March 14, 2008

வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டு விழா

மார்ச் 16, 2008 - மாலை 06.00 மணி
சோஷின்காய் அகாடமி
அமெரிக்கன் ஸ்போக்கன் இங்கிலீஷ்
எண் : 23, சாத்தாங்காடு நெடுஞ்சாலை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் அறக்கட்டளை
தொடர்புக்கு 98848 54421
வரவேற்புரை
திரு. ஞா. டார்வின்தாசன்
அங்குசம் பதிப்பகம்
முன்னிலை
திரு. சுடலைமுத்து
த.மு.எ.ச.
தலைமை
திரு. வீ. கலியபெருமாள்
நிருவாக அறங்காவலர்,
சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்
அறிமுகவுரை
திரு. கே. ஹரிந்திரன்
கவிபாட...
திரு. பாஸ்கர்
பஷீரின் படைப்புகளில் சில...
எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது
திரு. அ. செம்மல்
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தங்கம்
திருமதி. ஆர். அமுதா
ஜென்ம தினம்
மீ. ஜாபர் உசேன்
நிருபர், தீக்கதிர்
இளம் பருவத்து தோழி
திரு. கே. செல்வப்பெருமாள்
மதில்கள்
திரு. இராதாகிருஷ்ணன்
இணை இயக்குநர்
பாத்துமாவின் ஆடு
திரு. பா. இராமச்சந்திரன்
த.மு.எ.ச. மாநிலக்குழு உறுப்பினர்
உலகு புகழ்மிகு மூக்கு
திரு. ஜேசுதாஸ்
த.மு.எ.ச. மாநில செயற்குழு உறுப்பினர்
சிறப்புரை
திரு. சுரா,
எழுத்தாளர்
நன்றியுரை
திரு. டி. இளங்கோவன்

March 13, 2008

மரணப்பிடியில் பின் நவீனத்துவம்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தத்துவ உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘தத்துவம்’ பின்நவீனத்துவம் (Postmodernism). இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை, பின் நவீனத்துவம் மட்டுமே எதிர்கால மீட்சித் தத்துவமாக ஆரவாரம் செய்யப்பட்டது. சிந்தனையாளர் நீட்சேவை தத்துவ முன்னோடியாகக் கொண்டு மிகையில் பூக்கோ, தெரிதா, லியோதர்ட் போன்றவர்களால் ஒரு தத்துவப்போக்காக பின்நவீனத்துவம் வளர்க்கப்பட்டது. மேற்கத்திய உலகில், குறிப்பாக, பிரான்சில் விஷம்போல பரவிய இந்தக் ‘காய்ச்சல்’ தமிழகத்தையும் விடவில்லை. மார்க்சி°ட்டாக வாழ்க்கையைத் துவக்கியவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியால் பின்நவீனத்துவத்தில் சரணடைந்தனர்.
தமிழகத்தில் கலை, இலக்கியத்துறை மட்டுமல்ல, சமூக வர்க்க இயக்கங்களையும் பலிவாங்கிட பின்நவீனத்துவவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முனைப்புக் காட்டினர். மார்க்சி°ட் என்று சொல்லிக்கொள்வதைக்காட்டிலும் தான் ஒரு பின் நவீனத்துவவாதி என்று சொல்லுவது ‘பாஷன்’ ஆனது.
ஆனால், இன்று மேற்கத்திய நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பின்நவீனத்துவம் எனும் பெயரில் சில ஓலக்குரல்கள் தவிர, அத்தத்துவம் சவக்குழிக்குச் சென்றுவிட்டது. பின்நவீனத்துவ உளறல்களை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக மார்க்சி°ட்டுகள் பலர் (இவர்கள் நம்மூர் அறிவுஜீவிகள் போன்றவர்கள் அல்லர். வர்க்க இயக்கங்களில் ஈடுபட்டு களத்திலும் போராளியாக விளங்கு பவர்கள்) நடத்திய சித்தாந்தப் போரில் பின்நவீனத்துவம் காலாவதியாகிப் போனது. (உதாரணத்திற்கு அலெக்°காலினிகா° எழுதிய “பின்நவீனத்துவத்திற்கு எதிரான மார்க்சிய விமர்சனம்”) தற்போது மீண்டும் அடிப்படை மார்க்சியத்தின் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டு, வெகு உற்சாகத்தோடு பலர் மார்க்சியம் பயில் கின்றனர். குறிப்பாக, இளந்தலைமுறையினர் மார்க்சிய நூல்களை அதிக அளவில் வாங்கிப் படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உதாரணமாக, பால்-டி-அமட்டோ எழுதிய (The Meaning of Marxism) என்ற நூல் சமீபத்தில் வெளியானது. அழுத்தமான வாதங்களோடும், பக்கபலமான ஆதாரங்கள், விவரங்களோடும் விளங்கும் இந்நூல் அடிப்படை மார்க்சியத்தை மிகவும் எளிமையாகவும், அழகாகவும் விளக்குகிறது. இதன் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆக, மேற்கில், காற்று திசைமாறி அடிக்கிறபோது தமிழகத்தில் இருக்கும் சிலர் இன்னமும், காலாவதியாகிப்போன பின்நவீனத்துவத்தை உயர்த்திப் பிடிக்க முனைகின்றனர். மார்க்சி°ட்டுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் பின்நவீனத்துவம் பேசுகிறவர்கள் ஒரு ரகம். தங்களை மார்க்சி°ட்டுகள் என்று கூறிக்கொண்டு பின்நவீனத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றொரு ரகம். இத்தகு ‘ரகங்கள்’ மேற்கிலும் உலாவந்து ஓய்ந்தன. தமிழகத்தில் இந்தப்போக்குகள் இரண்டும் உள்ளன.
பகுத்தறிவு, அறிவியல் எதிர்ப்போடு...
19 ம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20 ம் நூற்றாண்டு துவக்க காலத்தை நவீனத்துவ காலம் என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் எழுந்த பல தத்துவார்த்த மற்றும் பண்பாட்டுச் சிந்தனைகளை எதிர்ப்பதாகக் கிளம்பியது தான் பின்நவீனத்துவம்.
நவீனத்துவம் என்றழைக்கப்படும் இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த முதலாளித்துவப் பேரழிவுகளை எதிர்த்துப் போராடியது மார்க்சியம். கம்யூனிச லட்சியங்களை முன் வைத்துப் போராடிய மார்க்சியம் இக்காலக்கட்டத்தில் ரஷியப்புரட்சி மூலம் மேலும் வளம் பெற்று மார்க்சிய லெனினிசமாக உருவெடுத்தது. நவீனத்துவத்தை எதிர்ப்பது அல்லது அதன் நீட்சி என்று சொல்லிக்கொண்டே பின் நவீனத்துவம் மிகச் சாதுர்யமாக, ரஷியப் புரட்சிக்குப் பிறகு வந்த புரட்சிகர அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாடு, கட்சி அமைப்பு அனைத்தையும் எதிர்க்கிற ஒரு போக்காக வளர்ந்தது.
‘நவீனத்துவக் காலம்’ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டதாகவும் விளங்கியது. ஆனால், பின்நவீனத்துவம் அறிவியல், தருக்க முறை அனைத்தையும் நிராகரித்து, பொதுவான, யதார்த்தமான உண்மை என்று எதுவுமில்லை, அதனை அறியவும் முடியாது என்று வாதிட்டது. நவீனத்துவ காலத்திலும் அதற்கு முன்னரும் நிலவிய மறுமலர்ச்சி மற்றும் அறிவொளி சிந்தனைகளையும் அது விமர்சித்தது. முதலாளித்துவ அரசு அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மார்க்சியம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அதிகாரம் என்பது சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருப்பதாக விளக்கி அதிகாரம்பற்றிய மார்க்சியப்பார்வையை மங்கிடச் செய்ய பின்நவீனத்துவம் முனைந்தது.
“விசால மனது” கோரும் பசப்பு
சமீபத்தில், ‘அரசியல்’ என்ற தலைப்பில் தோழர் நல்லகண்ணுவும், அ.மார்க்ஸூம் நிகழ்த்திய ஒரு உரையாடல் புத்தகமாக வெளிவந்துள்ளது. (தென்திசை பதிப்பகம்) அது பின்நவீனத்துவம் பற்றிய நூல் அல்ல. எனினும் விவாதத்தின் ஒரு கட்டத்தில் பேசிய அ.மார்க்° பின்நவீனத்துவம் குறித்து விவரிக்கிறார்.
“கம்யூனி°ட்டுகள் போ°ட்மார்டனிசத்தை எதிரியாகப் பார்ப்பது தேவையில்லை...”
“போ°ட் மார்டனிசத்தின் பங்களிப்புக்களை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை...”
இதையொட்டி, பின்நவீனத்துவத்தின் சில அடிப்படைக் கூறுகளைச் சுருக்கமாக விளக்கி அந்தத் தத்துவத்தை “விசால மனத்துடன்” அணுகவும், “போ°ட்மார்டனிசம் குறித்து முன் முடிவுகள் இல்லாமல் அணுக வேண்டு” மெனவும் கம்யூனி°ட்டு களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆக, மேற்கத்திய உலகில் உதித்த ஒரு ‘தத்துவம்’ அங்கே மரணப்படுக்கையில் இருந்தாலும், அதைவிடாமல் தூக்கிப்பிடிக்கிற அறிவுஜீவிகள் இன்றும் தமிழகத்தில் உள்ளனர் என்பது தெளிவு.
எனவே, மார்க்சியத்திற்குத் தோழமையாக இருப்பது போன்று தோற்றமளித்து, மார்க்சியத்தை உருக்குலைக்க முயலும் பின்நவீனத்துவத்தை மீண்டும் அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.
அதற்கு முன்னதாக மார்க்சிய - லெனினிய நிலைபாட்டில், ஒரு தத்துவத்தை ஆராய்ந்திட எத்தகைய கேள்விகள் பிரதானமானவை என்பதில் தெளிவான வரையறுப்பு தேவை.
மார்க்சியம் : அடிப்படைக் கேள்விகள்
முதலாவதாக, சமூக இயக்கம் பற்றி ஒரு தத்துவம் எப்படிப் பார்க்கிறது? வர்க்கங்களை அந்தத் தத்துவம் ஏற்றுக் கொள்கிறதா? சமூக வரலாறு, வர்க்கங்களுக்கிடையே நிகழும் வர்க்கப் போராட்டங்கள் தான் என்பதை அத்தத்துவம் ஏற்றுக்கொள்கிறதா?
இரண்டாவதாக, சமூகம் மற்றும் இயற்கை நிகழ்வுகளை ஆராயும் கருவியான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அடிப் படையில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை எடை போடுகிறபோது எத்தகைய முடிவுகளுக்கு நாம் வந்தடைகிறோம்?
மூன்றாவதாக, எதிர்வரும் சமூக மாற்றம் பற்றி, குறிப்பிட்ட தத்துவத்திற்கு என்ன பார்வை உள்ளது? குறிப்பாக புரட்சி பற்றியும், புரட்சிக்குத் தலைமை தாங்கும் வர்க்கம் பற்றியும் அத் தத்துவத்திற்கு என்ன நிலைபாடு? மிக முக்கியமாக, இன்றைய முதலாளித்துவத்தை வீழ்த்த அவசியத் தேவையாக உள்ள கட்சி அமைப்பு பற்றி அந்தத் தத்துவங்களின் நிலைபாடு என்ன?
இவற்றைக் கூறுகிற போது, மார்க்சி°ட்களின் கருத்தாக்கங் களை எப்படி மற்ற தத்துவங்கள் மீது திணிக்க முடியும் என்று ஆட்சேபம் எழலாம். ஆனால், மேற்கண்ட கேள்விகளும், கார்ல் மார்க்° அல்லது ஒரு மார்க்சி°ட்டின் கற்பனையான சொந்த அபிப்பிராயங்கள் அல்ல. இவை சமூக இயக்கவிதிகள். அறிவியலில் அடிப்படை விதிகள் என்ன பங்காற்றுகின்றனவோ அதேபோன்று, வர்க்கப் போராட்டம், இயக்கவியல் - வரலாற்றுப் பொருள்முதல் வாதம், புரட்சி, கட்சி அமைப்புக் கோட்பாடுகள் ஆகியன சமூக இயக்கத்தின் அடிப்படை விதிகளாக உள்ளன. இதைக்கண்டறிந்தது மார்க்சியம். எனவே இந்தக்கேள்விகள் கட்டாயமாக ஒவ்வொரு தத்துவத்தையும் நோக்கி எழுப்பப்பட வேண்டியவை. இதற்கு அந்த தத்துவங்கள் மழுப்பல், உதாசீனம், அலட்சியம் என்ற வகையில் எதிர்வினை செய்கிற போது, அத்தத்துவங்கள் கோடானுகோடி உழைப்பாளி மக்களுக்கு தீங்கு விளைவிப்பவை; அவர்களது விடுதலையை எதிர்ப்பவை என்கிற முடிவுக்குச் சுலபமாக வந்துவிடலாம்.
