April 05, 2008

பாரத மாதா கி ஜே

சங்பரிவாரம் தன்னை எப்போதும் கட்டுப்பாடான அமைப்பாக பெருமையடித்துக் கொள்வது வழக்கம். குருஜி வழிபாடு கொண்ட பாசிச அமைப்பல்லவா? அதன் வழிவந்த அரசியல் அமைப்பான பா.ஜ.க.வின் தொண்டர்களும் மிகவும் கட்டுப்பாடானவர்கள் போல் காட்டிக் கொள்வது வழக்கம்.
ஆனால் உண்மை என்ன? பதவிக்கும் - புகழுக்கும் கட்சி தலைமைக்குள்ளே அடிக்கடி அடிதடி நடப்பது வழக்கம். ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டு உள்ளூர சந்தோசப் பட்டுக் கொள்ளும் அமைப்பே பா.ஜ.க.
ஹேகேனக்கல் விசயத்தில் கர்நாடக பா.ஜ.க. (தமிழக பா.ஜ.க.) அடித்த அரசியல் ஸ்டண்ட் தமிழகத்திலும் - கர்நாடகத்திலும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இரு மாநில மக்களும் ஒருவரை ஒருவர் பகைமை உணர்வோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
தி.நகரில் உள்ள மாநில அலுவலகமான கமலாலயத்தில் இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் (சிலர் குண்டர்களாக இருந்தனர். அவர்களது பேச்சு கேட்பவர் காதை மூடிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது.) கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சிலர் பாரத மாதா கி ஜே என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களையெல்லாம் உள்ளே போகுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரை இன்னொரு ஜி தாக்க... அவ்வளவுதான் கைகலப்பு முற்றி விட்டது. கேமராக்களிலிருந்து தப்புவதற்காக மீண்டும் பாரத மாதா கி ஜே என்று உரக்க முழங்கினர். கட்டுப்பாடான கட்சின்னு சொன்னாங்களே அது இதானான்னு அங்கிருந்த மக்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தனர். கட்டுப்பாடான கட்சியா? கட்டிப் புரளும் கட்சியா?
வழிபோக்கர் ஒருவர் இந்த வீரத்தை கொஞ்சம் எடியூரப்பாவிடமாவது காட்டியிருக்கலாமே என்று கூறிக்கொண்டே சென்றது நல்ல காமெடியாக இருந்தது.

No comments: