Showing posts with label மே தினம். Show all posts
Showing posts with label மே தினம். Show all posts

May 01, 2009

மே தின வாழ்த்துக்களும்! நாம் சந்திக்கும் நெருக்கடிகளும்!!

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி வருகிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே எட்டு மணி நேர வேலை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் ஓயாது, ஒழிச்சலின்றி போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான். முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது!

உலகம் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது ஏதோ, திடீரென்று யாருக்கும் தெரியாமல் ஏற்பட்டதுபோல் ஊடகங்களின் வழியாக ஊடுருவுகிறது. யாரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த நெருக்கடி? இதனால் பாதிக்கப்படப்போவது யார்? என்ற கேள்விகள்தான் மக்கள் மனதில் முட்டி மோதவேண்டியவை. ஆனால், மக்களின் மனங்களில் எல்லாம் ‘பொருளாதார நெருக்கடி’ என்று கண்ணீரை கசிய வைத்து விட்டது முதலாளித்துவம்.

உலக ‘நிதி மூலதனத்தை’ தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள, பன்னாட்டு பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளும், பணத்தை வைத்து பணத்தை பெருக்க வைத்தன. பணங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறின அவர்களுக்கு, பணம குட்டிப்போடும் அபூர்வ எந்திரமாக மாறியது முதலாளிகளுக்கு; அதாவது, பணத்தை உற்பத்தி மூலதனமாக மாற்றுவதற்கு பதிலாக, பணத்தையே பெருக்க வைக்கும் கலையை கற்றதன் விளைவே இன்றைய நெருக்கடி.

உதாரணமாக, 10 ரூபாய் மட்டுமே விலை மதிப்பு கொண்ட பென்சில் ஒன்றை 100 ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாற்றினர். இந்த பணம் பெருக்கும் மந்திர சூதாட்டம் நடைபெற்றது பங்கு வர்த்தகத்தில், 10 ரூபாய் பொருளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் செங்குத்தாக உயர்ந்துக் கொண்டே சென்று அது 100 ரூபாயை எட்டியதும்; பணத்தை வைத்து பணத்தை பெருக்கிய பங்கு வர்த்தக சூதாடிகளான - காளைகளும், கரடிகளும் தாங்கள் பெற்ற கொள்ளை லாபத்தை மாயமாய் வேறு ஒரு தொழிலில் திருப்பும்போது திடீரென்று பென்சிலின் உண்மை விலையான ரூ. 10-லிருந்து ரூ. மூன்றுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும் பென்சிலின் மீது 100 ரூபாய் மூலதனம் இட்டவரின் பணம் திடீரென மயமாய் 97 ரூபாய் காணாமல் போய்விடும். இது எங்கே போனது? யாருக்கு போனது? என்பதுதான் கேள்வி! இப்படித்தான் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பணத்தை வைத்து சூதாட ஆரம்பித்து மதிப்பிழந்த மண்ணுக்கு கூட விண்ணை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்த்தி பின்னர் அதை அப்படியே தொப்பென்று போட்டு விட்டன. இப்படி ஏற்பட்டதுதான் இந்த முதலாளிய நெருக்கடி. அதாவது, இதனை உருவாக்கியது சொத்தாசை பெற்ற முதலாளிகள். இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.