பின்நவீனத்துவம் பேசுகிற அத்துனை சிந்தனையாளர்களும் மேற்கண்ட கேள்விகளுக்குச் சரியான விடை தருவதில்லை. ‘அரசியல்’ உரையாடலில் அ.மார்க்° சொல்லுகிற கருத்துக்களை மேற்கண்ட கேள்விகளோடு ஒப்பிடலாம்.
உதாரணமாக, சோவியத் யூனியன் உள்பட சோசலிச நாடுகளில் உருவான சோசலிசம் மற்றும் புரட்சிகர அரசு பற்றி பேசுகிறார் அவர்.
“புரட்சிகரப் பிந்தைய சமூகங்கள் அனைத்தும் அரசு ரொம்பவும் வலிமையான சமூகங்களாகவும் இருந்தன. இந்த அடிப்படையில் தான் அதிகாரம் குறித்த கேள்வியை போ°ட்மார்டனி°டுகள் எழுப்புகிறார்கள்”. ஆக, இந்த அதிகாரத்தை எதிர்ப்பதால், பின்நவீனத்துவம் “ஒரு உறுதியான பாசிச எதிர்ப்புத் தளத்தை”க் கொண்டுள்ளதாகப் புகழ்கிறார் அவர். உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகள் பலமிக்கதாக இருக்கும் போது, சோவியத் அரசு மட்டும் பலவீனமாகி உதிர்ந்து போயிருக்க வேண்டுமென்று கோருவது எத்தகைய பொறுப்பற்ற கருத்து?
இது முழுக்க, முழுக்க, சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளில் எழுந்த சோசலிச சமூகத்தை எதிர்ப்பது தான். இதை எதிர்ப்பது தான் ‘பாசிச எதிர்ப்பு’ என்கிறார் அவர். முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அதன் அதிகார ஒடுக்குமுறை பற்றி பேசுவதை விடக் கம்யூனி°ட்களின் “பாசிசம்” “அதிகாரம்” ஆகியவற்றை எதிர்ப்பது தான் தங்களது ‘மேலான’ பணியாகப் பின்நவீனத்துவ வாதிகள் கருதுகின்றனர்.
இது ‘அதிகாரம்’ என்று ஃபூக்கோவின் கருத்தாக்கத்திலிருந்து வருவது. அவர் அதிகாரம் வெறும் அரசு உறவுகளில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதாகக் கருதுகிறார். ஒவ்வொரு சமூக உறவுகளிலும், பரவி, விரவிக் கிடக்கிறது. அந்த அதிகார மேலாதிக்கத்திற்கு எந்த வரையறுக்கப்பட்ட நோக்கமும் இல்லை. (மூலதன அதிகாரத்திற்கும் எந்த நோக்கமும் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!) மொத்தத்தில் அரசு, அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் மட்டும் அதிகாரத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்பது ஃபூக்கோவின் நிலை.
இந்தக் கருத்தாக்கம் எங்கு இட்டுச்செல்கிறது? அதிகாரம் எங்கும் பரவியிருக்கிறது என்கிறபோது அதற்கு எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்டத் திட்டம் மூலம் செய்திட முடியாது. ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் இந்த எதிர்ப்பை நிகழ்த்தினால், அதுவே ஒரு அதிகார நிறுவனம் ஆகிவிடும். எனவே, ஒழுங்குமய மாக்கப்பட்ட கட்சி போன்ற எந்த அமைப்பும் கூடாது என்பதே பின்நவீனத்துவவாதிகளின் நிலை. அதனால்தான் அ.மார்க்° உள்ளிட்டவர்கள் லெனினிசத்தையும் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் லெனின்தான் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய உன்னதக் கோட்பாடுகளை ஒருவாக்கி மார்க்சியத்தை வளர்த்தவர். மேற்கண்ட உரையாடலில்கூட, ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மறுபரிசீலனை தேவை’ என்கிறார். இது கைவிடப்பட வேண்டும் என்று நாசூக்காகச் சொல்லப்படுகிறது. உறுதியான வர்க்க நிலைபாட்டில் வர்க்கங்களைத் திரட்டி, புரட்சியை முன்னெடுத்துச் சென்று, எதிரி வர்க்க மேலாதிக்கத்தை முற்றாக ஒழிக்கிற இந்தக் கோட்பாட்டை கைவிடுவது என்றால் பிறகு லெனினிசம் எங்கே இருக்கிறது? லெனினிசம் தவிர்த்து மார்க்சியம் பேசுவது என்றால் சமூக மாற்றம் பேசுவதில் எந்த நேர்மையும் இல்லை என்பது மட்டுமல்ல, தொழிலாளி வர்க்க இயக்கத்தை இது திசை திருப்பும் செயலாகும்.
சோவியத்திலும், இதர சோசலிச நாடுகளிலும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான முயற்சிகளில் ஏற்பட்ட விலகல்கள், தவறுகள், குறைபாடுகள் முழுமையாகக் கிரகிக்கப்படல் வேண்டும். ஆனால், இது மார்க்சிய லெனினிய நிலைபாட்டில் செய்திட வேண்டிய ஒன்று. முதலாளித்துவப் பார்வையிலிருந்தும், பின் நவீனத்துவப் பார்வையிலிருந்தும் சொல்லப்படுகிற கருத்துக்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவை.
மார்க்சியத்தோடு நட்பா? பகையா?
மேற்கண்ட உரையாடலின்போது, தோழர் நல்லகண்ணு “உபரி மதிப்பு என்பதையே போ°ட்மார்டனிசத்தில் மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார். அதற்குப் பதில் கூறுகிறபோது, அ.மார்க்° “உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டை போ°ட்மார்டனிசம் மறுக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்...?” என்று கூறி தோழர் நல்லகண்ணுவின் கூற்றை மறுக்கிறார்.

