March 30, 2009

"போஸ்டர் பாய்" காட்சிகளும், காலியான மூளைகளும்!

என்.டி. டிவி, டைம்ஸ் நெவ், சிஎன்என்-ஐபின், ஹெட்லைன்ஸ் டுடே... இத்தியாதி, இத்தியாசி ஆங்கிலச் சேனல்களில் 24X7 அந்தப் பையனின் முகத்தை காட்டத் தவறுவதில்லை. கடந்த 15 நாட்களாக அந்தப் பையனின் முகம் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் பரிட்சயமாகி விட்டது. அடையாளமாய்த் தங்கியும் விட்டான்! யார் அந்தப் பையன் என்றா கேட்கிறீர்கள் - வேறு யார்?"இஸ்லாமியர்களின் தலையை வெட்டுவேன்" என்று கூறி மதவெறியை கிளப்பி வன்முறையை தூண்டினானே வருண்காந்தி அவன்தான்.
முதலில் அவனது பேச்சைக் காட்டிய மீடியாக்கள்..
பின்னர் அவன் குறித்த சச்சையை காட்டிக்கொண்டே இருந்தது...
அடுத்து, தேர்தல் கமிஷன் அந்தப் பையனை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தாதீர்கள் என்று பா.ஜ.க.வை கேட்டுக் கொண்டது.. அதையும் சர்ச்சையாக்கியது...
அடுத்து, அந்தப் பையனின் கைது நடவடிக்கைக்கான தடையாணை பெற்றது...
பின்னர் தடையாணை விலக்கிக் கொண்டது...
அப்புறம் ஊர்வலமாகச் சென்று கைதாகியது...
இப்போது அந்தப் பையன் மீது பாய்ந்துள்ள என்.எஸ்.ஏ. (தேசிய பாதுகாப்புச் சட்டம்) பாய்ந்துள்ளது... என்று அந்த குற்றவாளியை ஒரு ஹீரோவாக உயர்த்துவதற்கு இந்த ஆங்கில மீடியாக்கள் சேவகம் புரிந்து வருகின்றன.
அவர்களே அதற்கான டைட்டிலையும் கொடுத்து விட்டார்கள். "இந்துத்துவாவின் போஸ்டர் பாய்". தேர்தல் காலத்தில் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்தத் தேர்தலில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்று ஒரு பட்டியலிட்டு அதில் மக்களின் மனநிலைகளை அறிந்து ஒளிபரப்பி வாக்காளர்களுக்கு ஒரு சரியான திசைவழியை அடையாளம் காட்ட உதவ வேண்டிய இந்த மீடியாக்கள், தலையை வெட்டுவேன் என்று சொன்னவருக்கு கண்ணாடியாக செயல்பட்டு பாஜகவுக்கு மறைகமாக சேவகம் புரிந்து வருகிறது.
பா.ஜ.க. இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்று அனைவராலும் சொல்லப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் விளையாட்டில் கூட்டாளியாக சேர்ப்பதற்கே ஆளில்லாத நிலையில், முகமிழந்து நிற்கும் இந்த தாமரைக்கு, "போஸ்டர் பாயை" தூக்கிப் பிடித்து இந்துத்துவா சேவை புரிந்து வாக்குகறை சேரிக்கும் புனிதப் பணியை நிறைவேற்றி வருகின்றன நவீன கோயபல்சு மீடியாக்கள்!
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எப்படி செயல்பட்டது?
பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டதா? மக்கள் பிரச்சனைகளில் அவர்கள் எப்படியெல்லாம் ஆர்வம் செலுத்தினார்கள்? எந்தப் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள்? அப்புறம் எப்படி கேள்வி கேட்பதற்கே பாராளுமன்றத்தில் கையூட்டு பெற்றார்கள்? ஒரிசாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி பழங்குடி கிருத்துவர்களை எப்படி கொன்றார்கள், வீடுகளை தீயிட்டு கொளுத்தினார்கள்,
அதே போல் காங்கிரஸ் கட்சி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதில் காட்டிய ஆர்வம் சர்வதேச மார்க்கெட்டில் அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய் விற்கும்போதுகூட ஏன் பொதுமக்களுக்கு விலையை இறக்க மறுக்கிறது. மாறாக, விமான சர்வீசுக்கான பெட்ரோல் விலைகயை எத்தனை முறை குறைத்து தங்களது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்தது? அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் எப்படி மண்ணாக நடந்துக் கொண்டார் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டது எப்படி? மகாராஷ்டிரா விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு எந்தவிதமான நிவாரணத்தையும் கடந்த ஐந்தாண்டில் தேடாமல் இருந்தது எப்படி! இதற்கான பரிகாரம் என்ன? பட்ஜெட் கூட்டத் தொடர் உட்பட பாராளுமன்ற நடவடிக்கைகள் மிக குறைந்த நாட்களே இந்த காலகட்டத்தில் நடந்ததன் ரகசியம் என்ன?
திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பத்திலேயே பெரிய பொறுப்புகளை அடைவதற்காக எப்படி மத்திய அரசை மிரட்டினார். அதேபோல் மத்திய அமைச்சர் ராசாவின் 2ஜீ - மொபைல் சர்வீஸ் ஊழல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது - கிட்டத்தட்ட வரலாற்றிலேயே நடக்காத ஊழல் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? என்ன ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் என்கிறார்களே அது என்ன?
அதேபோல் மலேகானில் பா.ஜ.க.வும்-சங்பரிவாரமும் குண்டு வைத்துக்கொண்டு இந்து பயங்கரவாதமாக எப்படி மாறியது! பயங்கரவாத அச்சுறுத்தலில் பாஜகவின் பங்கு என்ன? இப்படி நூறாயிரம் கேள்விகள் இருக்க ஏதோ வருண் காந்தியின் படத்தை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களது காலியான மூளைகளைத்தான் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது பெருமுதலாளித்துவ ஆங்கில மீடியாக்கள் அதற்கு ஒத்து ஊதி வருகிறது தமிழ் (சன்-கருணாநிதி) கார்ப்பரேட் மீடியாக்கள்.
மீடியாக்களை விட சிறந்த வலுவான ஆயுதம் மக்களது வாய்தான்! எனவே நாம் வாயாடுவோம்! உண்மைகளை உரைப்போம் மக்களிடம்! காங்கிரசு-திமுக, பாஜக கூட்டாளிகளை அம்பலப்படுத்துவோம்.

March 27, 2009

மகுடம் சூட்டிக் கொண்ட பிரதமர்கள்!

15வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருடத்திற்கு முன்னதாகவே பா.ஜ.க. தரப்பில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவரும் தானே அடுத்த பிரதமர் என்ற கித்தாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மறுபுறத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு டாக்டர் மன்மோகன்சிங்தான் என்று பதிலுரைத்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமர் ஆக வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு இந்திய ஜனநாயகமும், மக்களும் விடைகொடுத்துவிட்ட பின்னணியில் மத்தியில் யார் வந்தாலும் அது கூட்டாட்சிதான் என்ற மந்திரம் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்கிவிட்டது.
தானே ராஜா, தானே மந்திரி என்று வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சீண்டுவதற்கு யாரும் இல்லை. அவர்களது ஐக்கிய முற்போக்கு கூட்டணியெல்லாம் காற்றில் கலந்து கரைந்துவிட்டது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உ.பி.யிலும், பீகாரிலும் காங்கிரசுக்கு பார்ட்னர் யாரும் கிடையாது! பா.ஜ.க. மட்டுமென்ன அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேங்கிறார்கள். இப்போதே பல பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முட்டை உறுதியாகி விட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் முட்டைக்கு அட்வான்ஸ் புக்கிங்கெல்லாம் செய்து விட்டார்கள். அப்புறம் என்ன? காங்கிரசும் இதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே மூழ்கும் கப்பல் என்று புரிந்து கொண்ட மாநில கட்சிகள் தங்களது அரசியல் மரியாதையை உயர்த்திக் கொள்ள, "என் வழி தனி வழி" என்று ராஜபாட்டையில் நடைபோடத் துவங்கி விட்டது. லாலுவும், ராம் விலாஸ்பஸ்வானும், முலாயமும் காங்கிரசுக்கு டூ... விட்டு விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அத்வானி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் மன்மோகன் சிங்கைப் பார்த்து... யார் சிறந்த நிர்வாகி என்று பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்! மக்களுக்குத் தெரியும் இந்த இரண்டு பேருமே உருப்படியானவங்க இல்லையென்று!


அத்வானி ஹவால கேஸ் முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளி... அது மட்டுமா? நடப்பு பாராளுமன்றத் கூட்டத்தொடர்களிலும் குறிப்பாக பட்ஜெட் சமர்ப்பிக்கும் காலங்களிலும் உருப்படியான எதிர்கட்சியாக நடந்து கொள்ளாமல், தனது கருத்துக்களை பாராளுமன்றத்தில்கூட தெரிவிக்காமல் மன்மோகன் சிங்கிடம் புறக்கதவு வழியாக சென்று கருத்து தெரிவிக்க முற்பட்டு மூக்கு உடைபட்டவர்தான் அத்வானியும் பா.ஜ.க.வும். இதிலிருந்தே தெரியும் இவர்கள் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் என்று?

ரத யாத்திரைகள் மூலம் மதவெறியைத் தூண்டி சொந்த நாட்டு மக்களை சுய அரசியல் லாபத்திற்காக கொன்ற மதவெறிக் கூட்டத்தின் தலைவர் இந்த தேசத்தின் பிரதமர் என்பதை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. இதன் மதச்சார்பற்ற மாண்புகள் ஏற்கனவே உ.பி.யில் இல்லாதது ஒழித்து விட்டது பா.ஜ.க.வை இந்த தேர்தலில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! இதுவே மக்கள் தீர்ப்பாக மாறிட வேண்டும்.


மன்மோகன் சிங் மக்களை சந்திக்காதவர் என்பதால், இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்குரலையும் பொருட்படுத்தாமல், பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமெரிக்காவுடன் தேனிலவு வைத்துக்கொண்ட அமெரிக்க பித்தர்!

எனவே, இந்த இரண்டு பேர் சார்ந்துள்ள கட்சிகள் முறியடிக்கப்பட் வேண்டியவை என்பதுதான் இந்த தேர்தலின் தீர்ப்பாக மக்கள் எழுதவுள்ளனர்.
அடுத்து, பா.ஜ.க. தனது ஆட்சிக்காலத்தில் தற்போதைய அரசியல் சட்டத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கூட மாற்றி தனக்கு சாதகமாக மாற்ற முயன்ற ஒரு பாசிச அமைப்பு. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கனவு கொண்ட அமைப்பு. எனவேதான் நானே பிரதமர் என்று உளறிக் கொண்டிருக்கிறார் அத்வானி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் இதில் பெரும்பான்மை பெறுபவர்கள் கூடி தங்களுக்கான பிரதமரை தேர்வு செய்துக் கொள்வார்கள். இதுதான் இந்திய ஜனநாயகம் காட்டியுள்ள வழி. ஆனால் இதனை பை-பாஸ் செய்ய முனையும் காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டையும் ஓடவிடுவோம்! மூன்றாவது மாற்றை - மக்களுக்கான மாற்றை - மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை வலுவாக்கும் போன்ற முழக்கத்துடன் இடதுசாரிகளும் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் பலம் பெற்று வருகின்றனர். இவர்களை ஆதரிப்போம்!

March 23, 2009

ஜெய் ஸ்ரீ... ராம்!

ஜெய் ஸ்ரீ... ராம்... என்று தனது இரண்டு கைகளையும் சிக்சருக்கு தூக்குவது போல உணர்ச்சி பெருக்கெடுத்து, கண்களில் வெறியூட்டும் போதையோடு, வாயைப் பிளந்து கர்ஜித்தான் அந்த பால்வடியும் முகம் கொண்ட இளைஞன். அந்த இளைஞனுக்கு எதிரே இருந்த சிறுங்கூட்டமும் அப்படியே அதே வேகத்தோடு வாயைப் பிளந்தது ஜெய் ஸ்ரீ... ராம்... என்று கர்ஜித்தது.

அந்த இளைஞன் ஜெய் ஸ்ரீ... ராம்..., ஜெய் ஸ்ரீ... ராம்... என்று எத்தனை முறை கத்தியிருந்தாலும் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது பக்தியின் முக்தி என்றே பரவசப்பட்டிருப்பார்கள்! எப்படியாவது அதிகாரம் என்ற நாற்காலியை பிடிக்க வேண்டுமல்லவா? அதனால் அதன் உச்சத்திற்கே சென்றான் அந்த இளைஞன், அப்புறம் என்ன "முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்" என்று ஏதோ சாதாரணமாக தேங்காய் உடைப்பது போல தனது வெறியைக் கக்கினான்.
இப்படி கக்கியது யார்? மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி இவர்கள் வழியில் வந்த சஞ்சய்காந்தி-மேனகா காந்தியின் தவப்புதல்வன் வருண்காந்திதான் இப்படி பேசியுள்ளார். அதாவது, ஜவஹர்லால் நேரு மதச்சார்பற்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இத்தகைய உயர் அரசியல் பின்னணியில் பிறந்து வளர்ந்த இந்த பலகனுக்கு திடீரென்று இப்படி வெறி ஏற்பட என்ன காரணம் என்று ஆராய வேண்டியது கடமையாகிறது.

வருண்காந்தியின் தாய் மேனகாகாந்தி, பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக செயல்பட்டவர். அதாவது, ஆராயச்சிக்காகக் கூட குரங்கு, பூனை போன்ற விலங்குகளை பிடிக்கக்கூடாது என்று சொன்னவர். இதனாலேயே பல மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட சிறப்பான சோதனை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். பல ஆராய்ச்சி சாலைகள் இதனாலி விழிபிதுங்கி நிற்கிறது. சரி இதுவாவது பரவாயில்லை; குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்காக இருந்த சர்க்கசில், புலி, சிங்கம், யானை... போன்ற மிருகங்களை பல வருடங்கள் பழக்கி வித்தை காட்டுவார்கள் இதற்குகூட தடை விதித்தவர்தான் வருண்காந்தியின் தாயார் மேனகா.

இப்படி மிருகத்தின் மீதெல்லாம் அன்பை செலுத்திய அந்த தாய் ஏனோ தனது மகனின் மனதில் இந்த நேசத்தை, மனிதத்தை நேசிக்கும் பண்பை உருவாக்க தவறிவிட்டார். இது அவருடைய குற்றமா? அல்லது தனது மகனின் "கூடா நட்பால்" ஏற்பட்ட வினையா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

காந்தி குடும்பத்தில் பிறந்த வருண் இன்றைக்கு கோட்சேவின் முகாமில் இருக்கிறான். அதாவது பா.ஜ.க.வின் தத்து(வ)ப்பிள்ளையாகி விட்டார். பா.ஜ.க.வும் இவரை உத்திரப்பிரதேசத்தில் உள்ள, பிலிபத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து விட்டது. அங்குள்ள இந்துக்களின் ஓட்டுக்களை முழுமையாக வேட்டையாடுவதற்காகத்தான் இப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக "வெறிக் கூச்சல்" போட்டுள்ளான் அந்த இளைஞன். அதுவும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் கமிசனால் அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில்தான் இவ்வளவு தைரியமாக! முழங்கியுள்ளான் அந்த பாலகன்.

அப்புறம் இந்த விசயம் மீடியாக்களில் கசிய, பின்னர் தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் செல்ல... மீடியாக்கள் கடந்த 10 நாட்களாக 'அவனது குழந்தை முகத்தையும், வெறிக் கூச்சலையும்' ஒருசேர காட்டிக் கொண்டே இருந்தன. (இதனால் பார்ப்பவரின் மனதில் ஒருவிதமான ரசாயண கலவை ஏற்படுவதை டி.வி.யை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர்.) இருந்தாலும் என்ன பயபக்தியோடு மீடியாக்கள் முன்னாள் மண்டியிட்ட அந்த வாலிபன். "தான் அவ்வாறு பேசவில்லை" என்றும், இதற்காக மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும், அது திட்டமிட்ட சதி என்றெல்லாம் தினமும் பவ்யமாக பொய்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். இருப்பினும் என்ன? அறிவியல் யுகத்தில், அதுவும் காந்தியின் குடும்பத்தில் வந்த பேரனின் பேச்சை வீடியோ எடுக்காமல் இருப்பார்களா? அதுவும் கோட்சேவின் முகாமில் உள்ள முக்கிய வி.ஐ.பி. ஆச்சே! வீடியோ ஆதாரங்கள் எல்லாம் தேர்தல் கமிஷன் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்குள் பா.ஜ.க. இவ்விஷயத்தில் பலமுறை ஜகா வாங்கியது. அவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை என்று சொல்லியது. ஏற்கனவே சங்பரிவாரத்திற்குள் குடுமி சண்டைகள் உச்சத்தில் இருக்க இதுவேறவா என்று பம்மியது.

அதற்குள் தேர்தல் கமிஷனும் அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து குற்றவாளி என்று அறிவித்து விட்டதோடு, அவரை தேர்தலில் நிற்பதற்கும் தடை விதித்தது. அத்துடன் மதவெறியையும், இதர மதத்தினர் மீது துவேஷத்தை கக்கிய வருண் காந்தி மீது பல பிரிவுகளில் வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு உறுதியானால் இவருக்கு மூன்று ஆண்டு தண்டணை உறுதி என்றும் கூறப்படுகிறது. ("Varun Gandhi has been booked under Section 153 (a) and Section 188 of the Indian Penal Code as well as Section 125 of the People's Representative Act. Investigations are on," said Senior Superintendent of Police (SSP), Pilibhit, R.K. Chaturvedi. While Section 153 (a) deals with "promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language etc and doing acts prejudicial to maintenance of harmony", Section 188 is on "disobedience to order duly promulgated by public servant". Section 125 of the People's Representative Act deals with "offence of promoting enmity between classes in connection with the elections".) இந்தியாவின் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் சீர்குலைவை உண்டாக்கும் வகையில் பேசிய இந்த பாலகனை சட்டம் நிச்சயம் தண்டிக்க வேண்டும். அது ஒருபக்கம் இருக்கட்டும்!

வருண்காந்திக்கு வேண்டும் என்றால் தலையெடுப்பது புதிதாக இருக்கலாம், ஆனால், பா.ஜ.க.வுக்கு தலையை எடுப்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! ஏற்கனவே, சங்பரிவாரத்தின் முக்கிய அங்கமான விஸ்வ ஹீந்து பரிஷத்தின் தலைவரும், சன்னியாசியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி என்பவர் தமிழக முதல்வர் கருணாநிதியை தலையை எடுக்க வேண்டும் என்று பேசியவர்தானே! குஜராத்தில் 2000 இசுலாமியர்கள் நரேந்திர மோடியால் துடிக்குத் துடிக்க வேட்டையாடப்பட்டார்களே! பூரண இந்துவான மகாத்மாவையே ஆர்.எஸ்.எஸ். நாதுராம் கோட்சே, சவார்க்கர் உட்பட இந்து மதவெறி கும்பலின் சதித் திட்டத்தால் உருப்பெற்று கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்தானே நமது தேசப்பிதா? எனவே, காந்தி குடும்பத்தின் ஒரு உறுப்பினராக வருண் இருந்தாலும் அவர் சேர்ந்திருப்பது மதவெறி கூட்டமல்லவா? அந்த சங்பரிவார சோதனைக் கூடத்தில் உருவாக்கப்படுபவர்கள் கோட்சேக்களாகத்தானே இருக்க முடியும்! பாராளுமன்றத் தேர்தலில் பயங்கரவாதம் முக்கிய அஜண்டாவாக உள்ள நிலையில், சாத்வி பிராக்யா சிங்கும், புரோகித்தும் எப்படி மலேகான் குண்டு வெடிப்பில் மூல காரணமாக இருந்தார்கள். மதவெறி குண்டுகளை எங்கெல்லாம் புதைத்தார்கள் பயங்கரவாதத்தை இராணுவத்திற்குள்ளும் புகுத்த முனைந்தவர்களிலிருந்து முளைத்த வருண்காந்தி மன்னிக்கப்பட வேண்டியவர் அல்ல தண்டிக்கப்பட வேண்டியவரே! அவர் மட்டுமல்ல! அவர் சார்ந்திருக்கும் சங்பரிவாரமும் - பா.ஜ.க. கூட்டமும் முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றே!

March 20, 2009

சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும்!
தமிழில் ஒரு பழமொழி உண்டு, "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று. ஐந்தறிவு கொண்ட ஆமைக்கு அது பொருந்தாது. அதற்கு பதில், "சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று புதுமொழி உருவாக்கலாம்!


உலகிலேயே சதி திட்டம் மூலம், சீர்குலைவுகள் செய்து பல நாடுகளையும், ஆட்சிகளையும் தூக்கி எறிய காரணமாக இருந்தது சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை) சி.ஐ.ஏ.வின் சதிகளை சின்னக் குழந்தைகள் கூட அறியும்!


அப்படிப்பட்ட சி.ஐ.ஏ.வுடன் தற்போது இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கைகுலுக்கி உள்ளார். அதாவது தேன் நிலவு நடத்தியுள்ளார். அவர் மட்டுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் முதல் இந்திய உளவுத்துறையின் தலைவர் (ரா) கே.சி. வர்மா, இன்டிலிஜன்ஸ் துறையின் இயக்குநர் (ஐ.பி.-உளவுத்துறை) ராஜீவ் மாத்தூர் உட்பட இந்தியாவின் முக்கிய உயர் அதிகாரிகள் அமெரிக்க உளவுத்துறை தலைவரான லியான் பனிட்டா (chief Leon Paneவவய)-வுடன் பயபக்தியுடனும், தன்னடக்கத்துடனும் உரையாடியுள்ளனர்.


15வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் வருகை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதோடு, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில், குவைத்தில், ஆப்கானிஸ்தானில், இந்தோனேசியாவில், சோவியத் யூனியனில், கியூபாவில், சிலியில், வியத்நாமில், பனாமாவில்... என்று உலகில் சரிபாதி நாடுகளில் தனது மறைமுக கைங்கர்யம் மூலம் சி.ஐ.ஏ. சதித் திட்டங்களைத் தீட்டி பல ஆட்சிகளை கவிழ்த்துள்ளது பல முறை அம்பலமாகியுள்ளது. அத்தகைய கேடுகெட்ட சி.ஐ.ஏ.-வின் தலைவருக்கு மகுடம் சூட்டி, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் தங்களிடம் இருந்த முதுகெலும்பை இழந்து, அமீபா போல முதுகெலும்பில்லாத ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டார்களோ? என்ற கேள்விதான் எழுகிறது!


எதற்காக சி.ஐ.ஏ. இந்தியாவிற்கு வரவேண்டும். அவர்கள் தற்போது வந்த நோக்கம் என்ன? வெளியில் சொல்வது "மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வந்தாராம்". இதை முடித்து விட்டு அப்படியே பாகிஸ்தானுக்கும் ஒரு டூர் போய்விட்டு அங்குள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து விவாதிக்கப் போவதாக கூறுகிறார்.


நம்ம ஊர் (அதாங்க தமிழ்நாட்டு போலீசையே) ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக எல்லாம் பேசிவிட்டு, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ. மூலம் பரிகாரம் தேட முற்படுவது நம்முடைய உளவுத்துறையும், ஹேமந்த் கார்க்கரே போன்று இந்த தாக்குதலில் இரையான நேர்மையான அதிகாரிகளையும் கேவலப்படுத்துவதாக உள்ளது. நம்முடைய இராணுவ வீரர்களாலும், இந்திய மக்களாலும் காப்பாற்ற முடியாத அளவிலா நம்முடைய இந்திய நாடு உள்ளது? கேவலம் நாட்டை கெடுக்கும், நாட்டாண்மை பேர்வழியான அமெரிக்க அடியாள் வேலை செய்யும் சி.ஐ.வி.ன் காலடியில் விழுவது மத்திய ஆட்சியாளர்களின் தவறான திசை வழியை சுட்டுவதாக உள்ளது.


அதுவும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் உலகிலேயே அமைதியான முறையில் ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் மூலம் மாற்றங்களை கொண்டு வரும் மகத்தான தேர்தல் நடைபெறும் பின்னணியில் சி.ஐ.ஏ. வந்ததன் நோக்கம் என்னவோ என்ற சந்தேகம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு! இதை அனுமதிக்க முடியாது! அது மட்டுமல்ல இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய மக்களும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்த பின்னணியில் புறவழியாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய மத்திய அரசு இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவோடு நெருங்கியத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளது. இதற்கும் ஒரு ஒப்பந்தத்தை, அதாவது இதற்குப் பெயர் பாதுகாப்பு ஒப்பந்தமாம்! (யாரைப் பாதுகாப்பதற்கோ?) இப்படியெல்லாம் போட்டுள்ள சூழ்நிலையில், இதை எதிர்தத இடதுசாரிகள் - மத்தியில் மூன்றாவது மாற்று அரசு ஒன்றை அமைப்போம் என்ற நிலையில், அவ்வாறு அரசு அமையும் சூழலில் இராணுவ ஒப்பந்தம் கைவிடப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சமநீதியோடு போடப்படாத அணு சக்தி ஒப்பந்தமும் மாற்றப்படும் என்று சொல்லியுள்ள பின்னணியில் - மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் இந்திய மக்கள் முன் வைத்துள்ள சூழலில் சி.ஐ.ஏ.வின் வருகை எதற்காக? என்ற கேள்வி எழுவது இயல்பானதே! இந்திய மக்களே உஷார். கியூபாவின் புரட்சியாளன் எர்னஸ்டோ சேவினை கொன்றவர்கள் இந்த சி.ஐ.ஏ. அதிகாரிகள்தான். சேவின் புரட்சிகர காற்று தற்போது லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி வடிவமாக உருவெடுத்துள்ளது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், இந்திய அரசு இடதுசாரிகள் பக்கம் செல்வதை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது! எனவே அவர்கள் எந்த சதியையும் தீட்டுவதற்கு தயாராவார்கள்! எனவே எச்சரிக்கையோடு சி.ஐ.ஏ. சதிகளை முறியடிப்போம்! நமது தேசத்தையும், தேச மக்களையும் பாதுகாப்போம்! சி.ஐ.ஏ.வுடன் ஒத்துழைக்கும் மத்திய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களையும், மதவெறி பா.ஜ.க.வினையும் வீட்டுக்கு அனுப்புவோம் இதுவே சி.ஐ.ஏ.வுக்கு நாம் கொடுக்கும் செருப்படியாகும்!

See This one

http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/E311E1A24B27F6286525757F00389B9A?OpenDocument

March 20, 2009

Press Statement

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

Home Minister's Meeting with CIA Chief

The meeting of the CIA Chief with the Union Home Minister P. Chidambaram marks a new stage in Indo-US collaboration. This is the first time that an American CIA Chief has been accorded a meeting with the Union Home Minister in India. Apart from meeting his intelligence counterparts in India, the CIA Chief has been received at the political level, signalling the new status of the CIA in India.

The CIA is notorious for its interventions in the political affairs of various countries including destabilising governments considered inimical to US interests.

This is a pointer of how things have changed under the Manmohan Singh government. India is fast becoming like Pakistan where the CIA and FBI Chiefs meet with the interior minister and Prime Minister.

The role being played by US security and military agencies in the country and the manner in which the Congress-led government is promoting such ties should be a matter of serious concern for all those who wish to protect national sovereignty and the integrity of our democratic system.

சி.ஐ.ஏ. சதிகள் இங்கே தோலுரிக்கப்பட்டுள்ளது இதையும் படிக்கலாம்:

வெளிச்சத்துக்கு வந்த சி.ஐ.ஏ ஆவணங்கள் தமிழில்: சிவராமன்

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

சி.ஐ.ஏ. சிறைக்கூடங்களில் மிகக் கொடூரமான சித்திரவதைகள்

வெளிச்சத்துக்கு வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள்

March 17, 2009

சாதியற்றவர்கள்!

"சாதியற்றவர்கள்" யாராவது இருக்க முடியுமா? இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது தமிழக அரசு! இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் பிறப்பிலேயே சாதி திணிக்கப்பட்டுள்ளது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியர்கள் இந்த அடையாளத்தோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். அதேசமயம் இந்த சாதி இருவகையில் செயலாற்றுவதுதான் நமக்கு பிரச்சனை!


உயர்சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களுக்கும், கடைநிலையில்-ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களும் இருவேறு மனநிலையில் பயணிக்க வேண்டிய நிலையே உள்ளது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சுரண்டுவது வர்க்கபேதம் என்றால், சாதிய கருத்தாக்கமே, அதிலும் உயர்சாதி கருத்தாக்கம் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை கருத்தியல் ரீதியாகவே ஒடுக்கி வருகிறது.


இது ஒருபுறம் என்றால், "நான் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன்தான்" இதுதான் என்னுடைய பாரம்பரியம், அடையாளம் என்று சொல்லும் அடித்தட்டு சமூக மக்களை அரசே அங்கீகரிக்க மறுக்கிறது. அதாவது, இவர்களது சாதியை அரசு ஏற்க மறுத்து அவர்களை "சாதியற்ற மனிதர்களாக" உலாவ விட்டிருக்கிறது. இதனால் எழும் பிரச்சனைகள் ஏராளம்! தமிழகம் இதில் முதலிடம் வருகிக்கிறது.


இந்தியாவில் எட்டு கோடி பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் நூற்றுக்கணக்கான இனப்பிரிவுகளாக, தனி அடையாளங்களோடு வாழ்ந்து வருகின்றனர். மலைப்பகுதிகளிலும், காடுகளிலும், குகைகளிலும் மட்டுமில்லாமல் பல்வேறு காரணங்களல் புலம்பெயர்ந்து நகரவாசிகளாக மாறி பெரு நகரங்களிலும் வசிக்கின்றனர். தமிழகத்தில், குருமன்ஸ், காட்டு நாயக்கன், இருளர், கோத்தர், ஆதியன், மலைக்குறவன், மலையாளி, படுகர், தோடர்... என்று 36 பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களது பண்பாடு, சமயம் அனைத்தும் தனித்துவமானது. இந்த மக்களை இந்திய அரசு அங்கீகரித்து "பழங்குடியினர் பட்டியலில்" இணைத்துள்ளதோடு, இவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் மாநில விகிதாச்சாரத்திற்கு ஏற்ப உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் இவர்களுக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.


பிரச்சனை என்னவென்றால், பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட பல்வேறு துறைகளில் அதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படாமலும், உயர் பதவிகளுக்கு உயர்த்தாமலும் "பேக்-லாக்" என்று சொல்லக்கூடிய முறையில் நிரப்பப்படாத காலியிடங்களாக பல நூறு பதவிகள் உள்ளன. உண்மையில் இதற்குரிய தகுதியான ஆட்கள் இல்லையா? என்றால் அதுதான் இல்லை! மேற்கண்ட பட்டியலில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்களது இனம் இதுதான் என்று உறுதி செய்தாலும் அரசு அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறது என்பதுதான் தற்போதைய பிரச்னையின் குவி மையம்.


அதாவது, முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரிவிலிருந்து வரும் குறிப்பிட்ட சாதி சார்ந்த மக்களுக்கு எந்தவிதமான கேள்வியும் இன்றி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், பிறப்பிலேயே பழங்குடியினத்தை சார்ந்த மக்களுக்கும் மட்டும் "பழங்குடியினருக்கான" சான்றிதழை வழங்க மறுக்கிறது அரசு! அதாவது அவர்களது சாதியை அரசே ஏற்க மறுக்கிறது. இது இன்று, நேற்று நடைபெறும் நிகழ்வு அல்ல. பல 10 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை அமுக்கப்பட்டு கிடக்கிறது.ஒரு குழந்தை பிறந்தவுடன் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவதை வரை சாதியை தவறாமல் கேட்கும் இதே அரசுதான். பழங்குடி மக்களுக்கு அவர்களுக்கான சாதி சான்றிதழை கொடுக்க மறுக்கிறது. இது குறித்து பல தொடர் போராட்டங்களை அந்த பழங்குடியின மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் மாறியுள்ளது இப்பிரச்சனை!


உதாரணத்திற்கு குருமன் சாதியைச் சார்ந்த ஒரு குழந்தையை ப0ள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது பல பள்ளிக்கூடத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுவரும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அது சப்-கலெக்டர் வரை சென்று பல மட்ட சோதனைகளை சந்தித்தபின்தான் கிடைக்கும். இதற்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் 10 வருடங்கள் கூட ஆகலாம்! அல்லது கிடைக்காமலே கூடப் போகலாம். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாணவர்கள் "தான்" இந்தச் சாதியைச் சார்ந்தவன்தான் என்றாலும்கூட அங்கிகரிக்காத நிலை பெரும் மனவேதனையை அளிக்கக்கூடியது. இதனால் குறிப்பாக 10ஆம் வகுப்பு செல்லும் போது இந்த இன மாணவர்கள் பெரும் சோதனையை சந்திக்க வேண்டியுள்ளது.


பழங்குடியினம் தவிர்த்து மற்ற சாதியினருக்கு எந்தவிதமான விசாரணைகளும், சோதனைகளும் இன்றி சாதி சான்றிதழ் கொடுக்கும் போது இவர்களுக்கு மட்டும் இவ்வாறு வழங்க மறுப்பதேன்! ஒரே விஷயம் "போலி சான்றிதழ்" பெற்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான்! அதாவது எங்கே தேவைக்கு அதிகமாக சான்றிதழ் வழங்கி விடப்போகிறோமோ என்ற அதிகார வர்க்க அச்சம்தான் காரணம்! வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத கையாலாகதத்தனம்தானே இன்றைக்கு வரை இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுத்து வைத்து, தங்களது அரசியலுக்கும் சாதூர்யமாக துணை புரிய வைத்துக் கொண்டுள்ளார்கள். சரி, நீங்கள் உண்மையானவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டுமா இல்லையா? இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்களுக்கான சான்றிதழ் கோரிய விண்ணப்ப மனுக்கள் தூங்கும் எரிமலைகளாய் குமுறிக்கொண்டுதானே இருக்கிறது!


அது மட்டுமல்ல; பழங்குடியினத்தை சார்ந்த ஒருவர் மத்திய அல்லது மாநில அரசுதுறைகளில் சேர்ந்து விட்டார் என்றால் அவர் படும் சோதனை அதைவிட கொடுமையானது. அதாவது திறமையுள்ள பழங்குடியினர் சற்று மேலே படித்து முன்னேறத் துடித்தால், இதைப் பிடிக்காத ஆதிக்க சாதியினர் (இங்கே இவர்களைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் மட்டுமல்ல தலித்துகளும்கூடத்தான்) இவர் பழங்குடியில்லை என்று ஒரு மொட்டை பெட்டிசன் போட்டால் போதும்! உடனே அவருக்கு மெமோ வழங்குவதோடு - அவர் பழங்குடிதானா? என்று கண்டறியும் விசாரணை துவங்கிவிடும். இதற்காகவே இந்த பழங்குடியினத்தை சார்ந்த பலரும் தங்களுக்கான உரிமைக் குரலைக் கூட உரக்க எழுப்ப முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டுள்ளனர் என்றால் இவர்களது உள்ளக் குமுறல் எப்படியிருக்கும்?
அதாவது ஒரு பழங்குடி குலத்தில் பிறந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து 30 - 40 வருடம் ஆகிவிட்டால் இயல்பிலேயே அவர்களது நடைமுறை பழக்கங்களும் கூட மாறிவிடும், அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கு தங்களது முன்னோர்களின் அடையாளம் கூட மறக்கப்படும் என்பது இயல்புதான். இந்த இடத்தில்தான் இவர்களுக்கு சோதனை வருகிறது. அதாவது ஒருவர் குருமன் பழங்குடி என்று வைத்துக் கொள்வோம் இவர் தன்னுடைய பூர்வீகத்தை நிரூபிப்பதற்கு எந்த மலையிலிருந்து தோன்றினார்... இவர்களது தலைமுறை தற்போது எங்கு உள்ளது. இவர்களது வழிபாட்டு முறை என்ன? குடும்ப உறவுகள் எப்படி உள்ளது. இவர்களுக்கு தலித் கட்டும் வழக்கம் உள்ளதா? அப்படியிருந்தால் எப்படிப்பட்ட தாலியை அணிகிறர்கள்? என்றெல்லாம் பல்வேறு உண்மைகளை கண்டறியும் நார்கோ அனலிசிஸ், பிரைன் மேப் சோதனைகளை எல்லாம் நடத்திவிட்டு இவர்கள் பழங்குடியினர் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்!

ஒரு பழங்குடியினருக்கு வழிபாட்டு முறையில் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளதாம்! தற்போது அதே பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவருக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் "தலையில் தேங்காய் உடைத்து காட்ட வேண்டும்" இல்லையென்றால் அவர் பழங்குடியிலி்லை என்று அறிவிக்கப்படும். இப்படித்தான் பல்வேறு சோதனைகள் உள்ளது.

இல்லையென்றால் தங்களுடைய மூதாதையர்களுடைய நூற்றாண்டு சான்றிதழ்கள், பத்திரங்கள், போன்ற அரசு ஆவணங்களை சமர்பிக்க வேண்டுமாம். தரையிலேயே கல்வியைப் பரப்பாத மத்திய அரசு மலையிலே பரப்பாத காலத்தில் வழந்த மக்களிடம் இதையெல்லாம் கேட்பது "காதில் பூ சுற்றும்" நடவடிக்கைதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.


இதனால் தமிழகத்தில் பல கிராமங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி பதவிகளில் கூட சான்றிதழ் இல்லாத காரணத்தால் போட்டியிட முடியாத நிலையே பல்லாண்டுகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது என்றால் இவர்கள் உள்நாட்டிலேயே எப்படி அகதிகளாகவும் - ஒதுக்கப்பட்ட மனிதர்களாகவும் மாற்றப்பட்டுள்ளார்கள் என்று காணலாம். அதாவது அரசே பழங்குடியின மக்களையெல்லாம் சாதியற்ற மனிதர்களாக மாற்றிவிட்டது! சாதியற்ற மனிதர்கள் மட்டுமா? அரசியல் மற்றும் வாழ்வுரிமையற்ற நடைபிணங்களாகத்தானே ஆக்கியுள்ளது தமிழக அரசு!


இதுஒருபுறம் என்றால் மதவாதிகள் இவர்களை அணுகுவது மிக வித்தியாசமானது. இப்படித்தான் ஒரிசாவில் இயற்கையை வழிபட்ட "சர்ணா" என்ற பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வில் கல்வியறிவு முதல் விழிப்புணர்வுகளை கொண்டு வந்த கிருத்துவ மிஷனரிகள் மீது நம்பிக்கை வைத்து கிருத்துவத்திற்கு மதம் மாறினார்கள். ஆர்.எஸ்.எஸ். விடுமா? விடவில்லை; அதனால்தான் பழங்குடியின மக்களை ஆயிரக்கணக்கான மக்களை ஒரிசாவில் அடித்து, நொறுக்கி, வீடுகளை தீக்கிரையாக்கி துவம்சம் செய்தது. அது மட்டும? தற்போது இவர்களை தாய் மதம் திருப்புகிறார்களாம்! இதைத்தான் செய்து வந்தான் அந்த கொல்லப்பட்ட லட்சுமணானந்தா? எந்த தாய் மதம்! இந்து மதமாம்! இவர்களுக்கும் இந்துவுக்கும் என்னத் தொடர்பு - ராமருக்கும், சீதைக்கும், கிருஷ்ணனுக்கும், (முருகர் - விநாயகர் அங்கில்லை) இயற்கையை வழிபட்ட, வெறும் சூரியனை வழிபட்ட அந்த சர்ணா மக்களுக்கு என்னத் தொடர்பு? இவர்களைத்தான் தாய்மதம் திருப்பினார்களாம்! அதாவது, அதிகாரம் மற்றும் அடக்குமுறை மூலம் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தார்கள் இந்துத்துவவாதிகள்!


இன்னொரு பக்கத்தில் காட்டிலும், மலையிலும் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அது சொந்தமில்லை என்று விரட்டப்பார்க்கிறது மத்திய அரசு. இப்படி பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் சாதியற்றவர்கள்!


சுட்டிகளையும் நோக்கலாம்
March 14, 2009

இலங்கை உள்ளும்-புறமும்; அ. மார்க்ஸ் நேர்காணல்

பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளிவரும் "புத்தகம் பேசுது" மார்ச் மாத இதழில் இலங்கை பிரச்சனை குறித்து இடதுசாரி சிந்தனையாளரான அ. மார்க்சிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் தற்போதைய இலங்கையின் பன்முகப் பரிமாணங்களை புரிந்து கொள்வதற்கும்; தீர்விற்கான எல்லைகளை எட்டுவதற்கும் பயன்படும் என்ற முறையில் சந்திப்பில் இதனை பதிவேற்றியுள்ளேன்.
புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை
அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம்

அ. மார்க்ஸ்


“சுய நிர்ணய உரிமை என்பது எந்த மக்கள் சம்பந்தப்பட்டதோ அந்த மக்கள் சுயமாக நிர்ணயிப்பதுதான்; இங்கிருந்து நாம் நிர்ணயிப்பது அல்ல’’-. எனக் கூறும் பேரா. அ. மார்க்ஸ் ஈழ அரசியல், இலக்கியத்தின் மீது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனம் செலுத்தி வருபவர். அவரது கவனக்குவிப்பை டானியல் கடிதத் தொகுப்பை வாசிக்கும் போது நம்மால் அவதானிக்க முடியும்.

