பிரதீபா பாட்டில்.

115 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் செம்மையான அரசியல் கடமையாற்றும் மகத்தான பொறுப்புக்கு திருமதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்ததற்கு எதைச் சொல்லி பாராட்டினாலும் தகும்!

அவரது அரசியல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செம்மையான அரசியல் கடமையை கடந்த 50 ஆண்டுகாலமாக ஆற்றி வருகிறார்.

சட்டமன்ற உறுப்பினர். மாநில அமைச்சர். லோக் சபா உறுப்பினர். ராஜ்ய சபா உறுப்பினர். மாநில கவர்னர் என பல பொறுப்புகளை செம்மையாக ஆற்றியவர். கரைபடாத கரத்திற்கு சொந்தக்காரர். இதைவிட முக்கியமானது தமிழகத்தில் ஜயலலிதா கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தைப்போல ராஜஸ்தானில் சங்பரிவாரம் கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தை மிகத் துணிச்சலாக திருப்பி அனுப்பிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர். சட்டப்படிப்பு படித்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் பிரதீபா பாட்டில்.

இந்திய அரசியல் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் சுழ்நிலையில் பக்குவமான - நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற - மதச்சார்பின்மை கோட்பாட்டை உறுதியாக உயர்த்திப் பிடிக்கும் பாரதி கனவு கண்ட ஒரு பெண் இந்திய குடியரசின் தலைமகளாய் பொறுப்பு ஏற்பதை நெஞ்சார வரவேற்போம்! வாழ்த்துவோம்!!

சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் வர்ணாசிரம அதர்மம்


மத்திய அரசு நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் வடக்கில் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அநேகமாக அனை வரும் அறிந்த உண்மை. ஆனால், இட ஒதுக்கீட் டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற தமிழகத் தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.-யிலும் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்வார ‘டெகல்கா’ வார இதழ் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர் களில் தலித்துகள் 11.9 சதவீதத்தினர் மட்டுமே யாவர். உயர்கல்வி பயில்வோரில் இந்த சதவீதம் இன்னும் குறைவாகும். உதாரணமாக எம்.எஸ். (ஆய்வு) மாணவர்களில் 2.3 சதவீதமும், பி.எச்டி. மாணவர்களில் 5.89 சதவீதமுமே தலித்துகளாவர். மொத்தம் இந்நிறுவனத்தில் பயிலும் 4687 மாண வர்களில் 559 பேர்கள் மட்டுமே - அதாவது 8.3 சதவீதத்தினரே - தலித்துகள் ஆவார்கள். சுமார் 250 ஹெக்டேர் நிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கல்வி நிறுவனத்தின் துறை களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பிரா மணர்களே ஆவார்கள். தலித்துகளின் உரிமைக ளுக்காகக் கடுமையாகப் போராடுபவரும் இந் நிறுவனத்தில் கணிதத்துறையில் உதவிப் பேரா சிரியராகப் பணியாற்றுபவருமான வசந்தா கந்த சாமி என்பவர், இங்குள்ள அனைத்துத்துறைகளி லும் பணியாற்றும் ஆசிரியர்களில் வெறும் நால்வர் மட்டுமே தலித்துகள் என்றும், இது மொத்த எண் ணிக்கையில் 0.86 சதவீதம் மட்டுமே என்றும் கூறுகிறார்.
அதேபோன்று பி.எச்டி. பட்டத்திற்குப் பதிவு செய் யப்பட்டுள்ள தலித் மாணவர்கள் மிகவும் கொடு மையாக நடத்தப்படுவதாகவும் வசந்தா கூறுகிறார். ஆராய்ச்சிப் படிப்பை அவர்கள் தொடர்ந்து கொண் டிருக்கும் போது திடீரென்று இடைநிலையில் ஆராய்ச்சிப் பாடத்தின் தலைப்பை மாற்றக் கட் டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களை ஒழுங்காக முடிக்க விடுவதில்லை என்றும், எழுத் துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகளி லும் அவர்களைத் தோல்வியடையச் செய்து விடு கிறார்கள். தலித் மாணவர்களைப் பொறுத்தவரைக் கும் ஐஐடி சூழல் மிகக் கொடுமையானதாகும் என்று வசந்தா மேலும் கூறுகிறார். இவ்வாறு வசந்தா தலித் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் நிர்வாகத்திற்கு அவரைப் பார்த்தாலே கசப்பாக இருக்கிறது.
எனவேதான் கடந்த பதினேழு ஆண்டுகளாக எவ் வித பதவி உயர்வும் இன்றி உதவிப் பேராசிரிய ராகவே அவர் உழன்று வருகிறார். சர்வதேச அள வில் அவர் பல சாதனைகளைப் படைத்திருந்த போதிலும், அவர் இதுவரை 640 ஆய்வுத் தாள்களை வெளியிட்டிருந்தபோதிலும் அதுபற்றியெல்லாம் நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. சுஜி தெப்பால் என்ற ஒரு மாணவி. இண்டர் மீடியட் தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் 94 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ராஞ்சியில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும், பிலானி யில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும் கூட இவருக்கு இடம் கிடைத்தது. ஆயினும் இவர் சென்னை ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்ததால் அங்கு மட்டும் விண்ணப் பித்தார்.
ஆயினும் அவர் அந்த அளவிற்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்தும், அவர் தலித் என் பதால், தலித் மாணவர்களுக்கான “முற்பயிற்சி வகுப்பில்” (“யீசநயீயசயவடிசல உடிரசளந”) சேர்ந்து ஓராண்டு படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டார். பயிற்சியின் முடிவில் வைக்கப்பட்ட தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக் கப்பட்டிருக்கிறார். என்னே கொடுமை!ஐஐடி இயக்குநரான எம்.எஸ். ஆனந்த் ஒரு பிராமணர் என்றும் ஐஐடி-யில் துறைகளுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும்போது தன் சொந்த சாதியிலிருந்தே தேர்வு செய்வார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. அன்பரசு குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்நிறுவனத் தின் மொத்தம் உள்ள ஆறு முதல்வர்களில் நால்வர் பிராமணர்கள் என்றும் அனைத்து விதி முறைகளையும் மீறி இவ்வாறு ஆனந்த் இவர்களை நியமனம் செய்திருக்கிறார் என்றும் அன்பரசு குற் றச்சாட்டில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். தன் குற் றச்சாட்டை மத்திய மனிதவள அமைச்சர் அர் ஜூன் சிங்கை சந்தித்தபோது இரா.அன்பரசு தெரி வித்திருக்கிறார். அர்ஜூன் சிங் கும் இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் எதுவுமே நடைபெற வில்லை.அன்பரசு குற்றச்சாட்டு குறித்து என்ன சொல் கிறீர்கள் என்று கேட்பதற்காக ‘டெகல்கா’ நிருபர் எம்.எஸ்.ஆனந்தையும் அவரது செயலாளரையும் சந்திக்க முயற் சித்திருக்கிறார். ஆயினும், இவை குறித்து கருத்துக் கூற இயக்குநர் கிடைக்க வில்லை என்று செயலாளர், நிருபரிடம் தெரிவித் துள்ளார்.


