December 07, 2006

பெரியார் சிலையும்! பாசிச சிந்தனையும்!!

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் அருகில் 100 அடி தூரத்தில் பெரியாருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இச்சிலை திறப்பு விழா வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில அமைச்சர் கே.என். நேரு தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சிலையை திறந்துவைக்கவுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பாசி°ட்டுகள் இன்றைக்கு அதிகாலையில் சிலையை உடைத்துள்ளனர். இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில்தான் காவல்நிலையம் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
பெரியார் என்ன சவர்க்கரைப் போல் தேசத் தூரோகியா? அல்லது இந்த தேசத்தின் ஆத்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவைப்போல், யாரையாவது கொலை செய்தவரா? தமிழகத்தில் சுயமரியாதை தழைக்க வேண்டும். பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து மனிதனை சுயமரியாதையோடு நிமிரச் செய்ய வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடியவர். மேலும், தீண்டாமை கொடுமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஓயாது குரல் கொடுத்தவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே சுயமரியாதையின் சிகரமாக போற்றப்படுபவர். இத்தகைய உயர்ந்த மனிதரின் சிலை இருப்பது என்ன ஸ்ரீ ரங்கத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதா?
இந்துத்துவவாதிகளின் சிந்தனை நரகல் சிந்தனை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்ற சிந்தனைக்கு சொந்தக்காரர்கள்தான் இந்துத்துவ பாசி°ட்டுகள். அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே! பெரியாரின் சிலையை உடைக்கலாம்! ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் இந்த தமிழ் மண்ணிலும், இந்திய மண்ணிலும் வேர் பிடித்து ஆலவிருட்சமாய் ஓங்கி எழும்.
ஏ பாசி°ட்டுகளே! மகாத்மாவை கொன்ற கொலையாளிகள் பட்டியலில் இருந்தவன்தான் சவர்க்கார் என்ற ஆர்.எ°.எ°. பாசி°ட். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்ட அவனது சிலையை பாராளுமன்றத்தில், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரே வைத்தபோதே இந்த தேசத்தில் பெரும் கொந்தளிப்பு நடந்திருக்க வேண்டும். ஏதோ மக்களின் சகிப்புத்தன்மையால் அவ்வாறு நடைபெறாமலிருந்து விட்டது. இனியும் அனுமதிக்கலாமா? காந்தியை சுட்டுக் கொன்ற சதித்திட்டத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட தூரோகியுமான சவர்க்கரின் படத்தை பாராளுமன்றத்தில் இருந்து மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விண்ணை முட்டவேண்டும்.
அம்பேத்கர் சிலைகளை உடைத்ததால் ஏற்பட்டதுதான் மகாராஷ்டிரத்தில் தலித் எழுச்சி. பெரியார் சிலையை உடைத்ததால் இன்னும் தமிழகம் முழுவதும் அதிகமான பெரியார் சிலைகள் தோன்றுவதையும், அவரது சிந்தனைகள் முன்னைவிட வீரியமாக விதைக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது!

December 04, 2006

சங்பரிவாரமும், சிவனின் சித்து விளையாட்டும்!

இந்துமத கொண்டாட்டங்களில் கார்த்திகை தீபமும் முக்கியமான ஒன்று. கார்த்திகை தீபத்தை வீடுகளிலும், கோவில்களிலும் மூன்று நாட்களுக்கு மாலை நேரங்களில் அகல் விளக்கை ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீபத்திற்கு பின்னால் இருக்கும் மத நம்பிக்கைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இதன் அழகே தனியழகுதான். தெருக்கள் அனைத்தும் வரிசையாக தீப ஒளியில் மிளரச் செய்யும். இந்த தீப ஒளியில் கூட, வீடுகளில் வைக்கப்படும் அகல் விளக்கை வைத்து செல்வத்தின் ஏற்றத்தாழ்வை உணர்ந்து கொள்ள முடியும். அடடா, ஒளியில் கூட வறுமையை காண முடியுமா என்ன என்று வியக்காதீர்கள்!

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று நான் அலுவலுகத்தில் தோழியர் ஒருவரிடம் கேட்க, அவர் 'நீயே சொல்லேன் என்று கூற, நானும், பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் ஏற்பட்ட அகங்காரத்தை அடக்க ஓங்காரமாக நின்ற சிவன் கதையைக் சொன்னேன், உடனே முகத்தில் அறைந்தார்போல் அவர் என்னை திருப்பிக் கேட்டதற்கு விளக்கம் தெரியாமல் நான் பேந்த, பேந்த முழித்ததுதான் மிச்சம். சரி, அவர் என்ன கேட்டார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. “அவர் என்ன அமெரிக்காவா? யாருமே தொட முடியாத அளவிற்கு இருக்க” என்று வினவினார்! (மன்னிக்கவும், சிவனை விட அமெரிக்கா பெரியதா என்று எனக்குத் தெரியாது? ஆனா, அமெரிக்கா மாதிரியே பெரியண்ணன் பாணியில் நடந்துக் கொண்ட சிவனை என்னச் சொல்லுவது!)

சரி விடுவோம்! சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! திருப்பரங்குன்றத்தில் தடைச் செய்யப்பட்ட இடத்தில்தான் தீபம் ஏற்றுவோம் என்று மதக் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்துத்துவாதிகள் - சங்பரிவார கூட்டங்களின் சித்து வேலைக்கு இந்த ஆண்டும் முற்று புள்ளி வைத்தது நம்முடைய சமயோஜித காவல்துறை.

அதே சமயம் எங்கள் ஊரியில், பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நண்பர் அலி பாஷா, தான் நடத்தி வரும் டியூஷன் சென்டரில் ஒவ்வொரு வருடமும் மக்கள் ஒற்றுமை கார்திகை தீபத்தை நடத்தி வருகிறார். இந்த விழாவில் அந்த பயிலகத்தில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மதம், இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு பல வண்ணங்களில் கோலங்களை வரைந்தும், அவைகளுக்கு அழகிய வண்ணங்களை இட்டும், அதேபோன்று மலர்களால் அலங்கரித்தும் 500க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். இந்த காட்சியை பார்க்க வரும் அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கேசரி போன்றவைகளையும் மறக்காமல் வழங்குகின்றனர். வீடுகளில் மட்டுமே தீபத்தை ஏற்றி வைத்ததை இதுவரை கண்டு வந்த எனக்கு ஒரே இடத்தில் இதுபோன்று அதுவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் ஈடுபட்ட விழா கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த முயற்சி சிவனின் சித்து விளையாட்டை விட பெரியதாகபட்டது!