மனித சங்கிலி கடையடைப்பு தீக்குளிப்பு என தமிழகத்தை கொதிநிலைக்கு கொண்டு செல்ல எத்தனிக்கும் அரசியல் சூழலில் புத்தகம் பேசுதுக்காக அவரை சந்தித்து உரையாடலிலிருந்து...


சந்திப்பு : சிராஜீதீன் : படங்கள் : பன்னீர் செல்வம்


நான்காண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜா ‘தீராநதி’ நேர்காணலில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது எனச் சொல்லியிருந்தார். அவர் சொல்லிய காலம் ஈழத்தில் போர் நிறுத்த காலம். மீண்டும் போர் உக்கிரமடைந்திருக்கிற இன்றைய சூழலில் அவருடைய கூற்றை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள்?

புஷ்பராஜா அப்படி சொல்லியிருந்தால் ரொம்பவும் வேதனையோடுதான் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவர் அவர். சித்திரவதைகள், சிறைவாசம், அகதி வாழ்க்கை என எல்லாத் துயரங்களையும் இதற்கெனவே அனுபவித்தவர். கண்முன்னே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைக் கண்டு மனம் நொந்தவர். என்னைப் பொருத்தவரையில் ஈழப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது எனச் சொல்வதைக் காட்டிலும் தேக்கமடைந்துள்ளது எனச் சொல்லலாம். போராட்டத்தின் வெற்றி தோல்வியை நடக்கும் போரை மட்டும் வைத்துச் சொல்ல முடியாது. தவிரவும் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை விடுதலைப்புலிகள் நடத்துகிற போருடன் மட்டுமே சமப்படுத்தி விடவும் முடியாது. இன்றையப் போரின் முடிவுக்குப் பின் வரப்போகிற தீர்வு எப்படிப்பட்டதாயினும் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர், உடைமை இழப்புகள், குடும்பச் சிதைவுகள், அகதி வாழ்க்கை ஆகியவற்றின் மீது அமைக்கப்படுவதுதான் அது. இந்தத் தியாகங்களின் மூலம் சிங்களப் பேரினவாத அரசின் இன அடக்குமுறைகளின்பால் உலகின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வின் அவசியம் உணர்த்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியல் சட்டம் மற்றும் அதன் மீது இயற்றப்பட்ட திருத்தங்களின் ஊடாக அது ஒரு பவுத்த மதச் சார்பான, சிங்கள மொழியை முதன்மைப்படுத்துகிற அரசாக, அதன் மூலம் அங்குள்ள இதர மொழி, மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கிற சாசனமாக மாற்றப்பட்டுள்ளநிலை உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்த வகையில் ஈழப் போராட்டத்தை நாம் தோல்வி எனச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

பின் எந்தப் பொருளில் புஷ்பராஜா அப்படிச் சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்?

சுதந்திரத் தமிழ் ஈழ நாடு என்கிற வேட்கையோடு ஆயுதத்தை உயர்த்தியவர்கள் அவர்கள். இன்று அந்தக் கோரிக்கை பின்னுக்குப் போய்விட்டது என்கிற அடிப்படையில் அவர் இதைச் சொல்லியிருக்கலாம்.

ஈழ விடுதலை, தனி ஈழத்தை அங்கீகரித்தல் முதலான முழக்கங்களுடன் தானே இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன? இந்த முழக்கங்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கிறதே ஒழிய ஈழத்தில் இன்று யாரும் இதைச் சொல்வது கிடையாது. விடுதலைப் புலிகள் உட்பட இதுவே இன்றைய நிலை. இந்த ஆண்டு மாவீரர் நாள் உரையின்போதோ, சென்ற ஆண்டிலோ பிரபாகரன் தனி ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தவர், முஸ்லிம்கள், தலித்துகள் எல்லோருடைய கருத்துகளும் இன்று மாறியுள்ளன. ஒற்றைத் தனி ஈழம் என்கிற கோரிக்கைக்கு இவர்களிடமும் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு இணைந்த தனி ஈழத்தை வென்றெடுப்பது என்பது 1975_1985 காலகட்டத்தில் உருவான கோரிக்கை. அதற்குப்பின் இன்று உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1990களுக்குப் பிந்திய உலகில் பல்வேறு மக்கள் குழுக்கள் தம் அடையாளங்களை உறுதி செய்தல், அந்த அடிப்படையில் கோரிக்கைகள் வைத்தல் என்பது உலகெங்கும் பொதுவாகிவிட்டது. நேபாளத்தை எடுத்துக் கொண்டீர்களானால் அதற்குப் பின்தான் ஜன ஜாதியினர், தலித்துகள், மாதேசிகள் முதலானோர் தம் அடையாளங்களை வற்புறுத்தி கோரிக்கைகள் வைத்தனர். ஆயுதந்தாங்கியப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தவர்களாயினும் மாவோயிஸ்டுகள் இந்த நிலையை ஏற்றுக்கொண்டு தமது திட்டத்தை அதற்கு ஏற்றாற்போல அமைத்துக் கொண்டனர். அதே நிலை இன்று ஈழத்திலும் ஏற்பட்டுள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இதை இல்லை எனச் சொல்பவர்கள் கண்ணை மூடிக்கொண்ட பூனையை ஒத்தவர்கள்தான். இது ஒரு வரவேற்கத்தக்க நிலை என்றுதான் கருதுகிறேன். ஏனெனில் தேசிய இனம் என்கிற பேரடையாளத்தை இறுக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் கட்டமைக்கும்போது வர்க்கம் உள்ளிட்ட பல்வேறு சிறு அடையாளங்கள் அதன்மூலம் ஒடுக்கப்படும். எந்தத் தேசிய இனமும் மற்ற தேசிய இனத்தை மட்டுமல்ல, உள்ளே உள்ள பல உட்பிரிவினரையும் ஒடுக்குவதாகத்தானே இருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதையும் புலிகளும், புலி ஆதரவாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அடையாள உறுதியாக்கத்தைப் புரிந்து கொள்ளாததோடு மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுவதற்கு வழி வகுப்பதாகவே புலிகளின் செயற்பாடுகள் அமைந்தன.

வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. ‘எக்ஸில்’ என்றொரு இலக்கியப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர். ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகிறார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “தனி ஈழம்’’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்கிற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது.

எழுபது, எண்பதுகளில் எப்படி இதையெல்லாம் மறந்து ஒற்றைத் தனி ஈழம் என்கிற கோரிக்கை வந்தது?

தேசிய இனக் கோரிக்கைகள் என்பன எப்போதுமே ஒரு சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரால்தான் முன்வைக்கப்படுகிறது. உணர்ச்சிபூர்வமாகப் பின் அது கீழேயும் கொண்டு செல்லப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தி (1948) அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் பேரினவாதத்தை நோக்கிச் சென்றன. தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அந்த வகையில் அங்கே ஓர் இன ஒடுக்குமுறை இருந்தது. இது தேசிய இன உணர்வைக் கீழே கொண்டு செல்கிற முயற்சிகளுக்குப் பக்கத்துணையாக இருந்தது. ஆனால், எல்லாக் காலங்களிலுமே ஈழச் சமூக உருவாக்கம் என்பது ஒற்றைத் தன்மையுடையதாக இருந்திருக்கவில்லை. உள் வேறுபாடுகளும் யாழ்ப்பாண மேலாதிக்கம் குறித்த அச்சமும் எப்போதும் பிறரிடம் இருந்து வரத்தான் செய்தது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என அறியப்படுகிற ஈழத்தமிழறிஞர் கா. சிவத்தம்பியின் ‘இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைப்பின் சில அம்சங்கள்’ என்கிற கட்டுரையை (1979) வாசித்துப் பாருங்கள். இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களிடையே குறைந்தபட்சம் கீழ்க்கண்ட பிரிவுகளைச் சொல்லுவார்.

1. பெருந்தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்கள் _ இவர்கள் என்றைக்கும் தனி ஈழக் கோரிக்கைக்குள் வந்தது கிடையாது.

2. இலங்கைச் சோனகர் _ தமிழ் மட்டுமே பேசுகிற முஸ்லிம் தமிழர்களைத்தான் பேராசிரியர் இப்படிச் சொல்லுகிறார்.

3. கிழக்கு மாகாணத் தமிழர் _ இவர்களை மட்டக்களப்புத் தமிழர் என்றும் பேராசிரியர் சொல்லுவார்.

4. வட மாகாணத் தமிழர்கள் _ இவர்களையும், பேராசிரியர் இரண்டாகப் பிரிப்பார். அவை (அ) வன்னி, மன்னார் மாவட்டத் தமிழர்கள் (ஆ) யாழ்ப்பாணத் தமிழர்கள்


புவியியல், பொருளியல் ஒழுங்கமைப்பு, சமூகக் கட்டுமானம், அபிவிருத்தி மட்டம் என்கிற அடிப்படைகளில் இந்தப் பிரிவினை செய்யப்படுவதாகப் பேராசிரியர் குறிப்பிடுவார். பேராசிரியரின் கவனத்திற்கு வராத, ஆனால் வந்திருக்க வேண்டிய இன்னொரு முக்கியப் பிரிவு பஞ்சமர்கள் எனச் சொல்லப்படும் தலித் மக்கள். இவர்களின் தனித்துவம், இவர்கள் மீது மற்ற தமிழர்களால் கடைபிடிக்கப்பட்ட கொடுந் தீண்டாமை ஆகியவற்றை அறிய டானியல் எழுத்துக்களைப் படியுங்கள். தேசிய இனப் பிரச்சினையில் இவர்களின் இடம் குறித்து டானியல் தனது கடிதங்களில் விரிவாகப் பேசியுள்ளார். டானியல் கடிதங்கள் நூலில் அவற்றைப் பார்க்கலாம். பேராசிரியரே 30 ஆண்டுகளுக்குப் பின்னால் _ இன்று _ இக்கட்டுரையை எழுதியிருப்பாரேயானால் தலித்களையும் தனியாகச் சுட்டிக்காட்டியிருப்பார். இல்லையா?

யாழ்ப்பாண மேலாதிக்கம் குறித்த அச்சத்தின் காரணமாக வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்த ‘இதர தமிழர்கள்’ தம் மக்கள் நலன் என்று கூறி சிங்கள அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத் தமிழர் ஆதிக்கம் வகித்த தமிழர் கட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதே வரலாறு. மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான செ. இராஜதுரை, தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தபோது ‘கிழக்கு மாகாணத் தமிழரின் அபிவிருத்திக்காக’ இப்படிச் செய்வதாகக் கூறினார். இதைச் சுட்டிக்காட்டும் சிவத்தம்பி, “தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மொழிப் பிரச்சினையோ, வகுப்புவாதப் பிரச்சினையோ மட்டுமல்ல’’ என்பார். மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமானும் இப்படிச் சொல்லித்தான் அரசில் அங்கம் வகித்தார். டொனமூர் குழு அறிக்கை அமலுக்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் முன்னின்று நடத்திய ‘தேர்தல் பகிஷ்கரிப்பில்’ மட்டக்களப்புத் தமிழர்கள் பங்கு பெறவில்லை. ஈ.ஆர்.தம்பிமுத்துவை அரசாங்க சபைக்கு அவர்கள் தேர்வு செய்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பைப் பற்றிச் சொல்ல வரும்போது, “இது இந்திய சுயராஜ்ஜிய இயக்கத்தின் அருட்டுணர்வால் ஏற்பட்டது’’ எனப் பேராசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது. வடக்கு, கிழக்கு இரு பகுதிகளிலும் சாதி முறை, தேச வழமைச் சட்டங்கள், பொருளாதார ஒழுங்கமைப்பு _ கிழக்கு மாகாணம் பெரும்பான்மையாக விவசாயத்தைச் சார்ந்தது _ எனப் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளை எல்லாம் மீறி பேரினவாத ஒடுக்குமுறையினூடாக ஓர் ஒற்றுமை ஏற்பட்டது வரவேற்கத்தக்கதுதான். இந்த வேறுபாடுகள் உணர்ந்து, அங்கீகரிக்கப்படுவதன் மூலமாகத்தான் இந்த ஒற்றுமை தக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்தது வேறு. அதன் விளைவே இன்றைய தேக்கம்.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இங்குள்ள தமிழ் தேசியர்களிடம் பெற்ற ஆதரவு அளவிற்கு ஈழத்தில் இப்போதுள்ள மக்களிடம் விடுதலைக்கான ஆதரவு இருக்கும் என நினைக்க வாய்ப்பு இருக்கிறதா?

நானறிந்தவரை இன்று ஈழத்தின் பல பிரிவு மக்களின் மனநிலையும் எவ்வாறு உள்ளது எனச் சொன்னேன். வெறும் ஊகமாக அல்ல எனக்குள்ள அனுபவங்கள், வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்கிறேன். எந்தத் தீர்வுக்கும் முன்னால் ஒரு கருத்துக்கணிப்பு, பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். முப்பதாண்டு காலமாகப் போர் நடந்து கொண்டுள்ள ஒரு நாட்டில் அப்படியான கருத்துக் கணிப்பு உடனடிச் சாத்தியமில்லை என்பது உண்மைதான். தவிரவும் அதை வெற்றி போதையிலிருக்கும் பேரினவாத அரசின் கீழ் நடத்தக் கூடாது. ஐ.நா. சபை அல்லது மேலாதிக்க நாட்டமில்லாத லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளின் கண்காணிப்பின்கீழ் இதை நடத்தலாம். இப்போது நான் குறிப்பிட்ட பல்வேறு தமிழ்ச் சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் உள்ளடக்கப்பட வேண்டும். எங்களைத் தவிர வேறு யாரையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை தங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவைக் கணக்கில் கொண்டாவது புலிகள் விட்டுக் கொடுக்க வேண்டும். இங்கேயுள்ள தமிழ்த் தேசியர்களைப் பற்றிக் கேட்டீர்கள். அவர்கள் பெரும்பாலும் புலிகளின் ஆதரவாளர்கள். புலிகளின் பக்தர்கள். புலிகளின் முகவர்கள். புலிகள் = ஈழத் தமிழர் என்கிற சமன்பாட்டை உருவாக்கிச் செயற்படுபவர்கள். ஈழத் தமிழ்ச் சமூக அமைப்பு, போராட்ட வரலாறு, இன்றைய உலகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி எல்லாம் எந்தக் கவலையுமின்றி ‘கடைசியாக தேசியத் தலைவர் எதையாவது செய்து வெற்றி பெற்று விடுவார்’ என்கிற நம்பிக்கையில் திருப்தியாக இருப்பவர்கள். இவை குறித்தெல்லாம் சிந்திக்கிறவர்கள்தான் எஞ்சியுள்ள தமிழர்களின் இன்றைய நிலை குறித்து எந்த நம்பிக்கையும் சாத்தியமின்றி வேதனைப்பட வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் 83ல் இருந்த ஈழ எழுச்சியையும் தற்சமயம் உள்ள எழுச்சியையும் வித்தியாசப்படுத்த முடியுமா?

நிச்சயமாக. 1983 இனப் படுகொலையை ஒட்டி தமிழகமே அன்று கொந்தளித்திருந்தது. இன்றும் போரினூடாக அங்கே நடைபெறும் இனப் படுகொலைகள் பற்றி தமிழகம் கொந்தளித்திருந்தாலும் அன்றுள்ள அரசியல் சூழலும் இன்றுள்ள நிலையும் வேறுபட்டுள்ளன. அன்று புலிகள் மட்டுமல்ல, டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப். இன்னும் சில இடதுசாரிக் கொள்கை உடைய என்.எல்.எப்.டி. போன்ற அமைப்புகள் எனப் பலரும் அப்போது இயங்க வாய்ப்பிருந்தது. தமிழ் மக்கள் எல்லோருக்கும் உதவினர். அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளுடனும் உறவு கொண்டிருந்தன. உதவிகள் புரிந்தன. ஈழப் போராட்ட அமைப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈழ விடுதலை குறித்த கருத்தொருமிப்பு இருந்தது. 1985 ஜூலையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்களுடன் மட்டும்தான் பேச வேண்டும் என்கிற நிபந்தனையைப் பிரபாகரன் விதிக்கவில்லை. “திம்புக் கோட்பாடுகள்’’ எனக் கூறப்படுகிற நான்கு அம்ச கூட்டறிக்கை ஒன்று எல்லாத் தரப்பும் பங்குபெற்ற “தூதுக்குழுவால்’’ முன்வைக்கப்பட்டது. இத்தகைய பொதுக் கருத்தின் அடிப்படையில் தமிழக மக்களின் ஆதரவும் பொதுவாக இருந்தது. எல்.டி.டி.ஈ. ஆதிக்கம் மிக்க ஒரு இராணுவ சக்தியாக மாறியபோது படிப்படியாகப் பிற இயக்கங்கள் அழித்தொழிக்கப்பட்டன. முதலில் ‘டெலோ’ தாக்கி அழிக்கப்பட்டது. அதன் தலைவர் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்டார். 1986 இறுதிக்குள் ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’, ‘பிளாட்’ ஆகிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிடப்பட்டது. பத்மநாபா, உமாமகேஸ்வரன் எல்லோரும் கொல்லப்பட்டனர். யாரும் யாரையும் கொல்கிற, கடத்துகிற ஒரு கொடிய சூழல் அதன்பின் உருவானது. மாற்றுக் கருத்துகள் வேரறுக்கப்பட்டன. புலிகளின் கருத்தே பொதுக் கருத்து என்பதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் களத்தில் நிற்கிறவர்கள் அவர்கள்தானே...’’ என்றொரு ‘நியாயம்’ பேசி புலிகளின் எல்லாவிதமான மனிதஉரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ, மௌனமாகவோ ஆதரிக்கும் நிலையை இங்குள்ள புலிகளின் முகவர்கள் மேற்கொண்டனர். இன்று ஈழத் தமிழர்களின் பொதுக் கருத்து என்று ஏதுமில்லை. அப்படி ஏதும் சொல்ல முடியுமானால் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். சிவிலியன்கள் சுதந்திரமாகப் போர்ப் பகுதியிலிருந்து வெளியேறுவது அனுமதிக்கப்பட வேண்டும் என்பவைதான் பொதுக் கருத்தாக இருக்க முடியும். எனவேதான் இன்றைய ஆதரவு எழுச்சி போர் நிறுத்தம் என்கிற மட்டோடு நிற்கிறது. புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே தனி ஈழத்தை அங்கீகரி என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கின்றனர்.

தவிரவும் இன்றைய எழுச்சியில் இங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு அப்பட்டமான சந்தர்ப்பவாதத் தன்மையில் அமைகிறது. பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை எடுத்துக் கொண்டீர்களானால் காங்கிரசை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள். சத்தமில்லாமல் ஆறாவது உறுப்பினராக பா.ஜ.க.வின் இல. கணேசனும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். பா.ஜ.க தலைவர்களும், தா. பாண்டியனும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒரே மேடையில் தோன்றுகின்றனர். எந்தக் காரணம் கொண்டும் மதவாத, பாசிச சக்திகளுடன் கம்யூனிஸ்டுகள் கைகோர்க்க மாட்டார்கள் என்கிற பெருமையையும் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது. பல்வேறு கூட்டணிகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் யாரும் இங்கே அரசியல் பேசக் கூடாது என உத்தரவு போடுகிறார் நெடுமாறன். கட்சிக் கொடிகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடாது. சுவரொட்டிகளில் கட்சிப் பெயர்கள் போடக் கூடாது. ஆக ஈழப் போராட்ட ஆதரவு என்கிற பெயரால் இங்கே ஓர் அரசியல் நீக்கம் நடைபெறுவதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்கிற பெயரில் இங்குள்ள அரசியலுக்குத் துரோகம் இழைத்துவிடக் கூடாது. நெருக்கடி நிலை எதிர்ப்பு, நவ நிர்மாண் இயக்கம் என்கிற பெயர்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாரதிய ஜனசங்கை இணைத்துக் கொண்டது, நரேந்திர மோடியை முன்னிறுத்தியது ஆகியவற்றின் கொடிய விளைவுகளை நாம் ஒருமுறை சந்தித்தது போதாதா? இந்துக்கள் என்பதால்தான் ஈழத் தமிழர்களை உலகம் கண்டுகொள்ளவில்லை என்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழ் முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது என ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் மருத்துவர் ராமதாஸ். தமிழர்கள் என்றில்லாவிட்டாலும் இந்துக்கள் என்றாவது ஈழத் தமிழர்களுக்கு உதவலாமே என்கிறார் தொல். திருமாவளவன். எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகைத்த தா. பாண்டியன், அந்தக் கால தி.மு.க பாணியில் கனக விசயர் தலையில் கல்லேற்றிய பெருமை பேசுகிறார். “வீரமரணம் அடையத் தயாராகுங்கள்’’ எனத் தமிழ் இளைஞர்களை நோக்கி அறைகூவல் விடுக்கிறார். தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் முதலான சிறு அமைப்புகளுக்கு இதுகாறும் தலைமை ஏற்றுவந்த நெடுமாறன் பெரிய கட்சிகளை நோக்கித் திரும்பிவிட்டதால் இவர்கள் ஒரு கணம் தடுமாறி நிற்கின்றனர். சீமான் போன்ற உணர்ச்சிப் பேச்சாளர்களிடம் தஞ்சமடைகின்றனர். போர் நிறுத்தம் தவிர வேறு அம்சங்களில் இன்று பொதுக் கருத்து கிடையாது.


போர் நிறுத்தம் என்பது இரு சாராரையும் நோக்கி வைக்கப்பட வேண்டும்தானே?

ஆமாம். ஆனால், அதிலொரு அம்சத்தை நாம் கவனிக்கத் தவறலாகாது. இன்று புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளனர். வெளிப்படையாக அறிவிக்கவும் செய்கின்றனர். கடும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள அவர்கள் இப்படி கூறுவது தவிர வேறு வழியில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்துக் கொண்டுள்ள இலங்கை இனவாத அரசோ இந்த இறுதி வாய்ப்பை நழுவவிடத் தயாராக இல்லை. இதுதான் இன்றைய சூழலின் வேதனையான அம்சம். அரசியல் தீர்வுக்குத் தயார் எனச் சொல்லிக் கொண்டே, எந்தப் புதிய அதிகாரப் பரவல் திட்டங்களையோ, தீர்வையோ முன் வைக்காமலேயே புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை என்கிறது ராஜபக்ஷே அரசு. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தார்களானால் முடியாட்சி நீக்கப்பட வேண்டும் என்கிற பொதுக் கருத்து அங்கே உருவாகியிருந்தது. அரசியல் சட்ட அவைக்கான தேர்தல் என்கிற உடன்பாடு ஏற்பட்டது. அதற்குப் பின்னும்கூட ஆயுதங்களை அவர்கள் ஐ.நா. மேற்பார்வையில்தான் ஒப்படைத்தார்கள். இதுபோன்ற எந்தத் தீர்வுமின்றி ஆயுதங்களைப் போடச் சொன்னால் அது எப்படிச் சரியாக இருக்க முடியும்? குறைந்தபட்சம் கூட்டரசு ஆட்சி முறையை அனுமதிக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசியல் யாப்பின் பிரிவு 2 மற்றும் 76 ஆகியவற்றை ராஜபக்ஷே அரசு நீக்க ஆவன செய்ய வேண்டும். சிங்களம், தமிழ் தேவையானால் ஆங்கிலம் ஆகிய மூன்றும் அரசு கரும மொழிகள் என்றவாறு 18வது பிரிவு திருத்தப்பட வேண்டும். பவுத்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மை நிலை மறுக்கப்பட்டு இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடு எனப் பிரகடனப்படுத்தும் வகையில் 9ஆம் பிரிவு திருத்தப்-பட வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் தலித், முஸ்லிம் மக்களின் கருத்துகளை அறிய கருத்துக் கணிப்பு நடத்த ஒப்புதலளிக்க வேண்டும். இப்படியான ஒரு உருப்படியான தீர்வு திட்டமின்றிப் புலிகளை ஆயுதங்களைக் கீழே போடுங்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?

இன்னொன்றையும் நாம் மறக்கக்கூடாது. 30 ஆண்டுப் போரால் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அவலங்களின் சகல பரிமாணங்களும் இங்கே பேசப்படுவதில்லை. உடனடியாக அங்கே மிகப்பெரிய அளவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவம், கல்வி, மனித உரிமைகள் ஆகிய மூன்று அம்சங்களுக்குப் பிரதானம் அளித்து சர்வதேசச் சமூகம் களமிறங்க வேண்டும். இத்தகைய நிர்மாணப் பணியில் இந்தியாவுக்குப் பிரதான பங்கிருக்கிறது. ஒருவேளை புலிகள் மற்றவர்களுடன் சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படும் பட்சத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்காக பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற அபத்தக் கோரிக்கைகளை எல்லாம் இந்திய அரசு விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவது அந்தத் ‘துன்பியல்’ சம்பவத்திற்காக மட்டுமா அல்லது வேறு ஏதும் பொருளாதாரக் காரணிகள் உள்ளனவா?

தென் ஆசியாவில் ஒரு ‘தாதா’வாகவும் உலக அளவில் ஒரு வல்லரசாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பேராசையோடு இயங்கும் நாடு இந்தியா. இதை நான் ‘விரிவாக்க நோக்கம்’ என்று சொன்னால், அதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களோ என்னவோ. தொடக்கம் முதல் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகல் முறை இரட்டை நிலையுடனேயே இருந்து வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருபக்கம் இரு தரப்புக்கும் இடையில் சமாதான முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளையும் இன்னொரு பக்கம் போராளிக் குழுக்கள் எல்லாவற்றிற்கும் பயிற்சி மற்றும் ஆயுதம் அளிக்கும் வேலையையும் செய்தார் இந்திரா காந்தி. தமிழ் மக்களின் விதியை நிர்ணயிப்பதற்கு அவர்களைச் சம்பந்தப்படுத்தாமலேயே ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனாவுடன் செய்து கொண்டார் ராஜீவ் காந்தி. ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக ‘அமைதிப்படை’யை அனுப்பி கடும் மனித உரிமை மீறல்களுக்கும் அவர் காரணமானார். பெரும் இழப்புக்களுடனும், அவமானத்துடனும், தோல்வியுடனும் திரும்ப நேர்ந்தது இந்திய அமைதிப்படை. உச்சகட்டமாக அந்த ‘துன்பியல் சம்பவமும்’ நிகழ்ந்தேறியது. இந்தியாவின் இந்த விரிவாக்க நோக்கத்தில் அதன் பொருளாதார நலன்களும் அடங்கும். சிலவற்றை நானும் ஷோபா சக்தியும் முன்பே கூறியுள்ளோம். ஒரு வேளை போர் நின்று நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுமானால் பெரிய அளவில் அதில் இந்திய முதலாளிகள் பங்கு பெறுவார்கள். இந்தியா தலையிட்டு, தா.பா. மொழியில் பேசுவதானால் ஒரு ஏவுகணையை வீசி இலங்கையை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என இங்கே எழும்பும் குரல் இன்றைய உலகச் சூழல், இந்தியாவின் வெளியுறவு அரசியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமையின் விளைவே. சென்ற மாதம் சென்னையில், காங்கிரஸ் நடத்திய ஈழப் பிரச்சினை விளக்கக் கூட்டத்தில் இன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளிப்படையாக இதைப் போட்டுடைத்தார். காஷ்மீரில் நாங்கள் என்ன வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோமோ அதே வேலையைச் செய்யக் கூடாது என நாங்கள் எப்படி இலங்கை அரசிடம் கோர முடியும் என்று அவர் வெளிப்படையாகக் கேட்டார் அல்லவா? செப்டம்பர் 11க்குப் பின் மாறியுள்ள உலக நிலையை புலிகளும் சரி, புலி ஆதரவாளர்களும் சரி கண்டு கொள்வதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை.