அமெரிக்காவில் இப்படித்தான் வங்கிகள் ஏராளமானவர்களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் எந்த டாக்குமெண்டும் காட்ட வேண்டாம்! ஏன் எங்களுக்கு அதனை திருப்பி அடைக்க வழியிருக்கிறதா? என்று கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டி. கடனை தலையில் கட்டி, அந்த வீட்டையும் பங்கு மார்க்கெட்டில் ஏலம் விட்டு பணத்தை பெருக்கி... பெருக்கி... ஊதி... ஊதி.... ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறியதுதான் இந்த நெருக்கடி. தற்போது பணம் கொடுத்த வங்கிகள் திவாலாகி விட்டது. 10 கோடி ரூபாய் விற்ற வீடுகள் இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு விலை போகிறது என்றார் பாருங்கள்! பணத்தின் விளையாட்டை! தற்போது இந்த ஒரு லட்சம் கொடுத்து வீடு வாங்குவதற்கு கூட அமெரிக்காவில் ஆள் இல்லையாம்! அதாவது அவர்கள் உருவாக்கிய நெருக்கடி சூறைக்காற்றாய் அவர்களை பூமராங் போன்று தாக்குவதோடு உழைக்கும் மக்களையும், அப்பாவிகளையும் வீதிக்கு தள்ளி விட்டது.

இதனால் என்னென்ன விளைவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன?
உலகின் கோடீஸ்வர நாடான அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 17,000 வேலைகள் காலியாகின்றன. அதாவது, 17,000 பேர் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை பார்த்த நிறுவனங்களிலிருந்து கழுத்தை பிடித்து தள்ளுகிறார்கள். இந்த எண்ணிக்கை டிசம்பர் 2008லிருந்து துவங்கி கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு 800 பேர் வேலையிழப்பதாக பத்திரிகையாளர் பி. சாய்நாத் கூறுகிறார்.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த வேலை பறிப்பு நடவடிக்கை - அதாவது முதலாளிகளின் சிக்கன நடவடிக்கை என்றாலே அது தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டுவது என்று அர்த்தம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7,72,000 பேர் வேலையிழந்துள்ளனர் அமெரிக்காவில். உலகிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. 7.2 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. உண்மையில் இது 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் எந்த அளவிற்கும் குறையாத வகையில் சுனாமி அலைகளைப் போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர் வரும் ஆண்டுகளில் வேலையிழப்பர் என்று கூறப்படுகிறது. இது தவிர, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என்று பெருந்தொழில்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இதன் பக்க விளைவாக 5 பேர் முதல் 100 பேரை வரை செய்யும் சிறு தொழில்கள் எல்லாம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியில்லாமல் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இது தவிர பல இடங்களில் கடுமையான சம்பளவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை! ஓ.டி., இன்சென்டிவ் என்று வேலைபார்த்த அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் வருமானம் 20,000த்திற்கும் குறையாமல் இருந்தது. இன்றைக்கு அவர்களின் வருமானம் 5,000த்திற்கு சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலுக்கு பழக்கப்பட்டு விட்ட தொழிலாளர்கள். தற்போதைய பண நெருக்கடியால் குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பது பெரும் கதையாக மாறிக்கொண்டுள்ளது. இவைகள் ஒருபுறம் என்றால், சென்னை - ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலளிகள் தங்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டிய இரண்டு - மூன்று ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். விளைவு என்ன? சங்கம் வைக்க உரிமையில்லை என்று நிர்வாகம் மறுக்கிறது. இதனால் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பந்தாடப்படுகின்றனர். பழிவாங்கப்படுகின்றனர். 65 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். 34 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். 7 பேரை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது. 1500 கேஷூவல் தொழிலாளிகளை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது சங்கம் வைக்கும் உரிமை வேண்டி கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிக்கு ஆதரவாக சிஐடியூ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நேரடியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதற்காக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை ஓயாமல் ஒளிபரப்பிய ஊடகங்கள் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக சில நிமிடங்கள் கூட ஒளிபரப்ப முன்வருவதில்லை என்பதிலிருந்தே இவர்களின் வர்க்கத்தன்மையை அறிய முடியும்! முர்டோக் போன்றவர்களின் முரட்டுக்கரங்கள்தான் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் எந்தவிதத்திலும் சளைக்காதவர்கள் அல்ல.