-ச. வீரமணி


June 06, 2007

ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (6.6.2007) அகில இந்திய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக ஆந்திர மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஜெயலலிதா. முலாயம்சிங். வைகோ. ஓம் பிரகாஷ் செளதாளாவின் கட்சி. கர்நாடக பாபுலால் மராண்டி. கேரள காங்கிரசு. ஜார்கண்ட் விகாஸ் கட்சி என மொத்தத்தில் 8 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஜெயலலிதா கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சியை எடுத்து வந்தார். அவரது முயற்சியின் பேரிலேயே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இக்கட்சித் தலைவர்கள் தனித்த முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


கடந்த காலத்தில் சந்திரபாபு நாயுடு காரு. ஜெயலலிதா அம்மையார். முலாயம்சிங் யாதவ் ஜி ஆகிய மூவரும் தாங்கள் ஆட்சி செய்த மாநிலத்தில் மக்கள் விரோத. சர்வாதிகார. வன்முறை ஆட்சியை நடத்தியதும். தொழிலாளிகளை வஞ்சித்து உலகமயாக்கலின் ஏவலாளிகளாக செயல்பட்டதால் ஆட்சியை இழந்து நிற்கும் இவர்களும். இவர்களுடன் ஒட்டிக் கொண்டுள்ள பிழைப்புவாதிகளும் அகில இந்திய அளவில் மூன்றாவது மாற்றை உருவாக்கப் போவதாக கூறுவது வேடிக்கையானது.

இதில் முலாயம் சிங்கைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதவாத பா.ஜ.க.வோடு கொஞ்சிக் குலாவியவர்கள். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் இன்றைக்கு கரையொதுங்கிப்போனதால் எந்தக் கப்பலில் ஏறி அதிகார - ஆட்சிப் பயணத்தை மேற்கொள்வது என்ற அதிகார வெறியைத் தவிர மக்கள் நலனை கிஞ்சிற்றும் ஏறடெத்துப் பார்க்காத கூட்டணியே இது.

இந்த மூன்றாண்டு காலத்தில் மதவெறி பா.ஜ..கவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகவோ அல்லது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவிதமான மக்கள் இயக்கமும் நடத்தாதவர்கள் மத்திய ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறார்கள். இவர்களது சந்தர்ப்பவாத கூட்டணி அந்திமக் கூட்டணியே தவிர ஆளும் கூட்டணியாக ஒருபோதும் மலராது.