சிங்கள இனவாத அரசுக்கெதிரான மக்களின் விடுதலை எழுச்சியைச் சிதைத்ததில் புலிகளின் பங்கு என எவற்றையெல்லாம் வரையறை செய்யலாம்?

நிறையத் தவறுகளை அவர்கள் செய்துள்ளனர். பிற இயக்கங்களை அழித்தது, கருத்துரிமையைப் பறித்தது, முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தவர் எல்லோரையும் அந்நியப்படுத்தியது, ராஜீவ் காந்தி கொலை மூலம் இந்திய அரசை நிரந்தரப் பகையாக்கிக் கொண்டது, ரணில் விக்ரமசிங்கேக்கு ஓட்டுப் போட வேண்டாமெனச் சொல்லி ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தது, ஈழப் போராட்டத்தின் மிகப்பெரிய ஆதரவுத் தளமான தமிழகத்தில் தமது முகவர்களாக உள்ளவர்களோடு மட்டுமே உறவைப் பேணி பிற ஜனநாயக, இடதுசாரி சக்திகளிடமிருந்து விலகி நின்றது என நிறையச் சொல்லலாம். குறிப்பாகப் போராட்டத்தை அவர்கள் வன்முறையாக மக்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். தமிழ் மக்களை கப்பம் மட்டும் செலுத்துபவர்களாகவும் வாய்மூடி ஆதரவளிப்பவர்களாகவும் மட்டுமே ஆக்கினார்கள். இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றுள்ள சூழலில் நாம் புலிகளை மட்டும் வைத்து பிரச்சினைகளை அணுகுவதைச் சற்றே ஒத்தி வைப்போம். 2000 புலிகளைக் கொல்வதற்கு 2 லட்சம் மக்களைக் கொன்றாலும் பரவாயில்லை என இலங்கை அரசு இன்று நினைக்கிறது. 2000 புலிகள் தப்பித்தாலும் 2 லட்சம் மக்கள் காப்பற்றப்படட்டும் என்கிற நோக்கில் நாம் போர் நிறுத்தம் என்கிற கோரிக்கையில் மற்றவர்களுடன் ஒன்றிணைவோம்.
தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த சிங்கள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இலங்கை இடதுசாரிகள் முன்வரவில்லை தானே?

கடந்த சுமார் 60 ஆண்டுகளாகவே ஒரு வகை இனம் சார்ந்த அரசியல் வடக்கிலும் தெற்கிலும் நிலவிய ஒரு சூழலில் இடதுசாரிகள் இரு புறத்திலும் பலவீனப்பட்டே இருந்தனர். 1975க்குப் பின் இரண்டு பக்கங்களிலும் தீவிர இன உணர்வுகள் வெளிப்பட்டபோது அவர்கள் முற்றிலுமாக அரசியற் களத்திலிருந்து நீக்கப்பட்டனர். இது ஒரு வேதனையான வருந்தத்தக்க நிகழ்வு. எனினும் இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகிவந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.

திராவிட, தமிழ் இயக்க மரபென்பது இயல்பாகவே பார்ப்பன எதிர்ப்புணர்வு கொண்டது என்ற நிலை மாறி பார்ப்பன ஆதரவு சக்திகளாக மாறிப் போயுள்ள நிலை இன்றைய ஈழ ஆதரவு இயக்கங்களில் வெளிப்படுகிறது எனலாமா?

திராவிட_தமிழ் மரபு என்பது இயல்பாகவே பார்ப்பன எதிர்ப்பு மரபு என்றெல்லாம் பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் இங்கே இருவிதப் போக்குகள் இருந்து வருகின்றன ஒன்று பார்ப்பனர்களை விலக்கி பிற மொழிச் சிறுபான்மையினர் எல்லோரையும் ‘திராவிடர்’களாக உள்ளடக்கும் போக்கு, பெரியார் மற்றும் இதர திராவிட இயக்கங்களை இதற்கு எடுத்துக்காட்டாய் சொல்லலாம். மற்றது மொழிச் சிறுபான்மையினரைப் பிரதான எதிரிகளாக நிறுத்தி பார்ப்பனர்களையும் தமிழர்களாக ஏற்கும் போக்கு. ம.பொ. சிவஞானம், பெங்களூர் குணா மற்றும் பல தமிழ்த் தேசிய இயக்கங்கள் இந்த வகையில் வரும். எனவே, தமிழ்த் தேசியம் என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என நாம் பொருள் கொள்ளக் கூடாது. தனித்தமிழ் பேசிய பலரும் கூட பண்பாட்டு அடிப்படையில் சைவத்தையும் இதர பார்ப்பனக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். இது தமிழ்ச்சூழலில். ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் கிடையாது. அந்த இடத்தில் அங்கே வேளாள ஆதிக்கமும் சைவமும் அமர்ந்து கொள்கின்றன. “யாழ்ப்பாணத்தில் எல்லாம் தமிழ் என்பது அவ்வளவு சரியானதல்ல. ஆதிக்கமுடைய வெள்ளாளச் சாதியினர் அவர்களுடைய குறித்த சில வர்க்கப் பண்புகளோடு, தமது தேவைகளையும் கோரிக்கைகளையும் தமிழர்களுடைய கோரிக்கைகளாக வெளிப்படுத்தினர் என்பதைக் காலம் மறுபடியும் நிரூபித்துள்ளது. காராளசிங்கம் இதனை ‘வெள்ளாள மேலாதிக்கம்’ எனக் குறிப்பிடுவார்’’ என்று நான் சற்று முன் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார். எனவே, தமிழ், தமிழ்க் கலாசாரம் முதலியவற்றை முன்னிறுத்தும்போது பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்பு முதலியன நீர்த்துப் போவதும் தமிழர்களை இந்துக்களாகப் பார்ப்பதும் வியப்புக்குரியதல்ல. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வெறும் மொழி மட்டுமே தேசிய இனத்தை அடையாளப்படுத்தி விடுவதில்லை என்பதற்கு தமிழை மட்டுமே பேசுகிற இலங்கை முஸ்லிம்களை இலங்கைச் சோனகர் என்பதாகப் பார்க்கும் நிலை ஒரு எடுத்துக்காட்டு.

சிங்களப் பெருந் தேசிய இனவாதம், தமிழ்த் தேசியவாதம் ஆகியன உருப்பெற்றதில் வரலாற்றின் பங்கு என்ன?

எல்லாத் தேசிய இன உருவாக்கங்களையும் போல இங்கும் வரலாறு முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக 18, 19_ம் நூற்றாண்டுகளில் உலகளவில் பிரபலமாக இருந்த ‘இனவியற் கோட்பாடு’ (ஸிணீநீவீணீறீ tலீமீஷீக்ஷீஹ்) இந்தியத் துணைக் கண்டத்தின் சம கால வரலாற்றில் பெரும் பங்கு வகித்துள்ளதை நான் எனது ‘ஆரியக் கூத்து’ நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 1788ல் வெளியான வில்லியம் ஜோன்சின் ஐரோப்பிய இந்திய மொழிகளுக்கிடையிலான அமைப்பு ரீதியான ஒற்றுமைகளை வெளிப்படுத்தி வந்த நூல் ஒரு மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘இந்தோ ஐரோப்பிய மொழிகள்’ என ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளும் ஒன்றாக, ஒத்தவைகளாக முன் வைக்கப்பட்டன. மொழிகளுக்கிடையேயான இந்த ஒற்றுமையை யாரும் மறுக்க இயலாது. ஆனால் தவறு எங்கே நடந்தது என்றால் மொழிகளுக்கிடையேயான இந்த ஒற்றுமை மொழி பேசும் மக்களுக்கிடையேயான ஒற்றுமையாகவும் நீட்டப்பட்டதுதான் பிரச்சினை. இவர்கள் ‘ஆரியர்’ எனக் குறிப்பிடப்பட்டனர். செமிடிக் அல்லாத ஐரோப்பிய _ இந்திய மக்களின் பொது மூலத்தைக் கூறும் இக்கோட்பாட்டை “வரலாற்றின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு’’ என ஹெகல் கூறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கருத்து பெரிய அளவில் பிரச்சாரமாவாதற்கு மேக்ஸ்முல்லர் உதவினார். பின்னாளில் தனது தவறுக்கு அவர் வருந்தினார் என்றபோதிலும், இன்று இனக் கோட்பாடு தவறு என ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த ‘ஆரிய இனக்’ கொள்கை உலகைப் பிடித்தாட்டியது. ஆரிய மேன்மைக் கொள்கையின் அடிப்படையில் ஹிட்லர் உருவாக்கிய பாசிசக் கொள்கை, யூத இன அழிப்பு, இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றை நாம் மறந்துவிட இயலாது. முல்லரின் கருத்துக்கு இலங்கையில் சிங்கள அறிஞர்கள் மத்தியிலும் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் 1856ல் கால்டுவெல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தி இன்னொரு பெரும் அரசியல் எழுச்சிக்கு வித்திடுகிறார். ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து அனைத்து வகைகளிலும் வேறுபட்ட ஓர் உள்ளூர் மொழிக் குடும்பமாக இது கருதப்பட்டது மட்டுமல்ல, இம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘திராவிடர்கள்’ எனக் கருதப்பட்டனர். திராவிடர்கள் உள்நாட்டுப் பூர்வ குடியினர், சிந்து சமவெளிக் கலாசாரம் அவர்களுடையது. படை எடுத்து வந்த ஆரியர்கள் அவற்றை அழித்தனர். இராமாயணம் இதை விளக்குகிற காவியம் என அடுத்தடுத்து கோட்பாடுகளும் அதை ஒட்டிய அரசியலும் உருவாயின. எனினும் காலங் காலமான ஒரு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முற்போக்கு அரசியல் கூறு இதிலிருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஈழத் தமிழ் தேசிய முன்னோடிகளுக்குக் கால்டுவெல் எந்த அளவிற்குப் கைகொடுத்திருப்பார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. “தமிழரிடையே மொழி பண்பாடு பற்றிய உணர்வு’’ என்கிற பேராசியர் க. கைலாசபதி அவர்களின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். நிறையத் தகவல்கள் கிடைக்கும்.

ஆரியப் பரம்பல் கொள்கை ‘மகாவம்சத்தில்’ காணப்படும் விஜயன் பற்றிய தொன்மம் பிரபலமாவதற்கும் சிங்களர்கள் தம்மை ஆரிய இனத்துடன் அடையாளம் காண்பதற்கும் வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மூலக் குடியேற்றக்காரர்களாகவும், சிங்கள தீபத்தை நிறுவியவர்களாகவும் தம்மைக் கட்டமைத்துக் கொள்வதற்கும் உதவியது. குறிப்பாக டி. அல்விஸ், 1866ல் எழுதிய சிங்கள மொழியின் தோற்றம் பற்றிய கட்டுரையைச் சொல்ல வேண்டும். சிங்கள மொழி திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளிலிருந்து வேறுபட்ட ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என அவர் ‘நிறுவினார்’. ‘செம்பு நிறச்’ சிங்களவரை ஆரியர் எனவும் அவர் கூறினார். இந்த அடிப்படையில் மகாவம்சம், தீபவம்சம் முதலானவை மறு வாசிப்பிற்குள்ளானதும், சிங்கத்தின் மக்களாகத் தம்மையும், சிங்கத்தின் நாடாக இலங்கையையும் அவர்கள் கற்பித்துக் கொண்டதும், புலியின் ‘மக்களான’ தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை நிறுத்தியதும் மிக வேகமாக நடந்தேறின. “சிங்கத்தின் வழிவந்தோர் _ வரலாற்றிலும் வரலாற்றியலிலும் சிங்கள உணர்வு’’ என்கிற ஆர்.ஏ.எல்.எச் குணவர்த்தனாவின் விரிவான கட்டுரை சிங்கள இன உணர்வுத் தோற்றத்தை மிக ஆழமாக விளக்குகிறது. (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவத் தமிழ் அறிஞர்களால் சி.வை. தாமோதரம்பிள்ளை போன்ற கிறிஸ்தவ வேளாளர்களும் இதில் உள்ளடங்குவர்) உருவாக்கப்பட்ட ‘தமிழ் மறுமலர்ச்சியில்’ கால்டுவெலின் பங்களிப்பை கைலாசபதி குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் பின்னர் வரலாறும் தொன்மங்களும் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டனர். சிங்களர் பக்கம் விஜயன், துட்டகைமுனு போன்ற திருஉருவங்கள் கட்டமைக்கப்பட்டார்கள் என்றால் தமிழர்கள் பக்கம் எல்லாளன், பண்டார வன்னியன் ஆகியோர் உருவாக்கப்பட்டனர். இப்படி நிறையச் சொல்லாம். இன்றைய அரசியல் நலன்களிலிருந்து பண்டைய வரலாற்றை எழுதுகிற முயற்சி எத்தனை ஆபத்தானது என்பதற்கு இலங்கை வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. உண்மை என்னவெனில் இன்று யாரும் இனக் கொள்கையை ஏற்பதில்லை. ஆரியர் திராவிடர் என்றெல்லாம் மனிதச் சமூகங்களைப் பிரிக்க இயலாது. இந்த அடிப்படையில் இனப் பண்புகளை வரையறுப்பது இன்னும் பெரிய அபத்தம். ஆரிய இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்து பரம்பி வந்தனர் என்பதைக் காட்டிலும் ஆரிய மொழிக் குழுவினர் வந்தனர் என்பதே சரியாக இருக்கும். இந்த இனக்கோட்பாட்டை அன்றே ஏற்காது மாற்றுச் சிந்தனை ஒன்றை டாக்டர் அம்பேத்கர் முன் வைத்தது இங்கே குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ஈழத்தில் யாழ்ப்பாண அறிஞர்களால் முன் வைக்கப்பட்ட இத்தகைய வரலாறு ரொம்பவும் சைவம் சார்ந்த ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதி தீவிர இடதுசாரிகள் என்றழைக்கப்படும் நக்சல்பாரிகள் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தில் இருந்து விலகி தமிழ் இனவாதப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாடு குறித்துச் சொல்ல முடியுமா?
இந்தக் கேள்வியில் சில தவறுகள் இருப்பதாக உணர்கிறேன். ஈழத்தில் இன்று நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழும்பும் குரல்கள் எல்லாவற்றையும் ‘தமிழ் இனவாதப் போராட்ட ஆதரவு’ என்பதாகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. 90களுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எல்லா இடதுசாரி இயக்கங்களுமே தம் அணுகல் முறைகளில் மாற்றங்களை -ஏற்படுத்தியுள்ளன. இவற்றை வர்க்கப் போராட்டத்திலிருந்து வழுவுவதாகப் பார்ப்பதெனில் அது எல்லா இடதுசாரிகளுக்குமே பொருந்தும். நக்சல்பாரி இயக்கத்தவரை மட்டும் அப்படிச் சொல்லிவிட இயலாது. நக்சல்பாரி இயக்கத்தவரைப் பொருத்தமட்டில் அவர்கள் பிற இடதுசாரி இயக்கங்களிலிருந்து வேறுபட்ட, அடிப்படையான மூன்று நான்கு அம்சங்களில் தேசிய இனம் குறித்த அணுகுமுறையும் ஒன்று. அந்த வகையில் அவர்கள் இந்தியாவைப் ‘பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக’ வரையறுத்தனர். இன்றைய அவர்களின் நிலைப்பாடுகளை இதன் தொடர்ச்சியாகவே நாம் காண வேண்டும். தவிரவும் எல்லா நக்சல்பாரி இயக்கங்களையும் ஒட்டு மொத்தமாகப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களாகவும் பார்க்க இயலாது. ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர். அதே போல எல்லோரும் தனி ஈழம் என்றும் சொல்வதில்லை. சுய நிர்ணய உரிமை என்கிற அம்சத்தில் எல்லோரும் ஒன்றுபட்டிருந்தாலும் தனி ஈழத்தை அங்கீகரி, ஈழ விடுதலை ஒன்றே தீர்வு முதலான முழக்கங்களை எல்லோரும் வைப்பதில்லை. ‘புதிய போராளி’ என்றொரு இயக்கம் பொது வாக்கெடுப்பு என்பதை முன் வைக்கிறார்கள். த.ஓ.வி. முதலான அமைப்புகளும் கூட புலிகளை விமர்சனத்தோடேயே பார்க்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை மாவோயிஸ்டுகள் என அறியப்படும் நக்சல்பாரி அமைப்பின் வெகுஜன இயக்கங்களே தனி ஈழம், புலி ஆதரவு முதலியவற்றைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அவர்களின் சில சமீபத்திய வெளியீடுகளை அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் புலிகளின் வெளியீடு என்றே யாரும் கருதக் கூடும். நெடுமாறன் முதலான புலி ஆதரவாளர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதில்லை. இவர்கள் நடத்துகிற ஈழம் தொடர்பான கூட்டங்களும் அப்படித்தான் நடக்கின்றன. இந்த அடிப்படையிலிருந்துதான் உங்களின் கேள்வியும் எழுகிறது என நினைக்கிறேன். மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழுவின் கருத்தும் இதுதானா, இல்லை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஆர்வக் கோளாறாக இப்படிச் செய்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இன்றைய நக்சல்பாரி இயக்க இளைஞர்களில் பலர் மிக்க நேர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்கவர்களாக இருந்தபோதிலும் மார்க்சிய அறிவில் மிகவும் குறைபாடு உடையவர்களாகவே உள்ளனர். படிப்பு என்பது மிகவும் குறைந்திருப்பதும், மீடியா மினுமினுப்பில் மயங்கி நிற்பதும் இவர்களிடம் உள்ள குறைபாடாகப் பார்க்கிறேன். இது ஆயுதப் போராட்டங்களை விமர்சனமின்றி வழிபடும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. ஏதாவது கேட்டால் லெனின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தவில்லையா என்பார்கள். உண்மைதான். சுய நிர்ணய உரிமை என்பது எந்த மக்கள் சம்பந்தப்பட்டதோ அந்த மக்கள் சுயமாக நிர்ணயிப்பதுதான். இங்கிருந்து நாம் நிர்ணயிப்பது அல்ல. தனி ஈழம். ஒன்றே என்ற கோரிக்கை இன்று ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஈழப் போராட்டம் உச்சத்திலிருந்த 80களின் இறுதியில் நான் தஞ்சையிலிருந்தேன். இன்றைய மாவோயிஸ்ட் கட்சியின் மூதாதையான மக்கள் யுத்தக் குழுவில் இருந்தேன். அந்த அமைப்பில் வெகுஜன இயக்கமான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக ‘ஈழப் போராளிகளின் சிந்தனைக்கு’ என்றொரு வெளியீட்டைக் கொண்டு வந்தோம். ‘எரிதழல்’ என்கிற எனது அன்றைய புனை பெயரில் அது எழுதப்பட்டிருந்தது. மக்களைச் சார்ந்திராமல் ஒரு ஆயுதக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பது குறித்த விமர்சனம் அதில் இருந்தது. போராட்டத்தை விமர்சிப்பவர்களைத் தாக்குவது, கொல்வது என்கிற சூழல் இருந்த காலம் அது. சுமார் 20 கி.மீ தொலைவில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் அப்போது ஓர் ஈழ அமைப்பின் முகாம் இருந்தது. அங்கு நடைபெற்ற சித்திரவதைகள் முதலியவற்றைத்தான் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் குறிப்பிடும். அந்த முகாமிலிருந்து இருவர் 12/28 அம்மாலயம் சந்து, வடக்கு வீதி, தஞ்சை என்கிற முகவரியில் இருந்த எனது வீட்டிற்கு ஏகே 47 துப்பாக்கியுடன் வந்து அந்நூலை எழுதியதற்காக மிரட்டி விட்டுச் சென்றனர். அந்த நூலின் கருத்துகளையும், இன்று அவர்களின் வெளியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் எந்த அளவிற்குப் பாதை விலகியுள்ளார்கள் என்பது விளங்கும்.

March 13, 2009

தோப்புக்கரணத்துக்கு காப்புரிமையாம்!

கடந்த சில மாதங்களாக “சூப்பர் பிரைன் யோகா” என்ற செய்தியும், யூ-டியூப் காட்சியும் இமெயிலில் மிக வேகமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு பயன்படும் யோகா என்றால் யார்தான் விடுவார்கள்! ஜப்பானில் துவங்கி, அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, சீனா, இந்தியா என்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த யோகாசனம்.

இந்தியா, இலங்கை தவிர்த்து இதனை காணும் பிற நாட்டு மக்கள் பெரும் வரப்பிரசாதமாக கருதுகின்றனர். ஆனால், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் நகைப்புத்தான் வருகிறது! வராமல் இருக்குமா என்ன? நமக்கெல்லாம் இளம் பருவத்தில், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கொடுக்கும் தண்டனையே அந்த “சூப்பர் பிரைன் யோகா”தானே! தண்டனை மட்டுமா? வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெருவில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில்களுக்கு முன்னாள் நமது மக்கள் தினமும் காலை முதல் மாலை வரை இந்த அற்புதமான “சூப்பர் பிரைன் யோகாவை” செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

‘அட சீக்கிரம் சொல்லித் தொலைப்பா! அது என்ன யோகா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ‘பெரிய பீடிகையெல்லாம் போட்டு டைம்மை வேஸ்ட் பண்ணாதே...’ சரி! சரி!! சொல்லிடுறேன்.

அட வேற ஒண்ணுமில்லிங்க! “தோப்புக்கரணம்தான்” அந்த சூப்பர் பிரைன் யோகா! அப்படியா? அது எப்படி சூப்பர் பிரைன் யோகாவா மாறுச்சுன்னு ஆச்சரியமா பாக்குறீங்களா? அது நம்ம இந்தியாவுல தோன்னும்போதே அப்படித்தான் இருந்துச்சு! ஆனா அதன் சூட்சுமத்தை நேரடியாக மக்களுக்கு விளக்காம விட்டதால தண்டனையா மாறிடுச்சு! அப்புறம் என்ன? இப்போ அதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்து - காப்புரிமையும் பெற்று விட்டார்கள். ஆமாங்க! இனிமேல் பிள்ளையார் கோவிலுக்கு சென்று யாராவது தோப்புக்கரணம் போடனும் நினைச்சா அந்த நிறுவனத்துக்கு காப்புரிமை செலுத்திவிட்டுதான் தோப்புக்கரணம் போடனும் போல இருக்கு!

தோப்புக்கரணம் போடுவதை மாஸ்டர் சோ கோ சூய் என்பவர் அறிவியல் பூர்வமாக சோதனை செய்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, தினமும் காலையில் சூரியனுக்கு நேராக நின்று 14 முறை தோப்புக்கரணம் போட்டால் போதுமாம் நம்முடைய மூளை சுறுசுறுப்படைவதோடு, சூப்பர் பிரைனாகவும் மாறிடுமாம்! 
அதாவது தோப்புக்கரணம் போடும் போது நம்முடைய இடது கை வலது காதையும், வலது கை இடது காதையும் தொட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மின்சார சக்தி போன்று உற்பத்தியாகி அது மூளையை விருத்தியடைச் செய்கிறதாம். இதன் மூலம் நம்முடைய மூளையில் உள்ள நியூரான் செல்கள் உற்பத்தியும் நடைபெறத் துவங்குகிறதாம்! மேலும் தோப்புக்கரணம் போடும் போது வாயை மூடிக் கொண்டு மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டுமாம். உட்கார்ந்து எழுந்திருக்கும் போது உள்ளிழுத்த காற்றை வாய் வழியாக வெளியே விட வேண்டுமாம் இதுதான் அந்த டெக்னிக்!

அப்புறம் என்னன்ன இந்த தோப்புக்கரணத்தை 14 முறை செய்ய வேண்டும். அளவுக்கு மீறி செய்யாதீங்க அப்புறம் மூளை ரொம்ப வளர்ந்துடம் பெரிய பிரச்சனையாகி விடும். அப்புறம் உங்க மூளையை உங்களாலேயே கண்ட்ரோல் செய்ய முடியாமல் போய்விடும்! இப்படி வெறும் 45 நொடிகளுக்குள் செய்யும் இந்த உடற் பயிற்சி கிட்டத்தட்ட 20 நிமிடம் நடப்பதற்கு சமம் என்றால் பாருங்களேன். இதைவிட வேற என்ன வேணும் நமக்கு!
நம்ம ஊரு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் மருத்துவ குணம் உள்ளதாகக் கூறி ஏற்கனவே அமெரிக்காவில் காப்புரிமை பெற்ற விட்டார்கள்! தற்போது இந்த லிஸ்டில் “தோப்புக்கரணமும்” சேர்ந்து விட்டது. இன்னும் என்னென்ன சேருமோ தெரியலை! பேசாம ஒன்ணு பண்ணலாம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அமெரிக்காவில் பேட்டன்ட் செய்து விட்டால் அப்புறம் யாரும் எதற்கும் உரிமை கொண்டாட முடியாதல்லவா!

ரொம்ப முக்கியமான மருத்துவ விசயம் என்னவென்றால் "மூளை வளர்ச்சி குறைவான" குழந்தைகளுக்கு தோப்புக்கரணம் நல்லா வேளை செய்கிறதாம்! அதாவது ஆட்டிசம் என்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு கூட இது வேலை செய்கிறதாம். எதற்கும் இதையெல்லாம் நம்ம ஊரில் உள்ள சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட மருத்துவர்களும் சோதனை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம். இல்லையென்றால் நம்ம சங்பரிவாரக்கூட்டம் இதை வைச்சே தங்கள் அரசியல் வியாபாரத்தை நன்னா செய்ய ஆரம்பித்து விடுவாங்கள். மேலும், மந்தமாக இருக்குற மாணவர்களுக்கு எல்லாம் தற்போது மேலை நாடுகளில் நல்லா தோப்புக்கரணம் போடச் சொல்றாங்களாம்.

பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இதுவும் இப்போ வேகமாக பரவுது! இருந்தாலும் இது உடல் நலத்துக்கு நல்லது என்பதால் நாமும் கொஞ்சம் இதற்கு மார்க்கெட்டிங் பண்ணலாம்! அதற்குள் இருக்கவே இருக்கிறார்கள் கலாச்சார காவலர்கள் - வந்துவிட்டார்கள் இது “சயிண்டிபிக் இந்துயிசமாம்!” அடடா... இப்பத்தான் உஷாராக இருக்க வேண்டும். அதாவது இந்து என்கிற சொல்லை கண்டுப்பிடிப்பதற்கு முன்பே இந்தியாவில் கணங்களின் கடவுளாக தலைவராக விநாயகர் வழிபாடு தொடங்கி விட்டது என்பதுதான். இந்த இந்து என்கிற வார்த்தையையே நமக்கு கடனாக கொடுத்தது பிரிட்டிஷ்காரன்தான்! நல்ல வேளை இதற்கு அவன் பேடன்ட் வாங்கல! ஏற்கனவே நமது சித்தர்களும், ரிஷிகளும் உடலை எப்படி வளப்படுத்துவது என்பதற்காக பல சுயபரிசோதனைகளை செய்து இறுதியில் கண்டெடுத்தவைகள்தான் மேற்கண்ட தோப்புக்கரணம் முதல் இன்றைய மார்டன் யோகாசனம் வரை. அப்புறம் இன்னொரு குட்டி தகவல் பசுமாட்டு மூத்திரத்தில் கோலா தயாரிக்கப்போவதாக சங்பரிவாரக் கூட்டம் ஒருபுறம் உளறிக் கொண்டிருக்கிறது. எனவே, ஏதாவது அறிவியல் முகமூடி போட்டு வந்தால் அது என்ன? ஏதுன்னு ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதுதான் நம்ம மூளைக்கும் வாழ்க்கைக்கும் பொறுத்தமானது!