அந்த நீண்ட விளக்கத்தின் இடையில், அவரே மேற்கண்ட நிலையிலிருந்து முரண்படுகிறார், அவர் கூறுகிறபோது... “வர்க்கம், இனம் என்றெல்லாம் மட்டும் பிரித்து இந்த உள்வித்தியாசங்களை (தலித், பெண்கள் போன்று) மறுக்கப்படுவதையும், மக்களை வித்தியாசங்களற்ற பொதுமைகளாகப் பார்த்து, எல்லோருக்குமான விடுதலை, புரட்சி போன்ற பெருங்கதையாடல்களை விவரிப் பதிலும் உள்ள பிரச்சனைகளை போ°ட்மார்டனிசம் சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் அவர்.
இதற்கு அர்த்தம் என்ன? மார்க்சியம் என்பது ஒரு பெருங்கதை யாடல் என்று பின்நவீனத்துவவாதிகள் கூறுகின்றனர். அதாவது, தொழிலாளியின் உழைப்பினால் உபரி மதிப்பு உருவாக்கப்பட்டு, முதலாளியின் லாபமும், அதையொட்டி மூலதன வளர்ச்சியும் ஏற்படுகிற நிகழ்வை தர்க்க ரீதியாகவும், அறிவியல் அடிப்படை யிலும் மார்க்சியம் விளக்குகிறது. இந்த மூலதனச் சேர்க்கை ஏற்படுத்தும் முரண்பாடுகள் வர்க்க மோதலாக, புரட்சியில் கொண்டு செல்கிறது என்கிற அறிவியல் நிகழ்வை ‘பெருங் கதையாடல்’ என்று முத்திரை குத்தி, மார்க்சியத்தை நிராகரித்த வர்கள் பின்நவீனத்துவவாதிகள். முற்றாக மார்க்சியத்தை நிராகரிக் கிறபோது உபரி மதிப்பையும் இந்தப் ‘பெருங்கதையாடலின்’ ஆதாரம் என்பதால் அதையும் நிராகரிப்பதாகத்தானே அர்த்தம்?
மார்க்சியத்தைப் பின்நவீனத்துவவாதிகள் நிராகரிக்கவில்லை என்று அ.மார்க்° சப்பைக்கட்டு கட்டுவது எந்த அடிப்படையில்? ‘வர்க்கம்’, ‘புரட்சி’, ‘வர்க்கப் போராட்டம்’ போன்ற அடிப்படை கருத்தாக்கங்களே மார்க்சியத்தின் ஜீவனாக இருக்கின்றபோது, அவற்றை மறுத்துவிட்டு எந்த மார்க்சியத்தோடு பின்நவீனத்துவம் உறவு கொள்கிறது? (அ.மார்க்ஸின் சொந்த மார்க்சியத்தோடா?) மார்க்சியத்தோடு நட்பு பாராட்டுவதாகக் கூறி மார்க்சியத்தின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்தவர்கள் ஏராளம். அந்தப் போக்கின் சமீபத்திய அவதாரம் தான் பின்நவீனத்துவம். இது வர்க்கப்போராட்டத்தை தேன் தடவிய சொல்லடுக்குகளால் உருக்குலைக்க முயலுகிற தத்துவம் ‘வித்தியாசங்கள் பார்க்கப்பட வேண்டுமென்ற’ இனிமை நிறைந்த சொல்லடுக்கைப் பிரயோகித்து, வர்க்கம் என்ற அடிப்படையில் விரிந்து பரந்து உருவாகின்ற வர்க்க ஒற்றுமையைக் குலைக்க வந்த ஒரு கோடாரி தான் இந்த பின்நவீனத்துவம்.
பெருங்கதையாடல் (Meta - narrative) என்ற கருத்தாக்கமே சமுக மாற்ற லட்சியத்துக்கு உதவாது. பின்நவீனத்துவ சிந்தனை யாளரான லியோதர்ட் “பின்நவீனத்துவம் என்பதே பெருங்கதை யாடல்கள், அனைத்தும் நம்பத் தகுந்தவை அல்ல” என்கிறார். பல்வேறு தர்க்கரீதியான ஆதாரங்கள் மற்றும் அறிவியல் சோதனை முறைகள் மூலம் வந்தடைந்த உண்மைகளை விளக்கு பவை அனைத்தும் பெருங்கதையாடல் என்று அவர்கள் நிராகரிக் கின்றனர். இந்த அடிப்படையில் மார்க்சியம் நிராகரிக்கப்படுகிறது. மார்க்சியம் வலுவாக இருக்கும் பகுதியில் மார்க்சிய நண்பர்கள் போல் நடிப்பது அவர்கள் வழக்கம்.
“வித்தியாசங்கள்” என்ற பெயரில் வர்க்கப்பிளவு வேலை
கவர்ச்சியான சொல்லடுக்குகளைப் பயன்படுத்துவது ஒருபுறம் இருக்க, மற்றொரு தந்திரத்தையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். அதாவது, எதிராளி கருத்தையும் அங்கீகரித்துவிடுவது அல்லது ‘கவலை’ தெரிவிப்பது. பின்நவீனத்துவம் பற்றி மார்க்சியம் எழுப்பும் “வித்தியாசத்தை” எதிர்க்க முடியாமல், சரணாகதி அடைவது போல் பாசாங்கு செய்வதும் இதில் அடங்கும்.
வர்க்கம் என்று பார்க்காமல், வர்க்கத்திற்குள் இருக்கும் ‘வித்தியாசங்களைப்’ பார்க்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது சமூக, சாதி அடிப்படையில் ஒருவர் தலித்தாக இருக்கின்றனர். அதேசமயம் கூலி விவசாயி எனும் வகையில் அவர் விவாசய வர்க்கமாகவும் இருக்கின்றார். பின்நவீனத்துவவாதிகள் வர்க்கம் என்று பொத்தாம் பொதுவாகப் பார்க்க வேண்டியதில்லை; தலித் என்ற வகையில் அவரை, அவர் சமூகம் சார்ந்த மக்களைத் திரட்டிட வேண்டும் என்கின்றனர். இதையே தலித்தியம் எனும் பெயரில் இந்தத் திரட்டலை அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வந்துள்ளனர்.
இதேபோன்றே ஒரு பெண், தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளியாக இருக்கலாம். ‘வர்க்கம்’ என்று உழைப்பாளி வர்க்கத்திற்குள் அவர் உள்ளடக்கம் என்று பார்க்கக் கூடாது. பெண் என்ற நிலையில் மட்டும் தான் பெண்கள் திரட்டப்பட வேண்டும். இதனால் பெண்ணியம் பேசுகிற பல குழுக்களில் பின்நவீனத்துவ வாடை இருப்பதைக் காண முடியும்.
ஆக, தலித், பெண் உள்ளிட்ட “விளம்பு நிலை மனிதர்கள்” தனித்தனியாகத் திரட்டப்பட வேண்டும். வர்க்கம் என்று ஒட்டுமொத்தமாகத் திரட்டுவது கூடாது என்பது அவர்களின் வாதம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இந்தக்கருத்து எத்தகைய சீரழிவை “விளிம்புநிலை மனிதர்களுக்கு” ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண முடியும்.
1940 - 60 ம் ஆண்டுகளில் தஞ்சையில் மார்க்சிய ‘வர்க்கம்’ என்ற நிலையிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள் திரட்டப் பட்டனர். அவர்கள் முன் வைத்துப் போராடிய ‘கூலி’ என்ற கோரிக்கை வெளிப்படையில் பார்த்தால் பொருளாதாரக் கோரிக்கை போன்று தோன்றலாம். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய ஒடுக்குமுறை பின்னிப்பிணைந்து நின்ற சூழலில், “கூலி உயர்வு” என்று முழக்கமிட்டு அவர்கள் திரண்டனர். அந்த கோஷம் அனைத்து ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கியதாக வெடித்தது.
இவ்வாறு சாதிய ஒடுக்குமுறையையும், வர்க்க ஒடுக்கு முறையையும் தனித்தனியாகப் பிரித்திடாமல், இரண்டையும் இயல்பான பிணைப்போடு அணுகிய இந்தச் செயல்பாடு, தொடர்ந்து நீடித்து, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் பெற்றிருந் தால், இன்று தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் முதன்மை இடத்திற்கு வந்திருக்கும். இந்த நிகழ்வுப்போக்கைச் சீர்குலைத்தவை எவை என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. எனினும் 1990 ம் ஆண்டுகளில் தலித் மற்றும் சாதி அடையாளங்களை வலுப்படுத்தித் தனி இயக்கங்கள் உருவானது வர்க்க இயக்க வளர்ச்சிக்கு ஊறு விளைவித்தது என்பது உண்மை.
“அடையாள அரசியலை” தூண்டுவதில் முன்னணி
தலித் என்ற வித்தியாசம் உள்ளிட்ட வித்தியாசங்களை “உருவாக்குவதே போ°ட்மார்டனிசம் என்பது போலப் பார்க்க வேண்டியதில்லை. ஏற்கெனவே வித்தியாசங்கள் இங்கே இருக்கிறது தானே” என்கிறார் மார்க்°. உண்மைதான், ஏற்கெனவே இருக்கின்ற வித்தியாசங்களில் முதலாளி, தொழிலாளி, நிலவுடைமையாளர், உழைக்கும் விவசாயி போன்ற ‘வித்தியாசங்கள்’ எல்லாம் ஏன் வித்தியாசங்களாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை? இவர்களது செயல்திட்டம் இதுதான்.
‘விளிம்பு மனிதர்களை’ அவர்களது சாதி மற்றும் இதர அடையாள உணர்வு அடிப்படையில் தனியாகத் திரட்ட வேண்டுமென்றால், அவர்களிடம் நிஜவாழ்க்கையில் யதார்த்தமாக இருக்கும் வர்க்கம் என்ற உணர்வை பின்னுக்குத் தள்ளிட வேண்டும். மாறாக ‘தலித்’ போன்ற இந்த அடையாள உணர்வை மேலும், மேலும் வலுப்படுத்தினால், வர்க்கம் என்ற நிலைக்கு அந்த உணர்வைக் கொண்டுவராமல் மழுங்கடிக்கச் செய்திட இயலும். இதுதான் தமிழகத்தின் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் செய்திட்ட பெரும் சேவை! எனினும், இவர்களது சீரழிவுப் பணியையும் மீறி வர்க்க இயக்கம் தற்போது தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேகமாக, வளர்ந்து வருகிறது என்பது வேறுவிஷயம். அடிப்படை மார்க்சிய நிலைப்பாடுகளை குழப்புபவர்கள் விஷயத்தில், வர்க்க இயக்கம் கட்ட அன்றாடம் பல இன்னல்களுக்கு இடையே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தோழர்கள், எச்சரிக் கையாக இருக்க வேண்டியுள்ளது. தினந்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்களோடு தொடர்பற்று ‘தத்துவ விசாரணை’ நடத்தும் விஷமத்தனமான அறிவுஜீவிகள் பல நேரங்களில் வர்க்க இயக்க ஒற்றுமையை குலைப்பதில் வல்லவர் களாகவும் இருக்கின்றனர்.
அவர்களது தந்திரத்திற்கு இதோ ஒரு உதாரணம். மேற்கண்ட உரையாடலில் ‘வித்தியாசம்’ வலியுறுத்தும் பின்நவீனத்துவ கருத்தைக் கூறிவிட்டு, மார்க்° கூறுகிறார்...
“இப்படி வித்தியாசம் பார்ப்பது ஒட்டுமொத்தத்தை பலவீனப் படுத்திவிடும் என்ற கவலை நியாயமானதுதான்”. அதாவது ‘பொது’வைப் பார்க்கக்கூடாது, ‘தனி’யைப் பார்க்க வேண்டு மென்று சொல்லிவிட்டு, பிறகு ‘ஒட்டுமொத்தம்’ பலவீனமாகிறதே என்று கவலை தெரிவிப்பது எப்படிப்பட்டது? வீட்டை தீ வைத்துக் கொளுத்திவிட்டு தீ பரவுகிற ‘பலவீனத்தைப்’ பற்றிக் கவலை தெரிவிப்பது போல் உள்ளது. என்ன தந்திரம் என்றால், எதிரான கருத்தையும் சொல்லி வைத்துவிட்டால், பிறகு தன் கருத்தை மூளையில் ஏற்றிடலாம் அல்லவா?
பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் மேன்மையைப் புகழ்கிறார் அ.மார்க்°. ஃபூக்கோ, தெரிதா, பாத்ரிலா உள்ளிட்ட பலர் “கலகக்கார சிந்தனையாளர்களாகவே வாழ்ந்து மடிந்திருக் கிறார்கள். அதிகபட்சமாக இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் போராசிரியப் பதவிகள் தான். அதற்கு மேல் பெரிய அளவில் அரசுப் பாராட்டுகளோ, நோபல் பரிசுகளோ இவர்களுக்குக் கிடைத்த தில்லை” என்கிறார் அவர்.
உண்மைதான். இதோடு, தாராளவாதம் (டுiநெசயடளைஅ) எனும் சித்தாந்தத்தை உருவாக்கிய சிந்தனையாளர்களையும் ஒப்பிடலாம். ரூ°ஸோ, ஜான் °டூவர்ட் மில், தாம° ஹாப்° இப்படி அவர்களது வரிசை நீள்கிறது. இவர்கள் அடித்தளமிட்ட தாராளவாத ஜனநாயகம் எதற்குப் பயன்பட்டது? முதலாளித்துவம் வளருவதற்குத் தானே பயன்பட்டது. இந்த சித்தாந்தத்தை உருவாக்கியதற்காகப் போராசிரியப் பதவி கூட இல்லாமல் பல சோதனைகளை அனுபவத்தவர்கள் பலர். தாம° ஹாப்° தூக்கிலிடப்பட்டவர். இவர்களுக்கெல்லாம் நல்ல நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது சித்தாந்தம் முதலாளித்து வத்திற்கு மிகச் சிறந்த கருவியாகப் பயன்பட்டது என்பதே வரலாறு. சரியாக, அதே போன்று பின்நவீனத்துவ சிந்தனை இன்றைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவிடும் கருவியாக உள்ளது. இனம், சாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடுகிற அடையாள அரசியல் யாருக்கு உதவிடும்? பின்நவீனத்துவம் நடைமுறையில் இதைத்தானே செய்துள்ளது?
ஆக, பின்நவீனத்துவம் ஏன் உருவானது? இதற்கான சரியான விடையை அலெக்°காலினிக்கா° அளிக்கின்றனர்.
1968 ம் ஆண்டுக்கால புரட்சிகரத் தலைமுறையின் ஏமாற்றம் தான் பின்நவீனத்துவமாக வடிவெடுத்தது. அந்தத் தலைமுறைசார்ந்த பலர் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகளில் உயர் பொறுப்புக்களில் சேர்ந்து ஒரு “புதிய நடுத்தர வர்க்கமாக’ உருவெடுத்தனர். எனவே, பின்நவீனத்துவத்தை உண்மையில் சமூக அரசியல் இயக்கம் மீது விரக்தி அடைந்த ஒரு போக்காகப் பார்க்கலாமே தவிர, அறிவுத்துறை மற்றும் பண்பாட்டுத்துறையில் ஒரு முக்கிய தத்துவப் போக்காக எடுத்துக்கொள்ள இயலாது. இது மார்க்சி°ட்டான அலெக்° காலினிக்காஸின் நிறைவான ஆய்வு முடிவு.
பின்நவீனத்துவத்திற்கு எதிராக வலுவாகப் போராடிய மார்க்சி°ட்டுகளை மறைத்து, மேற்கத்திய தத்துவ உலகின் ஒருபக்கத்தை மட்டும் சிலாகிப்பது தமிழக ‘அறிவுஜீவி’களின் வழக்கம்.
மேலே குறிப்பிட்ட மார்க்சிய அடிப்படைகளிலிருந்து இத்தகு போக்குகளை எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமான வர்க்கப் போராட்டம். இது தீவிரமாக நடைபெற வேண்டும்.

Thanks: N. Gunasekaran
gunatn@gmail.com

March 08, 2008

செஞ்சுரி காணும் வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் கேரள இலக்கிய உலகின் பிதாமகன். வடக்குத் திருவாங்கூர், வைக்கத்தில் உள்ள தலையோலப்பறம்புவில் ஜனவரி 21, 1908 அன்று பிறந்தார் பஷீர். தற்போது, அவரது நூற்றாண்டு விழா கேரளாவில் மட்டுமல்ல; நாடு முழுவதும் சிறப்போடு நினைவுகூறப்படுகிறது. தமிழ் இலக்கியத்திற்கு பஷீர் புதியவரல்ல; அவரது சிறுகதைகள் மற்றும் நாவல்களில் பெரும் பகுதி மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்கும் சிறப்பு சேர்த்துள்ளது.
பஷீரின் படைப்புகள் எதார்த்தவாத இலக்கியத்தை தாங்கி நிற்கும் மாபெரும் தூண்கள். அவரது படைப்புகள் அனைத்திலும் அவரது வாழ்க்கை நீரோட்டமும் இரண்டற கலந்தே இருக்கும். கேரள மக்களை வசீகரிக்கும் இலக்கிய நாயகனாக பஷீர் வீற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.பஷீரின் எழுத்துக்கள் சுவீகரிக்கும் தன்மைக் கொண்டது. பல புதிய இளம் எழுத்தாளர்களுக்கு இவரது எழுத்துத்தன்மை ஒரு அட்சயப்பாத்திரம். பஷீரின் எழுத்துக்களில் பெரும் பாண்டித்தியமோ, மேதமையோ, அழகியல் மற்றும் சித்தாந்த போக்குகளோ அல்லது மேல் பூச்சு வேலைகளோ எதுவும் இருக்காது. அது தான்வாழ்ந்த கேரள மண்ணின், எளிய மக்களின் மொழியை பேசும் காவியமாக - இலக்கியமாக, அவர்களின் வாழ்க்கை சித்திரத்தை சொல்லோவியமாக அப்படியே படம் பிடித்துக் காட்டியது. இலக்கியம் என்று சொன்னாலே ‘ஷேக்ஷ்பியர் மாதிரி இருக்க வேண்டும் என்பதல்ல; பஷீர் மாதிரி இருந்தாலே போதும்’ என்ற நம்பிக்கையை விதைத்தவரே இந்த வைக்கம் வீரர்!
மரவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பஷீரின் தந்தைக்கு பெரிய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட இன்னல்களுக்கு உள்ளானது குடும்பம். ஆரம்ப கல்வியில் பயின்று வந்த பஷீரின் மனம் இளம் வயதிலேயே சுதந்திரத்தின் மீது காதல் கொண்டது. காந்தியம் எனும் காந்தத்தின் ஈர்ப்பால் கவரப்பட்ட பஷீர் கதராடைகளை அணியத் துவங்கி பொதுவாழ்வில் தன்னுடைய இன்னிங்சை துவக்கினார்.