June 04, 2007

குஜ்ஜார் கோரிக்கையும் சங்பரிவார அரசியலும்!


வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது என்று கதைத்தவர்களின் காதை திருகியிருக்கிறது குஜ்ஜார் மக்களின் போராட்டம்.

பா.ஜ.க. ஆட்யில் இருக்கும் ராஜஸ்தானில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் குஜ்ஜார் மக்களின் இடஒதுக்கீட்டுப் போராட்டம் அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சூடு 16 பேர் உயிர்பலி என்பதோடு நில்லாமல் தொடர் ஓட்டத்தின் அடுத்த கட்டமாக பழங்குடி மக்களான மீனா மக்கள் குஜ்ஜார் சமூகத்திற்கு எதிராக களத்தில் இறங்கியதும். இரண்டு சமூகமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் தொடரும் உயிர் பலி என 25க்கும் மேற்பட்டவர்கள் சங்பரிவாரின் இடஒதுக்கீட்டு அரசியலுக்கு பலியாகியுள்ளனர்.

குஜ்ஜார் சமூகம் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறது. ஏன் இந்த திடீர் கோரிக்கை!

எப்படி வந்தது இந்த திடீர் முழக்கம்! இதற்குள் ஒளிந்திருக்கும் அரசியல் என்ன? பா.ஜ.க. மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்பதற்கு மாறாக மத ரீதியான அரசியலை முதன்மைப்படுத்துவதும். மாநில நிலைமைக்கு ஏற்ப ஜாதிய அரசியலை வளப்படுத்துவதும்தான் இன்றைய பிரச்சினைக்கு அடிப்படை.


தாழ்த்தப்பட்ட. பழங்குடி. பிற்படுத்தப்பட்ட மற்றும் மற்றும் முற்படுத்தப்பட்ட மக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதே பா.ஜ.க.வின் நடைமுறை கொள்கை.

வி.பி. சிங் ஆட்சியின்போது மண்டல் கமிஷன் அமலாக்கப்பட்டபோது அதற்கு எதிராக மாணவர்களையும் உயர் ஜாதி இந்துக்களையும் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடியது. இந்துத்துவ கொள்கை என்பது உயர் ஜாதி மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது என்றாலும். அதனை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வரமுடியாது என்பதை சங்பரிவார் நன்கு உணர்ந்துள்ளது. அதன் விளைவாகத்தான் மாநிலத்திற்கு மாநிலம் பெரும்பான்மை ஜாதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் வாக்குவங்கி அரசியலை நடத்தி வருகிறது. பா.ஜ.க.!

ராஜஸ்தானில் உயர் ஜாதி பிரிவில் இருந்த ஜாட் ஜாதியை இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது வாஜ்பாய் அரசு. பா.ஜ.க. உயர்ஜாதி மக்களுக்கு சலுகை அளிக்கும் நோக்குடனேயே இதனை துவக்கி வைத்தது. இதன் தொடர்ச்சிதான் இன்றைய குஜ்ஜார் போராட்டம்.

மேலும் ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தின் 11 சதவீத வாக்கின் மீதும் பா.ஜ.க.வுக்கு எப்போதும் ஒரு கண்ணிருக்கும். அதன் ஒரு பகுதியாகத்தான் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின்போது குஜ்ஜார் சமூகத்தை பழங்குடிகள் பட்டியலில் இணைப்பதாக வாக்குறுதியளித்தது பா.ஜ.க. இடஒதுக்கீடு மற்றும் வாக்குவங்கி அரசியலின் இரண்டாவது இன்னிங்சை துவங்கி வைத்த சங்பரிவாரின் அரசியல் சந்தர்ப்பவாதமே இன்றைய உயிரிழப்புகளுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் அடிப்படை காரணம்.


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த குஜ்ஜார் சமூகம். ஜாட் சமூகத்தின் வருகையால் கல்வி - வேலைவாய்ப்பில் தங்களது இடம் பங்கிடப்படுவதால் ஏற்படும் நெருக்கடியை உணர்ந்தது. எனவே தங்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்குமாறு பலமான கோரிக்கைகளை வைக்கிறது. குஜ்ஜார் சமூகத்தை பழங்குடிகள் பட்டியலில் இணைத்தால் ஏற்கனவே பழங்குடிகள் பட்டியலில் உள்ள மீனா சமூகம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே அவர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குஜ்ஜார் மக்களுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.

மொத்தத்தில் இரண்டு சமூக மக்களும் அடிப்படையில் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையிலேயே உள்ளனர் என்பது நிதர்சமான உண்மை. உழைக்கும் மக்களாக உள்ள இந்த இரு பிரிவினரும் மோதிக்கொள்வதன் மூலம் பிரச்சினை திசை திருப்பப்படுகிறது. இந்த இரு பிரிவினருக்கும் ஆதரவாக வசுந்தரா ராஜா சிந்தியா அமைச்சரவையில் இருக்கும் இரு பிரிவு அமைச்சர்களும் தத்தம் மக்களுக்காக. தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்வதாக மிரட்டிற் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க. தன்னை ஒரு புதிய கட்சியாக காட்டிக் கொள்ள என்னத்தான் பிரயத்தனம் செய்தாலும் அது வழக்கமான முதலாளித்துவ குட்டையில் உழலும் மட்டையாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது இடைக்கால தீர்வுதானேயொழிய நிரந்தர தீர்வு அல்ல. ஆனால் இடஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இடஒதுக்கீட்டை வரப்பிரசாதம் போல சித்தரிப்பதும் அதனை வைத்து ஆடு - புலி ஆட்டம் ஆடுவதும் முதலாளித்துவ கட்சிகளுக்கு கைவந்த கலை.

மண்டல் தன்னுடைய அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மூடி மறைக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வினைப் போக்குவதற்கு அடிப்படையில் செய்ய வேண்டியது நிலச்சீர்திருத்தம் என மண்டல் தன்னுடைய அறிக்கையில் மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். இந்த அடிப்படை கோஷம் குறித்தெல்லாம் சங்பரிவாரத்திற்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவிதமான தெரளிவான சிந்தனையும் இல்லை.

மேலும் நிலச்சீர்திருத்தம் குறித்து மண்டல் கூறும் போது மேற்குவங்கத்திலும். கேரளத்திலும் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை வெகுவாக புகழ்ந்துரைத்துள்ளதோடு அதனை ஒரு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாக சித்தரிக்கிறார். இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் இம்மாநிலங்களில் இதுபோன்ற ஜாதிக் கலவரங்களோ. இடஒதுக்கீட்டு ஓட்டு வேட்டையோ நடைபெறுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் இந்திய சமூக அமைப்பு மிகவும் பின்தங்கயி அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு. இந்த அமைப்பில் நாடு முழுவதும் உடனடியாக நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்வதும். அனைத்து மக்களுக்கும் தரமான இலவச அடிப்படை கல்வியை கொடுப்பதும்தான் மிக மிக முக்கியமானது. 2020ல் இந்தியா வல்லரசு என்று புலம்பும் அறிவுஜுவிகள் இந்தியாவில் 50 சதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கல்லாமையோடு இருப்பது குறித்து எந்தக் கவலையும் தெரிவிப்பதில்லை. அதற்காக உருப்படியான எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இறுதியாக ராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க. ஆட்சியாளர்கள் இரு சமூகத்திற்கு இடையில் மோதலை உருவாக்கி பிரச்சினையை திசை திருப்புவதை கைவிட்டு இரு சமூகத்து மக்கள் உட்பட குறிப்பாக போராட்டத்தில் குதிதுள்ள குஜ்ஜார் சமூக மக்களின் வாழ்நிலை மேம்பட உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு. 16 உயிர்களை கொன்ற காவல்துறையினர் மீது நிர்வாக தீரியான நடவடிக்கையும். சட்டரீதியான நடவடிக்கையும் உடனடியாக எடுத்திட வேண்டும். வாழ்க்கைக்கான போராட்டம் வாழ்க்கையை பறிக்கும் போராட்டமாக மாற்றிட ஒருபோதும் ஆட்சியாளர்கள் அனுமதிக்க கூடாது.


குறிப்பாக அரசியல் கட்சிகள் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக கீழிறக்கிப் பார்க்கும் கீழ்த்தரமான நிலையை கைவிட வேண்டும். சமீபத்தில் ஆந்திராவில் சி.பி.எம். அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களையும் திரட்டி அனைவருக்கும் வீடு என்ற கோஷத்தை முன்வைத்து உபரியாக இருக்கும் அரசு நிலங்களை கையகப்படுத்தும் போராட்டத்தை வீராவேசத்தோடு நடத்தி வருகிறது. இத்தகைய போராட்டத்தில் அனைத்துப் பகுதி உழை:ககும் மக்களும் ஜாதி வித்தியாசமின்றி பெருந்திரளாக அணிதிரண்டு வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் மட்டுமே மக்களின் அரசியல் உணர்வை விழிப்புணர்வு அடையச் செய்திடவும். ஆட்சியாளர்களை ஆட்டம் காணச் செய்திடவும் தேவை இதுபோன்ற போராட்டங்களே!