கடைசியா ஒரு வார்த்தை, நாளையில இருந்து நீங்க தோப்புக்கரணம் போட ஆரம்பித்து விடுவீர்கள் என்று எனக்கு நல்லாத் தெரியும்! நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதற்காக தோப்புக்கரணம் மட்டும் போட்டா மூளை வேண்டும் என்றால் வளரலாம்! மன்னிக்கவும் வீங்கலாம். சூப்பர் பிரைனாக மாறலாம் ஆனால் அறிவு வளராது அதற்கு அனுபவமும் - வாசிப்பும் - நடைமுறையும் அவசியம். அதுதான் இயக்கவியல். இது இரண்டும் இணைந்தால் நீங்கதான் சூப்பர் பவர் மனிதன்! ஓ.கே. பாய்... சீ.யூ...

இதுகுறித்த மற்ற இணைப்புகள்

http://www.ehow.com/how_2330888_do-super-brain-yoga.html
http://www.superbrainyoga.org

March 11, 2009

போலியான "போலியோ டிராப்ஸ்" - ஊனக் குழந்தைகளை உருவாக்கப் போகிறாரா? அன்புமணி ராமதாஸ்!சாராய ஒழிப்புக்காக சத்தமாக குரல் கொடுக்கும் ராமதாஸ்கள், சிகெரெட் புகைப்பது முதல் புகையிலையை புகைப்பது வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு பகைதான். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இவர் பதவியேற்றது முதல் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் கடந்த ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க "நோய் எதிர்ப்பு" மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடியதும், அதற்கு இவர் உலக சுகாதார மையத்தின் அறிவுரையின் அடிப்படையில் செயல்பட்டதாகவும் மழுப்பிய விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.உலகமயத்தின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் அன்புமணி ராமதாஸ் தனது சுகாதாரத்துறையை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு எடுத்த தலையாய முயற்சிதான் அது. இன்று வரை அந்த பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி துவங்குவதற்கோ, செயல்படுவதற்கு எந்தவிதமான உருப்படியான முயற்சியும் எடுக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு பல்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்து வந்த அந்த நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னணியில் பி.சி.ஜீ., போலியோ டிராப்ஸ், டெட்டனஸ் டாக்சைடு, டி.பி.டி. போன்ற தடுப்பூசி மருந்துகளை தனியாரிடம் அதிகமான விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அப்போதே இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தனியாருக்கு முழுமையாக தாரைவார்ப்பதால் மக்களின் சுகாதாரமும், உடல் நலமும் பாதுகாக்க முடியாது என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத அன்புமணி ராமதாஸ் புகையிலை ஒழிப்பிலும், சாராய ஒழிப்பிலும் கவனம் செலுத்துவதாக கூறி மக்களை திசை திருப்பி வந்தார்.இந்நிலையில் இன்று, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப் பத்திரிகை "போலியோ டிராப்ஸ்" மருந்துகள் செயலிழந்த நிலையில் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கூறியது வேறு யாரும் அல்ல; அன்புமணி ராமதாஸ் கூறினாரே அதே உலக சுகாதார அமைப்புதான் இவ்வாறு கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போலீயோ டிராப்ஸ் மருந்துகளின் வீரியம் குறைந்துள்ளதாகவும், அதனால் எதிர்பார்க்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று கூறியுள்ளது. அதாவது, monovalent oral polio vaccine (m-OPV1) என்ற போலியோ வேக்சின்களில் சிலவற்றை சோதனை செய்துள்ளது சர்வதேச போலியோ ஒழிப்பு நடவடிக்கைக்குழு. இவ்வாறு நடைபெற்ற சோதனையில்தான் மேற்கண்ட போலியோ வேக்சின்கள் முற்றிலும் தரம் குறைந்ததாகவும், அதன் வீரியம் செயலிழந்து போயுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து போலீயோ டிராப்ஸ் சொட்டு மருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளது.குறிப்பாக மேற்கண்ட மருந்துகளை தயாரித்தது மத்திய அரசால் ஊக்குவிக்கப்படும் தனியார் நிறுவனமான பனோசியா பையோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம்தான். அதாவது நூற்றாண்டுகளாக மக்களின் உடல் நலத்தையும், உயிரையும் காப்பாற்றி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என்ற சொத்தை காரணத்தை கூறி அவற்றுக்கு மூடு விழா நடத்தி விட்டு, தனியாரிடம் அதிக விலைகொடுத்து வாங்கும் மருந்துகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மேற்கண்ட போலியோ சோதனையோ சாட்சியாக வந்துள்ளது.தனியார் நிறுவனங்கள் ஏதோ மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவதுபோலவும், அவர்கள்தான் சரியான விகிதத்தில் அனைத்தையும் தரமாக தயாரிப்பார்கள் என்பது போன்ற கற்பனையை மக்கள் மத்தியில் கட்டவிழித்து விடுபவர்களுக்கு மேற்கண்ட உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அபாய மணியாக ஒழிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, போலியோவால் இந்தியாவில் பல லட்சக்கணக்கான குழந்தைகள் ஊனமாவதை தடுப்பதற்காக உலகளவில் போலியோ ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மூன்று முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை 100 சதவிகித போலியோ ஒழிப்பு நடவடிக்கையில் நமது மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. இதற்காக ரோடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை என்ற ஒரு விளம்பர மழையே பொய்விக்கப்பட்டு பேருந்து நிலையிம், இரயில்வே நிலையம், மக்கள் கூடும் பொழுது போக்கு பூங்காக்கள் என்று எல்லா இடத்திலும் போலியோ ஒழிப்புக்காக பல லட்சக்கணக்கான சொட்டு மருந்துகள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நமது பொதுநல ஊழியர்களும் மிகுந்த அக்கறையோடு வீடு தேடி குழந்தைகளுக்கு இந்த போலியோ டிராப்ஸை கொடுத்து வந்தனர். நமது முதல்வர் கருணாநிதிகூட போலியோவுக்காக போஸ் கொடுக்காத நாளில்லை.அப்படியெல்லாம் பாதுகாப்பாக கொடுக்கப்பட்ட போலியோ டிராப்ஸ் எதற்கும் உதாவது என்று கூறினால் நமது சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது? அல்லது இவருக்கு கிழே செயல்படும் கண்காணிப்பு நிறுவனங்கள் தனியாரின் இத்தகைய தயாரிப்புகள் குறித்து எத்தகைய சோதனையும் மேற்கொள்வதில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. மக்கள் உயிரை காப்பதற்காக புகைப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அன்புமணி குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா? ஏற்கனவே மத்திய சுகாதார நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னணியில் பல இடங்களில் போலியோ டிராப்ஸ் போட்ட குழந்தைகள் மரணம் அடைந்ததையொட்டி மக்கள் அந்தப் பக்கமே செல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தி மக்கள் மீது இடியாக விழுந்துள்ளது.தனியார்துறையே எல்லாவற்றிலும் ஆகச் சிறந்தது என்று மயக்கம் கொண்டிருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மேற்கண்ட பனோசியா பையோடெக் நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக ரத்து செய்துவிட்டு அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா என்பதே நமது கேள்வி! இல்லை என்னுடைய வீரத்தை வெறும் சிகெரெட் பெட்டியின் அட்டை மீது வெறும் அபாயம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் காட்டுவேன் என்று கூறப்போகிறாரா?மத்திய அரசும், பிரதமரும், மாநில அரசகளும் இந்த விசயத்தில் தங்களது எதிர்ப்பை மத்திய சுகாதாரத்துறைக்கு எதிராக உடனடியாக எழுப்ப வேண்டும். இலங்கையில் குழந்தைகள் மடிவதைக் கண்டு கண்ணீர் வடிக்கும் டாக்டர் ராமதாசும், அன்புமணியும் இந்தியாவில் போலீயோ குழந்தைகளை உருவாக்கப் போகிறார்களா? என்ற கேள்வியே மேலிடுகிறது!நேற்றை தினம் கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொண்டு பேசியதைப் பாருங்கள்:"புகைபிடிப்பது, மது அருந்துவது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பீட்சா, சிப்ஸ் போன்ற `ஜங்க்' உணவு வகைகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தப் பணியில் ரோட்டரி சங்கத்தினரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு தம்பட்டம் அடிக்கும் அன்புமணிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் இத்தகைய எச்சரிக்கை மணி தெரியாமல் போனதோ? அல்லது மத்திய சுகாதார அமைச்சகம் அவரிடம் இருந்து மறைத்து விட்டதா? இல்லை இதுபற்றியெல்லாம் அவருக்கு கவனம் செலுத்துவதற்கு நேரம் இல்லையா? என்ற கேள்வியே எழுகிறது.
இது தொடர்பான முந்தைய பதிவு


மக்களைத் தாக்க வருகிறது அன்புமணி வைரஸ்!

March 02, 2009

மதவாதம்+ஏகாதிபத்தியம்=இலங்கை தமிழர்களுக்கான தீர்வு?

தமிழகத்தின் முதன்மை அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது இலங்கைத் தமிழர் பிரச்சனை. இதில் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, ஈழ ஆதரவு, ஈழ எதிர்ப்பு, பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாத எதிர்ப்பு என்று மாறுபட்ட கோணத்தில் இயங்கும் தமிழகத்து சிற்றரசர்கள் வைகோ (மதிமுக), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய கட்சி), தா.பாண்டியன் (சி.பி.ஐ.), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), ச.ராமதாஸ் (பா.ம.க.), இல.கணேசன் (பா.ஜ.க.) என கூட்டுக் கலவையாக மாறி இலங்கைத் தமிழகர்களை பாதுகாப்பதற்கான ஏக பிரதிநிதித்துவம் பெற்றவர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஹோதாவில் மகஇக போன்ற நக்சலிச அமைப்புகளும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள இனப் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட தீர்வு கிடைக்குமா என்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஏங்கித் தவிக்கையில். தமிழகத்தின் மேற்கண்ட சிற்றரசர்கள் எந்தவிதமான கொள்கை - கோட்பாடு - தனித்துவமின்றி அம்மணமாக இந்தியாவில் உள்ள மக்களை கூறுபோட்டு பிணம் திண்ணி கழுகுகளாக கொத்தித் தின்னும் பாசிச இந்துத்துவ மதவெறியர்களோடு கைகோர்த்து இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணப் புறப்பட்டது விந்தையிலும் விந்தை. இதற்கு இவர்கள் கூறும் ஒரே சமசரசம் தமிழர் என்ற அடையாளம் மட்டுமே!

மதிமுகவுக்கும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே இந்துத்துவாவோடு அரசியல் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான். இந்த இடத்தில் இவர்கள் வர்ணாசிரம தர்மம், பார்ப்பனீயம், தமிழின மீட்சி, பெரியாரின் மதவெறி எதிர்ப்பு கொள்கை என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு தங்களுக்கான நாற்காலியைப் பிடிப்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தில் பங்கு வகிப்பதற்காகவும் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான்.
இதில் பழ.நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோர் இந்துத்துவ எதிர்ப்பை தங்களது ரத்தத்தில் கலந்த ஒன்றாக பார்ப்பவர்கள். ஒருபோதும் இந்துத்துவத்தை அனுமதிக்க முடியாது என்று ஓயாது குரல் கொடுப்பவர்கள். ஆனால் கொள்கை அரசியலையெல்லாம் கைவிட்டு விட்டு தமிழன் என்ற ஒற்றை அடையாளத்திற்காக இல.கணேசனோடு கைகுலுக்கிக் கொண்டுள்ளது வேதனையானது - வேடிக்கையானது.

இதற்கும் மேல் இவர்கள் செய்த வேடிக்கையிலும் வேடிக்கை ஏகாதிபத்திய அமெரிக்க தூதரிடம் சென்று இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண மண்டியிட்டதுதான். உலக நாடுகளையும், உலக மக்களையும் கூறுபோடும் ஏகாதிபத்திய சக்திகள், நவநாகரீக உலகிலும் நாடுகளைப் பிடித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த பினந்திண்ணி கழுகிடம் சென்று இலங்கை பிரச்சனைக்கு தீர்வு வேண்டி அமெரிக்க தூதரகம் சென்று மனுக் கொடுத்துள்ளனர்.

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒரு பகுதியினர் கூட ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்த்து வீரச்சமர் புரிந்து வருகின்றனர். ஆனால், இந்த சிற்றரசர்களோ தமிழகத்து மக்களிடம் தங்கள் ஆதரவை விதைத்துக் கொள்வதற்காக இத்தகைய சமரசத்தில் ஈடுபடுவது கண்டு வேதனைபடுவதா? வெட்கித் தலை குனிவதா? இந்த மதவெறியர்களோடும் - ஏகாதிபத்தியவாதிகளோடும்தான் வினவு கும்பல் - மகஇக தங்களை இணைத்துக் கொண்டு கொள்கை குன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறது. இவர்கள் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தைக்கூட ஆதரித்தார்கள்.
இத்தகைய கொள்கையற்ற கூட்டுக்களால் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட உதவுமா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியாலும், இலங்கையில் உள்ள பேரினவாத மற்றும் சிற்றினவாத முதலாளித்துவ சக்திகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்த பகைமை இன்றைக்கு அப்பாவி இலங்கைத் தமிழர்களின் கழுத்துக்களில் கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது. இனவாதமும், மதவாதமும் மக்களுக்கான வாதங்கள் அல்ல; அது மக்களுக்கு விரோதம் என்பதை தமிழக மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.