1924இல் வைக்கம் சத்தியாகிரகதிற்கு காந்தியார் வந்தபோது, அவரைப் பார்க்க வேண்டும் என்ற அவாவில், அவரது காருக்குப் பின்னால் ஓடிச்சென்று காந்தியின் கையை தொட்டு விட்ட சந்தோஷம் மின்சாரமாய் பாய்ந்து பஷீரை இயக்கிக் கொண்டே இருந்தது; ஒரு சுதந்திரப் போராளியாய் - மக்களை நேசிக்கும் மாண்புகளைக் கொண்ட மனிதமாய்.
இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்ட பஷீர் 1930இல் கோழிக்கோடில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெறச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்று கண்ணணூர் சிறையிலிருந்த போது ‘பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின்’ வீராவேச நிகழ்வுகள் மேலும் மின்சாரத்தை வலுவாகப் பாயச்சி சுதந்திரக் கனலை எழுச்சிக் கொள்ளச் செய்தது.
பின்னர் விடுதலையான பஷீர், பரவலான மக்கள் மத்தியில் தீவிர சுதந்திர வேள்வியை கொண்டுச் செல்ல ‘உஜ்ஜீவனம்’ (எழுச்சி) என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இதற்காக இவர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளத்திலிருந்து வெளியேறிய பஷீர், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றியலைந்தார். தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக பல்வேறு பணிகளை மனமுவந்து செய்தார். பழவியாபாரி, செய்தித்தாள் விற்பனையாளர், பிட்டர், வாட்ச்மேன், அக்கவுண்டண்ட், மாடு மேய்ப்பது, ஹோட்டல் தொழிலாளி என அவர் செய்யாத வேலையே இல்லை என்ற அளவிற்கு அவரது பணிகள் அமைந்தது.
அதே காலத்தில், இமயமலை அடிவாரத்திலிருந்த சூஃபி சன்னியாசிகளோடு தங்கியிருந்து, சூஃபியிசத்தின்பால் மனதை பறிகொடுத்தார். பல்வேறு இடங்களில் சுற்றியலைந்து, பின் 1936 வாக்கில் சொந்த ஊருக்குத் திரும்பிய பஷீர், தன் குடும்பம் மிக வறிய நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார். குடும்பத்தினரோடு தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் துவங்கிய பஷீர் பல்வேறு வேலைகளை செய்தார். பின் ‘ஜெயகேசரி’ என்ற பத்திரிகையில் சேர்ந்தார். அங்கு சில காலம் பணிபுரிந்த சமயத்தில்தான் இவரது முதல் படைப்பான ‘தங்கம்’ என்று சிறுகதை வெளியானது. தங்கத்தில் துவங்கிய இவரது படைப்புகள் நாட்பட நாட்பட மிகுந்த ஜொலிப்புடன் கூடிய வைரமாக மிளிர்ந்தது.
முழுநேர எழுத்தாளராக மலர்ந்த பஷீர், பல்வேறு படைப்புகளை மலையாள இலக்கிய உலகிற்கு அளித்தார். குறிப்பாக ‘பாத்துமாவின் ஆடு’, ‘இளம் பருவத்து தோழி’, ‘மதிலுகள்’, ‘உலகப் புகழ்மிகு மூக்கு’, ‘மதிலுகள்’, ‘சப்தங்கள்’, ‘எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது’, ‘மந்திர பூணை’, ‘ஜென்ம தினம்’ போன்ற இவரது பல்வேறு படைப்புகள் கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆரம்ப காலத்தில் இவரது படைப்புகளை இவரே தெருத்தெருவாகவும், பேருந்து நிலையங்களுக்கும் எடுத்துச் சென்று தானே கூவி விற்று வந்தார். சில நேரங்களில் பேருந்து நிலையத்தில் ஒருவரிடம் விற்ற கதைகளை அவர் படித்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்பு அவரிடம் பேசி அந்த புத்தகத்தை பெற்று வேறு ஒருவருக்கு விற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படித்தான் இவரது எழுத்துக்கள் கேரள மக்கள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்தது.
பொதுவாக நாவல் என்று சொன்னாலே அது தலையணை அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உடைத்தவர் பஷீர். இவரது பெரிய நாவல்கள் கூட 80 பக்கத்திற்கு மிகாது. உதாரணமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘பண்டமரா’ போல்; அளவில் சிறியதாக இருப்பினும் கீர்த்தியில் பெரியதாக இருக்கும். 1941-42இல் இவரது இரண்டு படைப்புகளுக்காக திருவாங்கூர் அரசு இவரை சிறையில் அடைத்தது. இவரது வீடும் சோதனையிடப்படடது. எழுதியதற்காக சிறையில் அடைத்தவர்கள், இவரது எழுத்தை சிறையில் பூட்ட முடியவில்லை.
பஷீரின் புகழ்மிகு படைப்பான ‘பாத்தும்மாவின் ஆடு’ இவரது வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும். பெரிய கூட்டுக்குடும்பத்தில் நேரும் பல்வேறு இன்னல்களை இதில் மிக அழகாக படம் பிடித்திருப்பார். குறிப்பாக பஷீரின் தங்கையான ‘பாத்துமா’வின் ஆடு அந்த வீட்டில் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயிருக்காது. இருப்பினும் அந்த ஆட்டை அனைவரும் நேசித்தனர். ‘பாத்துமாவின்’ துன்பங்களுக்கு விடிவே அந்த ஆடுதான்; இந்த ஆட்டை மையமாக வைத்து படைக்கப்பட்ட இந்நாவல் மிகவும் சுவையூட்டக்கூடியதாக இருக்கும். அந்த ஆடு வீட்டில் உள்ள இலை, தழைகளை மட்டுமல்ல; குழந்தைகளின் சாப்பாட்டைக்கூட தின்று விடும், அது மட்டுமா? பஷீரின் சில நாவல்களும் அதன் பசிக்கு சுவையாகியிருப்பதை அழகாக படம் பிடித்திருப்பார். குடும்ப வறுமையால் பஷீருக்கு வரும் சொற்ப பணம் கூட, சில மணித்துளிகளில் எவ்வாறு பறந்து போகிறது என்பதையும், இதில் வெறுத்துப்போன பஷீர் பாத்துமாவின் ஆட்டுக்குகூட ஒரு பத்து ரூபாய் நோட்டை தின்பதற்கு கொடுக்கும் காட்சி நெகிழ வைக்கிறது. பஷீரின் தங்கைகள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் வைக்கும் கோரிக்கைகள், அதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பார். பாத்துமாவின் ஆடு குட்டிப் போட்ட பிறகு அந்தப் பாலுக்காக ஏங்கும் ஒட்டுமொத்து குடும்பமும் - பாலை நம்பி வாழ்க்கையை ஓட்டும் அப்பாவி பாத்துமாவும் இந்நாவலின் வாயிலாக நம் நினைவில் ஒட்டிக் கொள்கிறார்கள்.