எனவே, இந்த மே தினம் என்பது சவால்கள் மிகுந்த மே தினமாக நம்முன் நிற்கிறது. முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டது கரையோர அப்பாவி மீனவர்கள் என்பதுபோல் தொழிலாளிகளும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மன்மோகனாமிக்ஸ், சிதம்பர நடனம் மற்றும் அத்வானி வகையறாக்களை இந்த தேர்தலில் தோல்வியடைச் செய்வது இந்த மே தினக் கடமையாக நம் முன் நிற்கிறது. மாற்று அரசு ஒன்று மத்தியில் ஆட்சியமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் மூச்சு விடுவதற்கான ஆரோக்கியமான காற்று சுவாசிப்பதற்கு கிடைக்கும்! மே தின சபதமேற்போம்! பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கொள்கை ஏஜண்டுகளான காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துவோம்! மூன்றாவது மாற்றை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்!

April 30, 2008

மே தினம் : பறிபோகும் பெற்ற உரிமைகள்!

கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக் கூடிய உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!
அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய உலகமயம் இன்றைக்கு உலகை நெருக்கடியின் விளம்பிம்பிற்குள் தள்ளியுள்ளது. விலைவாசி உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம், வீட்டு வாடகை உயர்வு, வேலை நேரம் அதிகரிப்பு என அனைத்து முனைகளிலும் தொழிலாளர்களும் - உழைக்கும் மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில் ஆளும் வர்க்கமும் - ஆட்சியாளர்களும் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக முலாம் பூசி மொழுகி வருகின்றனர். பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் பைகள் மட்டும் நிரம்பிக் கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரமாக மாறியுள்ளது. பல புதிய கோட்டீஸ்வரர்களைக் கூட இந்தியா உலகிற்கு அளித்துள்ளது எப்படி? கோடிக்கணக்கான இந்திய உழைப்பாளிகளின் இரத்தமும் - சதையும் உறிஞ்சப்பட்டு பெரு முதலாளிகளும் - பன்னாட்டு முதலாளிகளும் இரத்தம் குடிக்கும் அட்டைகளாய் உருமாறியுள்ளனர். எட்டு மணி நேர வேலைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான உழைப்பாளி மக்களின் தியாகம் உலகமயம் என்ற பெயரில் கண்ணெதிரே பறிக்கப்பட்டு வருவதை காண்கிறோம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இது வேக - வேகமாக அமலாகி வருகிறது. இந்த நோய் மற்ற தொழில்களையும் வேகமாக பற்றி வருகிறது.
மேலும் உலகமயத்தின் நவீன முகம் தொழிலாளர் உரிமை பறிப்பு முகமாகவும், ஜனநாயக உரிமை பறிப்பு முகமாகவும், தொழிற்சங்க உரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிப்பு முகமாகவும் மாறியுள்ளது. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய உழைப்பாளி மக்களின் அடித்தட்டு மக்களாகவும் - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களாகவும் உள்ள தலித் மக்களின் வாழ்நிலை அவலங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீண்டாமை கொடுமைகளுக்கு நாள்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பலியாவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய அவலங்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொள்வது இம் மேதினத்தின் கடமையாக முன்னுள்ளது.
தமிழகத்தில், அதுவும் சென்னை தலைநகரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக தொழிலாளர்களுக்காக சங்கம் வைக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நிர்வாகமும் - ஆளும் வர்க்கமும் - காவல்துறையும் முக்கூட்டு நடத்திக் கொண்டு தொழிலாளர் உரிமையை முற்றிலுமாக காலில் போட்டு நசுக்கி வருகிறது.
ஏப்ரல் 29 அன்று தொழிலாளர்கள் ஏற்றிய சி.ஐ.டி.யூ. கொடியையும், கொடிக்கம்பத்தையும் நிர்வாகமும் - போலீஸ் கூட்டாளிகளும் சேர்ந்துக் கொண்டு இரவோடு இரவாக அடித்து உடைத்துள்ளனர். இதனை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தொழிலாளர்களின் புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. இத்தகைய முக்கூட்டு ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து மறியல் செய்த தொழிலாளர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். நாளைய தினம் மே தினத்திற்கு நாங்கள்தான் அரசு விடுமுறை அளித்தோம் என்று பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க. அரசு எப்படி தொழிலாளர் உரிமைகளுக்காக விழுந்து விழுந்து பாடுபடுகிறது என்பதற்கு ஹூண்டாய் சம்பவமே சாட்சியாய் விளங்குகிறது.
உலகமய அவலங்களுக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்! ஏகாதிபத்திய - உலகமய கொள்கைகளை வீழ்த்துவோம்! மே தினத்தில் சபதமேற்போம்!