அதே போல், ‘மதில்கள்’ பஷீர் எழுத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த காலத்தில் உருவான படைப்பு இது. சென்டிரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை காலத்தில் எது, எது கிடைக்கும், எது எது கிடைக்காது, கிடைப்பதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் அது தீக்குச்சியாக இருந்தால் கூட இரண்டாக, மூன்றாக சிறு அளவில் பிளந்து பயன்படுத்துவதும், சிறைத் தண்டனைப் பெற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள் எப்படியெல்லாம் வெளியிலிருந்து பொட்டலங்களாக வருகின்றன. ஒரு கட்டத்தில் தலைவர்கள் எல்லாம் விடுதலையாகும் போது இவருக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை. இருப்பினும் என்ன? சிறையின் மதில்களுக்கு அடுத்து பெண்கள் சிறை அமைந்திருந்தது ஆறுதலாய் மாறியது; மதில்களுக்கு இடையில் காதல் மலர்வதும், சிறைக் காவலர்களை ஏமாற்றிக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே மதில்களுக்கு இடையில் பேசிக் கொள்வதும், ரோஜா செடிகளை பரிமாரிக்கொள்வதுமாக காதல் உணர்வால் உந்தப்பட்டிருக்கும் நேரத்தில் இவருக்கு விடுதலை கிடைக்கிறது. அந்த நேரத்தில் பஷீர் எழுப்பும் கேள்வி அழகுணர்ச்சியோடு அமைந்துள்ளதை காணமுடியும். ‘யாருக்கு தேவை இந்த விடுதலை? யார் கேட்டது இந்த விடுதலையை?.
அதே போல் ‘உலக புகழ்மிகு மூக்கு’ என்ற சிறுகதை எள்ளலும் துள்ளலுமான, கேலியும் - கிண்டலுமான, நகைச்சுவையோடு கூடிய அப்புறதமானதொரு படைப்பு. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ‘மூக்கனுக்கு’ திடீரென மூக்கு வயிற்றின் தொப்புளைத் தொடும் அளவிற்கு தும்பிக்கைபோல் வளர்ந்து விடுகிறது. உடனே வேலையிலிருந்து நீக்கப்படுகிறான் மூக்கன். யாரும் இவனுக்கு வேலை தர மறுக்கின்றனர். வறுமையில் இருக்கும் மூக்கன் வெறும் காட்சிப்பொருளாய், கேலிப் பொருளாய் மாறுகிறான். இவனது துன்பத்தையோ, மன உலைச்சலையோ, வறுமையைப் பற்றியோ இந்த சமூகம் கவலைப்படாமல் இருப்பதையும், ஒரு கட்டத்தில் இந்த அபூர்வ மூக்கைப் பார்க்க வேண்டும் என்றால் காசு கொடுத்துதான் பார்க்க வேண்டும் என்ற நிலை வந்த சில ஆண்டுகளில் அவன் லட்சாதிபதியாவதும், அதற்கு பின் மூக்கனின் புகழ் உச்சத்திற்கு போவதும், அவனுக்காக பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்குவதும், டாக்குமெண்டரி படங்கள் எடுப்பதும், மத்திய - மாநில அரசுகள் விருதுகள் கொடுப்பதுமாக காட்சிகள் மிக விறு விறுப்பாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் எங்கு நோக்கினும் மூக்கனின் புகழ் பாடலையே மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பாவதும், பின்னர் மூக்கனுக்கு எதிராக அவதூறு கிளப்பும் போது அவனை சபிப்பதும், ஏசுவதுமாக இருக்கும் மக்கள் கூட்டம் இறுதியில் மூக்கனுக்கு ஜிந்தாபாத் போடும். இந்த சமூகத்தில் ஆட்டு மந்தைகளாய் இருக்கும் மக்கள் கூட்டத்தை மிக எள்ளலோடு அம்பலப்படுத்தியிருப்பார் பஷீர்.
மொத்தத்தில் அவரது கதை மாந்தர்கள் அனைவரும் எளிய மக்களே! அவர் கண்ட காட்சிகளையே முழுக்க முழுக்க எளிய மொழியில் கதையாக்கம் செய்திருக்கிறார். இலக்கியம் மேல் தட்டு வர்க்கத்திற்கே உரியது என்ற பத்தாம் பசலித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்தவர் பஷீர். அவரது வாழ்க்கை முழுவதும் மிக எளிமையாகவே வாழ்ந்தவர். அவரது இலக்கியமும் - வாழ்க்கையும் பிரிக்க முடியாதது என்றும் ‘ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட பெரிய ஒன்றுதான்’ என்பதை பஷீரின் படைப்புகளையும் - வாழ்க்கையும் கற்கத் துவங்கும் ஒருவரால் புரிந்துக் கொள்ள முடியும்!மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, கேரள சாஹித்திய அகாடமி விருது, வல்லத்தோள் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோட்டில் உள்ள பேப்பூரில் அவரது இறுதி நாட்களைக் கழித்த பஷீர் ஜூலை 5, 1994 அன்று இலக்கிய உலகிலிருந்து தன்னை நிரந்தரமாக விடுவித்துக் கொண்டார். கேரள மக்கள் வைக்கம் முகம்மது பஷீரை, ‘பேப்பூர் சுல்தான்’ என்று அன்போடு அழைக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரராக, இலக்கியப் போராளியாக, எளிய மக்களையும், ஜீவராசிகளையும் தன் படைப்பின் மூலம் உயிர்ப்பித்த பஷீரின் படைப்புகள் வழி தமிழ் மக்களை பயணிக்கச் செய்வோம் அதுவே அவருக்கு செய்யும் சிறப்பாகும்!