April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!


உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளர்களுக்கும், தமிழ் வலைப் பதிவர்களுக்கும் சந்திப்பின் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்கள்!
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை காரல் மார்க்சும் - ஏங்கல்சும் கம்யூனி°ட் கட்சி அறிக்கையில் முன்வைத்து, உலகத் தொழிலாளர்கள் தங்களுக்கான சுரண்டலற்ற ஒரு சோசலிச அரசை அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டினர்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சியும், அதன் பகாசூர சுரண்டலும் உலகத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உழைப்பை சுரண்டி கொழுத்தது.
இதற்கு எதிராக உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு என்ற முழக்கம் எதிரொலிக்கத் துவங்கியது அன்றைய தினம். அதன் அடிச்சுவட்டில் அமெரிக்காவில் 1886 இல் பிரம்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. குறிப்பாக சிக்காகோவில் நடைபெற்ற பெரும் எழுச்சியும், அதனை எப்படியாவது தங்களது கொடுங்கரங்களால் ஒடுக்க வேண்டும் என்ற மிருக வேட்கைக் கொண்ட ஆளும் வர்க்க போலீசு எழுச்சி மிக்க ஊர்வலத்தில் வெடி குண்டுகளை வீசியதோடு, தொழிலாளர்கள் மீது மிருகத்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாயினர். ஆளும் வர்க்கம் இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அப்பட்டமாக மறைத்து விட்டதோடு, தொழிலாளர் தலைவர்களையும் தூக்குமேடைக்கு அனுப்பியது ஆளும் வர்க்க நீதிமன்றம். அன்றைய தினம் தொழிலாளர்களின் உதிரத்தால் சிக்காகோ நகரமே செந்நிறமாகி விட்டது. இது சிக்காககோவோடு மட்டும் நின்று விடாமல், அமெரிக்கா முழுவதுமே பல லட்சக்கணக்கமான தொழிலாளர்கள் மேலும் வீரத்தோடு அடக்குமுறைக்கு எதிராகவும் 8 மணி நேர வேலை கோரிக்கை வெற்றியடை வேண்டும் என்ற நோக்கத்தோடு வீறு கெண்டு எழுந்தனர். இறுதியில் வெற்றியும் அடைந்தனர்.
உலகமய சூழலில் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை என்பது இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கால்சென்டர்களிலும், அவுட்சோர்சிங் துறை பணிகளிலும், இன்ஜினியரிங், கட்டிட தொழில் என அனைத்துத் தொழில்களிலும் 12 மணி நேர வேலை என்ற நிலைக்கு தள்ளியுள்ளது உலகமயமாக்கல். இதற்கு எதிராக மீண்டும் உலகத் தொழிலாளர்கள் அணித் திரளவேண்டும். குறிப்பாக நன்கு படித்த, ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னலோடு செயலாற்றக்கூடிய ஐ.டி. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற நிலையை உறுதியாக பற்றிக் கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு எழுச்சியை புதிய வரலாற்றை, அதுவும் முதலாளித்துவத்தின் இறுதி அத்தியாயம் நடைபெறும் சூழலில் உருவாக்கிட உறுதியேற்க வேண்டும்.

வாழ்க! மே தினம்!! கருத்தாலும் - கரத்தாலும் உழைக்கும் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!